கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் அத்தியாயம்--16

sankariappan

Moderator
Staff member
கனவு மலர்கள்

அத்தியாயம்---16





காற்றுக்கு பஞ்சமில்லை. ஜன்னல்ள் பெரிதாக இருந்தன. தாயம்மா ஜன்னல்களை திறந்தாள். நீல பூக்கள் போட்ட திரை விலகியதும் வானம் பளிச்சென்று தெரிந்தது....மாலை நேரத்து மஞ்சள் வெயில் இன்னும் சிறிது நேரத்தில் குங்குமச் சிவப்பாகும். பிறகு இருள் கவியும்....பத்து மணிக்குள் அவள் கடிதம் எழுதியாக வேண்டும். பத்து வருஷம் போனது தெரியவில்லை. ஆனால் இந்த மூன்று மாசம் யமனின் அருகாமையில் இருந்தது போல் அவ்வளவு இருட்டாக இருந்தது வாழ்க்கை. விளக்கு பிடிக்க ஒரே ஒரு வழி தான் இருந்தது. அன்று என்ன நடந்தது என்று மகளிடம் சொல்லியாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இது ரகசியம் இல்லை. ஒரு வித அவமானம். மகள் முன் தலைகுனிய நேரிடுமோ என்ற அச்சம். இனி அது தேவையில்லை. அவள் இனியும் மெளனமாக இருந்தால் அவள் மகள் அவளுக்கு இல்லாமல் போய்விடுவாள். ரிஷி மேல் அமிர்தா பழி சுமத்திய போது அவள் எதுவுமே பேசவில்லை. அவரை சமாதானப் படுத்தவில்லை. அவர் வீட்டை விட்டு போகும் போது அவள் நெஞ்சமும் அவருடன் கதறிக் கொண்டு போனது. ஆனால் அவள் மெளனமாக இருந்தாள். கடைசியாக ஒரு பார்வை ரிஷி அவளைப் பார்த்தார். அவள் உயிரே போய்விட்டது. அந்த கண்களில் அடிபட்ட காயம் கூர் வேல் போல் எழுந்து அவள் நெஞ்சை தாக்கியது.



“வரேன்...” என்ற ஒற்றை வார்த்தை அவள் காதில் ரத்து என்று விழுந்தது. ஆம் விவாகரத்து அவள் வாழ்வில் இரெண்டாம் முறையாக வரப் போகிறதோ! ரிஷி கேட்டை தாண்டும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.



“அம்மா...நீயும் வேணா அந்த காமுகனோடு போ. மகள் எப்படிப் போனால் உனக்கென்ன?...உன் புருஷன் தானே முக்கியம்? சீ...நீ அம்மா இல்லை...பேய்.. வேறு அம்மாவா இருந்தா இந்நேரம் அந்த காமுகனை விவாகரத்து செய்திருப்பாள்....உனக்கு அவன் தான் முக்கியம்...இல்லே?...எனக்கு அப்பா ராசியே கிடையாது. பெத்தவன், வாயில் விஸ்கியை ஊத்தினான். இரெண்டாவதாக வந்த அப்பன் என்னை பெண்டாள துணிஞ்சிட்டான். எனக்கு செத்துப் போலாம் போலிருக்கு.”



இந்த கொடூர வார்த்தைகளை கேட்டுக் கொண்டே அவள் தன் அறைக்குப் போய் மடிந்தபடி குலுங்கி அழுதாள். வெளியே மகள் அறைக் கதவை தட்டும் ஆக்ரோஷ சப்தம் அவள் நெஞ்சில் இடி போல் இறங்கியது.



தாயம்மா மனம் பலதும் நினைத்து அழுதது. ரிஷி நிரபராதி என்று சொன்னால் அவள் சரி என்று சொல்லிவிடுவாளா?.....அதுக்கு என்ன ப்ரூப் என்று கேட்க மாட்டாளா? விளக்கம் சொன்னால்....அமிர்தா அவளை புழு போல் பார்க்க மாட்டாளா? யாராவது அவர்களிடையே ஒரு பாலமாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். அவளை விட வயசில் பெரிய மனுஷி....உலகம் தெரிந்த விசால மனமுடைய மனுஷி இருக்கக் கூடாதா?



