கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் 16

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

அத்தியாயம் 16

மென்னிலான்னு இவளுக்குப் பேரு வைச்ச அந்த அப்பாவி அப்பாவைப் பார்த்தே ஆகனும் என்று விக்னேஷுக்குப் பரபரவென்று வந்தது.
அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னா, 'போடாங்க' என்று சொல்லும் இருபத்தோராம் நூற்றாண்டில்தான் வாழ்கிறான். 'போடாங்க' சொல்லும் கூட்டத்திற்கு அவன்தான் தலைவனாகவும் இருப்பான். பெண்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு மாற்றுக் கருத்தே இல்லை.

ஆனாலும் தன் மேல் நடந்த கொலை முயற்சியை மென்னிலா கையாண்ட விதம் அவனை மலைக்க வைத்திருந்தது. துளியளவு கூட பயம் என்பதே அவள் கண்களில் இல்லை. அசால்ட்டாக கண்ணை மூடியபடி இருக்கையில் சாய்ந்திருந்தாள். ஆந்திரா போகாமல் வண்டி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. மென்னிலா மீது நிச்சயமாகத் தாக்குதல் முயற்சி இருக்கும் என்று மாறன் பேசியதிலிருந்து ஊகித்திருந்த விக்கி, சில நாட்களுக்கு அவளை பாதுகாப்பான இடத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் ஆந்திரா செல்லும் திட்டத்தை முன் வைத்தான்.

அது தெரிந்தும் ஒன்றும் தெரியாதது போல் அவன் பேசியதை எல்லாம்.. இல்லை, இல்லை.. உளறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறாள். ம்ப்ச்.. 'எத்தனை பேருக்கு டெரர் கொடுக்கும் என்னை இப்படி காமெடி பீஸாக்கிட்டாளே! ராட்சசி! ,ஃபிராடு..'

"என்ன?"

"ம்க்கும்.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. "மனசுக்குள்ளேயே உங்களைத் திட்டுனேங்க.. அது ஜாஸ்தியாகி வெளியே ஸ்பில் ஆகிடுச்சி"

"அப்படியா? திட்டிக்கோங்க.. திட்டிக்கோங்க" கண்மூடியபடியே சொன்னாலும் அவள்‌ உதடுகள் புன்னகையில் வளைந்தன.
'அழகான ராட்சசி!'

'ஏய்.. விக்கி.. நீயாடா இப்படி எல்லாம் யோசிக்கிற? இது மட்டும் பிரசன்னாவிற்கு தெரிந்தால் கிண்டல் பண்ணியே கொன்னுடுவான். கோபமூடுக்கு போ. அதான் இப்போ சேஃப்..'

"ஏங்க.. ரெண்டு மினி லாரி நம்மைத் துரத்தி வந்திருக்கு.. ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கலாம்ல.. நான் பாட்டுக்கு மெதுவா போய்கிட்டு இருந்தேன். அடிச்சி தூக்கியிருந்தாங்கன்னா!"

"நம்மை அடிச்சு தூக்கனும்ங்கிறது அவங்க ப்ளான்னா பெருங்களத்தூர்லயே முடிச்சிருப்பாங்க.. இத்தனை தூரம் நம்ம பின்னாடி வந்துருக்க மாட்டாங்க.."

"பின்னே? நம்மைத் தூக்க வந்த வண்டி இல்லையா?"

"தூக்கனும். ஆனா நம்மை மட்டும் இல்ல.. வேற யாராவது நம்ம கூட ஜாயின் பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்திருப்பாங்க.. அதான் பின்னாடியே உருட்டிட்டு வந்திருக்காங்க.."

"வேற யாரு ஜாயின்…" என்று யோசனையோடே பேசியவனின் கையில் கார் ஒரு முறை தடுமாறி நின்றது. "பிரபாவா?"

இப்போது மென்னிலாவின் முகத்திலும் இறுக்கத்தின் ரேகைகள் படர்ந்திருந்தன. "உங்ககிட்ட எனக்கு ஆபத்துங்கிற மாதிரி லீக் பண்ணியிருக்கான். நீங்க என்னைக் காப்பாத்த முயற்சி செஞ்சா, நான் நிச்சயம் பிரபா இல்லாம வர மாட்டேன்னு கணக்கு பண்ணியிருக்கான்."

