கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னில் தன்னை இணைத்தவன் -9

Shaliha ali

Moderator
Staff member
என்னில் தன்னை இணைத்தவன்
அத்தியாயம் -9


நாட்கள் வேகமாய் செல்ல… எல்லோரும் தங்களுடைய பணிகளை தொடர்ந்தனர்.அத்வதா படிக்கும் பள்ளியில் அறிமுகம் ஆனாள் ரேகா.அத்வதாவுடன் பள்ளியில் பயின்றாள் ரேகா.ரேகாவின் தந்தை ஒரு சாதாரண கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


அவர் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த கம்பெனியின் மற்றொரு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது.அவர் அங்கே போய் வேலைப் பார்க்க ஆரம்பித்தார்.ரேகா இங்கே அவள் பாட்டியோடு இருக்க அத்வதாவும் அவளும் நல்ல நண்பர்களாகிக் கொண்டனர்.


உடனே வர வேண்டும் என்று வெளிநாட்டிற்குச் சென்ற தவரூபனால் உடனே வர முடியவில்லை.அவன் தங்கி படிக்க இடம் அடுத்து அவனுக்கு தேவையான பகுதி நேர வேலை தேட வேண்டிய தேவை என்று அவன் அதிலேயே பிஸியாகி விட்டான்.



அவன் அரசவம்சத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவனுடைய தந்தை தவரூபனுக்கு எந்த வித வசதியையும் செய்துக் கொடுக்க வில்லை.அவன் படிக்க வேண்டிய படிப்பிற்கும்,தங்கும் இடம் மற்றும் உணவுக்கான பணத்தை மட்டுமே அனுப்பி வைத்தார்.


மேலும் அவனுக்கு தேவைப்படும் தனிப்பட்ட செலவிற்கு அவன் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது அவர் போட்ட கண்டிஷன்.அப்பொழுது தான் அவன் பணத்தின் மதிப்பை உணர்ந்து தேவையில்லாத பணச் செலவைக் குறைத்துக் கொண்டும்,மற்றவர்களின் தேவையை புரிந்துக் கொள்ளவும் முடியும் என்று அவர் நினைத்தார்.



அதனால் அவனுடைய அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிப் போனான்.அதனால் அவனால் நினைத்தபடி மைசூருக்கு வர முடியவில்லை.ஆனால் கிருஷ்ண உடையாரிடம் போன் போட்டு பேசுவது அவன் வழக்கமாகிப் போனது.அவரும் அவனிடம் அவனுக்குத் தேவையான நல்ல வழிகளைச் சொன்னார்.


அதனால் இருவரிடமும் நல்ல நெருக்கம் உண்டானது.அடுத்த வருட விடுமுறையில் நிச்சயம் வந்து அத்வதாவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.


அவளிடம் மட்டும் தான் அவன் பேசவில்லை.மற்றபடி அங்குள்ள எல்லோரிடமும் பேசினான்.ஆரலி, விண்காவிடம் கூட போனில் பேசினான்.ஆனால் அத்வதாவிடம் பேச மட்டும் ஒரு சிறு தயக்கம் இருந்தது.அதனால் அவன் பேசாமல் தவிர்த்து வந்தான்.


அத்வதா பெரிய பெண்ணாகி விட்டதால் அவளை வெளியே எங்கும் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்தனர்.அது அத்வதாவிற்கு பிடிக்கவில்லை.அவள் மாதேவியிடம் எவ்வளவு அடம் பிடித்தும் நடக்கவில்லை.பள்ளிக்கு சென்று வர மட்டுமே அவள் அனுமதிக்கப்பட்டாள்.


ஒருநாள் கிருஷ்ண உடையார் பக்கத்தில் உள்ள அன்சூர் கிராமத்திற்கு சென்று இரண்டுநாட்கள் தங்கி வர முடிவெடுத்தார்.அவரோடு குமாரி ராணியும் செல்வதாக இருந்தது.இவர்கள் இருவரோடும் அத்வதா தானும் செல்வதாக அடம்பிடித்தாள்.


மாதேவியும் அப்பா அம்மாவுடன் செல்ல விரும்புவதால் அவரும் அதற்கு ஒப்புக் கொண்டு அத்வதாவை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.


கிருஷ்ண உடையார் மைசூரை விட்டு தள்ளியுள்ள ஒரு குக்கிராமத்துக்குச் சென்றார்.


போகும் வழியினில் அத்வதா கிருஷ்ண உடையாரிடம் "தாத்தா நம்ம ஊரை சுத்திப் பார்க்க போறாமா?"


