கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் 17

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்


அத்தியாயம் 17


மென்னிலாவின் அதிரடி நடவடிக்கைகளும் அவளுடைய நுண்ணறிவும், விழிப்புணர்வும் விக்னேஷை ஒரேயடியாகக் கவிழ்த்து விட்டன.

" இன்டலிஜன்ட்னு மட்டும் சொன்னாப் போதாது. பயங்கர ஸ்மார்ட், ஷ்ரூட், க்ளவர் இன்னும் என்னல்லாம் அட்ஜக்டிவ் சொல்ல முடியுமோ அத்தனையும் சொன்னாலும் பத்தாது. ராக்ஷஸி, அழகான ராக்ஷஸி. வில்லின்னு என்னவோ சொல்ல முடியாது. நான் ஆன்ட்டி ஹீரோன்னா அவ ஆன்ட்டி ஹீரோயினாத் தானே இருக்கணும்!? நோ, நோ, நாட் பாஸிபிள். அடே படுபாவி, இன்னுமா அவளை உன்னோட ஹீரோயினாக் கற்பனை பண்ணி சந்தோஷப்பட்டுக்கறே? இவ்வளவு பல்ப் வாங்கியும் புத்தி வரலையா?

அவ உன்னை ஒரு ஜோக்கராத் தான் பாக்கறா. நீ மாறனோட அல்லக்கைன்னு அவ மனசில இன்னும் டவுட் இருக்கு. நீ என்ன பண்ணறே, அவளை அவுட்ஸ்மார்ட் பண்ணறமாதிரி ஏதாவது பண்ணு. தடாலடியா ஏதாவது செஞ்சு அவ மனசில இடம் பிடிக்கப் பாரு. அவ நம்பிக்கையை சம்பாதிக்கப் பாரு.

பிரஸன்னாவையாவது தன்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் அருவியோட லவ்வரா மனசார நிலா ஏத்துக்கிட்டா. நீ தான் பாவம், மாறனும் உன்னை நம்பலை. நிலாவும் உன்னை மட்டமா எடை போடறா? ' என்று நினைத்துப் புழுங்கினான். மனதிற்குள் சிந்தனைகள் தாறுமாறாக ஓடியதால் மூளை குழம்பிப் போனது. தலையைப் பிடித்துக் கொண்டு ஆவெனக் கத்தினான்.

" என்ன ஆச்சு ப்ரோ? " என்று பதறியபடி உள்ளே நுழைந்தான் பிரசன்னா. கையில் பைக்கின் சாவியை ஸ்டைலாகச் சுழற்றியபடி நுழைந்தவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தான் விக்னேஷ்.

" வாடா வா, காதல் மன்னனே! டூயட் பாடி, டெட்டி பியர் வாங்கிக் கொடுத்து ஐஸ்க்ரீம் அபிஷேகம் பண்ணி, சாக்லேட் அர்ச்சனை பண்ணி தீபாராதனை காட்டியாச்சா? இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா? காதல் அருவியில் கம்ப்ளீட்டா நனைஞ்சாச்சா? "

" எப்படி ப்ரோ இப்படி? நேரில் பாத்த மாதிரி அப்படியே சொல்லறயே? ஒருவேளை என் பின்னாலயே வந்து ஸ்பை பண்ணினயா என்ன? " என்றான் பிரசன்னா. காதல் தன் நண்பனை எப்படியெல்லாம் மாற்றிவிட்டது என்று நம்பமுடியாமல் பார்த்தான் விக்னேஷ்.

" வேற வேலையே இல்லையா எனக்கு? நீ தான் யூஸ்லெஸாச் சுத்தறேனா நானும் உன் பின்னாடி சுத்துவேனா? " என்று பற்களை நறநறவென்று கடித்தபடி கோபத்துடன் பேசினான் விக்னேஷ்.

" ஆந்திரா போகணும்னு தெரியும் இல்லையா? எங்க போய்த் தொலைஞ்சே? கொலைகாரப் பாவிங்க முன்னாடி பலிகடாவா என்னை அனுப்பிச்சு வச்சுட்டு எதுக்குடா தலைமறைவானே? ஃபோனைக் கூட அட்டன்ட் பண்ணாம அப்படி என்ன ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு? " என்று சிடுசிடுத்தவனை அசட்டுச் சிரிப்புடன் எதிர்கொண்டான் பிரசன்னா.

