கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா -15

Jothiramar

Moderator
Staff member
என் வானம்-15


அடுத்த பத்து நிமிடத்தில் ஹாஸ்பிடலை அடைந்தவன், காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வேக நடையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தான். எங்கும் அமைதியே சூழ்ந்து இருக்க, தேவா இருக்கும் அறையை நோக்கி வேகமாக சென்றவனின் கால்கள் சடன் பிரேக்கிட்டு நின்றது.


மொத்த குடும்பமும் அறைக்கு வெளியே அமர்ந்து இருப்பதை பார்த்தவன், மெதுவாக அவர்களை நோக்கி சென்றான்.


அனைவரின் முகமும் கவலையுடன் இருப்பதை போல தோன்றியது கிருஷ்ணாவுக்கு.


ஏன் இவங்க முகம் இப்படி இருக்கு? ஒரு வேளை நிலாவுக்கு ஏதும் ஆகிருக்குமா? என்று தோன்றிய உடனே, அவனது உடலில் ஒரு வித பதற்றம் தொற்றிக் கொள்ள, இதயத்தை என்னவோ செய்வது போல உணர்ந்தவன், வேகமாக அடியெடுத்து அவர்களை நெருங்கினான்.


ஏதோ ஒரு உந்துதலில், யாரோ வரும் அரவம் கேட்டு, தலையை நிமிர்த்தி பார்த்த அமுதவாணன், கிருஷ்ணாவை பார்த்துவிட்டு, கோபத்துடன் இருக்கையில் இருந்து எழுந்தவர், அவன் வரும் வழியை மறைத்தபடி நின்றார்.


எங்க வந்த? என்றவரின் குரலில், கோபமே இருந்தது.


இன்று மாலை வரை, மாப்பிள்ளை' மாப்பிள்ளை என்றழைத்து பேசிய பேச்சு தான் என்ன? தடபுடலாக நடத்திய மறுவீட்டு விருந்தின் சுவை கூட மாறவில்லை, அதற்குள்ளாக புது மாப்பிள்ளை கசந்து போய்விட்டதா? காரணம் என்னவோ, தன்னை பார்த்து முறைத்துக் கொண்டு நிற்பது மட்டுமல்லாமல் எங்க வந்த? என்று ஒருமையில் அழைப்பதையும் யோசித்துக் கொண்டு நின்றிருந்தான் கிருஷ்ணா.


திடிரென கேட்ட தன் அப்பாவின் கோபக்குரலில் திரும்பிய இளா, தலையிலும், கையிலும் போட்டிருந்த கட்டுக்களுடன் நின்றவனின் முகத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். முகம், உயரம் நடை உடை பாவனை இவற்றில் எந்த விதத்திலும் வித்தியாசமின்றி அச்சில் வார்த்தார் போல, ஒரே மாதிரி இருப்பவனை விழியகல பார்த்துக் கொண்டு நின்றாள்.


"அமுதவாணனின், முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றவனின் காதில், கிருஷ்ணா என்று அழைக்கும் குரல் கேட்டதும், சர்வமும் அடங்கி போனது.


கி ரு ஷ் ணா என்றழைப்பில், நிமிர்ந்து குரல் வந்த பக்கம் திரும்பியவன், தன் அம்மாவை பார்த்ததும், பேச்சற்று போய் நின்றிருந்தான். அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை பார்த்ததும், நொடியும் தாமதிக்காமல், தாய்மடியை தேடி ஓடும் கன்று குட்டியை போல, தன் அம்மாவின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தான் கிருஷ்ணா. அந்த ஆறறை அடி உயர குழந்தை தன் அம்மாவின் தோளில் புதைந்து, இத்தனை வருடங்களாக தன்னை அழுத்திக் கொண்டிருந்த மனபாரத்தை இறக்கி வைக்க இடம் கிடைத்ததும், அதை பிடிமானமாக பற்றி கொண்டான். இதுநாள் வரை இருந்த இறுக்கம் மறைந்து, மனது லேசானது போல உணர்ந்தவன், இதுவரை அவன் கட்டி வைத்து இருந்த மாய வலை வேரருந்த மரம் போல அறுந்து விழுந்தது. தன் அம்மாவின் ஒற்றை அழைப்பில், மடிந்து போன உயிருக்கு, புத்துயிர் கிடைக்க பெற்றான். இத்தனை வருடமும் தன்னையே மறந்து மற்றவர்களுக்காகவே வாழ்ந்து வந்தவனின், போராட்டமும் ஒரு முடிவுக்கு வந்தது.


தேவாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டானே, என்று கிருஷ்ணாவின் மீது மலையளவு கோபத்தில் குதித்து கொண்டிருந்த அமுதவாணன், தாய் மற்றும் மகனின் நிலையை எண்ணி குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.


என்னங்க!! இது, நம்ம தேவாவோட வாழ்க்கை பிரச்சனை, கொஞ்ச நேரம் கோபப்படாமல் அமைதியாக இருங்க, என்று கணவனின் கோபத்தை அறிந்த அகல்யா சற்று அமைதி காக்கும்படி அறிவுறுத்தினார்.


உண்மை வெட்ட வெளிச்சமாக தெரிய, இளாவோ கண்களாலேயே தன் கணவனை பொசுக்கி கொண்டிருந்தாள்.


இளா, ப்ளீஸ் எதுவும் பேசிடாதே நான் எல்லாத்தையும் உனக்கு சொல்லிடுறேன் என தயக்கத்துடன் கெஞ்சிக் கொண்டிருக்க, அவளோ, கண்களில் எதிர்பார்ப்புடன், இவன் அர்ஜுன் தானே, என்று அவனாக இருக்கக் கூடாதா! தான் காதால் கேட்டது அனைத்தும் பொய்யென்று ஆகி இருக்க கூடாதா! அர்ஜுன் உயிருடன் இருக்க வேண்டும் என்ற நப்பாசையில் மற்றொரு முறை விளிக்க, "சந்தோஷோ,


இவன் கிருஷ்ணா! என்றதோடு முடித்துக் கொள்ள, உண்மையை தாங்க முடியாமல், கீழே சரிய போனவளை தாங்கி பிடிக்கவும், கணவனின் கையை பட்டென தட்டி விட்டு தன் அப்பாவின் அருகே சென்று நின்று கொண்டாள்.


அனைவருமே ஒரு மனதாக அர்ஜுனை பற்றிய உண்மையை தேவாவிடம் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து அதை ஏற்றுக் கொள்ளவும் செய்தனர். ஆனால் விதி இங்கே தேவாவின் மூலமாகவே விளையாடியது.


தன்னையே யாரென்று தெரியாமல் இருப்பவளிடம், உன் கணவனாக இருப்பவன் அர்ஜுன் இல்லை அவனுடைய அண்ணன் என்று சொல்லத்தான் முடியுமா? அதை சொன்னால் அவளுக்கு புரியுமா? ஏற்கனவே இருக்கும் குழப்பம் போதாதென்று புதிய குழப்பமும் சேர்ந்து கொள்ள டாக்டரின் அறிவுறுத்தலின் படி தேவாவின் மனதில் எந்த விதமான அதிர்ச்சியான விசயத்தையும் சொல்ல கூடாது. இல்லையேல் ஏற்கனவே தன்னை மறந்து போய் இருப்பவளுக்கு புதிதாக எதையும் சொல்ல போய், அது அவளுடைய மன பிறழ்ச்சிக்கு காரணமாகிவிடும் பின்னர், தேவாவை குணப்படுத்துவது என்பது அரிதான ஒன்றாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்க, அனைவருமே அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.


அம்மா நிலா எப்படி இருக்கா? கிருஷ்ணாவின் கேள்வியில் அனைவரின் முகமும் கவலையடைந்தது.


அம்மா அமைதியாக நிற்பதை பார்த்த கிருஷ்ணா, அப்பா நீங்களாவது சொல்லுங்க நிலா எப்படி இருக்கா? என்று கேட்டதும் மௌனமே சாதித்தார். அதில் கோபம் கொண்டவன் ஏன் யாருமே, வாயை திறக்க மாட்டேங்குறீங்க? என் நிலாக்கு என்ன ஆச்சு! என்றவனின் குரலில் இருந்த கடுமையை சட்டை செய்த இளா, அவன் முன்னால் வந்து, என்ன சொன்னீங்க! என் நிலா வா? இது எப்போதிருந்து என்று நக்கலுடன் கேட்டாள்.


