கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் அத்தியாயம் --8

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்---8

கனவு மலர்கள்.



வாழ்வில் இனிக்கும் நேரங்கள் மிகவும் குறைவு. அந்த நேரங்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள யாருக்கும் தெரிவதில்லை. இனிக்காத நேரங்களைத் தான் சுமந்து கொண்டு தங்கள் மனசை தாங்களே காயப்படுத்திக் கொள்வார்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக கழித்த அந்த ஜோதி மயமான நேரத்தை மோகனிடம் ஞாபகப்படுத்த எண்ணினாள் மித்ரா. அப்ப தான் அவனுக்கு தெளிவாக சிந்திக்கத் தோணும்.



“மோகனப்ரியன்....இவ்வளவு அழகான பேரை வச்சிட்டிருக்கீங்களே. அந்தப் பேரை நான் ரொம்ப ரசித்தேன். இந்தக் காற்று வெளியிடை கண்ணம்மா—பாரதி பாட்டிலே ஒரு வரி வருமே...ஞாபகம் இருக்கா?”



“ஒ...எந்தன் வாயினிலே அமுதூறுதே....கண்ணம்மா எனும் பேர் சொல்லும் போதிலே...கண்ணம்மா...



“ம்ம்ம்ம்...”



“கண்ணம்மா...”



“ம்ம்ம்ம்...”



“அட அப்படியே சுசீலா அம்மா மாதிரியே ஹம் பன்றியே....உன் குரல் ரொம்ப இனிமையா இருக்கு. ஸோ ஸ்வீட்...”

“தேங்க்ஸ். எனக்கும் உங்க பேர் சொல்லும்போதே வாய் இனிக்கிறது. சரி சொல்லுங்க..”



“என்ன சொல்லணும்?”



“மூணு மாசம் முந்தி வரை உங்க குடும்பம் சந்தோஷமா இருந்ததா சொன்னீங்களே....அதை நானும் தெரிஞ்சுக்கலாமா?”



அவன் பழைய நினைவுகளில் மூழ்கி திளைப்பதை அவன் கண்கள் சொல்லிற்று. அப்ப மூழ்கி முத்து எடுத்துக் கொடுப்பான். கோத்துக் கொடுப்பான். அந்த இரவு முழுக்க வெகு நேரம் வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். காற்று வீசியது. இரவு மலர்கள் பூத்து பூத்து பூரித்தது. நல்லது ஏதோ நடக்கிறதுன்னு மரங்கள் தலை ஆட்டின. நட்சத்திரங்கள் மரங்களின் கிளைவழியே புகுந்து அவர்களை பார்வையிட்டன. இங்கே அமர்ந்திருப்பது அம்பிகாபதி அமராவதியா? இல்லை ரோமியோ ஜூலியட்டா? எதுவும் இல்லை. ஒரு களங்கமில்லா மனம் உடைய சின்னப் பெண்ணும். இந்த உலகத்தையே நேசிக்கிற அன்புடைய நெஞ்சம் கொன்ட அன்பில் ஆழியான் மாதிரி ஒரு இளைஞனும் தான். ராமன் மாதிரி. ராமனை வர்ணிக்கும் கம்பர் அவரை அப்படித்தானே சொல்வார். அன்பில் ஆழியான். மோகனப்ரியனுக்கு அந்தத் தகுதி இருந்தது.



“ரெடி..ஸ்டேடி..ஸ்டார்ட்...ம்ம் சொல்லுங்க..”



“ஒரு ஊர்லே ஒரு ராஜா. ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி..”



“ராணி யாருன்னு தெரியுது. இப்ப நீங்க சொல்ற ராஜா யாரு?..”

அவன் கோபமாக அவளைப் பார்த்தான்.



“பெருசா சைக்கலாஜி தெரியும்னு சொன்னே. நான் யாரைச் சொல்றேன்னு தெரியாதா?. அந்த ராஜா ரிஷி அப்பா தான்...”



“ஒ..புரியுது. சாரிப்பா. நீங்க மேலே சொல்லுங்க...”



