கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் 13

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 13

ஆன்ட்டி ஹீரோவின் ஐந்து வகைகளை விரிவாகப் பார்த்தோம். இவை இணையத்தில் எங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து செய்த பிரிவுகள்.

இந்த ஐந்து பிரிவுகளில் வராத சில ஆன்ட்டி ஹீரோக்களும் இருக்கலாம். இது அவரவர் பார்க்கும் கண்ணோட்டத்தை பொருத்தது.

இன்று பெருகி வரும் ஆன்ட்டி ஹீரோக்களின் கதைகள், நாளடைவில் இன்னும் புதிய வகைகளை நமக்கு அறிமுகம் செய்யலாம்.

இந்த மாதிரி ஆன்ட்டி ஹீரோக்களின் கதைகளை வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இதை நல்ல முறையில் எழுத்தாளர்கள் பயன்படுத்தி, நல்ல கருத்துக்களை வாசகர்களின் மனதில் பதிய வைக்கலாம்.

ஆனால் இன்றைய நிலை என்ன? ஆன்ட்டி ஹீரோ கதை என்ற பெயரில் வன்முறையும், அதீதக் காமமும் கதைகளில் கையாளப்படுகின்றன.

மனைவியை விதவிதமாக கொடுமை செய்யும் கணவனை, மனைவி திருத்தி அவன் மீது காதலைப் பொழிகிறாள். அவன் செய்த அத்தனை கொடுமைகளையும் மறந்து ஏற்றுக் கொள்ள முனைகிறாள்.

இந்த விஷயத்தில் மன்னிப்பு என்ற சொல்லை நமது அகராதியில் இருந்து எடுக்க வேண்டும். விஜயகாந்த், ரமணா படத்தில் சொல்வது போல் மன்னிப்பை ஏற்க மறுக்கிறது மனம்.

தவறு செய்தால் தண்டனை அனுபவித்துத் தான் ஆகவேண்டும். தீயவற்றை நியாயப்படுத்தலாமா?

சமுதாயப் பொறுப்புள்ள எழுத்தாளர்கள், சமுதாயச் சீர்குலைவுகளுக்கு வித்திடலாமா?

ஆன்ட்டி ஹீரோ கதை எழுதவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. தாராளமாக எழுதுங்கள். ஆனால் அந்த ஆன்ட்டி ஹீரோக்களை இறுதியில் உயர்த்திக் காட்டவேண்டாம்.

நாயகன், காட் ஃபாதர் படங்களில் வருவது போல, வன்முறையை அணைப்பவர்களின் முடிவு நிச்சயமாக வன்முறையில் தான் முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

இரத்தம் சொட்டச் சொட்டக் கொலை செய்து விட்டு, " என்னை மன்னியுங்கள் " என்று சொன்னால் மன்னித்து விட முடியுமா?

என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம். இறுதியில் பெண் என்பவள் நடந்தவற்றை மன்னித்து நம்மை ஆராதிப்பாள் என்று நம்புவார்கள் இல்லையா? இங்கே தான் தவறுகள் ஆதரிக்கப் படுகின்றன.

இந்த மாயையில் இருந்து அனைவரையும் வெளியே வர வேண்டுகிறோம்.

எழுத்தாளர்கள் மட்டும் அல்ல வாசகர்களும் இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


அத்தியாயம் 13

தங்களின் முன் இருந்த அனல் பறக்கும் காபியை தோற்கடிக்கும் வண்ணம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சுடு மூச்சுக்களை விட்டுக் கொண்டிருந்தனர்.

"வெல் எதுக்காக என்ன இங்க வரச் சொன்னீங்க?" என முதலில் இறுக்கத்தை உடைத்து இயல்பாய் கேட்டது மென்னிலா தான்.

'ம்ம்! உன்னை ஆசை தீரப் பார்க்கணும்னு ஆசை! அதுக்குத் தான் வரச் சொன்னேன்!' என மனதிற்குள் நினைத்தபடி அவளைக் கூர்ந்து பார்த்தான் விக்கி.

"ஹலோ! எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. என்னன்னு சொன்னா கேட்க வசதியா இருக்கும். இல்லைன்னா காபியைக் குடிச்சுட்டுப் போய்கிட்டே இருப்பேன்!" என எதிரில் இருந்த சற்றே சூடு ஆறிய காபியை எடுத்து லாவகமாக நாற்காலியில் சாய்ந்தபடி உறிஞ்சத் தொடங்கினாள் நிலா.

