கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவு மலர்கள் --14

sankariappan

Moderator
Staff member
கனவு மலர்கள்

அத்தியாயம்---14



பூக்களாய் வார்த்தைகள் வந்து விழும்....கெஞ்சுவாள் என்று அவன் எதிர்பார்க்க டா போட்டு மண்டையை உடைக்கும் மித்ராவின் குரல் அவனுக்கு எக்கச்சக்க சினத்தை ஏற்படுத்த பாய்ந்து சென்று கதவு திறந்து அவளை அடிக்க கையை ஓங்கினான். பிறகு நாக்கை கடித்துக் கொண்டான்...அம்மா நிற்கிறாள்...



“ம்ம்....நானும் உன்னோட விளையாடறேன். நான் தான் மித்ராவின் குரலில் பேசினேன். நம்ம வீட்டுக்கு புதிய புதிய பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டது. மித்ராவை நீ லவ் பண்ணுவது தெரியுது. அசடு வழியாதே...கொஞ்சம் மிஸ்ஸாகிவிட்டது...இல்லே என் கன்னத்தில் உன் அடி விழுந்திருக்கும்...”



“ஸாரி அம்மா....அவளை நம்பாதேம்மா. பொல்லாத வித்தகி...”



“வித்தகி தான்....நானும் அமிர்தாவும் மனம் விட்டுப் பேசினோம். எங்களுக்குள் இருந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது...குற்றவாளியை கண்டுபிடிக்கப் போறோம். நீயும் உதவனும்...” என்றாள். வியப்புடன் அம்மாவைப் பார்த்தான்.



“என்னம்மா? எனக்கு ஒன்னும் புரியலை...தலையை சுத்துது..”



“இப்ப மித்ராவை அனுப்பறேன் அவ உனக்கு எல்லாம் விளக்குவா.”



பலகாரத் தட்டுடன் உள்ளே வந்தாள் மித்ரா.



“ஏய்...என்னடி பண்ணிட்டு இருக்கே? வீட்டுக்கு வந்து கூப்பிட்டா திட்டி விரட்டினே. அப்புறம் பார்த்தா எவனுடனோ பைக்கில் போறே. இங்கே வந்தா மொட்டு போல் நீ இருக்கே. அம்மாவும் மித்ராவும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உன்னை புகழ்றாங்க....எனக்கு தலையை பிச்சுக்கலாம் போல் இருக்கு...”



மித்ரா விழுந்து விழுந்து சிரித்தாள்.



“இப்ப தான் நீங்க என்னை லவ் பண்றீங்கன்னு முழுசா நம்பறேன். பைக்கில் நான் பிற ஆணோடு போனதும் பொறாமை வந்துவிட்டதே! நான் பைக்கில் யார் கூட போனேன் தெரியுமா?”



“யாரு...யாரு...”



“அப்பப்பா..என்ன அவசரம்?. நான் போனது உங்க அண்ணனோட...”



“என்ன உளறிட்டு இருக்கே....”



“உளறலை...உக்காருங்க விவரமா சொல்றேன்.



மித்ராவுக்கு மின்னல் வேகத்தில் நடந்த சம்பவங்கள் மனதில் ஓடியது. தாயம்மா அவளுக்கு முதலில் போன் செய்தாள்.



“மித்ரா....முதல்ல உனக்கு தேங்க்ஸ். நீ எங்களை பேசணும்னு சொன்னது வொர்க் அவுட் ஆகிவிட்டது. பல விஷயங்கள் தெளிவாயிட்டு இருக்கு. மோகன் உன்னை கூட்டி வர அங்கு வருகிறான்....அவனுடன் இப்ப வராதே. நீ எனக்கு ஒரு உதவி

செய்யனும்....செய்வியா?”



“கண்டிப்பா அம்மா...சொல்லுங்க நான் என்ன செய்யனும்?”



“மோகன் ஒரு அவசரக் குடுக்கை. அவன் கிட்டே சொன்னா நூறு கேள்வி கேப்பான். அவனுக்கு ஒரு ஷாக் கொடுத்து போகச் சொல்லிடு...உன்னை சமாதானப் படுத்தவே அவனை அனுப்றேன். எங்களை மன்னித்துவிடு மித்ரா. உன் உதவி இப்ப தேவை. அப்புறம் ஒரு போன் நம்பர் தரேன். போன் பண்ணி பேச முடியுமா?...”



