கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே...அத்தியாயம் 1

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff member
என்னை மயக்கிய கார்குழலே!!!

அத்தியாயம் - 1


“கிடக்கறது கிடக்கட்டும்... கிழவியைத் தூக்கி மனையில் உட்கார வைங்கிற கதையா இருக்கு பெரியம்மா நீங்க செய்யறது!” என்றாள் கார்குழலி சலித்த குரலில்.


“தமிழ்நாடு வரைபடத்திலேயே இல்லாத உன் மொட்டை பட்டிக்காட்டில்... கயிற்றுக் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு... மேலே பறக்கும் காக்கா, குருவியைப் பராக்கு பார்க்கும் உன் பாட்டியை ஏன்டீ மனையில் உட்கார வைக்கணும்? அதுவும், மூணு வருஷமா ப்ளான் பண்ணி... ஒருவழியா இப்பத்தான் நாங்க எல்லோருமா ஒன்றாகச் சேர்ந்து, நார்த் பக்கம் டூருக்குக் கிளம்பிப் போகும் இந்த நேரத்தில் போய்?” என்றாள் ட்ரெயினில் குழலிக்கு எதிர் சீட்டில் அமர்ந்திருந்த ப்ரியா.


அவள் புறம் தலையைத் திருப்பிய கார்குழலி, “ஷப்பா... ஒரு பழமொழி சொன்னா... அதை அனுபவிக்கணும்டி ப்ரியா! இப்படிக் கேள்வி கேட்டு, மனுஷனைக் கொலையா கொல்லக் கூடாது!” என்றாள் எரிச்சலுடன்.


“ஆமா... இப்ப நான் என்னத்த அனுபவிக்கணும்னு சொல்ற? உன் எண்பது வயது பாட்டியை மனையில் உட்கார வைக்கும் அந்த அற்புதக் காட்சியையா? இல்ல, உன் மொக்க பழமொழியையா?” என்று கேள்வியே கேட்காதடி எனச் சொன்னவளிடமே, அதற்கும் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தாள் ப்ரியா.


‘கடவுளே! ஏன்டா இப்படிப்பட்ட ஜென்மத்துடன் என்னைக் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிற?’ என்ற ரீதியில் குழலி மேலே பார்க்க... அங்கே மேல் பர்த்தில் அமர்ந்திருந்த அடுத்த ப்ளாட் மாமா, இவளின் நிலையை உணர்ந்து தன் சிரிப்பை அடக்கப் பெரும் பாடுபடுவது அப்பட்டமாகத் தெரிந்தது.


குழலியின் இந்த மனப்போராட்டத்தை உணராத ப்ரியாவோ... எப்பொழுதும் போல் தன் பாணியிலேயே மேலும் சில பல கேள்விகளைத் தொடுக்க வாயைத் திறந்தவள்... திடீரென்று ஞானோதயம் பெற்று “ஆமாம்... உனக்கும் உன் பெரியம்மாவிற்கும் என்னடி பிரச்சனை?” என்று ஒருவழியாக விஷயத்திற்கு வந்து சேர்ந்தாள் ‘பிற்பாடு’ ப்ரியா.


எல்லா விஷயமும் கொஞ்சம் தாமதமாகத் தான் அவளின் மரமண்டைக்குப் புரியும். அது புரிந்து தொலைக்கும் வரை, இப்படித்தான் கேள்வியாய்க் கேட்டு, பாடாய்ப் படுத்துவாள் என்பதால்... குழலி வைத்த பட்டப்பெயர் தான் ‘பிற்பாடு’ ப்ரியா!


“என்னத்த டி சொல்ல சொல்ற? டூருக்குப் புறப்படுறீங்க... அதுவும் மலைப்பிரதேசம் எல்லாம் போறீங்க... ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக... அப்படியே அவங்களோட இரண்டாவது ஹனிமூனை எப்படி ஜாலியா கொண்டாடுவதுன்னு ப்ளான் பண்றதை விட்டுட்டு... இந்த நேரத்தில் தேவையில்லாமல் என்னைப் பற்றி...”


“வாயில் ஒண்ணு போட்டேன்னா... ஹனிமூனாம்? வயசுப்பொண்ணு பேசும் பேச்சைப் பார்!” என்றார் அவளின் பெரியம்மா காமாட்சி அதட்டலாக.