"ஓ அந்த ஆயிரம் வேலைகளில் முதல் வேலை என்னை போட்டுக் குடுக்குற வேலை தான் போல!" என்றவன் அவள் புருவச் சுருக்கலைப் பார்த்து, "என்ன மேடம் நான் சொல்றது சரி தானே!" என்றான் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி,

"உங்களைப் போட்டுக் குடுக்கறதால எனக்கென்ன லாபம் சார்! அதுவும் இல்லாம நீங்க எனக்கு இன்னும் அவ்வளவு பெரிய எதிரி ஆகல!" என்று சொல்லிவிட்டு காலியான காபி கோப்பையை வைத்துவிட்டு எழுந்து கொள்ளத் தயாரானாள் நிலா.

"அப்புறம் எதுக்காக என்னை அந்த வெண்பா கிட்டப் போட்டுக் குடுத்த!" என அதுவரை பிடித்து வைத்திருந்த பொறுமையை காற்றில் பறக்கவிட்டவன், தாங்கள் இருக்கும் இடமான, ஊருக்கு வெளியே இருந்த உயர்தர ஹோட்டலை மறந்து கத்தத் தொடங்கினான்.

அவனின் கத்தலை அலட்சியமாகப் பார்த்தவள், சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை தெளிவு படுத்திக் கொண்டு, முறைத்தபடி மறுபடியும் அவன் எதிரே அமர்ந்தாள்.

"லிசன் விக்கி! நான் அந்த மாறனையும் அவன் அப்பன் அய்யாச்சாமியையும் தான் போட்டுக் குடுத்தேன். உன்னைப் போட்டுக் குடுக்கலை. நீ என்னோட எதிரி இல்லை போட்டி அவ்வளவு தான். ஒருவகையில் நீயும் என்னை மாதிரி இல்லீகல் பிஸினஸ் செஞ்சாலும் கொஞ்சம் நல்லவனா இருக்க! அதுனால இப்போதைக்கு என்னால உனக்கு எந்த ஆபத்தும் வராது. அவ்வளவு தான். உன் கேள்விக்கு பதில் கிடைச்சுதா? நான் கிளம்பவா? " என எழுந்து நின்றபடி டேபிளில் இரு கையாலும் தட்டியவள்,

"அப்புறம் பிரபாவைக் கடத்த ஆள் அனுப்பினது நீ தானே! இனியும் அப்படி எதுவும் அபத்தமா செஞ்சு வைக்காத! பிரபாவை கடத்த வேண்டாம். அவளைக் கடத்தணும்னு நினைச்சாவே அவங்களைக் காலி செஞ்சுடுவேன், ஜாக்கிரதை!" என விரல் நீட்டி எச்சரித்தாள்.

அவள் எச்சரித்ததால் கோபமும், எரிச்சலும் அடைவான் என்று காத்திருந்தவளுக்கு பெருத்த சிரிப்பொலியை பரிசாகத் தந்தான் விக்னேஷ்.

'இந்த பிரசன்னா ஓட்ட வாய். நிச்சயம் அருவிக்கிட்ட சொல்லுவான்னு தெரிஞ்சு தானே அவங்கிட்ட சொன்னேன். உன் காதுக்கு விஷயம் போகணும்னு தானே அப்படி சொன்னேன்?'

"எதுக்கு இப்ப சிரிக்கிற?"

"பார்டா கோபம் எல்லாம் வருது! யார் வீட்டுக் குழந்தையையோ நீ கடத்தி வெச்சுக்கிட்டு, வேற யாராவது அந்தக் குழந்தையைக் கடத்துனா கொன்னுடுவியாமே? நல்ல காமெடி" என்று மறுபடி அவளை வெறுப்பேற்றும்படி சிரித்துக் கொண்டே எழுந்தான் விக்கி.

"ஏய் விக்கி! என்ன சொல்ற, உக்காரு உங்கிட்ட கொஞ்சம் பேசணும்!" எனப் பதட்டத்துடன் நிலா அமர்ந்ததைப் பார்த்தும், 'இது தானே எனக்கு வேணும்' என்பது போல் சாவதானமாக நாற்காலியை மேஜையில் இருந்து நன்கு நகர்த்தி போட்டுக் கொண்டு கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தான்.

