கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 1

Mrithula Ashwin

Moderator
Staff member



அத்தியாயம் - ஒன்று


கடலில் நீந்தி மிதந்து செல்லும் கப்பலில் பயணம் செய்வதே அலாதி சுகம். அதிலும் நடுக்கடலுக்குச் சென்று பிரம்மாண்டமான கப்பலில், மனதிற்குப் பிடித்தப் பெண்ணை தன் சரிப் பாதியாகவும், வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்கவும் தேர்ந்தெடுத்துத் திருமணம் புரிவதை நினைத்து எவ்வளவு ஆர்பரிப்பும், சந்தோஷமும் ஏற்படும்!.!

அந்தமான் தீவில், ஒரு பெரிய கப்பலில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மணமேடையில், அமர்ந்திருந்தவன் முகம் களையற்று, ஏதோ ஒருவகை யோசனை ரேகைகளை சுமந்திருந்தது. அவன் யாழினியன்.

அவன் அருகில் மணப்பெண்ணாக அமர்ந்தவளின் விழிகளோ, வாயிலையும், தன்னருகில் இருக்கும் வருங்கால கணவனையும் மாறி மாறி பார்த்தாள்.

அவளின் தவிப்பு, அவனுக்கு இல்லையோ? அல்லது இருந்தும் இல்லாததுப் போல நடிப்போ? என்று ஒரு பக்கம் குழம்பவும் செய்தாள்.

யாழினியன் மற்றும் அனுலேகாவின் சந்திப்பு... அது சந்திப்பே இல்லை. விதிவசத்தால், முக்கியமான நாளில், இருவரும் விழிகளால் நோக்கினர். அவ்வளவே!?.

எதையோ சொல்ல வந்தவளை, பிடித்து யாரென்றே தெரியாதவன் அருகில் அமர வைத்துவிட்டார்கள்.

அவனோ, மனதில் நினைத்தவளை விட்டுவிட்டு, எவளோ ஒருத்தியின் அருகே, அமர்ந்து மாங்கல்யம் பூட்ட காத்துக் கொண்டிருக்கிறான்.

அனுலேகா தன் சிந்தனையை, சற்றே பின்னோக்கி, முந்தைய தினத்தில், தனக்கும், தன் ஹாஸ்டல் அறையின் தோழிக்கும் நடந்த உரையாடலின் பக்கம் திருப்பினாள்.

"ஹே லேகா ப்ளீஸ் உன்னால மட்டும் தான் உதவ முடியும். நீ போய் இனியன் கிட்டப் பேசினா, அவர் கண்டிப்பா புரிஞ்சுப்பார்"

"அதை நீயே செய்யலாமே ஐஸ்.. ஒரு போன் செஞ்சு சொன்னாலேப் போதுமே.. நாம என்ன கற்காலத்துலயா இருக்கோம், தூது அனுப்ப?"

"அப்படி இல்ல லேகா.. இனியன் போனை அணைச்சு வெச்சிருப்பேன்னு முன்னாடியே சொல்லிட்டான்.. கண்டிப்பா எடுக்க மாட்டான். யாராவது அவனை பார்த்துப் பேசினா தான் உண்டு!!" என்று விடாமல் அனுலேகாவின் தோழியும் கூற,

"நான் அப்படி நினைக்கல ஐஸ்... ஈமெயில் அனுப்பு.. அவ்ளோ புரிஞ்சுக்கறவன், ஒரு மெசேஜ் பார்த்தும் சரின்னு சொல்லிடுவான்.. இல்லனா, உன்னவர் தான் பெரிய அப்பாடக்கர் ஆச்சே, கூடவே நாலு எடுபிடி டெக்கி (techie) வெச்சிருப்பான். அவங்க நம்பர் யாருக்காவது ட்ரைப் பண்ணி விஷயத்தை சொல்லு." என்று அவளும் வாதாடினாள்.

