கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் அத்தியாயம் 15

sankariappan

Moderator
Staff member
கனவு மலர்கள்

அத்தியாயம்--15



மோகனிடம் நடந்ததை சொன்னாள் மித்ரா.



“இது தான் நடந்தது மிஸ்டர் சந்தேகப் பேர்வழி. உங்க அண்ணன். ரொம்ப நல்லவர். எக்கச்சக்க மெசூரிட்டி.......”



“ஒ.....ரொம்பதான் புகழ் மாலை சூட்டி ஆகுது. இந்த பொம்பளங்களே இப்படித்தான். நடத்து நடத்து....அம்மாவை கைக்குள்ளே போட்டுகிட்டே...நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?...”



“மைனருக்கு கோபமாக்கும். அவர் கண்கண்ட தெய்வம். பொறாமைக்கு அப்பாற்பட்டவர். இவ்வளவு அழகான மனசை நான் இதுவரை சந்திச்சதில்லை. ஹி இஸ் கிரேட். சின்ன பையனாட்டம் நடந்துக்கிறதை விட்டிட்டு நீங்க கொஞ்சம் பக்குவத்தோட நடந்தா நல்லாயிருக்கும்.....விடுங்க நான் அம்மாகிட்டே பேசணும்...”



“அவ்வளவு சீக்கிரம் விட்டிடுவேனா...” அவள் இடுப்பை வளைத்துப் பிடித்து அவன் சில்மிஷம் செய்வதற்குள் அவள் சாமர்த்தியமாக நழுவிக் கொண்டு ஓடிவிட்டாள். ஏமாந்தீங்களா? என்று அழகு காட்டிவிட்டுப் போனாள்.



சுகமான காலை காற்று வீச தாயம்மாவும் மித்ராவும் தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். தாயம்மா முகம் சுத்த தங்கம் போல் ஜொலித்தது.



“மித்ரா....நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அமிர்தா என்னை நம்புகிறாள்.”



“இந்த மாஜிக் எப்படி நடந்தது?”



“கொஞ்சம் அவமானத்துடன் நான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி தான் அந்த மாற்றத்துக்கு காரணம்...”



“அம்மா....நீங்க அந்த சந்தோஷத்திலேயே இருக்கீங்க. அதுக்கும் மேலே நாம சிந்திக்கணும். உங்க முடிவு தான் என்ன? அமிர்தா சொன்னது பொய்யா? இல்லை அவளது கற்பனையா?”



“அமிர்தா சொன்னது பொய்யில்லை.”



“என்னம்மா குழப்பறீங்க. அமிர்தா பொய் சொல்லலேன்னா ரிஷி சார் தானே குற்றவாளி? அம்மா நான் பிரசாத் அண்ணாவோட பேசினேன்.”



என்ன பேசினார்கள் என்று முழுவதும் சொன்னாள் அவள்.



“அம்மா...இப்படி கேவலமா அமிர்தா கிட்டே ரிஷி சார் நடந்திருக்கவே மாட்டார். அப்ப அது யாருன்னு தான் நாம கண்டுபிடிக்கணும்...”



“உனக்கே புரிந்துவிட்டது அல்லவா? அதான் உன்னை அவனுடன் பேசச் சொன்னேன். இப்ப குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கறது? அமிர்தா பெயர் பேப்பரில், மீடியாக்களில் அடிபடும். அது நல்லதுக்கு இல்லே. அதான் என்ன செய்யறதுன்னு தெரியலை.”



“உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?”



“நந்தவனம் மாதிரி பூத்துக் குலுங்கிய எங்க வாழ்க்கையை மொட்டை அடிக்க தீர்மானிச்சு திட்டமிட்டு செய்த சதி தான் இது....எனக்கு ஒன்னும் ஓடலை.”



மோகன் அங்கே வந்தான். கையில் காப்பி கோப்பைகள்.



“அம்மா...நீங்க வர வர அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்றீங்க. அவ செய்ய வேண்டிய வேலையை நான் செய்யறேன்.

எடுத்துக்கோங்க...காப்பி சூடா இருக்கு.”



கோப்பைகளை எடுத்துக் கொன்ட தாயம்மா மகனிடம் சொன்னாள்.