"சொல்லு விக்கி, நீ என்ன சொன்ன?" எனப் பல குற்றங்களை அநாயசியமாக செய்பவள், பதறியபடி கேட்டதை விக்கி ரசனையுடன் பார்த்தான்.

நிலா, "என் மூஞ்சில என்ன இருக்கு? நீ சொன்னதைத் திரும்பத் தெளிவா ஒழுங்காச் சொல்லு!"

"ம்ம்ஹும்! கோல்டன் வேர்ட்ஸ் ஆர் நாட் ரிப்பீடட் மிஸ். நிலா" என இடம் வலமாகத் தலையசைத்தான்.

"ஏய் பிரபாவைப் பத்தி எதையோ தெரிஞ்சு வெச்சுக்கிட்டு என்னை ப்ளேக் மெயில் செய்யுற நீ! போனாப் போகுது. என்னைப் போல் ஒருவன்னு விட்டா ரொம்ப ஓவராப் போற, உனக்கும் பாயசத்தைப் போட்ற வேண்டியது தான்!"

"ஹா! ஹா! நீ பாயசத்தைப் போட்டா நான் படையலே போட்டுருவேன் நிலா. இங்க பாரு உனக்கு பிரபா எவ்வளவு முக்கியமோ எனக்கும் அந்தக் குழந்தை அவ்வளவு முக்கியம்!"

"ஏன், ஏன், ஏன்...ஏன் பிரபா உனக்கு முக்கியம்?" என்று கேட்டு முடிப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள் நிலா‌.

"பார்டா! வில்லிக்குள் ஒரு ஹீரோயின்! பிரபான்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமோ!"

அவன் கேள்விக்கு தன் கண்களை அழுந்த மூடித் திறந்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், "ப்ளீஸ் லெட்ஸ் பீ ஃப்ரெண்ட்ஸ், நீ விஷயத்தைச் சொல்லு!" என்று கெஞ்சுவது தெரியாமல் இருக்க கஷ்டப்பட்டு முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டாள்.

"ப்ரெண்ட்ஸா? நான் உனக்கு எதிரியா இருக்கக் கூட தகுதி இல்லைன்னு, நீ தானே கொஞ்ச நேரம் முன்னாடி சொன்ன!" என்றவன் அருகில் சென்ற சர்வரை அழைத்து, "சார் முறுகலா ரெண்டு மசால் தோசை கொண்டு வாங்க!" என்று வேண்டுகோள் வைத்தான்.


"நீ பிரபான்னு பேர் சொல்லி என்னை எமோஷனல் அட்டாக் செய்யுற! இது வேலைக்கு ஆகாது. அவளை எப்படி காப்பத்தணும்னு எனக்குத் தெரியும்! நான் வரேன்!"

"நிலா! வால்பாறை, மித்ரா ஷ்யாம் இதையெல்லாம் நீ மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்" என்று எகத்தாளமான விக்கியின் குரல் கேட்டதும், எழுந்தவள் பொத்தென்று நாற்காலியில் அமர்ந்தாள்.

அதற்குள்ளாக சர்வர் இரண்டு மசால் தோசைகளைக் கொண்டு வர, அதைப் பிரித்து ரசித்து ருசித்து சாப்பிடத் தொடங்கினான் விக்கி.

"நிலா! உங்கிட்ட பொறுமை ரொம்பக் கம்மியா இருக்கு! ஒரு டீலிங் பேச வந்தா மொதல்ல பொறுமை வேணும். உங்கிட்ட சுத்தமா அது இல்லை. சோ என்னால் எதுவும் இப்ப சொல்ல முடியாது" என்று சொல்லிவிட்டு தோசையில் கவனம் செலுத்தத் தொடங்கினான்.

'அய்யோ வால்பாறைங்குறான், மித்ரா ஷ்யாம்னு சொல்றான். ஒருவேளை இவனுக்கு பிரபாவோட பூர்வீகம் தெரிஞ்சிருக்குமோ' என்ற தீவிர சிந்தனையில், "இல்ல இல்ல விக்கி, எனக்குப் பொறுமை ரொம்ப ஜாஸ்தி, பொறுமை இல்லைன்னா இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பேனா!" என்று தானும் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்று காட்டிக் கொண்டாள்.

