கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என் வானிலே நீ வெண்ணிலா -17

Jothiramar

Moderator
Staff member
என் வானம்-17


தன் Tvs வேகோவை வீட்டின் கேட் முன்னால் நிறுத்தி ஹாரனை அடிக்க, வாட்ச்மேன் வேகமாக வந்து கேட்டின் கதவை திறந்து விட்டு சல்யூட் வைக்க, அண்ணா என்ன இதெல்லாம் என்று கடிந்து கொண்டாள் தேவா.


பழகி போச்சு பாப்பா என்றார் வெள்ளந்தியாக, இருங்க டேடிக்கிட்ட சொல்லி உங்க சேலரியில் அமௌண்ட்டை குறைக்க சொல்றேன் என்று மிரட்ட, சரி பாப்பா என்றார் அதற்கும், அவர் முகத்தில் பயம் வேதனை வருத்தம் இது எதுவுமே இல்லாமல் இருப்பதை பார்த்தவள், என்ன அண்ணா உங்க பேஸ்ல ஸ்மைல் மட்டும் தான் இருக்கு.


ஐயா எனக்கு கொடுக்கிற சம்பளமே அதிகம் பாப்பா அதுல கொஞ்சம் குறைச்சா கூட எனக்கு கவலை இல்லை ஒன்டி கட்டையா இருக்கிறவனுக்கு அம்புட்டு பணம் எதுக்கு தாயி.


உங்களுக்கு இப்போ என்ன வயசாகிட்டு நூத்து கிழவன் மாதிரி பேசுறீங்க! முதல்ல உங்களுக்கு ஒரு பொண்ண பார்த்து கல்யாணத்தை பண்ணி வைக்கனும், அண்ணி வந்துட்டா நீங்க சரியாகிடுவீங்க என்று மிரட்டி விட்டு சென்றாள்.


தன் மீது பாசம் வைத்திருக்கும் எஜமானரின் மகள் மீது அளவு கடந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் வாட்ச்மேன். தன் கடந்த காலத்தில் பட்ட அவமானமும் வலியும் அவர் மனதில் ஆறாத ரணமாக இருக்க கல்யாணத்தையே வெறுத்துவிட்டு தனியாளாக இருக்கிறார். இந்த குடும்பத்திற்கு விஸ்வாசமான ஆள். பெயர் உத்தமன்.


தலையில் இருந்த ஹெல்மட்டை கழட்டி, வண்டியில் மாட்டியவள் தன் காலேஜ் பேக்கோடு உள்ளே சென்றாள் தேவா.


என்னடி வரும் போதே வாட்ச்மேனை மிரட்டிக்கிட்டு வர என்றார் தேவாவின் அம்மா குணமதி. மாம் என்றவள், ஆச்சரியம் பொங்கும் விழிகளால் பார்த்தாள் தேவா.


எப்படி மம்மி நான் வாட்ச்மேன் அண்ணாவை வம்பிழுத்தேனு கரெக்டா சொல்றீங்க என்றவள், எதிர்பாராத நேரம் அவரின் கண்ணத்தில் முத்தமிட்டு சிட்டாக பறந்தாள்.


கழுத கழுத எப்போ பாரு என் கண்ணத்தை எச்சி பன்றதே வேலையா போச்சு என்று செல்லமாக திட்டியவர், மகளுக்கு காபியையும் ஸ்நாக்ஸையும் எடுத்துக் கொண்டு சென்றார்.


ப்ரஷ் ஆகி கீழே வந்தவள், தன் அம்மா கொடுத்த காபியை வாசம் பிடித்தவள், பேஸ் பேஸ் காபின்னா அது என் அம்மாவோட பீல்டர் காபி மாதிரி வரவே வராது என்று தாளம் போட, அதிகப்பிரசங்கி தலையை ஆட்டாமல் நேராக இரு என்று சொன்னவர், அவள் இரு மடக்காக சுற்றி போனிடைல் போட்டிருந்த முடியை விரித்து விட அதுவோ இடையை தாண்டி இருந்தது.