"அப்படியும் வைச்சுக்கலாம்"


"என்னத் தாத்தா இப்படி பதில் சொல்லுறீங்க? "

"வேற என்னம்மா? அங்குள்ளா ஒவ்வொரு இடத்திற்கு போய் பார்க்கிறது கூட சுத்திப் பார்க்கிற மாதிரி தானே.அதான் சொன்னேன்"


"அப்போ எதுக்கு நம்ம அங்கே போறோம்?"


"நிறைய விஷயங்களைப் பற்றி அங்கே நீ தெரிஞ்சுக்கலாம் வா நாம அங்கே போய் பார்க்கலாம்.உனக்கு என்ன சந்தேகம்னு அங்குவைச்சு என்கிட்ட கேளு நான் சொல்றேன்" என்றார்.


அப்படி அங்கே கத்துக் கொள்ள என்ன இருக்கிறது? என்ற ஆவலோடு அவள் தாத்தாவுடன் பயணித்தாள்.அவர்கள் தங்குவதற்கு என்று ஒரு வீடு இருந்தது.அந்த வீடு இவர்கள் இருக்கும் பெரிய அரண்மனை போல் இல்லாமல் ஒரு மாடி வீடு இருந்தது.


அந்த ஊரிலேயே இந்த வீடு தான் பெரிய வீடாக இருந்தது.மற்ற வீடுகள் எல்லாம் குடிசைகளாக இருந்தன.ஒருசில வீடுகள் மட்டும் ஓட்டு வீடுகளாக இருந்தன.


இதை எல்லாம் பார்த்த அவளுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.இவர்கள் அந்த பெரிய வீட்டின் முன்னே நுழையும் பொழுது அங்குள்ள ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என மக்கள் எல்லோரும் அந்த வீட்டின் வாயிலில் காத்துக் கொண்டிருந்தனர்.


கிருஷ்ண உடையார் காரிலிருந்து இறங்கியதும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதை எல்லாம் அவள் காரில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.குமாரி ராணி இறங்கியதும் அவருக்கு மாலை அணிவிக்காமல் கையில் கொடுத்து வரவேற்றனர்.


கிருஷ்ண உடையார் அத்வதாவை காரை விட்டு இறங்கச் சொன்னார்.அவள் இறங்கியதும் கிருஷ்ண உடையார் அத்வதாவை தனது பேத்தி என அறிமுகப்படுத்தினார்.


உடனே அங்குள்ள பெண்கள் சிறிது நேரத்தில் ஆரத்தி எடுத்து வந்து அவளுக்கு திருஷ்டி எடுத்து விட்டனர்.அவர்கள் இருவரும் அமர்வதற்கு என இரண்டு நாற்காலிகள் போடப்பட்டன.


அது இவர்கள் அரண்மனையில் இருக்கும் விலையுயர்ந்த நாற்காலிப் போல் இல்லாமல் இருந்தாலும் அங்குள்ள மக்கள் கிருஷ்ண உடையாரையும் குமாரி ராணியையும் மிகுந்த மரியாதையுடன் உட்கார
வைத்தனர்.


அவர்களுக்கு அருகில் இவளுக்கும் ஒரு நாற்காலி போடப்பட்டது.அவர்கள் உட்கார்ந்ததும் அந்த ஊரிலுள்ள மக்களின் முன்னால் நின்ற ஒருவர் வந்து பேச ஆரம்பித்தார்.


"மஹா ராஜா அவங்களுக்கும் ராணி அவங்களுக்கும் வணக்கம்.உங்க பார்வையில எங்க கிராமம் இப்போ நல்ல நிலைமையில் வர்ற ஆரம்பிச்சு இருக்கு அதுக்கு உங்களுக்கு நாங்களும் எங்க ஊராரும் எத்தனை கோடி நன்றி சொன்னாலும் அது ஈடாகாது மகா ராஜா" என்று தாத்தாவின் காலில் விழுந்தார்.


சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவர் காலில் விழப்போனவரை பிடித்து "இங்க பாருங்க தலைவரே! என் காலில் விழக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.கடவுளோட படைப்பில் நாம எல்லோருமே சமம் இதில் யாரும் யாருக்கு கால் விழ வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.



அங்குள்ள மக்கள் எல்லோரும் அவரை பெருமையாய் பார்த்தனர்.


"ம்ம்… நான் சொன்ன விஷயம் என்னாச்சு? இருந்த இடத்தை எல்லோரும் விட்டு போய் பாதுகாப்பான இடத்துல இருக்காங்களா?"


