கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே...அத்தியாயம் 2

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff member
என்னை மயக்கிய கார்குழலே!!!

அத்தியாயம் - 2


அதாகப்பட்டது... ஊரார்கள் கூடி எவ்வளவு முயற்சி செய்தும், அவளது சுருட்டைமுடியில் இருந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வண்டை எடுக்க முடியாமல் போனதால்... அந்த ஹாஸ்பிட்டலே குழலிக்கு ‘குலதெய்வ’ கோயிலாக மாற... அங்கேயே மொட்டை அடித்து, பொங்கல் வைக்கப்பட்டது. விட்டால் அவள் தந்தை அந்தச் சம்பவத்தின் நினைவாக, ‘கார்குழலி’ என்ற அவளது பெயரை ‘வண்டார்குழலி’ என்று மாற்றியிருப்பார். ஏதோ அவரின் அம்மா அதற்கு ஒப்பாததால், இவள் தப்பிப் பிழைத்தாள்.


மொட்டை அடித்த கையோடு ‘சுபம்’ போட்டு இந்தக் கதை முடிந்திருந்தால்... எல்லாமே நன்றாக இருந்திருக்கும்! ஆனால் அந்தச் சம்பவத்தின் நினைவாக, இவளுக்கு ‘வண்டார்குழலி’க்குப் பதில் ‘சிலந்திவலை’ என்ற பட்டப்பெயர் நிலைக்க பெற்றது.


அவள் வளர வளர... அவளுடைய பிரச்சனைகளும் கூடவே பூதாகரமாக வளர்ந்து கொண்டே போனது. குழந்தையாக இருக்கும் போது வண்டைப் பதம் பார்த்த அந்தச் சுருள்முடி, இப்பொழுது அதன்மேல் வைக்கும் சீப்புகளைப் பதம் பார்க்கத் தொடங்கியது. எத்தனை விதமான சீப்புகள், கிளிப்புகள், ரப்பர் பேண்டுகள், ஹேர் பின்னுகள் அவளுடைய தலைமுடியில் மாட்டி சின்னாபின்னாமாயிற்று என்று கணக்கு வழக்கில்லை.


“உன்னைப் போலவே... உன் முடியும் அடங்காப்பிடாரியாகத் தான் திரியுது!” என்று அவளுடைய தாயும், “உங்கப்பன்... உனக்குச் சீப்பிற்குச் செலவு செய்யும் காசைச் சேர்த்து வைத்திருந்தால்... இந்நேரத்திற்குப் பத்து பவுனாவது வாங்கியிருக்கலாம்!” என்று பாட்டியும் தாளம் தப்பாது சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டுப் புளித்துப் போனது அங்கிருக்கும் நாய், பூனைக்கு மட்டுமல்ல... ஆட்டுக்கல்லுக்கும், அம்மிக்கல்லுக்கும் கூடத் தான்!


அது மட்டுமா? தலைக்குக் குளித்தால் சட்டென்று காயாது. அப்படியே காய்ந்து விட்டாலும்... எழுபதுகளில் சினிமா ஹீரோயின்கள் வைத்திருக்கும் விக்கு போல முன்னால் ‘பம்’ என்று நான்கு இன்ச் எகிறிக்கொண்டு தான் நிற்கும்.


கிராமப்புறங்களில் புழக்கத்தில் இருக்கும் பூரான் சடை, பை சடை, தாழம்பூ சடை என்று எதையும் நினைத்து கூடப் பார்த்ததில்லை. ஆதைவிட, அவள் வீட்டுத் தோட்டத்தில் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் பூவைத் தொடுத்து ஆசையாக ஒரு சரம் பூ கூட வைக்க முடியாத அவலத்தை எங்கே சென்று சொல்வது?


இவை எல்லாவற்றையும் கூடப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பள்ளித் தோழிகளும், கிராமத்து வாசிகளும் “ஏய் குருவிக்கூடு... சுருளாயி... சுருட்டை... பரட்டை...” என்று விதவிதமாக வாய்க்கு வந்த பெயரை வைத்து அழைப்பதும், தன் தலைமுடியை வைத்து ஊர் உலத்தில் இருக்கும் அனைவரும் ஓயாமல் கேலியும், கிண்டலும் செய்வதைத் தான் அவளால் ஜீரணிக்கவே முடிவதில்லை.


