கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் அத்தியாயம் -7

sankariappan

Moderator
Staff member
கனவு மலர்கள் அத்தியாயம்--7



மித்ராவை உட்காரச் சொன்னாள் தாயம்மா. அவள் அழகிய முகம் சோகத்தில் மூழ்கியிருந்தது. யாரிடமாவது மனம் திறந்து பேச அவள் ஆசைப்படுவது போல் இருந்தது. மென்மையான மஞ்சள் நிற ஆர்கன்சா புடவை அணித்திருந்தாள். அந்த மஞ்சள் நிறம் அவள் முகத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தது. கருப்பு வெல்வெட் பூக்கள் சின்னச் சின்னதாக பரவி இருந்தது. அவள் கண்கள் அந்த கருப்பு வெல்வெட் மாதிரி பளபளப்புடன் இருந்தது. அதில் கொஞ்சம் நீரின் சுவடு தெரிந்தது போல் உணர்ந்தாள் மித்ரா.



“அம்மா....சொல்லுங்க. இந்த வீட்டில் நான் காலடி வைத்த நேரம் நல்ல நேரம். என் அக்காவுக்கு கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. ஒரே வாரத்தில். எல்லாம் உங்க தயவு. நீங்க கொடுக்கும் சம்பளத்தை நம்பி தான் இந்த கல்யாணத்தை முடித்தேன். எனக்கு நல்ல சம்பளம் தந்து எங்க குடும்பத்தை வாழ வச்சிருக்கீங்க. உங்களுக்கு என்ன உதவி செய்யவும் நான் தயங்க மாட்டேன். சொல்லுங்கம்மா....”



“பரவாயில்லை...எதுக்கு இந்த பாராட்டு? உங்க அக்காவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவி. அது சரி...மித்ரா....என்னைப் பத்தி என்ன நினைக்கிறே?”



“நீங்க கடல் மாதிரி அம்மா. எவ்வளவோ பேருக்கு உதவி செஞ்சிருக்கீங்க. நிறைய அள்ளிக் கொடுத்திருக்கீங்க. இதெல்லாம் அக்கம் பக்கம் சொல்லி கேள்விப்பட்டேன் அம்மா. உங்க மேலே எனக்கு தனி மரியாதை ஏற்பட்டிருக்கு. நீங்க ரொம்ப நல்லவங்கம்மா. நீங்க நல்லா இருக்கணும்...”



“நான் நல்லா இல்லை மித்ரா....என் நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்கு. வெளியே சிரிச்சுக்கிட்டு உள்ளே வெந்திட்டு இருக்கேன்....” சொல்லிவிட்டு எதிர்பாராதவிதமாக அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.



“அம்மா...நீங்க லச்சுமி அழக்கூடாது. நான் உங்க பொண்ணு மாதிரி. என் கிட்டே நீங்க எது வேணா சொல்லலாம். யார்கிட்டவும் சொல்லமாட்டேன்.”



“என் தங்கமே..இப்படி ஒரு மகள் கிடைச்சதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். ஆனா...நான் பெத்த மகள் என்னை வெறுக்கிறாள். மூணு மாசம் ஆச்சு அவள் என்னுடன் முகம் கொடுத்து பேசி....என் கணவர் ரிஷி

என்னை பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை. மகன் மோகன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே அமிர்தாவை கவனிக்கிறான். நான் வியாபார விஷயமா அலைஞ்சிட்டு இருக்கேன்....எல்லாம் தப்பு தப்பா போயிட்டிருக்கு...நான் என்ன செய்ய மித்ரா?...”



“அம்மா...நிதானமா யோசிச்சு நல்ல முடிவு எடுங்க. முதல்லே மகளோட மனசு விட்டுப் பேசுங்க. மோகன் சார் இனி வேலைக்குப் போகட்டும். நான் தான் வந்திட்டேனே. அமிர்தாவை நல்ல பார்த்துக்கிறேன்.”



“தேங்க்ஸ் மித்ரா. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல மாற்றம், நீ வந்த பிறகு ஏற்பட்டிருக்கு...”



“அம்மா..ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே.”



“கேளும்மா.....ஒத்த மனுஷியா நானே சிந்திச்சு நானே முடிவு எடுத்து. அது தப்பா சரியான்னு தெரியாம குழம்பி...முடியலை மித்ரா...”



