கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண்ணீர் - அத்தியாயம் 29

Nuha Maryam

Member
தந்தையின் கட்டளைக்கு இணங்க பார்க்கில் ட்ரைவருடன் விளையாடிக்கொண்டிருந்த பிரஜன் அங்கு பிரணவ் வருவதைக் கண்டதும், "அப்பா..." எனத் துள்ளிக் குதித்தபடி ஓடிச் சென்று பிரணவ்வை அணைத்துக் கொண்டான்.

தன்னை வந்து கட்டிக் கொண்ட மகனை புன்னகையுடன் தூக்கிக் கொண்ட பிரணவ் பிரஜனின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தான்.

பிரணவ்வின் கண்கள் ஆனந்தத்தில் லேசாகக் கலங்க, தன் குட்டிக் கரங்களால் அதனைத் துடைத்து விட்ட பிரஜன், "என்னாச்சு அப்பா? ஏன் அழுறீங்க? பிரஜு ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?" எனக் கேட்டான் வருத்தமாக.

உடனே மறுப்பாகத் தலையசைத்த பிரணவ் குழந்தையை அணைத்துக்கொண்டு, "இது ஹேப்பி டியர்ஸ் கண்ணா... அப்பா பிரஜுவ பார்த்ததால வந்தது..." என்றவன் மீண்டும் தன் உயிரணுவில் ஜனித்த மகனை ஆசை தீர முத்தமிட்டான்.

"பிரஜு அப்பா கூட நம்ம வீட்டுக்கு போலாமா?" எனக் கேட்டான் பிரணவ்.

உடனே தன் வெண் பற்கள் தெரியச் சிரித்த பிரஜன் சம்மதமாய்த் தலையசைத்து விட்டு, "பட் அம்மா பிரஜுவ காணோம்னு தேடுவாங்களே... அப்புறம் அம்மா அழுவாங்க..." என்றான் உடனே வருத்தமாக.

"உங்க அம்மா தேட மாட்டாங்க கண்ணா... பிரஜுவும் அப்பாவும் முன்னாடி போலாம்... அம்மா பின்னாடியே வருவாங்க... ஓக்கேயா?" எனப் பிரணவ் கேட்கவும் பிரஜன் சரி எனத் தலையசைக்கவும் அவனை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.

வீடு செல்லும் வழி எங்கிலும் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தான் பிரஜன்.

தன் குறும்புத்தனங்கள், தாயுடன் கழித்த நிமிடங்கள் என தனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நடந்த அனைத்தையும் தந்தையிடம் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டான் பிரஜன்.

பிரஜன் பேசுபவற்றை ஆசை பொங்க பார்த்த பிரணவ்வின் மனமோ மிகுந்த வேதனை அடைந்தது.

'எத்தனை சந்தோஷங்களைத் தான் இழந்திருக்கிறேன்? தன் மகனின் குட்டிக் குட்டிக் குறும்புகளை எல்லாம் பார்க்காமல் அவனின் கூடவே இருந்து வளர்க்க முடியாமல் போன துரதிஷ்டசாலி ஆகி விட்டேனே...' எனப் பிரணவ்வின் மனம் கதறியது.

பிரஜனின் பேச்சிலே தந்தைப் பாசத்துக்கு அவன் எவ்வளவு ஏங்கி இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட பிரணவ்விற்கு மொத்த கோபமும் அனுபல்லவியின் பக்கம் திரும்பியது.

'தனக்கும் தன் மகனுக்கும் எவ்வளவு பெரிய அநீதியை இழைத்து விட்டாள்' எனப் பிரணவ்வின் உள்ளம் கொதித்தது.

மனம் ஒரு பக்கம் தன்னவள் காரணம் இன்றி இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாள் என அடித்துக் கூறினாலும் மூளை அதை ஏற்க மறுத்தது.

எத்தனை காரணங்கள் கூறினாலும் தான் இழந்தது இழந்தது தானே. அதை மீண்டும் மீட்க முடியுமா என்ன?

சில நிமிடங்களில் வீட்டை அடைந்ததும் பிரணவ் தன் புதல்வனைத் தூக்கிக் கொண்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.

"வாவ்... இனிமே நாம இந்த வீட்டுல தான் இருக்க போறோமா ப்பா?" எனக் கேட்டான் பிரஜன் ஆவலாக.

"ஆமாடா... என் பிரஜு இனிமே அப்பா கூட இந்த வீட்டுல தான் இருக்க போறான்... இங்க பிரஜுவுக்கு தாத்தா பாட்டி எல்லாம் இருக்காங்க..." எனப் பிரணவ் கூறவும், "ஹை.. ஜாலி... ஜாலி..." எனக் கை தட்டிச் சிரித்தான் பிரஜன்.