“நம்ம வீட்டுக்கு விளக்கேத்தி விட்ட பெருமை மித்ராவுக்கு உண்டு. அமிர்தா என்னை நம்பலைன்னு எனக்கு கோபம். நான் அவளை நம்பலைன்னு அமிர்தாவுக்கு கோபம். இதை உடைத்து உண்மைகளை பார்க்க வைத்தது மித்ரா தான். நீ அவளுக்கு நன்றி சொல்றதை விட்டுவிட்டு வீட்டை விட்டு விரட்டினே..” குற்றம் சாட்டும் குரலில் அம்மா சொன்னதும் அவன் சொன்னான்.



“ரொம்ப மெச்சிக்காதீங்க. அவ பதிலுக்கு என்னை வீட்டை விட்டு விரட்டினா. அதுவும் நீங்க தான் அப்படி சொன்னீங்களாமே...அம்மா .சேம் சைடு கோல் போட்டா என்ன அர்த்தம்?..”



‘காப்பி ரொம்ப ஜோர்...” என்று பாராட்டினாள் மித்ரா. தாயம்மா சிரித்தாள்.



“டேய்....உன்னை அவள் வீட்டை விட்டு விரட்டினப்ப உனக்கு எப்படி இருந்தது?. அவளுக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்? அந்த வலி உனக்கு தெரியணும்னு தான் அவளை அப்படி சொல்லச் சொன்னேன்...”



“ம்க்கும்.....நாட்டிலே அநியாயங்கள் நடக்குது. மகனை கைவிட்ட தாயின்னு கட்டுரை எழுதப் போறேன்...”



“அதை உன் தங்கச்சி இவ்வளவு நாள் சொல்லிட்டு இருந்தா...இப்ப நீ சொல்றே. நல்ல பிள்ளைகள்....பார்த்தியா மித்ரா...”



“ஐயோ அம்மா...சும்மா சொன்னேன். நீங்களும் அமிர்தாவும் எப்படி காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டீங்க? நான் தெருஞ்சிக்கலாமா?”



“ஸாரி யுவர் ஆனர்...அது எங்க சீக்ரெட். நாட் ஃபார் பப்ளிக்..”



“நான் பப்ளிக்கா அம்மா?....என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....இருட்டினில் நீதி மறையட்டுமே...தன்னாலே வெளி வரும் தயங்காதே...”



“டி.எம்.ஸ் சுன்னு நினைப்பா?...” மித்ரா சொல்ல மோகன் சண்டை போட ஆரம்பித்தான். அவர்கள் செல்லச் சண்டை போட்டுக் கொண்டிருக்க தாயம்மா தன் மகளோடு நடந்த அன்யோன்னியமான உரையாடலை நினைத்துப் பார்தாள். அப்பாடா...ஒரு பாரம் அவள் நெஞ்சைவிட்டு அன்று போனது. அதை நினைத்துப் பார்த்தாள். நெஞ்சு லேசாகியது.



பயந்துகொண்டே மகளுடன் பேச ஆரம்பித்தாள் தாயம்மா.



“அமிர்தா...நான் பொழச்சு வந்திட்டேன். உனக்கு சந்தோஷமா? இல்லே வருத்தமா? அப்படியே நான் செத்துப் போயிருக்கலாம்ன்னு நினைக்றியா?”



மகள் பாய்ந்து அவள் வாயை பொத்தினாள்.



“அம்மா உங்க மேலே எனக்கு கோபம் இருந்தது...ஆனா நீங்க செத்துப்போனும்னு நினைப்பேனா? என்னை மன்னிச்சிடுங்க....போனது போகட்டும் அம்மா. நீங்க எனக்கு வேணும்....நான் என்ன செய்யனும்? சொல்லுங்க...”



கதறி அழுது விட்டாள் அமிர்தா. மகளின் கண்ணீரை துடைத்தாள். ஆனால் அவள் கண்ணீரை ஆறாக பெருகவிட்டாள்.

சற்று அடங்கியதும் அமிர்தா சொன்னாள்.



