கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -16

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன் அத்தியாயம் -16

ஆரலியை தன் அறையில் கண்டதும் அத்வதா ஆச்சரியத்தோடு "ஆரலி என்ன அதிசயமா இருக்கு.என்னோட அறைல இருக்கே" என்றதும்...


அவளைக் கண்டதும் எழுந்துக் கொண்டவள் "ஏன் அத்வதா நான் உன்னோட அறைக்கு வரக் கூடாதா?"


"அப்படி எல்லாம் நான் ஏன் சொல்லப் போறேன்? நீ வந்ததில் எனக்கு சந்தோஷம் தான்" என்று சொல்லிச் சிரித்தாள்.


அவள் நின்றுக் கொண்டிருப்பதைக் கண்டவள் "ஏன் ஆரலி நின்றுக் கொண்டே இருக்கே உட்காரு" என்றவள் தன் புத்தகப் பையை ஓரமாக வைத்து விட்டு அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.


அவள் சொன்னதும் இவளும் அமைதியாய் உட்கார்ந்துக் கொண்டாள்.


ஆரலியின் அமைதியைப் பார்த்து அத்வதா அவள் ஏதோ தன்னிடம் பேச வந்திருக்கிறாள் என்று உணர்ந்துக் கொண்டவள் ஆரலியிடம் "என்கிட்ட எதாவது பேசனும்னு வந்து இருக்கியா"


அத்வதா நேராக கேட்ட கேள்வியைப் பார்த்து அவளை நிமிர்ந்து பார்த்து ஆமாம் என்று தலையசைத்தாள்.ஆனால் எதுவும் சொல்லவில்லை.


அவளது அமைதியைப் பார்த்து அத்வதா அவளிடம் மெதுவாய் "என்ன பிரச்சினை ஆரலி என்கிட்ட சொல்லு நான் உனக்கு உதவி செய்றேன்" என்று அவள் சொன்னதும் தான் தாமதம்….



"ஓஓஓஹோ…"வென்று அழத் தொடங்கினாள் ஆரலி.


அவளது அழுகைக்கான காரணம் தெரியாமல் விழித்தவள் ஆரலியின் தோளின் மேல் கைவைத்து "ஆரலி என்னாச்சு ஏன் அழறே" என்று ஆதரவாய் கேட்டாள்.


தோளில் கை வைத்த அத்வதாவின் கையைப் பிடித்துக் கொண்டவள் "அக்கா நீ சொல்ற முடிவுல தான் என் வாழ்க்கையும், என் உயிரும் எல்லாமே அடங்கி இருக்கு. நான் சொல்லப் போற இந்த விஷயத்தைப் நீ யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு" என்று அத்வதாவின் கைகளை தன் தலைக்கு மேல் வைத்தாள்.


அவளது இந்த அதிரடியான செயலில் ஆடிப்போன அத்வதா என்ன சொல்வதென்று தெரியாமல் அவளையேப் பார்த்தாள்.


"சொல்லு… அத்வதா இந்த விஷயத்தை யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு என் தலையின் மேல் கைவைத்து சொல்லு" என்று அவள் தலையில் கைவைத்தப் படி கேட்க…


இவளும் சரியென்று "யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன்" என்று சத்தியம் செய்தாள் அத்வதா.


அத்வதாவை இதுவரை ஆரலி தொட்டதாக அவளுக்கு நினைவு இல்லை.அவளுக்கு நினைவு வந்ததிலிருந்து அவளிடம் சிறு ஒதுக்கத்தோடு இருந்தவள் இன்று அவளின் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக ஆரலி அத்வதாவின் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள்.


"அத்வதா நான் ஒன்னு உன்கிட்ட கேட்பேன் அதை நீ இல்லைன்னு மறுக்காமல் எனக்கு தரணும்" என்றாள்.


அத்வதாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.'எதைப் பற்றி ஆரலி தன்னிடம் சொல்ல இப்படி போராடிக் கொண்டிருக்கிறாள்' என்ற யோசனையில் அவளைப் பார்த்தாள்.


அவளோ அவளது கையை இன்னும் இறுக்கமாய் பிடித்தபடி… "அத்வதா நான் தவரூபன் அத்தானை காதலிக்கிறேன்" என்றாள்.