காமாட்சியும், கார்குழலியின் அன்னை மீனாட்சியும் இரட்டை சகோதரிகள். பத்து நிமிடம் முந்தி பிறந்ததால் அக்காவாகிப் போன காமாட்சி, படிக்கும் வயதிலேயே சந்தானத்தை காதல் மணம் செய்து கொண்டு சென்னையில் குடியேறிவிட... அந்தக் காதல் தம்பதியினருக்கு ஆசைக்கும், ஆஸ்திக்கும் ‘மஞ்சு’ என்ற ஒரே மகள். அவளையும் சென்ற வருடம் திருமணம் முடித்துக் கொடுத்துவிட... தற்போது அவரின் மகளும், மருமகனும் ஸ்டேட்ஸில் உள்ளனர்.


இளையவரும் கார்குழலியின் அன்னையுமான மீனாட்சி... திருச்சிக்கு அருகேயுள்ள கிருஷ்ணாவரத்தில் தமிழ் வாத்தியாரான தேவநாதனை மணந்து கொண்டு, பூர்வீக நிலத்தைப் பார்த்தபடி அங்கேயே தங்கிவிட்டனர். இவர்களுக்கு மூத்தவள் கார்குழலியை அடுத்து லவ, குசல் என்ற இரட்டையர்கள். தலைமுறைக்கு ஓர் இரட்டையர்கள் பிறப்பது என்பது அவர்களது குடும்பத்தில் வாடிக்கையான ஒன்று.


தன் மௌன விரதத்தைக் கலைத்துவிட்டு காமாட்சி பேசிய விதத்திலேயே, அவர் ‘பார்மு’க்குத் திரும்பிவிட்ட குஷியில் “கேட்டியாடி ப்ரியா இந்தக் கூத்தை? இருபத்திமூன்று வயதில் ஹனிமூனைப் பற்றிப் பேசக் கூடாதாம்... ஆனால் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் வயசு மட்டும் வந்திடுச்சாம்... இது எப்படி இருக்குத் தெரியுமா?” என்று மீண்டும் தன் பழமொழிப் புலமையைக் காட்ட வாயைத் திறந்தவளின் தலையில், ‘நங்’கென்று ஒரு குட்டு... தேங்காய் நார் போல் இருந்த அவளின் சுருட்டை முடியையும் தாண்டி ஆழமாக இறங்கியது.


அதை இறக்கியது... சாட்சாத் அவளுடைய பெரியம்மாவே தான்! வேறு யாருக்கு அந்தத் தைரியம் வரக்கூடும்?


“ஸ்...ஸ்... ஆ...ஆ...” என்ற அவளின் அலறல் ஆம்புலன்ஸின் சைரனாக மாறி, அங்கே கசகசவென்று பேசிக் கொண்டிருந்த அனைவரின் கவனத்தையும் அவள் புறம் இழுக்க... ஒரு நிமிடம் அந்த இடமே மயான அமைதி பூண்டது.


ஒரு கையைத் தலையில் வைத்து தேய்த்தபடி, கண்கள் அகல குழலி அமர்ந்திருந்த இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அந்த அப்பார்ட்மெண்ட் அன்பர்களுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வர, ‘பிற்பாடு’ ப்ரியாவோ ஒருபடி மேலே சென்று ‘விழுந்து... விழுந்து... சிரிப்பது எப்படி?’ என்று செயல்முறை விளக்கமாகவே காட்டிக்கொண்டிருந்தாள்.


பெரியம்மாவின் கையால் குட்டப்பட்ட குழலி... பசும்பாலைச் சுண்ட காய்ச்சினாற் போல் வெளிர் மஞ்சள் நிறம், சிறிய பிறை நெற்றி, மன்மதனின் வில்லாய் வளைந்த புருவங்கள், துறுதுறு கண்கள், மேடான கன்னங்கள், நேர்த்தியான மூக்கு, ஸ்ட்ராபெரியைப் பழிக்கும் அதரங்கள் என்று இப்படி வர்ணித்து அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் நூறு அழகிகளின் மத்தியிலும் கூட அவளைத் தனித்தன்மையுடன் தெரிய வைப்பது... அவளின் கருத்தடர்ந்த சுருள் கேசம் தான்!


