கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னைத் தேடும் நான்: அத்தியாயம்-6

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்==6

விஜியின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. அவள் சர்ஜரி முடிந்து ஜெனரல் வார்டில் இருந்தாள். பார்கவி அவளிடம் பரிவாக சொன்னார்.

“விஜி......இப்ப எப்படிம்மா இருக்கு?”

“வயிற்று வலி இல்லே. ஆனா களைப்பா இருக்கும்மா.”

“சர்ஜரி ஆகியிருக்கு இல்லே. எல்லாம் சரியாயிடும். நீ தைரியமா இரு. உன் மாமியார் எப்ப வருவாங்க?”

“பக்கத்து கிராமத்துக்கு தான் போயிருக்காங்க. நாளை காலை பத்து மணிக்குள் வந்திடுவாங்க. அம்மா......நீங்க கிளம்புங்க. சசி உங்களை தேடுவா” என்றாள் விஜி. அவளுக்கு பயம். எங்கே சசியின் கணவன் கோபித்துக் கொண்டு சசியிடம் கத்துவானோ என்று.

“உன்னை எப்படி தனியா விட்டிட்டு போக முடியும்.? நான் இரவு இங்க தங்கறேன். நாளை உன் மாமியார் வந்ததும் கிளம்பறேன்.” என்றார்.

“வேண்டாம் மா. நீங்க கிளம்புங்க. நர்ஸ் பாரத்துக்குவாங்க.”

விஜிக்கு ஜூஸ் பிழிந்து கொடுத்துவிட்டு பார்கவி சொன்னார்.

“நீ கவலைபாடாதே விஜி. நான் சசிக்கு ஃபோன் பண்ணி சொல்லிடறேன்.” விஜியின் பதிலுக்கு காத்திராமல் சசிக்கு ஃபோன் செய்தார் அவர்.

“சசி......விஜிக்கு சர்ஜரி முடிந்து அவள் நல்லாயிருக்கா. இன்னும் நாலு நாள் ஆஸ்பத்திரியில் இருக்கணுமாம். அவ மாமியார் நாளை காலை பத்து மணிக்குத் தான் வருவாங்களாம் அவங்க வந்த பிறகு நான் வரேன். ஸ்ரீ கிட்டே சொல்லிடு.” என்றார்.

“அத்தே.......நீங்க வீட்டுக்கு வாங்க. நான் வேணா விஜி கூட ராத்திரி தங்கறேன். அங்க உங்களுக்கு படுக்க வசதியா இருக்காது.”

“சசி......நீ என்னைப் பத்தி கவலைப்படாதே. உன் புருஷனை கவனி. பாரத்திட்ட பிறகு விஜியை இந்த நிலைமையில் எப்படி விட்டிட்டு வரது.? நல்ல வேளை அவ மாமியார் குழந்தை ரித்விக்கை கூட்டிட்டுப் போயிருக்காங்க. சரி வச்சிடறேன்.”

சசிக்கு ஸ்ரீயிடம் இதை சொல்ல பயமாக இருந்தது. யாரோ ஒருத்திக்காக எதுக்கு அம்மா போய் ரா தங்கணும்? அதுவும் ஆஸ்பத்திரியில்? என்று கேட்டுவிட்டால்?. அவளை தொல்லை படுத்துவான். எல்லாம் உன்னால் என்று சொல்வான். உன் சினேகிதியின் புருஷனுக்கு உன்னை விட்டா உதவிக்கு வேறு ஆள் கிடைக்கலையா? இது ஒரு சாக்கு....என்பான். வேறு வழியில்லை சொல்லித்தானே ஆகவேண்டும்.

ஸ்ரீக்கு காப்பி கொடுத்துக் கொண்டே அவள் விஷயத்தை சொன்னாள். அவன் எரிந்து விழவான் என்று அதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டாள். ஸ்ரீ காபியை உருஞ்சிக் கொண்டே.....

“காப்பி நல்லா இருக்கு சசி. இப்ப எதுக்கு ஃபில் பண்ணிக்கிட்டு இருக்கே.? அம்மா மெதுவா வரட்டும். ஒருத்தருக்கு உதவி செய்றதுன்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு பரந்த மனசு.” என்றான்.

சசியால் நம்ப முடியவில்லை. பரவாயில்லையே ஸ்ரீ திருந்திட்டான் போலிருக்கே...... அவள் எண்ணி முடிப்பதற்குள் அவன் ஊசி குத்துவது போல் வார்த்தைகளை சொருகினான்.

