என்னை மயக்கிய கார்குழலே!!!
அத்தியாயம் - 4
‘சுடும் வாணலிக்குப் பயந்து, எரியும் நெருப்பில் விழுந்த மாதிரி... அந்த துச்சாதனர்களுக்குப் பயந்து, இந்த துரியோதனனிடம் மாட்டிக்கொண்டானே! அங்கேயாவது மனித நடமாட்டம் இருந்தது. இந்த கிராதகனை நம்பி காரில் ஏறியதற்கு... பேய்மழையில் இப்படித் தன்னந்தனியாக விட்டுவிட்டானே!’ என்று மனம் குமுற, வாய் விட்டு அவனைக் கண்டபடி சபித்தாள்.
கொட்டும் மழையில் எந்தப் பக்கம் போகலாம் என்று புரியாமல் பரிதவித்துக்கொண்டு இருக்கும் வேளையில், கண்களைக் கூசும்படியான வெளிச்சத்துடன் சீறிப்பாய்ந்து அதிவேகமாக ஒரு வெளிச்சம் வர... அது என்ன என்று உணரும் முன், அவளை உரசியபடி அந்த கார் வந்து நின்றது.
‘எந்த தேசிங்கு ராஜாவோ என்னைக் கடத்த தான் போறான்... போலயே... கடவுளே! அவசரத்திற்குத் தற்காத்துக் கொள்ள கூட... கையில் ஒன்றும் இல்லையே!’ என்ற எண்ணம் விபரீதமாக மனதில் தோன்றி, கிலியை உண்டாக்கியது.
எதைப் பற்றியும் யோசிக்காமல் அங்கிருந்து தப்பி ஓட வேகமாகத் திரும்பி, அவள் காலை எடுத்து வைத்த அடுத்த நொடி “ம்மா...ஆஆஆ...” என்று அலறலோடு, குட்டை போல் தேங்கிருந்த மழை வெள்ளத்தில் நிலை தடுமாறி ‘பொளிச்’ என்ற சத்தத்துடன் தண்ணீரில் மல்லாக்க விழுந்தாள் கார்குழலி.
“குழலி!” என்று கூவியபடி, காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தான் சூர்யபிரகாஷ்.
காரின் ஒளி கொண்டு சகதியில் எழ முடியாமல் ‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’யாகக் கிடந்த குழலியைப் பார்த்தவுடனே, பயப்படும்படியாக எதுவும் அடிபட்டு இருக்காது என்று யூகித்தவன், “உங்க ஊர் பழக்கத்தில்... தண்ணீரைக் கண்டதும் காவேரின்னு நினைத்து, குளிக்கக் குதித்து விட்டாயா ஸ்ப்ரிங் முடி? இது ஆறும் இல்லை... குளமுமில்லை... ஏன் குட்டை கூட இல்லை! இது சாக்கடைத் தண்ணி... நீச்சல் அடித்தது போதும். எழுந்திரு!” என்று இடக்காகப் பேசியபடியே குனிந்து கையை நீட்டினான்.
‘என்னது... நீச்சலா? நான் இங்கே சேற்றில் விழுந்து எழ முடியாமல், இருபத்திமூன்று வயதில் தவழ்ந்து கொண்டிருக்க... இவனுக்கு இது வேடிக்கையா இருக்கா?’ என்ற கடுப்புடன் அவனது கையை அலட்சியம் செய்தவள், “கீழே தள்ளுவதையும் தள்ளி விட்டுட்டு... இப்ப எதுக்குக் கையை நீட்டுறீங்க?” என்று எரிந்து விழுந்தவள், கீழே கிடந்த தன் ஹேண்ட் பேகைத் துழாவி எடுத்துக்கொண்டு, மெல்ல தட்டுத் தடுமாறி எழ முனைந்தாள்.
குழலியின் உச்சந்தலையில் கிடந்த சருகைக் கண்டவனுக்குச் சிரிப்பு பொங்கிக் கொண்டு வர, வெகுவாகச் சிரமப்பட்டு அதை அடக்கியவன் “எங்காவது அடிபட்டிருக்கா?” என்றான் கன அக்கறையாக.