"ஈசிட் சரி, அப்ப ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு வந்துடறேன்!" என உண்டு முடித்துவிட்டு ஓரமாய் தன் மொபைலை எடுத்துக் கொண்டு போய்விட்டான்.

'வளர்ந்து கெட்டவன் இல்ல இவன் கெட்டே வளர்ந்தவன் போல! ரெண்டு தோசையை அமுக்கிட்டு எங்க போய்த் தொலைஞ்சான்' என்று தேடிப் பார்த்தவளுக்கு, அங்கிருந்து நான்காவது இருக்கையில் அமர்ந்து கைபேசியில் தீவிரமாக எதையோ செய்து கொண்டிருந்தவன் கண்ணில் பட்டான். இடை இடையே நிலாவின் உடல் மொழியையும் அவன் ஆராயத் தவறவில்லை.

'ஒவ்வொரு நிமிடம் கரைவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது. இதில் விக்கியிடம் பொறுமையோடு இருப்பதாக வேறு காட்டிக் கொள்ள வேண்டுமே!' என்று தனக்கு வராத பொறுமையை கயிறு கட்டி இழுத்துக் கொண்டிருந்தாள் நிலா.

"ஹாய் பேசலாமா! ஃப்ரெண்ட்ஸ்!" என பத்தாவது நிமிடத்தில் தன் முன்னே கையை நீட்டியவனிடம் கடமைக்காகக் கையை நீட்டியவளின் கையை ஒருமுறை அழுந்தப் பற்றிக் குலுக்கிவிட்டு விடுவித்தான்.

"கைகுலுக்குறது நல்லா ஸ்டார்ங்கா இருக்கணும் மிஸ்.நிலா, அது நம்பிக்கையின் அடையாளம். நீங்க இப்படி இருந்தா உங்க மேல எப்படி எனக்கு நம்பிக்கை வரும்" என்றவன் அவள் முறைப்பதைப் பார்த்து, "சரி சரி, நெக்ஸ்ட் டைம் ஒழுங்காக் குடுங்க!" என்று சமாளித்தான்.

"இப்ப உனக்கு என்ன தான் வேணும்?"

"எனக்கு ஒண்ணும் வேண்டாம். நீ தான் என்னை உக்காரச் சொன்ன! சரி நான் கிளம்பறேன் அப்ப!"

"அடேய் ஓவராப் போற! ஒழுங்கா உக்காந்து உனக்கு எப்படி எல்லாம் தெரியும்னு சொல்லிட்டுப் போடா!"

"இப்படி சண்டை போடுறா மாதிரி கேட்டா சொல்ல முடியாதுடீடீடீ!"

"சரி சாரி! உங்களுக்கு எப்படி எல்லாம் தெரியும்?" என்று பிரபாவிற்காக தன் வெட்கம் மானம் அனைத்தையும் துறந்துவிட்டு அவனிடம் சமாதானமாகச் சென்றாள்.

"பரவாயில்லை, உனக்குள்ளயும் பாசம் இருக்கு" என்றவன், "நான் உண்மையைச் சொல்றதுக்கு முன்னாடி நீ என்னோட ஒரு பார்ட்னர் ஷிப் டீலிங் போடணும். ஓகேவா!"

"பிஸினஸ் சம்பந்தமா எதுனாலும் எனக்கு ஓகே!" எனப் பட்டென்று நிலாவிடம் இருந்து பதில் வந்தது.

"நானும் பிஸினஸ் பார்டர்ஷிப்பைப் பத்தி மட்டும் தான்மா பேசினேன்!" என தோள்களைக் குலுக்கிக் கொண்டவன், தான் பிரபாவைப் பற்றி துப்பறிந்து கண்டறிந்த விஷயங்கள் அனைத்தையும் அவளிடம் கொட்டினான்.

அவன் பேசப் பேச இவள் முகம் மாறுவதைக் கண்டறிந்தவன், அவளின் முன்னே குளிர்ந்த நீரை டம்ளரில் ஊற்றி வைத்தான்.

"அய்யோ இப்ப என்ன செய்யுறது விக்கி? எனக்கு பிரபா ரொம்ப முக்கியம்! அவளுக்காக நான் எது வேணும்னாலும் செய்வேன்!"

"நிலா இப்போதைக்கு இந்த உண்மை எனக்கும், மாறனுக்கும் மட்டும் தான் தெரியும்"

"மாறனுக்கும் தெரியுமா! அடப்பாவி அவங்கிட்டயும் சொல்லிட்டியா? டபுள் கேம் விளையாடுறியா?"