“சரீங்கம்மா.....எதுக்கு என் கிட்டே போய் மன்னிப்பு கேட்டுக்கிட்டு. நீங்க நல்லாயிட்டீங்கன்னு தெரிஞ்சதும் என்னை விட மகிழ்ச்சி அடஞ்சவங்க வேறு யாரும் இருக்க முடியாது. என்னயிருந்தாலும் என்னால் தானே உங்களுக்கு அடிபட்டது. நீங்க தான் என்னை மன்னிக்கணும். நான் யாரோடு பேசப் போறேன்னு தெருஞ்சுக்கலாமா?”



“மோகனோட அண்ணன்....அதாவது ரிஷியோட மகன்...”

ஆச்சர்யப்பட்டுப் போனாள் மித்ரா...அவரை அவளுக்குத் தெரியாதே...



“அவர் கிட்டே நான் என்ன பேசணும்?”



“ரிஷியைப் பத்தி...அவர் எப்படிபட்டவர்ன்னு அவன் மூலமா தெரிஞ்சுக்கணும்.”



“அம்மா...எதுக்கு? உங்களுக்கு உங்க கணவரைப் பத்தி தெரியாதா? இது என்னவோ உளவு பாக்ற மாதிரி இருக்காதா? ரிஷி சார் தப்பா நினைக்க மாட்டாரா?”



“நினைக்க மாட்டார். நீ அவரைப் பத்தி தெரிஞ்சுக்கணும். உன் பார்வையில் அவர் எப்படின்னு பாரு....என்ன கேக்கணும்னு நீயே யோசித்து கேளு...”



தாயம்மா போனை வைத்துவிட்டாள். மோகன் வந்தான். அவனை தாயம்மா சொன்னது போல் விரட்டிவிட்டாள். பிறகு ரிஷியின் மகன் பிரசாத்துக்கு போன் செய்தாள்.



“ஹலோ...பிரசாத் ஸ்பீக்கிங்...”



“ஹலோ சர்.....நான் உங்க கூட பேசணும்....ஷால் வீ மீட்..”



“நீங்க யாருன்னே தெரியாது. நான் ஏன் உங்களை மீட் பண்ணனும்?.”



“உங்க அப்பாவுக்காக. அவங்க நல் வாழ்வுக்காக....”



“முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க.”





“நான்...தாயம்மா அம்மாவோட வீட்டிலே அமிர்தாவை பார்த்துக்கும் கேர் டேக்கர். ரிஷி சாருக்கும் அம்மாவுக்கும் உள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை...”



“ஸாரி..கண்டவங்களோடு பேச எனக்கு நேரமில்லை.”



“சார்...சார் அப்படி சொல்லாதீங்க. நெருப்பு எரியும் போது அதை அனைக்கறது தானே முறை? அப்படியே விட்டா வீடே எரிஞ்சிடும்.”



“அதான் மனசு எரிஞ்சு போச்சே...வையுங்க போனை.”



பிரசாத்துக்கு சுமார் அம்பது முறை மீண்டும் மீண்டும் போன் செய்து கடைசியில் அவன் மனசை இளக்கிவிட்டாள். “சரி என்னதான் பேசணும்...சொல்லுங்க...”



“சில வெளிச்சங்கள் வெளி வர ஒரு சின்ன மெழுகுவர்தியாவது ஏற்றி வைக்கலாமே....அந்த ஆசை தான்.”



சில வினாடிகள் கழிந்த பின் பிரசாத் “ஒ.கே...நான் சொல்ற எடத்துக்கு வாங்க. உங்களை பிக் அப் பண்ணிக்கிறேன். முண்டகண்ணி அம்மன் கோவிலுக்குப் போவோம்...அங்கு பேசலாம்...”

பிரசாத்தோடு அவள் போகும் போது தான் மோகன் அவளைப் பார்த்தது.



கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்தார்கள். கோவில் அமைதியாக இருந்தது. ஒரு சில பக்தர்களைத் தவிர யாருமில்லை. கோவிலுக்குள் நுழைந்ததுமே மனதில் ஒரு அமைதி வந்தது. மித்ரா அவனிடம் பச்சை சூடிதார் அணிந்து தலையில் ரோஜாப் பூ வைத்திருப்பேன் என்று அடையாளம் சொல்லியிருந்தாள். அவன் கண்டுபிடித்துவிடுவானா என்று அவள் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு பைக் அவள் அருகில் வந்து நின்றது. போட்டோவில் பார்த்த ரிஷியின் ஜாடை நன்றாகத் தெரிந்தது. அவள் மெல்ல சிநேகமாக சிரித்தாள்.



“நான்தான் மித்ரா...”



“பிரசாத்...வண்டியிலே ஏறுங்க...”



கோவிலை வந்தடைந்ததும் ஒரு புதிய வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கையுடன் பேச ஆரம்பித்தார்கள்.



“அப்பாவுக்காக என்று சொன்னதால் வந்தேன்....”



“தேங்க்ஸ். தாயம்மா அம்மாவுக்கும் ரிஷி சாருக்கும் உள்ள பிரிவு பத்தி உங்களுக்குத் தெரியுமா? அது பத்தி உங்க கூட பேசியிருக்காரா?”



“தெரியும்...நான் வளர்ந்த மகன். என்னிடம் எல்லாம் சொன்னார். அவருக்கு நேர்ந்த அவமானம் எனக்கே நேர்ந்தது போல….அவர் மேலே என்ன கோபம் அமிர்தாவுக்கு? இப்படி ஒரு பழியை போட்டிருக்கா...எனக்குப் புரியலை.”



“சில துரதிர்ஷ்டங்கள் நேர்வது கடவுளால் இல்லை. மனிதர்களால். பனி மூடியிருக்கும் காலை நேரத்தில் பாதை தெரியாது. சூரிய வெளிச்சம் வந்தால் பனி ஓடிடும். அந்த வெளிச்சத்தை நாம் தான் ஏற்படுத்தணும்...”



“நம்மால் எப்படி முடியும்? அவங்க தான் பேசி தீர்த்துக்கணும்...”



“முதல்ல வாங்க....அம்மன் சன்னதியில் போய் கும்பிட்டுவிட்டு தொடர்ந்து பேசுவோம். ஏன்னா...நாம உணர்ச்சிவசப்பட்டு, அது சண்டையில் முடிஞ்சிடக் கூடாது இல்லையா? “



அவன் அவளோடு சென்றான். கற்பூரம் ஏற்றி தீபாரதனை காட்டினார் அர்ச்சகர்.



குங்குமம் பெற்றுக் கொண்ட போது அர்ச்சகர்



“இந்தாம்மா...அம்மனுக்கு சாத்திய பூமாலை. வீட்டுக்கு கொண்டு போ....தம்பதிகள் பிரிஞ்சு இருந்தால் ஒண்ணு சேர்வாங்க...”



எதேச்சியாக சொன்னார். இந்த நேரத்துக்கு எவ்வளவு பொருத்தம்! பிரசாத்தும் மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர் வாயில் இப்படிப்பட்ட வார்த்தைகள் ஏன் வரவேண்டும்? கடவுளின் சித்தம் என்று தோன்றியது. நல்ல சகுனம் தான். அப்பாவின் வாழ்வில் மீண்டும் நந்தவனப் பூக்கள் பூக்குமா? என்று அவனும்...தாயம்மா அம்மாவின் நெற்றியில் மீண்டும் குங்குமம் வைப்பாரா ரிஷி...என்று மித்ராவும் நினைத்தார்கள்.



இருவரும் நல்ல மனநிலையில் பேச்சை தொடங்கினார்கள். தாங்கள் சொல்வதே சரி என்று எண்ணும் மனநிலையுடன் தங்கள் கோணத்திலேயே சிந்திக்காமல் அடுத்தவர் என்ன சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ள இந்த மன நிலயே சரியானது. மித்ரா தான் பேச்சை தொடங்கினாள்.



