கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் அத்தியாயம் --5

sankariappan

Moderator
Staff member
கனவு மலர்கள் அத்தியாயம்—5

மாடிப்படி ஏறிப் போகும்போது எதிரே சுவரில் பெரிதாக ஒரு புகைப்படம் மாட்டியிருந்தது. யோசனையுடன் அந்தப் படத்தைப் பார்த்தாள் மித்ரா. யார் இந்த வி.ஐ.பி அல்லது விவி.ஐ.பி? பௌர்ணமியோட கணவனாகத் தான் இருக்க வேண்டும். தீர்க்கமான கண்கள். முகத்தில் புருவம் அடர்த்தியாக இருந்தது. புஷ்டியான அவர் முகத்திற்கு பொருத்தமாக இருந்தது. மீசையில்லா முகம். ஹிந்தி படக் கதாநாயகன் போல் இருந்தார். முகத்தில் கொஞ்சும் குழந்தைத்தனம். கன்னத்தில் இடது பக்க வாயருகே ஒரு பெரிய மச்சம். பார்த்தாலே சட்டென மனசு அவரிடம் ஒட்டிக் கொள்ளும். அப்படிபட்ட முகம். வீட்டில் இப்போது அவர் இல்லை. இந்த வீட்டின் இதயங்களில் அவர் உட்கார்ந்திருந்ததுக்கு அடையாளமாக, கட்அவுட் ரேஞ்சில் புகைப்படம் மாடிப்படி சுவரை அலங்கரித்து.

“என்ன அப்படி பாக்றே? அந்த புகைப்படம் அங்கு இருப்பது உனக்குப் பிடிக்கலையா?” பின்னால் வந்து நின்ற மோகன் சொன்னதைக் கேட்டு அவள் சிரித்தாள். “நான் யார் இவரைப் பற்றி விமர்சனம் பண்ண? அமிர்தா அவர் பெயரைக் கேட்டாலே வெறுப்புடன் முகம் சுளிக்கிறாள்....அவர் உங்க அப்பா இல்லன்னு தெரியுது. அவரால் அமிர்தாவுக்கு ஆபத்தா? அதான் அவர் வருவதே அபூர்வமா இருக்கா? நீங்க தான் பதில் சொல்ல வேண்டும். அவர் முகத்தைப் பார்த்தா நல்லவராத் தான் தெரியறார்.”

“நாங்க எல்லாம் மூன்று மாசம் வரை ஒத்துமையா ஒரே குடும்பமா சந்தோஷமா தான் இருந்தோம். ஆனா இப்ப எல்லாம் தலைகீழாக மாறிடிச்சு. சரி வா நாம் அமிர்தாவைப் போய் பார்ப்போம். அவளுக்கு கலர் பாக்ஸ் வாங்கியிருக்கேன். அவளுக்கு கலர் பண்ணி பிடிக்கும். அது தான் அவள் பொழுது போக்கு.”

மித்ராவும் அவனும் அவள் அறைக்குள் பிரவேசித்தனர். மணி பத்தை தாண்டியிருந்தது. அமிர்த கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்த்தாள் பரிதாபமாக இருந்தது. யாரோ அவள் முகத்தின் உயிர்ப்பை பறித்துக் கொண்டது போல் இருந்தது. அவள் நைந்து போன பெண்ணாக இருந்தாள். நீல நிற மாக்ஸி போட்டிருந்தாள். மித்ரா தான் அவளை குளிக்க வைத்து இந்த உடையை போட்டு விட்டிருந்தாள்.

“அம்ரு...இந்தா கலர் பென்சில் பாக்ஸ்....” என்று கொடுத்தான் அண்ணன். அதை ஆவலோடு வாங்கிக் கொண்டாள் தங்கை. மித்ரா பரிவுடன் சொன்னாள்.

“அமிர்தா நீ ஏன் பேச மாட்டேங்கறே? பேசினா தானே, நீ என்ன நினைகிறேன்னு தெரியும்? டாக்டர்கிட்டே கூட பேசவில்லைன்னு உன் அண்ணா சொல்றார். நான் உனக்கு நல்லது தான் செய்வேன். நீ பேசணும் சரியா? நான் உன்னோட ஃப்ரென்ட்.”



மித்ரா சொல்லி முடிக்கிற வரை பேசாதிருந்த அமிர்தா அவள் பேசி முடித்ததும் அவள் கன்னத்தில் சப்பென்று ஒரு அறை வைத்து உறுத்துப் பார்த்தாள். நீ இதிலெல்லாம் தலையிடாதே என்று அந்த பார்வைக்கு அர்த்தம். மித்ரா இதை எதிர்பார்க்கவில்லை. சாதுவாக இருக்கும் இவளுள் ஒரு பெரிய எரிமலைக் கோபம் ஒளிந்து கொண்டிருகிறது என்று நினைத்தாள். அவள் மானத்தில் பெரிய சிதைவு ஏற்பட்டிருக்கு என்பது நிச்சயம்.