“எதுக்கு வீட்டை இருட்டா வச்சிருந்தீங்க? அதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?”



தாயம்மா தலை குனிந்தாள். இந்தக் கேள்விக்கு அவ்வளவு சுலபமாக பதில் சொல்ல முடியாது என்பது போல் தயங்கினாள்.



“சரிங்கம்மா...இப்ப நீங்க அதுக்கு பதில் சொல்ல வேண்டாம். மனசை தளர விடாதீங்க. புள்ளங்க கிட்டே இன்னும் கொஞ்சம் நெருக்கம் காட்டுங்க. நிறைய பேசுங்க. எங்கப்பா எங்களோட பேசவே மாட்டார். அது எங்க எல்லாரையும் பாதிச்ச விஷயம்....உதிரிப் பூக்கள் மாதிரி குடும்பம் இருக்கக் கூடாதும்மா. மாலையா கட்டுங்க. அது உங்க கையிலே தான் இருக்கு.”



மித்ரா சொல்லியதை கேட்டதும் தாயம்மா ஒரு புதிய வெளிச்சம் கிடைத்தது போல் உணர்ந்தாள். மித்ராவைப் பார்த்து சிரித்தாள்.



“நீ சொன்னது போல், நான் என் மகளோட மனம் விட்டு பேச முயற்சிக்கிறேன்..”



“சரீங்கம்மா....நான் அமிர்தாவுக்கு பாட்டு போட்டு காட்டப் போறேன்ம்மா. அவங்களுக்கு பாட்டு ரொம்ப பிடிக்கிறது...வரட்டுமா?.”



மித்ரா எஜமானியை பிரியமுடனும் பக்தியுடனும் பார்த்துவிட்டு மெல்ல அறையை விட்டு வெளியேறினாள். “ஒரு நிமிஷம் மித்ரா..”



“என்னம்மா?” தயங்கி கதவருகில் நின்றாள்.



“தேங்க்ஸ். உன் கூட பேசினதில் என் மனசு லேசா இருக்கு....” மேலும் தொடர முடியாமல் நெஞ்சடைக்க உணர்ச்சி பூர்வமாக சின்ன புன்னகை செய்தாள். மித்ராவுக்கு மனசு இளகியது. அவளும் நெஞ்சடைக்க பாதி புன்னகையும் மீதி நீர் மிதக்கும் கண்ணுடனும் ஆறுதலளித்தாள். அவள் மறைந்ததும் வெளிச்சம் போனது போல் இருந்தது தாயம்மாவுக்கு. சின்னப் பெண்...அவளால் எப்படி இவ்வளவு விவேகத்துடனும் அன்புடனும் நடந்துக்க முடிகிறது!



மித்ராவுக்கு பாடவேண்டும் போல் இருந்தது. அவள் மனம் சந்தோஷமாக இருந்தது. பௌர்ணமி அவளுடன் மனம் விட்டுப் பேசியது அவளுக்கு பெருமையாக இருந்தது. அவளைவிட இரண்டு மடங்கு வயசான எஜமானி தன்னை சரிசமமாக பாவித்து பேசியது எவ்வளவு பெரிய விஷயம்!

அமிர்தாவின் அறைக்குள் போனாள்.



“என்ன செய்திட்டு இருக்கே அமிர்தா?” என்று கேட்டாள்.
அமிர்தா புன்னகைத்தாள். இன்னமும் அவள் பேச ஆரம்பிக்கவில்லை. ஆனால் அந்த வீட்டில் சூரியனின் ரேகைகள் நுழைந்துவிட்டதை கண்டு அவள் அலறியதை நிறுத்திவிட்டிருந்தாள். அது ஒரு முன்னேற்றம் என்று மித்ராவுக்கு தோன்றியது. அமிர்தாவின் அறை சூரிய வெளிச்சத்தில் புதிதாக பரிமளித்தது. சுவரில் அமிர்தா வரைந்த படங்கள் சிலவற்றை மாட்டி வைத்திருந்தாள் மித்ரா.



“இப்ப என்ன வரைஞ்சிட்டு இருக்கே?”



