கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எமிலியும் ஞமலியும்

Puvana Chandrasekaran

Moderator
Staff member
எமிலியும் ஞமலியும்

கல்யாணம் செய்து கொண்டால் அது நிச்சயமாகக் காதலித்துத் தான் என்று இளமாறன் எப்போதோ முடிவு செய்திருந்தான். ஆனால் தூய தமிழ்ப் பெண் தான். வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி அதுவும் பிழையில்லாமல் தமிழை உச்சரிக்கும் பெண்ணாகப் பார்த்துக் காதலிக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் காதல் தேவதைக்கு இந்த நிபந்தனைகள் எதுவுமே பிடிப்பதில்லை. மன்மதன் கரும்பு வில்லில் மலர் அம்புகளை எய்கின்ற போது நம்முடைய நேயர் விருப்பத்தைக் கேட்டுக் கொண்டா விடுகிறான்? எங்கெங்கோ முடிச்சுப் போட்டு வைப்பதில் வித்தகன் ஆயிற்றே அவன்?

இளமாறனின் மனதில் இவ்வளவு அச்சம் இருந்ததற்குக் காரணம் அவனுடைய அப்பா தான். அவர் ஒன்றும் காதலுக்கு நம்பியாரே இல்லை. காதலைப் போற்றிக் கவிதை பாடுபவர். வேறு ஒன்றுமில்லை. தமிழ் கற்றுக் கொடுக்கும் தமிழாசிரியர்.

வீட்டில் சுத்தத் தமிழ் தான் பேசவேண்டும்.
அதுவும் உச்சரிப்பில் தப்பு இருந்தால் நெற்றிக்கண் திறந்து நக்கீரனையே எரித்த சிவனை விடக் கோபத்தில் மிஞ்சி விடுவார்.

இளமாறன் மூத்த மகன். ஆழினி அவனுடைய தங்கை. தமிழாசிரியர் குமரன் மற்றும் அவருடைய துணைவியார் மலர்விழிக்கு இரண்டே குழந்தைகள். இளமாறனும் ஆழினியும் தான்.

குழந்தையில் இளமாறனுக்கு 'ழ' சொல்ல வராது. பிரம்படிகளும் கணக்கில்லாத தண்டனைகளும் சேர்த்து அவனுடைய நாக்கை வளைத்து ழவைச் சரியாக ‌உச்சரித்தான்.

" தமிழுக்கே அழகு 'ழ' தானே! அதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை என்றால் கேவலம் இல்லையா?" என்று பொருமித் தள்ளிவிடுவார். பாவம் மலர்விழி அவருடைய தண்டனைகளுக்கு பயந்து பாதிநேரம் சைகைகளிலேயே பேசிவிடுவாள். ஆனால் முடிந்த வரை குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றி விடுவாள்.

இளமாறன் படித்து முடித்து ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறான். தங்கை ஆழினி‌ மருத்துவக் கல்லூரி மாணவி.

இளமாறனின் டீமில் வந்து சேர்ந்தாள் அழகுப் புயலாக ரோஸி. ரோஸி ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண் .
அம்மா ஆங்கிலோ இந்தியர். மதுரையைச் சேர்ந்தவர். அப்பா மலையாள தேசத்தவர்.

அதனால் ரோஸியின் வாயில் துள்ளும் தமிழில் அத்தனை விதமான உச்சரிப்புக் கொலைகளும் அநாயாசமாக நடைபெறும்.

"என்னா மேன், இன்னா பண்ணிக்கிட்டு இருக்குது? கொன்னம் ( கொஞ்சம்) நமக்கும் ஹெல்ப் பண்ணு மேன்" என்று அவள் ஆஃபிஸில் பேசும் கிள்ளைத் தமிழில் மயங்குபவர்கள் உடனடியாக அவளுடைய உதவிக்கு ஓடிவருவார்கள். அழகுன்னா அழகு. அப்படி அழகு! புதிதாகச் செடியில் மலர்ந்த ரோஜாப்பூ மாதிரி தான் இருப்பாள். அழகு தூக்கலாக இருக்கும் போது மொழி என்ன செய்யும்?