“சொல்லுங்க சார்....உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் ஆன லிங்க் எப்படிப்பட்டது?”



“நல்ல கேள்வி...உன்னை நம்பலாம்னு எனக்கு தோணுது.”



“ஏன் நான் ஒரு ஃப்ராடா இருப்பேன்னு...”





“சந்தேகம் வருவது இயற்கை தானே?. ஏனோ..உங்க முகம் அர்ச்சனைப் பூக்கள் மாதிரி இருக்கு.....மனம் திறக்கத் தோணுது....”



அவள் மனம் இளகியது. பிரசாத் நிறைய கஷட்டப்பட்டிருப்பான் என்று தோன்றியது. மிருதுவாக சொன்னாள்.



“நான் உங்களுடைய சகோதரின்னு நினச்சுக்கோங்க....சொல்லுங்க...”

அவன் கண்ணில் சின்னதாக நீர் பளபளத்தது.



“மித்ரா...ஐ லைக் யூ. நான் தெரிந்து கொண்டதை சொல்றேன்...”

கொஞ்ச வினாடிகள் சிந்தித்தான். பின் சொன்னான்.



“அப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு ஆறு வயசு இருக்கும். அவர் என்னை விட்டு பிரிஞ்சு போனார். அந்த நாள் இன்னும் என் மனசில் முள்ளா இருக்கு. என் இதயம் அறுந்து விழுந்தது. அம்மா...அவங்க பத்தி.சொல்றதுக்கு எனக்குப் பிடிக்கலை ஆனா உன்னிடம் உண்மையை சொல்லிடறேன். அவங்க ஒரு சைக்கோ. பேஷன்ட் அப்பாவோட நல்ல குணமும் பர்ஸ்னாலிட்டியும் கண்டு அவங்க பெருமை படலை. பொறாமைப்பட்டாங்க. உங்க அப்பாவுக்கு தான் ரொம்ப நல்லவருன்னு கர்வம். என்னை மதிக்கறதே இல்லைன்னு சொல்வாங்க...இப்படித் தான் போகும் அவங்க புத்தியும் பேச்சும்....அவங்களுக்கு.அப்பா எப்பவும் வில்லன் தான்.”



“உங்க அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”



“அப்பா சொல்வாராம்.....நாம ஒண்ணா சேர்ந்து வாழ்ந்து தானே ஆகணும்.....காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம்....அதுக்கு அம்மா சொல்வாங்களாம்...ஒ, நான் உங்களுக்கு மாட்ச் இல்லை அதனாலே நீங்க காம்ப்ரமைஸ் பண்ணிட்டு இருக்கீங்கன்னு சொல்லாம சொல்றீங்களா....அப்படீம்பாங்களாம், இப்படி நிறைய வாக்குவாதம். அப்பா ரொம்ப மென்மையானவர். கடிந்து எதுவும் சொல்லவே அஞ்சுவார். பெண்ணை போற்றி வணங்கனும்னு சொல்வார். ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? நான் பையனா பொறந்தது அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம். பெண் குழந்தையை எதிர்பார்த்தாரம். பிறகு அவரே சமாதானம் அடைஞ்சு.....இக்குழந்தை கடவுள் கொடுத்த பிரசாதம்னு சொல்லி பிரசாத் அப்படின்னு பெயர் வச்சார். அம்மாவுக்கு அவர் வச்ச பெயரால் கூப்பிடப் பிடிக்காது....லாலு அப்படின்னு கூப்பிடுவாங்க....”



“அப்படியா? இண்டரஸ்டிங் காரக்ட்டர். எதுக்கு பிரிஞ்சாங்க? ரிஷி சார் இதுக்கு எப்படி சம்மதிச்சார்? கோர்ட் வரை போனது எதனால்?”



“ஒரு சின்ன சம்பவம் பெரிசாச்சு, உங்க இண்டரஸ்டிங் காரக்டரால்.”



“ஸாரி...நான் இண்டரஸ்டிங் காரக்ட்டர்ன்னு சொன்னது ஒரு பேச்சுக்கு தான். தப்பா எடுத்துக்காதீங்க....”



