கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

களவக்காதல் 01

"காலசூரியன் உதிக்கும்முன்னே
கால்வயிறு கஞ்சி குடிக்க
கட்டிக்கொண்டு பொறப்புட்டேன்
கட்டுனுவல காப்பாத்த

மிஞ்சி போட்டு வந்தவளுக்கு
மிஞ்சுனத கொடுக்காம
மொச்ச சோறு தந்திடவே
உச்சம் வெயிலில் நின்றேனே


உழைக்குறவன் பாவமுன்னு
பொழைக்குறவ நினைச்சுப்புட்டு
அழைக்கறாலே சோத்துக்கு
இழைச்ச உடம்பு மேனியோட


கலைச்சுபோயி நானிருக்க
சேலைதுணி தொடச்சிவிட
வேலைச்சும தெரியலயே
சோலைமர நிழலினிலே

பாதிசோத்த எடுத்துவைக்க
மீதிச்சோறு போதுமென்றாள்
பீதிகூட வந்திடுதே
பாதியிலே போவேனேனு

பெரும்பேச்சு பேசாதன்னு
கருப்பழகி சொல்லிமுடிக்க
கரும்புகாட்டு இடையினிலே
குருவிச்சத்தம் கேட்டிடுதே

வெயில்தொல்ல தாளலைன்னு
துயில்கொள்ள நானெண்ண
மயில்தோகை கூந்தலிலே
உயிலொன்னு எழுதிபுட்டா


மடிமீது தலைவைக்க
அடிமனதில் அமைதியடா
கோடிகாசு கொடுத்தால்
தேடிச்சுகம் கிட்டிடுமோ


செங்கதிரும் மறையுமுன்னே
சீக்கிரமா வந்துடுங்கனு
சேலையுதறி அவநடக்க
சேத்துலதான் காலவச்சேன்

காடுமேடு திரிஞ்சுபுட்டு
வீடுதேடி வருமுன்னே
நெடுந்நேர களைப்புலதான்
கடுப்புவலி வந்துருச்சே

இருட்டுநேரம் வரும்போது
நெருப்புச்சட்டி கொதிக்குதடா
மருந்துசோறு போதுமுனு
இரும்பு மீசை சொல்லுதடா


கத்தரிக்காய் குழம்போட
ராத்திரிக்கு கம்பஞ்சோறு
பெத்தவளுக்கு இணையாக
அத்தவளும் சமைக்கறாலே

சோறுருசி தூக்கிடவே
வெறுந்தண்ணி நான் குடிக்க
சிறுதுளியும் சிந்தவில்ல
குறுநகையில் புரிஞ்சுகிட்டா


பானை கழுவி வந்தவுடனே
பாயி போர்வை விரிச்சுபுட்டேன்
பார்வையிலே அழைத்திடவே
பாதசண்டை முடிஞ்சிருச்சு


முந்தானை விரிக்க மட்டும்
முடிபோட்டு வரவில்ல
முடிவுவரை இருந்திடவே
முழுமனசா அழைச்சுவந்தேன்"


சிறுவயதிலேயை பெற்றோரை இழந்து, உறவினர்கள் மூலம் திருமணம் நடந்து தன் வாழ்க்கையை 20 வயதில் தொடங்கிவர். பழனிச்சாமி.

"இவனுக்கு எவன் சொந்தத்தில் பொண்ணு கொடுப்பான். அப்பன் ஆத்தா இல்லாத அனாதை பையன். கால் காணி தான் அப்பன் சொத்து" என சொந்தங்கள் விலகி சென்றன.

அவரின் பெரியப்பா முயற்சியில் உறவு அல்லாத வீட்டில் சரசுவதியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அப்போது சரசுவதிக்கு வயது 16.


ஆனால் பழனிசாமி தற்போது ஊரில் மிக முக்கியமான நபர். தனது சிறுவயது முதலே பல கஷ்டங்களை அனுபவித்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறியவர்.


எல்லாவற்றிற்கும் காரணம் சரசுவதி தான். தன் கணவனுக்கு நல்ல மனைவியாக மகிழ்ச்சி துக்கம் அழுகை என்று எல்லா சூழ்நிலைகளிலும் ஊக்கம் கொடுத்து உழைத்தவள். அவரை செதுக்கியவள்.

கால் காணி என்று அசிங்கப்படுத்திய ஊரார் முன்பு உழைப்பின் மூலம் 50 ஏக்கர் நிலம் வாங்கி இன்று ஆள் போட்டு விவசாயம் செய்கிறார்.

அப்படி சரசுவதி உடன் தொடர்ந்த வாழ்க்கை இப்போது 50 வருடங்கள் கடந்துவிட்டது.