“ஏன்? அடியேதும் படலைன்னு சொன்னா... திரும்பவும் தள்ளி விடப் போறீங்களா...ஆ... ஆ...ஆ....” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே... அவள் தலையில் அவன் வேகமாகத் தட்ட, இதைச் சற்றும் எதிர்பாராத குழலி, மீண்டும் நிலை தவறி அப்படியே பின்னால் சரிய, இம்முறை கீழே விழாமல் அவள் இடையோடு தாங்கிப் பிடித்தான் சூர்யா.
அவன் அணிந்திருந்த சட்டையை மீறி வந்த கதகதப்பை அவளின் கைகள் உணர, ஊசியாய்த் துளைக்க வேண்டிய மழை கூட பூத்தூவலாய் தெளிக்க... அந்த நுண்ணுர்வு அவளை மூச்சு முட்டி தடுமாறச் செய்தது.
எங்கிருந்தோ வந்த ஒரு காரின் ஒளி அவளை மீட்க, தீச்சுட்டது போல் கையை உதறிக்கொண்டு இம்முறை ஜாக்கிரதையாகப் பின்னே நகர்ந்தவள் “எவ்வளவு திமிர் இருந்தால்... என்னைத் தலையில் அடிப்பீங்க?” என்றாள் ஆவேசமாக.
“இதைத்தான் நல்லதுக்கே காலம் இல்லைன்னு சொல்லுவாங்க போல! நான் ஒண்ணும் உன் தலையில் அடிக்கவில்லை. உன் தலை மேல் பச்சை நிறத்தில் ஒரு பெரிய தவளை உட்கார்ந்திருந்தது. அதைத்தான் தட்டிவிட்டேன்! சந்தேகம் இருந்தால்... அங்கே பார்!” என்று அவன் கையைக் காட்டினான்.
நிஜமாகவே அங்கே ஒரு பச்சைநிற தவளை ‘எங்கே தன்னைக் கபளீகரம் செய்து விடுவார்களோ?’ என்ற பதட்டத்துடன், இவர்களைத் தன் முட்டைக்கண்களால் பார்த்துக்கொண்டு இருந்தது!
அதைப் பார்த்துவிட்டு “ஐய்யோ!” என்று அவள் அலறிய அலறலில், அடாத மழையையும் தாண்டி லேசாக பூமி அதிரத்தான் செய்தது.
அவளின் செய்கையைக் கண்ணுற்றவனுக்கு அதற்கு மேலும் தன் சிரிப்பை அடக்கமுடியாது போக, வாய் விட்டுச் சிரித்தான்.
அதன் பலனாக இவளின் முறைப்பை வாங்கிக்கொண்டவன், தன் இரண்டு கையையும் மேலே உயர்த்தி “உன்னை அந்தப் பச்சைநிற தவளையிடம் இருந்து காப்பாற்றுவதாகத் தான் நினைத்தேன். ஆனால் இப்பத்தான் புரியுது... அந்த தவளையைத் தான், உன்னிடமிருந்து காப்பாற்றி இருக்கேன் போல! இப்ப நீ அலறிய அலறலில்... அந்த தவளைக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்!” என்றான் நக்கலாக.
கண்ணைத் திறக்க முடியாதபடி முகத்தில் அடித்த மழைநீரைத் துடைத்தவள், “பாம்பைப் பார்த்தே பயப்படாத மறத்தமிழச்சி நான்! ஒரு சின்ன தவளையைப் பார்த்துப் பயந்துடுவேனா?” என்றாள் எரிச்சலாக.
“ஓ... அப்படியா?” என்று அநியாயத்திற்கு ஆச்சரியப்பட்டவன், “அப்போ, இப்ப ஆ...ன்னு அலறினீயே... அது... கொட்டும் மழையில் நீ பண்ணும் சாதகமா?” என்றான் இடக்காக.
