கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -22

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் -22 (இறுதி அத்தியாயம்)


சிறிது நேரம் இருவரும் தங்களை மறந்து காதலில் திளைத்துக் கொண்டிருக்கும் போது… வசி கையில் ஒரு கார் பொம்மையை வைத்துக் கொண்டு "டுர்ர்ர்ர்ர்…. பாம்"என்ற சத்தத்தோடு ஓடி வந்தான்.


அவனின் சத்தம் கேட்டு இருவரும் விலகி நின்றுக் கொண்டனர்.ரூபனைக் கண்டதும் வசி அவனைப் பார்த்து "டா...டி டாடி"என்று அவனின் கால்களை கட்டிக் கொண்டான்.


தவரூபன் வசியை தூக்கிக் கொண்டு அத்வதாவைப் பார்த்து கண்ணடித்தான்.

வசியைக் கண்டதும் தான் அவன் யாரென்று விசாரிக்கவே இல்லையே என்ற எண்ணம் வந்தது.


"ரூபன் வசி யாருன்னு சொல்லவே இல்லையே?"


"ஏன் என்னைப் பார்த்து டாடின்னு கூப்பிடுறதைப் பார்த்து பயப்படுறியோ?"


"அப்படி எல்லாம் கிடையாது" என்று அவள் கண்கள் அங்கும் இங்குமாய் செல்ல முகத்தை திருப்பிக் கொண்டு நின்றிருந்தாள்.


அவளது நடவடிக்கையை கண்டுபிடித்தவன் சிரித்துக் கொண்டே "வசிகரன் என்னோட அக்கா மகன்.நீ அரண்மனைக்குள்ள வரும் பொழுது உள்ளே உட்கார்ந்து இருந்தாங்கல்ல அவங்க தான்"


சட்டென்று நினைவு வந்தவளாய்… "ஏன் அவங்க ரொம்ப அமைதியா இருக்காங்க?"



"என் அக்கா வெளிநாட்டுல இருந்தாள்.சின்ன வயதிலேயே கல்யாணம் முடிஞ்சிடுச்சு ரொம்ப வருஷமா குழந்தை இல்லாமல் வசி பிறந்தான்.மாமாவும் அக்காவும் ரொம்ப பாசம், என்னோட கல்யாணத்திற்கு வரலாம்னு இருந்தாங்க, வசி பொறந்த ஒரு வருத்தில் கார்ல போய்ட்டு இருக்கும் போது நடந்த விபத்துல மாமா இறந்துட்டாங்க அந்த விஷயம் தெரிந்ததில் இருந்து அக்கா ரொம்ப மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இந்த மாதிரி சுற்றி நடக்கிற விஷயங்களைப் பற்றி புரிந்துக் கொள்ள முடியாமல் போயிற்று, அதிலிருந்து எங்ககூட இருக்கிறாள்.அதிலிருந்து வசியை நான் தான் பார்த்துக்கிறேன் அம்மா அக்காவின் நிலைமை பார்த்தே ரொம்ப கவலைப்பட்டு உடம்பு முடியாமல் போக ஆரம்பித்தது.


அதனால அத்தை இங்கே கூடிட்டு வர்ற சொல்லி இங்கே டிரீட்மென்ட் எடுக்கிறோம் நானும் அடிக்கடி வந்து பார்த்துட்டு போவேன், வசிக்கு என்னை விட்டால் வேறு யாரு இருக்கா? அம்மான்னு அழைத்தும் அது புரியாமல் அவள் அப்பான்னு அழைக்க யாரும் இல்லை எப்போ பேச ஆரம்பித்தானோ அதிலிருந்து அவனை என்னைப் பார்த்து டாடி டாடி… அப்படியே சொல்லிக் கொடுத்து என்னையும் அப்படியே கூப்பிடுறான், என்றைக்கும் வசி தான் என் மூத்த மகன்" என்று வசிக்குட்டியின் கன்னத்தில் முத்தமிட்டான்.


நடந்தவற்றை கேட்டவளுக்கோ மிகுந்த வேதனையாக இருந்தது.இந்த சின்னக் குழந்தைக்கும் எத்தனை கஷ்டங்கள் என்று நினைத்து வருந்தியவள் "இனிமேல் வசியையும் நானும் சேர்ந்து பார்த்துக்கிறேன்"என்று அவளும் வசியின் மற்றொரு கன்னத்தில் முத்தமிட்டாள்.


அதோடு ரூபனுக்கு கஷ்டம் நிறைந்த நேரங்களில் அவனுக்கு ஆறுதலாய் இல்லாமல் தானும் அவனுக்கு சேர்ந்து வேதனையை கொடுத்ததை எண்ணி கவலையுற்றாள்.


அந்தக் கண்ட ரூபன் அவளிடம் "என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கே?"