"ஆமாம் மஹாராஜா எல்லோரையும் வேற இடத்துல இருக்காங்க.இன்னைக்கு நாம பூமி பூஜையை வைக்கலாங்களா? "


"கண்டிப்பா இன்னைக்கு என்ன நேரத்துக்கு சொல்லிட்டா நாங்க வந்துடுறோம்" என்றார்.


"மஹா ராஜா நீங்க எந்த நேரம் சொன்னாலும் அந்த நேரம் எங்களுக்கு நல்ல நேரம் தான்.என்னைக்கு நீங்க இந்த கிராமத்துல கால் வைச்சிங்களோ அன்னைக்கு தான் எங்களுக்கு விடிவு காலம் அதனால மஹா ராஜா வந்தவுடன் நடத்தலாம்" என்றார்.



"சரி நாங்க வந்துடுறோம்" என்று கும்பிட எல்லோரும் அங்கிருந்து சென்றனர்.


இதை எல்லாம் அருகில் இருந்த பார்த்துக் கொண்டிருந்த அத்வதாவிற்கு ஒன்றும் புரியவில்லை.அவளோ கன்னத்தில் கைவைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவளைப் பார்த்து சிரித்தவர் "என்ன அத்வதா நேரமே போக மாட்டேங்குதா? சலிப்பா இருக்கா?"


"இல்லைங்க தாத்தா. இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு புரியலை"


"ஒன்னுமே புரியலை தாத்தா. இந்த மாதிரி எல்லாம் கூட இருப்பாங்களா? எதுக்கு நாம இங்கே வந்து இருக்கோம்"


"உனக்கு ஒன்னுமே தெரியலையா? " என்று குமாரி ராணி கேட்க…


தெரியவில்லை என்று உதட்டை மடித்து கையை விரித்துக் காட்டினாள்.


அவளது சைகையைப் பார்த்து இருவரும் சிரித்தனர்.


தாத்தா அவளது தலையை வருடிக் கொடுத்தபடி "இன்னைக்கு முதல்ல பூஜை இருக்கு.அதை முடிச்சுட்டு நான் இன்னைக்கு ஊரை முழுசும் சுத்திக் காட்டி விவரத்தை சொல்றேன் முதல்ல எழுந்து குளிச்சுட்டு சீக்கிரம் தயாராகிட்டு வா நான் உன்னோட அறையை காட்டுறேன்" என்று பேத்தியின் தோளில் கை போட்டு தன்னோடு அழைத்துச் சென்றார்.


அத்வதா தன் அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றி வெளியே வந்தாள்.அவளுக்கு தலைவாரி பின்னலிட வெளியே இரு பெண்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.


குமாரி ராணி அவளிடம் "இங்கே உட்காரு இவங்க உனக்கு பின்னலிட்டு பூ வைப்பாங்க" என்று டேபிள் உள்ள பூவைக் காட்ட….


டேபிள் முழுவதும் இருந்த பூக்களைப் பார்த்து "ஐயோ பாட்டி இவ்வளவு பூ எனக்கா? இவ்வளவு பூவையும் என் தலையில் வைச்சால் என் தலை மேலே இல்லாமல் பாரம் தாங்காமல் கீழே விழுந்திடும்" என்று அப்பாவியாய் சொல்ல…


அங்கு நின்றுக் கொண்டிருந்த பெண்கள் அவள் சொல்வதைக் கேட்டு சிரித்தனர்.


பாட்டியோ "அதெல்லாம் கீழே விழாது. நான் பிடிச்சுக்கிறேன்" என்று அவளிடமும் "தலை நிறைய பூவை வைச்சு விடுங்க" என்று அங்குள்ள பெண்களிடம் சொல்லி விட்டுச் சென்றார்.


அவர்களும் அவள் தலையில் அதிகமான பூக்கள் இருப்பது போல் இல்லாமல் அழகாய் நேர்த்தியாய் வைத்தனர்.


அத்வதாவையும் தங்களோடு பூஜைக்கு அழைத்துச் சென்று அங்கு நடப்பவை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.


பூஜை முடிந்ததும் அந்த இடத்தில் வைக்க வேண்டிய கல்லை கிருஷ்ண உடையார் அத்வதாவின் கையில் கொடுத்து அவளை வைக்கச் சொல்லி அவர் கையால் அந்த இடத்தில் கட்டுமான பணியை ஆரம்பிக்கச் சொன்னார்.