அவளின் நக்கலை கண்டுக்கொள்ளாதவன், அவள் கழுத்துல மூன்று முடிச்சை போட்டு என்னோட சரிபாதியா ஏத்துக்கிட்டவன் நான்! என் பொண்டாட்டி மேல எனக்கு அக்கறை இருக்காதா? இளாவை பார்த்து எள்ளலுடன் சொன்னான் கிருஷ்ணா.


அவன் அவ்வாறு சொன்னதும் தன் வாயை இறுக மூடிக் கொண்டாள் இளா? இதுல மட்டும் ஒத்துமையாத் தான் இருக்கானுங்க!! அண்ணனா இருந்தாலும் சரி, தம்பியாக இருந்தாலும் சரி, என சந்தோசத்துடன் வாய்க்குள் முனுமுனுத்தாள் இளா. அவளின் மனம் நிம்மதியுற்றது. எங்கே கல்யாண வாழ்க்கையும் பொய்த்து போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தவள், கிருஷ்ணாவின் பதிலில் நிம்மதி அடைந்தாள். ஆனால் தேவாவின் தற்போதைய நிலையை எண்ணியே கவலையில் ஆழ்ந்தாள்.


ஏன் எல்லாருமே அமைதியாக இருக்கீங்க? என் நிலாவுக்கு' என்ன ஆச்சினு இப்போ சொல்ல போறீங்களா? இல்லையா? என்றவனின் பார்வையை பார்க்கமுடியாமல் தலை கவிழ்ந்தனர்.


டேய் கிருஷ், இப்போ எதுக்கு இந்த கத்து கத்துற? தங்கச்சிக்கு என்ன ஆச்சின்னு தெரியனும், அவ்ளோ தானே, வா என்னோடு என்றவன், கிருஷ்ணாவை, தேவாவின் அறைக்குள் அழைத்து சென்றான் சந்தோஷ்.


அறைக்குள் நுழைந்தவன், தேவாவை பார்க்க அவளோ கதவு திறந்த சத்ததில் மூடிய விழியை திறந்தவள், உள்ளே வந்தவர்களை மிரட்சியுடன் பார்த்தாள்.


தேவாவின் பார்வை கிருஷ்ணாவை நிலைக்குழைய செய்தது. தன்னவளின் பார்வையில் இருந்த வேற்றுமை, கிருஷின் மனதை ஏதோ செய்தது.


நிலா, என்று மென்மையாக அழைக்க, அவனின் குரலில் ஈர்க்கப்பட்டவள், விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஆயிரம் கதைகள் பேசும்,

தன்னவளின் விழி வீச்சில்

கட்டுண்டு கிடப்பவன்,

இன்று அதே விழிகளில் தெரிந்த அந்நியத்தன்மையை கண்டு சினம் கொண்டான். டேய் சந்தோஷ் என்னடா? என்னை யார்னே தெரியாதவள் மாதிரி பார்க்கிறா? அவனின் கோபமான முகத்தை பார்த்து மிரண்டு போய் தன்னிரு விழிகளையும் இறுக மூடிக் கொண்டாள் தேவா.


டேய் கத்தாதடா!! தங்கச்சி பயந்துட்டு பாரு, என்று கிருஷை அடக்கிய சந்தோஷ், கிருஷை அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தவன் மெதுவாக, டேய் தங்கச்சிக்கு தலையில அடிப்பட்டதுல, பழைய நினைவுகளை இழந்துட்டா டா என்றது தான் தாமதம், வாட்!! என்ன சொன்ன?? என்னடா சொன்ன?? பழசை மறந்துட்டாளா? இவ பழசை மறந்தா நான் எப்படி டா, என் அர்ஜுனை கொன்றவனை கண்டுபிடிப்பேன் என்று சந்தோஷின் சட்டை காலரை கொத்தாக பற்றி தூக்கியவனை, பார்த்தவர்கள் நடுங்கவே செய்தனர்.