"சாரி ரூபா உனக்கு எந்த நேரத்திலேயும் நான் எந்த விதத்திலேயும் உதவியா இல்லாமல் இருந்ததை எண்ணி கவலையா இருக்குது"


"இனிமேல் இருப்பே தானே"


"கண்டிப்பா இருப்பேன்" என்றாள் அவன் தோளில் உரிமையாய் சாய்ந்தபடி…


பிறகு வசியை தூக்கிக் கொண்டு இருவரும் ஒன்றாய் பேசி சிரித்து கீழே வந்தனர்.அவர்கள் இருவரும் பேசி சிரித்து வருபதை பார்த்தே மாதேவியும் ரதனும் புரிந்துக் கொண்டனர் எல்லாம் உண்மையையும் அத்வதா அறிந்துக் கொண்டாள் என்று.


அவர்கள் இருவரும் இத்தனை நாளாய் நடக்க
வேண்டும் என்று காத்திருந்த தருணம் ரூபனும் அத்வதாவும் ஒன்றாய் புரிந்துக் கொண்டு அவர்களுக்கான வாழ்க்கை வாழ வேண்டும் அதன் முதல்படியாய் இருவரும் ஒன்றாய் வருவதைக் கண்டு மனம் நிறைந்தனர் பெற்றவர்கள் இருவரும்.



மாதேவியிடமும் ரதனிடமும் வந்து அத்வதா மன்னிப்பு கேட்டாள்.


மாதேவி புரியாமல் "எதுக்கு இப்போ என்கிட்ட மன்னிப்பு கேட்கிற அத்வதா? "


"அம்மா...அப்பா...பெற்றவர்கள் நீங்க இருக்கும் போது என்னோட பிரச்சினையை உங்ககிட்ட அன்றைக்கே சொல்லி இருந்தால் அதற்கான தீர்வை சொல்லி பிரச்சினைல இருந்து விடுபட நீங்க எனக்கு வழி காட்டி இருப்பீங்க, அதோடு நமக்கு இத்தனை வருஷமா வலியும் வேதனையும் மிஞ்சாமல் இருந்திருக்கும் அந்த தவறை செய்ததற்காக என்னை மன்னிச்சிடுங்க" என்றாள்.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்."உண்மை தான் இந்த உலகத்தில பிள்ளைகளுக்கு பெற்றவங்களைத் தவிர வேறு யாராலையும் நல்லது நினைக்க முடியாதும்மா அதை நீ புரிஞ்சுக்கிட்டல்ல அதுவே போதும்.இந்த மாதிரி எல்லாம் கஷ்டம் படணும்னு இருக்கும் போது என்னச் செய்ய முடியும்? அதனால நடந்த பழைய கசப்பான விஷயங்களை மறந்துட்டு இனிமேல் நடக்க வேண்டியவைகளைப் பார்க்கலாம்" என்றார் ரதன்.


அதற்கு மாதேவி "ஆமாம் அத்வதா இனிமேல் இந்த அரண்மனையில் பிரிந்த எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியான நேரங்களை உருவாக்கலாம்" என்றார்.


"ஆமாம் அத்தை அப்படியே செய்யலாம்" என்றான் ரூபன்.


"அம்மா ஆரலி இப்போ எங்கே இருக்கிறாள்?"


"தெரியலைம்மா அவ மேற்கொண்டு படிக்கனும் சொல்லி ஹைதராபாத் போறான்னு அப்பாவோட மேனஜர் வந்து சொன்னாங்க"


"அந்த மானேஜர் மூலமாக அவளுக்குத் தேவையான பணத்தை அவளே வந்து வாங்கிட்டு போறா அதையும் அப்பா அதைப் பற்றி விசாரிக்க இல்லை நான் தான் மேனஜர்கிட்ட கேட்கும் போது சொல்வாங்க"


"சரிம்மா நான் மேனஜர் மூலமா ஆரலியைப் பற்றி கேட்டு போய் பார்க்கிறேன்"


"இப்போ எதுக்கு போய் பார்க்கனும்? அதெல்லாம் தேவையில்லை" இது ரதனின் பதில்.

"அப்பா அவ செய்தது தவறு தான் ஆனால் அதற்காக அவளை வாழ்நாள் முழுவதும் தண்டிக்கனும்னு அவசியம் இல்லையே அதனால போய் பார்க்கிறேன் வருஷங்கள் போய் இருப்பதால் அவ மனசில கூட மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கலாம்ல அது தெரியாமல் நாம இருந்து அதை இன்னும் நாள் கடந்து தெரிந்த பிறகு வருந்து வாய்ப்பு இருக்கு போய் பார்க்கிறேன்" என்றாள் முடிவாக…


ரூபன் அவளை போகவும் சொல்லவில்லை வேண்டாம் என்று தடுக்கவும் இல்லை காரணம் இன்று அவளாய் தன்னிச்சையாய் முடிவெடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறாள் அதோடு அவள் முடிவு சரியாய் இருப்பதாக தோன்றியதால் தானே சந்திக்கப் போகிறாள் போகட்டும் என்று விட்டு விட்டான்.


மாதேவியை பொறுத்தவரை இனிமேல் எல்லாம் நல்லபடியாக முடிந்தால் சரி அது போதும் என்பது அவரது எண்ணம்.