"ஹங்..பாத்தியா பாத்தியா? மறுபடி பொறுமையை விட்டுட்டுப் பொங்குற!"

"ஓகே சாரி! அவனுக்கு எப்படி உண்மை தெரியும்?"

"அவன் தான் அந்த உண்மையை எனக்கு சொன்னான். நான் அதுக்கு அப்புறம் அதை தோண்டித் துருவித் தெரிஞ்சுக்கிட்டேன் நிலா!"

"ஓ!" என்றவள், எதையோ கணக்கிடுவது போல் அங்கும் இங்கும் அவள் கருவிழிகளை அலைபாயவிட்டதைப் பார்த்தவன், "நீ என்ன நினைக்கிறன்னு எனக்குத் தெரியும் பார்ட்னர். எனக்கும் அதே தான் வேணும்!"

"நான் என்ன நினைக்கிறேன்!" - வெகு அசிரத்தையாகக் கேட்டாள்.

"அந்த மாறனை எப்படி போட்டுத் தள்ளலாம்னு தானே நினைக்கிற நிலா! பாம்பின் கால் பாம்பு அறியும்! "

"ஆம்!" என்று ரௌத்திரத்துடன் தலையாட்டியவளிடம், "அதுக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஆந்திராவுக்குப் போகணும். அங்க நடக்குற சதிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட, ஒரு பெண் துணை எனக்குத் தேவைப்படுது. என்னால அவ்வளவு ஈசியா அந்த அய்யாச்சாமியோட கோட்டைக்குள்ள போக முடியல!" என்றான் கனிந்த குரலில்.

'அவனால் முடியாது என்பதால் என்னைக் கேட்கிறானே? 'எனப் பெருமையுடன் நினைத்தவளின் மனதில் உள்ளதைப் படித்தவன், 'அப்பாடா பட்சி சிக்கிடுச்சு! இனி மாறன் கதி அதோ கதி தான்' என்று நினைத்துக் கொண்டான்.

"சரி என்ன செய்யணும்னு சொல்லு! ஆனா ஒண்ணே ஒண்ணு இந்த மாறன் விஷயத்தோட நம்ம பார்ட்னர்ஷிப் முடிந்தது‌. அதுக்கு அப்புறம் நீ வேற, நான் வேற, ஓகேவா? " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அதிவேகமாகப் புறப்பட்டுச் சென்றாள் மென்னிலா.

'மென்னிலாவா! மென்னியைக் கடித்துத் துப்பும் நிலாவா! இல்லை கண்ணில் கன்னி வைத்து தாக்கும் நிலாவா! என்ன ஒரு தைரியம், தெனாவெட்டு, குழையவும் இல்லை வெட்கப்படவும் இல்லை' என வான்நிலாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான் விக்னேஷ்.

நேருக்கு நேராய்ப் பார்த்து கணீரென்று பேசிய நிலாவை ஏனோ விக்கிக்குப் பிடித்துவிட்டது. அதுவும் அவளின் உதாசீனம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. இதோட இந்த பார்டனர்ஷிப்பை முடிச்சுக்கலாம் என்றவள் சொன்னதும் தான் காலம் முழுவதற்கும் அவளுடன் லைஃப் பார்ட்னராய் இருக்க வேண்டுமென்ற ஆவல் கிளர்ந்தது.

பிரசன்னாவைப் போல் விக்னேஷ் காதல் வலையில் விழுந்துவிடவில்லை. காதலை வலை போட்டு இழுத்துக் கொண்டிருந்தான். 'அவளிடம் உள்ள அவசரத் திட்டங்களும், என்னிடம் உள்ள நிதானமான செயல்முறையும் சேர்ந்தால் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்! 'என அவளுடன் சேர்ந்து காசு பணம் துட்டு மணி மணி என்று கனவுலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினான் விக்கி.


தொடரும்,

பைரவி.

(இந்த அத்தியாயத்தை எழுதியவர் உங்களுடைய அபிமான எழுத்தாளர், திருமதி. பூர்ணிமா கார்த்திக், " பூகா")

மத்தவங்க பேரு தெரியற வரைக்கும் கெஸ் பண்ணிட்டே இருங்க. ஆட்டம் தொடர்கிறது!🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Top