யாரோ வேலை மெனக்கெட்டு பட்டன் அளவிலான சிறு சிறு வளையத்தை வெட்டியெடுத்து, அதை ரசனையுடன் ஒன்றோடு ஒன்று சங்கிலித் தொடர் போல் கோர்த்து, அவள் உச்சி முதல் நுனி வரை தொங்கவிட்டது போல் இருக்கும் அந்தக் கார்குழல்... பார்ப்பவரின் கண்களையும், நெஞ்சையும் கொள்ளை கொள்ளச் செய்யும். சும்மாவே அழகியாகத் தெரியும் அவளை, அசரடிக்கும் அழகியாக மாற்றுவது... அவளின் கறுத்தடர்ந்த சுருள்முடி தான்!


தலையைத் தேய்த்தபடி சிரிப்பு வந்த திசையில் சடக்கென்று திரும்பிய குழலி, ப்ரியாவை முறைத்துவிட்டு, பின் பெரியம்மாவை நோக்கி “நீங்க செய்தது அநியாயம், அக்கிரமம், அராஜகம் பெரியம்மா!’’ என்று மெல்ல பொருமியவள், நிமிடத்திற்குள் கண்ணகியாக மாறி ‘தேரா... மன்னா!’ என்பது போல், “இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்க ஒருவர் கூட இல்லையா?” என்று சூழயிருந்த அந்த அப்பார்ட்மெண்ட் அன்பர்கள் முன் பஞ்சாயத்து வைத்தாள்.


நாட்டாமை செய்ய ஒருவர் கூட முன் வராததால், அந்த வேலை அவளின் பெரியப்பா சந்தானத்திடம் சென்றது.


‘ஒரு நாள் முதல்வர்’ போல், ஒரு நாள் நாட்டாமையான குஷியில் மிதந்த சந்தானத்திடம் “நீங்க சொல்லுங்க பெரியப்பா... இவங்க மட்டும் பத்தொன்பது வயதில் உங்களைக் காதல் கல்யாணம் செய்து கொண்டு, வீட்டிற்குத் தெரியாமல் திருட்டுத்தனமாய் ஹனிமூன் போகலாம். ஆனா இருபத்திமூன்று வயதில்... நல்லா கேட்டுக்கோங்க பெரியப்பா! ஹனிமூனை... அதுவும் உங்க ஹனிமூனைப் பற்றி நான் பேசுவது கூடத் தப்பாம்! அதற்காக அவங்க குட்டிய குட்டில்... என் கழுத்தே இரண்டு இன்ச் கீழே இறங்கிவிட்டது!” என்று முறையிட்டாள்.


“போதும்... போதும்... நிறுத்துடி!” என்று லேசாக முகம் சிவந்தபடி அதட்டிய காமாட்சி, “உன் அம்மாவிற்கு... யாரிடம் எதைச் சொல்லணும்னு ஒரு விவஸ்தையே இல்லை இன்னும்!” என்று தன் தங்கை மீனாட்சியைக் கடிந்தார்.


“எதுக்கு அனாவசியமாக கிருஷ்ணாவரத்தில் இருக்கும் என் அம்மாவை இந்தப் பஞ்சாயத்துக்கு இழுக்கறீங்க? இந்த விஷயத்தை... அவங்க ஒண்ணும் சொல்லவில்லை!” என்றாள் வீராப்பாக.


‘அவளும் சொல்லவில்லை என்றால்... பின்னே யாராக இருக்கும்?’ என்று யோசனையோடு, தன் கணவனின் புறம் திரும்பி ஒரு பார்வை பார்த்தார் அந்த மாதரசி.


மனைவியின் உக்கிர பார்வையை உணர்ந்த சந்தானம், தன் நாட்டாமை பதவியை மறந்து “ஐய்யையோ... என்னை அப்படிப் பார்க்காதே காமூ... எனக்கும் இதுக்கும் எந்தவிதச் சம்பந்தமில்லை!’’ என்று கற்பூரம் ஏற்றி அணைக்காத குறையாக சத்திய பிரமாணம் செய்ய... இந்தச் செய்கை, இத்தனை நேரம் ‘உம்’மென்று இருந்த காமாட்சியின் முகத்தில் கூட லேசாகப் புன்னகையைத் தோற்றுவித்தது.


