கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 8

Mrithula Ashwin

Moderator
Staff member
அத்தியாயம் - 8

என்ன தான் நீ பையனா காட்டிக்க வேஷம் போட்டாலும், ஒரு சில விஷயம் பட்டவர்த்தனமா காட்டிக் கொடுக்கும்" என்று கூறியவாறே யாழின் விழிபார்வை சற்றே கீழே இறங்கியது.

மேலும் யாழ், "என்ன சொல்ல வரேன்னா..." என்று முடிக்கும் முன்பே அனு டேய் என்று மிரட்டும் தொனியில் அழைத்தபடி அவனது இன்னொரு பாதத்தையும் ஓங்கி மிதித்தாள்.

"அம்மா......." என்று வலியில் கத்த, அவளோ 'ஷ் ஷ்' என்றாள்.

அவனது கூச்சலில், உள்ளே சாரதா அறையில் விளக்கு ஒளி பெற்றதை கண்டாள் அனு. தன் மாமியார் வெளியே வந்து என்னவென்று கேட்பதற்குள், நொடியில் அவன் அருகே சென்று வலக்கையால் வாயை மூடப் போக, அவளது காலணி அவளுக்கே எதிரியாகி, தடுமாறி யாழ் மேலே மோதினாள்.

அவள் சட்டென்று மோத, அவனோ சற்றே நிலை தடுமாறி அவளை அணைத்துக் கொண்டான். கண்கள் கலந்தன...

வெளியே வந்த சாரதா கண்டது, இருவரும் கட்டுண்டு இருப்பதைத் தான்.

சிறு யோசனைக்குப் பிறகு, மெல்லிய புன்னகையோடு மீண்டும் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.

யாழ், "உனக்கு ஒன்னும் ஆகலையே?" என்று தவிப்போடு கூடிய அக்கறை குரலில் கேட்டான்.

அவளும், "ம்கூம்" என்று தலையாட்டிவிட்டு, என்ன நினைத்தாளோ, "ஏன் ஏதாவது ஆகணும்னு நினைச்சிட்டு இருக்கியா?.." என்று வினவ, அவனுக்கும் சுர்ரென்று கோபம் துளிர்த்தது.

"நீ மோதினதுல, எனக்கு தான் எலும்பு ஏதாவது உடைஞ்சிருக்குமோ ன்னு சந்தேகமா இருக்கு.. எதுக்கும் நான் நாளைக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணும்" என்றான் நக்கலாக.

"உன்னை மாதிரி மாத்தி மாத்தி பேசற ஆளுங்க சில பேரை பார்த்திருக்கேன்.. உங்க கண்ணு எங்க போகும்னு தெரியும்.. அப்படி தானே நீயும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசின.. வேஷம் போட்டாலும் பொண்ணுன்னு காட்டிக் கொடுக்குது ன்னு.." என்று அனு எகிறிவிட்டு அறைக்குள் சென்றாள்.

முதலில் அக்கறையோடு வினவியவன், பிறகு நையாண்டி செய்ததில், அவளுக்கு வருத்தம் ஏற்பட, அதுவே கோபமாக வெளிப்பட்டது.

யாழினியன், "நான் என்ன மாத்தி பேசினேன்... இப்படி திட்டிட்டுப் போறா? லூசு..." என்று தனக்கு தானே பேசியவன், அவள் கடைசியில் குறிப்பிட்ட வாக்கியத்தைப் பற்றி யோசித்தான். ஒரு சில வினாடிகளுக்கு பிறகு அவள் கூறிய அர்த்தம் புரிய, விறுவிறுவென தங்களது அறைக்குள் சென்றான்

அங்கே அவள் படுக்கையில் தூங்கப் போனாள். அவள் கையைப் பிடித்து எழுப்பியவன், "யாருக்கு டர்ட்டி மைண்ட் ன்னு இப்ப தான் புரியுது.. நான் சொன்னதை எப்பவுமே தப்பா தான் புரிஞ்சுக்கற.. என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க?"

"..."