இப்ப நான் என்ன செய்வது? எந்த தோளில் சாய்ந்து கேக்கலாம்?. கவலைபடாதே நான் அவளிடம் பேசறேன்....அவள் புரிந்து கொள்வாள்...எல்லாம் சரியாகிவிடும். இப்படி யார் சொல்லப் போகிறார்கள்? இந்த மூன்று மாதம் யாருமில்லை....அதனால் அவர்களிடையே பிரிவு அகண்ட காவிரி போல் ஆகிவிட்டது. அவள் ஒரு கரையில். அவள் பிள்ளைகள் மறு கரையில். இடையே ஓடும் துன்ப ஆற்றினை கடக்க எந்த படகு வரப் போகிறது? மித்ரா அந்தப் படகாக வந்துவிட்டாள். அவள் இந்த சூழ்நிலையை சந்தித்து தான் ஆகவேண்டும் என்று தடாலடியாக புரிய வைத்துவிட்டாள். இதில் அவள் உருண்டு விழுந்தது துரதிர்ஷ்டம் தான். நன்மையில் தீமை...தீமையில் நன்மை இருப்பது உலகின் வழக்கம் தானே. அவள் சொல்லிவிடப் போகிறாள்....ஸாரி எழுதிவிடப் போகிறாள்.

வெளிச்சம் வரும்....அமிர்தா மனம் இரங்கினால் ரிஷி கூட வீட்டுக்கு வரலாம். அவள் எழுத ஆரம்பித்தாள்.



அன்பு மகள் அமிர்தா



நிறைய விஷயங்கள் நான் இதில் எழுதப் போறேன். தாயம் போட்டால் தான் ஆட்டையை துவங்க முடியும். நான் தாயம் போடப் போறேன். ஆட்டம் துவங்கப் போவுது. உனக்கு தெரிய வேண்டிய மறுபக்கத்தை உனக்கு காட்டப் போறேன். வெற்றியில் முடியனும்னு நான் வேண்டிக்கிறேன்.



அமிர்தா உனக்கு அப்பாவாக ரிஷி வந்தார். அதுக்கு அப்புறம் தான் நான் அவரை கணவனாக ஏத்துக்கிட்டேன்.

ஆனந்த யாழை மீட்டிவிட்டாய் என்று பெற்ற தகப்பன் தான் பாடணுமா என்ன? பெறாத தந்தையும் பாடலாம். அதுக்கு தேவை ஒரு தந்தை உள்ளம். அது மட்டும் தான். அது ரிஷியிடம் நிறைய இருந்தது. நீயும் அனுபவிச்சே.



உன்னை பெற்ற அப்பாவுக்கு நீ வெறும் தூசு. தட்டிவிட்டுவிட்டுப் போய்விட்டார். உனக்கு மூன்று வயசு நிறையவில்லை உன்னை மடியில் வைத்து கொஞ்சுவதை விட்டுவிட்டு மடியில் இருத்தி விஸ்கி ஊற்றி விட்டார். அவருக்கு மனசின் பாதிப்பு அதிகமாகிவிட்டது என்று தான் நினைத்தேன். கௌன்சலிங் போகலாம் என்றேன். “நான் ஆயிரம் பேருக்கு கௌன்சலிங் பண்ணுவேன். எனக்கு கௌன்சலிங்கா? உன் மகளை காப்பாற்ற ஓடி வரையே...என்னை இந்தக் குடியிலிருந்து காப்பாத்தனும்னு உனக்கு தோணலை இல்லே?. உனக்கு நான் வேண்டாமடி...அதான் உன் அலட்சியம் தெரியுது. டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். உன் தாய்மை எப்படி வொர்க் அவுட் ஆகுதுன்னு...செமையா வொர்க் ஆகுதே..” இப்படி விதண்டாவாதம் பேசிய உன் அப்பாவை பற்றி உனக்குத் தெரியாது. உன் மூன்று வயது முடிவதற்குள் அவர் உன்னை சிகரெட்டாக ஊதி காலில் மிதித்து நசுக்கினார். உன்னை பூச்செண்டாக பார்த்தது ரிஷி அப்பா தானே.