விசுவாமித்திரனின் தவத்தைக் கலைத்த மேனகையாய் இளமாறனின் பிரம்மச்சரிய வாழ்க்கையைத் தவிடு பொடியாக்கித் தரைமட்டமாக்குவதற்காகவே வந்த எழில் தேவதை தான் ரோஸி. ரோஸியும் அவனிடம் மயங்கி விட்டாள். இளமாறனும் மயங்கிவிட்டான். இரண்டு உள்ளங்களும் காதலில் விழுந்தன. நெருங்கியும் விட்டன.

இப்போது தனது காதலியை எப்படி வீட்டினருக்கு அறிமுகம் செய்து வைப்பது என்பது தான் இளமாறனுக்குப் பெரிய கவலை. அம்மாவை எளிதாக சமாளித்து விடலாம். கஷ்டமேயில்லை. அப்பாவை எப்படி சமாளிப்பது? அதுவும் ரோஸி வாயைத் திறந்து தமிழ் பேசினாலே அவருடைய பிளட் பிரஷர் எகிறி விடுமே? என்ன செய்வது?

"தாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாங் கலந்தனவே!"

என்று காதலைப் பற்றி சங்க இலக்கியப் பாடலைக் கற்பித்தவர் காதலைப் பற்றிப் புரிநாது கொள்ளாமலா போவார் என்று மனம் ஒருபக்கம் நினைத்தாலும் மறுபக்கம் அப்பாவின் தமிழார்வம் நினைவுக்கு வரும்போது இளமாறன் கவலையில் ஆழ்ந்தான்.

தமிழே தகராறு. இதில் ரோஸிக்குத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் வித்தியாசம் தெரியாது . தமிழையே கொஞ்சம் மூக்கால் பேசினால் மலையாளம் என்று தீவிரமாக நம்பும் பைத்தியக்காரி. தன்னுடைய அப்பாவை சந்தோஷப்படுத்துவதற்காக அடிக்கடி
மஞ்ஞப் பொடி( மஞ்சள் பொடி)
கொஞ்ஞம் ( கொஞ்சம்)
கஞ்ஞன் ( கஞ்சன்) என்றெல்லாம் வேறு பேசிப் பழகியவள் வேறு.

அப்பாவுக்கு மகனின் காதல் கலாட்டா எதுவும் தெரியாமல் திருமணத்திற்குப் பெண் பார்க்க ஆரம்பித்தார். அன்று காலை இளமாறன் அலுவலகத்துக்குக் கிளம்பியபோது இடியாக அந்த செய்தி கிடைத்தது.

" தம்பி மாறா, சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரமா வந்துரு. பொண்ணு பாக்கப் போகப் போறோம்" என்று குமரன் சொல்லத் திடுக்கிட்டு நின்றான் மாறன்.

" இப்ப என்னப்பா கல்யாணத்துக்கு அவசரம்?" என்று முனகினான். அவன் பேசியது அவனுக்கே கேட்டிருக்குமா என்பது சந்தேகம்.

" என்னடா சொல்லறே? கொஞ்சம் சத்தமாச் சொல்லு. என் காதில கேக்கலை".

" இன்னைக்கு வேலை நிறைய இருக்கு. மீட்டிங் வேற இருக்கு. வரமுடியுமான்னு தெரியலை."

" அதென்ன அப்படி வரமுடியாதபடி வேலை? ஒண்ணு இன்னைக்கு விடுமுறை போட்டுட்டு வீட்டிலயே இரு. இல்லைன்னா சாயந்திரம் நாங்கள் எல்லாரும் நேரே உன்னோட அலுவலகத்துக்கு வரோம். அங்கேயிருந்து பொண்ணு வீடு பக்கம் தான்" என்று தீர்மானமாகச் சொல்ல இளமாறன் பயந்தே போனான்.

" நீங்கள்ளாம் ஒண்ணும் வரவேணாம். நானே எப்படியாவது அனுமதி வாங்கிக்கிட்டு வரேன்" என்று சொல்லி விட்டுப் போனான். ஆஃபிஸில் வேலையே ஓடவில்லை. அன்றைக்கு ரோஸி வேறு வரவில்லை. வந்திருந்தால் அவனுடைய முகவாட்டத்தை வைத்துக் கண்டுபிடித்து அவனைத் தொணத்தியிருப்பாள்.

மாலையில் மாறன் வந்ததும் எல்லோரும் கிளம்ப, இளமாறன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சோகமாகவே வந்தான்.