“நீ சாப்பிடு.....நான் ஒன்னும் சொல்லா மாட்டேன்...”

கொண்டு வந்த உணவை அவளுக்கு ஊட்டிவிட்டாள். அவள் மெளனமாக சாப்பிட்டாள். அவள் வாயை துடைத்து. தண்ணீர் பருகக் கொடுத்த மித்ரா

“எங்கே இப்ப படம் வரை பார்க்கலாம்.” என்றாள்.

அமிர்தா முகம் கனிந்தது. அவள் வரைய ஆரம்பித்தாள். அழகிய பூனைக் குட்டியை லாவகமாக வரைந்தாள். நீலக் கண்களும் வெள்ளையும் கறுப்புமான நிறத்துடன் அது அழகாக இருந்தது.

“ரொம்ப நல்ல வரைவான்னு நீங்க சொல்லவே இல்லையே?” என்று ஆச்சர்யப்பட்டாள் மித்ரா.

“ஸ்கூல் காம்படிஷனில் எல்லாம் வரைந்து பரிசு வாங்கியிருக்கா.”

பூனை குட்டியின் படத்தின் கீழ் “ஐ லவ் யூ.” என்று எழுதினாள். பின் மித்ராவைப் பார்த்து புன்னகைத்தாள்.

“வேறு படங்கள் வரைந்சிருக்கியா?” மித்ரா கேட்டவுடன் குடு குடுவென்று ஓடிப் போய் மேஜை இழுப்பறையை திறந்து கொத்தாக சில பாடங்களை எடுத்து வந்து கட்டினாள். மித்ரா ஆவலுடன் பார்த்தாள்.

“இவ்வளவு படங்கள் வரஞ்சிருக்கா? எனக்கே தெரியாது...” என்றான் மோகன்.

“அவளுக்கு இது தான் ஆறுதல் தந்திருக்கு. இவளுக்கு மென்மையான மனசு. பொதுவா கலைஞர்களுக்கு மென்மையான மனசு. சீக்கிரம் உணர்ச்சி வசப்படுவார்கள். அதான் அடித்துவிட்டாள். “ சிரித்துக் கொண்டே சொன்னாள் மித்ரா.

“இந்தப் படங்களைப் பாருங்க. எல்லாம் மிருகங்களின் படங்கள். தத்ரூபமாக இருக்கு இல்லே?” என்று வியந்து சொன்னாள் மித்ரா. வேறு பாடங்களை பார்த்தாள். காருக்குள் சவாரி செய்யும் நாய். நீர் நிலையில் தண்ணீர் குடிக்கும் யானைக் கூட்டம். வண்டியில் பூட்டப்பட்டு, நாலு கால் பாய்ச்சலில் ஓடும் காளை மாடுகள். மான் கூட்டம்....பறக்கும் பச்சை கிளிகள். “வாவ்....வெல் டன் அம்ரிதா. ஃபன்டாஸ்டிக்.” தட்டிக் கொடுத்தால் மித்ரா. அமிர்தாவின் கண்களில் ஒளி வந்து போனது. இந்த ஆழகு ஒன்றே போதுமே...அமிர்தாவின் இதயம் எங்கே இருக்குன்னு சொல்ல? சிக்கலான நூல் கண்டின் நுனி கிடைத்தது போல் இருந்தது.

“உங்க அப்பாவின் படம் வரைய முடியுமா?”

சப்பென்று இன்னொரு அறை விழுந்தது. கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணினாள் மித்ரா.

“அமிர்தா....உனக்கு வரைய யார் கத்துக் கொடுத்தா?”

“யாருமில்லை...” என்று எழுதிக் காட்டினாள் அவள்.

“வாய் திறந்து பேச மாட்டியா?”

“பேசப் பிடிக்கலை.” எழுதி தான் காட்டினாள்.

“ஏன்?’

“மித்ரா ரொம்பக் கேள்வி கேக்காதே. அப்புறம் அடி தான் விழும். இதுக்கு பயந்து தான் நாங்க அவளைக் கேள்வியே கேக்றதில்லை.” என்றான் மோகன். மித்ரா அவன் பேச்சை சட்டை செய்யவில்லை.

“உனக்கு மிருகங்கள்ன்னா பிடிக்குமா அமிர்தா?”