" அது வந்து நிலா மேடமும், நீயும் தனியா ஒரே காரில் டிராவல் பண்ணினா, கண்ணும் கண்ணும் நோக்கியாவாகி, காதல் தீ பத்திக்கும்னு அருவி தான் ஐடியா கொடுத்தா. உங்களுக்கு ஒரு ஸிட்டுவேஷனை க்ரியேட் பண்ணிக் கொடுத்துட்டு நாங்க வேற பக்கம் அப்படியே நகந்துட்டோம்" என்று மீண்டும் அசடு வழிந்தான் அந்த உயிர்த் தோழன்.

" அடத் தூ! உன் மூளையை ஃபினாயில் ஊத்தித் தான் கழுவணும். உன்னோட கேவலமான இந்த ஐடியாவால இன்னைக்கு என் உயிருக்கே ஆபத்தாயிடுச்சு தெரியுமா உனக்கு? "

" அப்படி என்ன பாஸ் ஆச்சு? ஓவரா பில்டப் கொடுத்தா நல்லாயில்லை, ஆமாம்! " என்ற பிரசன்னாவைப் பார்த்து முறைத்த விக்னேஷ், ஆந்திரா போகும் வழியில் நடந்தவற்றைத் தெள்ளத் தெளிவாக பிரசன்னாவுக்கு விவரிக்க, வாயடைத்துப் போனான் அவன்.

" நல்லவேளை, அருவியால நான் பொழைச்சேன்" என்று சத்தமாகத் தன்னுடைய மைன்ட்வாய்ஸை அவன் வெளியே உளறிவிட, வேகமாக வந்து அவனை நன்றாக மொத்தினான் விக்னேஷ்.

" விடு ப்ரோ, நடந்தது நடந்தாச்சு. இப்படி என்னை அடிச்சு, எக்குத்தப்பா ஏதாவது ஆகி, அருவி கண்கலங்கினா நிலா மேடம் உன்னை சும்மா விடுவாங்களா? " என்று நிலாவை நினைவூட்டியதும் சட்டென்று நிறுத்தினான் விக்னேஷ்.

" என்ன வரவர ஓவர் பக்தியா இருக்கு உனக்கு. நல்லா இருக்கா இது ?வாய்க்கு வாய் மேடமா? தேறிட்டே நீ! அப்பாவியா நடிச்சு அவங்க மனசில இடம் பிடிச்சுட்டே! நான் தான் கிடந்து தவிக்கிறேன். திருவிளையாடல் நாகேஷ் மாதிரி புலம்ப வச்சுட்டீங்களே பாவிகளா! ! "

" புலம்பறதை நிறுத்திட்டு அடுத்த ஸ்டெப்பை யோசிக்கலாமா? மாறனை இனிமேல் ஓரம் கூட்டிட்டு, நிலா மேடத்தின் மனசில இடம் பிடிக்கப் பாரு ப்ரோ. ஏதாவது தடாலடியா செஞ்சு அவங்களை இம்ப்ரெஸ் பண்ணனும் " என்று அறிவுரை வழங்க, விக்னேஷ் முறைத்தான்.

" உன் கிட்ட அட்வைஸ் கணக்கு நிலைமைக்கு வந்துட்டேன் இல்லை? இரு, இரு, பூனைக்கு ஒரு காலம் வந்தா என்னை மாதிரி புலிக்கும் ஒரு காலம் வரும், அப்ப உன்னை கவனிக்கறேன். நானே இப்ப அதைப் பத்தித் தான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்று விக்னேஷ் சொல்ல,

" பாஸ் இப்படிப் பண்ணினா என்ன? " என்று பிரசன்னா ஒரு திட்டத்தை வழிமொழிந்தான்.

