கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கருவூலக்காதல் - 1

Poornima Karthic

Moderator
Staff member
வருடம் 1995

சிலுசிலுவென காற்றும் குளுகுளவென குளிரும் வீசும் மார்கழி மாதத்து முன்காலை வேளை.

என்னைப் பார் என் அழகைப் பார் என தெருவை அடைப்பது போல் வண்ணக் கோலங்கள் வாசலை நிறைத்திருக்க, அதன் மேல் பசுஞ்சாண சிம்மாசனத்தில் அழகுற வீற்றிருந்தாள் பூசணிப்பூ அழகி.

இந்தியாவின் சராசரி கல்வியறிவை விட அதிகமான கல்யறிவை எட்டிய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமைப்பட்டி கிராமம். அந்த பாரம்பரிய வீட்டின் பெரிய கூடத்தில் 'நமஸ்கார் வெல்கம் டு ரங்கோலி' என இந்தி தொகுப்பாளினி ஞாயிறு காலைப் பொழுதை சுவாரஸ்யம் கூட்டுவது போல் பேசிக் கொண்டிருக்க, 'ஆகாஷவாணி அடுத்து வரும் நிகழ்ச்சி' என சமையலறையில் இருந்த ரேடியோ அவருக்கு ஈடு இணையாக கத்திக் கொண்டிருந்தது.


"ஷ்ஷ் என்ன இவ்ளோ சத்தம், என்ன பாட்டுன்னே புரியாம, அப்படி என்னடா டிவிப் பொட்டியா ஆன்னு வாயைப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்கீங்க" என அந்த வீட்டின் மூத்த பேரனான இருபத்தி ஆறு வயது மித்ரன் சப்தமிட,

"அண்ணே! நாங்க பாட்டுக்காக பாக்கல, பாட்டுக்கு நடுவுல விளம்பரம் வரும்ல அதுக்குத் தான் பாக்குறோம். வாஷிங் பவுடர் நிர்மா வாஷிங் பவுடர்‌ நிர்மா அந்த பாட்டு சூப்பரா இருக்கும்ண்ணே, அப்புறம் ஒரு பையன் பெரிய பூரி மேல குதிப்பானே சன் ட்ராப் விளம்பரம் அதுவும் நல்லா இருக்கும்ண்ணே" என அந்த வீட்டின் கடைக்குட்டி ஒன்பது வயது ப்ரியா, மித்ரனிடம் கொஞ்சினாள்.

"சரிடா ப்ரியா, ஆனா சவுண்டைக் கம்மி பண்ணித்தான் பாக்கணும்" என்ற படி மூடிக் திறக்கும் சாலிடர் டிவியின் ஒலிக்குறைப்பு பொத்தானை இடது புறமாக திருப்பி சத்தத்தைக் குறைத்தான்‌ மித்ரன்.

மித்ரன் நம் கதையின் இரண்டாவது கதாநாயகன் ஆணழகன் இல்லையென்றாலும், தன் செய்கையால் அனைவரையும் கவரும் சாதாரணன். அவன் படித்தது முதுகலை ஆங்கிலம் ஆதலால் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியர் வேலையோடு, நேரம் கிடைக்கும் போது விவசாயமும் பார்க்கும் கெட்டிக்காரன். தனக்கென ஒரு கோடு போட்டு, அதன் மேல் ரோடு போட்டு நேர் வழியில் செல்பவன். தன் சொந்த வீட்டை விட்டு விட்டு சில காரணங்களுக்காக தாத்தா, பாட்டி, மாமா, மாமியோடு எருமைப்பட்டியேலே வசிப்பவன்.


"சித்தி, பசங்க தான் அப்படின்னா நீங்களும் ஏன் இவ்வளவு சத்தமா ரேடியோ கேக்குறீங்க?" என சமையலறையில் பெரிய வெண்கலப் பானையில் மிளகு தூக்கலாய் போட்டு வெண்பொங்கல் கிண்டிக் கொண்டிருந்த தன் தாயின் தங்கை தென்றலிடம் வினவினான் மித்ரன்.