“அவை தான் என் ஃபிரென்ட்....”

“ஒ...அப்ப இப்படி வரைஞ்சுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்? வா வெளியே வா. ஜனன்லைத் திற நீ பச்சை கிளிகள பறப்பதை நேரில் பார்க்கலாம்.”

அவள் விழித்தாள். பிறகு எழுதிக் கட்டினாள்.

“இது துரோகிகள் நிறைந்த உலகம். நான் வர மாட்டேன்.”

“நல்லவங்களும் இருக்காங்க அமிர்தா...”

அதுக்கு அமிர்தா பதில் ஏதும் எழுதவில்லை.

“சரி வா...நான் ஜன்னலை திறக்கிறேன். நீ பச்சை கிளிகள் பறப்பதை பார்க்கலாம்..” அமிர்தாவை எழ வைத்து ஜன்னல் அருகே கூட்டிப் போனாள் மித்ரா.

அவ்வளவு தான். அமிர்தா கண் கலங்கியது. ஆவேசமாக மித்ராவை வெளியில் தள்ளி கதவடைத்துக் கொண்டாள். உள்ளே அவள் விசிம்புவது கேட்டது. மோகன் சலித்துக் கொண்டான்.

“போச்சு...அவளை நீ கோபப்படுதிட்டே. இனிமே அவள் நாலு நாள் கதவை திறக்கக் மாட்டாள். தண்ணியை தண்ணியை குடிச்சிட்டு கிடப்பா. இவள் இப்படி செய்வதால் தான் நாங்க அவள் கோபப்படும்படியா எதுவும் செய்றதில்ல. பட்னி கிடந்து தான் இப்படி ஒல்லியா ஆயிட்டா.” அவன் கண் கலங்கிவிட்டது.

“இதை தீர்க்கத் தானே நான் வந்திருக்கேன்.”

“என்னத்த தீர்த்தே? பழைய மாதிரி கதவை அடசுக்கிட்டா.”

“அவசரப்படாதீங்க. மெதுவாத் தான் சரி பண்ண முடியும். அவளோட இண்டரஸ்ட் டிராயிங். அதை வச்சு அவளை வழிக்கு கொண்டு வரலாம்.”

“அவள் பட்டினியா இருக்காளே/ அதுக்கு என்ன செய்யப் போறே?”

“நான் அமிர்தாவை சாப்பிட வைக்கிறேன். நீங்க கவலைப் படாதீங்க.”



ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து சமையல் பண்ண ஆரம்பித்தாள் மித்ரா. வெளிச்சத்தில் இருந்த சமையல் அறை அழகாக இருந்தது. மட மடவென்று மணக்க மணக்க சாம்பார், அவியல்.....சீணிகிழங்கு பொரியல், ரசம்....பாயாசம் எல்லாம் பண்ணி முடித்தாள். மோகன் கூட உதவி செய்தான். கொத்தமல்லி தழையை ரசத்தில் தூவி சமையலை முடித்தாள்.

கொஞ்ச நேரத்தில் வெளியே போய்விட்டு வந்த தாயம்மா சமையல் அறையில் ஜன்னல்கள் திறந்து கிடப்பதைப் பார்த்து....

“மித்ரா...” என்று கத்தினாள்.

“என்னம்மா...” என்று அவள் ஓடிவர. கூடவே மோகனும் ஓடி வந்தான்.

மித்ராவை குற்றவாளியைப் பார்ப்பது போல் பார்த்தாள்.

“மித்ரா...அதிகப் பிரசங்கி. உன்னை யார் ஜன்னல் கதுவுகளை திறக்கச் சொன்னது? னே இந்த வீட்டு எஜமானியா நானா?”

“நீங்க தான் மேடம். வெளிச்சமில்லாத வீட்டில் பேய் தான் குடியிருக்கும்...” அவள் சொல்லி வாய் மூடவில்லை தாயம்மா மித்ராவை சப்பென்று அறைந்தாள். இந்த வீட்டில் எல்லோருக்கும் அடிப்பது தான் வேலையா?

“அம்மா....மித்ரா சொல்வதில் என்ன தப்பு? ஜனன்லைத் திறந்தால் தான் காத்தும் வெளிச்சமும் வரும். எவ்வளவு நாள் இப்படி இருட்டில் வாழ்வது? ஏற்கனவே நம்மை எல்லோரும் லூஸ் குடும்பம்ன்னு சொல்றாங்க. போதும்மா. நார்மலா இருப்போம்...” சொல்லி முடித்தான் மோகன்.