அப்போ இவ்ளோ நேரமாக என் நிலா, என் பொண்டாட்டின்னு பேசியது எல்லாமே நடிப்பு தானா!! என்று மனதில் நினைத்தவன் பார்வையாலேயே கேட்க, ஆமாம் என்பது போல சந்தோஷை பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.




சிவப்பேரிய கண்களுடன், உக்கிரமாக இருந்தவனை பார்த்து, அனைவருமே பயத்துடன் நிற்க, எங்கிருந்தோ வந்த சத்யா, டேய் கிருஷ் அவனை விடுடா என்று சந்தோஷை அவனிடம் இருந்து பிரித்தான்.


சத்யாவின் கையை உதறியவன், இங்கே எதுக்கு வந்த? ஏன் என் பின்னாடியே சுத்துறீங்க? உங்களுக்கு வேற வேலையே இல்லையா? போய் உன்னோட கமிஷ்னர்கிட்ட சொல்லிடு, இனி இந்த கிருஷ்ணாவோட உடம்புல காக்கி சட்டை ஏறாது என அழுத்தமாக கூற,


ஹாஹா என்ன சொன்ன காக்கி சட்டை ஏறாதா? இப்போ தானே அர்ஜுன்ற பேரில் இருந்து கிருஷ்ணா தனியாக வெளியே வந்துருக்கான், இன்னும் கொஞ்ச நாளில் ஏசிபி கிருஷ்ணாவும் வெளியே வந்துடுவான் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்.


அதே நேரம் கிருஷ்ணாவின் கண்ணம் வலிக்க திரும்பியவன், தன் அம்மாவின் உக்கிரமான பார்வையை தாங்க முடியாமல் தலைகவிழ்ந்தான். அப்போது தான் அவர் தன்னை அறைந்ததே தெரிந்தது.


மைந்தனின் கையை எடுத்து தன் தலையில் வைத்து கொண்ட அம்பிகை, அ அர்ஜுன் சூசைட் தானே பண்ணிக்கிட்டான் என்று கேட்க,


தன் அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல், தலைகுனிந்து நின்றவன், இடவலமாக தலையை அசைக்க, பெற்றவரின் கண்கள் கண்ணீரை சுரந்தது.


அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டோமே என நினைத்து அவர் தலையில் இருந்த கையை எடுக்க முயற்சித்தான் கிருஷ்ணா. ஆனால் அது முடியாமல் போகவும் நிமிர்ந்து தன் அம்மாவை பார்த்தான்.


தேவாவை, உனக்கு பிடிச்சி தானே கல்யாணம் செய்து கொண்டாய், என்று அடுத்த கேள்வியை கேட்டதும், அம்மாவின் தலையில் இருந்து தன் கரத்தை வேகமாக எடுத்தவன், இதைப்பற்றி அப்புறம் பேசலாம் என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான்.


கிருஷ்ணாவின் பதிலில் அனைவரும் அதிர்ந்து நிற்க!!


இங்கே என்ன நடக்குது? அர்ஜுன் சூசைட் பண்ணிட்டானு சொல்றீங்க,! ஆனால் உங்க புள்ள, மர்டர்னு சொல்றான். இங்கே என்ன தான் நடக்குது, என் பொண்ணோட வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா போச்சா, ஆத்திரம் தலைக்கேற, கைலாஷையும் அம்பிகையையும் பிடி பிடியென்று பிடித்துவிட்டார் அமுதவாணன். அவருக்கு கிருஷ்ணாவின் பேச்சு அதிர்ச்சியையும் அவன் நடத்தையை பார்த்து பயமும் கலந்து இருக்க, தேவாவை அவர்களோடு அனுப்ப கூடாது என தனக்குள் முடிவெடுத்துக் கொண்டார்.


கோபத்துடன் வெளியே சென்ற கிருஷ்ணா ஹாஸ்பிடல் கேட்டை நெருங்க அவன் முன்னால் திடுமென வந்து நின்ற சத்யாவை பார்த்ததும், எரிச்சலுடன் இப்போ என்ன தான்டா உனக்கு பிரச்சனை?