அதைக் கேட்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் அதை அவள் முகத்தில் காட்டவில்லை.ஆரலி அத்வதாவின் கையைப் பிடித்துக் கொண்டு இருப்பதால் அவளின் உடம்பில் ஏற்பட்ட நடுக்கத்தில் புரிந்துக் கொண்டாள்.


அத்வதா அவளிடம் "தவ...ரூபனுமா?" என்று அவள் மெதுவாக கேட்டாள்.


அதற்கு ஆமாம் என்று ஆரலி தலையசைத்ததும் அவளிடம் இருந்து தன் கையை எடுத்துக் கொண்டு எழுந்து நின்றுக் கொண்டாள்.


ஆரலி விடாமல் பேசினாள்."அத்வதா நானும் அத்தானும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறோம்.நீயே எங்களுடைய நெருக்கத்தைப் பார்க்கலாம், நாங்க ரெண்டுபேரும் எப்போ சண்டைப் போட்டாலும் உடனே அத்தானே வந்து முதல்ல பேசிடுவாங்க" என்று அவள் சொன்னதும் அன்று இவர்கள் எல்லோரும் இல்லத்திற்கு ஒன்றாக போனதும் ரூபன் ஆரலியை கண்டித்ததும் அதற்கு அவள் கோபமாய் அங்கிருந்து சென்றதும் அன்றிரவே இருவரும் ஒன்றாய் தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்தது அவளுடைய நினைவுக்கு வந்தது.


ஆனால் ஆரலி ரூபனிடம் மன்னிப்பு கேட்டு அவனை சமாதானம் செய்து வந்தது அவள் மட்டுமே அறிந்த உண்மை.


ஆரலி சொன்னதைக் கேட்டு ஏனோ இனம் புரியாத வலி வந்தும் அதை வெளிகாட்டதவள் அப்படியே நின்றாள்.


"ஆரலி இப்போ இந்த விஷயத்தை எல்லாம் என்கிட்ட ஏன் சொல்லுறே? ரூபன் அம்மாகிட்ட பேசினால் உடனே ஓகே ஆயிடுமே பின்னே என்னக் கவலை? "


"இல்லைக்கா அத்தானால் இப்போ பேச முடியாது.ஏன்னா பிரச்சினையே அங்கே தான் இருக்கு"


"என்னச் சொல்லுறே? எனக்கு புரியலை"


"உனக்கும் அத்தானுக்கும் திருமணம் பேசி முடிக்க தாத்தாவும் அப்பாவும் சேர்ந்து முடிவு பண்ணியிருக்காங்க, அதோட அத்தான் தான் அடுத்த பட்டத்து இளவரசனாக வரப் போறாங்க" என்று அடுத்த அதிர்ச்சியை அவள் தலையின் மேல் இறக்கினாள்.

அதைக் கேட்ட அத்வதா "எ..ன்ன? தாத்தா..வா?" என்று சின்னதாய் தோன்றி மறைந்த புன்னகையோடு…

"ஆமாம் தாத்தா இறப்பதற்கு முன்னாலேயே உனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் செய்து வைக்கனும்னு முடிவு பண்ணி இருக்காங்க இது அப்பாக்கும் தாத்தாக்கு மட்டும் தான் தெரியும்.இன்னைக்கு பிருந்தா அத்தைக்கிட்ட பேசி அத்தை வீட்டுக்கு வந்ததும் தான் எல்லோருக்கும் தெரிந்தது.அத்தான் உட்பட,அதான் அத்தான் உன்கிட்ட பேசச் சொன்னாங்க இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிடுவியாம் அந்த உதவியைத் தான் நான் உன்கிட்ட கேட்க வந்தேன் நீ போய் அப்பாகிட்ட கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிடுவல்ல" என்று பொய்யை உண்மையாய் சொல்லி அவளிடம் திணித்தாள் ஆரலி.



அத்வதா கேட்டது எல்லாம் உண்மையா? பொய்யா? என்று அவள் பகுந்தறிவதற்கு முன் ஆரலி அவசரமாய் "கல்யாணத்தை நிறுத்திடுவ தானே? " என்று இன்னொரு தடவை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டார்.



அதைக் கேட்ட அவள் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.ஆரலிக்கு அதுவே போதுமானதாக இருந்தது.அத்வதா எப்படியும் கல்யாணத்தை நிறுத்தி விடுவாள் என்ற நம்பிக்கையில் அவள் அங்கிருந்து நிம்மதியாகச் சென்றாள்.