"சில விஷயங்கள் பொண்ணுன்னு காட்டிக் கொடுத்திடும்னு நான் சொன்னது..."

"ப்ளீஸ் எனக்கு டயர்டா இருக்கு.. தூங்க விடேன்" என்றாள் அவள்.

அப்போதும் அவள் கையை விடாமல் பிடித்து இருந்தவன், அவள் சொல்வதை காதில் வாங்காமல், "நீ கட்டியிருந்த வாட்ச் யூனிசெக்ஸ் இல்லனா ஆண்கள் போடற வாட்ச் இல்ல மாறாக நீ எப்போதும் அணியும் லேடீஸ் வாட்ச். ஆண்கள் புருவம் பெண்கள் மாதிரி வடிவமோ, வெகுவாக சீர்படுத்தி இருக்காது.. நீ போட்டிருந்த பர்ஃபியூம் பெண்களோடது.. இதை வெச்சு தான் சொன்னேன்.. நீ நினைச்ச மாதிரி உடம்பை வெச்சு சொல்ல எனக்கு தோணலை.." என்று சொல்லி முடித்தான்.

அனு அமைதியாகவே இருக்க, அவன் கட்டிலின் மறுபுறம் சென்றவன், "அப்படியே அங்கங்கள் வெச்சு சொல்வதாக இருந்தாலும் நான் தப்பிதமா சொல்ல மாட்டேன்.. என்னை பொறுத்தவரைக்கும் ஜஸ்ட் ஏ ஹ்யுமன் பார்ட்.. அவ்வளவு தான். இதில் ஆண் பெண் பேதம் என்ன வேண்டி கிடக்கு?" என்றவன் அமைதியாக படுத்தான்.

அவன் கூறியதற்கு ஸ்தம்பித்து நின்றவள், அப்போது தான் சுயம் பெற்றவளாக, "என்ன நீயும் பெட்ல வந்து படுக்கற.?" என்று கேட்டவள், அறையில் கிடந்த திவானை காட்டி, "டெய்லி அங்க தானே படுப்ப" என்கவும்,
அவனோ, "நீ என் காலை மிதிச்சு டேமேஜ் பண்ணதுல, எனக்கு கால் ரொம்ப வலிக்குது.. அதனால, நான் இங்கே தான் படுப்பேன்.. உனக்கு வேணும்னா அங்கப் போய் படு" என்று தரையை காட்ட அனு முறைத்தாள்.

"ஏன் திவான்ல படுத்தால், கால்வலி அதிகமாகுமா? இல்ல பெட்ல படுத்தா கால் வலி பறந்துப் போயிடுமா?" என்று முணுமுணுக்க, அது தெளிவாக அவன் காதை எட்டியது.

தீர்க்கமாக அவளை ஒரு பார்வை பார்த்தவன், "ஒரே ரூம்ல படுத்தா பிரச்சனை இல்லை; ஆனா ஒரே பெட்ல படுத்தா பிரச்னை வரும்னு பயப்படறவங்க பேசக்கூடாது.." என்றான்.
அவளும் பதிலுக்கு முறைத்தாள்.

சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தவன், "இங்க பாரு அனு.. நல்லா தெளிவா மனசுல ஏத்திக்கோ.. நீ நம்பினாலும் சரி நம்பலைன்னாலும் சரி.. எனக்கு எந்தவிதமான எண்ணமும் உன் மேல் இல்ல.. உனக்கு நம்பிக்கை இருந்தா, இதே பெட்ல படுத்து தூங்கு.. அப்புறம் உன் இஷ்டம்.." என்றவன் கண்ணை மூடிக் கொண்டான்.