“பாதகமா நீங்க எதுவும் பண்ணாமல், என்னைக் காப்பாற்றியதா சொன்னீங்க பாருங்க... அதைக் கேட்டு அதிர்ச்சியில் கத்தினேன்!”
“உன் கையால் குண்டடி பட்டும், உனக்கு உதவி செய்ய முன் வந்தேனே...” என்று பேசிக்கொண்டே போனவனை இடையில் நிறுத்தியவள்,
“இன்னும் ஒரு முறை... நான் வைத்த குறி தப்புன்னு சொன்னீங்க... அப்படியே... அப்படியே...” என்று சுற்றும் முற்றும் பார்த்தவள், “நீங்க உயிரைக் கொடுத்து காப்பாற்றிய அந்த தவளையைப் பிடித்து... உங்கள் வாயிலேயே விட்டுடுவேன்!” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், ‘இந்த தவளை எங்கே போய்த் தொலைந்தது?’ என்று அதைக் கண்களால் வேறு தேடத் தொடங்கினாள்.
கார்குழலி வெறும் வாய்ச்சொல் வீராங்கனையாக ஒரு நாளும் இருந்தது இல்லை. அவளைப் பற்றி அறிந்தவர்கள், தப்பித் தவறி கூட பெட் வைக்க முன் வர மாட்டார்கள். ஏனெனில் சொன்னதைச் செய்து காட்டும் ரகம் அவள்.
“எனக்கு சைனீஸ் உணவு பிடிக்காது! உனக்கு இஷ்டம் என்றால்... நீ சாப்பிடு. ஐ டோண்ட் மைண்ட்!” என்று எப்பொழுதும் போல் மிஸ்டர். தெனாவட்டாகப் பதிலளித்தவன், தொடர்ந்து “பெருசோ, சின்னதோ... உதவி என்று செய்தால்... முதலில் நன்றி சொல்ல கற்றுக்கொள் ஸ்ப்ரிங் முடி!” என்றான் நக்கலாக.
“ம்ம்ம் நன்றியா... உங்களுக்கா... நானா? வெறும் நன்றி நவிலுதல் போதுமா? இல்லை, தெருத் தெருவாக... ‘தவளையைக் காப்பாற்றிய தானை தலைவர்’னு போஸ்டர் அடித்து, ஃப்ளக்ஸ் போர்டு வைக்கணுமா?” என்று மொழியும் போதே, அடித்துப் பெய்த மழையில் அவளின் மேல் இருந்த சேரும் சகதியும் இருந்த இடம் தெரியாமல் சென்று விட, ஊதக்காற்றினாலும் ஈரத்தினாலும் அவளது உடம்பு லேசாக நடுங்க தொடங்கியது.
ஏதோ அதிரடியாய் பதில் சொல்ல வாயைத் திறந்தவன், அவளின் நடுங்கிய மேனியைக் கண்டு... இத்தனை நேரம் இருந்த இளக்கம், மழையில் அடித்துச் செல்லப்பட்ட கோலம் போல இருந்த தடமே தெரியாமல் துடைக்கப்பட “இப்ப காரில் ஏறப் போறீயா... இல்லை, உன்னை மூட்டையா தூக்கிட்டுப் போய் காரில் கிடத்தணுமா?” என்று உச்சஸ்தானியில் கேட்டான்.
அவனின் வார்த்தை அவளை நாகமாய்த் தீண்ட... முன்பு ஒரு தரம் அப்படித்தானே செய்தான்? அதன்பின் நடந்தேறிய அனர்த்தங்கள், அவளின் வாழ்க்கைப் பாதையை எப்படி எல்லாமோ புரட்டிப்போட்டு, குறி தவறாமல் சுடும் அவளது வாழ்க்கையின் இலக்கையே மாற்றியமைத்துவிட்டது. அதுபோல் இப்பொழுதும் நேர்ந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு அவளை அலைகழித்தது.
