கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -17

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் -17


மருத்துவமனையின் உள்ளே நுழைந்து வரவேற்பறையில் உள்ள பெண்ணிடம் மானவியைச் சேர்த்துள்ள அறையின் எண்ணைப் பற்றிக் கேட்டுக் கொண்டு அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.


அவளைக் கண்டதும் ஓடி வந்துக் கட்டிக் கொண்ட சாந்தனா அழத் தொடங்கினார்.


அத்வதா அவரின் முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தாள்."அம்மா அழாதீங்க"


அவளிடம் இருந்து எழுந்துக் கொண்டவர் "என்ன அத்வதா இப்படி சொல்லுற? மானவி என்ன நிலைமைல இருக்கிறான்னு பார்த்தியா? அவளை யாரோ…" என்று அவர் பேசி முடிக்கும் முன்…


"அம்மா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலை.அவ நல்லாத் தான் இருக்கிறாள்" என்றாள்.


உடனே பாட்டி "நான் தான் சொன்னேன்ல ஒன்னும் நடந்து இருக்காதுன்னு நீ தான் அவளை பார்த்ததிலிருந்து அழுதுக்கிட்டே இருக்கே.அத்து எங்களை இங்கே வரச் சொல்லிட்டு நீ இவ்வளவு நேரமா எங்கே போயிட்டே? என்ன நடந்ததுச்சுன்னு சொல்லு அப்போத் தான் நிம்மதியா இருக்கும்"



"மானவி இந்த இடத்துல இருக்கான்னு எனக்கு போன் வந்தது" என்று நடந்த அனைத்தையும் சொன்னாள்.


சாந்தனாவிற்கும் பாட்டிக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.அப்பொழுது அங்கே உள்ளே வந்தாள் ரேகா.


"அத்து என்ன நடந்தது?"


"அதான் சொல்லிட்டு இருக்காம்மா" என்று சாந்தனாச் சொன்னார்.


பாட்டி "உனக்கு போன் போட்டு சொன்னது யார் என்று பார்த்தியா?"


"ம்ம்… பார்த்தேன்"

"யாரு"

"ரூபன்… தவரூபன்"

அவன் பெயரைக் கேட்டதும் மூன்று பேர் முகமும் அதிர்ச்சியில் இருக்கிறது என்று அவர்கள் முகமே சொல்லாமல் சொல்லியது.இவள் அமைதியானாள்.


ரேகா கோபமாக "என்ன ரூபனா? அவனுக்கு எப்படித் தெரியும் நீ இங்கே இருக்கேன்னு? அதோட உன் தங்கச்சியோடு ரொம்ப சந்தோஷமா இருக்கானோ? உன் சந்தோஷமான,நிம்மதியை வாழ்க்கையை தொலைக்க வைத்தவன்"


அத்வதா அவன் தான் மானவிக்கு உதவி செய்த விஷயங்களைப் பற்றி சொன்னாள்.


"எப்படி அவன் உனக்கு செய்த கெட்டத்துக்கு பிரயாசித்தமா நல்லது செய்றானோ?" என்று இன்னும் கோபப்பட்டாள் ரேகா.


பாட்டி அத்வதாவிடம் "உன் அப்பா அம்மாவைப் பற்றி கேட்டியா?"


"இல்லை பாட்டி நான் எப்படி அவங்களைப் பற்றி நான் விசாரிப்பேன்.அது சரியா? நான் செய்த காரியம் என்ன? அதனால அவங்களுக்கு தலைகுனிவே தவிர பெருமை கிடையாது என்னால கேட்க முடியலை பாட்டி"என்று அவள் அழுதாள்.


அவளை சாந்தனாவும் பாட்டியும் ஆதரவாய் பற்றிக் கொண்டனர்.


ஆனால் ரேகா கோபத்தோடு "அழு நல்லா அழு இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்? எத்தனை தடவை சொன்னேன் நீயா முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி அப்பா,அம்மாகிட்ட பேசுன்னு சொன்னேன் கேட்டியா? இப்போ எந்த முகத்தை வைச்சுகிட்டு அவங்களைப் பற்றி விசாரிப்பே? உங்க தாத்தா வருத்தப்படுற மாதிரி நடந்துக்கிட்டே தானே?" என்று அவள் அவளைப் பார்த்து எதிராய் கேட்டாள்.


