கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் அத்தியாயம் --11

sankariappan

Moderator
Staff member
கனவு மலர்கள்

அத்தியாயம்—11



பரிவு கிடைக்கிற இடத்தில மனசு ஒட்டிக் கொள்வது இயல்பு. சந்திரிகா ரிஷியின் பரிவை நன்றாக பயன்படுத்திக் கொண்டாள். முதல் முறை நெற்றியில் ரத்தம் வழிய வந்து நின்றாள்.

“சித்தி அடிச்சிட்டாங்க...” தேம்பி அழுத சிறுமியை அனைத்து கொண்டான் ரிஷி.

அவளின் சித்தி மேனகா வேகமாக வந்தாள்.

“ஏய்...இங்கே வந்து புகார் சொல்லிட்டு இருக்கியா? பாலை அடுப்பிலே வச்சிட்டு தண்ணி பிடிச்சிட்டு இருந்தேன். பார்த்துக்கோன்னு சொன்னேன். சின்ன வேலை தானே. தண்ணீ பிடிக்காட்டி நின்னு போயிடும். அதான் சொன்னேன்...இவ என்ன பண்ணா தெரியுமா?..”

“ஹலோ...நிறுத்துங்க. அவ என்ன செய்தான்னு புகார் சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லே? சின்ன பொண்ணு...அவளை வேலை வாங்கறீங்க? அதுக்காக இப்படியா அடிப்பீங்க?....மிருகத்தனம்...”

“அடப்பாவி...நானா உன்னை அடிச்சேன்? இவ பொய் சொல்றாங்க. வேகமா ஓடி தடுமாறி கட்டில் விளிம்பில் மோதி அடிப்படுக்கிட்டா. ரத்தம் வழிய ஓடி வரா. ஆஸ்பத்திரிக்கு போகலாம்னு கத்திட்டே வரேன்...வாடி. முளைச்சு மூணு இலை விடலை வாயிலே வரதெல்லாம் பொய்...பித்தலாட்டம்....வாடி..”

“அவளை விடுங்க...நானே ஆஸ்பத்திரி கூட்டிப் போறேன்..” ரிஷி இப்படி சொன்னதும் வியப்புடன் பார்த்தாள் மேனகா.

“ரொம்ப சரி....ஆகாதவ கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம். சித்தின்னு வந்திட்டா இதெல்லாம் கேட்டுத் தானே ஆகணும். சந்திரிகா பொய் பேசறத நிப்பாட்டு...நான் வரேன்...” கண்ணை கசக்கிக் கொண்டு போனாள் மேனகா.

ரிஷியின் அப்பா சுரேந்தர் சொன்னார்.

“அந்தம்மா சொல்றதும் உண்மையா இருக்கலாம்..”

சிறுமி அவர் காலடியில் விழுந்தாள்.

“அங்கிள்...அவங்க அப்படிதான் சொல்வாங்க. என்னை அடிச்சாங்க. முன்னே சும்மா நிப்பேன். இப்ப உங்க கிட்டே சொல்லணும்னு வந்தேன். எவ்வளவு தான் அடி வாங்கறது?...” கதறி அழுதுவிட்டாள் அவள். சிவகாமியின் உள்ளம் பாகாக உருகியது. அவள் மேனகாவை நம்பவில்லை.



“சித்திகள் அன்பா இருப்பாங்கன்னு சொல்றதை என்னால் ஏத்துக்க முடியாது. அவளுகளுக்கு என்ன? பெத்த பிள்ளையா இருந்தா இப்படி அடிப்பாளா? கண்ணைப் பார்த்தாலே தெரியுது பொய் சொல்றான்னு...ரிஷி நான் ரத்தத்தை துடச்சிட்டேன். நீ தெரு முனையில் இருக்கும் டாக்டர் சுசைனாதனிடம் கூட்டி போ...” அவன் உடனே கிளம்பினான்.