“அப்பா...அப்பா எனக்கு சைக்கிள் வாங்கித் தாங்க”.



“அப்பா...அப்பா எனக்கு எக்சிபிஷன் போணும்...”



“அப்பா...அப்பா நான் பட்டாஸ் வெடிக்கணும்...அம்மா விட மாட்டேங்கறா..”



எத்தனை எத்தனை விஷயங்களில் ரிஷி அப்பா உன் பிஞ்சு வாழ்க்கையில் தாலாட்டியிருக்கார்!.....பஞ்சு போல் ஒற்றி எடுக்கும் அந்த தந்தை பாசம் எப்படி பொய்யாகப் போகும்னு நீ யோசிச்சுப் பார்த்தியா? அமிர்தா நீ பெரியவளாகும் முன் நடந்த சம்பவங்கள் உனக்கு நியாபகம் இருக்கா? நீ விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கிட்டு ரிஷி அப்பாவோடு ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தே.



“ஸ்வீட் ஹார்ட்...நீ தான் ஃபஸ்ட் வருவே. கப் உனக்குத் தான்...”



சொன்னதோடு மட்டுமில்லாமல் மாலை முழுவதும் உன்னை ப்ராக்டிஸ் பண்ண வைத்தார். எப்படி ஓடனும்...என்ன மாதிரி உணவு எடுத்துக்கணும்...எவ்வளவு டிப்ஸ்? அவ்வளவு மெனக்கெட்டும் நீ தோத்திட்டே....அது உன்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. கமலினி என்கிற பெண் ஜெயிச்சிட்டா? உன்னால் தாங்க முடியவில்லை. ஜூரம் வந்தது. பிதட்டிக்கிட்டே இருந்தே. உன்னருகில் இருந்தது ரிஷி அப்பா தானே? நீ என்னென்னவோ கற்பனை பண்ண ஆரம்பிச்சே......உன்னையும் அறியாமல் நீ சொல்லிய சொற்கள் என்ன தெரியுமா?

“அப்பா...கமலினி என்னை பார்த்து ஏளனமா சிரிக்றா....” என்று ஒரு நாள்.

“அப்பா....கமலினி என் கால் ஷூவை கழட்டிட்டா...அதான் தோத்திட்டேன். கேஸ் போடலாம்ப்பா...” என்று மற்றொரு நாள். இப்படி பேசிட்டே இருந்தே.



உன் கற்பனைகள் நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. அவர் தான் உன்னை காரில் அழச்சிட்டுப் போய் டாக்டர் டாக்டரா காட்டினார். கிட்டத்தட்ட ஆறு மாசமாச்சு நீ நார்மலாக. அது வரை அவர் சரியாக சாப்பிடவில்லை. உறங்கவில்லை. மனதுக்குள் கண்ணீர் வடித்தார். நீ சரியான போது தான் அவர் அவராக ஆனார். சொல்லு இப்பவும் நீ ஏதாவது அது போல் கற்பனை பண்றியோன்னு எனக்குத் தோணுது.



அமிர்தா இன்னொரு விஷயம். அவர் உன்னை பலாத்காரமாக அணைத்தார். முத்தம் கொடுக்க முயற்சித்தார்ன்னு நீ சொல்வதற்கு என்ன காரணம்? ஏன் அப்படியொரு கற்பனை உனக்கு வந்தது? இது தான் என் கேள்வி.



நான் உறுதியாக அவர் இல்லைன்னு சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கு. அதை உன்னிடம் இப்ப சொல்றேன். நீ சின்னப் பெண் உன்னிடம் எப்படி சொல்வதுன்னு தெரியலை. ஆனாலும் உன்னிடம் சொல்லித்தான் ஆகணும். அமிர்தா....நான் மிகுந்த யோசனைக்குப் பின் தான் ரிஷியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவரின் நண்பர் நடத்தி வைத்தார் என்பது உண்மை தான் என்றாலும் எனக்கும் அதில் விருப்பம் இருந்தது. அச்சமும் இருந்தது. குழந்தைகள் இதனால் பாதிக்கப்படக் கூடாதுன்னு ஒரு பயம்.