"ஹையோ அது எனக்கு தெரியாதா? இனியனுக்கு சொந்த விஷயத்துக்கு, ஆஃபீஸ் போன், அவன் செக்ரட்டரி போனுக்கு கூப்பிட்டா பிடிக்காது.. அதான் உன்னை இவ்ளோ கெஞ்சிட்டு இருக்கேன். உனக்கும் உன் துப்பறியும் மூளைக்கு ரெஸ்ட் கொடுத்த மாதிரியும் இருக்கும். அவன் இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்ச கப்பலோட டீடெயில்ஸ், என்னோட டிக்கெட்ஸ் எல்லாமே உனக்கு தரேன்.."

"நிறுத்து.. ஒரு தடவை அவன் ன்னு சொல்ற... இன்னொரு முறை அவர்ன்னு சொல்ற.. என்ன இந்த குழப்பம்?"

"இது ரொம்ப முக்கியமா இப்ப? இது வரைக்கும் அவன் இவன் ன்னு சொன்னது பரவாயில்லை.. இனிமே அப்படி கூப்பிடக் கூடாதுன்னு இனியனோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்."

"ஓ... ஆணாதிக்க கேரக்டர்?? அதான் கல்யாணத்துல இருந்து தப்பிச்சு ஓடறியா?" என்று அனுலேகா கேட்க, ஐஸ் என்பவளோ, ஆட்காட்டி விரலை உயர்த்தி பத்திரம் என்று அவளை எச்சரித்தாள்.

மீண்டும் ஐஸ், "எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் லேகா.. ஐ லவ் ஹிம்"

"இவ்வளவு அன்பை வெச்சுக்கிட்டு, நீ இப்படி நேரடியா உன் இனியனோட பேசாம, ஊருக்கு போறது எனக்கென்னமோ சரியாப் படலை.. நல்லா யோசிச்சு முடிவு பண்ணு" என்று நல்ல நண்பியாக அறிவுறுத்த,

ஐஸ், "நடிகையாகனும் ங்கிற என்னோட ஆசை, வெறும் கனவா இருக்கக்கூடாது ன்னு நினைக்கிறேன். அது என் லட்சியம், வாழ்க்கை குறிக்கோள்.

லட்சியமா காதலா ன்னு கேட்டா, இப்ப என் பதில் லட்சியம் மட்டும் தான். எப்படியும் என் இனியன் எனக்காக காத்திருப்பார். நீ எனக்காக இந்த உதவி மட்டும் பண்ணு லேகா ப்ளீஸ். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. அதான், நடிப்புக்காக, என்னோட பேரை அனுலேகா ன்னு வெச்சிருக்கேன்." என்று முத்தாய்ப்பாக சொல்ல, அனுலேகா தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஐஸ்.. ஐஸ் வெக்காத.. எனக்கு ஜல்ப்பு (ஜலதோஷம்) வந்திரும்.. அப்புறம் அந்த இனியன் கிட்ட போய் பேசும் போது வெறும் காத்து தான் வரும்." என்று செல்ல மிரட்டல் ஒன்றைப் போட,

"தேங்க்ஸ் லேகா.." என்று ஐஸ் அவளைக் கட்டிப்பிடித்தாள்.

"உன் இனியன் மேல உனக்கு இருக்கும் நம்பிக்கைக்காகத் தான் போறேன். நீ எப்ப கிளம்பப் போற?"

"இன்னிக்கு நைட் கிளம்பறேன். அதுக்கு முன்னாடி இந்தா டிக்கெட்ஸ்.." என்று லேகாவிடம் போக வர, விமான டிக்கெட்டை நீட்டினாள். கூடவே, திருமணம் நடக்கவிருக்கும் கப்பலின் பாஸ் (pass), மற்றும் இதர தகவல்கள் அடங்கியக் குறிப்புகளைத் தந்தாள்.

அனுலேகாவிற்கு, விமான பயணத்தில், இனியன் என்கிற யாழினியன் பற்றிய யோசனைகளே!! அவனை நினைத்து அவளுக்குப் பரிதாபம் தோன்றியது.