அவர்கள் பார்க்கப் போன பெண் கொஞ்சம் அல்ட்ரா மாடர்ன் ஆக இருந்தாள். அவளைப் பார்த்ததுமே அப்பா, அம்மாவிற்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று அவர்களுடைய முகபாவங்களில் இருந்து இளமாறனுக்குத் தெரிந்தது.

அந்தப் பெண்ணே இளமாறனிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொல்ல மாறனும் போய்ப் பேசிவிட்டு வந்தான்.
மாறன் அந்தப் பெண்ணிடம் என்ன சொன்னானோ என்னவோ தெரியவில்லை , அவள் அந்த அறையில் இருந்து வந்ததில் இருந்து நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஆழினியிடம் அரட்டை அடிக்கக் குமரன் விரைவில் அங்கிருந்து கிளம்பி விட்டார். அவருடைய மனதிற்குப் பிடிக்கவில்லை. இளமாறன் தப்பித்தான்.

இளமாறன் தனியறையில் அந்தப் பெண்ணிடம் பேசியபோது தன் பெற்றோருக்கு நன்றாக ஆங்கிலத்தில் உரையாடும் பெண்ணைத் தான் பிடிக்கும் என்று கதை கட்டி விட்டிருந்தான். அதனால் தான் அவளும் அப்படிப் பேசினாள். இளமாறனின் திட்டம் வெற்றி அடைந்தது.

இதைப் போலவே ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது குளறுபடி செய்து இளமாறன் கல்யாண முயற்சிகளை ஒவ்வொன்றாகத் தோற்கடித்தான்.

குமரனுக்கு ஏதோ புரிந்து விட்டது போலத் திருமண முயற்சிகளை நிறுத்தி விட்டுக் இளமாறனிடம் கோபமாகவே இருந்தார்.

இளமாறனும் தினமும் காலையில் சீக்கிரம் கிளம்பி ஆஃபிஸ் போய்விட்டு, இரவு வெகுநேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பி வந்து அப்பாவை நேருக்கு நேர் சந்திப்பதையே தவிர்த்து வந்தான் .

ஆஃபிஸில் இளமாறனின் வாடிய முகத்தையும் சிடுசிடுப்பாக எல்லோரிடமும் எரிந்து விழுவதையும் கவனித்த ரோஸி, அவனைத் தூண்டித் துருவிக் கேட்டுக் கண்டுபிடித்து விட்டாள். ரோஸி பயங்கர புத்திசாலி.

" இன்னா மேன்? இதுக்கா இவ்ளோ ஃபியர் உனக்கு? நான் மேனேஜ் செய்யுது. நீ வொய் வொர்ரி. உங்க டேடா நானா, ஐ வில் ஸீ. அவரு எவ்ளோ டெரர்னு நான் பாக்கறேன் மேன்" என்று சொல்லி விட்டுப் போனவள், இரண்டு நாட்கள் கழித்து ஆஃபீஸ் வந்தாள்.

முகமெல்லாம் மலர்ந்து கிடந்தது. மழையில் நனைந்த செடி மாதிரி புத்தம் புது அழகுடன் வந்தாள்.

" நீ இன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு சீக்கிரம் வா மேன். உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் இருக்கு" என்றாள் ரோஸி. அவனைப் பார்த்துக் கண்ணடித்து சிரித்து விட்டு அந்த இடத்தில் இருந்து போய் விட்டாள். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

இளமாறன் பயந்து பயந்து வீட்டுக்கு சாயந்திரம் சீக்கிரம் திரும்பினான். வீட்டுக்குள் நுழைந்தவன் ஆவென்று வாயைப் பிளந்தான். வரவேற்பறையில் அப்பாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு ரோஸி உட்கார்ந்திருந்தாள்.

அப்பா உற்சாகத்துடன் அவனிடம் ரோஸியை அறிமுகப் படுத்தினார்.

" மாறா, இந்தப் பொண்ணு நம்ப பக்கத்து வீட்டுக்குக் குடி வந்திருக்கா. ரோஸின்னு பேரு. அவளும் அவளோட பாட்டியும் தான் இருக்காங்க. தமிழில எவ்வளவு ஆர்வம் இந்தப் பொண்ணுக்கு. தமிழ் கத்துக்க வந்துருக்கு என்னிடம்" என்று மகிழ்ச்சியுடன் அப்பா சொல்ல ரோஸி அவனைப் பார்த்து சிரித்தாள்.