" ஓகே, பாக்கலாம். ஒண்ணுமே ஐடியா மனசில எட்டிப் பாக்காத சமயத்தில் இந்தச் சின்ன நூலைப் பிடிச்சுட்டு முன்னேறப் பாக்கறேன்" என்றவன், நிலாவிடம் உடனே பேச்சுவார்த்தை நடத்தினான்.

" ஃபோனில் எதுவும் பேச வேணாம். நேரில் பேசிக்கலாம்" என்று பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

" எங்கே, எப்படி, எப்போ மீட் பண்ணறதுன்னு ஒண்ணுமே சொல்லலையே மச்சி, உன்னோட ஸோ கால்டு மேடம்" என்று பிரசன்னாவைப் பார்த்து நக்கலடித்தான் விக்னேஷ். பிரசன்னாவோ அவனைப் பார்த்து அபய முத்திரை காட்டினான்.

" பொறுமை, பொறுமையா இரு பாஸ். டயம் வேணும் இல்லையா? எல்லாத்தையும் தரவு யோசிச்சு நிச்சயமா கம்யூனிகேட் பண்ணிடுவாங்க" என்றான் பிரசன்னா.

' வரவர இவனோட லொள்ளு தாங்க முடியலை. மென்னிலாவுக்கு ஒரு ஃபேன் கிளப் ஆரம்பிச்சு மெம்பர் சேப்பான் போல இருக்கே? சரியான ஃபேன் பாய்! ' என்று நினைத்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் விக்னேஷ்.

பிரசன்னா சொன்னபடியே நடந்தது. அடுத்த நாள் காலையில் விக்னேஷின் ஆஃபீஸ் ரூமில் லேப்டாப் அருகே படபடத்த துண்டுக் காகிதத்தில் குறிப்பு இருந்தது.

" நாளைக்கு ஈவினிங் 5 மணி, கீழ்ப்பாக்கில் ஈகா தியேட்டர் பக்கத்தில் இருக்கும் சிவாவிஷ்ணு கோயில்" என்று எழுதிக் கீழே பிறை நிலா வரையப்பட்டிருந்தது. அந்தக் காகிதம் எப்படி வந்தது, யார் கொண்டு வந்தார்கள், எப்போது வந்தது? என்பது அவர்களுக்குத் தெரியாத புதிர். ஒவ்வொரு விஷயத்திலும் அவன் எதிர்பார்த்ததை விட அதிக புத்திசாலித் தனத்தோடு தான் செயல்படுகிறாள் இந்த நிலா!

மாலை ஐந்தரை மணியிருக்கும். கோயிலுக்குள் விக்னேஷ், பிரசன்னா இருவரும் நுழைந்தபோது சிவன் சந்நிதியில் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நிலா, அருவி, பிரபா மூவரின் கூட்டணி அவர்கள் கண்களில் பட்டது. பிரசன்னா, தனது அருவிக்காகப் பூ வாங்கித் தர நினைத்துப் பூக்காரியிடம் பேரத்தில் இறங்கினான். விக்னேஷ் உடனே உள்ளே புகுந்து, அவர்களை நோக்கி நடந்தான்.

சிவன் சந்நிதியில் தரிசனத்தை முடித்து விட்டுப் போகும் போது பின்னால் இருந்த சிறிய மண்டபத்தில் நிலாவும், விக்கியும் தனிமையில் பேச ஆரம்பிக்க, அருவியும், பிரபாவும் பெருமாள் சந்நிதிப் பக்கம் போனார்கள். பிரசன்னாவோ தன் இதயம் போகும் திசையில் நடந்தான்.

" என்ன அப்படி முக்கியமான விஷயம் பேசணும்? நேற்று இல்லாத ஞானோதயம் இன்று எப்படி? "

" நிலா, உனக்கு எப்படிப் புரிய வைக்கறதுன்னே தெரியலை. உண்மை தெரிஞ்சதும் நான் மாறனை விட்டு எப்பவோ விலகியாச்சு. நான் ஒண்ணும் வில்லன் இல்லை மாறன் மாதிரி! "

' நான் எப்படிடா உன்னை நம்புவேன்? ' என்ற அலட்சியப் பார்வையை அவன் மீது வீசினாள் மென்னிலா.