அமிர்தா நீ அப்பா அப்பான்னு அவரிடம் ஒட்டிக் கொண்டது எனக்குள் இருந்த பயத்தை போக்கியது. ரிஷியும் எவ்வளவு உயர்தவர்ன்னு நான் தெரிந்து கொன்ட காலம் அது.



“தாயம்மா....நமக்குன்னு குழந்தை வேண்டாம். அமிர்தாவும் மோகனுமே போதும்னு.....

தீர்மானமாகச் சொல்லிவிட்டார். பத்து வருடம் வாழ்க்கை இனிமையாக சிக்கலின்றி போய்விட்டது.



அப்புறம் தான் சிக்கலின் விதை விழுந்தது. அமிர்தா மிகுந்த தயக்கத்தின் பேரில் உனக்கு ஒரு உண்மையை சொல்றேன். நான்...நான்...நான் பத்து வருடம் கழித்து, ப்ரெக்னென்ட் என்று தெரிந்ததும் என்னுள் சகலமும் நின்று போனது. வளர்ந்த பையனும் டீன் ஏஜ் பெண்ணும் இருக்கும்போது இப்படி என்றால்... அதுவும் உன் அப்பா இல்லாத ஒருவரிடம். அதை நீங்கள் இருவரும் எப்படி எடுத்துபீங்களோன்னு திகச்சிட்டேன்.. அவமானமாக இருந்தது. உங்கள் இருவர் முன்னும் தலைகுனிந்து நிற்கவேண்டும்...என்ன செய்வது? முடிவில் இது பற்றி ரிஷியிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவது நல்லதுதுன்னு நினச்சேன்.. அவரிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்.



உன் சிநேகிதி வந்திருந்தாள். மோகனை உங்களுக்கு துணையாக வைச்சிட்டு நான் வெளியே போய் சந்தித்து பேச திட்டம் போட்டேன். ரிஷி நான் கிளம்றதுக்கு ஒரு மணி நேரம் முந்தியே கிளம்பிச் சென்றார். நாங்க ஒன்றாகப் போயிருக்கலாம்....என்னவோ இருவருக்கும் ஒரு தயக்கம். ஒரு ஹோட்டல் அறையில் சந்திச்சோம். நான் பயத்துடன் இருந்ததை அவர் புரிஞ்சுக்கிட்டார்..



“தாயம்மா...நீ தேவையில்லாமல் பயப்படறே. நாம கள்ளத்தனமான ஜோடி இல்லை. முறையாக கல்யாணம் பண்ணிக் கொண்டவங்க. என்ன தயக்கம்? எதுக்கு இந்த ரகசிய சந்திப்பு? அமிர்தா அங்கே தனியா இருப்பா?”



“மோகனை இருக்கச் சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கேன்.”



“அவன் ஏதோ நாடகத்துக்கு போகப் போறதா சொன்னானே...”



“அவன் போறதுக்குள்ளே நாம் போயிடுவோம்.”



“சரி...விஷயத்தை சொல்லு...”



“வந்து...வந்து...நான்...நான் இப்ப நாப்பத்தஞ்சு நாள் குளிக்கலை...”



“என்ன சொல்றே? எனக்குப் புரியலை?”



“ம்க்கும்...எல்லாம் விளக்கமா சொல்லணுமா? நீங்க அப்பா ஆகப் போறீங்க. எனக்கு பயமா இருக்கு....அதான் என்ன செய்றதுன்னு தெரியலை...குழப்பமா இருக்கு...” தலையை குனிந்து கொண்டு தப்பு செய்துவிட்ட குழந்தை போல் சொன்னேன். ரிஷி தயங்கவே இல்லை. சட்டென்று சொன்னார்.



“இதில் குழப்பம் என்ன தாயம்மா?. அந்தக் குழந்தை நமக்கு வேண்டாம். எனக்கு அமிர்தா மட்டும் தான் குழந்தை. எனக்கு வேறு குழந்தை வேண்டாம்.” இந்த பதிலை நான் எதர்பார்க்கலை. குழந்தை வேனாமுன்னு தான் இருந்தோம்.. ஆனால் எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் இது மாதிரி ஆகிவிட்டது. என் மனதின் ஓரத்தில் அவர் சந்தோஷப்படுவார் என்று நினைச்சென். இப்படி சொல்கிறாரே.....என் மனசு விழுந்துவிட்டது.