"அம்மா நான் நாளைக்கு சென்னைக்கு போறேன்.அங்கே எனக்காக ஒரு குடும்பமே காத்துட்டு இருக்கு"


அதைக் கேட்டதும் ரதனுக்கும் மாதேவிக்கும் என்னச் சொல்வதென்றே தெரியவில்லை.


மாதேவி சட்டென்று "அது உன் குடும்பம் என்றால் அப்போ நாங்க யாரு?"


"அம்மா"


"நான் இப்படி பேசுறேன்னு வருதப்படாதே அத்வதா இத்தனை வருஷமா எங்களை விட்டு பிரிஞ்சு போய் இருந்துட்டே இனிமேல் நீ எங்க கூட இரு"


"அம்மா அப்போ அவங்களோட நிலைமை?"


"அவங்களை பழைய படி இல்லத்திற்கு போகனும் என்றால் போகட்டும் இல்லை அவங்க இருக்கிற இடத்துல இருக்கட்டும் அவங்களுக்கு வேண்டியதை நாம செய்யலாம்"


"ஆனால் என்னால நினைத்து அப்படி விட முடியாது அம்மா அவங்களையும் நான் என்னுடைய குடும்பமா நினைக்கிறேன்"


"அதுக்காக உன்னைப் பெற்றவங்களான எங்களை விட்டுட்டு அவங்களோட போய் இருக்கப் போறியா?"என்று மாதேவி தாயின் தாயின் தவிப்போடும், அந்த சுயநலத்தோடும் பேசினார்.


ரூபன் யாருக்கும் ஆதரவாக பேசாமல் அமைதியாக நின்றான்.அவள் திரும்ப அரண்மனைக்கு வருவதால் அதனால் ஏற்படப் போகும் புது பிரச்சினையான இதைப் பற்றித் தான் அத்வதா என்னச் செய்யப் போகிறாள்? என்று நினைத்து அவன் கவலைப்பட்டு வருந்தினான்.


இதில் அத்தைக்கு ஆதரவாக பேசினால் ஆதரவு இல்லாத அவர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு ஆதரவாக பேசினால் பிள்ளையின் பிரிதலை தாங்க முடியாத அத்தைக்கு எதிராக இருக்கும் என்பதால் அவளே முடிவெடுக்கட்டும் என்று பேசமால் நின்றான்.


ரதன் தற்போது இந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாதேவியிடமும் அத்வதா இருவரிடமும் சேர்த்து "எல்லாம் அப்புறமா பேசிக்கலாம்.இன்றைக்கு நீ எங்களோடு தூங்க வா உன்கிட்ட நிறைய பேசனும்"என்று அத்வதாவை கையோடு அழைத்துச் சென்றார்.


மாதேவி ரூபனிடம் "என்ன ரூபா எங்களுக்காக எதுவும் பேசாமல் அமைதியா இருக்கே உன்னோட காதல் ஓகே ஆனதும் இந்த அத்தையை மறந்து என் பெண்ணோட பின்னாடி போயிட்டேல்ல" என்று கவலையும் கிண்டலுமாய் கேட்டார்.


அதற்கு ரூபன் "அத்தை இது அவளோட தனிப்பட்ட முடிவு இதுல என்னால எதுவும் செய்ய முடியாது அதுவும் இதுல பாதிப்பு ரெண்டு பக்கமும் இருக்கு அத்தை அதனாலத் தான் நான் ஒன்னும் சொல்லலை அதோட உங்க பொண்ணு பக்கம் அப்படியே கவிந்துட்டேன்னு உங்க ஆசையை பாருங்க நடக்காது இந்த ரூபன் யாரு பக்கம் சாய மாட்டான்"என்று இல்லாத காலரை இழுத்து விட்டு சென்றான்.


அன்றைய இரவு ரதனும் அத்வதாவும் பலகதைகள் பேசி அன்றைய இரவு மாதேவியின் மடியின் படுத்து நிம்மதியாய் உறங்கினாள்.


நான்கு வருடத்திற்கு பிறகு மனதில் எந்த ஒரு வலியோ, கவலையோ, பயமோ, துக்கமோ இல்லாமல் நிம்மதியாய் தூங்கினாள்.


ரதனும், மாதேவியும் அதே போல் தான் இத்தனை அழகு மகளை இழந்து தவித்தவர்களுக்கு இன்று அவளை தங்கள் கண்ணுக்கு அருகே நிறைவாய் பார்த்து இரசித்தபடி தூங்கினர்.


என்றைக்கும் விடியலில் எழுந்துக் கொள்பவள் அன்றைக்கு விடிந்தும் நன்றாய் தூங்கிக் கொண்டிருந்தாள் அத்வதா.


யாரோ அவளை இறுக அணைத்தபடி படுத்திருப்பதை உணர்ந்து கண் விழித்துப் பார்க்க… அவன் தான் அவனே தான் ரூபன் அவளை இறுக அணைத்தபடி படுத்துக் கிடந்தான்.


தன்னவனை அருகில் காணவும் வந்த சிரிப்பை ஒளித்துக் கொண்டு "என்ன ரூபன் இது இப்படியா கட்டி பிடிச்சு படுத்து இருப்பீங்க? அப்பாவோ அம்மாவோ வந்தா என்ன நினைப்பாங்க? எழுந்திருங்க" என்று அவன் பிடியில் இருந்து விலக திமிறினாள்.