தேவா எவ்ளோ அழகான நீளமான கூந்தல் உனக்கு அதை அழகா பின்னல் போட்டு பூ வச்சிக்கிட்டு, என்றவரின் பேச்சில் இடைப்புகுந்தாள் தேவா.


ஏன்மா அதோட விட்ட குஞ்சம் வைத்து பின்னல் போட்டு, நாலு சரம் மல்லி பூவை தலையில வச்சிக்கிட்டு முகத்துக்கு மஞ்சள் பூசி நெத்தியில செஞ்சாந்து வைத்து, காதுல ஜிமிக்கியை போட்டுட்டு தழைய தழைய புடவையை கட்டிக்கிட்டு காலேஜிக்கு போறேன் என்று நக்கலாக சொல்ல,


தேவா ஏன் அதோட விட்ட கல்லூரி வாசலில் மணமகன்களை நிற்க வைத்து ஒரு சுயம்வரத்தையே ஏற்பாடு செய்திட சொல்லவா என்றபடியே அருகே வந்து அமர்ந்தாள் கவிநிலா தேவாவின் அக்கா.


வாங்க ரிப்போர்ட்டர் மேடம் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்திருக்கீங்க? என்ன டேமேஜ் பன்னவா என்றாள் பதிலுக்கு.


வாய் வாய் பெரியவங்க கிட்ட மரியாதையா பேசனும்னு தெரியுதா எல்லாம் உன் அப்பா கொடுத்த செல்லம், சின்ன பொண்ணு செல்ல பொண்ணுன்னு ஆம்பள புள்ள மாதிரி வளர்த்து விட்டிருக்கார் அவரை சொல்லனும், என்று தன்னவரையும் திட்டியவர், தேவாவின் மோவாயில் லேசாக தட்டியவர், இந்த வாய் மட்டும் இல்லனா உன்ன ஒரு நாய் கூட மதிக்காதுடி ஏன்டி இவ்ளோ பேசுற அங்கலாய்த்தார் குணமதி.


மகளை கடிந்து கொண்டே அவளுடைய தலையில் எண்ணெய் தடவி பின்னலாக போட்டுவிடவும் மறக்கவில்லை குணமதி.


தேங்க்ஸ் மம்மி என்று அவர் கண்ணத்தின் அருகே செல்ல, தேவா என்று பல்லை கடிக்கவும், இருங்க டேடி வீட்டுக்கு வரட்டும் என்று தாயை மிரட்ட, அடிங்க என்ற தன் அம்மாவின் அடியில் இருந்து தப்பித்து அறைக்குள் ஓடினாள்.


மாம் நான் ஒரு முக்கியமான வேலையா வெளியே போறேன் என்ற மகளை பார்த்தவரின் முகத்தில் கவலை படிந்தது.


அம்மாவின் முகத்தில் இருந்த கவலையை பார்த்த கவிநிலா, மாம் ப்ளீஸ் இப்படி உங்க ஃபேஸ் சுருங்கி போனா, என்னால நிம்மதியா வொர்க்கை பார்க்க முடியாது என்ற கவிநிலாவை பார்த்தவரின் முகத்தில் பயமே அதிகமாக இருந்தது.


கவி நீ ஒவ்வொரு முறை வெளியே போகும் போதும் எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு. பேசாமல் இந்த வேலையை விட்டுட்டு நம்ம கம்பெனியை எடுத்து நடத்த கூடாதா? அவர் குரலில் இருந்த ஆதங்கத்தை கண்டவள், மாம் ப்ளீஸ் ரிப்போர்ட்டர் ஜாப் எனக்கு எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் ப்ளீஸ் டோன்ட் ஆர்க்கியூ வித் மீ என்று சலித்து கொண்டாள் கவிநிலா.


என் பேச்சை யார் தான் கேட்கிறீங்க பார்த்து பத்திரமா போய்ட்டு வா என்று மகளை அனுப்பி வைக்கவும் தவறவில்லை.