சற்று நேரம் பொறுத்து அவள் புறம் திரும்பியவன், அவள் இன்னமும் அதே இடத்தில் நிற்பதை பார்த்து, எழுந்தவன், அவள் அருகே சென்று அவள் தோள்களை பற்றியவன், "இங்க பாரு அனு, மணி இப்பவே ஒன்றரை.. நாளைக்கு இரண்டு பேருக்கும் வேலை இருக்கு.. ஆஃபீஸ் போகணும்.. கொஞ்சம் நேரம் தூங்கினா தான், நாளைக்கு கொஞ்சமேனும் பிரிஸ்க்கா இருக்கலாம்.. சொல்றதை கேளு வா" என்று மெதுவாக கட்டிலுக்கு அழைத்து சென்று அமர வைத்தான்.

பிறகு தானும் கட்டிலின் மறுபுறம் சென்று அமர்ந்தவன், அவள் இரு கண்களை நேருக்கு நேராக பார்த்து, "தைரியமா என்னை நம்பலாம்.. நீ தூங்கிட்டு இருக்கும் போது, அப்படியே பாய்ஞ்சுட மாட்டேன்" என்றவன் அடுத்த நொடி திரும்பி படுத்தான்.

அவளும் படுத்தவள், அவனது முதுகையே பார்த்திருந்தாள். அவன் நினைத்தது போல, அவனை நம்பாமலோ, அருகில் படுக்க விருப்பம் இல்லாமலோ அவள் எதிர்க்கவில்லை. அவளுக்கு ஒரு விதமான சங்கோஜமும், மனதில் சொல்லொணா தயக்கமும் இருந்ததாலேயே தயங்கினாள் என்பதே உண்மை. நெஞ்சரிய பொய்யற்க என்ற கூற்று அவளுக்கும் தெரியுமே!.

தன் மனதிற்கு இனியவனை பல வருடம் கழித்து சந்தித்த போது மனதில் சிறு மகிழ்ச்சி பொங்கத் தான் செய்தது. ஆனால் அதே நேரம், தன் தோழியின் காதலனாக அறிமுகம் ஆனதும், கெட்ட கனவிலிருந்து எழுந்தவள் போல மனசு படப்படத்ததும் அவள் அறிவாள்..

ஆனால் இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அவனையே மணம் புரிந்துக் கொண்ட சூழ்நிலை அவளே எதிர்பார்க்காதது.

அதிலும் அந்த தருணத்தை சந்தோஷம், வருத்தம் இரண்டுமே தோன்றி வரவேற்க, அதை வெளிக்காட்டாமல் இருக்க பிரயத்தனம் செய்தாள்.

இவ்வளவு நாட்களும், என்றைக்கு இருந்தாலும் யாழினியன், தன் தோழியின் கணவன் ஆகப் போகிறான் என்று தினமும் ஜபம் செய்வதுப் போல தனக்குள் கூறி மனதிற்கு கடிவாளம் இட்டாள்.

ஆனால் இன்று அவன் பேசியது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கூடவே, 'உன் மேல் எனக்கு எந்த விதமான எண்ணமும் தோன்றவில்லை' என்று அவன் சொன்னது அனு மனதின் ஓரத்தில் நெருஞ்சி முள் அளவுக்கேனும் குத்த தான் செய்தது.

தாம் எப்படி உணருகிறோம் என்று அவளுக்கே புரியாத புதிராக இருந்தது.
சில பல யோசனைகளுக்குப் பிறகு கண்ணயர்ந்தாள்.

இருவருக்குள்ளும் ஒரு மாற்றம் தங்களை அறியாமல் நிகழ்ந்தது.

அவர்களுக்குள் இருந்த இனம் புரியாத தயக்கம் தடை, அன்றிலிருந்து உடைய ஆரம்பித்தது.

தூக்கத்தில் திரும்பி படுத்தவன், சற்றே கண்களை திறந்து பார்க்க, தன் முன், தன் அருகே படுத்து கொண்டிருப்பவளை கண் சிமிட்டாது பார்த்தான்.

நிர்மலமான குழந்தை முகத்தோடு உறங்குபவள், உண்மையில் தைரியமான பெண்ணாக இருப்பவளை நினைத்து பெருமை கொண்டான். கூடவே எதற்கெடுத்தாலும் அழுத அனு இவளா என்று ஆச்சரியமாக எண்ணினான் யாழினியன்.