காரில் ஏறப் பிடிக்கவில்லை என்றாலும், திக்கு தெரியாத இந்த இடத்தில் அவளுக்கு வேறு என்ன கதி இருக்கிறது? அதுவும் உயிரை உறைய வைக்கும் இந்த மழையில்? ஏற்கனவே காய்ச்சலுக்கு மாத்திரை போட்டுக்கொண்டு வந்தவளுக்கு... இங்கே நிற்கும் ஒவ்வொரு நிமிஷமும், அவளுக்குத் தான் பிரச்சனை அதிகமாகும் என்று புரிய... அவன் மேல் உள்ள ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, எதுவும் பேசாமல் மனக் குமைச்சலுடன் காரின் இருக்கையில் அமர்ந்தாள்.
காரும், காரைச் சார்ந்த பழைய நினைவுகளும் தலைதூக்க... பயத்தில் உடம்பு சிலிர்த்து, வெளிப்படையாகவே நடுங்க தொடங்கியது குழலிக்கு.
அவள் குளிரில் நடுங்குகிறாள் என்று உணர்ந்தவன், காரிலிருந்த ஹீட்டரை ஆன் செய்தான். கார் முழுவதும் வேமாகப் பரவிய வெப்பம், அவளைக் கம்பளியாய் அரவணைக்க... அப்படியே கண்மூடி தலை சாய்த்தவளின் கண்முன்... இதே போன்றதொரு கார் உரசல் சம்பவத்தில் முதன்முதலாய் சூர்யபிரகாஷைக் கண்டது நினைவில் நின்றது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு...
விடுமுறை என்றால் கூடி குதூகளிக்க மஞ்சு தான் கிருஷ்ணாவரம் பறந்தோடி வருவாள் என்பதால், குழலி சென்னை வந்து அவர்களது வீட்டில் தங்கியதில்லை. முதன் முதலில் தொடர்ந்து பத்து நாள் பெரியம்மா வீட்டில் தங்கியது கூட, அவளுடைய ஷூட்டிங் பயிற்சிக்காகத் தான்!
என்.சி.சியில் சேர்ந்திருந்தவளின் அனாயசமாக துப்பாக்கி சுடும் திறமை கண்டு அயர்ந்தவர்கள், அவளின் அசாத்திய ஆற்றலுக்கு இங்கு வசதி இல்லை என்று பிரத்தியேக பயற்சிக்காக சென்னை அனுப்பி வைக்க... ‘கரும்பு திண்ண கூலி வேண்டுமா?’ என்று துள்ளிக் குதித்துக்கொண்டு, பெரியம்மா வீட்டிற்குக் கிளம்பினாள்.
இந்தத் துறையில் எப்படியும் தேசிய அளவில் போக வேண்டும் என்பது தான் அவளுடைய லட்சியம், கனவு எல்லாம்! கனவு என்பதைத் தாண்டி, உண்பதும் உடுப்பதும்... ஏன் சுவாசிப்பதும் கூட ஷூட்டிங்... ஷூட்டிங் மட்டுமாகத் தான் இருந்தது.
பெரியம்மாவின் வீடு... ஒரு தளத்திற்கு இரண்டே ஃப்ளாட் என்ற முறையில் விஸ்தாரமான மூன்று தளமும், நான்காவது தளத்தில் ஒரு பெரிய ஃப்ளாட்டாகவும் இருக்க... கீழே ஸ்விம்மிங் பூல், ஜிம் என்று சகல வசதியுடன் கட்டப்பட்டிருந்த அந்த அப்பார்ட்மெண்ட்டைப் பார்த்தவுடனே குழலிக்குப் பிடித்துப் போனது.
அங்குத் தங்கியிருந்த இரண்டே வாரத்தில் மற்றக் குடும்பத்தினருடன் மாமா அத்தை என்ற கிராமப்புற பாசக்கார பேச்சினால் நட்பு கொண்டு விட, அவளது நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு இனிமையாகப் பறந்தன.
அன்று பயிற்சி இல்லை என்பதால் பின் காலைப்பொழுதில் தலைக்குத் தண்ணீர் ஊற்றியவள், முடியைக் காய வைக்கும் பொருட்டுக் கீழே இறங்கி, மதில்சுவர் அருகில் சென்று சூரியக் கதிர்களுக்கு முதுகு காட்டியபடி, ஏதோ பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டே உலர்த்திக் கொண்டிருந்தாள்.