மாம் ஒரு முக்கியமான லீட் ஒன்னு கிடைச்சிருக்கு. வெளியே தெரியாமல் சில இல்லீகல் வேலை நடந்துட்டு இருக்கு. அதை வெளிச்சித்துக்கு கொண்டு வந்துட்டா போதும் நிறைய பேரோட லைஃப் சேவ் ஆகும் என்று சொன்னவளுக்கு, தன் குடும்பமும் அதில் சிக்கப்போவதை அறியாமல் போனாள்.


தேவாவின் அப்பா இளவேந்திரன் தன்னுடைய கம்பெனியில் இருந்து வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார். டிரைவர் வண்டியை ஓட்ட கண்களை மூடி யோசனையில் அமர்ந்திருந்தார். அவர் நெற்றியில் உள்ள சுருக்கத்தை முதன் முறையாக பார்த்த டிரைவர், ஐயாவுக்கு என்ன பிரச்சனை என மனதுக்குள் நினைத்துக் கொண்டே காரை ஓட்டினான்.


இருபது வருடங்களுக்கு முன்பு சிறிய அளவிலாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்பின்னிங் மில் இன்று கோயம்புத்தூரிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. இளவேந்திரனின் அயராத உழைப்பினால் தொழில் வளர்ச்சியடைந்ததே தவிர வீழ்ச்சியடையவில்லை. அவர் முதன் முறையாக ஆரம்பித்த தொழில் என்பதால் வெகு சிரத்தையாக கம்பெனியை நடத்தினார்.


அதன் பிறகு பல தொழில்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தினாலும், இந்த தொழிலின் மீது தீராத ஒரு வகை பந்தம் இருந்தது. ஆனால் இன்று முதன் முறையாக யூனியன் பிரச்சனை புதிதாக தலை தூக்கவும் இந்த பிரச்சனை எங்கு எப்படி ஆரம்பித்தது என்று தெரியாமல், யோசனையில் ஆழ்ந்தார்.


கார் வீட்டை அடைந்ததும் வாட்ச்மேன் கேட்டை திறக்க, கார் உள்ளே சென்றது.


எப்போதும் தன்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு செல்லும் முதலாளி, இன்று தன் முகத்தை கூட பார்க்கவில்லையே என்று வாட்ச்மேன் உத்தமனோ மனம் வருந்தி நின்றார்.


மாம் அப்பா வந்தாச்சு என்று பால்கனியில் நின்றிருந்தபடி தன் அப்பாவின் வரவை கண்ட தேவா மாடியிலிருந்து கத்திக் கொண்டே கீழே இறங்கினாள்.


அவளின் கத்தலை கேட்டு வெளியே வந்த குணமதி, வாலு மட்டும் தாண்டி உனக்கு முளைக்கல, என்று திட்டிவிட்டு வாசலுக்கு விரைந்தார். போ மா என்று உதட்டை பிதுக்கியவள், ஹாய் டேடி என்று அவர் அருகே செல்ல, வழக்கமாக மகளை பார்த்தவுடனே முகத்தில் அரும்பும் புன்னகை இன்று காணாமல் போயிருந்தது.


தேவா உன் டேடிக்கு தலைவலியாம் சோ டிஸ்டர்ப் பன்னாதே என்ற அம்மாவின் குரலில் இருந்த கடுமை, தேவாவை அமைதியாகிட வைத்தது.


தன் அறைக்கு சென்று பெட்டில் படுத்து கண்களை மூடியவளின் விழிகளுக்குள் காலையில் பார்த்தவனின் முகமே தெரிய மூடியிருந்த கண்மணிகள் இரண்டும் திறந்தது.


ஐயோ யார்டா நீ? ஏன்டா என்னை இம்சிக்கிற? என்றவளோ தலையணையை தன் கைகளால் குத்தினாள்.