"இல்லை ரேகா நான் தாத்தா வருதப்படுற மாதிரி நான் நடந்துக்கவே இல்லை.தாத்தாவுடைய ஆசைப்படி ரூபன் தான் இளவரசன்,ஏன்னா அவன் கையில் அப்பா இளவரசராக இருக்கும் போது போட்டு இருந்த மோதிரத்தை அவன் கையில் பார்த்தேன் அப்போ அவனை இளவரசனா முடி சூடிட்டாங்கன்னு நினைக்கிறேன்,அதோடு நம்ம வாழுற வாழ்க்கை மற்றவங்களுக்கும் உபயோகமா இருக்கனும் தான் தாத்தா சொல்லி இருக்காங்க அதன்படி என்னை நம்பி வந்த அம்மா, பாட்டி,மானவி எல்லோரையும் சந்தோஷமாகத் தானே வைச்சு இருக்கேன் சொல்லுங்க பாட்டி நான் சொல்றது சரி தானே"


"எல்லாம் சரி தான். ஆனால் தாத்தா உன்னைத் தான் அடுத்த ராணியாக்க நினைச்சாங்க ஆனால் நீ அந்த ஆசையை நிறைவேத்துனியா? அதோட அவங்க சந்தோஷத்தைப் பற்றி கேட்டியே? நீ சந்தோஷமா இருக்கியா?"


ரேகா கேட்ட இரண்டு கேள்விக்கும் அவளிடம் பதிலில்லை. என்னத் தான் அவள் சாந்தனாவை அம்மாவாக நினைத்தாலும், மாதேவியின் நிலைமையை நினைத்து அவள் கவலைக் கொள்ளாமல் இல்லை.ஏனென்றால் அத்வதா மூன்று வருடங்களுக்கு மேல் கழித்து பிறந்த பிள்ளையானாதால் அவள் எப்பொழுதுமே தனி தான். அது அத்வதாவிற்கும் தெரியும் தானே.


அதோடு அவள் ரூபனை வேண்டாம் என்று குடும்பத்தை விட்டு வந்தாலும் அவனை அவள் அவளுக்கே தெரியாமல் மனதார அவனை விரும்பி விட்டாளே! பின்னே எங்கே அவனது நினைவுகளை மறக்க? அவன் மேல் அவள் கொண்ட காதலை மறைக்க? இதெல்லாம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத் தானே எப்பொழுதும் எதாவது ஒரு வேலையில் தன்னை முழுமையாய் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள்.


எதற்கும் பதில் சொல்லாமல் அழுதுக் கொண்டே இருந்தாள்.இத்தனை வருடங்களாய் மனதில் வைத்திருந்த அழுகை இன்று அவனைக் கண்டதும் அவனையும் குடும்பத்தையும் மறுபடியும் நினைவை தர தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதுக் கொண்டிருக்கிறாள்.


பாட்டியை சாந்தனாவையும் ரேகா கண்களாலேயே நகர்ந்து செல்லச் சொன்னாள்.


அவள் மனதில் உள்ள பாரம் கண்ணீரின் மூலமாக வெளியே வந்து விட்டு அவள் நிம்மதியாய் இருக்கட்டும் என்ற எண்ணம் தான்.


சிறிது நேரமாய் தன் முகத்தை கைகளால் மூடிக் கொண்டு அழுதாள்.ரேகா அவளுக்கு அருகில் போய் அவளது தலையை மெதுவாய் வருடிக் கொடுத்ததும் அவளை இறுக்கமாய் கெட்டிக் கொண்டு அழுதாள்.

"ரேகா நான் அவனையோ குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்தால் திரும்ப பலவீனப் பட்டு போய் விடுவேனோ?என்று தான் யாரும் என்னை பார்த்து விடக் கூடாது என்று ஒளிந்து ஒளிந்து வாழ்ந்துட்டு இருந்தேன்.ஆனால் இன்னைக்கு அவனே என் முன்னாடி வந்து நிற்கிறான், என்னை என்னச் செய்யச் சொல்றே ரேகா? எனக்கு வழி தெரியலை"


அவள் மெதுவாய் கேட்டாள். "அவன் இப்போ யாருக்கு சொந்தமானவன்?"