பெரியம்மாவின் இந்தச் சிறு புன்னகைக்காகத் தானே அவள் இந்தப் பாடு பட்டதே? அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி “வீணா ஏன் பெரியப்பாவை முறைக்கிறீங்க? இந்தப் பரம ரகசியத்தைச் சொன்னது... உங்க சீமந்த புத்திரி மஞ்சு தான்!’’ என்று அமர்த்தலாகக் கூறிவிட்டு... தன் உடன்பிறவா சகோதரியும், ஆத்ம தோழியுமான மஞ்சுவிடம் மானசீகமாக மன்னிப்பும் கோரினாள்.


“மஞ்சு? மஞ்சுவா... அவளுக்கு எப்படி?” என்று நம்ப மாட்டாமல் பெரியம்மா இழுக்க,


“அட போங்க பெரியம்மா... அவளோட பெயரே பி.பி.சி.! அவளுக்குத் தெரியாத ரகசியம் என்று... இந்த ஊர் உலகத்தில் ஒன்று உண்டா?”


“ரொம்ப கரெக்டா சொன்னடி குழலி!” என்று அவளுக்கு ஒத்து ஊதிய ‘பிற்பாடு’ ப்ரியா, தன் திருவாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் “ஆமாம்... உனக்கும் ஆன்ட்டிக்கும் என்ன பிரச்சனைன்னு... நீ இன்னும் சொல்லவே இல்லையே? ஏதாவது லக்கேஜை விட்டுட்டு வந்துட்டாங்களா என்ன?” என்றாள் கன அக்கறையாக.


‘இப்படிக் கவுத்திட்டியேடி... பாதகி!’ என்று மனதார அவளைச் சபித்தவள், “எதையும் விட்டுட்டு வரலைடி ப்ரியா... இனிமே தான் ஒரு ஐம்பதி நான்கு கிலோ லக்கேஜை விட்டுட்டுப் போகப் போறாங்க!’’ என்றாள் அலுப்புடன்.


“என்ன? லக்கேஜை... விட்டுட்டுப் போகப் போறாங்களா?” என்று தன்னால் முடிந்த மட்டும் வாயைப் பிளந்தாள் ப்ரியா.


“அம்மா பரதேவதை! உன் திருவாயை இப்படித் திறக்காதே... அப்புறம் வர்ற ட்ரெயின், இதுவும் ஒரு ப்ளாட்பார்முன்னு உள்ளே போயிட போகுது! அந்த லக்கேஜ்... சாட்சாத் நான் தான்டி!” என்றாள் தன்னைச் சுட்டிக் காட்டியபடி.


“என்னடி... குழப்புற? நாம தானே நாளைக்கு நீ கிருஷ்ணாவரத்துக்குப் போக, சோழனில் ஆன் லைனில் டிக்கட் புக் பண்ணினோம்? அப்புறம் உன்னை எங்கே விட்டுட்டுப் போறாங்க?”


“ம்ச்சு... அது நாளைக்குக் காலையில தானே?”


“அதுக்கு?” என்றாள் ப்ரியா விடாமல்.


“அடியே!” என்று உறுமியவள், “நீ ‘பிற்பாடு’ ப்ரியா இல்லடி... பாடாய்ப் படுத்தற ப்ரியா! ஏன்டி இப்படி என்னைக் கேள்வியா கேட்டு... என் உயிரை வாங்குற?” என்று எரிந்து விழுந்தவள், “நீ திருக்குறள் படிச்சிருக்கிறீயா? அந்த மனுஷன் ஒன்றரை அடியில்... உலகத்துக்கே கருத்து சொல்லிருப்பாரு! நீ என்னடான்னா... என் ஒவ்வொரு சொல்லுக்கும்... ஒரு பதவுரை, பொழிப்புரைன்னு... விட்டால் கோனார் உரையே கேட்ப போல இருக்கே?” என்றாள் அலுப்புடன்.