பிறகு பால்கனி கதவை திறக்க, தோட்டத்தில் இருந்த மல்லிகை பூவின் வாசம் அவளுடைய மனதை வருட, பூவின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தவளோ இமை மூடி நின்றாள். மூடிய இமைகளுக்குள் அவனுடைய முகம் தெரிய அதுவும் நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டு இருக்க அவனுடைய கண்களோ இமைக்காது தன்னையே பார்த்தபடி இருக்கவும், கண்களை திறந்தாள். டேய் தெரியாத்தனமா உன்னை அடிச்சிட்டேன் நீ யாரு என்னன்னு கூட எனக்கு தெரியாது. இதுக்கு முன்னால உன்னை நான் பார்த்ததே இல்ல ஆனாலும், இன்னைக்கு என் கண்ணை மூடினா உன் முகம் தான் வருது என்று பெண்ணவள் புலம்பிக் கொண்டிருக்க… தேவாவின் புலம்பலுக்கு காரணமானவனோ, தன்னுடைய வேலையில் பிஸியாக இருந்தான்.


அலையாய் படர்ந்திருந்த கேசம் அவன் நெற்றி உச்சியில் இருக்கும் காயத்தை மூடி மறைத்திருந்தது. அதே நேரம் அவனுடைய மொபைல் ரிங்காகவும், யார் என்று பார்த்தவன், உடனே தொடுதிரையை அழுத்தி ப்ளூடூத்தினை காதில் சொருகினான்.


டேய் அண்ணா எங்கேடா இருக்க?


ஏன்டா?


நீ என்னை பார்க்க வந்தாயா இல்ல உன் டியூட்டியை பார்க்க வந்தாயா? என்றவனின் குரலில் கோபம் அதிகமாக இருந்தது.


ரெண்டும் தான்டா அர்ஜு, ஒரு அக்யூஸ்ட் இங்கே தலைமறைவா இருக்கிறதா லீட் கிடைச்சதால தான் வந்தேன் அப்படியே உன்னையும் பார்க்கனும், அம்மா முக்கியமான விசயம் சொல்ல சொன்னாங்க! என்று சொல்ல, அர்ஜுனின் முகம் கோபத்தில் சிவந்தது அடுத்த வார்த்தை பேசாமலேயே போனை துண்டித்தான்.


சிறிய வயதில் இருந்தே வேலைக்காரர்களால் வளர்க்கப்பட்டதால் தாயன்பும் தந்தையின் வழிகாட்டலும், அண்ணனின் அரவணைப்பு எதுவும் இன்றி வளர்ந்தவனுக்கு விவரம் புரியத் தொடங்கிய போது ஏன் தான் மட்டும் தனியாக இருப்பதற்கான காரணம் தெரிந்து கொண்டவனால், பெற்றவர்களின் மீது கோபமே அதிகரித்தது. தன்னைப் போலவே உருவத்தில் இருக்கும் அண்ணனை ஏற்றுக் கொள்ள முடிந்தவனால் மற்றவர்களை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.


கிருஷ்ணாவுக்கு தன் தம்பியைப் பற்றின உண்மை தெரிய ஆரம்பித்தவுடனே, வீட்டில் உள்ளவர்களிடம் சண்டையிட்டு தன் தம்பியை பார்க்க வந்துவிட்டான். இருவரும் பேசி பழகி தங்களுடைய கவலைகளையும் சந்தோசங்களையும் பகிர்ந்து கொண்டாலும், வெளியுலகில் தன் தம்பி ஒருவன் இருப்பதையே மறைத்து விட்டனரே என்று மனதுக்குள் கவலையடைந்தான்.


ஜாதகத்தால் எங்கள் இருவரையும் பிரித்து விட்டிர்களே அம்மா அப்பாவோட அன்பு மொத்தமும் எனக்கு மட்டும் தானே கிடைத்து இருக்கு அர்ஜுனுக்கு இல்லையே என்று வேதனையடைந்த மகனை தேற்ற முடியாமல் கண்ணீர் விட்டார் அம்பிகை.


