கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் அத்தியாயம் ---9

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—9

கனவு மலர்கள்



ரிஷி மீன் தொட்டிக்கு தண்ணீரை மாற்றிக் கொண்டிருந்த நேரம் மகன் பிரசாத் காப்பியுடன் வந்தான். அவன் முகத்தில் லேசான சோகம்.



“அப்பா...பேப்பர் வந்தாச்சு பார்க்கலையா?”



“நாட்டு நியூஸ் படிக்கிற நிலைமையில் நான் இல்லை. வீட்டு நியூசே...”



“அப்பா...வாழ்க்கையே ஒரு சாலேஞ் தானே. வீட்டு நியூஸ் எப்படி இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காப்பி ஆறிப் போவப் போவுது குடிங்க.” அவன் ஆதரவாக சொன்னான்.

மகனை வாஞ்சையுடன் பார்த்த ரிஷி காப்பியை வாங்கிக் கொண்டார்.



“எனக்கு என்னைப் பற்றிக் கவலை இல்லை பிரசாத். உனக்கு கஷ்டத்தை கொடுக்கிறேன். அதான் சங்கடமா இருக்கு...”



“எனக்கு என்ன புதுசா சங்கடம்? சங்கடத்துடேனே வளர்ந்தேன்..வாழ்றேன். பழகிப் போச்சு அப்பா....உங்களைப் பத்தி தான் என் கவலை...”

ரிஷி யோசனையுடன் மகனைப் பார்த்தார். இருபத்தி ஐந்து வயது வாலிபன். அனாதையாக தனியாக வாழ்ந்திருக்கிறான். சின்ன வயதிலேயே அவன், அப்பா அம்மா சண்டை போடுவதைத் தான் பார்த்திருக்கிறான். அம்மாவின் ஆவேசம் அவனுக்கு அத்துபடி சில பிள்ளைகளின் துரதிர்ஷ்டம் அது.



“அப்பா...நான் இன்று ஆபிஸ் விட்டு லேட்டா தான் வருவேன். லோச்சினி ஆன்ட்டி பத்து மணிக்கு வருவாங்க. சமையல் பண்ணிட்டுப் போயிடுவாங்க. நீங்க இன்றைய மெனுவை சொல்லிட்டா அவங்க சமச்சி வச்சிட்டுப் போயிடுவாங்க...”



ரிஷி தனக்குள் சிரித்துக் கொண்டார். மெனு.....சமையலுக்கு மெனு இருப்பது போல் வாழ்க்கைக்கும் அவர் மெனு தயாரித்தார். எல்லாம் தப்பாகப் போய்விடும் என்று அவர் நினைக்கவேயில்லை. சைவச் சமையல் சாப்பிடுபவர்கள் முன், அசைவ உணவை பரிமாறும் அபத்தம் போல் அவர் வாழ்வில் மெனு ஏடாகூடமாக அமைத்துக் கொடுத்துவிட்டது விதி. அவர் போட்ட மெனு வேறு, விதி கொடுத்த மெனு வேறு. வெளியே தலை காட்ட முடியவில்லை. சொந்தங்களை பார்ப்பது என்பதை தாயம்மாவை மணந்து கொன்ட அன்றே விட்டுப் போனது. நாப்பது வயதில் ஒரு பெண்ணை....அதுவும் டிவோர்ஸ் ஆன முப்பது வயதுப் பெண்ணை மணந்து கொண்டதும், அவள் குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதும் சமூகத்தில் சாதாரண விஷயமில்லையே! முன்னால் துதி பாடிக் கொண்டே பின்னால் ஏளனம் செய்த சமூகத்தின் நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தது கூட விதிக்குப் பொறுக்க முடியவில்லை போலிருக்கு. ஒரே அடியாக தண்டித்துவிட்டது.



“அப்பா...நான் கிளம்பறேன். நான் வரும்வரை ஜாக்கிரதையாக இருங்க. எதையாவது நினைத்துக் கொண்டு அன்று மாதிரி பண்ணிவிடாதீங்க.”