“அம்மா...அன்று நீங்க ஹோட்டல் ராகினியில் ஒரு ப்ரோக்ராம் போயிட்டு வரேன்னு வெளியே போனீங்க. நான் என் சினேகிதி உமாவோடு செஸ் விளையாடிட்டு இருந்தேன். ரிஷி அப்பா கிளப்புக்கு போறதா சொல்லிட்டுப் போனார். உமாவோட அப்பா வந்து அவளை அழைச்சிட்டுப் போனார். சிறிது நேரத்தில் அண்ணா இதோ வந்திடறேன்னு சொல்லிட்டுப் போயிட்டான். நான் தனியாத் தான் இருந்தேன்...அப்ப தான்....நம்பவே முடியலை அம்மா.... ரிஷி அப்பா உள்ளே வந்தார். நண்பகல் நேரம். அப்ப....அப்ப அவர் என்னை இறுக்கமா பிடிச்சுக்கிட்டு கிஸ் பண்ண வந்தார்...அது ஒரு பலாத்கார அணைப்பு. எனக்கு அதிர்ச்சி. நான் அவர் பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்த ஷரட்டை போட்டுக்கிட்டிருந்தார். அதனாலே எனக்கு சந்தேகமே இல்லை. அவர் தான் அது. மாடிப்படிக்கிட்டே இருக்கும் அவர் போட்டோவில் உள்ள அதே சட்டை தான். ரிஷி அப்பாவா இப்படி? முதலில் தடுமாறினேன். பிறகு அது நிஜம்னு புரிஞ்சதும் நான் நோன்னு கத்திட்டேன்...அப்படி இப்படி நெளிந்து அவர் பிடியிலிருந்து தப்பிக்க ட்ரை பண்னினேன். அவர் என்னை விடுவிச்சிட்டு வில்லன் போல் சிரிச்சிட்டு போயிட்டார்... அம்மா அது ரிஷி அப்பா தான். நான் நல்ல பார்த்தேன். நீங்க ஏன் என்னை நம்ப மறுத்தீங்க.? அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு நான் இப்ப நினைக்கறேன்....சொல்லுங்க ஏன் அம்மா என்னை நம்பலை?”



“ஏன்னா...நீ சொன்ன அந்த நேரம் ரிஷி என்னோட தான் இருந்தார்...”



“எப்படிம்மா அவர் இரண்டு இடத்திலே இருக்க முடியும்?”



“கண்டிப்பா இருக்க முடியாது....”



“எதுக்கு நீங்க ரெண்டு பேரும் தனித் தனியா வெளியே போய் மீட் பண்ணனும்? சொல்லிட்டுப் போயிருக்கலாமே. நான் என்ன தப்பவா நினைப்பேன்?.”



“அமிர்தா....உன் கிட்டே ஒரு உண்மையை சொல்லணும். எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு. அதான் இவ்வளவு நாளா மறைச்சிட்டேன்...”



“என்னம்மா அது?...சும்மா சொல்லுங்க. நான் புரிஞ்சுக்கிறேன். எனக்கு உண்மை தெரியனும். நீங்க அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு ஷாக்கா இருந்துச்சு. மகளை கெட்ட நோக்கத்தோட அணுகிய ஒரு கயவனை நீங்க ஆதரிச்சா நான் எப்படி தாங்கிக்க முடியும்? சொல்லுங்க... ஏன் அப்படி செஞ்சீங்க? என்னாச்சு?”



தாயம்மா தலை குனிந்தாள். அவள் உதடுகள் துடித்தன. தானே இல்லாமல் போய்விட வேண்டும் போல் அவள் உணர்ந்தாள்.



“அம்மா...என்னை உங்க ஃப்ரெண்டா நினச்சு சொல்லுங்கம்மா...அம்மா..அம்மா சொல்லுங்க அம்மா. அவரை நீங்க என்ன கள்ளத்னமாவா சந்திக்க போனீங்க?. நீங்க அவர் தாலி கட்டின மனைவி. உரிமை இருக்கு....பைன் ஏன் அப்படி? சொல்லுங்க அம்மா.”



“வந்து வந்து....” தயங்கினாள் தாயம்மா. மகளிடம் எப்படி சொல்வது? மானம் போகுமே! இந்த வயதில் இப்படியா என்று அவளை கேவலமா நினைக்க மாட்டாளா? அம்மாங்கற மரியாதை போய்விடுமே...



“அம்மா...நான் இப்ப உங்க மகள் இல்லை. உங்க தோழி. சொல்லுங்க..”



தாயம்மா தயங்கினாள். அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.



தாயம்மாவின் திருமணம் எதிர்பாராமல் சந்தானத்தால் நடந்தது. அவளுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு புறம் என்னவோ ஒரு அவமானம் பிடுங்கித் தின்றது. தப்பு செய்துவிட்டோமோ என்று கலக்கம். குடிகார கணவன் என்னெவெல்லாம் பேசிவிட்டுப் போனான்? நேரிலும் போனிலும் மனசை குத்தி குதறிவிட்டான்.....போன் மணி அடித்தாலே அவள் நடுநடுங்கினாள்.