"அ...வன்.. அ...வன் ஆரலிக்கு சொந்தமானவன்"

"அதை மட்டும் மனசுல நினைவு வைத்துக் கொள்.தேவையில்லாத எண்ணங்களோ வலியோ வராது" என்றாள்.

அவள் சொன்னதை தன் மனதில் திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டே ஆழ்ந்து யோசித்தவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "ஆமாம் ரேகா நீ சொல்றது சரி தான்.அவன் எனக்கானவன் இல்லை, அவனை இனிமேல் பார்த்தால் எனக்கு எதுவுமே தோன்றாது, நான் அப்பா அம்மாவைப் பற்றி கண்டிப்பா விசாரிக்கிறேன்" என்றாள் முடிவாக…


அவர்கள் பேசி முடிக்கும் போது மானவி மெதுவாய் கண்களைத் திறந்தாள்.


கண்களைத் திறந்துப் பார்க்க… எல்லோரும் அவளைச் சுற்றி நின்றிருப்பதைக் காணவும் அவளுக்கு வெட்கமாய் இருக்க வெட்கித் தலைக் குனிந்தாள்.


அத்வதா அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.


சாந்தனா மானவியிடம் "எங்ககிட்ட இதை மட்டும் தான் மறைச்சு வைச்சு இருக்கியா? இல்லை இன்னும் எதாவது மிச்சம் இருக்கா?"


"அ...ம்மா"


"என்ன இப்போ வந்து அம்மான்னு கூப்பிடுற? இந்த நினைப்பு உண்மையிலேயே உன் மனசில இருந்திருந்தால் நீ இப்படி செய்து இருக்க மாட்டே மானவி.நீ எங்களை இன்னும் மூணாவது மனுசங்களாகத் தான் நினைக்கிற, உன் குடும்பமா நீ எங்களை நினைக்கலை அதான் எல்லா முடிவையும் உன் இஷ்டப்படி எடுத்து இருக்கிறே?"


"அம்மா… இப்படி எல்லாம் பேசாதீங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது"


"உனக்கு கஷ்டமா இருக்கிறதைப் பற்றி யோசிக்கிற நீ எங்களைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சியா? உன்னை காதலிக்கிறவனை நம்புன நீ உன்னை கண்ணும், கருத்துமா தன்னோட தங்கையா வளர்த்த அத்துவிற்கு என்ன பதில் சொல்லப் போறே? உன்னை காதலிக்கிறான்னு அவனை நம்பி போனியே அவன் உன்னை அவன் நினைச்ச மாதிரி செய்து இருந்தால் அத்து குற்றவுணர்ச்சியில என்ன ஆகி இருப்பான்னு? நினைச்சியா யாருமே இல்லாமல் இருந்த நமக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொடுத்த அத்துவிற்கு நல்லப் பெயர் வாங்கி கொடுக்கலை என்றாலும் அவமானத்தை வாங்கி கொடுக்காமல் இரு" என்றார்.


மானவியோ சாந்தனா சொன்னதைக் கேட்டு அழுதுக் கொண்டே "மன்னிச்சிடுங்க அம்மா என்னை மன்னிச்சிடுங்க காதலாய் அவன் பேசிய வார்த்தைகளால் நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்.என்னை மன்னிச்சிடு அக்கா, பாட்டி என்னை மன்னிச்சிடுங்க இனிமேல் நான் இந்த மாதிரி எல்லாம் நான் நடந்துக்கவே மாட்டேன் சாரி" என்று அவள் அழுது மன்றாட…


அத்துவிற்கு இதற்கு மேலும் மானவியை கஷ்டப்படுத்த விரும்பாமல் அவளை கட்டிக் கொண்டு அழுதாள்.


பாட்டியும் சாந்தனாவும் அவளை ஆதரவாய் கட்டிக் கொண்டனர்.


"எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, நான் முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன்" என்று மானவி தன்னைத் தானே நினைத்து வருந்தினாள்.


"உன் அப்பா அம்மவோட ஆசிர்வாதம் இருக்கு அதனால தான் நீ பெரிய பிரச்சினையில மாட்ட வேண்டியது தப்பிச்சுட்டே" என்று பாட்டி ஆறுதலாய் பேசினார்.