எச்சரித்துவிட்டு அலுவலகம் சென்று விட்டான் பிரசாத். அன்று நடந்த விபரீதம் எண்ணிப் பார்க்க கூட முடியவில்லை. நெஞ்சில் மூண்டிருந்த தீ அனையாத சமயம், அந்த கொந்தளிப்போடு அவர் பூரி போடுகிறேன் என்று அடுப்பில் எண்ணையை அதிகம் காயவிட்டு யோசனையில் மூழ்க...எண்ணை தீ பிடித்துக் கொண்டது. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போயிற்று. எரியும் சட்டியை அவசர அவசரமாக திக்கான டவலால் சிங்கில் தள்ளிவிட்டார். குழாயை திறந்துவிட்டார். தீ அணைந்து விட்டது. ஆனால் இதயத்தின் லப்டப் வேகம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. மேலே எஃக்சாஸ்ட் ஃபான் எரிந்து கருகிவிட்டது. பிரசாத் வந்து பார்த்துவிட்டு கடிந்து கொண்டான்.



“அப்பா...இப்ப தான் உங்க கூட வாழ எனக்கு கொடுத்து வச்சிருக்கு. நீங்களே கெடுத்து விடுவீங்க போலிருக்கே. உங்களுக்கு அந்த குடும்பம் தான் பெரிசா? என்னைப் பார்த்தா மனுஷனாத் தெரியலையா? நான் இருக்கேன் அப்பா உங்களுக்கு.....” பிரசாத் இப்படி சொன்னதும் கதறி அழுதுவிட்டார் ரிஷி. நாலு வயசு மகன் பிரசாத்தை பிரிந்து போன போது எவ்வளவு கதறினார். அவன் எவ்வளவு அழுதான்? இன்றும் நினைவுக்கு வருகிறது.



“அப்பா...அப்பா....விட்டிட்டுப் போகாதீங்கப்பா...” பிரசாத் அவன் அம்மாவின் கைப்பிடியிலிருந்து உருவிக் கொண்டு அவரிடம் வர முயற்சித்த போது அவள் மகனை நாலு அடி அடித்து இழுத்துக் கொண்டு போனாள். கோர்ட்டில் மகன் தன்னுடன் தான் இருக்கவேண்டும் என்று வாதாடி வெற்றி பெற்றாள். கோர்ட் ஆர்டரை அவரால் எப்படி மீற முடியும்? அனாதையாக நின்றவருக்கு பெண் கொடுக்க சொந்தங்கள் ஓடி வந்தன. சுற்றி சில பெண்கள் வலை வீசினார்கள். யாரையும் அவர் சட்டை செய்யவில்லை. எதுக்கு மறுபடியும் ஒரு வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும்? கல்யாணமே வேண்டாம்னு தான் இருந்தார். அமிர்தாவை காப்பாற்றிய போது கூட தனக்கு மீண்டும் ஒரு வாழ்வு அமையும் என்று அவர் நினைக்கவில்லை. தாயம்மா வீடு தேடி வந்து நன்றி சொல்லியபோது கூட அவர் சம்சார சாகரத்தில் சிக்குவார் என்று தோன்றவில்லை. எப்பொழுது அந்த பொறி விழுந்தது? ஒரு நாள் தாயம்மா அழுது கொண்டே சொன்ன வார்த்தைகள் தான் அவருக்கு அந்த நினைப்பை கொடுத்தது. அவர் உள்ளம் உருகிவிட்டது.