ஆரலி அங்கிருந்து அவள் சென்றிருந்தும் அவள் அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள்.


சிறிது நேரத்திற்கு பிறகு ஏதோ நினைவு வந்தவளாய் நேராய் தன் மேசைக்கு அருகில் போய் நின்றாள்.அங்கே தாத்தாவின் போட்டோ இருந்தது.அதை கையில் எடுத்துக் கொண்டவள் அவரையே பார்க்க அதுவரை அடக்கி வைத்திருந்த கருவிழி இரண்டும் நீரால் நிரப்பிக் கொண்டு வெளியே வரத் தொடங்கியது.


"தாத்தா எனக்கு என்ன தேவைன்னு எப்படி உங்களால தெரிஞ்சக் முடியுது.எனக்கு ரூபன் மேல விருப்பம் இருக்குன்னு நான் அதை தெரிந்துக் கொள்ளும் முன்னாடியே நீங்க எப்படி அதைக் கண்டுபிடிச்சீங்க தாத்தா ஆனால் உங்க விருப்பத்தையோ என்னோட விருப்பத்தையோ நிறைவேற்றிக்கிற நிலைமையில் நான் இல்லை.யார் என்கிட்ட என்ன உதவி செய்து கேட்டாலும்,என்னால முடியும் என்றால் அதை கண்டிப்பா செய்து கொடுக்கனும்னு நீங்க சொல்லித் தந்து இருக்கீங்க தாத்தா அதுவும் ஆரலி என்கிட்ட கேட்டு எப்படி நான் முடியாதுன்னு சொல்லுவேன் என்னை எல்லோரும் என்னச் சொன்னாலும் சரி நான் இந்த கல்யாணத்தை செய்துக்கிறதா இல்லை.அதனால நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று தன் மனதில் உள்ளதை தாத்தாவின் புகைப்படத்தைப் பார்த்து அழுதுக் கொண்டே சொன்னாள்.


அடுத்து நேராக ரூபனின் ஓவியத்தில் உள்ள துணியை விலக்கி அவனையேப் பார்த்தாள்.அவனின் கண்களைக் கண்டு "ரூபா உன் கண்ணுல என்னைப் பார்க்கும் போது நான் காதலைப் பார்த்தேன்.ஆனால் எனக்கானது அது இல்லை என்னும் தான் நான் நினைச்சது தப்புன்னு புரிய வைச்சுட்டே ரூபா,நீ உனக்கானவளோடு இரு" என்று அவள் வரைந்த ஓவியத்தில் அவனைக் கண்டவள் தன் கரங்களால் அவனை தொடுவது போல் தடவிக் கொண்டாள்.


அவள் கல்லூரியிலிருந்து வந்தும் அறையிலிருந்து வெளியே வரவில்லை.அவள் ஏன் இன்னும் ஏன் வரவில்லை என்று மாதேவி அவளின் அறைக்கு வந்துப் பார்க்க…



தாத்தாவின் போர்வையை தன் மேல் போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்தாள்.அவள் சுருண்டு படுத்திருப்பதைக் கண்ட மாதேவி தாத்தாவின் நினைவு அவளுக்கு வந்ததென்று நினைத்துக் கொண்டு அவளுக்கு அருகில் வந்து மெதுவாக அவளது தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே அத்வதாவிடம் பேசினார்.


"அத்வதா தாத்தாவோட நினைவு வந்துடுச்சா?" என்று அன்பாய் கேட்டார்.


அவளும் ஆமாம் என்று தலையசைத்து விட்டு மாதேவியின் கைகளைப் பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.


அவளது சிறுபிள்ளைத் தனமான செயலைக் கண்டு சிரித்த மாதேவி "என்னம்மா இன்னும் சின்னப் பிள்ளையாட்டும் அம்மாவோட கையைப் பிடிச்சுட்டு இருக்கே அப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க" என்றாள் மகிழ்ச்சியாய்….


அம்மா சொன்னதைக் கேட்டு அப்பொழுது தான் தனக்குத் தெரியும் என்பது போல் எழுந்துக் கொண்டாள்.