ஆனால் கார்குழலி அறியாத உண்மை என்னவென்றால்... அவளுடைய சந்திர வதனத்திற்கு, அறுபடாத சங்கிலித்தொடர் போலிருந்த கருத்தடர்ந்த சுருள் கேசம், வெண்சங்கிலிட்ட கரும்பொட்டு போல் பளிச்சென்று, பார்ப்பவர் மனதையும் கண்ணையும் கொள்ளை கொண்டு போவதை அவள் அறியாள்! எடுத்துச் சொன்னாலும்... ஏற்றுக்கொள்ள மாட்டாமல், அதன்மீது அப்படியொரு தீராத பகையை வளர்த்துக்கொண்டு இருந்தாள் அவள்.


“உங்க தங்கச்சிப் பொண்ணு பேசும் பேச்சைக் கேட்டீங்களா ஆன்ட்டி? இவள் ஒருத்தியை விட்டா போதும்... நாம டூரிலிருந்து திரும்பி வருவதற்குள்... நம்ம மொத்த அப்பார்ட்மெண்ட்டையே விலைபேசி விற்று விடுவாள். இவளுக்காகப் போய் நீங்க பயப்படுறீங்க? அப்படியே... ஏதோ ஒரு தேசிங்கு ராஜா கண்ணு தெரியாமல் தப்பித் தவறி, ஆள் மாற்றி இவளைக் கடத்திவிட்டாலும் கூட... நேற்று மியூசியத்தில் வைக்கப்பட வேண்டிய இவளின் போனை, கண் தெரியாமல் ஆட்டய போட்ட... அந்தக் கட்டம் போட்ட சட்டைக்கு ஆன கதி தான்... அவனுக்கும் ஆகும்!” என்று நீட்டி முழக்கினாள் ப்ரியா.


முதல் மாடி மாமி “ஏன்டிம்மா... அந்தக் கட்டம் போட்ட சட்டைக்கு என்னாயிடுத்து?” என்றாள் சுவாரசியமாக.


ஆர்வக்கோளாறாய் வாய் திறந்த ப்ரியாவைப் பார்த்து, குழலி ஒரு விரலால் எச்சரிக்கை செய்ய... அதைக் கண்டு விட்ட காமாட்சி “ஏய் குழலி... என்னத்தடி பண்ணித் தொலைச்ச?” என்றார் சிறிது பதட்டமாக.


அவரின் கடுமையான பார்வையைத் தவிர்த்து, “அது ஒண்ணுமில்லை பெரியம்மா!” என்று சொல்லியபடியே, “ஷ்... ஷ்... வாயைத் திறந்த... கொன்னுடுவேன்!’’ என்று ப்ரியாவை மிரட்டியதோடு நில்லாமல், குழலி அவளின் வாயை வேறு மூட... சூழ இருந்தவர்களுக்கு அதுவே சுவாரசியத்தைத் தூண்டியது.


கஷ்டப்பட்டுத் தன்னை விடுவித்துக் கொண்ட ப்ரியா, “என்னது ஒண்ணுமில்லையா... அடிப்பாவி!” என்று அலறியவள், “இதை நீங்க கேட்டுட்டு... அப்புறம் சொல்லுங்க ஆன்ட்டி! இந்தக் கடன்காரி... நேற்று சாயந்திரம் சரியா நான் ஆபிஸ் விட்டுக் கிளம்பும் நேரத்தில் போன் பண்ணி, கொஞ்சம் தி.நகரிலிருக்கும் ஏ.ஜி. மருத்துவமனைக்கு வரச் சொல்லும் போதே... நான் சுதாரிச்சிருக்கணும்! பதட்டத்தில் யாருக்கு என்னமோ... ஏதோன்னு பயந்து, அலறி அடித்துக்கொண்டு லாரி கேப்பில் உயிரைப் பணயம் வைத்துப் போய்ச் சேர்ந்தா... அங்க போன பிறகு தான் தெரிந்தது... அது ஏ.ஜி. மருத்துவமனைக்கு இல்ல. அதுக்குப் பக்கத்தில் இருக்கும் பி.கே. ஷாப்பிங் மாலுக்குன்னு! இவளோட வானர சேனைக்கும், ஊருக்கும்...”


“அது யார்டிம்மா... வானர சேனை?” என்று இடைபுகுந்து சந்தேகம் கேட்டார் மாமி.