எல்லோரும் கிருஷ்ண உடையாரிடம் வந்து தங்களுடைய நன்றியை தெரிவித்தனர்.அவர்களிடம் வேறு எதாவது பிரச்சினை இருக்கிறதா? என்று பேசி விசாரித்துக் கொண்டிருந்தார் கிருஷ்ண உடையார்.



எல்லோரிடமும் பேசி முடித்து விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தார்.


"இப்போ சொல்லு அத்வதா உனக்கு என்ன தெரியனும்? "


"தாத்தா எதுக்காக நாம இந்த ஊருக்கு வந்து இருக்கோம்? இங்கே ஏன் என்ன நடக்குது?"


அவர் சிரித்துக் கொண்டு "நான் இந்த கிராமத்துக்கு என்ன அடிப்படை தேவையோ? அதை செய்ய வந்து இருக்கோம்"


"ஏன்? எதுக்கு தாத்தா"


"நான் உனக்கு விவரமா சொல்றேன்"என்றார்.


"வா இரண்டு பேரும் அப்படியே கொஞ்ச தூரம் நடந்து போகலாம் அப்படியே உன்கிட்ட இந்த விஷயத்தைப் பற்றி முழு விவரமும் சொல்றேன்" என்று நடக்கத் தொடங்க….


தாத்தா தன் பேச்சை தொடர்ந்தபடி நடக்க அவரோடு இணைந்தபடி நடந்தபடி அவளும் கேட்டாள்.


"இந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் தினக்கூலி வேலைக்குப் போய் சொற்பமா சம்பாதிக்கிறவங்கம்மா.அவங்களால மூணு வேலை சாப்பாடு என்பது பெரிய விஷயம்.அதனால அவங்களோட பிள்ளைகளை படிக்க வைக்கவோ, நல்ல வசதியான வாழ்க்கை வாழவோ முடியாது,ஏன் சுத்தமான தண்ணீர் கூட அவங்களுக்கு பெரிய விஷயம்" என்று அவர்கள் நடந்துக் கொண்டிருந்த பாதையின் ஓரத்தில் உள்ள சின்ன குளத்தை காட்டினார்.



அது அந்த குளத்தைச் சுற்றி ரொம்ப அசுத்தமாக இருந்தது.தண்ணீர் மேல் பாசிப் படிந்து ரொம்ப அழுக்காக இருந்தது.


அதைப் பார்த்து முகத்தை சுழித்தவாறு "தாத்தா இந்த தண்ணீரைத் தான் இவங்க எல்லாம் குடிக்கிறாங்களா? " என்றுக் கேட்க…


"குடிச்சிட்டு இருந்தாங்க இப்போ இல்லை"


"அப்போ இப்பொழுது குடிக்கிறதுக்கு என்ன செய்றாங்க?"


"வேற இடத்துல கிணறு தோண்டி இப்போ அதன் மூலமா வர்ற தண்ணீரை உபயோகம் படுத்துறாங்க"


"தாத்தா இந்த விஷயம் எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?"


அவள் மனதில் தோன்றிய அடுத்த கேள்வியைக் கேட்டாள்.


"எப்படித் தெரியும் தானே கேட்கிறே ஏன்னா இந்த கிராமத்தை நான் தத்தெடுத்து இருக்கேன்"


அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.புரியாமல் தாத்தாவிடமே கேட்டாள்.


"தாத்தா அப்பா அம்மா பிள்ளைகளைத் தானே தத்தெடுப்பாங்கன்னு ஸ்கூல்ல மிஸ் சொல்லி கேட்டு இருக்கேன்.ஆனால் எப்படி ஒரு கிராமத்தை நீங்க தத்தெடுக்க முடியும்?"


அவள் கேட்ட கேள்வியில் சிரித்தவர்
"முடியும்"


"எப்படி முடியும்"


"அம்மா, அப்பா, சொந்தங்கள் இல்லாத குழந்தைகளை இல்லாத குழந்தைகளை எப்படி குழந்தை இல்லாத குடும்பம் தத்தெடுக்கிறாங்களோ?அதே மாதிரி தான் இது"


"அதெப்படி சாத்தியம் ஆகும் தாத்தா?"

"முடியும் கண்டிப்பா முடியும்.எப்படி ஒரு குழந்தையை தத்தெடுத்து அந்த குழந்தைக்கு தேவையானவற்றை செய்துக் கொடுக்கிறோமோ அதே மாதிரி தான். ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் போது அந்த கிராமத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்துக் கொடுக்கிறோம்.அவங்களுக்கு தேவைப்படுற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யனும்"


"ஏன் தாத்தா இதை தான் அரசாங்கம் செய்யுமே? நாம ஏன் செய்யனும்?"