எதுக்கு இந்த பக்கம் வந்த? கிருஷ்ணாவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடியே கேட்டான் சத்யா.


ம்ம் காத்து வாங்க என்றான் நக்கலுடன், அவன் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.


எத வாங்குறதா இருந்தாலும், உள்ளேயே போய் வாங்கு என சொல்ல, என் நேரம் என்று தலையில் அடித்துக் கொண்டவன் திரும்பி தேவாவின் அறைக்கே சென்றான்.


அடுத்த நாள் விடியல் அழகாகவே விடிந்தது. யாருக்கு என்ன செய்ய் காத்திருக்கிறதோ, எத்தனை பேரோட வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழப் போகின்றதோ யாரும் அறியார். அனைவருமே ஒரு புதிய மாற்றத்திற்காகவே காத்திருக்கின்றார்கள்.


தேவாவின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அமுதவாணனுக்கு தன் கண்ணையே நம்ப முடியாமல் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தார்.


என்ன இது உள்ளே போனவர காணோம். இவ்ளோ நேரமாவா சுவாமி பிரசாதத்தை தேவாவுக்கு வச்சுவிடுறார் என்று நினைத்தபடியே, அவர் பின்னாலேயே வந்த அகல்யா பெட்டில் துயில் கொண்டிருந்த தேவாவையும், அவளுடைய கையை தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு உறங்கும் கிருஷ்ணாவை பார்த்ததும், அவனின் மனநிலையை கணிக்க முடியாமல், திணறலுடன் நின்றிருந்தனர் தம்பதியர்.




அதே நேரம் ஊரில் உள்ள அனைத்து செய்திதாள்களின் பக்கங்களையும் ஒரு வரி விடாமல் புரட்டி பார்த்து தான் தேடியது கிடைக்காமல், போக அவற்றை கிழித்து தூக்கி எறிந்து கொண்டிருந்தான் தர்மா.


அவன் தேடிய செய்தி கிடைக்காமல் போகவும், எரிமலையின் சீற்றத்தோடு எவரேனும் கையில் சிக்கினால் பஸ்பம் ஆக்கிவிடும் வெறியோடு காத்துக்கிடந்தான். பலியாட்டின் வரவிற்காகவே வெறியோடு காத்திருந்தான்.


"முதல் நாள், ஆக்சிடென்ட்டை வெற்றி கரமாக நடத்தியதும், அதில் வெற்றி அடைந்ததையும், நினைத்து சந்தோச கூச்சலுடன், சீட்டி அடித்தபடியே மாடியிலிருந்து பாட்டை ஹம்மிங் செய்து கொண்டே இறங்கியவன், அவனுடைய பிஏவின் சோகமான முகத்தை பார்த்து, டேய் சுரேஷ், சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்துல, உம்முனு இருக்க, எடு அந்த நியூஸ் பேப்பரை என் வாழ்க்கையிலேயே இன்னைக்கு தான் சந்தோசமான நாள், உங்க எல்லாருக்கும் என்ன வேண்டுமோ கேளுங்க! எல்லாமே கிடைக்கும் என்றவன், அந்த எல்லாமும் என்பதை அழுத்திக் கூறினான். முகம் மலர சொல்லியவனை பார்த்து உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தான் சுரேஷ்.


ஐயோ கடவுளே ஐயாவுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சா கூண்டோட கைலாசம் தான் என புலம்பிக் கொண்டிருந்தான்.


கைகள் நடுங்க நியூஸ் பேப்பரை எடுத்து தர்மாவிடம் நீட்டினான் சுரேஷ்.


