கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்றும் என் நெஞ்சில்...முன்னோட்டம்

Latha S

Administrator
Staff member
சங்கமம் குழுவினருக்கு என் பணிவான வணக்கம்.

என்னையும் உங்கள் குழுவில் இடைத்தமைக்கு, நெஞ்சார்ந்த நன்றி. நானும் தொடர்ந்து சங்கமம் தளத்தில் எழுதுவதற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பினை, சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிகளை, மேற்கொள்வேன்.

அதன் துவக்கமாக, ‘என்றும் என் நெஞ்சில்’ என்ற குறுநாவலைத் தொடர்கதையாகப் பதிவிடுகிறேன். இது ஒரு கல்லூரி காதல் கதை. எனது குறுநாவலைப் படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

ஜெயக்குமார் சுந்தரம்

சங்கமம் குழுவினருக்கு என் பணிவான வணக்கம்.

என்னையும் உங்கள் குழுவில் இடைத்தமைக்கு, நெஞ்சார்ந்த நன்றி. நானும் தொடர்ந்து சங்கமம் தளத்தில் எழுதுவதற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பினை, சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிகளை, மேற்கொள்வேன்.

அதன் துவக்கமாக, ‘என்றும் என் நெஞ்சில்’ என்ற குறுநாவலைத் தொடர்கதையாகப் பதிவிடுகிறேன். இது ஒரு கல்லூரி காதல் கதை. எனது குறுநாவலைப் படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

ஜெயக்குமார் சுந்தரம்
 

Jeyakumar S

Member
என்றும் என் நெஞ்சில்

அத்தியாயம் 1



அன்றுதான் அந்த ஆண்டிற்கான முதுகலை வகுப்புகள் ஆரம்பமானது.

நானும், என் தோழி கமலாவும், முதல் தளத்தில் அமைந்திருந்த, எங்கள் வகுப்பறைகளைத் தேடிக்கொண்டு, வராந்தாவில் நடந்துக் கொண்டிருந்தோம். தோழி, எம்.ஏ எக்கனாமிக்ஸ் முதலாம் ஆண்டு. நான் எம்.எஸ்ஸி மேதமேட்டிக்கல் எக்கனாமிக்ஸ். மதுரையில் பெண்கள் கல்லூரி ஒன்றில், இருவரும் இளங்கலைப் பட்டப்படிப்பை, பொருளாதாரப் பிரிவில் படித்தோம்.

தோழிதான் எங்கள் கல்லூரியின் மாணவிகளின் தலைவியாகத் தெரிந்தெடுக்கப்பட்டவள். நல்ல திறமையுண்டு. பேசுகின்ற வரமும் பெற்றிருந்தாள். பேச்சுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு, பல பரிசுகளைக் கல்லூரிக்குப் பெற்றுத் தந்தவள். எதையும் சமாளிக்கும் சமயோஜித புத்தி, அவளுக்குண்டு. அவளுடைய பெயருக்கு ஏற்றபடி, கமலம் போன்ற வட்ட முகம், நல்ல நிறம், வண்டு போன்ற, கருமை நிற கண்கள் இரண்டு. ஒருமுறை பார்த்தவர் மறுமுறை பார்க்கத் தூண்டும் அழகி.

(என்னைக் குறித்து அறிய விரும்புகிறீர்கள். அப்படித்தானே! யாரையாவது பிடித்து என்னுடைய அழகைச் சொல்ல வைக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்)

கல்லூரி விடுதியில் இருவரும் அறை தோழிகள். கல்லூரிக்குள்ளும், மாணவிகள் விடுதிக்குள்ளும், நாங்கள் இருவரும் நடத்திய அட்டகாசங்களும், சாகசங்களும் அநேகம் உண்டு. மாணவிகளுக்கு, எங்களை நன்றாகப் பிடிக்கும். கல்லூரியில் இடைவேளையின் போது, எங்களைச் சுற்றி மாணவிகளின் கூட்டம், எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆசிரியர்களுக்கும் எங்களைப் பிடிக்கும். எத்தனை குறும்பு என்றாலும், படிப்பென்று வந்து விட்டால், கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருக்கும். இருவரும் இளங்கலைப் பட்டப்படிப்பில், அதிக மதிப்பெண்களைப் பெற்று, கல்லூரி தர வரிசைப் பட்டியலில், முதல் இரண்டு இடத்தைப் பிடித்தவர்கள். அதனால் இருவருக்கும் முதுகலைப் பட்டப்படிப்பில், கேட்டப் பிரிவு கிடைத்தது.

தோழியின் வகுப்பில் அவளை விட்டுவிட்டு, என்னுடைய வகுப்பைக் கண்டுப்பிடித்து, வகுப்பறைக்குள் நுழைந்தேன். மாணவிகள் யாரும் வகுப்பறையில் இல்லை. சில மாணவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தவர்கள், மீண்டும் தங்கள் பேச்சினைத் தொடர்ந்தனர்.