“என்ன மாமி... அதுக்குள்ள மறந்துட்டீங்களா? போன வருஷம் சம்மர் வெகேஷனில், நம்ம பார்க்கில் இருக்கும் ஊஞ்சலில் இரண்டு குட்டி குரங்குகள் எப்போதும் தலைகீழா தொங்கிக் கொண்டே இருந்ததைப் பார்த்து... இதுகள் யார்ன்னு என்னிடம் கேட்டீங்களே... ஞாபகமில்லை?”


“ஓ! நீ இவளோட தம்பிகளைச் சொல்லுறீயா?” என்று மாமி இழுக்க,


“ஆமாமாம்... மாமி! அந்தத் தொம்பிகளைப் பற்றித் தான் சொல்லுறேன்!” என்று முடித்து வைத்தாள் ப்ரியா.


“ஏய்... என் தம்பிகளை அப்படிச் சொல்லாதே டி!”


“தோடா... வானர சேனையைப் பற்றிச் சொன்னவுடன், வானர சேனையின் படைத்தலைவிக்கு என்னமாய்க் கோபம் பொத்துக்கொண்டு வருது பாரு? கிருஷ்ணாவரத்தில் எல்லார் வீட்டிலும் இப்படித்தான் இருப்பாங்களா?”


அவள் பதில் கூறும் முந்திக்கொண்ட மாமி, “இனி குழலியோட ஊர் பேரு கிருஷ்ணாவரமில்லை... கிஷ்கிந்தாவரம்!” என்று தன் இராமாயணப் புலமையைக் காட்ட, அந்த ஊருக்கு ட்ரெயினிலேயே புது நாமகரணம் சூட்டப்பட்டது.


“ம்ம்... மாதவன் கோவில் கொண்டிருக்கும் எங்க ஊரில் பிறக்க, மாதவம் செய்திருக்கணும் மாமி! நாங்க வா...னரங்கள் இல்லை... வா...னவர்களாக்கும்!” என்று குழலி சொல்ல, ‘பிற்பாடு’ ப்ரியா விழி பிதுங்க விழித்தாள்.


“அடி சமத்து... அவள் குரங்கிலிருந்து, அவங்களை கடவுள் ஆக்கிவிட்டாள் டி!” என்று மாமி சிரிப்புடன் கோனார் உரை போடாத குறையாக விளக்க... புரியாத பல பேருக்கு அப்போது தான் அந்த வித்தியாசம் புரிய, இம்முறை இன்னும் சத்தமாகச் சிரித்தனர்.


“தமிழ் வாத்தியார் மகளில்லை... அப்படித்தான்!”


“என் ஊரைப் பற்றி அப்படிப் பேசினா... பார்த்துக்கொண்டு சும்மா இருப்பேனா? அங்கே கிடைக்கும் சுத்தமான காற்று, தண்ணீர்...”


“அம்மா பரதேவதை!” என்று அவளுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டாள் ‘பிற்பாடு’ ப்ரியா.


“அடியேய்... நானும் நீ ஆரம்பித்த கதையைச் சொல்வேன்னு பார்க்கிறேன்... ‘பில்டப்’பிலேயே பில்டிங் கட்டுறீயே தவிர... அதை முழுதாகத் தான் சொல்லேன்டி ப்ரியா!” என்று எரிச்சல்பட்டாள் இரண்டாம் மாடி பிங்கி.


“இடையில் பேச்சு கொடுத்தால்... நான் எப்படிச் சொல்வதாம்? எங்க விட்டேன்... ஆங்... அவள் கிருஷ்ணாவரத்திற்குக் கிளம்பினால்... இப்படித்தான் ஊருக்கே வாங்கிக்கொண்டு போவாள் என்பதைச் சுத்தமாக மறந்து, அந்த போன்காலை நம்பிப் போனேனா... ஆனா அங்க போன பிறகுதான் என் மரமண்டைக்குப் புரிந்தது... அவள் வாங்கிக் குவிந்த சாமான்களை, என்னை ‘கல்யாணி’யாக நினைத்து...”


“இரு... இரு... அது யாருடி கல்யாணி?” என்று இடையில் புகுந்தாள் பிங்கி.


அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு நின்ற குழலியின் மேல் ஓர் எரிக்கும் பார்வையைச் செலுத்திவிட்டு, “உனக்குத் தெரியாதா... அது இவள் வளர்க்கும் கழுதையின் பெயர்! அந்த கல்யாணி தான்... இவளோட செல்ல பிராணி!” என்றாள் விளக்கமாக.