" அங்கிள். ஐ நோ ஹிம். எங்க ஆஃபிஸ் தான் இவரு. ஹி ஈஸ் வெரி ரிசர்வ்டு. யார் கிட்டயும் பேசாது. உங்களை மாதிரி இல்லை அங்கிள். யூ ஆர் ஸோ ஸ்வீட்" என்று சொல்ல , அகமகிழ்ந்து போன குமரன் இளமாறனைப் பார்த்துப் புன்னகைக்கப் பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே போனான் இளமாறன்.

அடுத்த நாள் தான் ரோஸி அவனுக்கு நடந்த விஷயங்களை விளக்கினாள்.

ஒரு மாதத்திற்கு முன்னால் நிஜமாகவே வீடு தேடிப் போன ரோஸி அவள் பார்த்த வீடு இளமாறன் வீட்டுக்குப் பக்கத்து வீடு என்று தற்செயலாகத் தெரிந்ததும் காரியத்தில் இறங்கினாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு மாற்றி விட்டு மாலையில் தனது செல்லப்பிராணி நாய்க்குட்டியுடன் நடை பயின்ற சமயம் எதிரில் வந்த குமரனை சந்தித்தாள்.

குமரனைக் கண்டு வாலாட்டிக் கொண்டே பின்னால் ஓடிய நாய்க்குட்டியைத் துரத்தி ஓடினாள் ரோஸி.

" ஞமலி, ஞமலி" என்று அவள் கூப்பிட்டுக் கொண்டே அவள் ஓட ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் குமரன்.

தூய தமிழில் , ' ஞமலி' என்றால் நாய். ரோஸியின் நாயின் பெயர் எமிலி. அவளை வளர்த்த ஆயாவின் பெயரை‌ அவளுடைய ஞாபகார்த்தமாகச் சூட்டியிருந்தார். பழக்க தோஷத்தால் மூக்கால் உச்சரிக்கும் வழக்கத்தைக் கொண்ட ரோஸி ' எமிலி' என்று கூப்பிடுவது கேட்பவர்களுக்கு 'ஞமலி' என்று விழுந்தால் ஆச்சர்யம் இல்லை.

அப்புறம் என்ன? முதல் பந்திலேயே ஸிக்ஸர் அடித்த ரோஸி அப்பாவுடன் நட்புடன் பேசித் தனது குழந்தைத்தனமான பேச்சால் அவரைக் கவர்ந்து விட்டாள். தான் ஆங்கிலோ இந்தியப் பெண், நல்ல தமிழ் கற்றுக் கொள்ள ஆசையென்று சொல்லி அவரிடம் தமிழ் ட்யூஷனும் ஆரம்பித்து விட்டாள்.

ஒரே மாதத்தில் ரோஸி கொஞ்சம் தமிழும் அப்பா கொஞ்சம் ஆங்கிலமும் மலையாளமும் கலந்து பேச ஆரம்பிக்கக் களை கட்டியது. மனம் விட்டு சிரித்து சிரித்து எல்லோருடைய மனங்களிலும் இருந்த இறுக்கம் தளர்ந்து டென்ஷன் குறைந்தது. அம்மாவிடம் புடவை கட்டக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த ரோஸி அம்மாவையும் எளிதாகக் கவிழ்த்தாள். ஆழினியை வீழ்த்துவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாயில்லை. தன்னையும் இளமாறனையும் மற்றிய உண்மையை மறைக்காமல் அவளிடம் சொல்லியதால் வருங்கால அண்ணிக்கு உதவி செய்ய ஆழினியும் உடனே ரெடியானாள்.

" இன்று அண்ணன் காதலுக்கு உதவினால் நாளை அண்ணன் தன்னுடைய காதலுக்கு உதவுவான்" என்ற‌ நல்லெண்ணம் தான் ஆழினியின் மனதில்.

இப்படியாகத் தானே ஞமலி என்ற எமிலியின் உதவியால் இளமாறனின் காதல் கதை வெற்றிகரமாக சுபமாக முடிந்தது.

புவனா சந்திரசேகரன்,
10/07/2021.
 
Top