“மித்ரா நார்மலா இல்லையே. அவளுக்கு பிடிக்காத வெளிச்சம் இந்த வீட்டில் எதுக்கு? லைட்டை போட்டுக் கொள்வது தானே?”

மின்சார வெளிச்சம் பிடிக்குமாம். இயல்பான சூரியா வெளிச்சம் பிடிக்காதாம். இந்த பயித்தியக்காரத் தனத்திலிருந்து எப்போ இவர்கள் வெளி வர? கடவுளே அமிர்தவை விட தாயம்மாவுக்குத் தான் முதலில் ட்ரீட்மென்ட் தேவை போலிருக்கே...என்று எண்ணினாள் மித்ரா.



“என்னடா புதுசா வந்தவளுக்கு வக்காலாத்து வாங்கறே? இந்த வீட்டின் பிரச்சனை தெரியாமல் அவள் தான் சொல்றான்னா நீயுமா? இது சரிப்பட்டு வராது. மித்ரா நீ தயவு செய்து வீட்டை விட்டுப் போ.”

மித்ரா பேசவில்லை. நகரவுமில்லை.

“இப்படி தப்பா ஒரு பிரச்னையை அணுகி நாலைந்து நர்சுகளை துரத்திட்டீங்க. நானும் போயிட்டா உங்களுக்கு விமோசனமே இல்லை. நான் உங்களுக்கு உதவனும்னு ஆசைப்படறேன் அம்மா....புரிஞ்சுக்கோங்க.”

அம்மா என்று அவள் சொன்னதும் தாயம்மாவின் மனம் சற்று இளகியது.

“எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை மித்ரா. அமிர்தாவுக்கு பகல் வெளிச்சம்ன்னாலே அலர்ஜி. கத்தி ஆர்பாட்டம் செய்தாள். பிறகு ரூமுக்குள் தன்னை பூட்டிக்கிட்டா...அதான் இப்படி. எவ்வாளவோ டாக்டரிடம் காட்டியாச்சு. பேசவே மாட்டேங்றா. தலையை பிச்சுக்கிட்டு இருக்கேன்...” உடைந்து போய் விசும்பினாள் அவள். அவ்வளவு பெரிய மனுஷி குழந்தை போல் அழுவதைப் பார்க்க மித்ராவுக்கு என்னவோ செய்தது.

“அம்மா...நீங்க உங்க ரூமுக்குப் போங்க. நான் பார்த்துக்கிறேன்.”

மெல்ல மாடி ஏறி தன் அறைக்குப் போனாள் தாயம்மா.

“ரொம்ப தேங்க்ஸ் மித்ரா. நீ இந்த வீட்டுக்கு வந்த பின் தான் என் மனசில் வெளிச்சம் வந்திருக்கு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...”

“தேங்க்ஸ் இருக்கட்டும். அமிர்தாவை விட உங்கம்மா மனம் ரோமப் உடைஞ்சிருக்கு. நீங்க தான் கொஞ்சம் நார்மலா இருக்கீங்க. எனக்கு உங்க ஹெல்ப் வேணும்...இதெல்லாம் சரி பண்ண...”

“நான் என்ன உதவி செய்யனும்? சொல்லு. நான் ரெடி...” நெருங்கி வந்தான்.

“இந்த உதவி எனக்கு வேண்டாம்...” என்றாள்.



“எதனை பேர் வந்து போயிட்டாங்க தெரியுமா? நீ வித்தியாசமானவள். எங்கள் மேல் அக்கறை இருக்கு. குறிப்பா என் மேல்...”

“அப்படி வேற கனவு கண்டிட்டு இருக்கீங்களா? நான் உங்க அம்மாவுக்காகத் தான் இங்கு இருக்கேன். அவங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. அவங்க கிட்டே நிறைய பேசணும். அப்ப தான் எல்லாம் சரியாகும்..”

சமைத்த உணவுகளை டிரேயில் எடுத்து வைத்தாள் மித்ரா.

“அம்மாவுக்கு நான் எடுத்துப் போறேன். பசிச்சா நீங்க எடுத்துப் போட்டு சாப்பிடுங்க...” என்றபடி மாடிக்குப் போனாள்.

“நீ வந்த பிறகு சேர்ந்து சாப்பிடலாம்...”

மித்ரா அம்மாவின் அறைக்குப் போய் கதவு தட்டினாள்.

“கதவு தறந்து தான் இருக்கு.....வா...”

மித்ரா உள்ளே நுழைந்தாள். டிரேயை மேஜை மேல் வைத்தாள்.