“தாங்க்ஸ் ரிஷி.....என்னை நம்பியதுக்கு தேங்க்ஸ்...” என்றாள் சந்திரிகா கண்ணில் கண்ணீருடன். அவன் அவளை தட்டிக் கொடுத்து



“இட்ஸ் அல்ரைட். இனிமே உங்க சித்தி உன்னை கொடுமை படுத்தினா என் கிட்டே வந்து சொல்லு சரியா? நான் இருக்கேன் உனக்கு...”



அம்மா சொன்னதை கேட்டு ரிஷி சிறுமி சந்திரிகாவுக்கு நல்ல நண்பனாக இருந்தான். சந்திரிகாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தான். எத்தனையோ முறை தலை வாரிவிட்டிருக்கான்...ஏன் சமயத்தில் அவளுக்கு ஜுரம் வந்த போது அவள் வீட்டுக்கே போய் மாத்திரை கொடுத்து.....சிரப் கொடுத்து கவனித்தான். கஞ்சி சாப்பிட வைத்தான். அவன் மனசில் அம்மா சொன்ன மாதிரி மன கஷ்டத்தில் இருப்பவளுக்கு ஆறுதல் சொல்வது புண்ணியம் என்று நினைத்தான். சிறுமியின் முகத்தில் புன்னகையை காண்பதில் அவனுக்கு தனி ஆனந்தம். அது அவனைப் பற்றிய பெருமிதத்தை கொடுத்தது. நான் பெரிய மனுஷன். நல்லவன். அன்பானவன் என்று மகிழ்ச்சி அடைந்தான்.



“அம்மா...நான் மனசை டெட்டால் போட்டு சுத்தம் பண்ணியிருக்கேன். உனக்கு என்னை பிடிச்சிருக்காம்மா?”



“ரொம்ப பிடிச்சிருக்கு. மனுஷங்களை நேசிக்கணும் அவங்க நம்மை நேசிக்காட்டியும்...சந்திரிகாவின் சித்தியிடமும் நீ பரிவு காட்டணும்..”



“என்னம்மா சொல்றே? அவங்க சந்திரிகாவை இல்ட்ரீட் பண்றாங்க. அவங்க கிட்டே அன்பா இருக்கணுமா?”



“உங்கம்மாவுக்கு மனசு வானத்தை போல...அவ சொல்றதை கேக்காதே. அவளுக்கு எல்லோரும் நல்லவரே. நீ பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடனும்டா. உண்மையான அன்பு விலை மதிப்பில்லாதது. தூக்கி அதன் அருமை தெரியாதவங்க கிட்டே கொடுக்காதே...அந்தப் பொண்ணு சந்திரிகா மேலே எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லே...அந்த மேனகா மீதும் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லே....அவங்க வீட்டு விவகாரமே வேண்டாம். ஒதுங்கிக்கோ ரிஷி. வம்பிலே மாட்டி விடுவாங்க...” என்று சுரேந்தர் மகனுக்கு சொன்ன போது சிவகாமி சொன்னாள்.



“ஏங்க...புள்ளைக்கு நல்லது சொல்லிக் கொடுங்க. தாயில்லாத குழந்தை நாலு நல்ல வார்த்தை பேசினா என்ன தப்பு? மேனகாவுக்கு குழந்தை இல்லை. அந்த ஆத்திரத்தில் அவள் இவள் மேல் காட்டமா இருக்கா...என்ன பண்றது? அவளுக்கும் ஏமாற்றம்....இவளுக்கும் ஏமாற்றம். அவளுக்கு அவள் சொந்தங்கள் இருக்காங்க. இந்த புள்ளைக்கு யாரும் இல்லே...அதான் ஒரு சின்ன பரிவு. நம்மாலே முடிந்ததை செய்றோம்...”



“நீ சொல்றது சரிதான் சிவகாமி. ரெண்டு பக்கமும் சரியில்லை. ஏதாவது பிரச்சனை வந்தா நம்ம தலையை உருட்டுவாங்க. நம்ம பையன் பாவம் அப்பாவி. சிக்கலாயிடக் கூடாது இல்லே...”