அத்வதா அவளைக் கட்டிக் கொண்டு "இனிமேல் எங்ககிட்ட எதுவும் சொல்லாமல் செய்யாதே மானவி உனக்காக அக்கா இருப்பேன்" என்று அத்வதா அடைக்கலாமாய் பேசினாள்.

ரேகா "ஹலோ இங்கே நானும் இருக்கேன்.என்னையும் கொஞ்சம் கவனிங்கப்பா" என்றாள்.


"உனக்கு இல்லாமலா? நீயும் வா" என்று அத்து தன் ஒரு கை நீட்டி அழைக்க தோழியை அன்பாய் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ரேகா.


இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து மானவிக்கு முழு ஓய்வு எடுத்த பின் வீட்டிற்கு திரும்ப வந்தனர்.


அதுவரைக்கும் அவனிடமிருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை.இவளும் அழைக்கவில்லை.


வீட்டிற்கு வந்த பிறகு தான் மானவியை ஏமாற்றியவனை பிடித்து வைக்கச் சொன்னது நினைவுக்கு வர …


அன்று அவன் அழைத்த எண்ணிற்கு திரும்ப அழைத்தாள்.அவளின் ஒரு அழைப்பிலேயே எடுத்து பேசினான்.


"ஹலோ"


"ம்ம்…"


"அது…"


"என்ன சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு"


"மானவியை ஏமாத்துனவனை பிடித்து வைக்கச் சொன்னே"


"நீ சொல்லலை நான் தான் அவனை பிடிச்சு வைச்சு இருந்தேன்"


"அதான் அவனை பார்த்து…" என்று ஆத்திரமடைந்தாள்.


"இரண்டு நாள் கழிச்சு தான் மானவி வீட்டுக்கு வந்தாள்.அவகிட்ட அவனை காட்டனும்"


"கூடிட்டு வா. என்னோட கண்காணிப்பில் தான் இருக்கிறான்" என்று கைப்பேசியை அணைத்து விட்டான்.


அவளுக்கு ஏதோ ஒன்று போல் இருந்தது.அவன் வேறு எதுவும் அவளிடம் பேசவில்லை.அவள் கேட்டதற்கு மட்டும் பதிலளித்தான்.அவ்வளவு தானே அவர்களிடத்தில் வேறு ஒன்றும் இல்லை.


மறுநாள் மானவியிடம் எங்கே போகிறோம்? என்று சொல்லாமல் தவரூபனின் அலுவலகத்திற்குச் சென்றாள்.


இவர்கள் பாதி தூரம் சென்றிருக்கும் போது அவளுடைய கைப்பேசிக்கு ஒரு செய்தி வந்தது.அதில் அலுவலகத்திற்கு வர வேண்டாம் நான் சொல்லும் இந்த விலாசத்திற்கு வந்து விடு" என்று மட்டும் லந்திருந்தது.


இவளும் அவன் சொன்ன அந்த விலாசத்திற்கு வந்து அதில் குறிப்பிட்டுள்ள எண் இருக்கும் கட்டிடத்தில் நுழைய அது ஒரு பெரிய பழைய கம்பெனி இடம் போல் இருந்தது.

மானவி சுற்றி இருந்த இடத்தைப் பார்த்து "அக்கா நாம எங்கே வந்து இருக்கோம்?"


"நீ அமைதியா வா" என்று அவளை அமைதியாகி விட்டு
இவர்கள் கதவை திறந்து உள்ளே சென்றனர்.


அங்கே தவரூபன் அமர்ந்திருக்க…
அவனுக்கு எதிரில் மானவியை ஏமாற்றியவனை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அவனைச் சுற்றி கயிறுக் கட்டப்பட்டு இருந்தது.அதற்கு அருகில் இரண்டு பேர் நின்றிருந்தனர்.


அவனைக் கண்டதும் மானவிக்கு எப்படித் தான் தைரியம் வந்ததோ?


நேராக அவனுக்கு அருகில் சென்றவள் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அடித்தவள், தன்னுடைய செருப்பை கழற்றி அவனை அடித்தாள்.


"என்ன திமிர்டா உனக்கு? பொண்ணுங்களை ஏமாற்றி அவங்களையே உன்னுடைய தேவைக்கு ஏற்ற மாதிரி ஆக்குவேல்ல. என்னை ஏமாத்திட்டல்ல, இல்லை நான் ஏமாந்து போனேன்ல அதைத் தான் சொல்லனும்" என்று அவனை பல வசைவு மொழிகளால் திட்டிக் கொண்டே தன் கோபம் தீரும் வரை அவனை அடித்தாள்.