அதை வாங்கியவன் அவசர அவசரமாக பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தானே ஒழிய, அவன் தேடும் செய்தி மட்டும் இல்லாமல் இருப்பதை பார்த்தவன், முகத்தில் கடுமை ஏறிட, டேய் சுரேஷ் என்னடா இது? உருத்தெரியாமல் செத்து போன லாரி டிரைவரோட சாவு இந்த பேப்பரில பிரிண்ட் ஆகி இருக்கு, ஆனால் இன்டஸ்டிரியலிஸ்ட் திரு கைலாஷ் அவர்களோட ஒரே மகனும் ஏசிபி கிருஷ்ணாவும், அவரது மனைவியும் கார் விபத்தில் மரணம் அடைந்தனர். அப்படின்ற செய்தி மட்டும் ஏன்டா வரல, என்று கர்ஜித்தவனின் சிம்ம குரலில் ஈரக்குலை நடுங்க நின்றிருந்தவன்,


ஐயா அவன் செத்து இருந்தால் இந்நேரத்துக்கு, டீவில பிரேக்கிங் நியூஸ்ல கூட வந்துருக்கும். ஆனால் இப்போ வரைக்கும் அப்படி ஏதும் வரல, இதுவே எனக்கு சந்தேகமாக இருக்கு. என்றவன் தலையை வலப்புறமும் இடப்புறமும் மாற்றி மாற்றி பார்த்தவன் மெதுவான குரலில், எனக்கு என்னமோ, நம்ம ஆளுங்க மேல தாங்க டவுட்டா இருக்குய்யா, என்று அழுத்தி சொல்லிவிட்டு நிறுத்த, கூண்டுக்குள் அடைப்பட்ட புலி போல குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசிக்கலானான் தர்மா.


ஏய் முதல்ல ஆக்சிடென்ட் ஸ்பாட் எங்கேனு அந்த தண்ட தீவிட்டீகளுக்கு போன் போடு, என்று உறும, இ இதோ போ போட்டுட்டேனுங்க என்றவன் அடியாளுக்கு போன் போட்டான். எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், சீக்கிரம் ஐயா வீட்டுக்கு வந்துடு என்று கட்டளையிட ஐந்தே நிமிடத்தில் பதறியடித்து கொண்டு வந்து நின்றான்.


பார்க்கவே காட்டு யானை போல கொழுத்து இருந்தவனோ, தர்மாவை பார்த்ததும் உள்ளுக்குள் நடுங்கியபடி நின்றிருந்தான்.


சொல்லுடா ஆக்சிடென்ட் ஆன இடம் எது, அவன் செத்தது உண்மை தானே! இல்ல என்னிடம் பொய் சொன்னியா? தர்மாவின் கர்ஜனையில் அவன் காலடியில் விழுந்தவன், ஐயா கார் வெடிச்சதை என் கண்ணால பார்த்துட்டு தாங்க உங்களுக்கு போன் பண்ணேன், அவன் தீயில் கருகி செத்து போய்ட்டான் என்னடா நான் சொல்றது உண்மை தானே, என்று அருகில் இருந்தவனிடம் கேட்க,


ஆமாண்ணே என்று அவனுடைய அல்லக்கைகள் கோரஸ் பாடவும்,


அப்போ செத்துப் போனவனை பற்றி ஏன் எந்த செய்தியும் வரல? என்றபடியே காலடியில் கிடந்தவனை எட்டி உதைத்தவன், அவனுடைய கழுத்தில் தன்னுடைய பூட்ஸ் காலால் மிதித்தான்.


அவன் செத்துட்டானா? அந்த ஏசிபி செத்துட்டானா? அவன் செத்திருந்தா இதுல ஏன்டா வரல? என்று எல்லா நியூஸ் பேப்பரையும் கீழே கிடந்தவனின் மீது தூக்கி போட்டான் தர்மா. அவனை விட்டால் கண்களாலேயே எரித்து விடுபவனை போல காட்சியளித்தான்.


தர்மாவின் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாதவனோ, ஐயா நான் சொல்றது நெசந்தாங்க!! காரு உருண்டுக்கிட்டே கீழே போய் தீ புடிச்சி எரிஞ்சு போச்சுங்கயா என்று உயிர் பயத்தில் நடுங்கியபடி சொன்னவனை ஒரு உதை உதைக்க அந்த மலைமாடோ சுவற்றில் மோதி சுருண்டான்.


டேய் சுரேஷ் அந்த இன்ஸ கூப்பிடுடா!! என்று கர்ஜிக்க, இதோ கூப்பிடுறேன் என்று வெளியேறினான்.
 
Last edited:
Top