சில தீர்க்க தரிசனம் உண்மையாகிவிடும். அப்படித்தான் ஆயிற்று சந்திரிகா வீட்டு விவகாரம். சந்திரிகா பெரிய பெண்ணாக ஆனதும் அவள் சித்தி அவளை ரிஷியோடு பழகக் கூடாதுன்னு தடை போட்டா. சந்திரிகாவின் வருகை நின்றது.

ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு சந்திரிகா பல நாள் அழுவதை பார்த்திருக்கான் ரிஷி. அவளிடம் செய்கை செய்தான். “என்னாச்சு? இங்கே வா”



மறுப்பாக தலை ஆட்டுவாள் அவள். கண்ணீர் முட்டி நிற்பது அவன் மனசுக்கு என்னவோ மாதிரி இருந்தது.



“அம்மா...பாவம் சந்திரிகா. அவ சித்தி கொடுமை ஜாஸ்தியாயிடுச்சு போல. அவ அழுவதை நிறைய தரம் பார்த்தேன். நான் போகக் கூடாதுன்னு அப்பா சொல்லிட்டார். போய் பேசினா அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குமே அம்மா. பார்த்திட்டு சும்மா இருக்கறது கஷ்டமா இருக்கும்மா...”



ரிஷிக்கு மனதில் எந்த களங்கமும் இல்லை. நம்மால் முடிந்த ஆதரவு தரலாமேன்னு நினைத்தான்.



“புரியுதுடா..ஆனா அப்பா சொல்றது தான் சரி. அவள் பெரியவள் ஆய்ட்டா. நீ இனிமே பேசினா அவங்க வீட்டிலே தப்பா பேசுவாங்க. விடு. நாம என்ன செய்ய முடியும்? வேர் கெட்டுப் போயிருந்தா...செடிக்கு தண்ணி ஊத்தி என்ன பிரயோஜனம்? எல்லாம் சரியாயிடும்.”



ரிஷி அமைதியாக இருக்க முயன்றான். அம்மா சொல்வதை அவன் மீறுவதில்லை. இந்த சமயத்தில் திருப்பு முனையாக....

இரத்னகுமார் என்ற நண்பன் ரிஷியிடம் வந்து சொன்னான்.



“சந்திரிகா இப்பொழுதெல்லாம் பரீட்சையில் குறைந்த மார்க் வாங்குகிறாள். சதா சித்தியிடம், என் நண்பனை என்னிடமிருந்து பிரிச்சிட்டே இல்லே....நான் ஓடிப் போகப் போறேன்னு சொல்றா...பாவமா இருக்கு. நீ எப்பவும் ஆறுதலா இருப்பே இல்லே..இப்ப வரதில்லை. அதான் அப்செட் ஆகிட்டா...”



அன்று இரவு ரிஷிக்கு தூக்கமே வரவில்லை. பாவம் சந்திரிகா. அவள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தா ஓடிப் போகப் போறேன்னு சொல்லியிருப்பா.?



இப்படியும் அப்படியுமாக நாட்கள் விரைந்து செல்ல சந்திரிகா கல்லூரியில் காலடி வைத்தாள். அவன் எம்.பி.ஏ சேர்த்திருந்தான். அவள் அவன் வீட்டுக்கு வரமுடியாமல் அவள் சித்தி தடுத்துவிட்டிருந்தாள். அவனை அவன் அம்மா தடுத்து விட்டிருந்தாள். அவ்வப்போது சந்திரிகாவின் தரிசனம் ஜன்னல் வழியே கிடைக்கும். நன்றாக வளர்ந்து நிறமும் அழகுமாக அவள் ஜொலித்தாள். பாவம் இவ்வளவு அழகான பொண்ணுக்கு கிடைத்த வரம் கண்ணீர் தான் என்று ஆதாங்கப்பட்டிருக்கான். அம்மாவிடமும் அங்கலாயத்திருக்கான்.