அத்வதா எதுவும் சொல்லவும் இல்லை அவளை தடுக்கவும் இல்லை.


அவளைப் பொறுத்தவரை அவள் செய்த தவறை உணர்ந்து அவளே மனம் மாறியதோடு அவளை ஏமாற்றியவனை அவளே தண்டனை கொடுக்கட்டும் என்று விட்டு விட்டாள்.


அவனின் கதறலைக் கண்டுக் கொள்ளாமல் கைவலிக்க அடித்தவள் "உன்னை போலீஸ்க்கிட்டத் தான் பிடிச்சு தண்டனை வாங்கிக் கொடுக்கனும்"என்று அவனிடம் சொல்லி விட்டு தவரூபனிடம் வந்து


"ரொம்ப நன்றி சார்.நீங்க செய்த உதவியாலத் தான் நான் இப்போ உயிரோடு தலை நிமிர்ந்து இருக்கிறேன்.நீங்க செய்த உதவிக்கு நான் என்ன பதில் செய்தாலும் அதற்கு ஈடாகாது.ரொம்ப நன்றி சார்" அவனை கையெடுத்து வணங்கினாள்.


அவன் எதிரே இருந்த அத்வதாவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.அவளும் அவனைத் தான் பார்த்தாள்.இருவரும் ஒன்றும் பேச வில்லை.


அவன் மானவியைப் பார்த்து "இனி யார்க்கிட்ட பழகனும்னு யார்க்கிட்ட பழகக் கூடாதுன்னு தெரிந்து புரிஞ்சுக்கிட்டு பழகு"


அவள் சரி என்பது போல் தலையாட்டினாள்.


அத்வதா ரூபனிடம் "ரொம்ப நன்றிங்க.மானவியோட வாழ்க்கையை காப்பாற்றி இருக்கீங்க ரொம்ப நன்றி" என்று சொல்லும் போது அவனின் கைப்பேசி அழைத்தது.


அதை எடுத்துப் பார்த்தவன் உடனே அழைப்பை எடுத்து "ஹலோ அத்தை சொல்லுங்க.என்ன விஷயம்? அப்படியா! பாட்டி பேசனும்னு சொல்றாங்களா? கொடுங்க நான் பேசுறேன்.அது யாரு கூட சத்தம் போடுறது? வசியா கொடுங்க அத்தை வசி … வசி… என்ன பண்ணுறீங்க? வீட்டுக்கா இதோ வரேன் இப்பவே கிளம்பி வரேன்" என்று அவன் புன்னகையாய் பேச… அவளுக்குத் தான் வேதனை அடைத்துக் கொண்டு நின்றது.


அங்கே நிற்க முடியாமல் வெளியே சென்றாள்.அவளின் முக மாற்றத்தை அவன் கண்டுக் கொண்டு சிரித்தான்.


அவளுக்கு மனதிலோ 'அம்மா தான் பேசுறாங்க போல,அம்மாகிட்ட பேசி எவ்வளவு நாள் ஆச்சு.அடுத்து யாரு அந்த வசி ரூபனின் குழந்தையாக இருக்குமோ? எப்படியும் இரண்டிலிருந்து மூன்று வயது இருக்குமோ? இப்போ போய் நான் பேசட்டுமா?என்று கேட்டால் என்னைப் பத்தி தவறாக நினைப்பானோ' என்று யோசனையோடு நின்றுக் கொண்டிருந்தாள்.


அவன் பேசி முடித்து வெளியே வந்துப் பார்த்தான்.அவள் ஆழ்ந்த யோசனையில் நிற்பதைக் கண்டு "அத்வதா அத்வதா" என்றழைத்தான்.


அவள் யோசனையில் நின்றிருந்ததால் கவனிக்காமல் நிற்க...பக்கத்தில் இருந்த மானவி "அக்கா சார் கூப்பிடுறாங்க" என்று தட்டி அழைத்தாள்.


"ஹ்ஹான்… சொல்லு"


"சார் கூப்பிடுறாங்க"


"ம்ம்… சொல்லுங்க"


"நாங்க கிளம்புறோம், ரொம்ப நன்றி அவனை போலீஸ்கிட்ட சொல்லப் போறீங்க?"