ஆனால் அவன் அவளை இறுக்க பிடித்து தன்னவளின் பொய்யான கோபத்தை இரசித்தபடி… "யாரும் இங்கே வர மாட்டாங்க நீ பயப்படாதே நம்ம இரண்டு பேரைத் தவிர எல்லோரும் பிசி, அதோடு நீயெல்லாம் ஒரு கமிட் ஆன பொண்ணு மாதிரியா நடந்துக்கிறே?"


"ஏன் என்னாச்சு?" அவள் புரியாமல் கேட்க…


"வேற என்னச் செய்யச் சொல்லுற? நானும் அப்பா அம்மாக்கூட படுக்க போனவ இந்த வருங்கால புருஷனை பார்க்க வருவாள்னு நானும் நைட் முழுக்க காத்திருந்து கடைசில என்ன பண்ணுறேன்னு பார்க்க வந்தா உங்க அம்மா மேல காலும், உங்க அப்பா மேல கையையும் போட்டு நல்ல குறட்டை விட்டு தூங்குற. அதைப் பார்த்து நான் ஏமாந்து என் தலைல அடிச்சுட்டு போனது தான் மிச்சம்" என்றான்.


"ரூபன் நான் குறட்டை எல்லாம் விட மாட்டேன் பொய் சொல்லாதீங்க"


"இப்போ அது தான் ரொம்ப முக்கியம் நான் வந்த வேலையே வேற" என்று அவளின் நீண்ட கூந்தல் கழுத்தில்சுருண்டு இருந்ததை மெதுவாய் விலகிக் கொண்டு அவள்
கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ளும் நேரம் …


மாதேவி "அத்வதா அத்வதா" என்றழைத்துக் கொண்டு உள்ளே வரும் நேரம் ரூபன் ஒரே துள்ளலாய் கட்டிலிருந்து குதித்து எகிறி நின்றுக் கொண்டான்.


அங்கே ரூபனைக் கண்டதும் லேசாய் அதிர்ச்சியுற்ற மாதேவி "ரூபா நீ இங்கே என்னப் பண்ணுற?"


"அத்தை இங்கே வேற என்னப் பண்ணப் போற? என்னோட வருங்கால பொண்ணாட்டி இவ்வளவு லேட்டா தூங்கினால் சரி வராதுன்னு சீக்கிரமா எழுப்ப பழக்கப்படுத்த வந்தேன்.இப்போ நீங்க வந்துட்டீங்கல்ல அந்த வேலையை நீங்க பாருங்க" என்று மெதுவாய் சென்று விட்டான்.


அவனின் இந்த செய்கையை வாய் மேல் கை வைத்து அதிசயமாய் பார்த்து சிரித்தாள் அத்வதா.


மாதேவிக்கு எல்லாம் புரிந்தும் எதுவும் தெரியாதது போல்…


அத்வதாவிடம் "அத்வதா சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு வா, இன்றைக்கு பாட்டி உன் கூட சாப்பிடும்னு சொல்லி வீல் சேர்ல கீழே வர்றாங்க அதோடு இன்றைக்கு அலமேலம்மா கோவிலுக்கும் போய்ட்டு வரலாம்" என்று சொன்னார்.


அவளும் சரியென்று ஒத்துக் கொண்டு சீக்கிரமே தயாராகி பாட்டியுடன் ஒன்றாக மகிழ்ச்சியாய் உணவருந்தி பின்னர் கோவிலுக்குச் சென்று இவர்களின் திருமண தேதியை முடிவுச் செய்யவும் தீர்மானித்து அதற்கான அடுத்த ஏற்ப்பாட்டையும் பார்க்கச் சென்றனர்.


அத்வதா ரதனின் மேனஜரை சந்தித்து ஆரலி இருக்கும் இடத்தை அறிந்து அவளை பார்க்கச் செல்வதற்காக தன்னோடு ரூபனையும் அழைத்துச் சென்றாள்.அவனும் மறுப்பேதும் சொல்லாமல் அவளுடன் சென்றான்.


ரூபனை பொறுத்தவரை தன்னில் பாதியாகப் போகிறவளின் எல்லா முடிவுகளுக்கும் அவனும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதால் அவளுடன் சென்றான்.


ஹைதராபாத்திற்குச் சென்று அவள் தங்கி படிக்கும் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதிக்குச் சென்றனர்.


அங்கே ஆரலியின் பெயரைச் சொல்லி அவளை சந்திக்க அனுமதிக்க கோரி நிற்கும் போது அங்குள்ள வார்டன் அளை மேலிருந்து கீழ் வரை அவளை உற்று நோக்கி விட்டு அத்வதாவிடம் "நீங்க ஆரலிக்கு யாரு? "

"நான் ஆரலியோட அக்கா"


"கூடப்பிறந்தவங்களா? இல்லை உறவு முறையா? "


"அவள் உடன்பிறந்த அக்கா.ஏன் என்னாச்சு?" என்றாள்.