"ம்ம்ம்...சரியான கேள்வி தான்.எல்லா கிராமங்களுக்கும் அரசாங்கமே செய்யனும் அப்படிங்கிறது ரொம்ப சாதாரணமான விஷயம் இல்ல.அது ரொம்ப காரியம். இதை ஏன் அரசாங்கம் மட்டும் செய்யனும்னு நாம நினைக்கனும்? நம்மளால முடிந்தால் இதை நாமே செய்யலாம் அத்வதா.அதற்கான பொருளாதாரம் இருக்கும் போது அதை நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கிறதுனால ஒன்னும் குறைஞ்சு போகாது அதோடு இப்போ நான் செய்ற இந்த உதவி என்னோட வாழ்நாள்ல நான்இதுக்காக சம்பாதித்து சேர்த்து வைச்ச பணம்.உதவி தேவைப்படுறவங்களுக்கு இன்னொருத்தர் வந்து செய்யட்டும் நாம எதிர்ப்பார்கிறததை விட்டுட்டு நம்மளால முடிந்த உதவியை ஒவ்வொருத்தவங்களும் செய்ய ஆரம்பிச்சாலே தேவைப்படுறவங்க ரொம்ப குறைஞ்சுடுவாங்க" என்றார்.


அவர் சொன்ன விஷயங்கள் அவளால் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு அவள் புரிந்துக் கொண்டாள்.

"தாத்தா என்னால கூட உதவ முடியுமா?"


"உன்னால எந்த அளவிற்கு உதவ முடியுமோ? அந்த அளவுக்கு மற்றவங்களுக்கு உதவு அத்வதா அது தான்
இந்த உலகத்துல நாம பிறந்ததற்கு செய்யக் கூடிய ஒரு சின்ன விஷயம்"


"கண்டிப்பா தாத்தா நீங்க சொன்ன மாதிரி நான் மற்றவங்களுக்கு என்னால உதவியை நிச்சயமா செய்வேன்.நான் பெரியவளாக ஆனாலும் நீங்க சொன்ன இந்த விஷயத்தை நான் கடைப் பிடிப்பேன்.நானும் உங்களை மாதிரி இருப்பேன் தாத்தா" என்றாள் ஆர்வமுடம் கூடிய உறுதியாக….



"உண்மையா சொல்றியாம்மா"



"ஆமாம் தாத்தா உங்க அளவுக்கு இல்லைன்னாலும் என்னால முடிந்த அளவுக்கு நான் கண்டிப்பா செய்வேன்" என்றாள்.


அவளது இந்த தெளிவான பேச்சைக் கேட்டு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

சிறு யோசனையோடு அமர்ந்தவள் "தாத்தா இப்போ பூஜை நடக்குதே அது எதுக்கு?"


"இந்த ஊர்மக்களோட குழந்தைகள் பள்ளில படிக்க பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை.இந்த இடத்துல இருந்தவங்களை வேற இடத்துக்கு மாத்திட்டோம்.ஏன்னா இந்த இடம் தான் ஊருக்கு மத்தியில இருக்கு அப்போத் தானே சுற்றி இருக்கிற எல்லோராலும் வந்து படிக்க முடியும் அதனால இந்த தேர்வு செய்தோம்.அதுக்கு ஊர்மக்களும் ஓத்துகிட்டாங்க இந்த வேலை முடிஞ்சதும் ஒவ்வொருத்தவங்களுக்கும் அவங்களோட நிலத்துல ஒரேமாதிரியான வீடு கட்டிக் கொடுக்கனும் இதையும் நான் செய்திட்டால் என்னோட பாதி கனவு நனைவாகிடும்" என்று தன் மனதில் உள்ள எண்ணங்களைச் சொன்னார் கிருஷ்ண உடையார்.


அவர் எண்ணங்களை அத்வதாவிடம் சொல்லச் சொல்ல அதை அவர் அவள் மனதில் விதைத்துக் கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு தெரியவில்லை.அவளை அதை ஆவலோடுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.


அத்வதா அங்குள்ள பிள்ளைகளிடம் சாதாரணமாகப் பழகினாள்.இரண்டு நாட்கள் வேகமாய் சென்றது.அவளுக்கு அங்கே இருக்க பிடித்திருந்தது.அரண்மனையை விட்டு வெளியே வராமல் இருந்தவளுக்கு இந்த சுதந்திரம் பிடித்திருந்தது.அவர்கள் ஊருக்குச் செல்லும் நாள் வந்ததுத்


தாத்தாவிடம் "தாத்தா எனக்கு இங்கே இருக்கத்தான் பிடிச்சு இருக்கு. நான் இங்கேயே இருக்கட்டுமா?"