“என்னடி இப்படிச் சொல்லிட்ட? ப்ரெஞ்ச் என் செகண்ட் லாங்வேஜா இருந்தாலும் கூட... திருக்குறளையும், திருவள்ளுவரையும் நல்லா தெரியும்டி! ஆனா நீ சொன்ன... ஆங்... பதவுரை, பொழிப்புரை, கோனார் உரை... அவங்களை யாரையும் தெரியாது!” என்று வாயை விட, குழுமி இருந்தவர்கள் இம்முறை சிரிப்பை அடக்க வகை தெரியாமல், கொல்லென்று சிரித்து வைத்தனர்.


ஆனால் தமிழ் வாத்தியார் மகளுக்கு, இதை அப்படி நகைச்சுவையாக எடுக்க முடியாது ரோஷம் பொத்துக்கொண்டு வர, “நீயெல்லாம்... உன்னை எல்லாம்...” என்று பொருமியவள், “இப்படி இருந்தா... நீ இருக்கிற ஊரில்... பின்ன ஏன்டி சுனாமி வராது?” என்று ஒரு போடு போட்டாள்.


“என்னடி... சென்னையில் சுனாமி வந்ததுக்கே நான் தான் காரணம் போலப் பேசற? திருவள்ளுவரை விட இந்தப் பொழிப்புரை, பதவுரை, கோனார் உரை... எல்லாம் ரொம்பப் பெரியவங்களா?” என்று ஏழரையைக் கூப்பிடுகிறாம் எனத் தெரியாமல், அதற்கு வெற்றிலை பாக்கு வைத்து, அழைப்பு வேறு விடுத்தாள்.


அதற்குமேல் அவளின் பேச்சைப் பொறுக்க மாட்டாது, மேலே பாய்ந்து பிராண்ட போன குழலியை, காமாட்சி தான்தடுத்தி நிறுத்தினார்.


“ஏய்... சும்மா இருடி! அவளே அடுத்த ஸ்டேட்காரி... அவளை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்? முதலில் நம்மில் எத்தனை பேர் படித்து இருக்கிறோம்... அதைச் சொல்லு?” என்று சரியாய்க் கேட்டு, அங்கிருந்த அனைவரின் நெஞ்சிலும் பாலை வார்த்தார்கள்.


இல்லையென்றால் அவள் பாட்டுக்கு, “அறத்துப்பாலில் இருந்து ஒரு குறளைச் சொல்லுங்கள்!” என்று கேட்டு வைத்தால் என்ன செய்வது? அந்த மாதிரிக் கேட்க கூடிய ஆசாமி தான் அவளும்.


அப்படியும் அதை விட்டுவிடாது, “ஏய் ப்ரியா... கையில் தான் ஐ போன் இருக்கு இல்ல? நைட் குறட்டை விட்டுத் தூங்கி ஊரை எழுப்பாமல்... ஒழுங்கு மரியாதையா, நான் சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு படிச்சு வை! இல்ல டெல்லிக்கு வந்து உன்னை உதைப்பேன்!” என்று எச்சரிக்கை விடுத்தாள்.


அந்த ‘பிற்பாடு’ ப்ரியாவிற்கு, அப்பொழுது தான் இவள் இத்தனை நேரம் சொல்லிக் கொண்டிருந்த விஷயமே புரிய... மிரட்டலைப் புறம் தள்ளிவிட்டு “அடக்கடவுளே! உன்னை ஒரு நாள் நைட் தனியாக விட்டுட்டுப் போகத்தானா... ஆன்ட்டி டொய் டொய்யுன்னு... சோக கீதம் வாசிக்கிறாங்க?” என்று ராகமாக இழுத்து, கையால் வேறு சைகை செய்து காட்டினாள்.


ப்ரியா வாய் விட்டுக் கேட்டுவிட்டாள். அதுதானே தவிர, கூட இருந்தவர்கள் அத்தனை பேர் முகத்திலும் இந்தக் கேள்வியே தான் அப்பட்டமாகப் பிரதிபலித்தது.


அவர் தான் குழலியின் பெரியம்மா ஆயிற்றே... சும்மா விட்டு விடுவாரா?


“நாடு கிடக்கிற கிடப்பில்... ஒரு நாள் இரவு முழுவதும் எப்படி ஒரு வயசு பெண்ணைத் தனியாக விட்டுட்டுப் போறது... நீங்களே சொல்லுங்க சாந்தி?” என்று காமாட்சி, தன் கட்சிக்கு ஆள் பிடிக்க ப்ரியா அம்மாவிடம் கேட்டார்.