“வாட்? யூ மீன்... அ டாங்கி?” என்று கேட்டபடி சிரித்தாள் பிங்கி.


“ம்...ம்...ம்... ஆனா ஆச்சரியம் என்னன்னா... அந்தக் கழுதை இவள் சொல்வதை அட்சரம் பிசகாமல் அப்படியே செய்யும்!”


“இஸிட்?” என்று வாயைப் பிளந்தாள் பிங்கி.


“இதுக்கே வாயைப் பிளந்தால் எப்படி... அதே ப்ரெண்டு லிஸ்ட்டில் தான் நீயும், நானும் இருக்கிறோம் தெரியுமா?” என்று ப்ரியா முடிக்க, ‘இப்படிக் கூட ஆச்சரியத்தை வெளிப்படுத்த முடியுமா?’ என்று எண்ணுமளவிற்கு முகபாவத்தை அந்த பிங்கி காட்டினாள்.


“என்னடி... இப்ப போய் சிவாஜி செத்துட்டாராங்கிற மாதிரி ரியாக்ஷன் கொடுக்கிறாய்? இவளோட பெட் டாங்கி என்பது நாடு அறிந்த ரகசியம்! ப்ரியாவை இப்போ இந்தக் கதையைச் சொல்ல விடு!” என்று கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் குரல் கொடுத்தார்.


மீண்டும் தான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள் ப்ரியா.


“பி.கே. மாலைச் சுற்றித் திரிந்ததில்... ரொம்பக் களைத்து, ஒரு கேப்பசினோ வாங்கிட்டு வான்னு இவளை அனுப்பிட்டு... ஒரு இரண்டு நிமிஷம் கூட உட்கார்ந்திருக்க மாட்டேன்... திடீரென்று என்னைச் சுற்றி இருந்தவங்க பரபரப்பாக எட்டிப் பார்க்க... என்னாச்சுன்னு திரும்பிப் பார்த்தா... ப்ளாஸ்டிக் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கிட்ட இருந்து அதைப் பிடுங்கி... காபி ஷாப்பில் அலங்காரத்திற்காக வைத்திருந்த கலர் கூழாங்கல்லை அதில் நிரப்பி, அசால்டா டேபிள் மேல் ஏறி யாரையோ பார்த்துச் சுட...


இவளின் கூழாங்கல்லால் சரமாறியாக பின் மண்டையில் அடி வாங்கிய, இவளின் போனைத் திருடிய அந்தக் கட்டம் போட்ட சட்டை... வலி தாங்காமல் ‘அம்மா... ஆ... ஆ... ஆ’ன்னு கத்தியவன், ‘என்னைக் காப்பாத்துங்க... காப்பாத்துங்க... போலீஸ்... முதல்ல... யாராவது போலீஸைக் கூப்பிடுங்க’ன்னு அந்தத் திருடன் அலறியபடி... உயிர் பிழைத்தால் போதும்னு அங்க இருந்த செக்யூரிட்டியின் பின்னாடி போய் ஒளிய... திருடனே போலிஸைக் கூப்பிடுவதையும், செக்யூரிட்டியிடம் போய் சரண்டர் ஆனதையும் பார்த்த... அங்க இருந்த எல்லோர் முகத்தையும் பார்க்கணுமே!”


“இங்க யாராவது கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தீங்கன்னா... கொஞ்சம் ஜாக்கிரதை!” என்று சந்தானம் அப்பாவியாகக் கேட்டு, அனாயசமாய் ஒரு சிரிப்பலையை எழுப்பிவிட்டார்.


“பெரியப்பா... நீங்களுமா?” என்று குழலி கூவியது யார் காதிலும் விழாமல் போனது.


விழாமல் போனது குழலியின் கூக்குரல் மட்டுமல்ல... வலுக்கப் பெய்யத் தொடங்கிய மழையும் தான்! அந்த டூ டயர் ஏ.ஸி. கோச்சில் பேச்சு சுவாரசியத்தில், அதை யாரும் கவனிக்கவும் இல்லை.