"அது என்னமோ தெரியல மித்ரா சவுண்டைக் குறைக்க முடியல, ரேடியோ ரிப்பேரு போல, சரி நீ போய் தாத்தாவை சாப்பிடக் கூப்பிடேன் தம்பி" என்று முந்திரியை நெய்யில் வறுத்து கொண்டே கூறினார்.

"நானா! நீங்களே போய்க் கூப்பிடுங்க எனக்கு பயமா இருக்கு!".

"இல்ல, இல்ல நீ தான்டா போய் கூப்பிடணும் எங்களுக்கும் பயமா இருக்கு" என்ற சொன்னபடியே சமையலறையின் உள்ளே வந்தார் அவன் தாய் முகில்.

"சரி போறேன் போய் பாக்குறேன்" என பதட்டத்தை குறைத்துவிட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, வாயில் திண்ணையில் அமர்ந்திருந்த நம் கதாநாயகனான தாத்தா முத்துராசுவை நோக்கிச் சென்றான்.

"தாத்தா காலையிலேர்ந்து காபித் தண்ணி கூட குடிக்கலியாமே, சாப்பிட வருவீங்களாம் அம்மா கூப்ட்டாங்க" என்று வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தவரின் தோள்களைப் பற்றினான் மித்ரன்.

"என்ன நீ வந்து கூப்பிடற, போ போய் என் தங்கத்தை வரச்சொல்லு!" என கடுகடுத்த குரலில் சொல்லிவிட்டு மறுபடியும் விண்ணை நோக்கி தன் பார்வையை செலுத்தினார் முத்துராசு.

"அம்மா, தாத்தா தங்கத்தை கூப்பிடு தங்கத்தை கூப்பிடுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க! இன்னும் எத்தனை நாளைக்கு அவர்கிட்டேர்ந்து உண்மையை மறைக்கப் போறீங்க, இதெல்லாம் நல்லதுக்கில்ல பாத்துக்கோங்க!" என உள்ளே சென்று தன் தாயிடம் புலம்பத் தொடங்கினான் மித்ரன்.

"என்னத்தடா சொல்லச் சொல்ற, போனவங்க போய்ட்டாங்க இப்ப இவரையும் நாங்க தொலைக்கணுமோ!" என முகில் தழுதழுக்க..

"அக்கா, அம்மா இறந்து போய் பத்து நாள் ஆச்சு, ஏதோ அப்பா நேத்து வர ஆஸ்பத்திரியில இருந்தாரு அதனால சமாளிச்சோம். இப்ப என்ன செய்யப் போறோம்" என தென்றலும் கலங்கினார்.

"அதான் சொல்றேன் உண்மையைச் சொல்லிடுங்க, என்ன பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்" என்ற மித்ரனை இடைமறித்தார் மாமி ராணி.

"நீ பேசாம இரு கண்ணு, எல்லாத்துக்கும் ஐடியா செஞ்சாச்சு, கொஞ்சம் பொறுங்க" என அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டினார் ராணி.

முத்துராசு மற்றும் தங்கவடிவு தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். மூத்தவர் ராஜராஜன் மற்றும் அவரின் மனைவி ராணியோடு எருமைப்பட்டியில் தாய், தந்தையரோடு வசித்து வந்தனர்.

அடுத்த மகன் ஆதித்யன், மூன்றாவது மகள் முகில் திருச்சியிலும், கடைக்குட்டியாக பிறந்த தென்றல் கும்பகோணத்திலும் வாக்கப்பட, ஆதித்யன் மட்டும் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் இருந்தார்.

"என்ன ஐடியா மம்மி?" என மாமியை மம்மி என விளித்தான் மித்ரன்.

"அங்க பாரு" என வாயில் புறம் ராணி கைக்காட்ட, முத்துராசுவின்‌ நண்பர் சொக்கலிங்கம் வந்திருந்தார்.

"வாடா சொக்கு! இப்பத்தான் உனக்கு வர வழி தெரிஞ்சுதா! எனக்கு உன் மேலயும், தங்கத்து மேலயும் செம்ம கோவம். ரெண்டு பேரும் என்னைய ஆஸ்பத்திரியில கூட வந்து பாக்கலீல்ல" என தன் பால்யகால நண்பனிடம் செல்லக் கோபம் கொண்டார் முத்துராசு.