இதோ பார் கிருஷ்ணா, உங்களோட இருபத்தி ஐந்து வயது பூர்த்தியான பிகு தான் அர்ஜு நம்ம கூட வந்து தங்க முடியும் எனக்கு என் ரெண்டு பேரன்களோட உசுரு ரொம்ப முக்கியம் என்று உத்தரவிட, கிருஷ்ணா அர்ஜுனுக்காக அமைதியாகிட, அர்ஜுன் கிருஷ்ணாவுக்காக என இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தனர்.


ஆனால் அர்ஜுன் வெறுக்கும் ஒரே நபர் அவனுடைய பாட்டி மட்டுமே, தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமாக அவரை தான் நினைத்தான்.


அர்ஜுன் போனை துண்டித்ததும், தன் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவனின் கண்கள் பளபளத்தது.


அர்ஜுனின் நம்பருக்கு தொடர்பு கொள்ள அதுவோ சுவிட்ச் ஆஃப் என்று வரவும் சீட்டில் மொபைலை தூக்கி எறிந்தவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து தன் வீட்டை நோக்கி செலுத்தினான்.


அதே நேரம் வெளியே போக தயாராகி வந்த தேவாவை பார்த்த குணமதியோ, இந்த நேரத்தில் எங்கேடி போற?


ம்மா இளாவை பிக்கப் பன்ன போறேன் நைட் நம்ம வீட்ல தான் ஸ்டே பண்ணுவா, காலையில் காலேஜிக்கு போய்ட்டு ஹாஸ்டலுக்கு திரும்பிடுவா என்று சொல்ல, சரி சரி பத்திரமா போய்ட்டு வா மணி இப்போவே எட்டு என்று எச்சரித்து அனுப்பிவைத்தார்.


தேவாவின் கண்கள் இப்போதும் அலைப்புறுதலுடன் யாரையோ தேடியபடியே இருந்தது.


தேவா அவனை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சி, ஒரே ஒரு சாரி கேட்டா தான் உன் மனசு அடுத்த வேலையை செய்ய ஆரம்பிக்கும் என்று தன் நெஞ்சில் கையை வைத்து தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்ட பின் சற்று நிம்மதியாக உணர்ந்த தேவா, தன் வண்டியை ஜங்ஷனை நோக்கி விரட்டினாள்.


தேவா ரயில்வே ஸ்டேனை அடையும் நேரம் மக்கள் கும்பலாக வெளியே வருவதை கண்டவள், கூட்டத்திற்குள் தன் லேசர் விழிகளால் தோழியை தேடினாள்.


தன் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்த விளக்குகளின் உதவியால் அந்த இடமே பகல் போல ஜொலித்துக் கொண்டிருந்தது.


தன்னுடைய மொபைலை எடுத்து இளாவின் நம்பரை அழுத்திவிட்டு காத்திருந்தாள் தேவா.


எதிர்முனை போனை அட்டென்ட் செய்ததும், ஏய் எரும எங்கேடி இருக்க? உனக்காக எவ்ளோ நேரமாக வெயிட் பன்றது என்று சலித்துக் கொண்டாள் தேவா.


ஹேய் டூ மினிட்ஸ் டி இதோ வந்துட்டேன்.


சீக்கிரம் வந்து தொலைடி அவனவன் பார்வையே சரியில்ல என்று தன் கோபத்தை இளாவிடமே காட்டினாள்.


ஹேய் ஸ்டாப் ஸ்டாப் உன் பேச்சை நிறுத்து தாயே, நான் வந்துட்டேன் என்று தேவாவின் பின்புறம் வந்து நின்றாள் இளா.


இளாவின் குரலை கேட்டு திரும்பிய தேவா, உன்ன என்று கையை ஓங்கவும், தன் கண்ணை மூடினாள் இளா.