இதுவரை மிருகங்களையே வரைந்து கொண்டு இருந்தாள். முதல் முதலாக மனிதர்களை வரைந்திருந்தாள் அவள். அந்த ஓவியம் மிகவும் அழகாக இருந்தது. ஒரு பள்ளிக் கூடத்தின் வாசல். வாட்ச்மேன் நின்றுகொண்டு பள்ளி விடுமுறை என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். மழை பெய்து கொண்டிருக்கிறது. பத்து வயது உள்ள குழந்தைகள் குதூகலத்துடன் குதித்துக் கொண்டு இருக்கிறார்கள். பள்ளி விடுமுறை என்பதில் வந்த சந்தோசம் அது. நிஜமாக நேரில் நடப்பது போல் இருந்தது. அதில் ஒரு சிறுமி அமிர்தாவின் சாயலில் இருக்க “இந்தப் பாப்பா உன் மாதிரி இருக்கே..” என்றாள்.



“ம்ம்...ம்ம்ம்ம்...” என்று தலை ஆட்டினாள் அமிர்தா. அவள் கன்னங்களில் நீர் கோடுகள் இறங்கிற்று. “பாப்பாவுக்கு என்னாச்சு?” வேகமாக ஒரு பேப்பரை எடுத்தாள் அமிர்தா. அதில் அழகிய ரோஜா மலரை வரைந்தாள். அது நலம் கெட அடுத்த படத்தில் மலரை நாசமாக்குகிறது ஒரு ஷூ கால். அவ்வளவு தான். அதன் பின் குலுங்கி அழுதாள்.



“நீ ஏன் அழறே? நான் சொல்லட்டா? அந்த மழை பாப்பா மாதிரி குதூகலமா இருந்தது உன் குழந்தைப் பருவம். நீ மலராக மலர்ந்ததும்.....உனக்கு ஒரு அதிர்ச்சி நேர்ந்துவிட்டது...அதைத் தானே வரைந்து காட்டியிருக்கே.?” அமிர்தா ஆச்சர்யப்பட்டாள். மித்ரா கையை பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டாள். ரொம்ப சந்தோசம் அவளுக்கு. மித்ரா அவளை புரிந்து கொண்டாளே. இதுவரை அவள் வரைந்ததைப் பற்றி யாருமே கேர் பண்ணவில்லையே. அவள் வரைந்து வரைந்து தன்னை வெளிப்படுத்திக் கொன்ட பாஷை யாரும் உணரவில்லை. பேச ஆசைபட்டாலும் பேச தொண்டையில் ஓசை வரவில்லை என்று யாரும் கவனிக்கவில்லை. முதல் முதலாக இந்தப் பெண் புரிந்து கொண்டிருக்கிறாள்.



“சரி சரி...அழாதே. இப்ப பார்.” பேப்பரை வாங்கி மித்ரா ஒரு ரோஜா மாலை வரைந்தாள். ஜரிகை சுற்றிக் கொண்டு இருப்பது போல் கலர் செய்தாள்.



“பூமாலை நல்லா இருக்கா?”





“ம்ம்...ம்ம்ம்ம்.”



இந்த மாலையில் இருக்கும் பூக்கள் யார் தெரியுமா?”

அமிர்தா அழுவதை விட்டு விட்டு மித்ராவை பார்த்தாள்.



“இந்தப் பூ உன் அம்மா. இந்தப் பூ உன் அண்ணன். இந்தப் பூ உன் அப்பா..எல்லாம் சேர்ந்து ஒரு அழகான மாலை ஆச்சு”

சப்பென்று ஒரு அறை விழுந்தது. இவ்வளவு நேரம் இருந்த இணக்கம் மறைந்தது. அமிர்தா முகம் இருளடைந்தது.

“நோநோஓஓஓஓ....” என்று கத்தினாள். மித்ராவை தள்ளிக் கொண்டு கதவுக்கு வெளியே தள்ளி, அறையை சாத்திக் கொண்டாள் அமிர்தா. உள்ளே அவளின் அழுகை சத்தம் ஏதோ ஒரு மிருகம் கத்துவது போல் மனசை கிழித்தது. மோகன் ஓடி வந்தான்.