திடீரென்று தன் செவிப்பறையில் டயர்கள் கிறீச்சிடும் சத்தமும், ரப்பர் வாசனையும், கூடவே பின்னங்கால்களில் ஏதோ உராய்வது போலவும் தோன்ற... அலறியடித்துக் கொண்டு திரும்பியவளுக்கு, கண்முன்னே விரிந்த காட்சி, இதயத்தை வாய் வழியாகத் தொண்டையில் வந்து துடிக்கச் செய்தது. இது போல் இவ்வளவு நெருக்கத்தில் பிரேக் போட்டு நிறுத்தும் வித்தையெல்லாம், அவள் சினிமாவில் தான் பார்த்திருக்கிறாள்.
நெஞ்சாங்கூட்டில் ரயில்கள் தடதடக்க, ‘நல்லகாலம்! டிரைவரின் சாமர்த்தியத்தால்... கீறல் கூட இல்லாமல் தப்பித்தோமே!’ என்ற எண்ணம் ஓடுகையிலேயே தான்... சாவகாசமாக அந்த ஆடி காரைத் திறந்து கொண்டு, ஆறு அடி உயரத்தில் ஆங்காங்கே கிழிந்த புளூ ஜீன்ஸ் அணிந்த நீண்ட கால்களும், கொச கொசவென்று கசங்கிய சட்டையும், மூன்று மாதங்களேனும் கத்தியே பார்க்காத சற்றே நீண்ட தலைமுடியுடன், கருப்பு நிற சன் கிளாஸ் அணிந்து இறங்கிய இளைஞனைக் கண்ணுற்றாள்.
சாப்பிடும்போது தெரியாமல் பச்சை மிளகாயைக் கடித்தால், இரண்டொரு நொடி கழித்துத்தான் சுர்ரென்று காரம் உச்சந்தலைக்கு ஏறும். அதுபோல விர்ரென்று கோபம் தலைக்கு ஏற, “ஏய் மிஸ்டர்! உங்களுக்குக் கண் தெரியலை? இப்படித்தான்....” என்று எகிற தொடங்கியவளுக்கு, மேலே பேச இடமே தராது,
“என் கண்ணைப் பற்றி இவ்வளவு அக்கறையா விசாரிக்கிறீயே... நீ என்ன பேஷண்ட் கிடைக்காத கண் டாக்டரா?” என்றபடி காரின் மேல் ஒய்யாரமாகச் சாய்ந்து, ஒரு கால் மாற்றி நின்று, மிகத் தெனாவட்டாகப் பதில் கூறியவனைக் கண்டு அதிர்ந்து போனாள் கார்குழலி.
‘இந்த மகா... மகா... திமிர் பிடித்த டிரைவரை என்ன செய்யலாம்? ஆனால் இவன் நிற்கும் தோரணையையும், தீட்சண்யமான முகத்தையும் பார்த்தால்... அப்படித் தோன்றவில்லையே!’ என்ற எண்ணம் எழுகையிலே அதை அலட்சியப்படுத்தியவள், ‘இவ்வளவு தூரம் வாயை விட்ட பிறகு... இவன் எவனாய் இருந்தால் எனக்கு என்ன?’ என்ற அலட்சியம் தோன்ற,
“ஏன் கண் டாக்டரா இருந்தா மட்டும் தான்... கண்ணைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கா என்ன? இப்படி ஆங்காங்கே கிழிந்த போன பேண்ட், கரித்துணியை நினைவுபடுத்தும் கசங்கிய சட்டை, கருப்பு நிற கூலிங் கிளாஸ்ன்னு... உங்க கெட் அப்பைப் பார்த்தால்... நான் மட்டும் இல்லை, வேற யாரா இருந்தாலும் அப்படித்தான் கேட்பாங்க! என்ன... இந்த கெட் அப்பில் ஒரு சின்னக் குறை! கையில் நீட்டு குச்சியும்... அதன் முனையில் கிலிங், கிலிங்ன்னு அடிக்க பெல்லும் இல்லை... அவ்வளவு தான்!” என்று அவனுக்கு ஏற்ற விதமாகவே நீட்டி முழக்கினாள்.