“இட்ஸ் ஒ.கே. அப்பா என்னை கிரிக்கெட் விளையாட கிளப்புக்கு கூட்டிப் போவார். எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் இருந்தது. இவ்வளவு சின்ன வயதில் என்ன கிரிக்கெட் விளையாட்டு? அவன் ஸ்டடீஸில் கோட்டை விடப் போறான்னு அம்மா எதிர் கருத்து சொன்னாங்க. என்னை போகக் கூடாதுன்னு முட்டுக் கட்டை போட்டாங்க. அப்பா எப்பவும் அம்மா வெறிப் பிடித்து தடுக்கும் எதையும், விவகாரம் வேண்டாமுன்னு விட்டுக் கொடுத்திடுவார். அவர் இதுக்கும் விட்டுக் கொடுக்க போராறோன்னு பயந்து அப்பாவிடம் நான், கண்டிப்பா போனும்ப்பா...நீங்க தான் அம்மாவை சம்மதிக்க வைக்கனும்னு சொன்னேன்....அது பெரிய போராட்டமாக மாறிவிட்டது..”



“சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் சேர்ந்து கடைசியில் அது பூதாகரமாக வெடித்துவிட்டதுன்னு நினைக்கிறேன்...”



“எஸ். யூ ஆர் ரைட் மிஸ் மித்ரா...”



“மிஸ் எதுக்கு? மித்ரான்னே கூப்பிடுங்க..”



“சரி...அஸ் யூ விஷ். மித்ரா...அப்பா எப்பவும் சண்டை பெரிதாக்க விடாமல் அடங்கிப் போயிடுவார். ஆனால் இதில் மட்டும் என் விருப்பம் நிறைவேறணும்னு பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். அது அம்மாவை கொலை வெறி அடைய செய்துட்டது. நான் அப்பாவிடம், விடாதீங்க அப்பா...நான் போகத்தான் போவேன்.....அம்மாவுக்காக என் ஆசைகளை நான் விடணுமான்னு, ஏத்திவிட்டேன். ஆக்சுவலா இது எனக்கும் அம்மாவுக்கும் ஆன சண்டை. எனக்கு தைரியம் இல்லாததால் அப்பா மூலம் சண்டை போட்டேன்....பெரிய ரகளை பண்ணிட்டாங்க அம்மா. பேட்டை போட்டு உடைச்சாங்க. அப்படி என்ன உங்கப்பாவுக்கு பிடிவாதம்? விட மாட்டேன்...

காரில் ஏறப் போகும்போது, கார் சாவியை பிடுங்கி வச்சிடுவாங்க. பைக்கில் அப்பா கூட்டிப் போவார். மறுநாள் பைக் காணாமல் போய்விட்டது. தன் தம்பிக்கு கொடுத்திட்டாங்க அம்மா....எனக்கு பொறுக்கலை. அம்மா நீ ஒரு ராட்சசி. அப்பா ஒன்னும் பிடிவாதம் பிடிக்கலை. நான் தான் போகணும்னு அடம் பிடிச்சேன்...என்னை விடும்மான்னு கெஞ்சினேன்...அவ்வளவு தான் அவங்க என்னையும் வெறுக்க ஆரம்பிச்சது தான் நான் கண்ட பலன். கோர்ட் கேஸ் என்று ஒரு வருஷம் போனது. எங்கப்பா ஒரு மிருகம் அது இதுன்னு பொய் சாட்சி எல்லாம் கூறி என்னை தன் கஸ்டடியில் வச்சுக்கிட்டாங்க.”



“நீங்க நான் அப்பாவிடம் தான் இருப்பேன்னு சொல்லியிருக்கலாமே...”