“அம்மா கோபப்படாதீங்க. இன்னிக்கு ஒரு நாள் நான் சமைச்சதை சாப்பிடுங்க. நாளையிலிருந்து ஹோடேலில் வாங்கி சாப்பிடுங்க.”

அன்புடன் அவள் சொல்லவும் தாயம்மா தலையாட்டினாள். மித்ரா மகிழ்ச்சி அடைந்து பரிமாறத் தொடங்கினாள்.

தாயம்மா ரசித்துச் சாப்பிட்டாள்.

“நீ சின்னப் பெண்ணா இருக்கே...ஆனாலும் நல்ல சமைக்கிறே. ஆச்சர்யமா இருக்கு. ரசம் சூப்பர்...”

“அப்ப மத்ததெல்லாம் நல்லா இல்லையா?”

“எல்லாமே பிரமாதம்...”

“பாயாசம் டம்ளரில் தரவா?”



“சரி...” குழந்தை போல் தலை சாய்த்து கூறினாள். மித்ரா பாயாசத்தை கப்பில் ஊற்றி தர தாயம்மா ருசித்துக் குடித்தாள். அவள் முகம் பிரகாசம் அடைந்தது.

“இனிமே நீயே சமைக்கலாம் மித்ரா....என் மனசு சரியில்லாத போனதால் தான் ஹோடேலில் சாப்பாடு எடுத்தேன். வாயில் வைக்க வழங்கலே. அமிர்தா இப்படி அவரத்துக்கு முன்னாலே அருனான்னு ஒரு பொண்ணு எங்க வீட்டோடு இருந்து சமையல் வேலையை கவனித்தாள். அவ்வளவு ருசியாக சமைப்பாள். அமிர்தா அடித்த லூட்டியைப் பார்த்துவிட்டு அவள் பயந்து போய் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டாள். அதிலிருந்து யாரும் நிலைத்து நிக்கலை. மித்ரா நீயும் ஓடிவிட மாட்டியே?”

“நீங்க துரத்தினா கூட ஒட மாட்டேன். அமிர்தாவை நார்மலாக ஆக்குவது தான் என் லட்சியம்...நீங்க ரிலாக்ஸ்டா இருங்க....”

“தேங்க்ஸ் மித்ரா...”

“சரி நீங்க ரெஸ்ட் எடுங்க...”

மித்ரா அறையை விட்டு வெளியே வந்தாள். மோகன் முகத்தில் நிம்மதி தெரிந்தது. அம்மாவை மித்ரா சமாளித்தது அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

“எங்கே நீ போயிடுவியோன்னு எனக்கு ஒரே கவலை.” என்றான்.

“உங்களை எல்லாம் விட்டு ஓட்டிப் போக முடியுமா?......எனக்கு வாழ்வு தந்த வள்ளல்கள் ஆச்சே...”

“இதிலே ஒன்னும் குறைச்சல் இல்லை....” முணுமுணுத்தான்.

“:என்ன முனகல்?”

“நீ ரொம்ப ரொம்ப நல்லப் பொண்ணுன்னு சொன்னேன்.”

“ஆனா...நீ ரொம்ப ரொம்ப கெட்டப் பையனாச்சே.”

அவளை அடிக்க கையை ஓங்கினான்.

“அடிங்க. உங்க குடும்ப பழக்கம் அது தானே?”

அவன் “ஸாரி...” என்றான் வருத்தமாக.



அமிர்தாவின் அறைக்குச் சென்றாள் மித்ரா.

“அமிர்த கதவைத் திற...” இவள் குரல் கேட்டதும் அவள் கதவு திறந்தாள்.

“குட் கேர்ள்...இப்ப நான் ஜன்னலைத் திறப்பேன். ஒரு நிமிஷம் நீ கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாமல் இருக்கணும்...”

அவள் முகம் மாறியது. “ஒரு நிமிஷம் தான். பிறகு மூடிடலாம். ப்ளீஸ்.”

மித்ராவின் கெஞ்சல் அமிர்தாவை அசைத்தது. தலை ஆட்டினாள். ஒரு நிமிஷம் தான் என்று செய்கை செய்தாள்.

“ஒ.கே...” மித்ரா ஓடிப் போய் ‘டண்டடைங்’ என்று சப்தம் எழுப்பி ஜன்னல் கதவுகளை விரியத் திறந்தாள்.. அது சாயங்கால நேரம். காற்றும் இள மாலை வெளிச்சமும் குபுக்கென்று உள்ளே நுழைந்தது. அமிர்தாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து காட்டினாள்.

“அதோ பார்...நீ வரைந்த பறவைகள் நிஜத்தில் எப்படி வானில் பறக்கின்றன! அழகா இருக்கு இல்லே?”