“ஏய்....மானம் கெட்டவளே. உன் நோக்கம் தெருஞ்சிப் போச்சு. ஆம்பளை சுகம் கேக்குதா உனக்கு? நான் குடிகாரன் பாதி நாள் வீட்டுக்கே வரதில்லை அதான் ரொமான்ஸ் பண்ண ஆள் தேடிக்கிட்டியா?...பாரு அவன் உன் மகள் மேல் கை வைக்கப் போறான்....அப்ப தெரியும் உன் பவிஷு...கல்யாணம் பண்ணியதுக்காக வருத்தப்படுவே. நான் சொல்றது நடக்கிறதா இல்லையா பார்.”



“சீ வாயை மூடு. உன்னை மாதிரி நினைச்சியா? குடிச்சிட்டு கண்ட கண்ட பொம்பளையோட நீ அலையறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? பிள்ளைகளுக்காக பொறுத்துக்கிட்டேன். ஆனா நீ பிள்ளைகளையே நாசம் பண்ண துணிஞ்சிட்டே. அப்புறமும் உன்னோடு வாழ என்னால் முடியுமா? இப்படி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு? உன்னை விட அவர் அவங்களுக்கு நல்ல அப்பாவா இருக்கார். நீ தான் தலை குனியனும். மானம் கெட்டவனே....” அவள் கேகத்தான் செய்தாள்.

அவள் உண்மையை பேசியதை தாங்க முடியாமல் மேலும் தூற்றினான்.



“என்னை குடிகாரன் ஆக்கியதே நீ தானேடி. எனக்கு சந்தேகமா இருக்கு பிள்ளைகள் எனக்கு பிறந்தது தானான்னு. பிசினஸ் பண்றேன் பேர்வழின்னு நீ கண்ட கண்ட ஆம்பளை தடியன்களோடு சுத்தறதை பார்த்து தான்டி குடிக்க ஆரம்பிச்சேன். இப்ப ஒருத்தனை பிடிச்சிட்டே இல்லே...”



“நான் யாரையும் பிடிக்கலை. உன்னை எவ்வளவு கெஞ்சினேன்? திருந்துவே திருந்துவேன்னு நம்பினேன். ஒரு மாசத்துக்கு ஒரு முறையாவது கலாட்டா பண்ணி வீட்டையே குடிகார ‘பார்’ ஆகிட்டிருந்த நீ கடைசியில் தினம் தினம் குடிச்சிட்டு வந்து பெத்த பிள்ளைகளுக்கே ஊத்தி விட ஆரம்பிச்சே....பொம்பளை பிள்ளையும் நீ விட்டுவைக்கலை.. அடிச்சே. பாத்திரங்களை போட்டு உடச்சே. பீரோவிலிருந்து பணத்தை எடுத்திட்டுப் போய் கூத்தியாளோடு கும்மாளம் அடிச்சே. இதுக்கு மேலே நான் பொறுமையா இருந்தா நான் மனுஷியே இல்லை. என் பிள்ளைகளுக்காக உன்னை போலீஸில் பிடிச்சுக் கொடுத்தேன்...தப்பா? நீ செய்த தப்புக்கு என் மேல் பழி போடறே?”



”தூ.....பொறம்போக்கு. நடத்தை கெட்டவளுக்கு வாய் வேறயா?”



இப்படித்தான் அவர்கள் உரையாடல் அமைந்தது. அவள் தினம் தினம் மனம் நொந்து, உடல் வெடவெடன்னு நடுங்க திடுக்கிட்டு முழிப்பாள். ரிஷி அவளிடம் என்னாச்சுன்னு கேட்ட போது.....ஒன்னுமில்லைன்னு மழுப்பூவாள்.. ஒரு முறை அவர் இருக்கும்போதே தாயம்மாவுக்கு போன் வந்தது.



“என்னடி.....போலீசிலே பிடிசுக் கொடுத்திட்டா நான் உனக்கு போன் பண்ண முடியாதுன்னு நினைச்சியா? விடமாட்டேண்டி....” அவள் முக கலவரத்தை பார்த்து ரிஷி புரிந்து கொண்டார். போனை வாங்கி சத்தம் போட்டார்.