“இத பாருங்க...நாம திட்டமிட்டு பெற்றுக் கொள்ள பிளான் போடலை. தவறுதலா நடந்திடுச்சு. நமக்கு ஒரு குழந்தை இருகட்டும்ன்னு ஆண்டவனே முடிவு பண்ணிவிட்டார்ன்னு தோணுது. எனக்கு என்னவோ நமக்குன்னு ஒரு குழந்தை இருக்கட்டும்னு தோணுதுங்க....”



“அம்மாடி நீ புரியாம பேசறே. அமிர்தா என் மேல் உயிரையே வச்சிருக்கா. குழந்தை பிறந்தால் அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. என்னை யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவள் விரும்ப மாட்டாள். தந்தையின் அன்பு இல்லாமல் அவள் பட்டுப் போக இருந்த சமயம் நான் வந்தேன். எப்படி ஒட்டிக் கொண்டாள் நீயே பார்த்தியே...அவள் சின்னஞ் சிறு உலகம் உடைந்துவிடும். பிரசாத்தின் உலகத்தை நான் உடச்சேன். இப்ப அமிர்தாவுக்கும் அதே தவறை நான் செய்ய மாட்டேன். ஸாரி தாயம்மா...கருவை கலைச்சிடு...”



“பிரசாத்தின் உலகத்தை நீங்க ஒன்னும் உடைக்கலை. அது அவன் அம்மா செய்த தவறு. பழியை எதுக்கு உங்க மேலே போட்டுக்றீங்க?”



“என் அஞ்சு வயது மகன் என்னிடமிருந்து பிரிய மனசில்லாமல் கதறக் கதற அழுதது நிஜம். இன்னும் என் மனசில் ரத்தம் வழியுது. போராடி அவனை என்னிடம் வைச்சிருக்கலாம்.. அதுக்காக நான் போராடவேயில்லை. பிள்ளையை ஒரு ராட்சசியிடம் கொடுத்திட்டேன். அவன் ஒரு பேய் பிடித்த அம்மாவுடன் எவ்வளவு போராடினான் தெரியுமா? அமிர்தாவுக்கு அந்த கதி வரவேனாம். இன்னொரு குழந்தை அவள் மனசை ரெண்டாக்கிடும். வேண்டாம் விஷப் பரீட்சை தாயம்மா. ப்ளீஸ்..இந்தக் குழந்தை வேண்டாம்....என்னால் அமிர்தாவின் கண்ணீரை தாங்கிக் கொள்ள முடியாது. என் உயிர் அவள். என் நெஞ்சில் குடியிருக்கும் அம்மன் அவள்.”



“நீங்க இப்படி சொல்றதை எப்படி எடுதுகறதுன்னு எனக்குத் தெரியலை. நீங்க இவ்வளவு பெரிய முடிவு எடுப்பீங்கன்னு நான் நினைக்கலை. ஆனா எனக்கு உங்க குழந்தை வேண்டும். நீங்க என்னிடம் காட்டிய அன்பை விட அமிர்தாவிடம் காட்டிய அன்பு தான் அதிகம். எனக்கே சில சமயம் பொறாமையா இருக்கும்....ரிஷி, நான் இந்தக் குழந்தையை பெத்துக்கத் தான் போறேன். அமிர்தாவை ஏற்றுக் கொள்ள வைப்பது என் பொறுப்பு.”



“நோ....அம்மாடி சொல்றதை கேள். அவள் மனசை தெரிச்சே காயப்படுத்தாதே. என் மகள் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது....என் உயிரே போய்விடும். பெற்றால் தான் பிள்ளை இல்லை தாயம்மா. அவள் என் மகள். எனக்கு சத்தியம் செய்து கொடு...இந்தக் குழந்தை வேண்டாம்...”



“ஸாரி ரிஷி....அமிர்தா உங்க குழந்தையாவே இருக்கட்டும். இது நம் குழந்தை. எனக்கு வேண்டும்....”