அமிர்தா ஆ வென்று பார்த்தாள். வி வடிவில் பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் சென்றது.

அமிர்தா பார்த்துக் கொண்டிருக்கும் போதே மித்ரா ஜன்னல் கதவுகளை சாத்தப் போனாள். “வேண்டாம்...” என்று மறுப்பாக தலை அசைத்தாள். அமிர்தா. பறவைகள் சிறு புள்ளிகளாக தூரத்தில் பறந்து மறையும்வரை பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு பரவச ஒளி. இயற்கையின் சிறந்த ரசிகை அவள். அந்த காட்சியின் இனிமையை பார்த்ததில் அவளிடம் பழைய ரசனை வந்து ஒட்டிக் கொண்டது. புன்னகைத்தாள். எதனை நாட்கள அடைந்து கிடந்திருக்கிறாள். இந்த புதுக் காற்று. புது மூச்சு. கண்ணை குத்தாத வெளிச்சம், அவளை மனுஷியாக்கியது. குருடனுக்கு கண் தெரிந்தது போல் ஒரு பரவசம். இதயம் வரை நனைந்தது. பறவைகள் போய்விட்டன. அதற்கு முன் அவள் மனசில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுதிவிட்டுத் தான் சென்றன.

“அமிர்தா..வெளிச்சம் இல்லாத மனசுக்கு தான் வெளிச்சம் இன்னல் தரும். இருட்டு மூலை பிடித்துப் போகும். கவிழ்ந்து படுக்கத் தோணும். நீ பார்க்க வேண்டிய அழகியல்கள் நிறைய இருக்கு. தெரியுமா? படத்தில் நீ வரைந்த காட்சிகளை நீ நேரில் பார்த்து ரசிக்க வேண்டும். வெளிச்சம் அப்ப உனக்கு பிடித்துப் போகும். இனிமே ஜன்னலை மூடாதே...” என்றாள் மித்ரா.

சரி என்று குதூகலத்துடன் தலை அசைத்தாள் அமிர்தா. ப்பா...என்ன ஒரு மாற்றம்! மித்ராவின் மனம் பொங்கியது.

“பகோடாவை சாப்பிடு.....பாட்டு போடட்டுமா? பாட்டைக் கேட்டுக் கொண்டே அவள் பகோடா சாப்பிட்டாள். சாப்பிடும் அவளையே கருணையுடன் பார்த்தாள் மித்ரா. மனம் டிப்ரெஷன் நிலைக்கு போனவர்களிடம் அன்பும் கவனிப்பும் தான் முக்கிய தேவை. அவர்களை மிரட்டுவதும் அடிப்பதும் டிப்ரெஷனை அதிகப்படுத்தும். செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருந்தால் எப்படி அது வாடிப் போகுமோ, அப்படி இவர்கள் அன்பு இல்லாவிட்டால் வாடிப் போவர்கள். இவள் சின்னப் பெண். பாதிக்கப்பட்ட பெண். கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போல் தான் கையாள வேண்டும்.

அவள் சாப்பிட்டு முடித்ததும். “குட் கேர்ள்.” என்று பாராட்டி, காலி பாத்திரத்துடன் கீழே இறங்கிச் சென்றாள் மித்ரா.

பாத்திரங்களை கழுவி கவிழ்த்தி விட்டு மித்ரா தாயம்மாவின் அறைக் கதவை தட்டினாள். அவள் கதவு திறந்தாள்.

“அம்மா..உங்க கூட பேசலாமா?”

மித்ராவின் பணிவும் அன்பான பார்வையும் தயம்மாவுக்குப் பிடித்தது.

“பேசலாம்....மித்ரா நான் நிம்மதி தேடி கடற்கரைக்கு செல்வேன். கிளப்புகளுக்கு செல்வேன், சினிமாவுக்கு செல்வேன்...எங்கும் அது எனக்கு கிடைக்கவில்லை. எனக்கும் டிப்ரஷன் ஆகிவிட்டது. இரவில் தூக்கம் வரவில்லை. அமிர்தாவை நினைத்து நினைத்து ஒரே துக்கம். அவளை எப்படி சரி பன்னுவதுன்னே எனக்குத் தெரியலை...”

“ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்கம்மா. இனிமே எல்லாம் மெதுவே சரியாகும்.”

“மித்ரா....அமிர்தாவை பெற்ற தந்தை ஓடிப் போவிட்ட நிலையில். நான் ரிஷியை கல்யணம் பண்ணிக் கொள்ள நேர்ந்தது. அப்போது அமிர்தாவும் மோகனும் சின்னக் குழந்தைகள். இத்தனை வருடங்கள் சந்தோஷமாக இருந்தோம். பிறர் கண் தான் பட்டதோ என்னவோ...இப்படி ஆகிவிட்டது.”