நான் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். பேச்சுத் துணைக்கு யாரும் இல்லை. ப்ளாக் போர்டை எத்தனை நேரம்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும், போரடித்தது. வகுப்பு ஆரம்பிக்க, இன்னும் அரைமணி நேரம் இருந்தது. என்னுடைய தோழியின் வகுப்பறைக்குச் சென்று, அவளோடுப் பேசிவிட்டு, பின்னர் வகுப்பு ஆரம்பிக்கிற நேரத்தில் திரும்பி வரலாம், என்ற எண்ணத்தில் இருக்கையிலிருந்து எழுந்து நடத்தேன்.

வகுப்பறையைத் தேடிக் கொண்டு, எதிரில் வந்த மாணவன் ஒருவன், என் மீது மோதிவிட, எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. என் முக பாவத்தைப் பார்த்ததும், அந்த மாணவன், “சாரி மேடம்! சாரி மேடம்!”, என்று வார்த்தையிலே தடுமாறினான்.

(தவறு என் பாகத்திலும் உண்டு. நானும் தலையைக் கவிழ்ந்து கொண்டு நடந்ததனால் தான் அவன், என் மீது மோதினான்.)

அவன் மீதுக் கோபப்படுவது, தவறு என்று உணர்ந்த நான், “பரவாயில்லை நோ ப்ராப்ளம்”, என்று கூறிக் கொண்டே, எதிரில் வேர்த்து விறு விறுத்து நின்று கொண்டிருந்த, அவனை ஏறிட்டுப் பார்த்தேன்.

அவன் முகம் பேயறைந்தது போலிருந்தது. (என்னைக் கண்டு பயந்திருப்பானோ! நான் என்ன பேய்ப் போலவா இருக்கிறேன்!, என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு, அவனைப் பார்த்தேன்.)

அவன் மீண்டும் “சாரி மேடம்”. என்றான்.

“க்ளாஸ் ரூம் எங்கருக்குன்னு, டோரப் பாத்துட்டு வந்தேன். எதிரில நீங்க வந்ததப் பாக்கல மேடம்” , என்று பரிதாபமாக, என்னைப் பார்த்துக் கூறினான்.

குற்றத்தை முழுவதுமாக அவன் ஏற்றுக் கொண்டதைக் கண்டு, “நோ ப்ராப்ளம்…” என்று கூறி விட்டு, “எந்த க்ளாஸ்?” என்று வினவினேன்.

“ஃபஸ்ட் இயர் எம்.எஸ்ஸி மேதமேட்டிக்கல் எக்கனாமிக்ஸ்.”, என்றான்.

(என் வகுப்பு தோழனா! பின்னர் கவனித்துக் கொள்ளலாம், என்று மனதில் நினைத்துக் கொண்டேன்)

“இந்த க்ளாஸ்தான்”, என்று கூறிவிட்டுத் தோழியைப் பார்க்கப் பக்கத்து வகுப்பறைக்கு நடத்தேன்.

என் தோழி, அவள் வகுப்பறையில் சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும், அழைத்துச் சென்று, அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.

“இவ என் பெஸ்ட் ஃப்ரண்ட், ராஜாத்தி. என் உயிர் தோழி. டிகிரியில என் க்ளாஸ் மேட். என் ஹாஸ்டல் மேட், ரூம் மேட் எல்லாம் இவதான்”, என்று என்னைப் பற்றித் தன் வகுப்புத் தோழிகளிடம் கூறினாள்.

நானும், தோழியின் வகுப்பு மாணவிகளுடன், என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.

“என்னடி இங்க வந்துட்ட? ஏன் ஒரு மா...தி...ரியா இருக்க? எவனாவது கிண்டல் பண்ணுனானா? சொல்லுடி...”, என்று கேலிச் செய்தாள்.

“ஒண்ணுமில்லடி… ஒரு பையன், என் மேல இடிச்சிட்டான்”, என்று வெட்கத்துடன் கூறினேன்.

“எவன்… அவன்... வேணும்னு இடிச்சானாடி?... சொல்லு… உண்டு இல்லன்னு ஆக்கிருவோம்... வாடி... போய் கேட்டுருவோம்…”, என்று ஆவேசப் பட்டாள், தோழி.

“வேண்டாண்டி… அவன் என் கிளாஸ் மேட்டேன்னு தோணுது...”, என்ற என்னை இடைமறித்தத் தோழி, “யாரா இருந்தா என்ன... உன்னை இடிச்சிட்டுப் போயிருவானா....”, என்று படபடத்தாள், கமலா.

அவள் உணர்ச்சி வசப்பட்டதைப் பார்த்த, அவள் வகுப்புத் தோழிகள் அனைவரும், எங்கள் இருவருக்கும் இடையிலுள்ள நட்பைப் புரிந்து கொண்டனர்.

“உணர்ச்சி வசப்படாத... இது நம்ம காலேஜ் இல்ல... இன்னைக்குத்தான் முதல் நாளு... அதுக்குள்ள உன் அடாவடி தனத்தைக் காட்டாத.... அவனைப் பாத்தா பாவமா இருக்குடி…”, என்று அவளை அடங்கும்படி கூறினேன்.