“இடி மின்னல்...புயல்..சுனாமி. இப்படி ஒரு இரவுக்குப் பின் ரெண்டு பிஞ்சு மனசுகள் பயந்து ஓடுங்கின. அது நாங்க தான். ரெண்டு வயசு அமிர்தா. எட்டு வயசு மோகனப்ரியன். அம்மா அந்த இரவில் அமாவாசை போல் ஆகிவிட்டாள். அப்பா என்ற மனிதன் குடித்துவிட்டு கலாட்டா செய்து என் வாயிலும் விஸ்கியை ஊத்த முயற்சித்ததும்...அன்று அம்மா முதல் முறையாக அவரை அடித்து நொறுக்கி விட்டாள். எதுவும் திட்டவில்லை. அந்த அடிகள் பேசின. இதை அந்த அப்பா மனிதர் எதிர்பார்க்கலை. வாய்க்கு வந்தபடி பேசினார். என்னை அடிச்சிட்டே இல்லை பார் உன்னை என்ன செய்யிறேன்னு பாரு....கத்தியபடி அடிக்க வந்தார். ஆப்பிள் வெட்டும் கத்தி தூக்கினார்....நாங்க அலறினோம். அம்மா போலீசுக்கு ஃபோன் போட்டுவிட்டாள். அவர்கள் அள்ளிக் கொண்டு போனார்கள். பிறகு அம்மா விவாகரத்து வாங்கிட்டாங்க. அதோடு அவரை நாங்க மறந்தோம். இந்த பாலைவன நிகழ்ச்சிகளுக்குப் பின் நாங்க அந்த அப்பா மனிதரை பார்க்கவேயில்லை. சேற்றில் அமிழ்ந்து இருந்தோம். எங்களை செந்தாமரையாக மலரச் செய்தது ரிஷி அப்பா தான். இனி தான் ஆரம்பம் ஸ்வீட் அத்தியாயம்...”



மூச்சு விடாமல் அவன் சொன்ன முன் கதை சுருக்கம் கேட்டு மித்ரா கண்கலங்கினாள். நெருப்பு பட்ட மலர் போல் மனம் கருகினாள். குடி குடியை கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்? மோகனின் பெற்ற அப்பா ஒரு குடிகாரர். இந்தப் புள்ளியில் பிறந்த கோலம் எப்படி பூர்த்தி பெரும்? அதான் பாதியிலேயே அழிந்து போனது.



“அப்பாக்கள் சில பேரு கருவேல முள்ளாக இருக்கறதாலே குடும்பங்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறதுன்னு என்னால் புருஞ்சிக்க முடியுது மோகன்...”



அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை அமிர்தா பார்த்தாள். ஜன்னல் திறந்து வைத்த வைபவத்துக்குப் பின் அவள் அடிக்கடி அதன் அருகே வந்து பார்க்கிறாள். வானம் பூமி எல்லாம் ஒரு கூடாரம் மாதிரி வளைந்து உலகத்தையே பெரிய வீடு மாதிரி ஆக்கிவிட்டதாக அவள் கற்பனை செய்து பார்த்தாள். நிலா வெளிச்சம் அறையில் பாய்ந்ததால் அவள் நிலவைப் பார்க்க அந்த இரவு ஜன்னல் அருகே வந்தாள். அப்பொழுது தான் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.. நிலா பாலாய் காய்கிறது. இரண்டு நேச உள்ளங்கள் பேசும் காட்சி தெரிகிறது. ஒரு புதிய உலகம் அவளுக்கு அறிமுகம் ஆகிறது. அண்ணனின் பாச முகம் மட்டுமே அவள் பார்த்திருக்கிறாள். இப்படி ஏதோ மாதிரி கனிந்து வித்தியாசமாக தெரியும் அண்ணனை அவள் பார்த்ததேயில்லை. அவன் முகத்தில் கொள்ளை சிரிப்பு. கண்களில் ஆயிரம் நட்சத்திர ஒளி. இதுக்கு பெயர் என்ன? சந்தோசம் என்பது பொது நியதி. இது அது மட்டும் இல்லை. அந்த புதிய வார்த்தை சொல்லும் உணர்வுகள் அவளுக்கு லேசாக புரிந்தது. காதல்---ஒ இதை அவள் சினிமாவில் பார்த்திருக்கிறாள். புத்தகத்தில் படித்திருக்கிறாள். ஆனால் நேரில் பார்க்கும்போது மனசுக்கு வெளிச்சம் வந்த மாதிரி இருந்தது. இரு உள்ளங்களின் தூய அன்பு, பார்ப்பவர் மனசுள் பூ மாறி பொழிய வைக்கும். காதல் பண்ணுவதால் மட்டும் மனசு வழாது. அதை பார்க்கும் நெகிழ்ச்சியில் அடுத்தவர் மனசும் வாழும். மலரும். நெகிழும். அந்த நிமிடம் அமிர்தா காதலிக்க ஆசைப்பட்டாள். அதற்கு அவள் போட்டுக் கொண்டிருக்கும் அடிமை தளையான கடந்த காலத்தை அவள் களைய வேண்டும். மனம் துக்கத்துக்கு அடிமை ஆகியிருந்தது. அது மறைய அவள் அன்று அடிக்கல் நாட்டினாள்.