'பாவம் எவ்வளவு கனவுக்கோட்டை இந்த பந்தத்தை பற்றி கட்டியிருப்பான். எவ்வளவு ஆவல்கள், கேள்விகள், மனதிற்கு இனியவளைப் பற்றிய கற்பனைகள்....? இப்போது, தான் போய், அவனிடம், நீ விரும்பிய பெண், உன்னை மணப்பதை விட, நடிகையாவது தான் முக்கியம் என்று எண்ணி, உன்னை தற்சமயம் ஒதுக்கிவிட்டு சென்றுவிட்டாள் என்று உரைத்தால், அவன் எவ்வாறு உணருவான்?' என்கிற கேள்வியே அனுலேகாவை சூழ்ந்துக் கொண்டது.

ஆனால் அவள் எண்ணாத பல விஷயங்கள் அந்தமான தீவுகளில் இறங்கியதும் நிகழத் தொடங்கின.

முதல் காட்சி, அனுலேகா, கப்பலை நெருங்கியதும், அவளை பற்றிய போட்டோ சான்று மற்றும், கப்பல் உள் நுழைய தேவையான அனுமதிசீட்டு, கல்யாணத்திற்கான பத்திரிக்கை ஆகியவற்றை கேட்க, அவளும், ஐஸ் தந்த பைலை பிரித்து, அனுமதி சீட்டை முதலில் எடுத்தாள். அவர்களிடம் காட்டும் முன், அவளும் எதேச்சையாக பார்க்க, அதில் தன் போட்டோவும், பெயரும் இருந்ததைக் கண்டுத் துணுக்குற்றாள். அனுமதி சீட்டில், 'அவள் புகைப்படம் அல்லவா இருந்திருக்க வேண்டும்? எப்போது என் போட்டோவை ஒட்டினாள்? ஒருவேளை இப்படி சான்று கேட்பார்கள் என்கிற முன் ஜாக்கிரதை எண்ணத்தோடு ஒட்டியிருப்பாளோ?' என்று கேள்விக்குக்கு அவளாகவே காரணம் கற்பித்தாள். ஆனாலும், அவளின் துப்பறியும் மூளை விழித்துக் கொண்டுப் பந்தாடியது.

இதற்கு நடுவே, அவளை கப்பல் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும், ஈவெண்ட் மேனேஜ்மென்ட் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க, நேரே, ஏற்பாடு படி, திருமணம் நிகழும் கூடத்திற்குச் சென்றாள். முகூர்த்தத்திற்கு சரியாக ஒரு மணிநேரம் இருக்க, அவளோடு வந்த ஈவெண்ட் மேனேஜ்மென்ட் பெண் ஒருத்தி, திடீரென முன்னே சென்று மணப்பெண் வந்துவிட்டாள் என்று முரசுக் கொட்டாதக் குறையாக அறிவித்தாள்.

அந்த கூட்டத்தில் முதல் கட்ட நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு இருந்தது. இன்னும் விசித்திரமான ஒன்றாக, யாருமே மணப்பெண்ணை பார்த்ததில்லை. செவி வழியாக அவள் பெயர் மட்டுமே தெரியுமாறு அமைந்துப் போனது. அதுவே அவளை திடுகிடச் செய்தது.

இவள் தான் யாரென்று அறிமுகப்படுத்தும் முன், இப்படி ஒரு புரளி தந்த அதிர்ச்சி அவளை பேச்சிழக்க வைத்தது.

ஒரு சில கணமே.. அவள் மீண்டு, தன்னைப் பற்றி கூறும் முன், '"அனும்மா' என்று வாயார அழைத்து அணைத்துக் கொண்டார் மத்திம வயதில் இருந்த பெண்மணி. அவர் யாழினியன் தாயார் சாரதா.

"ஆன்ட்டி நான்..."

"அனும்மா எப்படி இருக்க...?" என்று கேட்டபோது தான், நன்றாக அவரை கவனித்தாள்.

"ஐ.. சாரு ஆன்ட்டி.. எப்படி இருக்கீங்க?" என்று அவளும் உற்சாகமானாள்.

அதற்குள் அவர்கள் அருகே வந்து யாழினியன், "அம்மா உள்ள வாங்க.. கொஞ்சம் பேசணும்.." என்று அன்னையை அழைத்தவன், திரும்பி அவளிடம், "நீயும் வா" என்று உக்கிரப் பார்வையோடு விளித்தான்.