‘ஆனால் இந்தப் பொதுவிதி... குழலிக்கு எப்படிப் பொருந்தும்?’ என்ற கேள்வி அப்பட்டமாக சாந்தியின் முகத்தில் தெரிந்த போதும்... தன் மகள் அளவிற்கு அவர் பிற்பாடு இல்லையென்பதால், வாயை கப்பென்று பெவிக்கால் போட்டு மூடிக்கொண்டு “ஆமாம்... ஆமாம்!” என்று தலையை எல்லாப் பக்கத்திலும் ஆட்டி வைத்தார்.


வெளியே இருந்து பார்ப்பவருக்கு இது கொஞ்சம் அதிகப்படியாகத் தான் தோன்றும். ஆனால் காமாட்சி அப்படிப் பயந்ததிற்குக் காரணம்... கார்குழலியின் கொள்ளை கொள்ள வைக்கும் அழகும், அவளின் துடுக்குத்தனமான பேச்சு மட்டும் காரணமல்ல... அவளை மாதிரி மன தைரியமான பெண்ணைப் பார்ப்பது மிகவும் கடினம்.


இதுதான் தன் வாழ்க்கை என்று தீர்மானம் செய்து, அதை நோக்கிய பயணத்தில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில்... திடீரென்று அந்தப் பாதை அஸ்திவாரத்தோடு நொறுங்கி விழ... இவள் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்து மூலையிலேயே முடங்கியிருப்பார்கள். ஆனால் கார்குழலியோ தன் இழப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் முதலிலிருந்து ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்து, தான் எடுத்த துறையில் ஜெயக்கொடியையும் நாட்டி இருப்பவள்.


முன்பு அவள் இங்கு வந்து தங்கியிருந்த போது நிகழ்ந்தது போல், ஏதும் ஏடாகூடமாகி விடக்கூடாது என்பதால் தான்... குழலி சென்னை வந்தாலே இத்தனை எச்சரிக்கை!


“அப்படியே டி.வி. சீரியல்ல வர்ற அம்மா கேரக்டர் மாதிரி என்னமா சென்டிமெண்டாக டையலாக்க அவிழ்த்து விடறாங்கடி!” என்று ப்ரியா சிலாகித்துக் கூற,


“என்னடி நீ... சும்மா ட்ரெய்லருக்கே இப்படிச் சொல்லிட்ட? நான் ஊரிலிருந்து வந்த இந்த இரண்டு நாளா, ப்ரேக்கே இல்லாமல் மெகா சீரியல் பார்க்கிற மாதிரி இருந்தது... அவங்க சொற்பொழிவு! ஏன் மஞ்சு வேலை மெனக்கெட்டு யூ.எஸ்சிலிருந்து போன் பண்ணி, என்னை ஊருக்குப் போக வேண்டான்னு பாடம் படிச்சான்னு... இங்க வந்து பட்டதுக்குப் பிறகு தானே புத்தி வருது!” என்று மிகுந்த வருத்தத்துடன் மேடை ரகசியம் பேசினாள் குழலி.


“என் ப்ரெண்டைத் தேவையில்லாமல் இப்படிப் போட்டுக் கொடுக்கிறீயே சிலந்திவலை!” என்று வேண்டுமென்றே குழலிக்குப் பிடிக்காது என்று தெரிந்தும், அவளின் பட்டப்பெயரை வைத்துக் கூப்பிட்டாள் ‘பிற்பாடு’ ப்ரியா.


“அது என்னடி சிலந்திவலை?” என்று கேட்டார் எதிர் சீட்டில் அமர்ந்திருந்த மாமி.


“மழையால் ஷாட் சர்க்கியூட்டாகிப் பார்த்திருப்பீங்க... லோ ஓல்டேஜ்ல ஷாட் சர்க்கியூட்டாகிப் பார்த்திருப்பீங்க... ஆனா கர்லி ஹேரால ஷாட் சர்க்கியூட்டாகிப் பார்த்திருக்கீங்களா... பார்த்திருக்கீங்களா?” என்று சிங்கம் ஸ்டைலில், பதில் கேள்வி கேட்டாள் ப்ரியா.