"ஏன் கேட்கிறேன்னு தெரியுமா? இங்கே படிக்கிற பொண்ணுங்களை பார்க்க சொந்தக்காரங்கன்னு யாராவது ஒருத்தர் வந்துட்டு போவாங்க. ஆனால் ஆரலியைப் பார்க்க இந்த நாலுவருஷத்துல ஒருத்தர் கூட வந்து நான் பார்க்கலை நான் அவகிட்ட கேட்டேன் உனக்கு பார்க்க யாருமே ஏன் வர்றதில்லைன்னு கேட்டேன்.


அதுக்கு ஆரலி சொன்னாள் எல்லோரும் என்கிட்ட இருக்கும் போது நான் புரிஞ்சுக்கலை இப்போ எல்லோரும் என்கிட்ட வேணும்னு நான் நினைக்கும் போது அவங்க யாரும் என்னை புரிந்துக் கொள்ளவும் இல்லை அவங்க என்னருகிலும் இல்லைன்னு சொன்னாள்" என்றார்.


அத்வதா எல்லாவற்றையும் கேட்டு அமைதியாக இருந்தாள்.


ஆரலிக்கு யாரோ தன்னைப் பார்க்க வந்த விஷயம் தெரிவிக்கப்பட அப்பாவும் அம்மாவும் வந்திருப்பார்கள் என்று வேகமாய் விடுதி அறையிலிருந்து வெளியே வந்தாள் ஆரலி.


அங்கே அவள் அத்வதாவையும் ரூபனையும் காண அப்படியே நின்று விட்டாள்.


அத்வதாவிற்கும் ரூபனிற்கும் ஆரலியை அடையாளமே தெரியவில்லை.ஒல்லியாய்,கறுத்துப் போய் கண்ணிற்கு கீழ் பெரிய கருவளையம் முகத்தில் களையிழைந்து போய் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தாள்.


அவர்கள் தான் என்றதும் ஆரலி குனிந்துக் கொண்டாள்.அவளைப் பார்த்ததும் அத்வதா "ஆரலி எப்படி இருக்கே? நல்லா இருக்கியா?"


அவளிடம்"ம்ம்…" என்ற ஒற்றை வார்த்தையே பதிலாய் வந்தது.


ஆரலி குனிந்த தலை நிமிராமல் நின்றுக் கொண்டிருந்தாள்.அத்வதாவும் அமைதியாய் இருக்க… நேரம் கடந்ததே தவிர யாரும் எதுவும் பேசுவதாய் இல்லை.


நேரம் ஆகவும் அத்வதா "ஆரலி நாங்க கிளம்புறோம்" என்று சொல்லி முடிக்கும் முன் "அ...க்கா என்னை மன்னிச்சிடு" கேட்டவுடன் சிறு அமைதி அவளின் அழுகைச் சத்தம் மட்டும் கேட்டது.


அப்பொழுது தான் இருவருக்கும் புரிந்தது இவ்வளவு நேரமாக அழுதுக் கொண்டு இருப்பதால் தான் தலையை குனிந்து இருந்திருக்கிறாள் என்று.


கண்கள் இரண்டையும் துடைத்துக் கொண்டு அதே கேவலுடன் "அக்கா மன்னிச்சிடு அப்படின்னு ஒரு வார்த்தை எனக்கு கேட்க எந்த தகுதயும் இல்லைன்னு நான் புரிஞ்சுகிட்டேன் இருந்தாலும் அதை தவிர வேறு என்னால என்ன செய்ய முடியும்? உன் வாழ்க்கையை தட்டி பறிக்கிறேன்னு நினைச்சு நம்ம குடும்பத்தையுடைய நிம்மதியே குழி தோண்டி புதைச்சு இருக்கேன், மாமா என்னை மன்னிச்சிடுங்க அப்போ நான் ரொம்ப மோசமானவளா நடந்துகிட்டேன்ல உடனே இப்போ திருந்திட்டேன்னு நினைச்சுறாதீங்க ஏன்னா இப்பொழுது தான் மூணு வருஷமா செய்த தப்பை உணர்ந்துட்டு இருக்கேன் என்னோட சுயநலமான ஆசைக்காக உங்க எல்லோரையும், ஏன் என்னை பெற்றவங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்தி இருக்கேன்ல துரோகம் பண்ண நீயே ஏதோ என்னை பார்க்க வரனும்னு நினைச்சே ஆனால் அப்பாக்கும் அம்மாவிற்கும் வந்து பார்க்க எண்ணமே வரலைன்னா நான் அவங்களை எந்தளவுக்கு ஏமாத்தி இருக்கேன்னு புரியுது தனிமை எனக்கு எல்லாத்தையும் புரிய வைக்குது என்னை மன்னிச்சிடுங்க" என்று கையெடுத்து கூம்பிட்டு கேட்டாள்.