பிரபாவைப் பற்றி மாறனோடு பேசியதற்காக லட்சத்து ஒன்றாவது தடவை தன்னை நொந்து கொண்டு, சில நொடிகள் அமைதியாக ஓட்டியவனின் விழிகள் சடாரென்று விரிந்தன.

"ஏய் நிலா.. நான் மாறன் ஆளு தெரியும்ல? நான் ஏன் அவன் திட்டத்தைத் தோக்கடிக்க, உன்னைக் காப்பாத்துவேன்னு மாறன் யோசிப்பான்?"

"ஹலோ.. மாறன் காமெடி வில்லன் இல்ல.. ரியல் வில்லன். பிரசன்னா, அருவி காதல் பறவையா சுத்திகிட்டு இருக்காங்க. ஃபேஸ்புக், இன்ஸ்ட்டானு ரீசன்டா சிங்கிள் டூ கப்பிள் ஆன எல்லா ஜோடியும் மாதிரி கப்பிள் ஃபோட்டோ போட்டு தள்ளுறாங்க.. நாம் கொஞ்சம் அதிகம் தடவைகளே மீட் பண்ணியிருக்கோம். நீ கட்சி மாறிட்டன்னு கெஸ் பண்ணியிருப்பான்."

"நான் கட்சி மாறிட்டேனா?"

"மாறிட்ட.. மாறிட்ட.. யூ நோ வாட்? யூ ஆர் இம்ப்ரெஸ்ட் பை மீ.."

"பாருடா.. தன்னம்பிக்கை தைரியலட்சுமிய! எப்படி சொல்றீங்க?"

"ம்ம்.. முயல் பிடிக்கிற மூஞ்சைத் தெரியாதா? இதைக் கண்டிபிடிக்க ஐன்ஸ்டின் வரணுமா?" தன் செல்போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.

"ம்ப்ச்.. என் வாழ்க்கையோட ரொம்ப முக்கியமான கான்வர்சேஷன்ல என்னால கான்சன்ட்ரேட் பண்ண முடியலை? காரை நிப்பாட்டி ஒரு காபி குடிச்சிகிட்டே பேசலாமா?"

"பேசலாம். ஆனா மாறன் ஆளுங்க இந்த ரெண்டையும் அதாவது நம்ம ரெண்டு பேரையும் இப்போதைக்குப் போட்டு தள்ளிட்டு மெதுவா பிரபாவைப் பாத்துக்கலாம்னு முடிவு பண்ணி வந்தா என்ன பண்றது? நான் ஒரு அஞ்சு பேரை சமாளிப்பேன்‌. நீங்க?"

"அட போம்மா.. நான் சண்டை போடும் மூட்ல இல்லை.. நம்ம போய்கிட்டேயே பேசலாம். ஆமா.. அப்போ உனக்கு நான் இண்ட்ரெஸ்டட்னு தெரியும். ஆனாலும் யூ ஆர் வித் மீ நவ். இதை எப்படி எடுத்துக்கிறது? நீயும் இம்ப்ரெஸ்டா?"

"இம்ப்ரெஸ்டா? சான்சே இல்லை."

"பின்னே ஏன் என் கூட வந்த?"

"எனக்கு இருக்கிற பணத்துக்கு எவ்ளோனாலும் செலவு பண்ணி என்னை என்னால அழகா காட்ட முடியும். அது புரியாம, வெறும் முகம் பார்த்து ஒருத்தன் பின்னாடி சுத்தினா, நான் மதிக்கவே மாட்டேன்."

"ம்..‌அப்புறம்?"
.
"என்னோட வெற்றியை, பணத்தை, சொத்தை பார்த்து ஒருத்தன் நெருங்கினா, அவன் ஒரு குழந்தை. இன்னும் வளரனும்."

"ம்ம்ம்.."

"நீதான் என்னோட திமிரை ரசிக்கிற. என் திறமையை ரசிக்கிற. அதான் விட்டு வச்சிருக்கேன். "

அவள் வாய்‌வார்த்தைகள் அவனை அப்படியே லேசாக்கி மிதக்க வைப்பது போல இருந்தன.