என்ன ரவுடி அமைதியா இருக்கா, என்று வாய்க்குள் முனகியவள் மெதுவாக தன் ஒற்றை கண்ணை திறந்து பார்க்க தேவாவோ சிரித்துக் கொண்டு நின்றாள். ஏய் எரும கண்ணை தொற முதல்ல, இப்போவே மணி ஒன்பதுக்கு மேல ஆகிட்டு இந்த டிராபிக்ல வீட்டுக்கு போய் சேருவதற்குள், நாம ஒரு வழி ஆகிடுவோம் என்று அவசரப்படுத்த, தேவா பசிக்கிதுடி லைட்டா ஏதாவது சாப்பிட்டு விட்டு போகலாம் டி என்று சொல்ல, ஹேய் இரு அம்மாகிட்ட நமக்கு சாப்பாடு வேண்டாம்னு சொல்லிடுறேன் என்றவள் போன் செய்து அவரிடம் உணவு வேண்டாம் என சொல்ல, அவரோ, நீ இப்படி ஏதாவது சொல்லுவேன்னு எனக்கு தெரியும், என்று போனை வைத்தார்.


இருவரும் வாய் ஓயாமல் பேசியபடியே உணவகத்தை அடைந்தனர்.


ஹோட்டல் டிரிம்ஸில் வண்டியை பார்க் செய்த பின் இருவரும் உள்ளே சென்று தங்களுக்கான இடத்தை தேடி அமர்ந்தனர்.


சர்வர் மெனு கார்டை வைத்து விட்டு செல்ல, அதிலிருந்து தனக்கு பிடித்தவற்றை வரிசையாக ஆர்டர் செய்த இளாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.


அடியே ஓமக்குச்சியோட கஸின் சிஸ்டராக இருந்துட்டு எம்புட்டு ஆர்டர் பன்ற? உன்னை பார்த்தால் யாராவது நம்புவாங்களாடி என்று தன் கண்களை அகலமாக விரித்தாள் தேவா.


ஹேய் கண்ணு வைக்காதடி நாளையில் இருந்து ஹாஸ்டல் சாப்பாடு தான், உனக்கு எங்கே தெரியப் போகுது என்னோட கவலை என்ற இளாவோ, கொஞ்சம் வாயையும் சேர்த்து மூடு கொசு உள்ளே போக போகுது என்று கடுப்படிக்க, தன் இருகையாலும் வாயை மூடிக் கொண்டாள் தேவா.


ஏய் உனக்கு என்ன வேண்டும் சீக்கிரம் சொல்லுடி என்று சொன்ன தோழியை முறைத்த தேவா, அருகில் இருந்த வெயிட்டரை பார்த்து, இளித்தவள், அண்ணா எனக்கு இரண்டு சப்பாத்தி மட்டும் போதும் என்று சொல்ல, அவனோ குறித்துக் கொண்டு போனான்.


ஏய் பக்கி இந்த ஒன் வீக்கா, வீட்டுல அம்மா வகை வகையா சமைச்சி போட்டத சாப்பிட்டுட்டு தானே வார அப்புறம் என்ன வந்தது.


அடி போடி நானும் வீட்டுல நல்லா ஒரு கட்டு கட்டலாம்னு ஜாலியா போனா, அவங்க ரிலேடிவ் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க! அங்கே போய் அது வேணும் இது வேணும்னு கேட்க முடியுமா? அதான் அங்கே சமத்து புள்ளயா நடிச்சிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி என்று அலுத்துக் கொண்டவளை முறைத்தாள்.


அதே நேரம் அவர்களின் இரண்டு வரிசைக்கு பின்னால் இருந்த இருக்கையில் இருந்து சத்தம் வர, ஹேய் இளா அங்கே என்னடி சத்தம் என்று கேட்டவளுக்கு பதிலை சொல்லாமல், வாயில் சிக்கனை தள்ளினாள்.


இளாவிடம் இருந்து பதில் வராமல் போக, உன்ன போய் கேட்டேன் பாரு என்ன சொல்லனும், என்று தலையில் அடித்துக் கொண்டவள்… தன் பின்னால் திரும்பி என்னவென்று பார்த்த தேவாவோ அதிர்ந்தாள்.