எதற்கும் எடுத்துச் சாடும் நான், அவனைப் பார்த்துப் பாவம் என்று சொன்னதைக் கேட்ட கமலா, “என்னது... பாவமா... ஒண்ணும் புரியலையே... நீயா சொல்ற... இப்படி! உன்னை இடிச்சிட்டுப் போன எத்தனைப் பேரை வம்புக்கு இழுத்திருப்ப... இப்ப என்ன ஆச்சு...”, என்று என்னுடைய அடாவடி குணத்தின் ஒரு பகுதியை எடுத்து வெளியே விட்டாள், தோழி.

என்னை இப்படி மட்டம் தட்டித் தோழிப் பேசுவாள் என்று நான் நினைக்கவில்லை.

“இல்லடி... க்ளாஸ் ரூம் எங்கருக்குன்னு ஒவ்வொரு டோரா.... பாத்துட்டு வந்துருக்கான்... நான் அப்பதான் வெளிய இறங்குனேன்..” , என்ற என்னை இடை மறித்த என் தோழி, “என்னடீ... டைரக்ட் கொல்யூஷனா?... மோதல் பலமா இருந்துச்சா...”, என்று கேலிச் செய்தாள்.

நான் சிரித்துக் கொண்டே,

“ஏ! லேசா... கையிலதான்டி இடிச்சான்...”, என்று புன்முறுவல் பூத்தேன்.

“ஓ! நேருக்கு நேரா இடிக்கலையேன்னு வருத்தமா இருக்குதோ?...”, என்று கண்களை உருட்டிக் கிண்டல் அடித்தாள், தோழி.

“போடி... உனக்கு எல்லாமே கேலி தான்... பாவம்... இடிச்சதும் அவன் மொகத்தைப் பாக்கணுமே!...”, என்று சிரித்துக் கொண்டு கூறினேன்.

நான் சிரித்துக் கொண்டே கூறியதைக் கேட்டு, “ஏய்! அவன் மொகத்தைப் பாத்தையாடி? அழகா இருக்கானா?... உனக்குப் பிடிச்சிருந்தா சொல்லுடி... உனக்குச் செட் அப் பண்ணிரலாமாடி...”, என்று கண்களைச் சிமிட்டிக் கிண்டலடித்தாள், கமலா.

கமலாவின் கிண்டல் பேச்சைக் கேட்டுத் தோழிகள் அனைவரும் சிரித்தனர். நாணம் கொண்ட நான், “உன் கிட்ட எதையும் சொல்ல முடியாது… உடனே கிண்டலடிக்க ஆரம்பிச்சிருவ...” என்று கூறி, என் வகுப்பறைக்குச் செல்ல எழுந்திருந்தேன்.

“என்னடி செல்லம்... உடனே கோபப் பட்டுட்ட... உன்னை இடிச்சா எனக்கும் வலிக்குமே கண்ணு...” என்று என்னை இழுத்து அருகில் வைத்துக் கொண்டாள்.

“இப்ப சொல்லு கண்ணு... எப்படி பையன் அழகா இருக்கானா?”, என்று என் நாடியைப் பிடித்துக் கொஞ்சினாள்.

“போடி... அவன் வேர்த்து விறு விறுத்து, ‘சாரி மேடம்! சாரி மேடம்!’ ன்னான்... அதைச் சொல்ல வந்தேன்”, என்று அவன் மேல் எழுந்த பட்சாதாபத்தில் கூறினேன்.

“ஓ! ரொம்ப நல்லவன் போலிருக்கே... வாடி... அவனைப் போய் பாத்துட்டு வரலாம்”, என்று கூறிய அவள், என்னுடன் என் வகுப்பிற்கு வர தயாரானாள்.

“குட்மானிங்”, என்ற சப்தத்தைக் கேட்டு, அனைவரும் திரும்பினோம். பேராசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் வந்து கொண்டிருந்தார். நான் எழுந்து என் வகுப்பறைக்குச் சென்றேன். வகுப்பறையில், முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த மூன்று பெண்களைப் பார்த்ததும், மனதுக்குள் மகிழ்ச்சி. என்னைப் பார்த்ததும் மூவரும் ஒரு பக்கமாக ஒதுங்கி, முதல் பெஞ்சில் எனக்கும் இடங்கொடுத்தார்கள். இடது பக்கம் திரும்பி பார்த்தேன். என் மீது மோதிய, சக மாணவன் உட்கார்ந்திருந்தான். அவன் என்னைப் பார்த்து, ஒரு அசட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டுத் திரும்பி கொண்டான்.

வகுப்புக்குள் பேராசிரியை ஒருவர் உள்ளே வந்தார். பேராசிரியைத் தன்னை அறிமுகம் செய்த பின்னர், ஒவ்வொருவருடைய விவரங்களையும் தெரிவிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். அவனுடைய பெயர் விஜய சந்திரன், நாகர்கோவில் சொந்த ஊர், ஹாஸ்டலில் தங்கி இருக்கிறான் என்ற விவரங்களை, அவன் தன்னை அறிமுகம் செய்த பொழுது தெரிந்து கொண்டேன்.