அடுத்து வந்த வெளிவட்டச் சாலையில் வண்டியை திருப்பினான். ஒரே நேரத்தில் மூன்று வண்டிகள் செல்லும் அளவு அகலமான சாலை. ஒரு புறத்திற்கும் மறு புறத்திற்கும் இடையே கால்பந்து மைதானம் அளவு இடைவெளி.. நகர சாலைகளில் பெருத்திருக்கும் இரு சக்கர வாகனங்கள் போல் அல்லாது கார்களும் லாரிகளுமே அதிகம் இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக காபி கடைகள் மட்டுமே இருந்தன.


இயற்கையும் அவனுக்குக் கை கொடுக்க நினைத்தது போலும். சற்று நேரத்தில் திரண்ட மேகங்கள் சூரியனை மறைத்து பகல் பொழுதை ரம்யமாக்கியது. மேகத்தின் ஓரத்தில் சூரியக் கதிர்கள் ஊடுருவி ஒளிக் கீற்றை வெளியிட்டது. சட்டென்று மாறிய வானிலையை ரசித்தபடி வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்த விக்னேஷை மென்னிலாவின் குரல் இவ்வுலகிற்குக் கொண்டு வந்தது.

"அந்த ஏசியை கொஞ்சம் ஆஃப் பண்றியா.." என்றாள் மென்னிலா.

ராணியின் ஆணைக்குக் கட்டுப்பட்ட சேவகனைப் போல உடனே ஏசியை ஆப் செய்தான்.

மென்னிலா சற்றே ஜன்னலைத் திறந்தாள். விக்னேஷும் அவன் பக்க ஜன்னலை லேசாக திறந்து விட்டான். இயற்கைக்கு மனிதன் ஈடாக முடியுமா? முடியாது என்பதை இயற்கை நிரூபித்தது. பதப்படுத்தப்பட்ட ஏசி காற்றை விட ஜன்னல் வழியாக வீசிய சில்லென்ற காற்று அவள் கூந்தலோடு விளையாடியது. அவர்கள் வண்டியின் வழியே தெரிந்த வளைந்து நெளிந்த சாலையையும், மேகங்களையும் சேர்த்து ஒரு ஃபோட்டோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றினால் லைக்ஸ் பிச்சிக்கும் என்று அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.


சாலையின் ஓரத்தில் நூற்றி பத்து என்ற வேக அறிவிப்பு பலகை இருந்தது. இவன் காரும் சளைத்தது அல்ல. ஆனால் எண்பது வேகத்திற்கு மேல் அவன் வண்டியை செலுத்தவில்லை. அவசரமாகச் சென்று கொண்டிருந்த வண்டிகள் இவர்களை விருட்டென்று கடந்து சென்று கொண்டிருந்தன.

"அப்போ ஏதோ வகையில் நான்‌ உங்களை இம்ப்ரெஸ் பண்ணியிருக்கேன்."

"ம்ப்ச்.. முக்கியமான காரியம் பேசலாம். இந்த மாறன் ஆளே மாறிட்டான்."

"எப்படி?"

"அவன் முதல்ல பார்ட்டில, ஃபங்சன்ல அங்கங்கே நின்னு அசட்டு சிரிப்பு சிரிப்பான், நான் கண்டுக்கலை; அங்கங்கே வந்து பேசினான், நான் மதிக்கலை; டீல் போட்டான், நான்‌ ஒத்து வரலை. மிரட்டுனான், நான் பயப்படலை"

விக்னேஷ் வாய் விட்டு சிரித்தான். "பாவம் மனுசன்!"

"பாவமா? யார்? அவனா? அவன் பாவப்பட்ட மனுசன். பாவி. அவங்க அப்பாவையே முழுங்கி சாப்பிடுற அளவுக்கு பெரிய பாவி. செய்யாத இல்லீகல் பிசினஸ் கிடையாது" எதுவும் பேசாமல் விக்கி கார் ஓட்ட, மென்னிலா தொடர்ந்தாள், "ஆனா பிரபா சீன்ல வந்ததுல இருந்து நான் அவனோட டார்கெட் இல்லை. பிரபாதான்.," என்று சொல்லி விக்னேசை நேருக்கு நேராக பார்த்தாள்.