"டேய் ஆஸ்பத்திரிக்கு நான் நாலு தடவை வந்தேன்டா, உனக்குத் தான் அடையாளம் தெரியல. அன்னிக்கு நீ கீழ விழுந்ததுல உன் தலைக்குள்ள ரத்தக்கட்டு வந்துடுச்சு அதான் உனக்கு நாங்க வந்து பார்த்தது தெரியல‌. தங்கச்சி தங்கம் கூட முந்தா நாள் வரைக்கும் உங்கூடவே தானடா இருந்துச்சு" என சொக்கலிங்கம் தாத்தா தன் நண்பனின் நலனுக்காய் சொக்கிப் போகும் அளவிற்கு பொய் சொல்ல...

"அப்படியா சொல்ற? இப்ப தங்கம் எங்கடா நானும் அவள வரச்சொல்லு வரச்சொல்லுன்னு இன்னிக்கு காலையிலிருந்து நாயா கத்திக்கிட்டு இருக்கேன், ஆனா யாரும் பதிலே சொல்லாம ஆடு திருடுன கள்ளன் மாதிரி முழிக்கிறாங்க' என ஆற்றாமையுடன் தன் நண்பனிடம் கூறினார் முத்துராசு.

"என்ன ராசு, தங்கம் தான் உன் பேத்தி அதான் ஆதித்யன் மகளுக்கு பிரசவம் பார்க்க பெங்களூரு போயிருக்குல்ல மறந்துட்டியா?" என அடுத்த பொய்யை தன் நண்பனின் நலனுக்காக கேடயமாக பயன்படுத்தினார் சொக்கலிங்கம்.

"ஆமாம்ல இத சொல்றதுக்கு ஏன் இந்த பயபுள்ளையெல்லாம் முழிச்சிக்கிட்டு இருக்குவ! ஏதோ சரியில்லன்னு மட்டும் என் மனசு சொல்லுதுடா சொக்கு".

"அதெல்லாம் ஒண்ணுமில்ல எல்லாம் உன் மனப்பிராந்தி, அம்மா ராணி எனக்கும் மாமாக்கும் சூடா காபியும் டிபனும் எடுத்து வைம்மா சாப்பிட வரோம்" என நைச்சியமாக நண்பனை சாப்பிட வைக்க ஏற்பாடு செய்தார் சொக்கலிங்கம்.

"அண்ணின்னா அண்ணி தான் எங்க அண்ணன் ராஜாக்கு ஏத்த ராணி" என அவரை அணைத்துக் கொண்டார் தென்றல்.

ராணியும் பெரியவர்கள் இருவருக்கும் சாப்பாடு பரிமாறப் போய்விட, "அக்கா, அம்மா இறந்ததை இன்னும் எத்தனை நாளைக்கு அப்பாகிட்ட இருந்து மறைக்கப் போறோம். நாமளும் இன்னும் ஒரு வாரத்துல அவங்கவங்க புகுந்த வீட்டுக்கு போய்டுவோம். பயமா இருக்குக்கா" என தென்றல் புலம்பினார்.

முகில், "எனக்கும் தான் கவலையா இருக்கு, அம்மான்னா அப்பாவுக்கு உசிருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சது தானே, இப்ப அவரோட உயிர் இந்த பூமியை விட்டு போயிடுச்சுன்னா தாங்குவாரா சொல்லு. ஆனா அண்ணியும், மித்ரனும் சமாளிச்சுடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு தென்றலு".

"அம்மா, சித்தி நீங்க எல்லாரும் எடுத்த முடிவால பெரிய பிரச்சனை தான் வரப்போகுது. தேவையில்லாம பொய் சொல்லி சிக்கல் தான் வரப்போகுது" என மித்ரன் உறும,

"வந்துட்டாரு தர்மரு, நாங்க ஒண்ணும் பொய் சொல்லலை, உண்மையைத் தான் மறைச்சோம் அதுவும் எங்க அப்பாவோட நன்மைக்குத் தான் செய்யுறோம். அதிர்ச்சி தர‌ விஷயத்தை அவர்கிட்ட சொல்லக் கூடாதுன்னு டாக்டர் சொன்னதை மறந்துட்டியா! நீயெல்லாம் என்ன படிச்ச புள்ளையோ போ!" என மித்ரனின் முதுகில் லேசாக தட்டினார் சித்தி.