அன்றைய தினம் முழுவதும் எந்த பாடங்களையும் எந்த பேராசிரியரும் எடுக்கவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் எங்களை அறிமுகப் படுத்திக் கொள்ள, நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.

மாலை வகுப்புகள் முடிந்ததும், திடுதிப்பென்று சில மாணவர்களும், இரண்டு மாணவிகளும் எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

“ஹலோ ஃப்ரண்ட்ஸ் நாங்க, உங்க சீனியர்ஸ். வீ வெல்கம் யூ ஆல்”, என்று அவர்கள் தங்களைக் குறித்துக் கூறியதும், என் மனதுக்குள் எங்கள் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்தன. இப்படித்தானே நாங்களும், ஜூனியர்ஸிடம் எங்களை அறிமுகம் செய்துவிட்டு, ரேக்கிங் பண்ணியவைகள் அனைத்தும் கண்முன்னே வந்து போனது.

“நாம ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் செய்து கொள்ளலாம்னு நினைக்கிறோம்”, என்றான் எங்கள் சீனியர்களில் ஒருவன். முதலில் அவர்கள் ஒவ்வொருவரும், தங்களை எங்களுக்கு அறிமுகம் செய்தனர். பின்னர் எங்களைக் குறித்த விவரங்களைக் கூறும்படி பணித்தனர்.

“லேடீஸ் ஃபஸ்ட்”, என்று கூறிய அவர்கள், எங்களைக் குறித்த விவரங்களைக் கூறும்படி கோரினார்கள். பின்னர் மாணவர்களிடமும் அனைத்து விவரங்களையும் கேட்டனர். பின்னர், ஒவ்வொருவராகப் பாடும்படி கூறினர்.

பாடச் சொன்னதும் எனக்கு ஒருவித பயம், என்னுள் தொற்றிக் கொண்டது. எனக்குப் பாட்டுத் தெரியும், ஆனால் பாடத் தெரியாது. முதலில் பாடிய சகமாணவிகள் மூவரும் ஏதேதோ பாடல்களைப் பாடினார்கள். அடுத்ததாக என்னைப் பாடச் சொன்னதும், எனக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்று தெரியாது, “வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது” என்ற பாடல் வரிகளைப் படித்துவிட்டேன். ஒருசிலர் என் பாட்டைக் கேட்டதும் சிரித்தார்கள் என்பதைக் கவனித்தேன். அதைப் பார்க்கையில் மனதுக்குள் வெட்கம் என்னைத் தீண்டியது.

அடுத்து அமர்ந்திருந்த அவனைப் பாடும்படி கூறினார்கள். அவன் எழுந்து, ஒரு பாடலை, நல்ல ராகத்துடன் பாடினான். பாட்டுக்கு இடையில் என்னைப் பார்த்துப் புன்னகையை உதிரவிட்டான். அருமையாக இருந்தது.(பாடல் மட்டும்தான்)

அறிமுகம் முடிந்ததும், சீனியர்கள் எங்களைக் கேன்டீனுக்கு அழைத்துச் சென்றனர்.

எங்கள் சீனியர் ஒருவன் அவனிடம் சென்று, “டேய் விஜய்! நீ எப்படிடா இங்க?... ரெண்டு வருஷம் என்ன பண்ணிட்டிருந்த? உனக்குதான் டிகிரில ஃபஸ்ட் கிளாஸ் மார்க் உண்டே?”,என்று கேட்டான்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே எனக்கு முன்னர் சென்றுக் கொண்டிருந்தனர். நானும் என் வகுப்பு தோழியுடன் பேசிக் கொண்டே சென்றேன். என்றாலும், அவர்கள் இருவரும் பேசியவைகள், என் காதுகளில் விழுந்தது. (இதைத்தான் க்யூரியாசிட்டின்னு சொல்லுவாங்களோ)

“நான் டிகிரி முடிச்சதும் சென்னைக்குப் போயிட்டேன். எங்க அண்ணன், பெரியப்பா மகன் வீட்டுலத் தங்கியிருந்து வேலை தேடினேன். ஒண்ணும் ஒர்க் அவுட் ஆகல... அதான் மீண்டும் படிக்க வந்துட்டேன்... ஆமா நீ ஒரு வருஷம் என்ன பண்ணுன?”, என்று சீனியரான நண்பனிடம் கேட்டான், விஜய்.

“டிகிரியில எனக்கு ஒரு பேப்பர்ல அரியர்ஸ் விழுந்து போச்சு... அதனால ஒரு வருஷம் வேஸ்ட்”, என்றான் விஜயின் கல்லாரி தோழன், எங்கள் சீனியர்.

“டேய் காலேஜ் நாட்களுக்குப் பிறகு, உன்னைப் பார்த்ததில எனக்கு ரொம்ப சந்தோஷம்... அதுவும் எனக்கு சீனியரா...”, என்று மகிழ்ச்சியுடன் கூறினான், விஜய்.