தன் சன் கிளாஸ் இட்ட கண்களால், அவள் சொல்வது உண்மைதானா என்று சரி பார்ப்பது போல் ஒருமுறை குனிந்து தன்னையே பார்த்துவிட்டு நிமிர்ந்தவனின் பார்வை... அவளைத் துளைப்பது போல தோன்ற, அவளின் உடம்பிலிருந்த ஒவ்வொரு அணுவும் சிலிர்த்தது.
‘ஏன் இப்படி விசித்திரமாக உணர்கிறோம்?’ என்று யோசிக்கையிலேயே, அவன் ஏதோ பேசுவது காதில் விழ... அவசரமாகத் தன் கவனத்தை அவன் பேச்சில் திருப்பினாள் குழலி.
“...சின்ன பட்டாம்பூச்சி சிறகை விரித்து உன் கழுத்தில் பறக்கிறது!” என்று அவளுடைய மெல்லிய தங்கச் சங்கலியின் பென்டண்ட்டைப் பற்றி மொழிந்து கொண்டிருந்தான்.
‘இவன் எதைச் சொல்கிறான்?’ என்று குழலி உணரும் முன்,
“இழுத்தால்... ரவுண்ட்... ரவுண்டா நீண்டு கொண்டே போகும் ஸ்பிரிங் மாதிரி உன் முடி...”
அதற்குமேல் அவன் சொல்வதைக் கேட்க சகிக்காது, துவேஷத்துடன் “ஓ! இப்படிப் பெண்களின் கழுத்தில் கிடக்கும் செயினையும், தலைமுடியையும்... பட்டிக்காட்டான் மிட்டாய்கடையைப் பார்ப்பது போல் பார்த்தால்... பின் எப்படி ‘கேட்டில் பிற வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை’ன்னு கொட்டை எழுத்தில் எழுதி இருப்பதையோ, இல்லை ஐந்தரை அடி உயரத்தில் குத்துக்கல் மாதிரி ஒருத்தி நிற்பதையோ... டிரைவர் சார் கண்ணுக்குத் தெரிந்திருக்க முடியும்!” என்று எள்ளி நகையாடினாள்.
“யூ ஆர் அப்சலூட்லி ரைட் பேப்! நான் அர்ஜுனனின் வம்சமாக்கும்! எது எனக்குத் தேவையோ... அதுமட்டும் தான் இந்தக் கண்ணிலும், கருத்திலும் படும்!” என்று அவளின் மட்டந்தட்டலையே, நொடிப்பொழுதில் பாராட்டாக மாற்றிக்கொண்டான் அந்த ‘நின்ற நெடுமாறன்’.
வில்லுக்கு விஜயனான அர்ஜுனனைப் பற்றி அவளிடமே சொன்னதோடு மட்டுமல்லாமல், அவனின் சன் கிளாஸ் அணிந்த கண்கள் டாலர் இருக்கும் இடத்தை மிக உரிமையுடன் தொட்டு மீள... கோபத்தில் புதுப் புனல் போல முகத்தில் ரத்தம் பாய, குழலியின் முகம் கன்றியது.
‘பெண்களுக்கு முகம் என்று ஒன்றிருக்கு... பேசும்போது அதைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற நாகரீகம் கூடத் தெரியாத இந்த ஜென்மத்திடம்... எனக்கு என்ன பேச்சு வேண்டியிருக்கு? துரை ஏன் சன் கிளாஸ் போட்டுக்கொண்டு திரிகிறான் என்று... இப்போது தான் புரிகிறது. ராஸ்கல்!’ என்று பொருமிக் கொண்டிருந்தாள்.
அவனிடம் சண்டைக்கு மல்லுக்கட்டும் ஆர்வத்தில் இருந்தவள், தான் நிற்கும் இடம் ‘ரிசர்வ்ட் பார்க்கிங்’ என்பதையே மறந்து போனாள்.