“அப்பா அதில் கூட விட்டுக் கொடுத்திட்டார். என்னிடம் அவர் சொன்னார்...நீ அம்மாவோடு இரு. அவளுக்கு ஒரு பிடிப்பு இருக்கணும். நீ அம்மாவை கவனிச்சுக்கோ என்றார். அம்மா என்னை வீம்புக்காக, அப்பாவை மனம் நோக வைக்கனும்னு தான் பிரிச்சாங்க. என் மேல் உள்ள அன்பினால் இல்லை. இது அம்மாவின் ஸ்வீட் ரிவெஞ். எனக்கு அப்ப தெரியலை. வளர வளர புருஞ்சிக்கிட்டேன்...ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி..இரண்டு வருஷம் முந்தி தான் இறந்தாங்க. தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அப்பா...சந்தோஷமாக தாயம்மா அம்மாவோடு செட்டில் ஆகிட்டாருன்னு நானும் அவர் வாழ்கையை டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. அப்புறம் இப்படி ஒரு பழியோடு அவர் வெளியே வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப வேதனை தரும் விஷயமாயிடுச்சு. நல்லதுக்கு காலமில்லை மித்ரா......நீ இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்லப் போறே? தாயம்மாவுக்கு வக்காலத்து வாங்கப் போறியா? அப்படின்னா நான் இப்பவே எழுந்து போயிடறேன். அப்பா மாதிரி ஒரு அற்புதமான மனிதருக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்கவே வேண்டாம்.... அவர் முகத்தை பார்க்க பார்க்க எனக்கு உங்க தாயம்மா மேல் வெறுப்பு தான் வருது. .”



பிரசாத் குரலில் கோபத்தைவிட விரக்தி கலந்திருந்ததை அவள் கண்டாள்.



மாலை நேரம் விடை பெற்றுக் கொண்டிருந்தது. அவளும் விடை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தாள்.



“அமிர்தா சொல்வது போன்ற கேவலமான காரியத்தை அவர் நிச்சியம் செய்திருக்க மாட்டார்னு எனக்கு நிச்சயமாகிவிட்டது. அதே சமயம் அமிர்தா பொய் சொல்லுகிறாள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. கிட்டத்தட்ட பதிமூணு வயசு ஆகிவிட்ட பொண்ணுக்கு அடையாளம் தெரியாமலா போயிடம்? மேலும் தப்பாக அணைத்தால் புரிந்து கொள்கிற வயசு தானே....அதனாலே..”



“நீங்க சொல்வதை பார்த்தால் மறைமுகமாக எங்கப்பா மேல் பழி போடுவதா தோணுது...” கோபமாக எழுந்து விட்டான் பிரசாத்.



“ச்சே ச்சே...அண்ணா ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க. இதிலே யாரோ விளையாடறாங்க. அதைத் தான் நாம கண்டுபிடிக்கணும்...”



“நீங்க என்ன சொல்றீங்க மித்ரா?..”



“நீங்க வாங்க போங்கன்னு சொல்றதை முதல்லே விடுங்க. அண்ணா...யாரோ செய்திருக்கும் சதி. உங்கப்பா கூட பொறந்தவங்க இருக்காங்களா? உங்களுக்கு டிவின் பிரதர் இருக்காங்களா?.....இப்படி ஏதாவது...”



“சான்சே இல்லை. அப்பாவுக்கு ஒரே தங்கை. சின்ன வயதிலேயே அவங்க இறந்திட்டாங்க. பாட்டியும் தாத்தாவும் போயாச்சு. மனைவியும் சரியில்லை. பெற்ற பிள்ளையோடு வாழவும் கொடுத்து வைக்கலை. கிடைச்ச மறுவாழ்வும் நிலைக்கலை...பழி சுமந்து நிக்றார்...”



அவன் முகத்தில் தெரிந்த வலி...அவன் அப்பா மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்று காட்டியது.



“அண்ணா...கவலைப்படாதீங்க. மூணு மாசம் தன்டமா போயிடுச்சு. நான் அமிர்தாவிடம் பேசறேன். யார் உங்கப்பா மாதிரி வந்து இந்த காரியத்தை செய்ததுன்னு கண்டுபிடித்து உங்கப்பாவையும் தாயம்மா அம்மாவையும் நாம ஒண்ணு சேர்க்கணும்...நான் கண்டிப்பா செய்வேன். நீங்க கவலப்படாதீங்க..”



“நிஜமாவா மித்ரா...ரொம்ப சந்தோசம்...தேங்க்ஸ்...”



இருவர் மனதிலும் ஒரு நிம்மதி படர்ந்தது.



கனவுகள் தொடரும்
 
Top