"அம்மா இப்பொ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நான் படிக்கனும்மா"


"அத்வதா இது உன் அப்பாவோட முடிவு என்னால ஒன்னும் செய்ய முடியாது.கல்யாணத்துக்கு அப்புறம் கூட படிக்கலாம்னு சொல்லுவாங்க, உன் அப்பா எதாவது முடிவு பண்ணிட்டா அவர் யார் பேச்சையும் கேட்க மாட்டாங்க அதுவும் இது தாத்தாவோட முடிவு"


"அம்மா என்னச் சொன்னாலும் நீங்க என்கிட்ட கேட்டு இருக்கலாமே" என்றாள்.


அப்பொழுது அங்கே வந்த பிருந்தா "என்ன வதா இங்கேயே இருக்கே வாம்மா வெளியே" என்று அவர் அன்பொழுக அழைத்தார்.


அதற்கு மாதேவி "மதனி அவளுக்கு அப்பாவோட நினைவு வந்துடுச்சு.அப்பாவோட நினைவு வந்தாலே இப்படித் தான் தனியா அறையில அடைஞ்சுப் போய் உட்கார்ந்துவ"


"அப்படியா இனிமேல் கவலைப்படாதே! அதான் உன்கூட ரூபன் இருப்பான்.அவன் உன்னை தனிமையில் இருக்கிற மாதிரி நினைக்கவே விடமாட்டேன்" என்றார்.


அவள் பிருந்தா பேசியதற்கு பதிலாய் புன்னகை ஒன்றைச் சிந்தினாள்.


பிருந்தா அவளிடம் ஒரு புடவையையும் சில நகைகளையும் கொடுத்து இதை உடுத்திக்கிட்டு கீழே வாம்மா, எல்லோர் முன்னிலையும் திருமணத்தைப் பற்றி பேசி முடிவெடுக்கலாம்" என்றார்.


அவளும் சரியென்று தலையசைக்க… அத்வதாவை அலங்காரம் செய்ய சேவகி வந்து அவளை அழகாய் புடவை உடுத்தி சிகை அலங்காரம் செய்யத் தொடங்கினார்.


அத்வதாவிற்கு எதிலும் நாட்டமும் இல்லை.அதில் மன ஒப்புதல் இல்லாமல் இவை எல்லாம் ஆரலிக்கு சொந்தமானது என்று எண்ணமே மேலோங்க...முகத்தில் புன்னகை ஒட்டாமல் கவலையே தொற்றிக் கொண்டது.


மனம் பாராம் தாங்க முடியாதவள் தாத்தாவிற்கு அடுத்ததாக அவளின் மனதிற்கு நெருக்கமானவராய் இருப்பவர் காந்திமதி பாட்டி மட்டுமே.அதனால் அவரின் அலைப்பேசிக்கு அழைத்தாள்.



அத்வதாவின் அழைப்பு என்றதும் காந்திமதி அவளிடம் பேசினார்.

"பாட்டி நான் ஒன்னு கேட்பேன். அதுக்கு நீங்க நியாயமான பதிலைச் சொல்லனும்"

"சொல்றேன் மா. என்ன விஷயம் சொல்லு"


"அவள் தன் கதையை தன் தோழியின் கதையைப் போல் சொன்னாள்.பாட்டி இப்போ சொல்லுங்க என் பிரெண்ட்டு என்ன செய்யட்டும்?"


"இரு மனம் ஒன்னு சேர்ந்த பின்னாடி இங்கே இந்தப் பொண்ணுக்கு வேலையே இல்லைம்மா. ஒன்னு அவ எல்லோர்க்கிட்டயும் உண்மையைச் சொல்லனும் இல்ல அவ அங்கிருந்து விலகி விடுவது தான் நல்லது" என்றார்.


அவளின் முடிவையே பாட்டியும் சொல்ல…. "தாங்ஸ் பாட்டி" என்றாள்.


"எதுக்கும்மா உன்னோட முடிவும் நான் சொன்னது ஒரே மாதிரி இருக்குன்னு சொல்லியா தாங்ஸ் சொல்றே"


"அது...வந்து "என்று அவள் திணற…


"அத்தும்மா நீ சொல்லவில்லை என்றாலும் என்னால் கண்டுபிடிக்க முடியும்"


"பா..ட்டி அப்படி இல்லை"


"எதுவாக இருந்தாலும் யோசிச்சு நல்ல முடிவா எடும்மா.நான் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை.நீ ஐயாவோட வளர்ப்பு அந்த வளர்ப்பு என்றைக்கும் தப்பா எதுவும் செய்ய வைக்காது ஆனால் பெத்தவங்ககிட்டயும் ஒருதடவை பேசு" என்றார்.