“என்னாச்சு மித்ரா? எதுக்கு அமிர்தா இப்படி கத்றா? நீ அவள் மனசு புண்படும்படி பேசினியா? அவளை ஜாக்கிரதையாக பார்துப்பேன்னு நினச்சேன். அவளை இப்படி அலற வச்சிட்டியே.”



“அவளை எது கஷ்டப்படுத்துதுன்னு தெரிஞ்சுக்கத் தான். அப்பான்னு சொன்னதும் கூச்சல் போட ஆரம்பிச்சுட்டா”



“சுத்தம். அவள் அப்பான்னு சொன்னாலே இப்படித்தான் அலறுவா. நான் தான் சொன்னேனே. அப்புறம் எதுக்கு அந்தப்பேச்சை எடுத்தே? பார் பத்து நாள் சாப்பிட மாட்டா. இப்படி இருந்து இருந்து தான் உடம்பை கெடுத்துக்கிட்டா. என்ன மித்ரா நீ? உன்னை புத்திசாலின்னு நினச்சேன்..ச்சே..”



மித்ரா பதில் ஏதும் சொல்லாமல் யோசனையில் மூழ்கிவிட்டிருந்தாள்.



“என்ன நான் சொல்லிட்டே இருக்கேன். நீ கூலா நின்னுட்டு இருக்கே. வந்த பல நர்சுகள் இப்படிதான் ஏதாவது சொல்லி அவளை உசுப்பேத்தி விட்டு சமாளிக்க முடியாம ஓடிட்டாங்க. நீயும் அதையே செய்றே? எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை வெட்டிப் போடலாம்னு தோணுது. அம்மா நல்ல வேளை வெளியே போயிருக்காங்க. இல்லே நீ டிஸ்மிஸ் ஆகியிருப்பே.”



இதற்கும் மித்ரா எதுவும் பேசாமல் தோட்டத்துப் பக்கம் போய் உலாவ ஆரம்பித்தாள். மோகன் சினத்துடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் தங்கையின் அறைக்குச் சென்று “அமிர்தா..அமிர்தா” என்று கூப்பாடு போட்டான். சிறிது நேரத்தில் அமிர்தா போட்ட கூச்சல் நின்றது.

இரவு சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் கதவை தட்டினான் அவன். அவள் கதவை திறக்கவே இல்லை.



“ஏய்...பாரு உன்னாலே என் தங்கச்சி சாப்பிடாம கிடக்கா. அவளை கவனிக்க வந்திட்டு இப்படி உலாத்திட்டு இருக்கே. வா...அவளை கூப்பிட்டு கதவை திறக்கச் சொல்லு...” என்று மித்ராவிடம் எரிந்து விழுந்தான்.



“நீங்க போய் படுங்க. அவ கதவை திறப்பா.”



“ஒ..பெரிய ஞானி சொல்லிட்டா. இப்ப வந்து அவளைக் கூப்பிடு.”



“வேண்டாம். யாரும் கூப்பிட வேண்டாம். அவ தானா கதவு திறப்பா.”

மோகன் செய்வதறியாது அங்கும் இங்கு நடை போட்டான். ச்சே வீடா இது? நரகம்...யாருக்கும் அக்கறை இல்லை. இவளை கவனிக்க நல்ல ஆள் கிடைச்சுதுன்னு நினைச்சா அவ இங்கே சீராட வந்திருக்கான்னு தெரியுது. எல்லாரையும் போல் சம்பளத்துக்காக வந்திருக்கா. சமையல் பண்ணி என்னை கைக்குள்ளே போட்டுக்கிட்டு மணந்து கொண்டு எஜமானி ஆகலாம்னு திட்டம். ச்சே...ஒரு நல்ல மனசு கிடைச்சுதுன்னு தப்பு கணக்கு போட்டிட்டேன். மனசுக்குள் புலம்புவதும்...பிறகு தங்கையின் அறைக்குச் சென்று கதவை தட்டி கெஞ்சி கெஞ்சி கூப்பிடுவதும்...கதவு திறக்காததால் மீண்டும் மித்ராவை மனதுள் திட்டுவதுமாக அவன் அலைபாய்ந்து கொண்டிருந்தான்.



இரண்டு மணி நேரம் ஓடிவிட்டது. அமிர்தா கதவு திறக்கவில்லை. பயம் ஏற்பட்டது. அம்மாவுக்கு ஃபோன் பண்ணினான்.