“அடங்கமாட்டியா நீ? கூடிய சீக்கிரம் உன்னை உள்ளே தள்ளலை என் பெயர் ரிஷி இல்லை. மரியாதையா அவளிடமிருந்து விலகிடு. இனிமே என் மனைவிக்கு போன் செஞ்சே உன்னை தொலைச்சிடுவேன்.....ராஸ்கல். கொன்னுடுவேன்.” அவன் குரலில் இருந்த கடுமை அவனுக்கு பயத்தை கொடுத்தோ என்னவோ....அதுக்கு மேல் அந்தக் குடிகார புருஷன் பேசவில்லை. ஆனால் அவன் பேசி முடித்த சொற்கள் இவள் காதில் ஈயத்தை காச்சி ஊதியது போல் இருந்தது. சதா வந்து மோதியது.



“தாயம்மா...அவனை சிறையில் தள்ளியாச்சு. கவலையை விடு...”



அவள் மனசை தேற்றி அன்பும் பாசமும் காட்டி, நல்ல வாழ்க்கையை வாழவேண்டிய அவசியத்தை சொன்னார் ரிஷி.



“தாயம்மா...நம்மிடையே அன்பும் காதலும் இருக்கு. நீயோ நானோ வேணும்னே நம் பாட்னரை பிரியலை. பிரிய வச்சாங்க. எல்லார் முன்னேயும் நாம் வாழ்ந்து காட்டணும். நம் குழந்தைகளை சிறப்பா வளர்த்து ஜெயிச்சு காட்டனும். மனசை திடமா வச்சுக்கோ கண்மணி...”



அவர் வார்த்தைகள் மெல்ல மெல்ல அவளை ஓரளவு தேற்றியது. ஆனாலும் அடி மனசில் அவள் நொந்து தான் போயிருந்தாள். ரிஷியும் அவர் மனைவியால் துன்பப்பட்டார். அவள் கக்கிய விஷம்...



“என்னைவிட அழகானவள்னு தானே அழகே உருவான பொம்பளையை பிடிச்சிட்டே? தெரியும் எனக்கு...நீ ஒரு ஈவு இரக்கம் இல்லாதவன். மகனை கூட பிரிஞ்சு இருக்க துணிஞ்சிட்டே. அவனிடம், நீ அம்மாவோடவே இருன்னு சொன்னியாமே...எதுக்கு? நீங்க ரெண்டு பேரும் கொஞ்சறதுக்கு இடைஞ்சலா இருக்கும்னு தானே அவனை என்னிடம் விரட்டிட்டே இல்லே...” ஆத்திரத்தோடு பேசினாள்.



“இதோ பார்....நீ இப்படி பேசறது நல்லாயில்லை. நான் உன்னை நேசிச்சேன்னு உனக்குத் தெரியும். உனக்குத் தான் என்னைப் பிடிக்கலை. நான் என்ன செய்யட்டும்? நீ தான் கோர்ட்டுக்குப் போனே. குழந்தை உன் கூடவே இருக்கணும்னு பொய் சாட்சி எல்லாம் சொல்லி சாதிச்சுக்கிட்டே. இப்ப என்னை பழி சொல்றே? நீ நல்லாயிருக்கணும்னு தான் மகனிடம் அப்படி சொன்னேன். நீ நல்ல மனைவி இல்லை ஆனா நல்ல தாயா இருப்பேன்னு நம்பினேன். அவனுக்கு தாய் அன்பு அவசியம்னு தோனுச்சு. அவனை விட்டா உனக்கு யார் இருக்கா? அதான் அப்படி சொன்னேன். மகனை நல்ல பார்த்துக்கோ. அவனை நல்ல படிக்க வை. அவனை நல்ல ஆளாக்கு...சரியா? சந்திரிகா....உன்னை நினைச்சா கவலையா இருக்கு. ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு போன் பண்ணு. உன்னால் முடியலன்னா பிரசாத்தை என்னிடம் ஒப்படச்சிடு. நீயா கொடுத்திட்டா நல்லது. நானா கேட்டு வாதாடி ஜெயிச்சா அவனை நிம்மதியா இருக்க விட மாட்டே....இப்படிதானே சொன்னேன். பிரசாத்தை நீயா ஒப்படச்சிடுன்னு தானே சொன்னேன்....”