“சசி ஒண்ணு சொல்லவா?”

அவன் பேசிய விதமே சசிக்கு ஒரு பயத்தை கொடுத்தது.

“சொல்லுங்க ஸ்ரீ.....”

“எங்கம்மாவின் பரந்த மனப்பான்மையை யார் யாரோ தனக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்க. அது தான் எனக்கு வருத்தமா இருக்கு. நான் உன்னை சொல்லலை. பொதுவா சொல்றேன்.”

சசி மௌனமாக நின்றாள். அந்த வார்த்தைகள் அவளுக்கானது என்பது தானே உண்மை. அவள் கண்களில் நீர் நின்று வெளி வர தவித்தது. சமாளித்துக் கொண்டு சொன்னாள். ‘

“அடுத்தவங்க பெருந்தன்மையை மதிக்கத் தெரிந்தவள் நான். அதை பயன்படுத்திக்கும் அற்ப புத்தி எனக்கில்லை. நான் என்னைப் பற்றி சொல்றேன். மத்தவங்க பத்தி இல்லே......” சொல்லிவிட்டு அவள் காலி கோப்பையை எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் சென்றாள்.

கல்யாணம் ஆகி இந்த ஆறு மாதத்தில் அவள் ஸ்ரீயை பற்றி நல்ல விதமாகவே நினைத்திருந்தாள். இவனுக்குள் இவ்வளவு தெளிவின்மை ஒளிந்திருப்பதை அவள் இப்பொழுது தான் கண்டாள். இன்னும் என்னென்ன அவனுள் முடங்கிக் கிடக்கிறதோ என்ற கவலை அவளுள் எழுந்தது. சந்தேகம் எனும் வியாதி பீடிக்கப் பெறின், புத்தி ஒழுங்காக வேலை செய்யாது என்பது தானே நிஜம்.

இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு இருவரும் படுக்கை அறையில் நுழைந்தனர். பொதுவாக ஸ்ரீ இந்த நேரம் இங்கு வந்தால், ரொமான்டிக் மூடுக்கு தாவி விடுவான். சசியை கொஞ்சுவது, அவளுடன் சிரிப்பது, அரட்டை அடிப்பது என்று ஜோவியலாக பொழுது போகும். ஆனால் அவன் இன்று கண்கள் அலைபாய, கையில் ஒரு புத்தகத்தோடு உட்கார்ந்து படிப்பதாக பேர் பண்ணிக் கொண்டிருந்தான்.

இப்பொழுது பேசவா? அல்லது வாயை மூடிக் கொண்டு, தூக்கம் வருவதாக பாவனை செய்து கொண்டு படுத்து விடுவதா? என்று அவளுள் ஒரு பட்டி மன்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

“சசி.....”

“என்ன ஸ்ரீ? ஏதாவது வேணுமா?”

“ஆமா....ஒரு கிளாரிபிக்கேஷன்.... “

“சொல்லுங்க.......எதையும் மனசிலே வச்சுக்கக் கூடாது.”

அவன் அவள் அருகே நெருங்கி அமர்ந்து அவள் கண்களை பார்த்துக் கொண்டே சொன்னான்.

“எதுக்கு நீ அம்மாவை இறக்கிவிட்டிட்டு அந்த கம்பனிக்கு போனே? உன்னை வரவேற்ற அந்த வாலிபன் யாரு? அவனோடு ரெஸ்டோரெண்ட் வரை ஏன் போனே? உனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? கல்யாணத்தை மீறி ஒரு உறவு தேட ஆரம்பிச்சிட்டியா?” இப்படி கேட்க நினைத்த ஸ்ரீ......அந்த கேவலமான வார்த்தைகளை உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டு சொன்னான்.

“அந்த நிலவை பார்த்தியா? முழுசா நம் ஜன்னலுக்கு வெளியே தெரியுது. அழகா இல்லே?’”

சசி பயத்திலிருந்து சிறிது விடுபட்டு,

“ஆமா ஸ்ரீ. இன்னிக்கு பௌர்ணமி ஆச்சே. அதான் முழுசா நம் பார்வைக்கு கிடச்சிருக்கு. என்ன அய்யாவுக்கு ரொமான்டிக் மூடா?”