அமிர்தா...இருவருக்கும் இதுவரை இப்படி ஒரு கருத்து வேறுபாடு இருந்ததில்லை. எனக்கு ரிஷியை நினைத்தால் பெருமையாக இருந்தது. அதே சமயம்..இவ்வளவு விட்டுக் கொடுத்த அவருக்கு அவர் குழந்தையை பரிசாக கொடுக்கணும்னு நான் அந்த நிமிஷம் முடிவு பண்னேன். நமக்கு ஆண்டவன் கொடுந்திருக்கும் இந்த வரத்தை அழிக்க நமக்கு உரிமை இல்லை அப்படின்னு சொல்லிட்டேன்.


“இந்தக் குழந்தையை வரவேற்போம். அமிர்தாவிடம் நான் சொல்றேன். அவள் நிச்சயம் சந்தோஷப்படுவாள்....”



“அப்படி இல்லைன்னா?’



“அவள் ஏத்துக்குவாள். அதை என்னிடம் விட்டுவிடுங்கள்...”



இப்படித்தான் எங்கள் சம்பாஷனை முடிந்தது.





நான் தான் முதலில் வீட்டுக்கு வந்தேன். வீடு அமைதியில் ஆழ்ந்திருந்தது. பாட்டு சத்தமோ கலகல பேச்சு சத்தமோ இல்லை. அசாதாரனமான அமைதி. நெஞ்சு திக் திக்குன்னு அடிச்சிக்கிச்சு. நான் “அமிர்தா அமிர்தா...மோகன் மோகன்..” என்று கூவினேன். மோகன் வீட்டில் இல்லை என்று தெரிந்துவிட்டது. அவனை நம்பி உன்னை விட்டுட்டுப் போனது தப்புன்னு உணர்ந்தேன். அதனால் நீ கோபித்துக் கொண்டு அறைக் கதவை தாழிட்டு கொண்டு இருக்கேன்னு நினச்சேன். உன் அறைக் கதவை தட்டி தட்டி என் கை சிவந்து சோர்ந்துவிட்டது. என்னுள் பயம் பிடிச்சுகிச்சு .அந்த சமயம் ரிஷி வந்ததும் நான்

“என்னங்க...அமிர்தா கதவை திறக்கக் மாட்டேங்கறா. வாங்க பயமா இருக்கு.”



அவர் ஓடி வந்தார். என்னிடம் பேசிய பின், அவர் ஒரு நண்பனை பார்த்துவிட்டு வந்தார். அவர் முகத்தில் சுரத்தில்லை.



“சொல்லிட்டியா? நீ குழந்தை உண்டாகியிருப்பதை? கோபித்துக் கொண்டாளா? பார்த்தியா நான் சொன்னது சரியாகிவிட்டது.” கதவை பலமாக தட்டினார். அவர் கண்களில் நீர் சுரந்து வழிந்ததை நான் பார்த்தேன்.


“ஸ்வீட் ஹார்ட் கதவை திற...” அவர் சொன்னது தான் தாமதம் நீ கதவு திறந்து பத்ரகாளி போல வந்து நின்னே.. அதுக்கபுறம் நடந்தது உனக்கேத் தெரியும்.



அமிர்தா என்னை மன்னித்துவிடு அம்மா. உண்டாகியுள்ள குழந்தைக்காக சந்தோஷப்படுவதா? பெற்று வளர்த்த குழந்தையின் துன்பம் கண்டு அழுவதான்னு எனக்குத் தெரியவில்லை. உன்னோட மன சிதைவு ஒரு வலி என்றால்...வரம் என்று நினைத்து உண்டாகிய குழந்தையின் சிதைவு இன்னொரு வலி. எஸ்...அமிர்தா மாடிப்படியில் உருண்டு விழுந்ததில் எனக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. நான் ரிஷிக்கு கொடுக்க நினைத்த பரிசு கரைந்துவிட்டது. ரிஷியின் விருப்பம் போல் நடந்தது. இந்த இழப்பே போதும். உன்னையும் இந்த சூழ்நிலைக்கு பலியாக எனக்கு விருப்பமில்லை அமிர்தா. நான் உன்னை கிட்டத்தட்ட முழுசாக மனதால் பிரிந்த வேதனை போதும்.

இப்ப நான் உன்னிடம் பேசவில்லை என்றால் இந்த பிரிவு அகண்டு கொண்டே போய்விடும் என்று அறிவுறுத்தியது மித்ரா தான்.