ரொம்பவே உறுத்தியது. ஆனாலும் மறைக்க முடியாத விஷயமாச்சே. "மென்னிலா.. பிரபா உன்னோடு இருக்கிற விஷயம் எங்கள் மூலமாதான் மாறனுக்குத் தெரிஞ்சது."

"கெஸ் பண்ணேன்."

சில நொடிகள் மௌனத்துக்குப்பின் சிறு தயக்கத்துடன் விக்னேஷ் ஆரம்பித்தான், "நிலா.. எனக்கு பிரபா பத்தி சில தகவல்கள் தெரியம். உனக்கு சில தகவல்கள் தெரியும். அதை ஷேர் பண்ணிக்கலாமா?"

"வேண்டாம். உங்கதகவல்களை நீங்களே வச்சிக்கோங்க. என்னோட தை நானே வச்சிக்கிறேன்." அவள் கைகள் செல்ஃபோனில்தான் வேலை செய்து கொண்டிருந்தது.

"என்னை இப்போ நம்புறது கஷ்டம்தான்."

"கஷ்டம் இல்லை; இம்பாசிபிள். இப்போ மட்டும் இல்லை. எப்போவும். இப்போ அந்த ஆந்திரா கவர்மென்ட் ப்ராஜெக்ட்டை உனக்குத் தர்றேன், பிரபா பத்தி தகவல்கள் தான்னு கேட்டா தரமாட்டீங்களா?"



"தரமாட்டேன்!" என்ற வார்த்தைகள் அவனையும் அறியாமல் உதடுகளில் வர, சரியான பதில் என்று அவன் இதயமும் அவன் மூளையும் என்று ஒருங்கே சொல்ல, அவனுக்கே ஆச்சர்யமாகிப் போனது.

"யூ நோ வாட் நிலா? நான் ஆன்ட்டி ஹீரோ. வில்லன் இல்லை!"


.

இரவு வேலையை முடித்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த வெண்பாவின் போன் சிணுங்கியது. களைப்பாக இருந்ததால் தூக்கத்தைக் கலைக்க வேண்டாம் என்று எண்ணிய வெண்பா கண்ணை மூடிக்கொண்டே ஃபோனை எடுத்து காதில் வைத்தாள். அவள் ஹலோ சொன்ன தொனியிலேயே அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்பது புலனானது.

எதிர்ப்புறத்தில் பேசிய குரல், "என்ன வெண்பா, இவ்வளவு விஷயம் நடந்துகிட்டு இருக்கு. நீ தூங்கிகிட்டு இருக்க…" என்றது.

அது யார் என்பதை உணர்ந்த வெண்பா, தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தாள். "நேத்து நைட் நிறைய வேலை… இப்பதான் வந்து கொஞ்சம் தூங்குறேன். அதுக்குள்ள என்ன ஆச்சு.." என்றாள்.

"இட்ஸ் ஓகே. பாப்பா நல்லா இருக்கா. மென்னிலா போய்கிட்டு இருந்த காரை ஒரு மினி லாரி வச்சு இடிக்கப் பாத்திருக்காங்க. ஆனா அவ எப்படியோ தப்பிச்சுட்டா."

"இது கண்டிப்பா மாறன் வேலையா தான் இருக்கும்" என்றாள் வெண்பா.

"வால்பாறையில் நடந்த விஷயங்களுக்கு அப்புறம் பாப்பாக்கு மென்னிலா மாதிரி ஒரு கார்டியன் கிடைச்சது பெரிய அதிர்ஷ்டம்.. அதுக்காக தான், நான் உன்னை அவளோடு பழகி அவளை பத்திரமா பாத்துக்க சொல்லி இருக்கேன்" என்றது அந்தக் குரல்.

"ம்ம்.."