காமாட்சி இதைப்பற்றி மேலே கேட்க வாயைத் திறக்கவும், ட்ரெயின் கிளம்புவதற்கான மணியடிக்கவே... அவசரமாக எல்லோருக்கும் ஒரு “ஹாப்பி ஜெர்னி”யை உதிர்த்திவிட்டு, ‘தப்பித்தோம்... பிழைத்தோம்!’ என்று வேகமாகக் கீழே இறங்கிய பின்னர் தான், மழை நன்றாகப் பொழிந்து கொண்டிருப்பதையே உணர்ந்தாள் குழலி.


‘நல்லகாலம்! பெரியம்மா இதைப் பார்க்கவில்லை. இல்லையென்றால், அதற்கும் ஒரு ஒப்பாரி வைத்திருப்பார்கள்!’ என்று நினைத்தபடி, ப்ளாட்பார்மில் ஆங்காங்கே குட்டையாகத் தேங்கியிருந்த நீர் தன் சிகப்பு நிற சுடிதாரில் படாதவாறு கவனமாக ஒதுங்கிச் சென்றாள்.


டூர் செல்வதற்குத் தேவையானவற்றை பேக் செய்து, அவர்களை வழியனுப்ப தான் அவள் சென்னை வந்ததே! இந்த உண்மையைச் சொன்னால் வர ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுவும் காய்ச்சலுடன் வந்தாள் என்று தெரிந்தால், கேட்கவே வேண்டாம்! அதனால் தன் ஜுரத்தை மறைத்து விட்டு, நேரத்திற்கு மாத்திரையைப் போட்டுக்கொண்டு, வேலை விஷயமாக வந்ததாகப் பொய் சொல்லிவிட்டாள்.


இன்று அவள் இந்தியா மற்றும் வெளிநாட்டில் கிளைகள் கொண்ட புகழ்பெற்ற நகைக்கடையில் ஜுவல் டிசைனராக இருக்கிறாள் என்றால்... அது அவளுடைய திறமையால் மட்டும் வந்துவிடவில்லை. ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தரியும் கவிபாடும்!’ என்று சொல்லக்கூடிய கம்ப நாட்டாழ்வாருக்கே... அவரின் திறமையை அறிந்து சடையப்ப வள்ளல் ஆதரித்தால் தானே, அவரின் கவி மேன்மையை இன்று உலகமே கொண்டாடுகிறது? அப்பேற்பட்ட ‘கவிச் சக்கிரவர்த்தி’ கம்பருக்கே இந்தக் கதி என்றால்... இவள் எம்மாத்திரம்?


அதுவும் அவள் தன் எதிர்காலமே சூன்யமாகிவிட்டது என்று மனதொடிந்து உட்கார்ந்திருந்த நேரத்தில், அவளுடைய திறமையைக் கண்டு, அவள் வாழ்விற்கே புத்துயிர் அளித்த பெருமை... அவளுடைய பெரியம்மா, பெரியப்பாவையே சாரும்!


அவளுடைய வேலை விவரம் பற்றி வெளியே சொன்னால்... “எனக்கும் ஒரு டிசைன் செய்து கொடு” என்பதும்... அப்படித் தனிப்பட்ட முறையில் வெளியே யாருக்கும் டிசைன் செய்து தருவது கம்பெனியோடு போட்டிருக்கும் ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று சொல்லி அதை மறுத்தால்... “ரொம்பவும் அலட்டிக் கொள்கிறாள்!” என்ற பேச்சும் கிளம்பியது.


“எதற்கு வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொள்ளணும்... அப்புறம் குத்துதே... குடையுதேன்னு அலறணும்!” என்ற பாட்டி, “யாரிடமும்... எதுவும் சொல்ல வேண்டாம்!” என்று சொல்லிவிட... ஒவ்வொருத்தருக்கும் இனி எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை என்பதாலேயே, குழலியும் பரிபூரணமாகச் சம்மதித்தாள்.


மற்றவர்களைப் போல் இது ஒரே இடத்திலிருந்து செய்ய வேண்டியதில்லை என்பது இப்பணியின் கூடுதல் வசதி என்பதால்... எப்போது தேவைப்படுகிறதோ அப்போது சென்னை வந்து அவளுடைய படைப்புகளைச் சமர்ப்பித்து விட்டோ, இல்லை திருத்தங்கள் செய்து விட்டோ போவாள். அதனால் தான் காமாட்சியை எளிதாகச் சமாளிக்க முடிந்தது.