பின் திடீரென ஏதோ நினைவு வந்தவனாக, "அப்போ அம்மா?" எனப் பிரஜன் யோசனையாக கேட்கவும், "அம்மாவும் தான்... அப்பா... அம்மா... பிரஜு... எல்லாரும் ஒன்னா இருக்க போறோம்..." எனப் பிரணவ் பதிலளிக்கவும், "தேங்க்ஸ் பா..." என்று பிரஜன் பிரணவ்வின் கன்னத்தில் முத்தமிட்டான்.

பிரணவ் வீட்டை அடைந்து சில நிமிடங்களிலேயே மூர்த்தியும் லக்ஷ்மியும் வீட்டுக்கு வந்து விட, அவர்களைத் தொடர்ந்து அர்ச்சனாவும் அங்கு வந்திருந்தாள்.

அவர்களைப் பிரஜன் வாசலில் பார்த்ததும் பிரணவ்வின் காலின் பின்னே ஒளிந்து கொண்டான்.

பிரஜனைத் தூக்கிக் கொண்டு மகன் நினைவு தெரிந்ததால் மீண்டும் என்ன கூறுவானோ எனப் பயத்துடன் நின்று கொண்டிருந்த லக்ஷ்மி மற்றும் மூர்த்தியை நோக்கிச் சென்ற பிரணவ், "பிரஜு... இவங்க தான் உன்னோட தாத்தா பாட்டி... என்னோட அப்பா அம்மா... அவங்க கிட்ட போய் பேசு..." என மகனிடம் கூறுவது போல் தன் பெற்றோரின் மனதில் இருந்த பயத்தை நீக்கவும் இருவருமே மகிழ்ந்தனர்.

பிரணவ் கூறவும் அவனிடம் இருந்து இறங்கி லக்ஷ்மியை நோக்கி நடந்த பிரஜன், "பா...பாட்டி..." எனத் தயக்கமாக அழைக்கவும் அவனை வாரி அணைத்து முத்தமிட்ட லக்ஷ்மி, "என் செல்லம்... அப்படியே என் பிரணவ் போலவே இருக்கப்பா... என்னங்க... நம்ம பேரன பாருங்க..." என உணர்ச்சி வசப்பட்டார்.

மூர்த்தியும் புன்னகையுடன் தன் பேரனை அணைத்து முத்தமிட, "பிரஜுவயும் பிரஜு அம்மாவையும் இங்க அப்பா கூடவே இருக்க பர்மிஷன் தருவீங்களா?" எனக் கேட்டான் பிரஜன் தயக்கமாக.

"எதுக்கு கண்ணா அனுமதி எல்லாம் கேட்டுக்கிட்டு? உனக்கு இல்லாத உரிமையா? இது உன் அப்பா வீடு... நீ தான் இந்த வீட்டோட வாரிசு... நீயும் உங்க அம்மாவும் தாராளமா இங்க தங்கலாம்... பாட்டி என் குட்டிக் கண்ணனுக்கு பிடிச்சதை எல்லாம் சமைச்சு தரேன்... நைட் தூங்கும் போது கதை சொல்றேன்..." என்றார் லக்ஷ்மி புன்னகையுடன்.

அதனைக் கேட்டு புன்னகைத்த பிரஜன் அவர்களுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டான்.

அதே நேரம், "பிரணவ்..." என அழைத்தபடி வந்த அர்ச்சனாவை அனைவரும் துச்சமாக நோக்க, "ஆகாஷ்... பிரஜுவ கூட்டிட்டு உள்ள போங்க‌‌..." என அப்போது தான் அங்கு வந்த ஆகாஷிடம் பிரணவ் கூறவும் ஆகாஷ் பிரஜனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அவர்கள் சென்றதும், "கழுத்த பிடிச்சு வெளிய துரத்த உன்ன தொடுறதை கூட விரும்பல நான்... நீயாவே போயிடு இங்க இருந்து... இல்ல அசிங்கப்படுவ..." என எச்சரித்தான் பிரணவ்.

அர்ச்சனா, "இல்ல பிரணவ் நான் நிஜமாவே உங்கள..." என ஏதோ கூற வரவும் ஆத்திரத்தில் பல்லைக் கடித்த பிரணவ் அர்ச்சனாவின் கழுத்தைப் பற்றி வெளியே தள்ள, அந் நேரம் பிரதாப்புடன் அங்கு வந்த அனுபல்லவியின் காலடியில் சரியாக சென்று விழுந்தாள் அர்ச்சனா.

அனுபல்லவி அதிர்ச்சியுடன் அர்ச்சனாவின் கையைப் பிடித்து எழுப்ப முயல, அவளோ அனுபல்லவியின் கரத்தைத் தட்டி விட்டு தானாகவே எழுந்து நின்று அனுபல்லவியை முறைத்தாள்.