"பாப்பா அங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து. ஆனா இதுக்கு மேல அவளைத் தூக்கி எங்கேயும் ஓட வேண்டாம். நான் என் டார்கெட்டை ரீச் பண்ணிட்டேன். இன்னும் கொஞ்ச நாள்தான். அப்பன், மகன் ரெண்டு பேரையும் ஒன்னுமில்லாம செஞ்சிடுவேன்‌. அதுவரைக்கும் நம்ம யோசிச்சதுபோல குட்டி, மென்னிலாவோடே இருக்கட்டும். ஃபுல்லி ட்ரெயின்ட் ஆர்மி கார்ட்ஸ் இரண்டு பேர் அனுப்புறேன். போலிஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து நீ அரேஞ்ச் பண்ணதா சொல்லி மென்னிலாக்கு பாதுகாப்புக்குப் போட்டுடு."

"ம்.." என்று மெலிதாக வந்த வெண்பாவின் குரலில், அவள் மனநிலையை உணர்ந்தவன், இதுவரை தலைவனாய் திட்டமிட்டுக் கொண்டிருந்ததை நிறுத்தி சில நொடிகள் அமைதி காத்தான், "இன்னும் கொஞ்ச நாள் பேபி. சீக்கிரம் பார்க்கலாம் ஓகே?" என்று மெல்லிய குரலில் அவளைத் தேற்றினான்.

வாக்குக் கொடுத்தால் மாறுபவனா அவன்? மெல்லிய புன்னகையோடு மீண்டும், "ம்.." என்று சொல்லி அலைபேசியை வெண்பா துண்டித்தாள். தன் வீட்டு ஜன்னலின் வழி தெரிந்த மைதானத்தில் ஒரு தந்தை தன் எட்டு வயது குட்டிப் பெண்ணுக்கு சைக்கிள் சொல்லித்தர சீட்டில் ஒரு கையும் ஹேண்டில்பாரில் ஒரு கையும் வைத்து குழந்தையோடு சைக்கிளின் பின் ஓடிவர, சற்றே மேடிட்ட வயிற்றோடு தாய் ரசித்தபடி மரக்கிளையின் நிழலில் நின்றிருந்தாள். அதைப் பார்த்திருந்த வெண்பாவின் கண்களில் ஏக்கம் நிறைந்து அது கண்ணீராய் மாறி ஒரு சொட்டு கன்னத்தில் வழிந்தது. அவள் உடலின் ஒவ்வொரு அணுவும், 'இந்த நாள் என் வாழ்வில் என்று வரும்?' என்று கூக்குரலிட்டன.

சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்குள் கார் தன்னை நுழைத்துக் கொள்ள, ரொம்பவும் பேசாமல் ஓட்டிக் கொண்டிருந்த விக்னேஷைப் பார்த்து மெல்ல சிரித்தாள். கோபமாம், அவனை நம்பி மாட்டேன் என்று சொன்னதற்கு.‌ அவள் அலுவலகத்தின் அருகில் காரை நிறுத்த இறங்காமல் அவனையே பார்த்தவள், பின் சொன்னாள், "ஃபீல் பண்ணாதீங்க சார். எனக்கு உங்க ஹெல்ப் வேணும்னா கண்டிப்பா வாங்கிப்பேன். "

நம்பாமல் பார்த்தவனைப் பார்த்து சிரித்தபடி தன் கைப்பையை எடுத்து தோளில் போட்டாள். செல்ஃபோன் சிணுங்க, எடுத்து காதில் வைத்தவள், "சூப்பர்! வெரிகுட்!" என்று கூறி அதை அணைத்து தன் கைப்பையில் போட்டாள். "இப்போ கூட நீங்க பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க."

"என்ன ஹெல்ப்?"

"குழி பறிச்சிருக்காங்கன்னு தெரிஞ்சும் நான் ஏன் உங்க கூட வந்தேன் தெரியுமா? எல்லோரும் என்னோட மூவ்மென்ட்டை ட்ராக் பண்ண நேரத்துல, பிரபாவை வேற இடத்துக்கு சேஃப் பண்ணிட்டேன். யாருக்குமே தெரியாத இடத்துக்கு!"
சொல்லி கண் சிமிட்டி சிரித்து கார் கதவைத் திறந்து அவள் வெளியேற விக்கி அயர்ந்து போய் உட்கார்ந்திருந்தான்.


தொடரும்,

பைரவி.
 
Top