பத்து நிமிஷம் பொறுத்து, மூவரும் அறையிலிருந்து வந்தவர்கள், ஏதும் வெளியே கூறாமல் தத்தம் வேலையைப் பார்த்தனர்.

அனுலேகா, அழகுக்கலை நிபுணரோடு செல்ல, யாழினியனும் அவனின் அன்னையும் மணமேடைக்கு சென்றனர்.

அழகுக்கலை நிபுணர் குறுகுறுவென்று அனுலேகாவை மெருகேற்றும் பொழுது, அவ்வப்போது பார்வையை வீசினார்.

பின்பு அவளிடம், "கல்யாண பெண் திடீர்னு மாறுவது இப்பெல்லாம் சகஜமாப் போச்சு.. எப்படி என்ன ஏது ஒன்னும் நமக்கு தெரியாது.. ஆனா பொண்ணு மாறினாலும், கல்யாணம் மட்டும் பல நேரம் நடக்குது" என்றார். இவள் கோந்துப் போட்டு ஒட்டியதுப் போல வாயை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

அலங்காரம் திருப்தியாக முடிந்து, அனுலேகா மேடையேற, அங்கே ஆசி வழங்க வந்தவர்கள், அவளின் அழகைப் புகழ்ந்துப் பேசுவது அவள் காதில் விழுந்தது.

கல்யாண ஏற்பாடு மொத்தமும் யாழினியன் பொறுப்பாக ஏற்றுக் கொண்டதாக ஐஸ் சொல்லி அனுலேகா தெரிந்துக் கொண்டாள். நன்றாகத் தான் ஏற்பாடு செய்திருக்கிறான் என்று உள்ளூர மெச்சவும் செய்தாள்.

திருமணம் இஷ்டமித்ர பந்துக்களோடு இனிதே முடிந்து இருவருக்கும் வாழ்க்கையின் புதிய பாதை ஆரம்பமானது.

அவனின் ஏற்பாடு படி, வந்திருந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அன்று ஒரு நாள் கப்பலில் தங்கி ஓய்வெடுத்து பின் அன்று மாலையே அவன் தந்த விமான பயண சீட்டில் ஊர் போய் சேர வேண்டும். தன் தாயாருக்கு மட்டும் கூடவே நம்பிக்கையான ஆளோடு பிரைவேட் ஜெட் ஒன்றின் மூலம், வீட்டிற்கு அனுப்பினான்.

யாழினியனும் ஐஸும் முன்னர் கலந்தாலோசித்து, கப்பலில் மேலும் ஒரு நாளை கழித்துப் பின், அந்தமானில் மூன்று இரவு நான்கு நாட்கள் கழிக்கலாம் என்றும் முடிவெடுத்திருந்தனர்.

அதன் படி ஒரு மாற்றமாக மணமான அன்றே அந்த கப்பலை விட்டு ஏற்கனவே பதிவு பண்ணியிருந்த காட்டேஜ்க்கு வந்திருந்தனர் புதுமண தம்பதிகள். அதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்கவும் இல்லை; பேசவும் இல்லை. இருவரும் வெவ்வேறு மனநிலையில் அன்றைய நாளை நினைத்தனர்.

சற்று நேரம் அறையில், நிசப்தம் ஆட்சி செய்ய, சட்டென இனியன் தொண்டை செருமும் சத்தம் கேட்டது. அதில் அவளும் சுதாரித்து, அவனின் பேச்சையோ அல்லது கேள்வியையோ எதிர்கொள்ளத் தயாரானாள்.

மனதுள், 'யார் நீ?' என்று மீண்டும் எகிறப் போறானா? அல்லது பள்ளிப்பருவத்தில் சந்தித்தவள் என்கிற பாவனையோடு பேசுவானா? என்று அவனைப் பற்றியே அன்று முழுவதும் சிந்தித்தாள்.

"என்னோட அனு எங்க?" என்று கேட்க, அவளோ புரியாமல் விழித்தாள்.

"..."

