கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதிர்மறை வினையெச்சம் Prologue

Bhairavi

Member
எதிர்மறை வினையெச்சம்

Prologue

"இந்த தடவையும் அந்த எஜுகேஷன் டிபார்ட்மெண்ட் ப்ராஜெக்ட் சக்தி டிஜிட்டல் சொல்யூஷன்ஸ்கே குடுத்துட்டாங்க.. தெரியுமாடா?"

"அந்த பாஸ்போர்ட் ஆஃபிஸோட டென் க்ரோர் ப்ராஜெக்ட் கூட அவங்களுக்குத் தான்னு பேச்சு அடிபடுது.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா அவங்க?" என்றான் இரண்டாமவன்.

"முழுக்க பெண்களே நடத்துறாங்க.. சிஇஓ கூட 30 வயசுக்கும் குறைவான பொண்ணு அப்படின்னு பேப்பர்ல போட்டுருந்தாங்களே.. அந்த கம்பெனி தானே? பாராட்டணும் டா அவங்களை" என்றான் மூன்றாமவன்.

அப்படிச் சொன்னவுடன் அந்த மூன்றாம் நபரை மற்ற மூவரும் முறைத்தனர். "டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மாதிரி பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கே கிடைக்காத ப்ராஜெக்ட் ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி.. இவங்களுக்கு எப்படிடா கிடைச்சது? இவ்வளவு பெரிய ஆஃபிஸ் காம்ப்ளக்ஸ்ல ஒரு ஆபீஸை வாடகைக்கு எடுத்திருக்காங்க.. வாடகையே ஒரு லட்ச ரூபாய் வரும். எப்படி இவங்களால முடியுது?" மீண்டும் இரண்டாம் ஆளே கேட்டான்.

"எல்லாருமே லேடீஸா இருந்துக்கிட்டு இப்படி பெரிய பெரிய பிராஜெக்ட் வாங்கணும்னா திறமைதான் இல்லையாடா?" என்றான் மூன்றாமவன். அவனுக்கு அந்த சக்தி டிஜிட்டல் சொல்யூஷன்ஸ் மேல் நல்ல அபிப்ராயம் போலும். மற்ற மூவருக்கும் அது சுத்தமாக இல்லை என்பது அவர்களது பார்வையிலும், பேச்சிலும், உடல் மொழியிலும் நன்றாகவே தெரிந்தது.

"நீயே சொல்லிட்டியே எல்லாம் லேடிஸ்னு.. 'அந்த' திறமையை வச்சு வாங்கியிருப்பாங்க.. குடுக்க வேண்டிய இடத்துல எல்லாம் காசையும் தண்ணியா செலவழிச்சதாக் கேள்வி.. அந்த ஓனர் பொண்ணுல்ல.. அது அடியாள் கூட வச்சிருக்குதாம் டா.. சரியான ரவுடிப் பொம்பளன்னு பேசிக்கிறாங்க" என்றான் முதல் ஆள்.

"அந்த அடியாளாவது ஆம்பளைங்களா.. இல்ல அதுக்கும் பொம்பளைங்களை தான் வச்சிருக்காளா..?" இன்னமும் அவர்கள் பேச்சில் நக்கல் குறையவில்லை.

நான்காவது ஆள் எதுவும் பேசவில்லை என்றாலும் தலையை ஆட்டி மற்றவர்கள் கூறுவதை ஆமோதித்து, தங்கள் முன் இருந்த சிற்றுண்டியை நொறுக்கிக் கொண்டிருந்தான். நால்வரும் நாற்பது வயதைத் தொட்டுக் கொண்டிருந்த மென் பொறியாளர்கள். இளம் தொந்தியும் ஏறுநெற்றியும் அவர்கள் வயதைத் துல்லியமாகக் காட்ட, தங்கள் நவீன உடைகளாலும் மேற்பூச்சுக்களாலும் வயதை மறைக்க பெரும்பாடுபட்டு இருந்தனர்.
அவர்களது தலையும் கண்களும், நான் குறைந்தது பதினைந்து வருடங்களாக கம்ப்யூட்டர் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருக்கிறேனாக்கும் என்று கூறாமல் கூறின.

பேசும் விஷயத்தில் ஆழ்ந்து போய் சுற்றுப்புறம் மறந்து அவர்கள் உரக்கப் பேச, அப்போது அவர்களைக் கடந்தாள் ஒரு பெண். சாதாரண காட்டன் சுடிதார், நடு முதுகு வரை நீண்ட பின்னலிடப்பட்ட ஜடை, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டும் அதற்கு மேல் லேசாக குங்குமம் வைத்திருந்தாள். இவர்கள் அருகில் வந்து சற்று தாமதித்தவள், இதுவரை இந்த உரையாடலில் கலந்து கொள்ளாத நான்காவது நபரை நோக்கி,

"ஏன் மிஸ்டர்! உங்க பொண்ணு ஆதர்ஷினி பெருசா வளர்ந்து சாதிச்சாலும் இதே மாதிரி தான் உங்க ஃப்ரெண்ட்ஸ் பேசுவாங்க.. அப்படிப் பேசுறதை அப்பவும் இப்படித்தான் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுகிட்டே முட்டை பப்ஸ் சாப்பிட்டுக்கிட்டு இருப்பீங்களா?" என்றாள்.