“ரிஷி.. என் கணவர் குடித்துவிட்டு குடித்துவிட்டு வந்து பண்ணிய அட்டகாசம் நிறைய. பொறுத்துக் கொண்டேன். ஆனால் மகனுக்கு விஸ்கியை வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றிக் கொடுக்க துணிந்து விட்டார். பல முறை நடந்தது, நான் கண்டித்தேன். அவர் சிரிச்சார். அப்படித்தான் செய்வேன்...அவனும் பழகிக்கட்டுமேன்னு கொக்கரிச்சார். பிறகு மூன்று வயது கூட நிரம்பாத பெண் குழந்தையின் வாயில் ஊற்றின போது கொதித்துவிட்டேன் அதன் பிறகு தான் என் குழந்தைகளை அவரிடமிருந்து காப்பாற்ற டிவோர்ஸ் வாங்கினேன். ஆனால் இந்த சமுதாயம் என்னைக் கேவலமா பேசுது. எனக்கு அழகு இருக்குதாம், இளமை இருக்குதாம்...அந்த திமிரில் புருஷன் மேல் அபாண்ட பழி போட்டு விரட்டிவிட்டேனாம். குடிகார புருஷன் கூட அனுசரித்து வாழ்ற பொண்டாட்டிகள் இல்லையா என்ன அப்படின்னாங்க. புது ஆண் சுகம் தேடுபவளாம் நான்.



தாயம்மா பண்ணிய அநியாயத்தை கேளுங்க, குழந்தைகள் வாயில் நான் விஸ்கி ஊத்தினேன்னு கோர்ட்டிலே பொய் சொல்லி டிவோர்ஸ் வாங்கிட்டான்னு அவர் சொன்னதைத் தான் இந்த சமுதாயம் நம்பிற்று.”



“நீங்க வருத்தப்படக் கூடாது. யார் என்னவேனா பேசிட்டுப் போகட்டும். நரம்பில்லாத நாக்கு எப்படி வேணா வளையும். நம்ம மனசாட்சிக்கு விரோதம் இல்லாம நடதுக்கிட்டாப் போதும்...அது தான் முக்கியம்.”.



“நாகரிகம் வளர்ந்துவிட்டதா நினைக்கிறோம். ஆனா அது அப்படியில்லை ரிஷி. பல ஆண்கள் என்னை பொது மகளாக ஆக்க முயற்சிக்கிறாங்க. உனக்குத் தான் புருஷன் இல்லையே, ஒரு நாள் எனக்கு மனைவியா இரேன் என்ன கெட்டுப் போச்சுன்னு வெக்கமே இல்லாம சுலபமா வந்து கேக்றாங்க.... நான் அழுதேனா எனக்கு ஆண் சுகம் வேண்டுமென்று? நாக்கு மேலே பல்லைப் போட்டு பேசறாங்க. எனக்குன்னு ஒரு சகோதரனாவது இருந்திருக்கக் கூடாதா? ஆண் துணையின் அவசியம் இப்ப நல்ல புரியுது ரிஷி. எனக்கு யார் வேலி?”



அந்த வார்த்தை ரிஷியை கஷ்டப்படுத்தியது. பல நாள் தூங்க விடாமல் பண்ணிற்று. ஒரு ஆண் துணை இல்லாமல் பெண்ணால் வாழமுடியாதா? முடியும்...சில கழுகுகள் கொத்த வராமல் இருந்தால். தாயம்மா ஒரு கம்பீரமான பெண்மணி. தனியாக வியாபார சந்தையில் ஜெயித்து வருகிறாள். அவளுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அதைக் கண்டு பொறுத்துக்க முடியாமல் தான் அவள் கணவன் அவளை இம்சித்திருக்க வேண்டும். அவள் அவனை அலட்சியப் படுதினாளாம் அதனால் தான் குடிக்க ஆரம்பித்தானாம். குடிப்பதற்கு ஒரு சாக்கு. எல்லை மீறிய அவன் செயல்களை பொறுக்க எந்த மனைவி துணிவாள்?...பிள்ளைகள் மனம் பாதிக்கும்படியாக நடந்து கொண்டால், விலகாமல் என்ன செய்யமுடியும்? அவள் என்ன பாவம் செய்தாள்? எதற்கு அவளுக்கு இந்த தண்டனை? யோசித்து யோசித்து ரிஷிக்கு மண்டை காய்ந்தது. அடுத்த முறை பார்த்தபோது கேட்டே விட்டார்.....