"என்ன முழிக்கிற?? என் அனுவை எங்கேயோ ஒளிச்சு வெச்சிட்டு நீ தான் அனுலேகா ன்னு நாடகமாடி என்னை சொந்தமாக்கிக்க பார்த்ததுக்கு உன்னை கப்பலுக்குள்ள இரண்டு அறைவிட்டு ஓட்டியிருக்கணும்.. பொண்ணாச்சே ன்னு பாவம் பார்த்து விட்டதுக்கு..."

"ஹலோ மிஸ்டர் கொஞ்சம் வாய மூட முடியுமா? பொண்ணாச்சே ன்னு இவர் பாவம் பார்த்தாராம்... வெரி பேட் ஜோக்... நாளைக்கு காலைல மறக்காம ஞாபகப்படுத்துங்க மிஸ்டர்.. விழுந்து விழுந்து சிரிக்கிறேன்" என்று நக்கலடித்தாள்.

"ஏய்..." என்று அவன் கோபத்தில் கொந்தளிக்க,

"பி, சி, டி... எனக்கு கிளாஸ் எடுக்க வேணாம்.. எப்படி எப்படி... எந்த லூசு பாவம் பார்த்து தாலி காட்டுவான்..?"

"மைண்ட் யூர் டங் மிஸ்.."

"நீங்க மைண்ட் பண்ணீங்களா? அண்ட் ஐம் மிசஸ் அனுலேகா" என்று குறிப்புக் காட்டிப் பேசினாள்.

அவனுக்கு என்ன செய்வது என்றுப் புரியாமல், தலையைக் கோதி மெத்தையின் ஒரு பக்கம் போய் அமர்ந்தான் யாழினியன்.

அப்போது அவளும் என்ன நினைத்தாளோ!! "பாருங்க மிஸ்டர் யாழினியன், உங்க அனு என்னோட தோழி.. அவளோட உண்மையான பேர் ஐஸ்வர்யா.. அவளுக்கு சினிமால நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்கு ன்னு கிளம்பி போயிட்டா.. என்னை இந்த தகவலை உங்களை சந்திச்சு சொல்லணும்னு கேட்டுகிட்டா.. நீங்களே கல்யாணத்தை தள்ளிப் போடுவீங்கன்னும் அவ நம்பினா. பழகிய தோஷத்துக்கு அவ சொன்னதை நம்பி, நான் இங்க வந்தா, நானே எதிர்பாக்காத பல விஷயம் நடந்து முடிஞ்சிருச்சு.. இந்த சம்பவத்துல நானும் ஒரு விக்டிம் மிஸ்டர்." என்று பேசி அவன் கிரகித்துக் கொள்ள இடைவெளி விட்டாள்.

அவள் பேசுவதை அவனும் கூர்ந்து கேட்டான். இதில் எந்தளவுக்கு தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று ஆராய்ந்தான்.

"உண்மையாவே நீ தான் அனுலேகாவா?" என்று அவன் தொடங்கி,

அவளோ பொறுமை இழந்து, "அடேய் யாழினியா? எத்தனை தடவை சொல்றது..? நான் தான் அனுலேகா!! நீ லவ் பண்ண பொண்ணு அனுலேகாவே இல்ல... அவ ஐஸ்வர்யா... இன்னும் நம்பிக்கை வரலைன்னா, எப்படியும் இன்னும் சில மாசத்துல, அவ நடிச்ச படம் வெளியே வரும்.. ஹிட் ஆகுதோ இல்லையோ, எப்படியும் ஏதாவதொரு டிவி சேனல்ல போடுவான்.. பார்த்து ரசி.." என்று பொரிந்துத் தள்ளினாள்.

அவ்வாறு பேசியவள் நேரே அந்த அறையின் வரவேற்பறையில் உள்ள மூன்று பேர் அமரக்கூடிய பிரம்பு சோபாவில் படுத்துக்கொண்டாள்.

யாழினியன் கடமை மிக்க கணவனாகக் கூட, அனுலேகா எங்கே எனத் தேடாமல், அந்த கட்டிலில் படுத்து உறங்க முயற்சித்தான்.

முயற்சி திருவினையாக்குமா? பொறுத்திருக்கத் தான் வேண்டும்.

 
Top