"நீங்க யாரு? என் பொண்ணு பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று அவர் குழப்பத்துடன் முதல் முறையாக வாய் திறக்க,

"அதான் உங்க முன்னாடி ஸ்விஃப்ட் டிசையர் வண்டியோட சாவியை வச்சிருக்கீங்களே.. இந்த பில்டிங்ல இருக்குறது ஒரே ஒரு பாடாவதி ஸ்விஃப்ட் டிசையர். அதுவும் எப்ப நிறுத்தினாலும் நட்ட நடுவுல மத்தவங்க வண்டியை எடுக்க முடியாத அளவுக்கு தான் நிக்கும்.. ஆதர்ஷினின்னு பேர் எழுதிருக்கும்.. அது ஒரு பெரிய விஷயமா? அதை யாரும் வந்து சொல்லணுமா என்ன?" என்றாள் அவள் தன் கைகளைக் கட்டியபடி..

பேச்சு அவரை நோக்கி இருந்தாலும் கண்கள் முதல் இருவரையும் எரித்து விடுவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தன. மூன்றாம் நபரைப் பார்க்கும்போது மட்டும் கண்ணில் லேசாக ஒரு கனிவு வந்து போனது போல் தெரிந்தது.

"நீ யாரும்மா பெரிய ஜேம்ஸ் பாண்ட் மாதிரி.."

"ஜேம்ஸ்பாண்ட்டா இருக்கிறதுக்கு மூளை வேணும் சார்.. அது உங்க கிட்ட இருக்குற மாதிரித் தெரியல.. இருக்கிற கொஞ்சம் மூளைக்கும் உங்க கம்பெனி ஒழுங்கா வேலை குடுக்குற மாதிரித் தெரியல.. அந்தக் கொழுப்பு தான் இப்படி யார்னு தெரியாதவங்களப் பத்தி பப்ளிக்ல பேச வைக்குது.. இதே ஆட்டிட்யூட்ல நீங்க இருந்தா சீக்கிரம் வேலை போயிடும். அப்படி எதுவும் நடந்துச்சுன்னா என்னை வந்து பாருங்க. ஆங்.. வர்றதானா மனசை திடப்படுத்திக் கிட்டு வாங்க.. நான் ரொம்பவே மோசமானவ.." என்றபடி தன் கைப்பையை திறந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினாள்.

"எனக்கு வேலை குடுக்கிறதுக்கு நீ யாரு மா?" என்று நக்கலாக பேசியபடியே அந்த முதல் மனிதன் விசிட்டிங் கார்டைத் திருப்பிப் பார்க்க,

"மென்னிலா
சிஇஓ
சக்தி டிஜிட்டல் சொல்யூஷன்ஸ்" என்றிருந்தது.

விசிட்டிங் கார்டை பார்த்துவிட்டு நிமிர்ந்து பார்ப்பதற்கு அந்தப்பெண் இவர்களைக் கடந்து போயிருந்தாள்.

"டேய் இவளா மென்னிலா? ஏதோ டெரர் பார்ட்டி அப்படின்னு சொன்னீங்க.. சாதாரணமா சூப்பர் மார்க்கெட்ல பில்லு போடுற பொண்ணு மாதிரி இருக்கா?" என்று முதல் மனிதன் கேட்க,

"நீதானேடா மொத்தமா அவளை டேமேஜ் பண்ணிக்கிட்டு இருந்த.. எங்களைக் கேட்கிற?" என்றான் மூன்றாமவன்.

அந்த இரண்டாம் மனிதன், "இரு பேஸ்புக்ல ப்ரொஃபைல் பார்க்கிறேன்.. இது வேற யாராவது ஃபிராடா இருக்கப் போகுது" என்றபடி தன் செல்போனை எடுத்து மென்னிலா சக்தி என்று தேட, அதே பெண் புன்னகை முகத்துடனும் இதுவரை அவர்கள் கண்டிராத ஆளுமையுடனும் திரையில் வந்தாள்.

நான்கு பேரும் சொல்லி வைத்தது போல் அவளைத் திரும்பிப் பார்க்க அந்த ஃபுட் கோர்ட்டின் எல்லைக்குச் சென்றுவிட்டிருந்த அவள் இவர்கள் எதிர்பார்த்திருந்தது போல் திரும்பிப் பார்க்கவில்லை.

அதே நேரம் பக்கத்து டேபிளில் இருந்த இன்னொருவனும் தன் மொபைலை எடுத்து 'மென்னிலா சக்தி டிஜிட்டல் சொல்யூஷன்ஸ்' என்று முகநூலில் தேடிக்கொண்டிருந்தான்.

If you are bad, Iam your dad என்று அவனது டீஷர்ட்டில் எழுதியிருந்தது.
 
வாவ்!!!.. வாவ்!!!.. இன்ட்ரஸ்டிங்!!.. செமையா இருக்கு பா!!!.. அடுத்து வரும் அத்தியாயங்களுக்கு ஆவலுடன் மீீ வெயிட்டிங்!!!
 
Top