“அம்மா...அமிர்தா கதவை சாதிக்கிட்டா. திறக்க மாட்டேங்கரா. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை...அம்மா நீ சீக்கிரம் வரியா?”

தயாம்மா அமைதியாக பதில் சொன்னாள்.



“இது என்ன புதுசா மோகன்?. மித்ரா கிட்டே சொல்லு. அவ பார்த்துப்பா.”



ஃபோனை வைத்துவிட்டாள் அம்மா. இப்படியொரு அம்மாவா? என்று பொருமினான் அவன். கவலையுடன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஓடிக்கொண்டிருந்தது. குதிரை ஓடும் வேகத்தில் அது ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு பசி மறந்தது. தூக்கம் மறந்தது. இரவு கவிழ்ந்து விட்ட பின்னும் மித்ரா தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தாள். இதுவும் ஒரு பயித்தியம் போலிருக்கு. தலையில் அடித்துக் கொண்டு டாக்டருக்கு போன் செய்யலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அமிர்தாவின் அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவன் ஓடிப் போய் பார்த்தான். அமிர்தா புன்னகையுடன் நின்றாள். சாப்பிடணும் என்று செய்கை செய்தாள். ஓடிப் போய் இட்லி சட்னி தட்டுடன் ஓடினான். ஊட்டிவிட யத்தனித்தான். அவன் கண்களில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த கண்ணீர் மினுமினுத்தது. அவள் தானே வாங்கி சாப்பிட்டாள். அவள் முகத்தில் அமைதி தெரிந்தது. சாப்பிட்டுவிட்டு பேசாமல் போய் படுத்துக் கொண்டாள். அவனைப் பார்த்து கையை நெற்றிக்கு கொண்டு போய் குட் நைட் சொன்னாள். கண்ணை மூடிக் கொண்டாள். போர்வையை போர்த்திவிட்டு, இரவு விளக்கை போட்டுவிட்டு அவன் தங்கையின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு “நல்ல தூங்கு. அண்ணா வெளியில் தான் படுத்துப்பேன். பயப்படாதே. சரியா?”



“ம்ம்...ம்ம்ம்ம்.” என்றைக்குமில்லாமல் அந்த ம்ம்ம்ம் அன்று அவன் காதுக்கு சங்கீதம் போல் ஒலித்தது. மெல்ல படியிறங்கி அவன் கீழே வந்தபோது மித்ரா இன்னமும் தோட்டத்தில் தான் இருப்பாள் என்று எண்ணி அங்கு போனான்.



“இங்கே டைனிங் டேபிளில் இருக்கேன். சாப்பிடலாம் வாங்க...”

அவன் வந்து உட்கார்ந்தான். பேசவில்லை.



“கோபமா? பேச மாட்டேங்களா?”



“உன்னோடு என்ன பேச்சு? நீ ஒரு கிராதகி.”



“என்னவோ அஞ்சு நாள் சாப்பிட மாட்டா அமிர்தான்னு சொன்னீங்க?”



“சாப்பிட்டிட்டா என்னவோ அதிர்ஷ்டம்...”



“அது அதிர்ஷ்டம் இல்லை. எனக்கு தெரியும் அவள் கதவை திறப்பா. சாப்பிடுவா. உங்களுக்கு குட்நைட் சொல்லியிருப்பா...உண்டா இல்லையா?”



“உனக்கு எப்படித் தெரியும்?”



“ஜன்னல் வழியே நான் தோட்டத்திலே நடந்துக்கிட்டு இருப்பதை பார்த்தாள்.”



“அதுக்கும் அவள் கதவு திறந்ததுக்கும் என்ன சம்பந்தம்?”



இட்லியை எடுத்து அவன் தட்டில் வைத்து சட்னியை பரிமாறினாள். வெங்காயச் சட்னி. கார சாரமாக ருசியாக இருந்தது. அவள் இன்னும் ரெண்டு இட்டிலி வைத்ததை அவன் தடுக்கவில்லை.