" மாறன் அவங்கப்பாவோட சேந்து செய்யற கிரிமினல் ஆக்டிவிட்டீஸ் எல்லாத்துக்கும் நான் ஆதாரம் வச்சிருக்கேன். எப்பவாவது யூஸ் ஆகும்னு பல வருடங்களாக கலெக்ட் பண்ணின என்னோட கடின உழைப்பு? அதை அப்படியே உன் கிட்டத் தந்துடறேன். அப்பவாவது என்னை நம்புவயா? "

" இன்ட்ரஸ்டிங், கோ அஹெட்! என்ன ஆக்டிவிடி? எங்கே சொல்லு கேக்கறேன்? "

" இல்லீகல் மைனிங்"

" என் கிட்ட ஏற்கனவே இருக்கு"

" ஹ்யூமன் டிராஃபிக்கிங்"

" இருக்கு"

" பல கவர்ன்மென்ட் கான்ட்ராட்டுகளைக் கைப்பத்தக் கொடுத்த லஞ்சம், அந்த கான்ட்ராட்டுகளில் நடந்த ஊழல்"

" ரொம்பப் பழைய விஷயம்? "

" கள்ள நோட்டு "

" இது அரதப் பழசு, எம்ஜிஆர், ஜெய்சங்கர் காலத்துப் படங்களில் துப்பறியப்பட்ட சமாச்சாரம். ஆல் ரெடி டன்"

" இதையெல்லாம் விடக் கேவலமான ஒண்ணு இருக்கு. எனக்குச் சொல்லவே வாய் கூசுது"

" சும்மாச் சொல்லு, இந்த டயலாக் எல்லாம் உனக்கு ஸுட் ஆகலை"

" சைல்ட் போர்னோகிராஃபி"

" இதுவும் தெரியும் " என்று அவள் சொன்னபோது விக்கிக்கு, அவளுடைய திறமை மீது இருந்த மதிப்பு கூடியது.

" சரி, இதெல்லாம் சின்ன விஷயம். உனக்கு பிரபாவின் பிறப்பு பத்தின ரகசியத்தைச் சொல்லவா? மாறனுக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் இது! " என்று நிறுத்த,

" அச்சச்சோ, பிரபான்னதும் தான் ஞாபகம் வருது. அவளை அருவி கூட ரொம்ப நேரம் தனியா விடமுடியாது. நான் அவங்களை முதலில் பிடிக்கறேன். அப்புறமா உன்னோட கட்டுக்கதையைக் கேக்கறேன்" என்று விரைந்தாள்.

" இந்தக் கோயிலில் ஜேமர் போட்டிருக்காஙகன்னு நினைக்கிறேன். இங்கே மொபைல் வொர்க் செய்யாது. அதுனால தான் இங்கே வரச் சொன்னேன்" என்று போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனாள். ' ஆஹா, நம்மைக் கோயிலுக்கு வரச் சொல்லியிருப்பது நல்லதொரு ஆரம்பம்' என்று நினைத்துக் கொண்டிருந்த விக்னேஷின் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டு விட்டுப் போனாள்.

கோயில் நுழைவாயில் அருகே பிரசன்னாவின் கையைப் பிடித்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்த பிரபாவையும், அருகில் நின்று தலையில் பிரசன்னா வாங்கித் தந்த பூவை வைத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்த அருவியையும் பார்த்ததும் தான் நிலாவின் நடை நிதானமானது. நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அந்த இடத்தை நெருங்கினாள்.

வெண்பா, தனது ஆடையில் ஒளித்து வைத்திருந்த ரகசிய ஃபோனை எடுத்துப் பார்த்தாள். தகவலைப் பார்த்து விட்டு ரெஸ்ட் ரூமில் போய் அந்த எண்ணை அழைத்து யாரிடமோ பேச ஆரம்பித்தாள்.