அவளுக்குப் புரிந்தது. ரிஷி உண்மையை தான் சொல்கிறார். ரிஷி பிள்ளையை கொடுத்துவிடும்படி போராடணும்னு தான் அவள் ஆசைப்பட்டாள். ரிஷியின் வேதனையும் வலியும் தான் அவருக்கு அவள் தரும் தண்டனை என்று நினைத்தாள். ஆனால் அதிலும் அவளுக்கு தோல்விதான். போராட போராட மகனின் நிம்மதி போய்விடும் என்று தான் ரிஷி மகனை விட்டுக் கொடுத்துவிட்டார் என்று அவளுக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அவளுக்கு இந்த தோல்வியை தாங்க முடியவில்லை. அவள் உடைந்து போய் அழுதாள். நீ என்னை ஏமாத்திட்டே என்று கதறினாள். என்ன பதில் சொல்வது என்று அவர் விழித்தார். இதை எல்லாம் அவர் தாயம்மாவிடம் சொல்லவில்லை.



இருவர் வாழ்விலும் வீசிய புயல் தான் அவர்களை ஒன்று சேர்த்தது. ஏழைக்கு எப்படி பணத்தின் அருமை தெரியுமோ அது போல் அன்பு கிடைக்காமல் ஏழையாக இருந்த இவர்களுக்கு அன்பின் அருமை தெரிந்திருந்தது. அவர்களிடயே பூத்த காதல் மனம் சம்பந்தப்பட்டது.



“நமக்கு குழந்தையே வேண்டாம் தாயம்மா. மோகனும் அமிர்தாவுமே போதும்.”



அவள் வியப்புடன் அவரைப் பார்த்தாள்.



“என்ன சொல்றீங்க இதில் உங்களுக்கு வருத்தமில்லையா?”



“இல்லை.....எனக்கு அமிர்தாவும் மோகனும் தான் பிள்ளைகள். பாகுபாடு பார்க்கத் தோணலை....நான் மன நிறைவோடு சொல்றேன்....தீர்மானமாகவும் சொல்றேன்..”



இனிமையான இல்லறம் என்பதற்கு எடுத்துக் காட்டா வாழ்ந்தார்கள். யார் கண் பட்டதோ....பத்து வருஷத்துக்கு பின் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.



மீண்டும் தனிமை....குற்றச்சாட்டு....பழி..பிரிவு...அவலம். தாயம்மாவின் உள்ளம் நைந்த உள்ளமாகிவிட்டது. சந்தோஷமான நாட்கள்.....ஹும் அது ஒரு நிலாக் காலம் ஆகிவிட்டது. திரும்ப வராத வசந்தம்.





“அம்மா...சொல்லு...” நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தாள் அமிர்தா.



“அமிர்தா எனக்கு உன்னிடம் எப்படி சொல்றதுன்னு தெரியலை.....நீ தூங்கும்போது உன் மேஜையில் ஒரு கடிதம் இருக்கும் அதை பார்த்து தெருஞ்சுக்க. உனக்கு மனம் ஒப்புச்சுன்னா என்னிடம் வந்து பேசு.”



கண்ணை மூடிக் கொண்டு, மகளின் முகத்தை பார்க்க அஞ்சி, தலை குனிந்தபடி சொன்னாள். மெதுவாக அறையை விட்டு வெளியேறினாள். அமிர்தா யோசித்தாள். என்னவாக இருக்கும்?. அம்மா இவ்வளவு பீடிகை போடறாங்கன்னா அதுக்கு அர்த்தம் இல்லாம போய்யிடுமா? அமிர்தா இரவுக்காக காத்திருந்தாள். மேகம் விலகுமா? பௌர்ணமி தெரியுமா? அவள் அவளாக சிட்டுக் குருவி போல் வாழ்ந்த காலம் திரும்புமா? எந்த புள்ளியில் அவள் தவறு செய்திருக்கிறாள்? அது அவள் தவறு தானா? ரிஷி அப்பா மேல் அவள் கொன்ட கோபமும் வெறுப்பும் போகுமா? அவர் நிரபராதியா? அப்படியானால் அவள் பார்த்தது பொய்யா? அவளுக்கு விடியல் வர இரவு வரவேண்டும்....வா வா இரேவ வா...என் மனதுக்கு அமைதியைத் தா...அம்மா உன் கடிதம் பார்க்க ஆசையாயிருக்கேன்...



கனவுகள் தொடரும்
 
Top