அவள் உறங்கப் போன போது அவள் கனவில் ராஜகுமாரன் வந்தான். காதல் உணர்வுகள் அவளுக்கு டிடர்ஜெனட் மாதிரி நுரைத்தது. அவள் மனம் வெளுக்க ஆரம்பித்தது. அவளுக்கே அது தெரியவில்லை. மனித மனம் விசித்திரமானது தானே! இந்த மூன்று மாசத்தில் அவள் மனசை துளைக்க முடியாமல் தோல்வி கண்டனர் மனநல மருத்துவர்கள். இன்று இயற்கை அதை சாதித்துவிட்டது.



“இவங்க உலகத்தையே வெறுகறாங்க. முதல்ல அந்த வெறுப்பு மாறனும். அப்ப தான் பயம் போகும். அவங்களை பேச வைக்கணும். மனசிலிருக்கும் கழிவுகள் அகன்றால் தான் பழைய நிலைக்கு வருவாங்க...” இது தான் மன நல டாக்டர்கள் கொன்ட அபிப்ராயமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் அவளை பேச வைக்க யாராலும் முடியவில்லை. மழை நீரில் நனைந்த மரங்கள் மாதிரி அமிர்தாவின் மனம் இன்று ஈரம் கண்டது.



தாங்கள் பேசிக் கொண்டிருந்த காட்சி அமிர்தாவிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை உணராத மோகனும் மித்ராவும் தங்கள் பேச்சில் மூழ்கியிருந்தார்கள். மோகன் அவளின் மென் கரத்தை பற்றிக் கொண்டு சொன்னான்.



“அப்பா அன்பு எப்படியிருக்கும்னு நாங்க ரிஷி அப்பாவின் அன்பிலிருந்து தான் தெரிந்து கொண்டோம். ரொம்ப சுவாரஸ்யமா பேசுவார். அவர் எண்ணங்களால் ஆனவர். யாரையும் எதிரியாக நினைக்க மாட்டார். சட்டென்று யாரைவும் மன்னித்துவிடுவார். அவங்க நல்லாயிருக்கணும் இவங்க நல்லாயிருக்கணும்னு தான் பேசுவார். யாரைப் பற்றியாவது கோபமா பேசினா ‘விடு..போயிட்டுப் போவுது..’ அப்படின்னு தான் சொல்வார்...ஆனால் அவர் அருமை அவர் மனைவிக்குத் தெரியவில்லை...”



“யாரு? உங்கம்மாவா?”



“இல்லே...அவர் கல்யாணம் பண்ணிக் கொன்ட முதல் சம்சாரம் சந்திரிகா. சதா அவரோட சண்டை தான்”



“ஒ...இவ்வளவு நல்ல மனிதரை சந்திரிகாவால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? சண்டைக்கு என்ன காரணம்?”



நிலா சற்றே மேகத்துக்குள் மறைந்து போயிற்று. வெளிச்சத்தின் மங்கலில் கூட மோகனின் கண்களில் புகுந்துவிட்ட சோகத்தை பார்த்தாள்.



“ஒருவருக்கு சரியாகத் தெரியும் காரணம் மற்றவருக்கு அபத்தமாகத் தெரியும். சந்திரிகாவின் காரணங்கள் எங்களுக்கு அபத்தமாக இருந்தது. ரிஷியை அவங்ளுக்கு பிடிக்குமாம். ஆனாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாங்களாம். எங்க சுத்திட்டு வரீங்கன்னு கத்துவாங்களாம். இப்ப ஏன் வெளியே போறீங்க...கால் வலின்னு சொன்னீங்களேன்னு முக்கிய காரியமா போகும்போது தடுப்பாங்களாம்.....இரவு தூங்காம சில நேரம் சத்தமா பாட்டு வைப்பாங்களாம். நான் தூங்கணும் நிப்பாட்டுன்னு சொன்னா....எனக்கு தூக்கம் வரலை நீங்க மட்டும் ஜாலியா தூங்கினா எப்படி அப்படிம்பாங்களாம். ரிஷி அப்பா ரொம்ப பொறுமை. அப்படியிருந்தும் வெட்டிக்கிட்டு போயிட்டாங்க. ஒரே பையன் பிரசாத். அவனையும் எடுத்திட்டுப் போயிட்டாங்க....அப்பாவுக்கு உலகமே இடிஞ்சு விழுந்த மாதிரி ஆயிடுச்சாம்...மகனை பிரிந்தது தாங்க முடியாத துக்கமாச்சு.”