“தாயம்மா...உங்களுக்கு சம்மதம் என்றால் நான் உங்களை கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன். உங்களுக்கு நல்ல கணவனாகவும் உங்க பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாகவும் இருப்பேன். இது சத்தியம். நீங்க கேட்ட வேலி ஏன் நானாக இருக்கக்கூடாது?” அவள் வீட்டின் நந்தவனத்தில் நின்று கொண்டு வாக்கு கொடுத்தார் ரிஷி. பூக்கள் சுற்றி பூத்திருந்தது. வித விதமான கலரில் அவை தென்றலில் தலையாட்டியது. வெள்ளைப் பூக்கள்...ரோஸ் கலர் பூக்கள்...சிவப்பு....மஞ்சள்...பர்பிள் கலர் டிசெம்பர் பூக்கள். அத்தனைப் பூக்களுக்கும் நடுவில் புத்தம் புதிய மலர் போல் தன்னிகரற்று நின்றவளிடம் அவர் எல்லா மலர்களையும் சேகரித்து பொக்கே செய்து அவள் முன் மண்டியிட்டு “வில் யூ மேரி மீ?” என்றார். நம்ப முடியாமல் பார்த்தாள் அவள்.



“இது அவசரப்பட்டு எடுத்த முடிவு ரிஷி.”



“இல்லே தாயம்மா. நல்ல யோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன்.”



“இருந்தாலும்....இந்த ஊர் என்ன சொல்லும்?”



“அதுக்கு நம் மனசு தெரியுமா? நம் கஷ்டம் புரியுமா?”



“நாம் வயதில் பெரியவர்கள். டீன் ஏஜ் மாதிரி என்ன இது ரிஷி?”



“சீக்கிரம் தாயம்மா. பொக்கேயை வாங்கிக்கோ. எவ்வளவு நேரம் மண்டியிட்டு கேக்றது? கமான் தாயம்மா..வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் இந்த ஊர் பற்றி எதுக்கு கவலைப் படறே? உனக்கு என்னை பிடிச்சிருக்கா?.”



அவள் தயங்கிக் கொண்டு நிற்க அப்போ ஒரு அதிசயம் நடந்தது. அங்கு ஓடி வந்த குழந்தை அமிர்தா அந்த பொக்கேயை வாங்கிக் கொண்டு அம்மாவிடம் கொடுத்தது. “சாமியே வரம் கொடுத்தாச்சு..” என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டார் ரிஷி.



“ஐ லவ் யூ அப்பா..” மழலையில் அவள் சொன்னதைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார் அவர். அமிர்தாவை கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு இறக்கினார். நான்கு வயது குழந்தை தீர்ப்பு சொல்லிவிட்டது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்களே....



“ஐ டூ டியர்...நீ தான் உங்கம்மாவுக்கு நல்லது செஞ்சிருக்கே. தாயம்மா அமிர்தாவுக்கு தாங்க்ஸ் சொல்லு...”



அவள் நன்றி சொல்லவில்லை. குழந்தையிடம் கேட்டாள்.



“அமிர்தா..உனக்கு இந்த அங்கிளை பிடிச்சிருந்தா சந்தோசம். அதுக்காக அப்பான்னு கூப்பிட வேண்டாம். அது ரொம்ப பெரிய வார்த்தை ஸ்வீட்டி.”



“எனக்கு டாய்ஸ் வங்கிக் கொடுத்தாரு. ஐஸ்கிரீம் சாக்லேட் எல்லாம் வாங்கிக் கொடுத்தாரு. முதுகிலே ஏத்தி யானை விளையாட்டு காட்டினாரு...அப்ப அப்பா தானே? எல்லார் அப்பாவும் அப்படித் தானே செய்றாங்க...” மழலையில் அவள் சொல்ல சொல்ல அவள் முகம் மலர்ந்ததை பார்க்க பரவசமாக இருந்தது.