“பெரியம்மா பக்கத்தில் இருக்கிற திமிரா? அடியே... டெல்லிக்கு டூர் தான்டி போற... என்னமோ அங்கயே குடித்தனம் நடத்த போறவ மாதிரிப் பேசற? நீ எங்க சுற்றி எங்க திரிந்தாலும்... கடைசி ஸ்டாப் உன் சொந்த ஸ்டேட் கூடக் கிடையாதுடி... வந்தாரை வாழ வைக்கும் இந்த சென்னை மாநகரம் தான்டி! அப்போ வட்டியும், முதலுமாய்த் திருப்பிக் கொடுக்கிறேன்... என் அருமை ‘பிற்பாடு’ ப்ரியா!” என்றாள் குழலி காட்டமாக.


கார்குழலியை எரிச்சல்படுத்தவும், வம்பிற்கு இழுக்கவும்... அங்கே, இங்கே என்று எங்கேயும் செல்ல தேவையில்லை. மிகச் சாதாரணமாக அவளுடைய சுருள்முடியைப் பற்றி ஒரு வார்த்தை... ஒரேயொரு வார்த்தை சொன்னால் கூட போதும். சிவப்பு கொடி காட்டப்பட்ட ஜல்லிக்கட்டு காளையாகச் சிலிர்த்துக்கொண்டு, சண்டைக்கு ஓடோடி வந்துவிடும் அளவிற்குத் தீராத பகை. அவள் பிறந்த அன்று முதல் இன்று வரை... ‘தலை பிரச்சனை’ அவளது ‘தலையான பிரச்சனை’யாக மாறியது தான் அதற்குக் காரணம்!


கருகருவென்று தலை நிறையச் சுருள்முடியுடன் பிறந்த தன் செல்ல மகளுக்கு, தமிழ் ஆசிரியரான தேவநாதன் ‘கார்குழலி’ என்று காரணப் பெயரிட்டு, எல்லாப் பிரச்சனைகளுக்கும் பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்தார்.


ஐந்து மாத பச்சிளம் குழந்தையான குழலி, ஒரு நாள் திடீரென்று கையில் நிற்காமல் ‘வீல் வீல்’ என்று அழுது ஓலமிட... வாத்தியார் குழந்தைக்கு என்னமோ ஏதோ என்று பதறிப்போய், ஊரே வண்டியைக் கட்டிக்கொண்டு மருத்துவமனைக்குப் படையெடுத்தது.


தனக்குத் தெரிந்த எல்லா வைத்தியத்தையும் செய்த பின்னும், ஏன் குழந்தை இப்படி அழுகிறது என்று கண்டே பிடிக்க முடியாது டாக்டர் விழி பிதுக்க... அதைவிட, ‘இதை எப்படி இந்தப் பாசக்கார ஊர் மக்களிடம் சொல்வது?’ என்ற பீதி வேறு அவர் நெஞ்சை அடைக்க... முப்பது வயதிலேயே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும் போலிருக்க... எல்லா வழி வகையும் செய்து கொண்டிருந்தவர், அந்தக் குழந்தையை ஓர் ஆற்றாமையுடன் பார்க்க... அப்பொழுது தான் கார்குழலியின் ‘ஜடாமுடி’யில் மாட்டித் துடித்துக் கொண்டிருந்த ஒரு சில்வண்டைக் காண... அவர் மட்டும் அல்ல, ஊரே அதிர்ச்சியில் உறைந்தது.


அதற்குப் பிறகு நடந்த நிகழ்வு தான்... அவள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பட்டப்பெயரை வாங்கிக் கொடுத்து, பள்ளிப்பாடத்தில் வராமலேயே அவளை எட்டு திக்கும் பிரபல்யமாக்கியது.

தொடரும்.....

அடுத்த பதிவு - திங்கள் கிழமை

DEAR READERS....

ரொம்ப நாளாக இந்த கதை படிக்க முடியவில்லை என்று கேட்டு கொண்டு பலருக்காகவும் மீண்டும் "என்னை மயக்கிய கார்குழலே" ஆரம்பித்து இருக்கிறேன்...

உங்கள் கருத்தை என்னை மயக்கிய கார்குழலே திரியில் பதிவிடவும்!!
 
Status
Not open for further replies.
Top