சசியின் சகஜ பேச்சு அவளின் பயத்தை அப்பிக் கொண்டே வெளி வந்தது.

“நிலவை பெண்ணுக்கு ஒப்புவமை சொல்வாங்க.”

“என்ன சொல்ல வரீங்க? ஒரு பெண்ணைப் பார்த்து நிலைவைப் பார்த்தேன் நிலவில் ஒளி இல்லை அப்படின்னு பாடப் போறீங்களா?’

“இல்லே......அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நிலவு நமக்கானது மட்டுமில்லே. அடுத்த வீட்டு ஜன்னலிலும் தெரியும் தானே? எல்லோருக்கும் பொதுவான நிலவு எப்படி ஒரு பெண்ணுக்கு உவமையா பொருந்தும்? அவள்......அவள் கணவனுக்கு மட்டும் தானே சொந்தம்.? லாஜிக் சரியில்லே தானே? அதான் யோசிக்கிறேன். நீ என்ன நினைக்கிறே?” இந்த சொற்களின் அடிப்படை நோக்கம் அவள் உள்ளத்தை காயப்படுத்துவதற்காகவே சொல்லப் பட்டது தான். சசிக்கு புரிந்தது.

அழகான வார்த்தைகளில் அசிங்கமான சந்தேக வியாதி எட்டிப் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. காலம் காலமாக புராணங்களில் தொடங்கி இன்று வரை பெண்களை சந்தேகப் படுவது ஒன்றும் குற்றமில்லை, என்று தானே எழுதப்படாத திர்ப்பாக இருக்கிறது. இதற்கு பதில் சொல்ல அவளுக்குப் பிடிக்கவில்லை.

“என்ன பேசாம இருக்கே சசி.? உனக்கே இந்த உவமை அபத்தமா தெரியலை?”

“ஒருத்தன் பாலைவனத்தில் போய்க் கொண்டிருந்தானாம். அண்ணாந்து பார்க்கிறான். பௌர்ணமி நிலா பளிச்சென்று வானத்தில் தெரிகிறது. ஒரு மங்கையின் முகம் போல் இருக்கு. அவனுக்கு என்ன தோணுச்சாம் தெரியுமா?” என்று சொல்லி நிறுத்தினாள் சசி.

“என்னடா இந்த நிலா பொம்பளை வேஷம் போட்டுக்கிட்டு, வேசி மாதிரி எல்லோருக்கும் காட்சி கொடுக்குதுன்னு தோணியிருக்கும்.” விஷம சொற்கள். நிலவை சொல்வது போல் அவளை சொல்கிறானா?

ஸ்ரீயின் வக்கிர புத்திக்கு பதிலடி கொடுக்க வேண்டும். சசி சொன்னாள்.

“நிலவே.......நீ ஒளி வீசுவது பார்த்து எனக்கு என் காதலியின் முகம் தான் நியாபகத்துக்கு வருது. அதை நியாபகப்படுத்தி எனக்கு ஆறுதல் சொல்லத் தானே இப்ப வந்திருக்கே? உனக்கு நன்றி அப்படின்னு சொன்னானாம். இப்படி ஒரு நாட்டுப் பாடல் சொல்லுது. நிலா மனிதர்களுக்கு நல்ல நினைவுகளை கொண்டு வரணும். அதுக்கு பேர் தான் கவிதை. வாழ்க்கையை கவிதையா பார்க்கணும். கணிதமா பார்த்து தப்பு கணக்கு போடக் கூடாது. “ பொட்டில் அறைந்தது போல் சொன்னாள்.

சொல்லிவிட்டு அவள் முதுகை காட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

நிலவில் தெரியும் நிழலை களங்கம் என்று சொல்பவர்கள் லிஸ்டில் இவன் இருக்கான். அதே நிலவில் தெரியும் நிழலை, பாட்டி வடை சுடுகிறாள் என்று சொல்பவர்கள் மட்டுமே வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்கள் என்று சசிக்கு தோன்றியது.

ஸ்ரீ நீ போய் கொண்டிருக்கும் பாதை முட்டுச் சந்து. பயணம் தொடராது. இதை அவனிடம் யார் தான் சொல்வது? சசி சொன்னால் அவன் புரிந்து கொள்வானா? சசி கண்களில் சத்தமில்லாமல் நீர் இறக்கியது.

தேடல் தொடரும்.



.















.
 
Top