அவர்கள் இருவரும் பேசியதிலிருந்து இரண்டு பேரும் இளங்கலைப் பட்டப்படிப்பில் வகுப்புத் தோழர்கள் என்பதை அறிந்து கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்னரே பட்டப்படிப்பை முடித்து விட்டவர்கள் என்பதுவும், அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.

விஜய் பாடியப் பாடலைக் குறித்துப் பேசிய சீனியர்ஸ், அவர்கள் வகுப்புத் தோழனின், இளங்கலை வகுப்புத் தோழன் விஜய், என்பதை அறிந்து கொண்டனர். எங்கள் சீனியர்ஸ் மட்டுமல்ல, எங்கள் வகுப்புத் தோழர்களும், அவனுடன் சிரித்துப் பேசிப் பழக ஆரம்பித்து விட்டனர்.

எங்கள் சீனியர்கள், கேன்டீனில் எங்களுக்கு ஸ்வீட், காரம், காஃபிக்கு ஏற்பாடுச் செய்திருந்தனர். என்னுடைய சக மாணவர்களுடனும் சீனியர்களுடனும் பேசி, அறிமுகம் ஆவதற்கு அந்த நிகழ்வு நல்ல வாய்ப்பாக இருந்தது.

மாணவிகள் தங்கும் விடுதி, எங்கள் துறைக்கு அருகில் அமைந்திருந்தது. அன்றைய நிகழ்வுகளை அசைப் போட்டுக் கொண்டே ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்தேன்.


- தொடரும்
 
Last edited:

Jeyakumar S

Member

என்றும் என் நெஞ்சில்

அத்தியாயம் 2


லேடீஸ் ஹாஸ்டல், எங்கள் துறைக்கு அருகில் அமைந்திருந்தது.

என்னைக் கண்டதும் என் தோழி, “வாடியம்மா... வா!... வா!... என்னடீ!.. முதல் நாளே உங்க சீனியர்ஸ், ரேக்கிங்க ஆரம்பிச்சிட்டாங்களா?”, என்று வரவேற்றாள்.

“ரேக்கிங்கா?... அப்படியொண்ணும் இல்லையே... யாருச் சொன்னா?”, என்று கேட்டேன்.

“உங்க சீனியர்ஸ்... உங்க க்ளாஸுக்கு வந்ததைப் பார்த்தனே!“, என்று ஏளனத்தோடு கூறினாள்.

“ரேக்கிங் இல்லைடீ... சீனியர்ஸ் வந்தா... உடனே ரேக்கிங்னு அர்த்தமா?... இது நம்ம காலேஜ் இல்லடி... யூனிவர்சிட்டி... இன்னைக்கு நடந்தது வெறும் அறிமுகப் படலம் மட்டும் தான்… சீனியர்ஸ் வந்தாங்க… அவங்களப்பத்திச் சொன்னாங்க… அப்புறமா... எங்கள அறிமுகம் பண்ண சொன்னாங்க... பேரு, ஊரு... படிச்ச காலேஜ்... எல்லாம் சொல்ல சொன்னாங்க...”, என்று வகுப்பறையில் நடந்தவைகளைக் கூறி கொண்டிருந்தேன்.

“அவ்வளவுதானா?...”, என்று சுவாரசியமில்லாமல் இழுத்தாள் தோழி.

“அப்புறம்...”, என்ற என் மெல்லொலியைக் கேட்டு, “சொல்லுடீ... அப்புறம் என்ன நடந்துச்சு””, என்று ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள், தோழி.

“பாடச் சொன்னாங்க...” என்பதைப் பதட்டத்துடன் சொன்னேன்.

“பாடச் சொன்னதும்... உனக்கு வயிறு கலக்கிருக்குமே!… உடனே உன்னுடைய ஆஸ்தான பாட்ட படிச்சிருப்பையே…!” என்று சிரித்தாள் தோழி.

“ஆமா” என்று தலையை ஆட்டினேன். அதைப் பார்த்த கமலத்திற்குக் கோபம் தலைக்கு ஏறியது.

“உனக்கு இன்ஃப்ரியார்டி காம்ப்ளக்ஸ்டி. நீ கறுப்பா இருக்கதுனால, உன்னை யாரும் பாக்க மாட்டாங்க, பழக மாட்டாங்கன்னு நினைப்பு. அதனால வாசமில்லா மலருன்னு உன்னை நினச்சிட்டு, வசந்தத்தத் தேடக் கூடாதுன்னு வாழுர... அப்படித்தானே.”, என்று என் மீதுள்ள அக்கரையில் அவள் அப்படி கேட்டாள்.

“அப்படியொண்ணுமில்லடி... ஆனா... கொஞ்சம் இருக்கு”, என்றேன் அமைதியாக.

“முதல்ல அந்த எண்ணத்தை உன் மனசிலருந்து எடுத்துப் போடுடீ!... நீ கறுப்பழகிடி… உன் மனசுக்குப் பிடிச்ச ஒருத்தன் வருவான்டி... உன்னைத் தலைல தூக்கி வச்சு ஆடப்போறான்... அப்ப... இந்த ஃப்ரண்டக் கொஞ்சம் நினைச்சிக்கோ...” என்று கூறி என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள், என் பாசமிகுத் தோழி.