"நீ சொன்னது உன் அம்மா காதுல விழுந்துச்சு அவ்வளவுதான் தாத்தாக்கு தான் பேச்சு கிடைக்கும்.அதோடு இனிமேல் அம்மா எங்கேயும் உன்னை அனுப்ப மாட்டாங்க"


"என்ன தாத்தா சொல்லுறீங்க? உண்மையாவா?"


"ஆமாம் உண்மையாகத் தான் சொல்றேன்.இப்போ நம்ம அரண்மனைக்கு திரும்ப போயிட்டா நாம இன்னொரு தடவை திரும்ப இங்கே வரலாம்" என்றார்.


தாத்தாவின் பேச்சில் நம்பியவள் அவரோடு சென்றாள்.


அவள் அரண்மனைக்குச் சென்றாலும் அன்சூரைப் பற்றிய நினைவுகளே அதிகமாய் இருந்தது.



அரண்மனையில் மாதேவி, தாத்தா, பாட்டி இவர்கள் மூவரைத் தவிர அவளோடு நெருக்கமாய் யாருமே இல்லை.ஆரலி உடன் பிறந்த சகோதரியாய் இருந்தாலும் அவளோடு பேசுவது கூட கிடையாது.ரதன் வீட்டில் இருக்கும் நாட்கள் குறைவு.ஆனால் அவரோடு இருந்த நாட்கள் பல கதைப் பேசி நேரங்கள் செல்லும்.


ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதாலும் அவளோடு அவ்வளவாய் நெருக்கம் இல்லை.விடுமுறைக்கு வந்தாலும் விண்காவுடன் அவள் நேரத்தை கடத்தினாள்.


அத்வதா ஆரலியோடு பேச சென்றாலும் அவள் அதற்கு எந்த பதிலும் பேச மாட்டாள்.அவளது அந்த விலகல் இவளை ரொம்பவே பாதித்தது.ஆனால் இந்த விஷயத்தை அவள் பெரிதுப்படுத்த விரும்பவில்லை.


கிருஷ்ண உடையாரிடம் கற்றுக் கொள்ள அவளுக்கு நிறைய இருந்தது.மைசூரில் இவர்களுக்கு கீழ் விவசாயம் செய்து வேலை செய்பவர்களை கண்காணிப்பது என்று அவருக்கு நிறைய இருந்தது.அதில் இருந்து அவள் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்.


நாட்கள் வருடங்களாய் சென்றது.தவரூபன் விடுமுறைக்கு இந்தியாவிற்கு வரலாம் என்று நினைக்கும் போது அவனுக்கு படிப்பிற்கான பயிற்சிகள் விடுமுறையில் இருந்தன.அதனால் அவனால் வர முடியவில்லை.குடும்பத்தின் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவனால் பங்குக் கொள்ள முடியவில்லை.


ஆனால் குடும்பத்தில் உள்ள விஷேங்களுக்கு எடுக்கும் போட்டோக்களை பிருந்தா அவனுக்கு அனுப்பி வைப்பார்.


அவனுக்கு வரும் போட்டோகளில் லேசாக எதாவது ஒரு போட்டோவில் அத்வதா இருக்கிறாளா? என்று பார்ப்பது உண்டு.ஆனால் இது வரைக்கும் அவன் கண்ணில் இதுவரை பட்டதேயில்லை.வெளிப்படையாக கேட்டால் எங்கே அத்வதாவிற்கு தெரிந்து எங்கே தன்னோடு சண்டைப் போடுவாளோ? என்ற பயமும் உண்டு.அதனாலேயே அமைதியாய் இருந்தான்.



அத்வதாவின் பதினைந்தாம் வயதில்
ஒருநாள் ஆரலியின் பிறந்தநாளன்று எல்லோரையும் அழைத்து பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


அந்த விருந்தில் ஆரலியின் தோழிகள் அனைவரையும் அழைத்து விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பலவகையான உணவுகளோடு விருந்து நடந்துக் கொண்டிருக்கும் போது அங்கு வேலைச் செய்துக் கொண்டிருந்த பெண்ணின் நான்கு வயது குழந்தை விருந்து நடந்த இடத்திற்கு வந்து அவர்கள் வைத்திருந்த உணவுகளில் ஒரு இனிப்பு உணவை எடுத்து அந்த குழந்தை தன் கையால் எடுத்து சாப்பிட்டது.