“நாம என்ன செய்யமுடியும் ரிஷி?...அவளே இதிலிருந்த வெளியே வரணும் நினைக்கணும். இப்படி கோழையா இருந்தா பட வேண்டியது தான். பயப்படாதே

கல்யாண வயசு வந்தாச்சு. அவ அப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்பதா கேள்வி. நல்ல பையனா அமையும். ஆண்டவன் இருக்கான்...”



ரிஷி வெளியே போகும் போதெல்லாம் எதிர் வீட்டை ஒரு நோட்டம் விட்டு விட்டு தான் செல்வான். அவள் முகம் ஜன்னலில் தெரியுதா என்று பார்ப்பான்.

அவள் சித்தி தான் அவனை முறைத்துப் பார்ப்பாள். ஒரு நாள் அவன் பைக்கில் ஏறும்போது சந்திரிகா ஓடி வந்தாள்.



“ரிஷி என் எதிர்காலமே எனக்கு எதிரியா இருக்கு. என்னை காப்பாத்து...”



சொல்லிவிட்டு அவள் கண்ணீர் கோடுகளுடன் ஓடிவிட்டாள். பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டிவிட்டு கொஞ்சமும் யோசிக்காமல் அவள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டான் ரிஷி. சந்திரிகா டேபிள் மேல் முகத்தை கவிழ்த்துக் கொண்டு விசும்பிக் கொண்டிருந்தாள்.



“சந்திரிகா...என்னாச்சு? ஏன் அழற? சொல்லு உன் சித்தி உன்னை அடிச்சாங்களா? எங்கே அவங்க?”



“ரிஷி...இத பாருங்க...”



அவள் அன்று பாவாடை தாவணி அணிந்திருந்தாள். லேசாக பாவாடையை தூக்கிக் காட்டினாள். கணுக் காலுக்கு சற்று மேல் அடி வாங்கி கன்னிப் போயிருந்த அடையாளம் தெரிந்தது.



“ரிஷி...எனக்கு அம்மா இல்லாததாலே தானே இவங்க இப்படி அடிக்கிறாங்க? எங்க அப்பா ஏன்னு கேக்றதில்லை. என்னை ஏதாவது அநாதை இல்லத்திலே சேர்த்திருங்க ப்ளீஸ்....”



அவள் சிந்திய கண்ணீர் அவனை என்னவோ செய்தது. பாவம் என்று துடித்துப் போனான். ஆறுதல் சொல்வதை வாயால் மட்டும் சொல்லாமல் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்து “ஏன்னு நான் கேக்றேன் சந்திரிகா...நீ தைரியமா இரு...” அவள் குழந்தை போல் அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள்.



“கல்லூரியில் படிக்கிறே...உனக்கு தைரியம் வேண்டாமா? இப்படி குட்டக் குட்ட குனிந்தால் உங்க சித்தி உன் தலையில் மொளகா தான் அரைப்பாங்க..”



“ஆறு வருஷம் ஆச்சு ரிஷி உன் அன்பான வாரத்தை கேட்டு. எனக்கு இப்ப எப்படி இருக்கு தெரியுமா? அப்படியே ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரி இருக்கு. தினம் ஒரு நாள் வந்து என்னோடு பேசுவியா? ப்ளீஸ்...”



“கண்டிப்பா...டோன்ட் வொர்ரி...” அவள் தலைமுடி கோதி விட்டு நெற்றியில் முத்தமிட்டான். ஒரு குழந்தைக்கு ஆறுதல் சொல்வதாக தான் அவன் மனநிலை இருந்தது....அன்பு சுரக்கும் மனதில் நெகிழ்ச்சிக்கு பஞ்சமேது?



“தாங்யூ...தாங்யூ ....” என்று அவள் பதிலுக்கு அவனை கன்னத்தில் முத்தமிட்டாள். அந்த நேரம் கோவிலுக்கு போயிருந்த அவள் சித்தி வந்துவிட்டாள். அவள் முகத்தில் அதிர்ச்சி.