“ஆமா..யூ ஆர் ரைட். உள்ளே போ அமிர்தா. அண்ணா கூட விளையாடு. அம்மா இப்ப வந்திடறேன்.” அமிர்தா ஓடிவிட்டாள். தாயம்மா சொன்னாள்.

“ரிஷி....நல்ல யோசியுங்க. நிறைய பிரச்சனைகள் வரும்...என்னை

இப்படியே விடுங்க ப்ளீஸ்.....எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. அது மட்டும் போதாது ரிஷி.”



அவர் விசனத்துடன் சொன்னார் “ஸாரி தாயம்மா....” என்று முணுமுணுத்துவிட்டு அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அவள் என்னை நம்பவில்லை. அவள் மகளுக்கு நான் நல்ல அப்பாவாக இருக்க மாட்டேன்னு நினைக்கிறாளா? எவ்வளவு பெரிய காயம் இது? அவருக்கு கண்ணீர் வந்தது. கல்யாணம் பண்ணிக் கொன்ட பெண்ணும் அவரை குற்றம் சாட்டினாள். அவர் ஆசைப்பட்ட பெண்ணும் அவரை நம்பவில்லை. சுய பச்சாதாபம் வந்தது. எங்காவது ஓடி மறைந்து விட தோணிச்சு.



“டேய் ரிஷி.....எங்க முதல் வெட்டிங் டே கொண்டாட்டத்தை கொடைக்கானலில் வச்சிருக்கோம். அவசியம் நீ வரணும் ரிஷி..” கேட்டுக் கொண்டு வந்த நண்பன் சந்தானத்திடம் எரிந்து விழுந்தார் ரிஷி.



“போடா...எனக்கு மனசே சரியில்லை. என்னை நம்பாத இந்த சமுகத்தைப் பார்த்தா எனக்கு வெறுப்பா இருக்கு.”



“நீயா இப்படி பேசறே? டேய்.....உன் மனைவி உன்னை விட்டுப் போன பிறகு கூட நீ திடமா இருந்தியேடா? இப்ப என்ன? மகனை பிரிந்த போது கூட தாங்கிக் கிட்டே.....என்னடா ஆச்சு உனக்கு?”



“என்னவோடா....என் வாழ்வில் நான் ஆசைப்பட்டது ஒண்ணே ஒன்னுக்குத் தான். என் அம்மாவைப் போல் ஒரு அன்பான மனைவி. அப்பா அம்மா என் கல்யாணம் முடிந்த கையோடு ஒன்றன் பின் ஒன்றாக இறந்துவிட...நான் அன்புக்காக மனைவி என்ற உறவைத் தான் நம்பியிருந்தேன். அது பொய்த்துப் போனது.....”



“தெரிஞ்ச கதை தானே ரிஷி. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. எல்லாம் சரியாகிவிடும். நான் அப்பவே சொன்னேன். நீ கேக்காம இப்படி பொலம்பிட்டு இருக்கே. சொல்லு நான் உனக்கு பொண்ணு பார்க்கவா?”



“வேண்டாம்..”



“ஏன்டா?”



ரிஷி அதற்கு மேல் தாங்க முடியாமல் குலுங்கி அழுதுவிட்டார். மனம்விட்டு தாயம்மா பற்றி எல்லா விவரமும் சொன்னார். அவளை காதலிப்பதை சொன்னார். அவளுக்கு தங்கமான மனசு என்றார். இரண்டு அருமையான குழந்தைகள் என்றார். நாற்பது வயதில் காதல் வயப்பட்டது தப்பா என்றார். இறுதியில் அவள் தன்னை நாசுக்காக நிராகரிதுவிட்டதைச் சொல்லி----



“என் மனசு தப்பா? இல்லை என் விதி தப்பா? எல்லோருக்கும் போல் ஏன் எனக்கு வாழ்க்கை அமையவில்லை? தாயம்மா என்னை அவமானப்படுத்திட்டா. என் காதலை நிராகரிச்சிருந்தா கூட தாங்கி இருப்பேன். அவள் மகளை நான் என் மகளா நினைக்க மாட்டேன்னு நினைக்கிறா...அதான் தாங்க முடியவில்லை.”