“மோகன்...உங்கம்மாவை எப்படி மீட் பண்ணாங்க? அந்த ரொமான்ஸ் தெரியுமா?”



“அது ரொமான்ஸ்ன்னு சொல்ல முடியாது. இருவருக்கும் கல்யாண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியின் வலி, ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க தோன்றியது. நாளடைவில் தான் அது ரொமான்ஸ் ஸ்டேஜ்க்கு வந்ததுன்னு நினைக்கிறேன். அம்மாவும் அவரைப் போல அப்பா பண்ணின அட்டகாசத்தால் பிரிஞ்சு இருந்தாங்க. அப்ப வீட்டில் முக்கிய உறவினர்கள் இருந்தாங்க. எங்களைப் பார்த்துக்க ஒரு சித்தி இருந்தாங்க. அம்மாவோட ஒண்ணு விட்ட சகோதரி. அம்மா எப்பவும் வியாபார விஷயமா வெளியூர் போவாங்க இல்லே பிசியா இருப்பாங்க. அம்மாவை பார்க்கறதே அபூர்வம். ஓடிட்டே இருப்பாங்க. ஞாயறு மட்டும் கட்டாயம் வீட்டிலே இருப்பாங்க. அந்த நாள் தான் எங்களுக்கு குஷியான நாளாக இருக்கும். செஸ் விளையாட கத்துக் கொடுத்தாங்க. கிளப்புக்கு போய் டென்னிஸ் விளையாட சொல்வாங்க. நல்ல சமைப்பாங்க. ஞாயறு அம்மாவோட ஸ்பெஷல் சமையல். பெத்த அப்பன்னு ஒருத்தர் இருக்கும்போது தினமும் போராட்டம் தான். கத்தலும், கண்ணீரும், பயமும் தான் வாழ்கையா இருந்தது. அப்பா போன பிறகு வீடு அமைதியா இருந்தது. அப்பாடா என்று நாங்க மூச்சு விட்டோம். அம்மாவுக்கு நிம்மதி தான். ஆனா உள்ளுக்குளே வேதனை அனுபவிச்சாங்க. அம்மா பின்னாடி சிலர் கேலி பேசுவாங்க. பொறாமை புடிச்சவங்க, அம்மா, புருஷனை விரட்டி விட்டிட்டாங்க... நவீன காலத்துப் பெண்....கணவனை அனுசரித்துப் போகத் தெரியலைன்னு கிண்டல். இதை கிளப்பிவிட்டதே அந்த சித்தி தான். அம்மா சித்தியை நிப்பாடியதும் அவங்க இன்னும் மோசமாக வந்தந்திகளை பரப்ப ஆரம்பிச்சாங்க...ஒரு நாள் தங்கச்சி அமிர்தா வெளியே விளையாடிட்டு இருந்தா. அப்ப காரில் மாட்டிக்க இருந்தா....ரிஷி அப்பா அந்தப் பக்கம் போயிருக்காரு. வாக்கிங் போனவர் குழந்தை குறுக்கே ஓடியது கண்டு மின்னல் வேகத்திலே பறந்து காப்பாத்தினாரு. அம்மா வீட்டில் இல்லை. நானும் சமையல் தாத்தாவும் தான் இருந்தோம். அமிர்தாவுக்கு அப்ப மூணு வயசு. பயத்தில் அழுது கொண்டிருந்தாள். அவர் “வீட்டிலே யாருன்னு?” கேட்டார்....”



“அடி சக்கை. ஹீரோ சினிமா ஸ்டைலில் அறிமுகமாகியிருக்காரு....”



“ஏய்...என்ன கிண்டலா? ரிஷி அப்பா வீட்டில் காலடி வச்ச நேரம் எங்களுக்கு ஜாக்பாட் அடிச்சுது....அம்மா அவர் வீடு தேடி போய் நன்றி சொன்னாங்க. அப்படியே அது நட்பாச்சு....காதலாச்சு. கல்யாணமாச்சு...”

“இது உங்க பெத்த அப்பாவுக்கு தெரியுமா?”



“தெரிஞ்ச பிறகு ஒரு நாள் குடிச்சிட்டு வந்து ஆட்டம் போட்டார்.”



“அவர் பெயர் என்ன?



“ஆழகான பெயர். அவருக்கு பொருத்தமில்லாத பெயர். முத்துச் செல்வன். படிச்சவர் தான். நல்ல வேலையில் இருந்தவர் தான். குடிப் பழக்கம். கெட்ட சகவாசம். மனதின் கோளாறு....அவர் மனுசத் தன்மையை இழந்தார்.”