அவள் வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தது.

“உன்னைப் போல ஒரு ஃப்ரண்ட் கிடைக்க, உண்மையிலே நான் கொடுத்து வச்சிருக்கணும்...” , என்று என் உள்ளம் திறந்து கூறினேன்.

“சரி... சரி... அது இருக்கட்டும்... உன் ஆளு என்ன பாட்டுப் பாடுனான்...?”, என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டாள் தோழி.

“யாரச் சொல்ற...” என்று ஒன்றும் தெரியாததுப் போன்று கேட்டேன். எனக்குத் தெரியும், அவள் யாரைக் குறித்துக் கேட்கிறாள் என்று. (மூன்று ஆண்டுகளாகப் பழகிட்டு வாரேன். இது கூடவா தெரியாது)

“நடிகையர் திலகமே! போதும் போதும்... நீ மனசுகுள்ள சிரிக்கிறது எனக்குத்தான் கேட்குதே... சொல்லு...” என்று கிச்சுக் கிச்சு மூட்டினாள்.

“நல்ல பாடுனான்டி... ’கண்ணா கருமை நிற கண்ணா...’ அந்த பாட்ட எத்தனை அழகா பாடுனான் தெரியுமா!... அவன் பாடும் போது, எனக்குக் கண்ணுல கண்ணீரு நிறைஞ்சிடுச்சு... அந்த சினிமா காட்சி அப்படியே என் கண் முன்னால வந்து நின்னுது...”, என்று அவன் பாடிய அந்த பாடலில், என்னை மறந்து, நான் உணர்ச்சி வசப்பட்ட விஷயத்தைத் தோழியிடம் கூறினேன்.

“உன் கண்ணீரைப் பார்த்ததும் உன்னை எல்லோரும் கேலிப் பண்ணிருப்பாங்களே”, என்று சிரித்தாள் தோழி.

“யாரும் பாக்கல... அதுக்கு முன்னாடிக் கண்ணைத் தொடச்சிட்டேனே”, என்று கண்களைச் சிமிட்டி, கைகளை ஆட்டினேன்.

“நல்ல காரியம் செய்த... இல்லனா... எல்லோரும் உன்னைக் கிண்டலடிச்சிருப்பாங்க... உன் ஆளு எப்படி நல்ல கலரா...”

“இல்ல மாநிறம்... ஆனா பார்க்க அழகா இருப்பான்... அவன் பாடி முடிச்சிட்டு என்னைப் பாத்து ஒரு சிரிப்புச் சிரிச்சான் பாரு!... எனக்குப் பத்திட்டு வந்துச்சு!...”

“இல்லடி... அவன் அந்த பாட்ட உனக்குச் சமர்ப்பணம் பண்ணியிருப்பான். உன்னை அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்...”, என்று எனக்கு மட்டைக் கட்டினாள், கமலா.

தோழியின் வார்த்தைகள் மனதுக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கியது. என்றாலும், வெளிக் காட்டிக் கொள்ளாமல், “போதும்... போதும்... சும்மா மட்டக் கட்டாத...”, என்று பொய் கோபம் கொண்டேன்.

அன்றைய இரவு, வகுப்பறைகளில் நடந்த நிகழ்வுகளைப் பறிமாறிக் கொண்டோம். தோழியின் கேலிக் கிண்டலுடனும், இதமான நினைவுகளுடனும் சுகமாக முடிந்தது.

காலையில் வகுப்புக்குச் செல்ல தயாராகி கொண்டிருந்தோம்.

“என்னடீ... காலையிலே தலைக்கு ஷாம்பு போட்டுக் குளிச்சி... முடியைப் பறக்க விட்டுட்டு... கண்ணாடி முன்னாடி மணிக்கணக்குல நின்னு... என்ன பண்ணுற…”, என்று கண்ணடித்துச் சிரித்தாள் கமலா.

அவள் சொன்னதெல்லாம் உண்மை. அவளுக்கும்தான் என்னைப்பற்றி தெரியுமே! என்றாலும், உடனே அதை ஏற்றுக் கொள்ள மனம் இடங்கொடுக்கவில்லை.

“காலையிலேயே உன் கிண்டல ஆரம்பிச்சிட்டையா…”, என்று சிரித்தேன்.

“இல்லடி... ஒனக்கு ரொம்ப புடிச்சப் புடவையக் கட்டியிருக்க... வெள்ளிக்கிழமையுமில்ல... விசேஷமான நாளுமில்ல... அப்புறமா எதுக்கு இந்த மினுக்கல்... ஏதோ மணம் வீசுதே!...”, என்று என் உள்ளத்தில் உறைந்திருக்கும் உண்மையை, உரைத்தாள் தோழி. என் மனதுக்குள் மகிழ்ச்சி மிளிர்ந்தது.

“போடி... உனக்கு... வேற வேலயில்ல... நான் என்ன... அவனைப் பார்க்கணும்னா போறேன்?. என்னைப் பார்த்து எவன் ரசிப்பான்?”, என்றேன் சிரிப்பினூடே.