“டேய்...அந்த அர்த்தத்திலே அப்படி சொல்லியிருக்க மாட்டாங்க. நீ முதல்லே புலம்ரதை நிப்பாட்டு. ஃபங்ஷனுக்கு வா. உன் மனசுக்கு ஆறுதலா இருக்கும். அப்புறம் பேசிக்கலாம். ப்ளீஸ்டா. உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு...ஃபங்ஷனுக்கு ஒரு மாசம் இருக்கு அதுக்குள்ளே உன் மனசு தேறிடும் எனக்காக வா. சரியா? வரலை கொன்னுடுவேன்...”



ரிஷிக்கு இருந்த ஒரே நண்பன் சந்தானம். அவன் வற்புறுத்தியதால் அவர் கிளம்பிப் போனார். அங்காவது அவருக்கு நிம்மதி கிடைக்குமா?

கொடைக்கானல் வந்து சேர்ந்தபோது மாலை ஆகிவிட்டது. அது சீசன் நேரம் இல்லாததால் கூட்டம் அதிகமில்லை. ரிஷி ஒரு ஹோட்டலில் தங்கிக் கொண்டு மறுநாள் விடிந்ததும் ஃபங்ஷன் நடந்தே மண்டபத்துக்கு சென்றார்.



“அட...மாப்பிள்ள மாதிரி இருக்கே ரிஷி..” என்று வரவேற்றான் சந்தானம். சந்தானம் அவரை விட எட்டு வயது சிறியவன். இருவரும் மனம் ஒன்றியது ஒரு அதிசயம்தான். அவன் மனைவி காமினி ஓடி வந்து வரவேற்றாள்.



“வாங்க அண்ணா. இவர் பண்ற அட்டூழியத்தை நீங்க தான் கேக்கணும். சுத்த ஃப்ராடு. என் தோழிகள் நாலு பெயரை இவர் அழைக்கவேயில்லை...கெட்ட மனுஷன்.” என்று பொய் புகார் படித்தாள். சுற்றி சின்னதாக ஒரு கூட்டம் கூடியிருந்தது. எல்லோர் முகத்திலும் சிரிப்பு. கூத்தும் கேலியுமாக அந்த இடம் ரெண்டுபட்டது. பலூன்கள் பறக்க...வானம் ஒரு கலர் பூங்கா மாதிரி இருந்தது. குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின. எல்லோரும் க்ராண்டான உடைகளில் மின்னினார்கள். ரிஷி பிரமாதமாக உடை அணிந்திருக்கவில்லை. சாதாரண வெள்ளை பாண்ட்டும் ஷர்ட்டும் தான் என்றாலும் அதில் அவர் கம்பீரமாக இருந்தார். கண் பட்டுவிடும் போல் உயரமும் ஆண்மையும் கலந்த அழகு.



“டேய்....நான் சூப்பரா உடை அணிஞ்சிருக்கேன். ஆனாலும் உன்னை அடிச்சுக்க முடியலைடா...” என்று சொல்லி செல்லமாக நண்பனின் வயிற்றில் ஒரு குத்துவிட்டான் சந்தானம். என்ன இருந்து என்ன? இப்படி மனைவியோடு குடும்ப சகிதம் திருமண விழா நடக்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லையே? அதை மறைத்துக் கொண்டு அவரும் கலகலவென்று மனிதர்களோடு பேசி சிறிது நேரம் கவலை மறக்க முயற்சித்தார். சும்மா இருக்க விடுகிறார்களா? கேள்வி மேல் கேள்வி...



“உங்க வொய்ப் வரலையா? இந்த மாதிரி வெட்டிங் அன்னிவேர்சரிக்கு தம்பதி சமேதரா வருவது தானே நியாயம்?” ஆளாளுக்கு கேட்டனர். அவருக்கு டிவோர்ஸ் ஆனது அவர்களுக்குத் தெரியாதே...