“என்னதான் நடந்தது அம்மா?”

“ரிஷி ஒரு நல்ல மனிதர். அவர் அமிர்தாவையும் மோகனையும் தன் குழந்தைகளைப் போல் நேசித்தார். குறிப்பா அமிர்தா மேல் அவருக்கு அவ்வளவு பிரியம்....அவருக்கு ஒரு மகன் உண்டு. அவர் மனைவி அவனைப் பார்க்க விடலை. அந்த ஏக்கம் அவருக்கு. அந்த வலியை அவர் இந்தக் குழந்தைகளை நேசிப்பதன் மூலம் மறந்தார்....”

“பிறகு அப்படி என்ன பிரச்சனை வந்தது?”

அமிர்தா அவர் மேல் அபாண்டமான ஒரு பழியைப் போட்டதை எப்படி சொல்வாள்?

“அது....சொல்லனும்னா சொல்லுங்கம்மா...”

அதை சொல்ல முடியாது என்பது தான் உண்மை.

தாயம்மா முகத்தை மூடிக் கொண்டு அழதாள். அவளுக்கும் அமிர்தாவுக்கும் மூன்று மாசம் முன் நடந்த உரையாடல் அவள் ஞாபகதுக்கு வந்தது.

அன்று தாயம்மா குளித்துவிட்டு தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

அமிர்தா புயல் போல் ஓடி வந்தாள்.

“”அமிர்தா கண்ணு...என்னம்மா ஆச்சு?”

“அம்மா...அந்த....அந்த ரிஷி என்னிடம் தவறா நடக்கப் பார்த்தார்.”

ஒவென்று அவள் அழுதபடி சொல்லவும் திடுக்கிட்டுப் போனாள் தாயம்மா.

“என்ன சொல்றே அமிர்தா?”

“ஆமாம்மா....என்னைக் கட்டிப் பிடித்தார். கிஸ் கொடுக்க வந்தார். நான் பிடிச்சு தள்ளிட்டு ரூமை விட்டு ஓடிட்டேன். அவரும் ஓடிவிட்டார்...”

கேவி கேவி அழுதாள். தாயம்மாவால் நம்பவே முடியவில்லை.

“நீ நல்ல பார்த்தியா? அவர் தானா? அவர் உன்னை தன் சொந்தப் பெண் போல் நினச்சிருக்காரே....எப்படிம்மா?”

“அப்ப என்னை நீ நம்பலை? எனக்கு பதிமூணு வயசு ஆகுது. இது கூடவா எனக்குத் தெரியாது....அவர் தான் அவர் தான். நல்லப் பார்த்தேன்...”

“எப்ப இது நடந்தது?”

“நேத்து காலை பத்து மணிக்கு...” என்றாள் அமிர்தா.

“அப்ப அது அவர் இல்லை அமிர்தா. ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன். கண்டிப்பா அவர் இல்லை...”

“ஒ...உனக்கு உன் புருஷன் தான் முக்கியம் இல்லே. நான் சொல்றதை நீ நம்பலை. நீயெல்லாம் ஒரு அம்மாவா?”

“அமிர்தா...அம்மா சொல்றதை கேள். அந்த நேரம் அவர் என் கூடத் தான் இருந்தார். ஹோட்டல் ராகினியில் இருந்தோம்...”

“வீடு இருக்கும் போது எதுக்கு ஹோடேலில்? நீ உன் புருஷனை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு இப்படி சொல்றே...”

“இல்லே. சத்தியமா சொல்றேன் அவர் என் கூடத் தான் இருந்தார். ஹோட்டலில் ஒரு ஃபங்கஷன். அதுக்கு போயிருந்தோம்...”

“நீங்க மட்டும் தானே போறதா சொன்னீங்க..”

“வந்து....அப்புறம் அவர் ஜாயின் பண்ணிக்கிட்டார்.”

அமிர்தா உடனே ஹோட்டலுக்கு போன் செய்து ஏதாவது ஃபங்க்ஷன் நேற்று காலை பத்து மணிக்கு நடந்ததா என்று கேட்டாள். இல்லை என்ற பதில் வந்தது. அதற்கு அப்புறம் அமிர்தாவை சமாளிக்க முடியாமல் போயிற்று. பகலில் அது நடந்ததால் அவள் வெளிச்சத்தை வெறுத்தாள். அம்மா தன்னை நம்பவில்லை..பொய் வேறு சொல்கிறாள் என்று நொந்து போனாள். அன்றிலிருந்து ரண களம் தான்.