“இப்படியெல்லாம் பேசினா சும்மா விட்டுருவேனா, கண்ணு!... எனக்கே அல்வா கொடுக்கிறயா செல்லம்!... இப்பதான் புரியுது... “, என்று என்னைக் கேலிச் செய்தாள், கமலா.

“என்ன புரியுது... உனக்கு?”, என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன்.

“வாசமில்லா மலருக்கு வாசம் வந்துட்டுப் போல இருக்கே!... இன்னைக்கு, உண்மையிலே நீ ரொம்ப அழகா இருக்க... உன் நீள் வட்ட முகத்தில் நீந்தி விளையாடும் இரு கண்களும் கதைகள் பல பேசுதுடீ... கண்களுக்கு மேலிருக்கும் அவை என்ன புருவங்களா... இல்லை... இல்லை... சேரன் கொடியிலிருக்கும் வில் போலல்லவா இருக்கிறது. நீண்ட மூக்கு, அதில் அணிந்திருக்கும் மூக்குத்தி, குவித்திருக்கும் உன் சின்ன இதழ்கள், அனைத்தும் உன் முகத்திற்கு எத்தனை அழகைக் கூட்டுகிறது... காற்றில் பறக்கும் உன் கார் கூந்தல் அந்த கார் மேகத்திற்கே சவால் விடுகிறது“, என்று வர்ணனைகளை அடுக்கிக் கொண்டே போன அவளை இடைமறித்து, “என்னடி... நல்லாத்தானே இருந்த... இப்ப உனக்குப் பித்துப் பிடிச்சிட்டுப் போல இருக்கு...”, என்ற என்னிடம், பொய் கோபம் கொண்ட தோழி, ” நான் பேசும்போது இடையில பேசாத... இன்னைக்கு உன்னைப் பார்க்கும் போது எனக்குப் பித்துப் பிடித்ததுப் போலத்தான் தோணுது... உன் அங்கங்கள் ஒவ்வொன்றும் அளந்து வைத்ததைப் போன்று பிரம்மன் உன்னைப் படைக்கும் போது எத்தனைப் பொறுமையோடுப் படைத்திருக்க வேண்டும். காதில் தொங்கும் ஜிமிக்கி, உன் அழகுக்கு அழகைக் கூட்டுகிறது. உன்னை நினைக்கையில், எனக்கு எத்தனைப் பொறாமையடி. நான் ஆம்பளயா பொறந்திருந்தா உன்னத்தான் கட்டியிருப்பேன்... எவனுக்குக் கொடுத்து வைச்சிருக்கோ என் செல்லம்!... தெரியலையே... இன்னைக்கு எப்படியும் உன்.... அவனைப் பார்த்துப் பேசியே ஆகணும்... என் தோழியின் மனம் கவர்ந்தக் கள்வனல்லவா அவன்”, என்று வசனம் பேசினாள்,கமலா.

தோழியின் வர்ணனையில் மனம் மயங்கிப் போனேன். கண்ணாடியில் மீண்டும் ஒருமுறை என்னழகை ரசித்தேன்.

“டீ... நான் சொன்னதெல்லாம் உண்மையான்னு கண்ணாடில பார்க்கிறயா?... நான் சொல்றதெல்லாம் உண்மைதான்டி... கிளியோபட்ராதான் கறுப்பினில் அழகு என்பார்கள். நான் அவளைப் பார்த்ததில்லை. நீ தான்டி உண்மையிலே கறுப்பழகி.” என்றாள் கமலா.

(அகத்தின் அழகு முகத்தில் என்பார்களே அது, இதுதானோ!)

“காலைல எங்க க்ளாஸுக்கு வா. அவனைக் காட்டித் தாரேன்... அவன் கூட நீ பேசு... பார்ட்டி எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்”, என்று என் மனதுக்குள் மறைந்து கிடந்த ரகசியத்தை, அவளுக்கு மறைமுகமாகத் தெரிவித்தேன்.

தோழியும் நானும் வகுப்புக்குள் நுழைந்த போது, அங்கே அவன் இன்லேண்ட் லெட்டரில் கடிதம் எழுதி கொண்டிருந்தான். வேறு யாரும் வகுப்பறையில் இல்லை.

“டீ! அவன்தான்டி பார்ட்டி”, என்று என் தோழியின் காதைக் கடித்தேன். காலடி சப்தம் கேட்டுக் கண்களை உயர்த்திய விஜயின் கண்கள், என் முகத்தில் நிலைத்து விட்டது.

(தோழி கூறியது உண்மையா? நான் என்ன அத்தனை அழகா? என்னை, வைத்தக்கண் விலக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறானே!)

“நான் சொன்னேன்லா... நீ அப்ப நம்பல... இப்ப பார்த்தையா... உன்னை எப்படி ரசிக்கிறான் பாரு... டீ ... அவனும் அழகாத்தான் இருக்கான்... நல்ல ஜோடிப் பொருத்தம்” என்று என் காதில் ஓதியவளுக்கு, இடுப்பில் ஒரு கிள்ளு கொடுத்தேன். வலி தாங்க முடியாமல் ‘அம்மா’ என்று கனைத்துவிட்டாள், கமலா. தோழி எழுப்பிய சத்தம் கேட்டுத் தன்னிலை அடைந்தான், விஜய்.