இதைக் கண்ட ஆரலி அந்தக் குழந்தையை தள்ளிவிட சென்ற நேரம் அத்வதா அந்தக் குழந்தையை தன் கையால் தூக்கி கொஞ்சி அவள் கையால் ஊட்டி விட்டாள்.


இந்த செயல் அங்குள்ள யாருக்கும் மாதேவிக்கும் பிடிக்கவில்லை.வேலையாளின் குழந்தையை அத்வதா தன் கையால் தூக்கி கொஞ்சுவதை விரும்பாத மாதேவி அங்கு எல்லோர் முன்னிலையில் அதிகாரமாய் "அத்வதா உன் கையில் உள்ள குழந்தையை கீழே விட்டுட்டு இந்த இடத்தை விட்டுட்டு இப்போ போய்டு" என்று கத்தினார்.


அத்வதா ஒன்றும் புரியாமல் அப்படியே நிற்க… மாதேவி "இப்போ நீ உள்ளே போறியா? இல்லை நான் கூடிட்டு போகவா? " என்று இன்னும் சத்தமாய் கத்த அவள் அமைதியாய் சென்றாள்.


இதைக் கண்ட ஆரலிக்கு சந்தோஷமாக இருந்தது.முதன்முறையாக அம்மா அத்வதாவை எல்லோர் முன்னிலையில் அதிர பேசியதும் அவளைப் பாற்றி அறிந்துக் கொண்டதை எண்ணி மகிழ்ந்தாள்.


அன்று தாத்தா வீட்டில் இல்லை.அவர் வெளியே சென்றிருந்தார்.விருந்து முடியும் வரை பொறுமையாக இருந்த மாதேவி விருந்து முடிந்ததும் நேராக அத்வதாவின் அறைக்கு சென்று அவளைப் பார்க்க அவள் அப்படியே அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.அவரோடு ஆரலியும் இருந்தாள்.அவளைப் பொறுத்தவரை அவள் என்ன தவறு செய்தாள்? என்றே அவளுக்கு தெரியவில்லை.


உள்ளே வந்ததும் மாதேவி ""அத்வதா நீ ஏன் இப்படி இருக்கே? என்னையும் நம்ம குடும்பத்தையும் அசிங்கப்படுத்தனும்னு இருக்கியா?"


"அம்மா ஏன் இப்படி பேசுறீங்க? நான் என்ன தப்பு செய்தேன்னு என் மேல கோபப்படுறீங்கன்னு எனக்கு புரியலை? "


"எல்லாத்தையும் செய்துட்டு ஒன்னுமே புரியலைன்னு சொல்றே? இன்னைக்கு வேலைக்காரங்களுடைய குழந்தையை அத்தனை பேர் முன்னாடி கொஞ்சுறியே? அது தப்பா தெரியலை? "


"அம்மா இதுல என்னத் தப்பு இருக்குன்னு எனக்குத் தெரியலைம்மா. அந்த குழந்தையை தூக்குனது தப்பா? "


"ஆமாம் தப்பு.யாரை நம்மக் கூட சேர்க்கனும் யாரை தள்ளி நிறுத்தனும்னு உனக்கு இன்னும் தெரியலை.நாம அரண்மனையில் இருக்கிறவங்க நாம நமக்கு கீழே இருக்கிறவங்க தூக்கி நம்ம மேல வைத்தால் நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்டும் இனிமேல் நான் உனக்கு அதை சொல்லித் தரேன்"


"அம்மா இத்தனை நாளா நீங்க இந்த மாதிரி நீங்க பேசலை. இப்போ நீங்க ஏன் இப்படி பேசுறீங்க? "


"இத்தனை நாளா நீ ஏதோ விளையாட்டா பண்ணுறேன்னு நினைச்சேன்.ஆனால் இப்போத் தானே தெரியுது உனக்கு ஆரலி அளவுக்கு கூட நம்ம பழக்கம் தெரியலைன்னு தெரியுது.அதோடு
நான் உன்னை ரொம்ப செல்லம் கொடுத்து தப்பு பண்ணிட்டேன் அத்வதா இனிமேல் நீ எப்படி இருக்கனும்? யார் யார்க்கிட்டஎப்படி நடந்துக்கனும்? எல்லாத்தையும் நான் இனிமேல் சொல்லித் தரேன் அந்த மாதிரி தான் இருக்கனும்" என்று சொல்லி விட்டுச் சென்றார்.


அத்வதாவிற்கு அம்மாவின் பேச்சு வித்தியாசமாகத் தெரிந்தது.இத்தனை நாளாய் இருந்த சின்ன சுதந்திரம் தன்னை விட்டு போகப் போகிறது என்பதை அவள் உணர்ந்தாள்.