இதையெல்லாம் மித்ராவிடம் எப்படி சொல்வது?

“அம்மா அமைதியா இன்னொரு நாள் சொல்லுங்க. மனசை போட்டு உளப்பிக்காதீங்க...”என்று மென்மையாக சொல்லிவிட்டு மித்ரா அறையிலிருந்து வெளியே வந்தாள்..

அவள் போனதும் தாயம்மா சுயபச்சாதாபம் மேலிட பலவிதமான நினைவில் மூழ்கினாள். அவர்கள் கல்யானம் பண்ணிக் கொன்ட பிறகு ரிஷி மூணு வயது அமிர்தாவை அள்ளி எடுத்துக் கொஞ்சினார்.

“என் மகனை என்னால் பார்க்கவோ பேசவோ முடியாத நிலையில், இவர்கள் இருவரும் தான் என் பிள்ளைகள் தாயம்மா. அதுவும் பெண் குழந்தைகள் என்றால் எனக்கு உயிர். அவர்கள் ஒரு வீட்டின் தேவதைகள்.” இப்படி சொன்னவர் எப்படி தப்பபாக நடந்து கொள்வார்?

அமிர்தாவுக்கு அம்மா தன்னை நம்பவில்லை என்று வருத்தம். பத்தாததுக்கு தன்னுடன் தான் இருந்தார் என்று பொய் வேறு சொல்கிறாள். மகளை விட அம்மாவுக்கு தன் புருஷன் தான் முக்கியம். இப்படிப்பட்டவனை அடித்து துரத்துவதை விட்டு அவனுக்கு வக்காலத்து வாங்குகிறாள். எவ்வளவு பெரிய மோசடி இது. என்று அவள் கொத்தித்தாள். ரிஷி இந்தக் குற்றச் சாட்டை கேட்டவுடன் வீட்டை விட்டு போய்விட்டார். குற்றமுள்ள உள்ளம் குறுகுறுக்கிறது என்று அமிர்தா சொன்னாள். அம்மாவுக்கும் மகளுக்கும் விரிசல் பெரிதாகியது. அமிர்தாவுக்கு மன அழுத்தம் அதிகமானது. அம்மாவின் அட்டென்ஷனைத் தன்பக்கம் திருப்ப அவள் ஜன்னல்களை சாத்தச் சொன்னாள். கொஞ்சம் திறந்திருந்தால் கூட பத்ரகாளி போல் ஆடினாள். வீட்டு வேலைகாரர்களை அடித்தாள். ஏசினாள். எல்லோரும் ஓடிவிட்டனர். அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றாள்.

“டாக்டர்...இவள் என் அம்மா இல்லை. பேய். புருஷன் புருஷன்னு அவர் பின்னால் ஓடறா. அவளுக்கு என் மேல் அன்பே இல்லை...” என்று ஒ ராமா என்று அழுதாள். மோகன் செய்வதறியாது திகைத்தான். அம்மாவுக்கும் தங்கைக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு திண்டாடினான். அவனுக்கு யார் மேல் தவறு என்று சொல்ல முடியவில்லை. அம்மா பொய் சொல்வாளா? அதே சமயம் தங்கைக்கு விவரம் தெரியாமலா அப்படி சொல்வாள்? அவளுக்கு இது கூட புரிந்து கொள்ள முடியாதா?

மொத்தத்தில் எல்லோரும் ஒரே வீட்டில் இருந்துகொண்டு பகையாளி போல் நடமாடினர். மித்ரா இந்த கூட்டு பறவைகளை ஒன்று சேர்ப்பாளா?



அந்த வீட்டின் நிம்மதியை அவள் மீட்பாளா?

அழகான தாமரைப் பூ போல் இருந்த அந்த வீட்டின் மனிதர்களுக்கு மீண்டும் வசந்தம் வருமா? இது ஒரு சவால் என்று மித்ரா நினைத்தாள் எப்படியாவது இந்த சிக்கலை அவிழ்த்துவிட வேண்டும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். மோகனின் ஒத்துழைப்பு இருந்தால் நன்றாக இருக்கும். அவனிடம் அவள் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. கேட்பாள். தாயம்மா மீண்டும் மனம் திறப்பாளா? திறப்பால் என்றே தோன்றுகிறது. ரகசியங்கள் நெஞ்சுக்கு சுமை தான். அவள் இன்னொரு நாள் மனதை திறப்பாள். மித்ரா காத்திருக்கிறாள்.

கனவுகள் தொடரும்
 
Top