இப்படியொரு நடுவர் நமக்கு தேவைன்னு எனக்குப் புரிந்தது. உனக்குத் தெரியுமா அமிர்தா....ரத்தம் கொடுத்து என்னை காப்பாற்றியது மித்ரா தான். மோகனின் ரத்தம் எனக்கு சேரவில்லை. அதை அவனிடம் சொன்னால் அவன் ஷாக் ஆகிடுவான்னு டாக்டர் சொல்லலை. மித்ராவை, மோகன் வீட்டை விட்டு அநாகரிகமாக விரட்டியது தெரிந்ததும் நான் ரொம்ப வருத்தப்பட்டேன். அவள் குடும்ப நிலை தெரிந்தும் இப்படி அவன் செய்திருக்கக் கூடாது. மித்ரா அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்தாள். அம்மா....யாராக இருந்தாலும் அப்படித்தான் ரீயாக்ட் பண்ணியிருப்பாங்க. பெத்த தாய்க்கு ஒண்ணுன்னா எப்படி சும்மா இருப்பாங்க சொல்லுங்க” என்றாள்.....மித்ரா ஆஸ்பத்திரியில் தான் இருந்தாள். இரவு முழுக்க விழித்திருந்து என்னை கவனித்துக் கொண்டாள். ஷி இஸ் ஏ ஜெம்...



அமிர்தா, ரிஷி அப்பா உன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று நீ குற்றம் சாட்டியது கேட்டு நான் உன்னை அடித்துவிட்டேன். அது ஏன்னு இப்ப உனக்கு புரிஞ்சிருக்கும். அப்ப உனக்கு அது மிகப் பெரிய அதிர்ச்சி. உனக்காக தன் குழந்தையையே வேண்டாம்னு சொன்ன அவரை நீ குற்றம் சாட்டியதை என்னால் தாங்க முடியவில்லை. எப்பேர்பட்ட குற்றச்சாட்டு அது! அவர் நீ சொன்ன நேரத்தில் என்னுடன் தான் இருந்தார். இதில் உனக்கு ஐயம் வேண்டாம்.



யார் உன்னிடம் இப்படி நடந்து கொண்டார் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். அல்லது உன் கற்பனையா என்று தெரிய வேண்டும்.



உன்னிடம் முன்னதாவே சொல்லாமல் இருந்தததுக்கு காரணம் என் பயமும்...நான் குழந்தை உண்டான செய்தியை சொல்ல அவமானப்பட்டதும் தான்.

அந்த தயக்கத்தை உடைத்தது மித்ரா தான்.



அமிர்தா கண்ணே....நீ என் கண்மணியாக மீண்டும் அம்மான்னு கூப்பிட்டு ஓடி வரணும் அம்மா....சரியா? காத்திருக்கேன் ...



அன்புடன் அம்மா.



கடித்ததை எழுதி முடித்தாள் தாயம்மா. ஆங்காங்கே அவள் கண்ணீர் பட்டு சில எழுத்துக்கள் கலைந்திருந்தது. அதை அப்படியே கொண்டு போய் அமிர்தாவின் மேஜை மேல் வைத்துவிட்டு வந்தாள். இரவு பூராவாக அவள் தூங்கவே இல்லை. அமிர்தா என்னை நம்புவாளா? அவள் சந்தேகம் போகுமா? அவள் இந்த சம்பவத்தை கற்பனை தான் பண்ணியிருக்கவேண்டும் என்று அவள் எழுதியிருப்பதை அவள் எப்படி எடுத்துக் கொண்டாள்? ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல் அவள் விடிய விடுய புரண்டு புரண்டு படுத்தாள். விடிந்ததும் அவள் மகளின் அறைக்கு ஓடினாள். கதவு திறந்திருந்தது. மேஜை மேல் அவள் வைத்த இடத்திலேயே ஒரு நீலக் கலர் கவர் இருந்தது. அமிர்தாவும் கடிதம் எழுதியிருக்கிறாள். அமிர்தா அமிர்தா என்று அறையை சுற்றி சுற்றி வந்தாள். அமிர்தா அறையில் இல்லை.



கனவுகள் தொடரும்
 
Top