அய்யோ இவனா? தேவா இப்போ போய் இவனிடம் சாரி கேட்டா அந்த பொண்ணுக்கு கிடைச்ச மாதிரி உனக்கும் லெஃப்ட்லயும் ரைட்லயும் அடி கிடைக்கும் போல இருக்கே!! இம்புட்டு கோவக்காரனா இருப்பானு தெரியாமல் போய்டுச்சே என்று கிருஷ்ணாவை பார்த்து உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் தேவா.


டேய் அண்ணா போதும் உன் கோபத்தை கண்ட்ரோல் பண்ணு இது பப்ளீக் ப்ளேஸ் என தடுக்க முயற்சி செய்தவனின் பின்புறம் தெரியவும், கூட இருக்கிறவன் யாரு? என நினைத்து அவன் முகத்தை பார்க்க முயற்சி செய்தவளுக்கு தோல்வியே மிஞ்சியது.


இதோ பார் பொண்ணாச்சேன்னு ஒரே அடியோட விடுறேன். இதே மாதிரி வேற யாரிடமும் நடந்துக்காதே என எச்சரித்து அனுப்பிவைத்தவன், ஆத்திரம் தீராமல் பாதி உணவோடு வெளியே சென்றான்.


அவன் போவதை அறிந்து பின்னால் செல்ல போன தேவாவின் கையை பிடித்து இழுத்தாள் இளா.


ஏய் எங்கேடி போற? ஒழுங்கா சாப்பிடு என்று மென்குரலில் சொல்ல, எரும கையை விடுடி அவன் போய்டுவான். நான் போய் ஒரு சாரி கேட்டுட்டு வந்துடுறேன் என சொல்லவும், எதே இப்போ ஒரு பொண்ணை அடிச்சானே அவனிடமா?


ஆமாம் என தலையை ஆட்ட,


அடியே அவன் ஏன் அடிச்சான்னு தெரியுமா உனக்கு என்று கேட்க, ம்கூம் என்று உதட்டை பிதுக்கியவளின் தலையில் குட்டினாள்.


அந்த பொண்ணு அவன் ஷர்ட்ல சாஸை கொட்டிட்டா அதுக்கு தான் இந்த அடி என்றதும் தன் கண்ணை விரித்தாள் தேவா.


என்ன சாஸை கொட்டினதுக்கா அந்த அடி, என்று வாயை பிளந்தாள் தேவா.


ம்ம் அவன் சரியான முசுடு போல இருக்கு நமக்கு பின்னால தான் வந்தான். அழகா இருக்கானேன்னு முகத்தை பார்த்தா, மூஞ்சை கடுகடுன்னு வச்சிட்டு இருந்தான். நமக்கு இந்த சிடுமூஞ்சியை பிடிக்காதே அதான், நீ இரண்டு டேபிள் தள்ளி உட்கார்ந்ததும், நல்லதா போச்சுன்னு சைலண்டா உன் பின்னாடியே வந்துட்டேன் என்றாள் இளா.


இளா சொன்னதை கேட்ட பிறகு தேவாவின் முகத்தில் யோசனை பரவியது.


"நோ, இளா, "அவன் அடிச்சாலும் பரவாயில்லை, நான் அடிச்சது தப்பு, சாரி கேட்டா தான் தூக்கமே வரும் என்று சொன்னவள், அவளின் பதிலை கூட எதிர்பாராமல், ஹோட்டலுக்கு வெளியே சென்று, அவனை தேடினாள்.


தன் இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு, இது அவனாக இருக்குமா என்று உள்ளம் கேட்க, போய் தான் பார்ப்போம் என்று முடிவு எடுத்தவள் மெதுவாக, அவன் அருகே சென்றவள், தயக்கத்துடன் ஹலோ சார் என்று அழைக்க, எஸ் என்ற புன்னகையோடு திரும்பினான் அவன்.


அந்த அவன் யாரா இருக்கும்னு இந்நேரம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் 😉

 
Top