அவர்களை ட்ரெயினில் ஏற்றிவிட்டு, “எக்காரணத்தைக் கொண்டும்... தனியாக ஆட்டோவிலோ, இல்லை கால் டாக்ஸியிலோ போகக்கூடாது. பஸ்சில் தான் செல்ல வேண்டும்!” என்று கறாராகச் சொன்ன பெரியம்மாவா... அவர்களை வழியனுப்ப இவளை வர அனுமதிப்பார்கள்?


ஏதேதோ யோசனையுடன் வந்தவள், யாரின் மீதோ முட்டிக்கொள்ள... “ஸ்ஸ்... சாரி!” என்று மன்னிப்பு கோரியபடி, அன்னிச்சையாகப் பின்னே நகர்ந்து விழியை உயர்த்திப் பார்க்கும் முன்... அவனிற்கே உரிதான விலையுயர்ந்த ஆப்ட்டர் ஷேவ்வின் மணம் அவள் நாசியை நிரப்ப... உள்ளூணர்வு ‘இது... சூர்யபிரகாஷ்!’ என்று கட்டியம் கூறியது.


வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய அம்மாவின் குரல் கேட்ட மாத்திரத்தில், எங்கிருந்தாலும் ஓடி வந்து கால்ளைக் கட்டிக்கொள்ளும் குழுந்தையைப் போல... அந்தப் பெயரை நினைத்த மாத்திரத்திலேயே மெல்லிய மின் அதிர்வு உடம்பில் பாய, அவள் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு ரோமமும் அவனின் வரவை உணர்ந்து எழுந்து நிற்க... கண்களில் ஆர்வமும், ஆசையும் போட்டி போட... தன் விழிகளை மெல்ல உயர்த்தினாள் குழலி.


பத்து நாட்கள் கொலைபட்டினி கிடந்தவனுக்கு, தலைவாழை இலையிட்டு அறுசுவை உண்டி படைத்தால்... எப்படி ஆனந்த பெருவெள்ளத்தில், எதை உண்பது என்று புரியாமல் தடுமாறுவானோ... அதுபோல் குழலியின் கண்கள் தடுமாறின!


கர்ணனின் கவசகுண்டலம் போல் எப்பொழுதும் அவனின் நீண்ட கால்களை ஒட்டிப் பிடித்திருக்கும் டிசைனர் ஜீன்ஸ், இன்றும் தன் பணியைச் செவ்வனே செய்து கொண்டு இருக்க... அவனின் மஞ்சள் நிற முழுக்கை டி-சர்ட்டில் ‘ஐ யம் தி பாஸ்’ என்ற வாசகம் அவனுடைய குணத்தைத் தெள்ள தெளிவாகப் பிரதிபலித்தது மட்டுமல்லாமல், அங்கே இருந்த திரண்ட தோள்களையும், படர்ந்த மார்பையும் எடுத்துக் காட்டியது.


அவனின் டி-சர்ட் நிறத்திற்கு மேட்சிங்காக அதே மஞ்சள் நிறத்தில் லெதர் பெல்ட்டும், ஷூவும் அணிந்து கொண்டு, ரயில் நிலையத்திற்கு வந்தது போல் அல்லாமல், ஏதோ போட்டோ ஷூட்டிற்கு வந்தவனைப் போல் நின்றவனை... குழலி தன் தலை உயர்த்தி அவன் முகத்தைப் பார்க்க விழைய...


அப்பொழுது தான், அவனும் தன் சிக்ஸ் பாயிண்ட் டூ உயரத்திற்கு லேசாகக் குனிந்து அவளை நோக்கினான்.


அவனின் கண்களை எதிர்கொண்ட அந்த நொடி, வழக்கம் போல் அவளை வசீகரித்தது... அவனின் மலைத்தேனை நினைவுபடுத்தும் தேன் நிற விழிகள்!


எதிர்பாராத இந்தச் சந்திப்பினால் அவளின் நிலாமுகத்தில் அழகான புன்னகை மலர, ஆர்வமாகப் பேச வாயைத் திறந்தவள்... முதலில் விக்கித்து, பின் குழம்பிப் போய் நின்றாள். காரணம்... அங்கே சூர்யபிரகாஷ் நின்ற விதம் அப்படி!


தொடரும்....


DEAR READERS…

உங்கள் கருத்துக்களை என்னை மயக்கிய கார்குழலே கருத்து திரியில் பதிவிடவும்.
 
Status
Not open for further replies.
Top