"சரிங்க பாட்டி நீங்க சொன்னமாதிரியே நான் கேட்கிறேன்" என்று அலைபேசியை வைத்து விட்டாள்.


அழகுற மின்ன அமர்ந்திருந்தவளை வந்து பிருந்தா திருஷ்டி முடித்து அவளை அரண்மனையின் பெரிய வரேற்பரையில் அழைத்துச் சென்றனர்.


நல்ல காரியம் செய்வதற்கு முன்னால் ஒரு சின்ன பூஜைச் செய்ய அங்கே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.


குடும்பத்தில் உள்ள அனைவரும் அங்கிருந்தனர்.ஆரலி அத்வதாவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.தான் வந்து அவளிடம் இவ்வளவு பேசியும் அவள் அழகாய் உடைமாற்றி வந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


எல்லாவற்றையும் வெறுமென செய்துக் கொண்டிருந்தாள்.அடுத்து அத்வதா அலமேலம்மா கோவிலுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.அதற்கு முன்னால் அவள் தன் தந்தையைக் காணச் சென்றாள்.


ரதன் ஏதோ பைலை உட்கார்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.அவரின் அருகில் சென்று மெதுவாய் "அ...ப்பா" என்று அழைத்தாள்.

அவரும் அவளைப் பார்த்து விட்டு தன் வேலையிலேயே கவனம் செலுத்த...


"அப்பா நான் உங்ககிட்ட அதைப் பத்தி பேசனும்"


"அத்வதா இதுல உன்னோட விருப்பத்தை விட உன் தாத்தாவோட விருப்பம் தான் முக்கியம் நான் நினைக்கிறேன்.நீயும் அதைத் தான் நினைப்பேன்னு நினைக்கிறேன் சரியா?" அவர் அவளின் பதிலையும் சேர்த்து சொல்லி விட்டு அவளிடம் சிறு தலையசைப்பை மட்டும் கேட்டார்.


அவளும் வேறு வழியில்லாமல் ஆமாம் என்று தலையசைத்து விட்டு கோவிலுக்குச் சென்று விட்டாள்.


கோவிலுக்கு சென்று அங்கேயும் அவள் நினைத்தது ஒன்று தான் இனிமேல் அவளால் யாரிடமும் பேசி கல்யாணம் நிறுத்துவது என்பது நடக்காத காரியம் என்று புரிந்துக் கொண்டு அடுத்த அவள் யோசித்திருந்த வழியைத் தவிர அவள் செயல்படுத்த வேறு வழியில்லை.


அதனால் என்னவெல்லாம் நடக்குமோ? என்று நினைத்து பயந்தாலும் தற்சமயம் கல்யாணத்தை நிறுத்த ஒரே வழி இது தான் அவள் முடிவெடுத்து அதை மறுநாளே தனக்குள்ளே ஒப்புக் கொண்டாள்.ஒரேயடியாக…


திரும்ப அரண்மனைக்கு வரவே முடியாத யோசனையைத் தான் அவள் முடிவெடுத்திருந்தாள்.


அதுவரை ஏதோ பறிக் கொடுத்தவள் போல் இருந்தவள் இனிமேல் இவர்களோடு ஒன்றாய் இருக்க முடியாதே! அதோடு தான் செய்யும் தவறுக்கு நிச்சயம் தண்டனையும் கிடைக்கும் அது கிடைத்தால் எல்லோரும் தன்னோடு பழையபடி பேசுவார்களா? என்பது கேள்விக்குறி தான் அதனால் அவள் உள்ளே வலியோடு வெளியே சிரிப்போடு பேசிக் கொண்டு வந்தாள்.


அவளின் உடனடி மாற்றத்தைக் கண்ட ஆரலி அத்வதாவிடம் ரூபன் அத்தான் பேசி விட்டானோ? என்று பதற்றமாக இருந்தது.அவளுக்கு கேட்கவும் தயக்கமாய் இருந்தது.


எல்லோரும் கோவிலுக்கு சென்று விட்டு அன்றிரவு எல்லோரும் ஒன்றாய் உணவருந்தினர்.தேவி யாரோடும் கலந்துரையாடமல் அமைதியாகவே இருந்தார்.