அத்வதா அவள் கையைப் பிடித்து "ஏன் இப்படி எல்லாம் மன்னிப்பு கேட்டு எங்களை சங்கடப்படுத்துறே"


"இல்லை அக்கா எனக்கு இது எல்லாம் தேவை தான் நான் ஒருத்தி இல்லாமல் இருந்திருந்தால் குடும்பமே நிம்மதியா இருந்திருக்கும்"


"அப்படி எல்லாம் பேசாதே ஆரலி.அரண்மனைக்கு வா அம்மாவும் அப்பாவும் சந்தோஷப்படுவாங்க"


"இல்லை வேண்டாம் நான் இப்படியே இருந்துக்கிறேன் ஏன்னா நான் செய்த தவறுக்கு எனக்கு நானே கொடுக்கிற தண்டனையா இருக்கட்டும் அக்கா"


"காலம் எல்லாத்தையும் மாற்றும்,உன் மனசையும் அப்பா அம்மா மனதையும் மாற்றும்" என்று அவள் சொல்லி விட்டு சென்றாள்.


ஒருவாரம் கடந்த நிலையில் அத்வதா சென்னைக்கு கிளம்பினாள்.மாதேவியும் ரதனும் எதுவும் மறுத்துப் பேசவில்லை. ரதன் மாதேவியிடம் சொன்னார்.


"மாதேவி அத்வதா நம்ம கையை விட்டு போய் நாலு வருஷமாயிடுச்சு அதோட இப்போ அவ சுதந்திரமா முடிவெடுக்கிறாள்.அதை விட்டுட்டு அவளை பழைய படி நம்ம கைக்குள்ளே வைக்கனும் நினைத்தால் நாமே அவளுக்கு பாரமாகி விடும் பெற்றவங்க நாம சொல்லிக் கொடுத்த படிப்பினையை விட அவள் தனியாக இருந்து அனுபவம் அடைந்து இருக்கிறாள், அதனால் யாருக்கும் பாதகம் இல்லாத முடிவை எடுப்பாள்னு நானும் நம்புறேன் நீயும் நம்பு" என்று ரதன் மகளை விட்டு மனைவியிடம் நிலைமையை எடுத்துரைத்தார்.


'சென்னைக்கு வருகிறேன்' என்று எந்த முன்னறிவிப்பு சொல்லாமல் இருவரும் ஒன்றாக வந்தனர்.


அவர்களின் திடீர் வருகையை எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியில் இருந்தனர்.


சாந்தனா அத்வதாவை திரும்ப பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.திரும்ப வரவே மாட்டாள் என்று நினைத்து இருந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.


மானவி அத்வதாவைக் கண்டதும் "அக்கா வந்துட்டியா"

"இங்கே வராமல் வேற எங்கே போவேன் இதுவும் என்னுடைய வீடு தான்" என்றாள்.


ரூபனிடம் முறையான விசாரிப்புகளுக்கு பின்பு எல்லோரையும் பற்றி பேசி தெரிந்துக் கொண்டனர்.அத்வதா வீட்டிற்கு வந்ததை அறிந்து ரேகா அங்கே வந்தாள்.அவளும் தன் தோழியின் வாழ்வு மீண்டும் பழைய படி நல்லபடியாக நடப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.


ரூபன் தன்னுடைய அலுவலகத்திற்குச் சென்றான்.வீட்டிலுள்ளவர்கள் மற்றும் ரேகாவிடமும் அவள் அரண்மனையை விட்டு வந்ததிலிருந்து கடைசியாக ஆரலியை சந்தித்தது வரை எல்லாவற்றையும் சொன்னா.


எல்லாவற்றையும் கேட்ட அனைவருக்கும் அத்வதா சந்தோஷமாக இருந்தாள் அதுவே போதும் என்று நினைத்தனர்.


அத்வதா பழைய படி அவனுடைய அலுவலத்திற்குச் சென்று தன்னுடைய வேலையை தொடர்ந்தாள்.ஆனால் இப்பொழுது அவளுடைய கேபின் வெளியே இல்லை அவன் அறையின் உள்ளே இருந்தது.


அரண்மனையின் அடுத்த வாரிசுகளான இருவரும் ஒன்றாய் இணைந்து தொழில், இல்லம்,அரண்மனைக் கண்காணிப்பு என எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டனர்.


இதற்கிடையில் ரூபன் அருகில் இருக்கும் காதலியையும், காதலையும் கவனித்துக் கொள்வதிலேயே அவனுடைய நேரம் இருந்தது.பத்து நாட்கள் மைசூரில் இருந்தால் பத்து நாட்கள் சென்னையில் என்று அவள் சுதந்திர பறவையாய் ஆனாள்.


ஆறு மாதம் கழித்து தவரூபனுக்கும் அத்வதாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.தேவியின் தண்டனை காலம் முடிந்து அவரும் அரண்மனையோடு வந்து இருந்தார்.


பிரகத்தனுக்கும் அடுத்த பொறுப்புகளை சரியாய் கொடுத்து அவனுக்கும் இந்த குடும்பத்திற்கான மதிப்பு கொடுக்கப்பட்டது.எல்லாம் பழைய படி நிலைமை சீராகிக் கொண்டிருப்பதால் பாட்டியின் உடல்நிலைமை தேறி அவரும் ஓரளவு நடக்கும் அளவிற்கு முன்னேறி இருந்தார்.