தாத்தாவிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.மறுநாள் இருந்து மாதேவியும் குமாரி பாட்டியும் அவளை அவளது உடையிலிருந்து அவள் நடப்பது வரை ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர்.


கிருஷ்ண உடையார் இதைப் பற்றி விசாரித்தப் பொழுது அத்வதா திருமணம் செய்து இன்னொரு வீட்டிற்கு மருமகளாய் போக வேண்டியவள் அதனால் அத்வதாவிற்கு நம்ம குடும்பத்தின் பழக்கவழக்க முறைகளைச் சொல்லி கொடுக்க வேண்டும் என்று குமாரி ராணியும் மாதேவியும் சொல்ல அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.


வருங்காலத்தில் அத்வதாவிற்கு குடும்பத்தின் முறைகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை.


அத்வதா இது புது வாழ்க்கை முறையாய் இருந்தது.அவளை மாதேவி தன்னோடு வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்.அங்கு வரும் விருந்தினர்களிடம் எப்படி பழக வேண்டும்? என்று சொல்லிக் கொடுத்து பழக்கப்படுத்தினார்.


ஆடம்பர உடையணிந்து முகத்தில் பொய் புன்னகையோடு வலம் வந்து அவர்கள் எல்லோரிடமும் நலம் விசாரிப்பது ஏதோ அவளுக்கு ரொம்ப கடினமாய் இருந்தது.


வீட்டிற்கு வந்தால் தான் அவளுக்கு ஓரளவு நிம்மதியாய் இருந்தது.பள்ளிக்குச் சென்றால் அவளுக்கு இன்னும் பெரிய நிம்மதியாய் இருந்தது.அப்பொழுது தான் அவள் அவளாக இருப்பதாக உணர்ந்தாள்.


ரேகாவிடம் மனம் விட்டு எல்லாத்தையும் சொன்னாள்.அவளோ "அம்மா எது சொல்றாங்களோ?அது தான் உனக்கு நல்லது அத்து " என்றாள்.


"ஆனால் ரேகா அதை என்னால ஒத்துக்க முடியலை.அம்மா வித்தியாசம் பார்க்கிறாங்களோன்னு எனக்கு தோணுது"


"நீ ஏன் அப்படி நினைக்கிற அத்து.ஒவ்வொரு ஊருக்கும் ஒரு முறை இருக்கும் போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் சில முறைகள் இருக்கு.அதே மாதிரி உன்னோட குடும்பம் இராஜ வம்சங்கிறதுனால அம்மா சொல்றாங்களா இருக்கும் அதை ஏன் பெரிசா நினைக்கிற?"


"இல்லை ரேகா என்னால ஏத்துக்க முடியலை.நான் நானாகவே இல்லாத மாதிரி உணர்வு இருக்கு பிடிக்கலை"


"ஏன் தப்பா நினைக்கிற அத்து? நம்ம பெற்றவங்களுக்காக இதைக் கூட செய்யலைன்னா எப்படி? அப்படி நினைச்சு பாரு பாரமாகவே தெரியாது.உனக்கு அப்படி இருக்க பிடிக்கலைன்னா நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? "


"ம்ம்ம்… சொல்லு"


"உன் அம்மா எப்போ நீ அப்படி இருக்கனும்னு நினைக்கிறாங்களோ? அப்பொ அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இரு.மற்ற நேரத்துல உனக்கு பிடிச்ச மாதிரி இரு அவங்க நினைக்கிற மாதிரி நீ இருக்கும் போது உன்னை தொல்லை பண்ண மாட்டாங்க"என்றாள்.


ரேகா கூறிய யோசனை அவளுக்கு சரியென்று பட்டது.அதனால் "சரி ரேகா நீ சொல்ற மாதிரியே நான் செய்றேன்"


"ம்ம்ம்… சரி அத்து நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்"


"சொல்லு அப்படி என்ன முக்கியமான விஷயம்?"


"நான் இந்த மாசத்தோட படிப்பை நிறுத்தப் போறேன்.அதனால நாம இனிமேல் சந்திக்கிறது நடக்காது" என்றாள்.


அவள் சொன்னதைக் கேட்டு இவள் அதிர்ச்சியாகி "என்ன சொல்றே ரேகா? ஏன் இப்படி பேசுற? என்னாச்சு?" என்று அவள் பதற்றத்தோடு கேட்டாள்.


(தொடரும்)
 
Top