"எல்லாம் உன்னால தான்... நீ எதுக்கு டி திரும்ப வந்த? இந்த அஞ்சி வருஷமும் நான் எவ்வளவு நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருந்தேன் தெரியுமா? நீ வந்ததும் எல்லாம் நாசமா போச்சு... போனவ அப்படியே தொலைஞ்சி போயிருக்க வேண்டியது தானே... நான் பிரணவ்வ எவ்வளவு காதலிக்கிறேன்னு தெரியுமா? உன்னால தான் அவர் இப்போ என்னை வீட்ட விட்டே துரத்துறார்... உன்ன நான் சும்மா விட மாட்டேன் டி..." என ஆவேசமாகக் கூறிய அர்ச்சனா அனுபல்லவியை அடிக்கக் கை ஓங்க, அவளின் கரத்தை அழுத்தப் பற்றி தடுத்தது ஒரு கரம்.

தன்னைத் தடுத்தது யார் எனத் திரும்பிப் பார்த்த அர்ச்சனா அங்கு கார்த்திக்கை சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை.

ஐந்து வருடங்களில் ஆளே மாறிப் போய் இருந்தான்.

அடர்ந்த தாடி முகத்தின் பாதியை மறைந்திருக்க, ஒழுங்காக கத்தரிக்கப்படாத முடியும் சிவந்திருந்த கண்களும் என வித்தியாசமான தோற்றத்தில் இருந்தான் கார்த்திக்.

"கா... கார்த்திக்..." என அர்ச்சனா அதிர்ச்சியுடன் அழைக்க, "இது உனக்கான இடம் இல்ல அர்ச்சு..." என்றான் கார்த்திக் எப்போதும் போல் கனிவான குரலில்.

ஆனால் அதனைக் கேட்கும் மனநிலையில் தான் அர்ச்சனா இருக்கவில்லை.

கார்த்திக்கின் பிடியில் இருந்து தன் கரத்தை உருவிய அர்ச்சனா அதே கோபத்துடன், "அதை நீ எப்படி சொல்லலாம்? நான் தான் இந்த வீட்டோட மருமக..." என்கவும் கண்களை மூடித் திறந்து தன்னை சமன்படுத்திக்கொண்ட கார்த்திக், "இன்னொருத்தியோட புருஷனுக்கு ஆசைப்படுறத விட கேவலமான ஒன்னு இந்த உலகத்துலயே இல்ல... அதுவும் அவங்களுக்கு குழந்தை வேற இருக்கு..." என்றான் அமைதியாக.

"இவ எங்கயோ கண்டவன் கூட ஊரு மேஞ்சி புள்ளய பெத்துக்கிட்டு வந்து இப்போ சொத்துக்காக அதைப் பிரணவ்வோட புள்ளன்னு சொன்னா நாங்க நம்பணுமா? இப்படி ஒரு பொழப்புக்கு இவ பிச்சை எடுக்கலாம்..." என அர்ச்சனா நாக்கில் நரம்பில்லாமல் பேசிய அடுத்த நொடியே அவளின் கன்னங்கள் தீயாய் எரிந்தன.

தன்னவளைப் பற்றித் தவறாகப் பேசவும் பிரணவ் அர்ச்சனாவை நோக்கி ஆத்திரமாக அடி எடுத்து வைக்க, அதற்குள் கார்த்திக்கே அவளை அறைந்திருந்தான்.

அர்ச்சனா கார்த்திக்கை அதிர்ச்சியாக நோக்க, அவள் மறுக்க மறுக்க அவளின் கைப் பற்றி அங்கிருந்து இழுத்துச் சென்றான் கார்த்திக்.

அவர்கள் சென்றதும் பிரணவ்வும் வீட்டிற்குள் செல்ல அடி எடுத்து வைக்க, "என் பையன அனுப்பி வைங்க..." என்றாள் அனுபல்லவி அழுத்தமாக.

ஏளனச் சிரிப்புடன் அவளை நோக்கித் திரும்பிய பிரணவ், "அவன் என் பையன்... என் பையன் என் கூட தான் இருப்பான்... எங்கேயும் போக மாட்டான்... உனக்கு உன் பையன் வேணும்னா நீயும் இந்த வீட்டுல தான் இருந்தாகணும்..." என்றான்.

அனுபல்லவி, "அவன பத்து மாசம் சுமந்து பெத்தவ நான்... அவன் பிறந்ததுல இருந்தே நான் அவன தனியா தான் வளர்க்குறேன்... இனியும் என்னால என் பையன வளர்க்க முடியும்... எனக்கு தான் அவன் மேல எல்லா உரிமையும் இருக்கு..." என்றாள் முயன்று வரவழைத்த குரலில்.