என்ன தான் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தாலும் நம்மைச் சுற்றி அன்பான உறவுகளும், நிம்மதியான வாழ்வும் இருந்தால் இருக்கும் வரை ஆரோக்கியமான செழிப்பான வாழ்வை வாழலாம் என்று புரிந்துக் கொண்டனர்.


அத்வதா தவரூபன் திருமண நாளும் வந்தது.அரண்மனையில் உள்ள அனைத்து ராஜ வம்சித்தினருக்கும், இங்கே அத்வதாவின் இரண்டு குடும்பங்கள் அவளின் தோழி ரேகா, தவரூபனின் குடும்பம் அதோடு ஆரலி என்று எல்லோரையும் அழைத்து ஒரு வாரம் கொண்டாட்டத்திற்கு பின் கோலகலமாய் திருமணம் முடிந்து தவரூபன் அத்வதாவின் சங்குக் கழுத்தில் அழகிய பொன் தாலியை இட்டு தன்னுடையவளாகி கொண்டான்.அங்கே எல்லோரும் நிறைவாய் மனதார மணமக்களை வாழ்த்தினர்.


அடுத்த ராஜாவும் ராணியாக இருவருக்கும் முடி சூட்டப்பட்டது.திருமணம் முடிந்து அத்வதாவின் அறையில் இருவரும் தனிமையில் இருக்க ரூபனின் தோளில் அத்வதா சாய்ந்தபடி இருக்க… எதிரே அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்த அவர்கள் வரைந்த ஓவியத்தை பார்த்து பழைய நினைவுகளை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தனர்


இருவரும் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது ரூபன் அவளிடம் "எப்பவும் நீ தானே என்னை முதல்ல தாக்க அடிக்க வருவே ஆனால் இந்த முறை உன்னை நான் தான் முதல்ல தாக்குவேன் வேறு வகையில இப்போ பாரு"என்று அவளின் மெல்லிய உதடுகளை தன் வசமாக்கிக் கொள்ள அவளிடம் நெருங்க… அவளும் தன்னவனுக்கு அதை தர மறுக்காமல் அவளைத் தந்தாள்.ஆணவனின் அன்பின் அவள் தன்னை தொலைத்தாள்.


ஒரு மாதம் கழிந்த நிலையில் பழைய படி அத்வதா சென்னைக்கு
தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும்.அதற்கு ரூபன் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை அவளை போக அனுமதித்தான்.ஆனால் அத்வதாவிற்குத் தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.அங்கே ரூபனை எப்படி அழைப்பது இங்கே இருக்கும் சொகுசு வசதிகள் எல்லாம் அங்கே இருக்காதே!


அதோடு அவளுக்கு இது பழக்கமாகி விட்டது.ஆனால் இது ரூபனுக்கு புதியது அல்லவா? அதோடு தன்னுடைய பிடிவாதத்திற்காக அவனை சங்கடப்படுத்துவதில் அவளுக்கு விருப்பம் இல்லை.அதோடு அவன் சென்னைக்கு வந்தால் எப்போதும் நட்சத்திர விடுதியில் தங்கிக் கொள்ளட்டும் என்று நினைத்து விட்டு அவனை அழைக்காமல் அவள்
மட்டும் சாந்தனா, மானவி, பாட்டியோடு வந்து இருந்தாள்.


அவளது இந்தச் செயலை விரும்பாமல் சாந்தனாவும் பாட்டியும் தங்க வேண்டாம் என்று சொல்லியும் அவள் பிடிவாதமாய் இருப்பேன் என்று முடிவெடுத்தாள்.


ஒரு மாதமாய் அவனின் அருகாமையில் இருந்தவளுக்கு இன்று தனிமையில் இருப்பதால் ஏதோ போல் இருக்க… கதவை திறந்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருக்கும் பொழுது வாசலில் ஒரு கார் வந்து நின்றது.


யாரென்று பார்க்க… அவன் தான் ரூபன் நின்றுக் கொண்டிருந்தான்.அதுவரை சோகமாய் நின்றவள் அவனைக் கண்டதும் மகிழ்ச்சியாய் அவனிடம் "என்ன ரூபன் இந்த நேரத்துல வந்து இருக்கீங்க?"

"என்னை விட்டுட்டு தனியா வந்துட்டே நானும் உங்கூட வர வேண்டாமா?" என்றான் கேள்வியோடு…


"ரூபன் இங்கே நீங்க நினைக்கிற மாதிரி எந்த வசதியும் இருக்காது அதனாலத் தான் உங்களை நான் என்னோடு அழைக்கலை. அதோடு நீங்க ஹோட்டல்ல தங்கினால் நானும் உங்க கூட இருக்கனும் அதோடு அதுவே பழக்கமாக இங்கே வருவது நின்று போயிடும் அதோடு அம்மா, பாட்டி, மானவி எல்லோரும் என்னோட சந்தோஷைத்துக்காக அவங்க வருத்தத்தை மறைப்பாங்க அதனாலத் தான் "என்று தன்னிலையை விளக்கினாள்.