அவர் சொல்வதும் நியாயமாகப்படவே, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றான் மித்ரன்.

பாட்டி இறந்ததில் மித்ரனுக்கு வருத்தம் இருந்தாலும், 'வயசானா சாகுறது சகஜம் தானே, இது தாத்தாவுக்கும் புரியும் தானே அப்புறம் ஏன் இப்படி' என தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, எத்தனை வயதானாலும் அன்பு கொண்ட உயிர் விடைப் பெற்று செல்கையில், அது சொல்லொண மரணவலி தரும் என்பது புரியாமல் இருந்தது தான் ஆச்சரியம்.

"டேய் சொக்கு! எம் மருமவ செஞ்ச பொங்கல் பிரமாதம்ல, ஆனாலும் தங்கம் அம்மியில அரைச்சு செய்யுற தேங்காய் சட்னிக்கு இந்த மிக்குஸி(மிக்ஸி) சட்னி ஈடாகுதுடா!" என சிரித்துப் பேசியபடி உண்டவரைக் கண்டு அனைவரும் ஆசுவாசம் கொண்டனர்.

"ம்ம் அம்மியில அரைச்சா நாக்குக்கு ருசியாத் தான் இருக்கும், ஆனா அரைக்கிற கைக்கு தானே வலி தெரியும்! இந்த நூற்றாண்டோட மிகச் சிறந்த கண்டுபிடிப்புல மிக்ஸியும் ஒண்ணுடா பொம்பளைங்களோட வரம். நேரம் மிச்சம் கை வலியும் இல்ல, எங்க வீட்டுல அம்மியை எல்லாம் ஒதுக்கி வெச்சுட்டோம்ல" என்ற சொக்கலிங்கத்தின் கூற்றை அங்கிருந்த பெண்கள் மூவரும் ஆமோதித்தனர்

"ஆமாம்ல அப்ப என் தங்கத்துக்கும் கை வலிச்சிருக்கும்ல, டேய் என் வீட்டு லேண்ட் லைன் போன் வேற வேலை செய்யல, அதனால் நம்ம அப்படியே கடைவீதிக்கு போய் எஸ்டிடி பூத்துக்கு போய் பெங்களூருக்கு போன் போடுவமா! தங்கத்துக்கு குரலை கேக்கணும் போல இருக்குடா" என முத்துராசு தாத்தா மறுபடி ஆரம்பித்தார்.

"அய்யோ புள்ளையார் புடிக்கப் போய் குரங்கா மாறுன கதையா இருக்கே! அங்க சுத்தி, இங்க சுத்தி மறுபடி மறுபடி அதே இடத்துக்கு வரானே" என சொக்கலிங்கம் விழிக்க அவரைக் காப்பாற்றுவது போல் முற்றத்து தரையில் மழைச் சிதறல் விழ ஆரம்பித்து, சற்று நேரத்திற்கெல்லாம் பேரிரைச்சலோடு பெருமழை பெய்யத் தொடங்கியது.

'அப்பாடா' என பெருமூச்சை விட்ட சொக்கு, "சரி ராசு மழை விடட்டும் நம்ம கடை வீதிக்கு போவோம்" என அப்போதைக்கு தாத்தாவிடம் இருந்து தப்பித்தார்.

'இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாடகமோ!' என கவலையுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் நம் நாயகன் மித்ரன்.
 

Thara sri

Active member
❤அழகான ஆரம்பம்😊
பாவோம் தாத்தா பாட்டிய ரொம்ப miss பண்றாரு போல😕அவருக்கு பாட்டி dead ன்னு தெரிஞ்சா😰so sad😕
 
மிகச் சிறப்பான கதை நகர்வு💐💐💐
அன்புடை நெஞ்சம் தொலைந்தால் இன்பவாழ்வும் கசந்திடுமே....
இது தானே நிஜம்.
உண்மை தெரிய வரும் தருணம் முத்துராசுவின் உயிர்ப்பறவை என்ன பாடு படப்போகிறதோ....?!😰
 
Top