மறுநாள்…


எப்பொழுதும் போல் சூரியன் தன் விடியலை நோக்கிச் செல்ல…


அத்வதா அன்று எப்பொழுதும் போல் எழுந்துக் கொள்ளும் நேரத்தை விட முன்னரே எழுந்துக் கொண்டாள்.பாட்டி, அம்மா,அப்பா என எல்லோருக்கும் தேவையான உதவிகளைச் செய்தாள்.


"அம்மா நான் இன்னைக்கு வெளியே போறேன்,கொஞ்சம் பணம் தர்றீங்களா?"


இத்தனை வருடங்களில் அவள் இப்படிக் கேட்டதே இல்லை.மாதேவியும் அத்வதா கேட்டு விட்டாள் என்பதற்காக கைநிறைய பணத்தைக் கொடுத்து என்ன வாங்கப் போகிறாள்? என்று ஒரு வார்த்தைக் கேட்கவும் இல்லை.


அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.அடுத்து அப்பாவைப் பார்க்க சென்றாள்.அங்கு ரதனிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு சென்றாள்.



அரண்மனை முழுவதும் சுற்றி பார்த்து விட்டு வெளியே வர அவளுக்காய் அங்கு மகிழுந்து நிற்க யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினாள்.கையில் தாத்தா வின் புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டாள்.


மகிழுந்தை ஒரு கடையில் நிற்பாட்டி சொல்லி விட்டு அந்த ஓட்டுனரிடம் ஷாப்பிங் செய்து விட்டு திரும்ப அழைப்பதாகச் சொல்லி விட்டு அந்த பெரிய கடையினுள் நுழைந்துக் கொண்டாள்.


அவள் உள்ளே சென்ற அடுத்த நிமிடம் அவளின் கைப்பேசி அழைத்தது.யாரென்று பார்க்க… புது எண் வரவே யோசனையோடு எடுத்துப் பேசினாள்.


"ஹலோ யாரு? என்ன விஷயம்?" கொஞ்சம் பதற்றத்தோடு கேட்டாள்.


"அத்தும்மா நீ எங்கே இருக்கே? நாங்க எல்லோரும் இங்கே பஸ் நிறுத்தத்தில் இருக்கிறோம்"

"யார் பேசுறீங்க?"


"அத்தும்மா நான் தான் பாட்டி பேசுறேன்"


அதைக் கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.எங்கே வந்து நின்று பேசுகிறார் என்று ஒன்றும் புரியமால்… "பாட்டி நீங்க எங்கே வந்து இருக்கீங்க?"


"நீ எங்கே போறியோ அங்கேயே எங்களையும் கூடிட்டு போய்டு அத்வதா உன்னோடவே நாங்களும் இருக்கோம்"


அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.அவளே ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் வெளியே வர வேண்டும் என்று வந்திருக்கிறாள்.இதில் பாட்டி வேற என்னப் பேசுகிறார்? என்று புரியாமல் அப்படியே நின்றாள்.


"உனக்கு பயத்துல ஒன்னுமே புரியலைன்னு எனக்கு தெரியுது. நீ வீட்டை விட்டு வெளியே வந்துட்டேல்ல நாங்களும் உன்கூட வருகிறோம்"


"பாட்டி நான் வந்தது எப்படி உங்களுக்கு தெரியும்?"


"எல்லாம் நீ நேற்று என்கிட்ட கேட்ட கேள்விக்கு உன்னோட முடிவு இப்படித் தான் இருக்கும்னு எனக்கு தெரியும் அத்வதா. உன்னோட எங்களையும் கூடிட்டு போ நாங்க உன்னை எந்தவிதத்திலேயும் தொல்லை பண்ண மாட்டோம்"


"நீங்கன்னா யாரை எல்லாம் சொல்லுறீங்க? ஆசிரமத்துல என்னச் சொல்லி வெளியே வந்தீங்க?"


"நான், சாந்தனா, மானவி எங்களையும் நீ எங்கே போறியோ அங்கே கூடிட்டு போய்டும்மா குடும்பமே இல்லாமல் இருந்த எங்களுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கி கொடுத்தே. உன்னை பார்க்காமல் எங்களால இருக்க முடியாதும்மா ப்ளீஸ் வாம்மா" என்று அவர் கெஞ்சினார்.