அசடு வழிய எங்களைப் பார்த்து, “குட்மானிங்”, என்று கூறிவிட்டு, கடிதத்தை மடக்கி நோட்டுக்குள் வைத்தான். நானும் அவனுக்கு, குட்மானிங் சொல்லி விட்டுத் தோழியை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

“நேற்று நீங்க நல்ல பாடுனீங்க”, என்று சொன்னவனை இடைமறித்த தோழி,

“என்ன...து... பாடுனாளா... ? படிச்சான்னு சொல்லுங்க...” என்று ஏகத் தாளத்தில் சொன்னாள்.

“அதெப்படி உங்களுக்குத் தெரியும்?... நீங்கதான் வேற க்ளாஸ் ஆச்சே”, என்று வெகுளியாய் கேட்டான்.

“நான்தான் மூணு வருஷமா இவக்கூட ஒரே அறையில குப்பக் கொட்டிட்டு இருக்கனே..”, என்று என்னைச் சுட்டிக் காட்டிக் கூறினாள், கமலா.

“ஓ! அப்படியானா காலேஜிலேயே ரூம் மேட்டா…” , என்று எதையோ கண்டுப்பிடித்தவன் போன்று கூறினான், விஜய்.

“ஆமா... என் உயிர்த்தோழி இவ ஒருத்திதான்...”, என்றாள் கமலா.

”அப்ப உங்க ரெண்டு பேருக்குள்ளும் எந்த ரகசியமும் இருக்காது... சரிதானே!” என்றவன் தொடர்ந்து, ”அது இருக்கட்டும்... ஏன் ‘வாசமில்லா மலரிது’ பாட்டப் பாடினீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா...” என்று வினவினான்.

“அதுதான் அவளுடய ஆஸ்தான பாட்டு... யாரு பாடச் சொன்னலும், அந்தப் பாட்ட மட்டும்தான் பாடுவா... ”, என்றாள் தோழி, வேதனையோடு.

“சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்கல்ல... இனிமேல் அந்தப் பாட்டப் பாடாதீங்க”, என்றான் அக்கரையோடு.

“ஏன்னு தெரிஞ்சிக்கலாமா...”, என்று புருவத்தைச் சுருக்கி, மென் சிரிப்போடு கேட்டேன்.

“அந்த பாட்டோட அர்த்தத்தப் புரிஞ்சுதான் பாடுறீங்கன்னு நினைக்கிறேன்... உங்களை, நீங்களே வாசமில்லா மலர்னு நெனச்சிக்கிட்டு... நீங்க வாழ்க்கையில வசந்தத்தைத் தேட உங்களுக்குத் தகுதியே இல்லன்ன, மனப் பாவனையில, அந்த பாட்டைத் தெரிஞ்செடுத்துப் பாடுறீங்கன்னு நினைக்கிறேன்... சரிதானா...”, என்ற அவனது கூற்றைக் கேட்டு, நானும் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நேற்று அதைத்தானே கமலாவும் கூறினாள்.

அவன் தொடர்ந்தான். “நீங்க எனனைப் போலக் கறுப்பா இருக்கிறீங்க... அதனால உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை. முதல்ல அந்த தாழ்வு மனப்பான்மையத் தூக்கி வெளிய போடுங்க... எல்லாம் சரியாகும்... உடலழகைப் பார்க்கிறவங்க நிறைய பேருண்டு. உள்ளத்தைப் பார்த்துப் பழகுகிறவங்களுமுண்டு. நீங்க வாசமுள்ள மலர்ன்னு நினைச்சுக்காங்க... வசந்தம் கண்டிப்பா, உங்களைத் தேடி வரும். உங்களுக்குன்னு ஒருத்தன் இனிமேல் பிறக்கப் போவதில்லை... நீங்க ரொம்ப அழகு... கலர் மட்டும் கொஞ்சம் கம்மி... அவ்வளவுதான்...”, என்றான், ஆறுதலாக.

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும், புண்பட்டிருந்த என் இதயத்திற்கு தூவல் கொண்டு வருடியதுப் போன்ற உணர்வைத் தந்தது.

“நீங்க சரியாத்தான் சொன்னீங்க .. நேத்தைக்கு நானும் இதைத்தான் சொன்னேன்...” என்றவள் என்னைத் தோளோடு இறுகப் பிடித்துக் கொண்டாள்.

சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம். என் வகுப்பு மாணவர்கள் வர ஆரம்பித்தனர்.

“நான் க்ளாஸுக்குப் போறேன்... சாயங்காலம் பார்க்கலாம்”, என்று கூறி, தோழி தன் வகுப்புக்குச் சென்றாள்.

நாட்கள் நகர்ந்தன... எமக்குள் நட்பும் வளர்ந்தது.
 
Top