அதைக் கேட்டு சிரித்தவன் "என்னோட சொகுசான வசதிகளைப் பற்றி நினைத்த நீ உனக்கு முன்னாடி அதெல்லாம் எனக்கு பெரிசு இல்லை அத்வதா நீ தான் முக்கியம்" என்று அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவனின் ஒற்றை அணைப்பில் பேரன்போடு கூடிய காதலை அவளும் புரிந்துக் கொண்டாள்.


கரிசக் காட்டு பெண்ணே

என் அவனைக் கண்டாயா?

கவிதை பேசும் கண்ணே…

என் அவனைக் கண்டாயா?

என் இருவிழிகளில் இருப்பவன்

எவனோ?அவனைக் கண்டாயா …

என் இருதய நரம்பினை

அறுத்தவன் எவனொ

அவனைக் கண்டாயா?

கொஞ்சம் கனவு கொடுத்தவன்

என் தூக்கம் திருடிச் சென்றான்

என்னில் தன்னை இணைத்தவன்

ஒருமுறை பார்த்தால் உயிர் வரை

வேர்த்தேன்.


அவன் அவளுக்காக அவளின் வாழ்வியலோடு தன்னை இணைத்துக் கொண்டான்.


இரண்டு வருடம் கழித்து…


நிறைமாத கர்ப்பிணியாய் பிரசவ வலியோடு அத்வதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.அவர்களிள் குடும்பமே மருத்துவமனையில் இருந்தது.இருப்பதைந்து வருடங்களுக்கு பிறகு பிறக்கும் பிறக்கப் போகிற அவர்களின் குடும்ப வாரிசை காண்பதற்காக எல்லோரும் ஆவலாய் காத்திருந்தனர்.


ரூபன் மனம் முழுவதும் அத்வதாவின் அழுகைக் குரலைக் கேட்டே மனம் வேதனையுற்று இருக்க … சில மணி நேர போராட்டங்களுக்கு பிறகு… குழந்தையின் அழுகுரல் வெளியே இருந்தவர்களின் காதில் இனிமையாய் விழுந்தது.


அன்று மலர்ந்த அந்த தளர் மழலையை ஒரு சிறு போர்வையில் சுற்றிக் கொண்டு வந்து ரூபனிடம் தந்து "உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது வாழ்த்துக்கள்" என்று அந்த செவிலியர் சொன்ன வார்த்தையை கேட்டு ரூபன் மட்டுமல்ல அந்த குடும்பமே ஆனந்த அதிர்ச்சியோடு அப்படியே உறைந்து போனது.


நானூரு வருடங்களுக்கு முன்னால் அரசவம்சத்திற்கு கிடைக்கப் பெற்ற வாரிசு இல்லாத சாபம் இன்று அலமேலம்மாவின் கோபம் குறைந்து அவர்களுக்கு அத்வதாவின் மூலமாக விமோச்சனம் கிடைத்ததை நினைத்து சந்தோஷமடைந்தனர்.


அத்வதாவும் முன்னோர்கள் தங்களை ஆசிர்வதித்தாலயே இந்த சாபத்தில் இருந்து விமோச்சனம் கிடைத்ததாக எண்ணி அவளும் ரூபனும் மகிழ்ந்தனர்.


இந்த நிகழ்வை அவர்கள் அரண்மனையில் கோலகலமாய் கொண்டாடினர்.ஆதரவற்றவர்களின் வாழ்வில் ஒளியைக் கொடுத்த இருவருக்கும் இறைவன் அவர்களது வாழ்வில் ஒளியை தந்தான்.


அத்வதாவும் தவரூபனும் உற்றார், உறவினர் போற்ற இருவரும் நிம்மதி மற்றும் செழிப்பான மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தனர்.


இனி எல்லாம் வசந்தமே….


(முற்றும்)
 

Shaliha ali

Moderator
Staff member
Niravana End 😍😍😍 Family la Elathaiyum onnu serthu vatchu pathatchu 🤩🤩
வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐💐


மனமார்ந்த நன்றிகள் சிஸ்.முதல் அத்தியாயத்திலிருந்து நீங்க கொடுத்த ஆதரவிற்கு நன்றிகள்.சைட்ல நீங்க தான் முதல்ல இருந்து ஆதரவு தந்து இருக்கீங்க திரும்பவும் நன்றிகள் 😍😍❤❤❤❤
 

Mohanapriya M

Well-known member
மனமார்ந்த நன்றிகள் சிஸ்.முதல் அத்தியாயத்திலிருந்து நீங்க கொடுத்த ஆதரவிற்கு நன்றிகள்.சைட்ல நீங்க தான் முதல்ல இருந்து ஆதரவு தந்து இருக்கீங்க திரும்பவும் நன்றிகள் 😍😍❤❤❤❤
Athuku reason unga story tan sister 😍😍😍 padikravanga elarukum pudichupoirum antha alavuku elame iruku intha kadhaila ❤️❤️ interesting koraiyama potchu 🤩
Ungal adutha kadhaiku en manamarntha valthugal 💐💐 athukum nan ennoda mulu atharvuu tharuven 😍😍
 
Top