கண்களில் தீப்பொறி பறக்க, “நீங்க அர்ஜுனன் வம்சத்தில் சேருவதில்... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை! அதுக்கு முன்னாடி... உங்களையும் ஒரு ஆளாய் மதித்து, இந்த ஆடி காரை நம்பிக் கொடுத்திருக்கிறாரே உங்க முதலாளி... அந்த மனுஷனுக்கு ஒழுங்கா வேலை செய்யும் வம்சத்தில் சேருங்க! அப்புறமா நீங்க அர்ஜுனனின் வம்சமா... இல்லை, துச்சாதனனின் வம்சமான்னு பட்டிமன்றம் வைத்து முடிவு பண்ணிக் கொள்ளலாம்!” என்று சூடாக மொழிந்துவிட்டு, ‘இனி இந்த ஜென்மத்திற்கு... இவன் முகத்தில் விழிக்கவே கூடாது!’ என்று நினைத்தபடி, வேகமாகத் திரும்பி லிப்ட்டை நோக்கி நடக்கலானாள்.
“சார்! நீங்க எப்ப சார்... வந்தீங்க சார்... இப்பத்தான் சார்... டீ சாப்பிட வெளியே போயிருந்தேன் சார்!” என்று ஒரு வார்த்தைக்கு ஒன்பது ‘சார்’ போட்டான் அந்த செக்யூரிட்டி.
“நீங்க சொன்ன மாதிரியே சுத்தம் பண்ணிவிட்டேன் சார். இந்தாங்க சார்... சாவி!” என்றதற்கு மேல், அவனின் வார்த்தை தேய்ந்து மறைய...
‘எந்த வீட்டின் சாவி? இங்குத் தான் எல்லா வீட்டிலும் குடியிருக்கிறார்களே?’ என்று தீவிரமாக யோசித்தபடியே லிப்ட்டை அடைந்தாள் குழலி.
ஆடி அசைந்து ஆமை வேகத்தில் அந்த லிப்ட் வந்து சேர்வதற்குள், அவன் வந்து விட... தன் தலைவிதியை நொந்தபடி அதற்குள் நுழைந்தாள்.
அந்தச் சிறிய அறையில் அவனின் பிரேத்தியேக வாசம் நாசியை நிரப்பி மூச்சு முட்ட செய்ய, காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு துகள்களைப் போல அவளுடைய ஒவ்வொரு அணுவிலும் அவனின் அருகாமையை உணரச் செய்ய... மெய் சிலிர்த்தது அவளுக்கு. ஏன் என்று புரியாமல் திடீரென்று இதயம் இருமடங்கு வேகத்துடன் ஒட்டமெடுக்க, ஒருவிதமான பரவசம் அலையலையாய் தன்னுள் பரவுவதை உணர்ந்தாள்.
அதை முழுமையாக அனுபவிக்க முடியாது ஏதோ ஒன்று தடுக்க, எப்படி உணர்கிறோம் என்றே புரியாது, புரிந்து கொள்ளவும் பிடிக்காது, சற்றே பயம் கலந்த படப்படப்பு அவளைப் பீடிக்க, கால் தவறி குளத்தில் விழுந்தவள் போல சுவாசிக்க காற்று கிடைக்காது, மூச்சுக்காற்றுக்காகத் தத்தளிப்பது போல் அவனது அருகாமையில் தோன்றிய போது... சமய சஞ்ஜீவியாக லிப்ட் முதல் தளத்தில் நின்றது.
அங்கே இருந்த மாமி “அட... நம்ம கார்குழலி!” என்றவர், இவளைப் பார்த்துப் புன்னகைத்து “உன் ஆத்துக்குத் தான் மோர்க்களி எடுத்துண்டு வர்றேன். நீயே வந்துட்ட... இந்தா!” என்றவாறு நீட்டினார்.