“சம்பந்தம் இருக்கு. அவளிடம் நான் சொல்லிவிட்டு தான் வந்தேன். அவள் கதவு திறக்கும் வரை நான் தோட்டத்தில் தான் அவள் பார்வை படும்படி உலாத்திக் கொண்டிருப்பேன்னு. அஞ்சு நாளானாலும் சரி. இரவும் அப்படியே அங்கு தான் குளிரில் தூங்குவேன்னு சொன்னேன்...”



அவன் இது கேட்டு ஆச்சரியத்துடன் மித்ராவை பார்த்தான். அமிர்தா எப்படி இதுக்கு பணிந்தாள்? தங்கை மேல் எவ்வளவு உயிரா இருக்கேன்னு அவளாலே புரிந்து கொள்ள முடியலையா? என் அன்புக்கு கட்டுப்படாதவள் இவள் சொன்னதும் கேட்டாள் என்றால்....இது என்ன விசித்திரம்? இவள் தோட்டத்தில் நடந்துக்கிட்டே இருப்பேன்னு சொன்னாளாம்...அவள் அதுக்கு பணிந்து....என்ன நான்சென்ஸ் இது? புதிரா இருக்கு. “அதெப்படி அவளுக்கு..”



“அமிர்தாவுக்கு உங்க அன்பை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் நான் போட்ட கண்டிஷனுக்கு ரெஸ்பாண்ட் பண்ணியிருக்கான்னு ஆச்சர்யமா இருக்கா? ரொம்ப சிம்பிள். அவளுக்கு உங்களை எல்லாம் விட, வேற்று ஆள் ஒருத்தரின் அன்பும் அக்கறையும் தேவை. உங்க மேலிருக்கும் நம்பிக்கை போய்விட்டது. புதிய முகமும் புதிய அக்கறையையும் அவள் மனசு தேடுது. அப்படிதான் நான் கணக்கு போட்டேன்.....நடந்திடுச்சு.”



“மித்ரா....எனக்கு ஒன்னும் புரியலை. அவளுக்கு இப்படி எல்லாம் கூட தோணும்னு உனக்கு எப்படி தெரிந்தது?.”



“எல்லாம் சைக்காலஜி தான். இது பற்றி பல புத்தகங்கள் படிச்சிருக்கேனே. நடைமுறை படுத்திப் பார்த்தேன். வொர்க் அவுட் ஆயிடுச்சு....இனிமே மெல்ல மெல்ல நான் அமிர்தாவை பேச வச்சிடுவேன். அதுக்காக என்னை வருத்திக்க தயங்க மாட்டேன். நாலு மணி நேரம் நடந்து நடந்து என் கால்கள் வலிக்கிறது. அவள் ஜன்னல் வழியா நான் நடப்பதை பார்த்து...என் மேல் நம்பிக்கை வந்து தான் கதவு திறந்திருக்கா. எப்படி?” மோகனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அம்மா கண்டுக்காதது கூட மித்ரா மேல் உள்ள நம்பிக்கையால் தானா? என்னவோ நல்லது நடந்தா சரி.



“எப்படியோ ஒரு மாற்றம் அமிர்தாவிடத்தில் நடந்திருக்கு. தேங்க்ஸ் மித்ரா.”



“எவ்வவளவு லேட்டான தேங்க்ஸ். பரவாயில்லை. நன்றிகள் எதிர்பார்த்து நான் இத செய்யலை. நான் என் நன்றியை காட்ட விரும்பறேன். என் அக்கா இன்று நல்லாயிருக்கா. தம்பியை கல்லூரியில் சேர்க்கப் போறேன். அப்பாவுக்கு கண் ஆப்பரேஷன் நடக்கப் போவுது. எல்லாம் நீங்க போட்ட பிச்சை....நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்...உங்க அம்மாவுக்கு பெரிய மனசு. என்னை ரட்சிக்க வந்த தேவதை அவங்க. மோகன்...நாளைக்குப் பாருங்க அமிர்தாவோடு நான் வாக்கிங் போகப் போறேன்...”



மோகனுக்கும் உற்சாகம் பிறந்தது. சந்தோஷத்தில் அவன் விசில் அடித்தான்.



“உனக்கு அழகு மட்டும் தான் இருக்கோன்னு நினைச்சேன். கொஞ்சம் அறிவும் இருக்கு.”



“ஏய்...என்னை என்ன அலங்கார பொம்மைன்னு நினைச்சீங்களா?