அத்வதாவிற்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை.எப்படி தனியாய் இருக்கப் போகிறோம்? என்று யோசித்துக் கொண்டு இருந்தவளுக்கு பாட்டியின் வார்த்தை பெரிய ஆறுதலைக் கொடுத்தது.


"பாட்டி இல்லத்தில என்னச் சொன்னீங்க?"


"இன்னைக்கு என் சொந்தத்துல கல்யாணம் இருக்கு அங்கே வந்து பத்திரிக்கை கொடுத்தாங்க.அதனால இவங்க ரெண்டுபேரையும் கல்யாணத்துக்கு கூடிட்டு போறேன்னு அழைச்சிட்டு வந்துட்டேன், நீ பயப்படாதே! நான் எதுவும் சொல்லவில்லை"என்றார்.


அவள் தனிமையை நோக்கி நகரும் போது பாட்டி அவளை அன்பாய் ஆதரவாய் கட்டிக் கொண்டார்.


"பாட்டி இதோ வர்றேன்" என்று அவள் அவர்கள் இடம் நோக்கி விரைந்தாள்.அங்கே மூவரும் அவளுக்காய் காத்திருந்தனர்.


அவளைக் கண்டதும் ஆரத்தழுவிக் கொண்டனர்.அவர்கள் ஏன் இப்படி செய்தாய்? என்று அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கவில்லை.


சின்ன வயதிலேயே அவ்வளவு புத்திசாலியுடனும் பொறுப்புவுணர்வுடனும் இருப்பவள் இன்று இந்த முடிவு எடுத்து இருக்கிறாள் என்று நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று புரிந்துக் கொண்டனர்.


அவர்களைப் பொறுத்தவரை தங்கள் வாழ்வை வளமாக்கியவளை தனியாக கஷ்டப்படுத்த விரும்பாமல் அவளின் கஷ்டங்களில் தங்களின் பங்கையும் வாங்கிக் கொண்டனர்.


நடந்தவைகள் எல்லாவற்றையும் ரேகாவிடம் சொன்னாள்.அவளும் அவளிடம் பெற்றவர்களிடம் உண்மையைச் சொல்லிவிடு என்று எவ்வளவு எடுத்துச் சொல்லியும் தன் முடிவில் மாறாமல் இருந்த தோழிக்காக திண்டுக்கல்லில் உள்ள தன் சித்தியின் வீட்டில் இருக்க ஏற்பாடு செய்திருந்தாள்.


அங்கே இவர்கள் நால்வரும் தங்களின் புது வாழ்க்கைக்கான வாழ்வை வாழத் தொடங்கினர்.


தங்கையின் குறும்புத்தனமான அன்பிற்கு மானவியும், அன்னை பாசத்திற்கு சாந்தனாவும், பாட்டியின் அரவணைப்பிற்கு காந்திமதி பாட்டியும் என்று ஒரு குடும்பம் அவளுக்கு கிடைத்தது.


அவர்களுக்கு ஒரு வருடம் கழிந்த நிலையில் அவர்களை யாரோ பின் தொடர்வது போல தோன்றவும்,அங்கே அவளுக்கு சரியான வேலைக் கிடைக்காமல் போகவே ரேகாவின் தந்தை அவளை சென்னைக்கு அழைத்து தன் தொழிலில் அவளை ஏற்கனவே பங்குதாரராக சேர்த்துக் கொண்டதால் அவளை அழைத்து கம்பெனியை பார்த்துக் கொள்ளச் சொல்லி சென்றார்.


அதோடு இவர்கள் நால்வரும் சென்னையில் வந்து இருந்து மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது.இதை எல்லாம் ஆட்டோவில் வந்துக்கொண்டிருந்த அத்வதா தவரூபனை இன்றுக் காணவும் பழைய நினைவுகளை மீட்டிப் பார்த்தாள்.



அன்று இவர்களை தன்னோடு அழைத்து வந்து மானவியின் வாழ்க்கையை தானே கெடுத்து விட்டோமே என்ற குற்றவுணர்வில் தவித்தபடியே இருந்தாள்.


மருத்துவமனை வரவும் ஆட்டோவிலிருந்து இறங்கியவள்
மானவியைக் காண உள்ளே சென்றாள் அத்வதா



(தொடரும்)
 
Top