"ஆமாம்"


"நாங்க எதாவது கேஸீ கொடுக்கனும்னா வரோம்"


"தேவை இருக்காது.நானே பார்த்துகிறேன்" என்றான்.


அவளும் அவனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.இனிமேல் அவனை பார்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை,சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் இல்லை என்று அவள் நினைத்திருந்தாள்.


ஒரு வாரம் கழிந்த நிலையில்…


அத்வதா கம்பெனியில் ஒப்பந்தம் போட்ட டி.ஆர் கம்பெனியிலிருந்து போன் வந்தது.அவர்களுக்கான ஆர்டரின் டிசைனைப் பற்றி பேசுவதற்கு வரச் சொல்லி செய்தி வந்தது.

ரேகாவும், அத்வதாவும் மறுநாளே டி.ஆர் கம்பெனிக்குச் சென்றிருந்தனர்.இந்த இடம் நகரின் முக்கிய வீதியில் உள்ள பெரிய டிஜிட்டல் கட்டிடத்தில் இருந்தது.


இருவரும் அவர்களுக்கான சந்திப்பு நேரத்தை உறுதி செய்து விட்டு காத்திருந்தனர்.அப்பொழுது அந்த கம்பெனியின் உதவியாளர் வந்து இருவரிடமும்


"எம்.டி உங்ககிட்ட ஒரு யோசனை கேட்கச் சொல்லி இருக்காங்க"


"என்ன விஷயம்?"


"இந்த பிராஜக்ட்ல புது யோசனை கொண்டு வந்து இருக்காங்க, அதன்படி உங்க கம்பெனியோட பார்ட்டனர் ஒருத்தர் இங்கே தினமும் எம்.டியோட சேர்ந்து வேலைப் பார்க்கனும் இன்னொருத்தர் இவங்க கொடுக்கிற ஆர்டரை பிரிண்டிங் வேலை அவங்க கம்பெனியிலிருந்து செய்யனும் இதில் யாரு எதை கவனிக்கப் போறாங்கன்னு முன்னாடியே சொன்னால் அதற்கேற்றபடி உங்க வேலை இருக்கும்.நீங்க முடிவு பண்ணிட்டு சொன்னீங்கன்னா மீட்டிங் ஆரம்பி என்றார்.


அதைக் கேட்டு அத்வதா "ரேகா நீ இவங்க எம்.டியோட இருந்து வேலையைப் பாரு,நான் நம்ம கம்பெனியை பார்க்கிறேன்"


"வேண்டாம் அத்து நான் கம்பெனிக்கு போறேன்.நீ இங்கே இருந்து பாரு"


"என்னச் சொல்றே ரேகா? உனக்கு தான் வெளிநாட்டில படிச்சிட்டு வந்த அனுபவம் இருக்கு.எனக்கு எதுவும் இல்லை"



"அதனாலத் தான் நான் சொல்றேன், இங்கே இருப்பதினால் உனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்,எப்படி வேலையை வித்தியாமாக பண்ணலாம்னு புது புது ஐடியா கிடைக்கும்.மற்றவங்களோட பேசும் போது அவங்களுடைய யோசனையும் கிடைக்கும் அதனாலத் தான் சொல்றேன்.ப்ளீஸ் நீ போ,நான் இப்போ தானே கம்பெனியை பார்க்க வந்திருக்கேன் நான் அங்கே கத்துக்கிறேன்" என்றாள்.



அவள் சொல்வதிலேயே முடிவாய் இருக்க… அத்வதாவின் பெயரை இங்கே வேலைச் செய்வதற்கும் தன் பெயரை தனித்தும் எழுதி அனுப்பினாள்.


சிறிது நேரத்தில் அவர்களுக்கான அழைப்பு வர…

மீட்டிங் அறைக்கு சென்று இருவரும் உட்கார்ந்துக் கொண்டனர்.


இவர்களுக்கு அடுத்து நான்கைந்து பேர் வந்து அமர… அடுத்து அத்துவிடம் இத்தனை நாளாய் பேசிய பி.ஏ. வந்தாள்.