"யாரு உனக்கு என் பையன தனியா வளர்க்க சொன்னாங்க? அப்பா நான் உயிரோட இருக்கும் போது என் பையன என் கண்ணுலயே காட்டாம எடுத்துட்டு போய் வளர்த்துட்டு இப்போ வந்து உரிமைய பத்தி பேசுறியா?" எனக் கேட்டான் பிரணவ் எள்ளலாக.

"ப்ளீஸ் பிரஜுவ என் கூட அனுப்புங்க... என்னால அவன் இல்லாம இருக்க முடியாது... நாங்க ரெண்டு பேரும் எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடுறோம்... இனிமே உங்க லைஃப்ல குறுக்கிட மாட்டோம் நாங்க..." எனக் கேட்டாள் அனுபல்லவி இம்முறை கெஞ்சலாக.

கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த பிரணவ், "இப்போ கூட உனக்கு நான் வேணாம்ல... உன் பையன் மட்டும் தான் வேணும்... காதல் அது இதுன்னு சொன்னது எல்லாமே பொய்... அப்படி தானே... கடைசியில எல்லாரைப் போலவும் நான் அன்புக்காக ஏங்கினதை நீயும் உன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கிட்டேல்ல..." எனக் கேட்டான் வருத்தம் தோய்ந்த குரலில்.

பிரணவ்வின் வார்த்தைகளில் அனுபல்லவியின் கண்கள் கலங்க, எதுவுமே கூறாது அமைதியாக இருந்தாள்.

பெருமூச்சு விட்ட பிரணவ், "சரி... உனக்கு நான் தான் வேணாம்ல... நான் உன் கழுத்துல கட்டின தாலிய இந்த நிமிஷமே கழட்டி கொடுத்துட்டு இங்க இருந்து போயிடு... ஆனா ஒன்ன மட்டும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ... என் பையன என்னை விட்டு நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன்... இதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... என் பையனுக்கு நீ தான் அம்மாங்குறதையும் இதோட மறந்துட வேண்டியது தான்... தாலிய கழட்டி கொடு..." என அழுத்தமாகக் கூறியவன் அனுபல்லவியிடம் தாலியை வாங்க கரத்தை நீட்டினான்.

கலங்கிய கண்களுடன் மறுப்பாகத் தலையசைத்த அனுபல்லவி தன் தாலியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, "ப்ளீஸ் பிரணவ்... என்னைப் புரிஞ்சிக்கோங்க... என்னால நீங்க சொல்ற எதையும் பண்ண முடியாது..." எனக் கெஞ்சினாள்.

"நான் ஏன் டி உன்ன புரிஞ்சிக்கணும்? நீ என்னைப் புரிஞ்சிக்கிட்டியா? என் காதல புரிஞ்சிக்கிட்டியா? ஒவ்வொரு நிமிஷமும் நான் எவ்வளவு வேதனைய அனுபவிக்கிறேன்னு புரியுதா உனக்கு?" என ஆவேசமாகக் கேட்ட பிரணவ் எவ்வளவு அடக்கியும் அவனையும் மீறி கண்ணீர் வெளிப்பட்டு விட்டது.

"உங்களுக்காக நான் இருக்கேன்... உங்களுக்காக நான் இருப்பேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு இப்போ என்னை உயிரோட கொன்னுட்டு போக போறேல்ல பவி..." என உடைந்து அழுதான் பிரணவ்.

பிரணவ் மனம் உடைந்து அழவும் அவனுடன் சேர்ந்து கண்ணீர் விட்டாள் அனுபல்லவி.

தன்னவனைத் தெரிந்தே நோகடிக்கிறோம் என அவளின் மனம் தவியாய்த் தவித்தது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையில் தாம் தலையிட விரும்பாமல் ஒதுங்கி நின்ற மூர்த்திக்கும் லக்ஷ்மிக்கும் கூட தம் மகன் இப்படி உடைந்து போய் அழுவதைப் பார்த்து மனம் வேதனை அடைந்தது.

சில நிமிடங்கள் அழுகையில் கரைந்த அனுபல்லவி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு நேராக லக்ஷ்மியிடம் சென்றவள், "ஒரு தாசியோட பொண்ணு உங்க மருமகளா இருக்குறது உங்களுக்கு சந்தோஷமா இருக்கா?" எனக் கேட்டாள் அழுத்தமாக.

அவளின் கேள்வியில் பிரணவ் உட்பட அனைவருமே அதிர, லக்ஷ்மியின் முகம் மாறியதைக் கண்டு அனுபல்லவியின் முகத்தில் வேதனையின் சாயலுடன் கூடிய கசந்த புன்னகை ஒன்று உதித்தது.
 
Top