“ச்சே...நீயம் ஒரு பொண்ணா? வெக்கம்கெட்ட சிறுக்கி. எத்தனை நாளா இது நடக்குது? பொம்பளப் புள்ளைக்கு அப்படி என்னடி அவசரம்? எனக்குத் தெரியும் நீ அவனை ரகசியமா சந்திக்கிறேன்னு. நேத்து கூட பாடினியே...வரச் சொல்லடி அவனை வரச் சொல்லடி....என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும் வரச் சொல்லடி....திருப்பி திருப்பி பாடினே...அப்பவே எனக்கு சந்தேகம் தான்...போடி உள்ளே. உனக்கு தனியா சொல்லனுமாடா? போடா உள்ளே...”



“ஹலோ ஆன்டி...நீங்க நினைக்கிற மாதிரி இல்லே. அவளை நீங்க தினம் தினம் டார்ச்சர் பண்றீங்க. கேக்க ஆள் இல்லேன்னு தானே. நான் இருக்கேன்...”



“நீ யாருடா அவளுக்கு வக்காலத்து வாங்க?”



“அநியாயம் நடந்தா யார் வேணா வக்காலத்து வாங்கலாம். கரண்ட காலிலே கன்னிப் போறா மாதிரி அடிச்சிருக்கீங்க....நீங்கள்ளாம் ஒரு மனுஷியா?”



“ஏய்...எங்கேடி....நானா அடிச்சேன்? என் முகத்தைப் பார்த்து சொல்லு?”

சித்தி ஆவேசமாக அவள் முகத்தை தன் பக்கம் திருப்பிக் கேட்டாள்.



“இல்லே இல்லே...நீங்க அடிக்கலை....”

“அவளை ஏன் மிரட்றீங்க? இனிமே அவ கண்ணிலே ஒரு சொட்டு....கண்ணீர் வரக் கூடாது.”



“இத பாரு அவ சொல்றதெல்லாம் பொய். இந்தக் காயம் எப்படி வந்ததுன்னே எனக்குத் தெரியாது......இவளுக்கு சித்தியா வந்தது என் தலையெழுத்து...சரி சரி வயசு பொண்ணு இருக்கிற இடத்துக்கு இனிமே நீ இங்கே வராதே அது நல்லாயிருக்காது. அவ அப்பாவுக்கு நான் பதில் சொல்ல வேண்டி இருக்கும். நல்லவிதமா சொல்றேன் போயிடு. ஏய்...போடி உள்ளே....” சித்தி போகும் போதே முணுமுணுத்துக் கொண்டே போனாள்... இவளை என் தலையில் கட்டிட்டு போயிட்டாளே மகராசி. என்னமா நடிக்கிறாங்க என்று இவன் நினைத்தான்...



“சந்திரிகா....ஏதாவது இவங்க உன்னை இல்டிரீட் பண்ணா எனக்கு போன் பண்ணு. இந்தா நம்பர்...” அவன் தன் நம்பரை ஒரு தாளில் கிறுக்கி கொடுத்துவிட்டு வந்தான். அவன் நம்பரை தரவில்லை தன் தலையெழுத்தை தானே எழுதி விட்டு வந்துவிட்டான்...அன்று அவனுக்குப் புரியவில்லை. இன்று அவருக்குப் புரிந்தது. தன்னையும் அறியாமல் சிரித்துவிட்டார்.



“என்ன நீங்களா சிரிக்ரீங்க?” என்று தாயம்மா கேட்ட பிறகு தான், அவருக்கு தான் பின்னோக்கி பயனித்தது புரிந்தது.



“ஒண்ணுமில்லை...” என்றார்.



“அப்படின்னா என்னவோ இருக்குன்னு அர்த்தம்.”



“இன்னொரு நாள் சொல்றேன்...”

எதுவும் சொல்லாமலேயே அவர் அந்த வீட்டை விட்டுப் போய்விட்டார்.

அவர் ஜாதகத்தை எந்த ஜோஸ்சியரிடமாவது காட்டி இருந்தால் அவர் உங்கள் வாழ்வில் பெண்களால் உங்களுக்கு அவமானமும் பிரச்னையும் வரும் என்று சொல்லியிருப்பார்களோ?



கனவுகள் தொடரும்
 
Top