வந்து அவர்களுக்கு முன்னால் நின்று "குட் மார்னிங் எவ்ரீ ஒன். டூடே இட்ஸ் ஒன்டர்வுள் டே பிகாஸ் இட்ஸ் டைம் டூ மீட் அவர் டி.ஆர் கம்பெனி எம்.டி மிஸ்டர் தவரூபன்"என்று அவள் சொல்லி கைகளைத் தட்ட...


எல்லோரும் எழுந்து கைத்தட்ட…அத்வதாவும் ரேகாவும் கேட்ட பெயர் சரி தானா? என்று நம்ப முடியாமல் எழுந்துக் கொண்டு நின்றனர்.


அங்கே ஆறடி ஆண்மகனாய் கோட்சூட் என்று முழு பிஸ்னஸ்மேனாக அங்கே வந்த தவரூபனை இமைக்க மறந்து அவனையே அவள் பார்த்திருந்தாள்.விளையாட்டாய் அவனைப் பார்த்திருந்தவளுக்கு இன்று அவனின் பதவியும், அதற்கான மதிப்போடு அவன் வருவதைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.


அந்தப் பெண் "ப்ளீஸ் சியர் "என்று கைத்தட்ட… எல்லோரும் கைத்தட்டி அவனை உற்சாகப்படுத்தினர்.


எல்லோரையும் பார்த்து கையசைத்து காட்ட…எல்லோரும் உட்கார்ந்துக் கொண்டனர்.


ரேகா மெதுவாக அத்வதாவிடம் "என்னடி இவன் வந்து நிற்கிறான்.அப்போ இவன் தான் டி.ஆர் கம்பெனியோட ஓனரா?" என்று தோழியின் காதில் விழுமாறு மெதுவாக கேட்டாள்.



அவன் தன் தொண்டையை லேசாக செருமிக் கொண்டு "குட் மார்னிங் எவ்ரிஒன்.உங்களை எல்லோரையும் இன்றைக்கு சந்திப்பதில் எனக்கு ரொம்ப ஹாப்பி.பர்ஸ்ட் டைம் நான் இந்த டெக்ஸ்டைல் இன்டஸ்ட்டிரீக்கு வந்து இருக்கேன், அதோட இந்த வொர்க்குகாக நானே முழு உழைப்பும் கொடுக்கலாம்னு இருக்கேன்.எல்லோரையும் புதுசா அபாயிண்ட்மென்ட் பண்ணி இருக்கேன் அதனால எல்லாமே என்னுடைய நேரடிக் கண்காணிப்புல தான் இருக்கும்.ஸோ எல்லோரும் உங்க பெஸ்ட்டை கொடுங்க வொர்க் ஹார்டு பண்ணுங்க ஐயம் ஆல்வேஸ் வாட்ச்சிங் யூ அண்டு இன்டடியூஸ் யுவர் செல்ப்" என்று அவன் அத்வதாவைப் பார்த்து கைநீட்டி பேசுவது போலவே இருந்தது.


ஒவ்வொருவராக எழுந்து தங்களது பெயர், படிப்பு,அவர்களது வேலை அனுபவம் என்று தங்களைப் பற்றி சொல்ல… இவளுக்கு பயமாக இருந்தது.


எல்லோரின் படிப்பும் பெரிய அளவில் இருக்க படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை செய்யும் இவளைப் பற்றி சொல்ல என்ன இருக்கு? என்று யோசித்து அவள் ரேகாவைப் பார்க்க…


ரேகா அவளின் கையின் மேல் தன் கைவைத்து ஆதரவாய் பற்றிக் கொண்டாள்.அத்வதா மெதுவாய் ரேகாவிடம் "ரேகா நான் எழுந்து போகவா, என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கு? நான் அசிங்கப்பட்டு விடுவேனா?" என்று அவள் தயக்கமாய் அவளிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இவளுடைய முறை வர…


அத்வதா எழுந்துக் கொள்ளாமல் அப்படியே உட்கார்ந்துக் கொள்ள...


தவரூபனின் பி.ஏ மேம் "நீங்க தான் அடுத்தது உங்களைப் பற்றி சொல்லுங்க" என்று அந்தப் பெண் சொன்னதும்…


இவள் தயக்கமாய் எழுந்துக் கொண்டு நின்று அமைதியாக நின்றாள்.


சட்டென்று தவரூபன் அங்கிருந்து எழுந்துக் கொண்டான்.

(தொடரும்)
 
Top