காலம் என்பது சிறந்த மருந்து தான். எப்படியெல்லாம் மாற்றுகிறது மனிதனை!

திடீரென பெருமூச்சை உதிர்த்தவன் 'அனு என்னை மன்னிச்சிடு.... உன் வாழ்க்கையின் கசப்பான பகுதியில் என்னால் உன்னோடு ஆறுதலாக இருக்க வழியில்லாமல் போனது.. என்றைக்காவது அதற்கான காரணத்தை உனக்கு புரிய வைப்பேன்' என்றான் மனதில்.

மறுநாள் காலை சற்று தாமதமாக துயில் கலைந்தவன், கண் விழித்து உள்ளங்கையை நோக்கிவிட்டு எழுந்தான்.

காலை கடன்களை முடித்து அறையை விட்டு வெளியே வர, அங்கே அனுவும் ஹரிஷும் காபி கோப்பையோடு சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனையும் அறியாமல் மனதில் புகைச்சல் தோன்றியது.

வேகமாக ஹரிஷுக்கு எதிரே சென்று அமர்ந்தவன், "அம்மா காபி வேணும்" என்று உரக்க கத்தினான்.

அனுவும் ஹரிஷும் ஒருவரை ஒருவர் பார்க்க, உள்ளிருந்து கையில் காபியோடு வந்த சாரதா, "எதுக்கு டா இப்படி கத்திட்டு இருக்க? நேத்து நைட்டும் ஊரே தூங்கிட்டு இருக்கும் போது இப்படி தான் கத்தின?!" என்கவும், அனு நமுட்டு சிரிப்பு சிரித்தாள். அதை கண்டு உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியில் கண்டமேனிக்கு முறைத்தான்.

"தலை வலிக்குது ம்மா.." என்றான்.

"ஏன் பிரதர் நைட்டு சரியா தூங்கலையா.. கண்ணெல்லாம் கூட கொஞ்சம் சிவந்து இருக்கே" என்று ஹரிஷ் கேட்க, சாரதாவிடம் தென்பட்ட மெல்லிய புன்னகையை கண்டுக் கொண்டான் ஹரிஷ்..

"நைஸ் ஸ்மையில்... ஏன் பெரியம்மா இந்த புன்சிரிப்புக்கு காரணம் என்னவோ??"

"ஒன்னும் இல்ல.. நைட்டு ஒரு மணிக்கு ஒரு ரொமான்டிக் படம் போறபோக்குல பார்த்தேன் அதை நினைச்சேன்.." என்று சாரதா வேண்டுமென்றே கொளுத்தி போட்டார்.

"என்னது நீங்க ரொமான்ஸ் படம் பார்த்தீங்களா? சரியில்லையே!!" என்று ஆச்சர்யம் காட்டினான் ஹரிஷ்.

"ஏன் டா? நான் பார்க்க கூடாதா?"

"நான் அப்படி சொல்லையே... நீங்க பார்த்தீங்களா ன்னு தான் கேட்டேன்.. ஆமா படம் பேர் என்ன? யார் நடிச்சது? உங்க தூக்கத்தை கெடுத்துகிட்டு படம் பார்த்துருக்கீங்க? அப்படின்னா செமையா தான் இருக்கும்.. நான் இன்னிக்கு என்ன வேலை இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வெச்சிட்டு பார்த்துடப் போறேன்!!" என்றான் ஹரிஷ்..

ஹரிஷ் கேட்டதற்கு பதில் சொல்ல முனைப்புக் காட்டாமல் நின்றிருந்த சாரதாவை கண்டு அனு நெளிய,

அதற்குள் ஹரிஷ், "பெரியம்மா, இக்கட சூடண்டி... அது என்ன படம் ன்னு கேட்டேன்" என்று வினவ,

சாரதா, "அதுவா... அடப்போடா..." என்று விலகிச் சென்றார்.

"என்னது இப்படி ஒரு படமா...?? ஓ டப்பிங் படமா? டேய் அண்ணா.. நீ பெரியம்மா சொன்ன படத்தை பார்த்திருக்கியா..?"

"உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா? படம் பார்க்கப் போறானாம் படம்!! எழுந்திருச்சு போடா" என்றான் யாழ்..

"நீ வேணா போ.. நான் பிபி(bp - பம்பளிமாஸ்) கூட படத்தை பத்தி பேசிக்கறேன்.." என்றான் ஹரிஷ்.

அதை கேட்டு, புரையேறி வாய்க்குள் இருந்த காபியை வெளியே துப்பினான் யாழினியன். அவனின் அதிர்வில், ஹரிஷின் முகத்தில் காபி அபிஷேகம் நடந்திருந்தது. அதில் ஹரிஷ் திருத்திருவென்று முழிக்க, யாழ் சங்கடத்துடன் அவ்விடத்திலிருந்து நகர, அனுவோ சத்தமில்லாமல் எழுந்து சென்றாள்.

"மிஸ்டர் பிரதர், ஒரு சாரி கூட சொல்லாமல் எழுந்துப் போறீங்க? அநியாயமா என் சட்டையை நாஸ்தி பண்ணீட்டீங்களே!" என்று யாழினியனின் முதுகை பார்த்து புலம்ப, யாழோ யாமறியேன் பராபரமே என்பது போல அறைக்குள் சென்றுவிட்டான்.

நேரம் சென்றது.. ஹரிஷ் கிளம்பிவிட, யாழ் தன் வேலைக்கு செல்ல ஆயத்தமாகி அறையை விட்டு வெளியே வந்தான்..

"அம்மா, இன்றிலிருந்து ஒரு வாரம் நான் வீட்டுக்கு வர லேட்டாகும்.. ப்ரொடக்ஷன் கம்பனியில் ஆடிட்டிங் இருக்கு.. அதனால் எனக்காக காத்திருக்க வேணாம்.. நைட்டு அங்கேயே சாப்பிட்டு தான் வருவேன்" என்று அன்னையிடம் கூறியவன் நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன்.. அவ்வளவு தான் என்பது போல நின்றவன் எப்போதும் போல, வேலைக்கு கிளம்பும் முன், அன்னையின் காலை தொட்டு நமஸ்கரித்து விட்டு வாசலை நோக்கி நகர்ந்தான். அதே நேரம் சரியாக, "டேய் நில்லுடா" என்று சாரதாவின் அதட்டல் குரல் அவனை தடுத்தது

"என்ன அம்மா?"

"இந்த வீட்டுல உன்னையும் என்னையும் தவிர, இன்னொரு ஜீவன் இருக்கிறதை மறந்துடாத.. போ உன் பொண்டாட்டியைப் பார்த்து சொல்லிட்டுக் கிளம்பு.." என்று சாரதா கூறவும், யாழ் எரிச்சலுற்றான்.

"ஏன்.. இவ்வளவு நாள் அவகிட்ட தனியா சொல்லிட்டா போனேன்... இன்னிக்கு மட்டும் என்ன?"

"நீ கிளம்பும் போது அவளும் அதே இடத்தில் இருப்பாள்.. அதனால நீ சொல்லிட்டு போவதை நாங்க ரெண்டு பேரும் தெரிஞ்சுப்போம்... ஆனா இன்னிக்கு அவள் இங்க இல்ல அவள் எங்க இருக்காளோ அங்க போயிட்டு சொல்லு.. இதெல்லாம் கணவன் மனைவிக்கு நடுவில் நடக்கும் சின்ன சின்ன அன்பு பரிமாற்றங்கள்.. கல்யாணம் ஆகி இவ்வளவு நாளாச்சு.. இது கூட புரிஞ்சுக்காம இருந்தா எப்படி டா..?" என்று சாரதா ஒரு எதிர்பார்ப்போடு முடிக்க,

யாழினியனின் எரிச்சல் அனுவை நோக்கித் திரும்பியது.
அனுவை தேடி சென்றவன், நேரே உப்பரிகைக்கு நடந்தான்.
 
Top