அந்த நாள் பசுமையாக மோகனுக்கு நினைவிருக்கிறது.

ரிஷியின் மடியில் அமிர்தா. அம்மா அவளுக்கு சோறு ஊட்டிட்டு இருந்தாங்க. இவன்....பத்து வயது இருக்குமா...எஸ் பத்து வயது தான். ரிஷியுடன் கேரம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்தக் குடிகார அப்பா தள்ளாடிக் கொண்டு வீட்டுக்குள் வந்தார். கண்கள் ரத்த சிவப்பாக இருந்தது. கையில் ஒரு அருவாள். குமட்டிக் கொண்டு வரும் நாத்தம் அவர் வாயிலிருந்து...அதை விட நாத்தம் பிடிச்ச வார்த்தைகள்...



“ஏய்...தாயம்மா. என்னடி விபச்சாரம் பண்றியா? இவனை சேர்துக்கத் தான் என்னை விரட்டினியா? உனக்கு ஒருத்தன் பத்தாதா? என்னையும் வச்சிக்கிறியா?

கர்மம் என் மகளை அவன் மடியில் இருக்க விட்டிருக்கே. அவன் குழந்தையை என்ன பண்ணப் போறான் பார்...அப்புறம் தெரியும் உன் யோக்கியதை. புருஷனை விரட்டின பாவத்துக்கு நீ அனுபவிப்பே. மகள் அவனால் நாசமாயிடுவா பாரு..”

நான் விதிர்விதிர்த்து நின்றேன்.. அம்மாவுக்கு சொல்ல முடியாத கோபம் நெஞ்சை அடைத்தது. போலீசுக்கு ஃபோன் போடுவேன் மரியாதையாப் போயிடுன்னு அம்மா சொன்னாங்க. ரிஷி அப்பா மெதுவா எழுந்தார்.



“மிஸ்டர் முத்துச் செல்வன்....உங்க இடத்தை நான் பிடிக்கலை. என் இடத்திலே தான் நீங்க தப்பித் தவறி முந்தி இருந்தீங்க. கழுகு இருந்த வீடு சுடுகாடா இருந்தது. கழுகு பறந்து போச்சு...வீடு வீடா இருக்கு. இது எனக்கு கோவில். தாயம்மா என் அம்பிகை. இந்தக் குழந்தைங்க இரண்டும் என் குழந்தைங்க...மரியாதையா போயிடுங்க. இல்லே கழுத்தை பிடித்து தள்ளுவேன். தாயம்மா என் மனைவி. அவளைப் பத்தி இனிமே ஒரு வார்த்தை பேசினீங்க உங்க கழுத்து உங்களோடது இல்லை. நான் சும்மா சொல்ல மாட்டேன். செஞ்சு காட்டுவேன். அவுட்...”



குடிகார அப்பாவின் கண்களில் பயம் தெரிந்தது. சவுடால் பேச்சு தடுமாறியது.



“பாரு...பாரு. அவனை நம்பி மோசம் போகப் போறே. அவன் என் மகளை நாசம் பண்ணிடுவான்...நாசம் பண்ணிடுவான். அவன் நடிக்கிறான்...” சொல்லிவிட்டு ஓடிவிட்டார். அந்தக் கடைசி வார்த்தைகள் கேட்டு அம்மா துடித்து அழுதாள்.

ச்சே எவ்வளவு கேவலமான மனுஷன்! சபிச்சிட்டுப் போறான்....எவ்வளவு கெட்ட எண்ணம்! நடந்தது எல்லாம் கெட்ட கனவா நினச்சு சந்தோஷமா அவங்க வாழ்க்கை நடத்த ஆரம்பிச்சாங்க. அன்றில் பறவை போல் அவ்வளவு அன்பு அவ்வளவு ஒற்றுமை. இப்ப எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. குடிகார தந்தை சபித்தது நடந்துவிட்டதாக அமிர்தா கதற....அம்மா அதை நம்பாமல் ரிஷிக்கு பரிந்து பேச...வீட்டில் பிளவு ஏற்பட்டுவிட்டது.

“உனக்கு உன் புருஷன் தான் முக்கியம். பெத்த பொண்ணை நம்ப மாட்டே இல்லே. என் அப்பா குடிகார அப்பாவா இருக்கலாம்..ஆனா என்னை தப்பா அனுகாதவர்...அம்மா...ரிஷியை வெளியே அனுப்பு. அவன் இருந்தா நான் இங்கே இருக்க மாட்டேன்...”

ரிஷி வீட்டை விட்டு வெளியேறினார்.



கனவுகள் தொடரும்
 
Top