மோகன்..பாருங்க எல்லாம் சரியாயிடும். இந்த குடும்பத்தில் அபூர்வ மலர்கள் பூக்கப் போறது...எனக்கு என்னவோ தோணுது...”



“அப்ப வா கொண்டாடுவோம்.”



“எப்படி?”



“இரவு நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே....மென்காற்றை அனுபவித்துக் கொண்டே...பேசிக் கொண்டே...வாயேன்.”

தோட்டத்தின் சிமின்ட் மேடையில் அமர்ந்தார்கள்.



“உனக்கு என்ன கலர் பிடிக்கும்?’ அவன் கேட்க அவள் சொன்னாள்



“உங்க கண்ணின் கலர் பிடிக்கும்.” அவன் கண்கள் சற்றே பழுப்பு நிறம் கொண்டதாக இருந்தது. அவனுக்கு அது அதிக கவர்ச்சியாக இருப்பதாக அவளுக்குப் பட்டது. அவள் கேட்டாள் “உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?”



“எனக்கு நிறைய கலர் பிடிக்குமே...”



“அப்படியா...வானவில் கலர்கள் அத்தனையும் பிடிக்குமா?”



“அப்படியில்லை...உன் மேனி தங்க நிறம். அதனாலே மஞ்சள் பிடிக்கும். உன் கன்னம் இப்ப சிவக்குது. அதனாலே ரோஜா நிறம் பிடிக்கும். உன் கருவிழிகள் என்னை காதலோடு பார்க்குது. அதனாலே கருப்பு பிடிக்கும். உன் மனசு களங்கமில்லாதது. அதனாலே வெள்ளை பிடிக்கும்...”



“நீங்க பொய் சொல்றீங்க. அமிர்தாவை நான் கோபப்படுத்திய போது என்னை பிடிக்காம போயிருக்குமே. அப்ப சிவப்பு பிடிச்சிருக்குமே..”

அவன் ஒரு மாதிரி சிரித்தான். வெட்கம் வந்து நெளிந்தான்.



“பரவாயில்லை. தங்கச்சி மேலே உள்ள பாசத்தாலே நீங்க அப்படி நினச்சதிலே தப்பு இல்லை. பாசமலர் உடன்பிறப்புகளே உங்களுக்கு சல்யூட்.”



“இது என்ன பெரிய விஷயம்? தங்கச்சி மேலே அண்ணனுக்கு பாசம் இருப்பது சகஜம் தானே? இதில் என்ன அதிசயம்?”



“கண்டிப்பா அதிசயம் தான் எனக்கு. அண்ணன் என்றால் அப்படியே உருகுவான் என்று சொல்ல முடியுமா? என் அண்ணன் எங்களை உறவா நினைச்சதில்லை. ஏதோ பங்காளி மாதிரி நினைக்கிறான். எங்களுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்றாலே கசப்பாக உணர்கிறான்..அன்பாய் இரண்டு வார்த்தை சொல்லக் கூட அவனுக்குப் பிடிக்காது..” அவள் கண்கள் பளபளத்தது.



“உனக்கு நான் அண்ணனா அப்பாவா இருப்பேன்..”



“அவ்வளவுதானா ப்பூ? நான் அமிர்தா இல்லை. மித்ரா. எனக்கு நீங்க அப்பாவா அண்ணனா இருக்க வேண்டாம்...”



“பிறகு? என்னவா இருக்கணும்னு எதிர்பார்கிறே?”

“என் அழகை புகழ உங்களுக்கு உரிமை இல்லை. ஆனாலும் புகழ்ந்தீங்க...அதுக்கு என்ன அர்த்தம்?”



“நீயும் தான் என் கண் கலர் பிடிக்குதுன்னு சொன்னே...அதுக்கு என்ன அர்த்தம்?



“உரிமை எடுத்துக்கிட்டேன். ஸாரி...” என்றாள் அவள்.



“உரிமை கொடுக்கிறேன். ஸாரி வேண்டாம்...”

அவர்கள் சிரித்தார்கள். விதி எங்கிருந்தோ சிரித்தது. அவர்களுக்கு கேட்கவில்லை. இந்த நேரம் இனிக்கட்டுமே.!



கனவுகள் தொடரும்
 
Top