" என்ன ஆச்சு? என்ன எமர்ஜென்சி? "

" பிரபா எங்கே இருக்கா? பத்திரமா அதே இடத்தில் இருக்காளா? "

" இன்னைக்கு அருவியோட பிறந்தநாள்னு நிலா, அருவியோட இங்கே பக்கத்தில் ஒரு கோயிலுக்குப் போயிருக்கா"

" கோயிலுக்கா? கோயிலுக்கு எதுக்கு அனுப்பினே? "

" எவ்வளவு நாட்கள் தான் சின்னக் குழந்தையை ஒரே இடத்தில் அமைச்சு வைக்க முடியும்? கோயிலில் ஒரு பயமும் இல்லை. நீங்க அனுப்பின செக்யூரிட்டியும் கூடவே போயிருக்காங்க. நிலாவும் ரொம்ப அலர்ட்டாத் தான் இருப்பா எப்பவும் "

" இல்லைம்மா, எனக்கு வந்த இன்ஃபர்மேஷன் படி ஏதோ ஆபத்து இருக்கு இன்னைக்கு. எந்தக் கோயில், எந்த இடம்? " என்று கேட்டுக் குறித்துக் கொண்டவன் வெண்பாவை அங்கு உடனே கிளம்பிப் போகச் சொன்னான்.

அங்கே கோயிலில் நிலாவைப் பின்தொடர்ந்து வந்த விக்னேஷ் திடீரென முன்னால் பாய்ந்து ஓடினான். ஏனென்றால்
அவன் கண்ணில் பட்ட ஒரு காட்சி அவனுக்கு சந்தேகம் தந்தது.

பிரபாவின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் கையில் இருந்த பூக்கூடை கீழே விழ, அந்தப் பெண் கீழே விழுந்து சிதறிய சாமான்களை சேகரிக்கக் குனிந்தாள். ஒரு தேங்காய் மூடி உருண்டு கொஞ்சம் தள்ளி ஓட, பிரபா அதை எடுக்க அந்த திசையில் ஓடினாள். அப்போது அந்தப் பெண்ணின் கையில் ஒரு சின்ன ஊசி போன்ற ஒரு பொருள் புதிதாக முளைத்து இருந்தது. கண்களில் வெறியுடன் அந்தப் பெண் பிரபாவின் பக்கம் சென்று குனிந்து அவள் தோள்பட்டையில் ஊசியால் குத்தக் கையை ஓங்கினாள். இல்லை இல்லை முயற்சி செய்தாள். அந்தப் பெண்ணின் சந்தேகம் கிளப்பும் நடவடிக்கையை நிலா, விக்னேஷ் இரண்டு பேரும் தள்ளியிருந்து பார்த்ததால் கவனித்து விட்டார்கள். பக்கத்தில் நின்ற அருவி, பிரசன்னாவின் கண்களில் அது படவில்லை.

நிலாவுக்கு முன்னால் பாய்ந்து அந்த இடத்தை அடைந்து விட்ட விக்னேஷ், அந்தப் பெண்ணின் கை, பிரபாவை நெருங்கும் முன் வெற்றிகரமாகத் தட்டிவிட்டு விட்டான். ஆனால் அந்த முயற்சியில் ஊசி அவனுடைய கையில் ஏறி விட்டது. சுரீரென்ற வலி பின்னியது. கையைப் பிடித்து உதறிய விக்னேஷ் அலறியபடி கீழே விழுந்தான். கை, கால்கள் வெட்டி வெட்டி இழுத்தன.

" பாஸ், என்னாச்சு பாஸ்? " என்று கதறியபடி ஓடிவந்த பிரசன்னா, விக்கியைத் தாங்கிப் பிடித்தான். நிலா தான் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தாள். விக்னேஷின் பரிதாபமான நிலை அவளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. மனதிற்குள் எங்கோ ஒரு மூலையில் அவனுக்காக ஆண்டவனிடம் ஒரு குரல் விண்ணப்பிக்க ஆரம்பித்திருந்தது.

வெண்பா, அந்த இடத்தை வந்து அடையும் போது சைரனை அலற விட்டபடி அங்கிருந்து கிளம்பிய ஆம்புலன்ஸைக் கண்டு அதிர்ந்து போனாள்.

அருவியின் கண்ணீரும், மென்னிலாவின் முகத்தில் தெரிந்த கலக்கமும் அவளை என்னவோ செய்தன.


பைரவி தொடர்வாள்
 
Top