“நன்றி மாமி!” என்று வாங்கிக்கொண்ட குழலியைப் பார்த்து,
“இந்தக் காலத்துல யார் நன்றின்னு அழகா தமிழல சொல்றா? தேங்க்ஸுன்னு தெளிவாக இங்கிலீஷுல தானே சொல்றா? கலிகாலம்!” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே லிப்ட்டின் கதவு மூட, அடுத்த நொடி அருகில் நின்றிருந்தவன் ஏதோ பெரிய ஜோக் கேட்டது போல் உல்லாசமாய் வாய் விட்டு நகைத்தான்.
திடுக்கிட்டு ‘இப்ப எதுக்கு... இப்படிச் சிரிக்கிறான்?’ என்று எண்ணமிட்டவாறே அவன் புறம் பார்த்தவள், சற்றுமுன் அவனைப் ‘பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த மாதிரி’ என்று சாடியவள்... தற்பொழுது தானே அந்த வேலையைச் செவ்வனே செய்தாள்.
சிறு தீபம் ஒன்று சூழ்ந்திருந்த காரிருளை நொடிப்பொழுதில் விரட்டியடித்து, அந்த இடத்தைத் தன் ஜுவாலையால் ஜொலிக்கச் செய்கிறதே... அதே மாதிரி அவனின் அந்தச் சிரிப்பு, அவன் முகத்திலிருந்த அழுத்தத்தையும் அலட்சியத்தையும் அகற்றி, ஒரு கவர்ச்சிகரமான வசீகரத்தைத் தோற்றுவித்தது.
ஐஸ்கிரீமை நுனிநாக்கில் சுவைத்து, மெல்ல அனுபவித்து உண்பது போல்... தன் ஆழ்ந்த குரலால் ரசனையுடன் “கார்குழலி!’’ என்று மெல்ல முணுமுணுத்தான்.
‘இதுவரை யாரும் என் பெயரை... இத்தனை அழகாய், அனுபவித்து அழைத்ததேயில்லை!’ என்ற எண்ணம் தறிக்கெட்டு ஓடுகையிலேயே... அதை நாசமாக்கும் விதமாக,
“உனக்கு யார் இப்படிப் பெயர் வைத்தார்களோ எனக்குத் தெரியாது! ஆனா உன் ஸ்ப்ரிங் முடிக்கு... இதைவிட பெட்டரான பெயரை வைத்திருக்கவே முடியாது!” என்று சிலாகித்தான்.
அவனது பேச்சு, இத்தனை நேரம் அவளைப் பீடித்திருத்த மயக்கத்தைத் தண்ணீர் தெளிந்து எழுப்ப... அவனை உக்கிரமாகப் பார்த்து, ஆவேசமாக பேச அவள் வாயைத் திறந்தாள்.
“என்னை ஆசைத் தீர பார்த்து முடித்து விட்டாயானால்.... கொஞ்சம் இறங்கலாமே! உன் தளம் வந்து... கிட்டத்தட்ட ஐந்து நிமிஷமாகுது ஸ்ப்ரிங் முடி! உனக்கு எப்படியோ தெரியாது... ஆனா எனக்கு நிறைய வேலை இருக்கு!” என்றவன், ‘இறங்கித் தொலை!’ என்பது போல் கையை வெளியே காட்டினான்.
“என்னது?” என்றபடி தன் காதுகளை நம்ப மாட்டாமல் குழலி படக்கென்று திரும்பிப் பார்க்க, அவன் சொன்னது போல் அந்தப் பாழாய்ப் போன லிப்ட் நான்காம் தளத்தில் தான் நின்று கொண்டிருந்தது.
மற்றச் சமயத்தில் எல்லாம் ஆடி அசைந்து அன்னநடை போட்டு வந்து சேரும் லிப்ட், இன்று ஏனோ பி.எஸ்.எல்.வி. ஏவுகணைக்கு இணையான வேகத்தில் வந்து சேர்ந்துவிட்டிருந்தது.
தொடரும்.....
அடுத்த பதிவு - வியாழக்கிழமை
DEAR READERS….
உங்கள் கருத்துக்களை… என்னை மயக்கிய கார்குழலே கருத்து திரியில் பதிவிடவும்..