“இதோ வந்திட்டாங்களே...” என்றான் சந்தானம். நிமிர்ந்து பார்த்த ரிஷி இன்ப அதிர்ச்சி அடைந்தார். தாயம்மா நீலப் பட்டுப் புடவையில் தேவதையாக வந்து நின்றாள். அவளும் அவரை எதிர்பார்க்கவில்லை என்று அவள் முகம் சொல்லிற்று. காமினி ஓடி வந்து சொன்னாள்.



“நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா நின்னு எங்களை வாழ்த்தணும்...”

தாயாம்மா கண்கள் படபடத்தது.



“நாங்க எப்படி? கல்யாணம் ஆன தம்பதிகளிடம் ஆசி வாங்குங்க.”



“கல்யாணம் ஆகப் போகிற தம்பதியிடம் கூட ஆசி வாங்கலாம். நீங்க எங்களை விட மூத்த தம்பதிகள் தானே? ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க. நாம தான் நடத்தி வைக்கப் போறோம்...எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டேன்...” சொல்லிய சந்தானம் ரிஷியையும் தாயம்மாவையும் ஒன்றாக நிற்க வைத்து மாலை அணிவித்து எல்லோரையும் வாழ்த்தச் சொன்னான். அனைவரும் கை தட்டி வாழ்த்து சொன்னார்கள். தாயம்மாவும் ரிஷியும் திடுக்கிட்டனர்.



நண்பனை கோபித்துக் கொண்டார் ரிஷி. “என்ன இது விளையாட்டு.? நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறதா உனக்கு யார் சொன்னது?”



“நான் சொல்றேன். வேறு யார் சொல்லணும்? உங்க ரெண்டு பேருக்கும் உள்ள காதல் எனக்குத் தெரியும். எதுக்கு தயக்கம்? அதான் இந்த ஏற்பாடு. நோ சொல்ல விடமாட்டேன். இந்த சமுதாயத்துக்காக நீங்க உங்களை கொன்னுக்க வேண்டாம்....” சந்தானம் கட்டாயப் படுத்தினான். அவர்கள் இப்படித்தான் எதிர்பாராத விதமாக கல்யாணம் பண்ணிக் கொள்ள நேரிட்டது.



ஃபங்க்ஷன் முடிந்ததும் அவர்களை அழைத்துச் சென்று ரெஜிஸ்டர் ஆபிசில் கல்யாணத்தை முடித்து வைத்தான். சாட்சி கையெழுத்து போட்டான். தாயம்மா சார்பில் காமினி கையெழுத்திட்டாள். ஏற்கனவே அவன் எல்லா ஏற்பாடும் செய்திருந்தான். தாயம்மாவுக்கு பிரமிப்பாக இருந்தது. அவள் எதிர்பாராமல் நடந்த கல்யாணம் இது. நண்பனின் மனம் தெரிந்த பின் தாயம்மாவிடம் பேசினான் சந்தானம். அவளுக்கும் விருப்பம் ஆனால் இது சரி வருமா என்று பயப்படுகிறாள் என்று தெரிந்தது. தன்னுடைய முதலாம் கல்யாண நாள் கொண்டாடத்துக்கு வரும்படி அழைத்தான். அவளிடம் ரிஷி வருவான் என்று அவன் சொல்லவில்லை. ஏற்கனவே இவர்கள் பதிவுத் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்துவிட்டிருந்தான். இப்பொழுது நடத்தி முடித்துவிட்டான். மாலையும் கழுத்துமாக நின்ற இருவருக்கும் இது எதிர்பாராத திருப்பமாக அமைந்தது.



“இப்படி நான் தடாலடியா நடத்தாவிட்டால் இதயம் முரளி மாதிரி ஸ்டெப் எடுக்காமலேயே காலத்தை ஒட்டிடுவீங்க...இப்ப தான் என் மனசு நிறைஞ்சிருக்கு.” சந்தானம் மனசு விட்டு சொன்னான்.



கனவுகள் தொடரும்
 
Top