ஒரே ஒரு ஆண் குழந்தையை போதும் என்று தன்‌ வாழ்க்கையை அவனின் மகிழ்ச்சிக்காகவே தொடர்ந்தனர் இருவரும்.

அழகான கிராமம். அமைதியான சூழல். அன்போடு உறவு முறைகளில் சுற்றத்தார். இவை அனைத்தும் இருக்க, தன் உழைப்பில் உயர்ந்து மரியாதையான ஒரு வாழ்க்கை என்ற எண்ணம் தான் பழனியை ஆரோக்கியமாக வைத்துள்ளது.


உழைக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் ஆண்கள் இருக்குமிடம் ஊர் தலைவாசலில் இருக்கும் ஆலமரத்தடி தான்.

விடியற்காலையில் தோட்டத்திற்கு சென்று வேலை செய்யும் ஆட்களை பார்த்துவிட்டு, எப்போதும் போல ஆலமரத்தடிக்கே வந்து கதைகளை பேச ஆரம்பித்தார் பழனி.


அப்போது அங்கு வந்த பழனியின் தங்கை மகள் சாவித்ரி,"மாமா‌.அத்தை வீட்டுக்கு உங்கள வரச் சொன்னாங்க" என்று சொல்ல,


"எதுக்கு வர சொன்னாளுனு உங்கிட்ட சொல்லிருப்பாளே. அவ என்ன சொன்னானு சொல்லு" சாவித்ரியை திருப்பி கேட்டார்.



"ஓ அதுவா" "ஏன்டி சாவித்ரி தலைவாசல் பக்கம் போனினா உங்க மாமன் யாரோடாவது உக்காந்து வெட்டிபழம பேசிட்டு இருப்பாரு. அந்த மனுசன வந்து கஞ்சி குடிச்சிட்டு போக சொன்னேனு சொல்லிட்டுடி" அப்படினு அத்தை சொல்லிச்சு மாமோய் என்று சாவித்ரி சிரித்துக்கொண்டே சொன்னாள்.


"ஆமா உங்கத்தை சமைச்சு போட்டு அப்படியே சாப்பிட்டுடாலும். அப்படியே இனிச்சு கெடந்திடும்" என்று சலித்து கொள்வது போல சொல்ல,


"சீக்கிரம் போயி சாப்பிடுங்கோ மாமா. இல்லன்னா அத்தை கஞ்சி கிடையாதுனு சொல்லிற போறாங்க. அப்புறம் தண்ணிய குடிச்சிட்டு தான் இங்க வந்து வெட்டிபழம பேசனும்" நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னாள் சாவித்ரி.



"உங்கத்தை கஞ்சி ஊத்தலனா என்ன ஆயிட போகுது. அதான் தங்கச்சி புள்ள நீ இருக்கியே. இந்த மாமனுக்கு கஞ்சி ஊத்த மாட்டீயா?"என்று வம்பிழும்கும் விதமாக கிராமத்து பாணியில் கேட்க,



"உங்க மகனை எனக்கு இல்லன்னு சொல்லிட்டு வெளியூர்காரிக்கு கட்டி வச்சிங்களே. அவ வந்து ஊத்துவா.. நான் எதுக்கு ஊத்தனும்" என்றாள்.

"அடி கழுத. மாமன் பையன் இல்லனா என்ன? அதான் மாமனே இருக்கனே. என்னைய கட்டிக்க. சந்தோஷமாக வச்சு காப்பாத்தறேன்" என்று மீண்டும் வம்பிழுக்க,

" வயசான காலத்துல மாமனுக்கு இந்த ஆசை வேற இருக்கா" சொல்லிவிட்டு வாயை ம்க்கும் என சுழித்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்தாள் சாவித்ரி


"சரிங்க மாப்ள. நான் வீட்டுக்கு போயி வயித்துக்கு ஏதாவது போட்டுட்டு வர்றேன். இல்லன்னா உங்கக்கா ஒரு ஆட்டம் ஆடிருவா" என்று கூறிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார் பழனி.



கைகால்களை கழுவிக்கொண்டு வீட்டினுள் நுழையும் போதே சத்தமாக, "சரசு. சாப்பாடு எடுத்து வை" என்று சொல்லிக்கொண்டே உள்ள வந்தார்.



"வெட்டியா உக்காந்து பேசிட்டு இருக்கற நேரத்தில, வந்து வயித்துக்கு ஏதாவது போட்டுட்டு போலாம்னு இல்ல. உங்கள சாப்பாட வரச்சொல்லி ஒரு ஆளு அனுப்பி விடனுமோ?" என்று பொரிந்தாள் சரசு.



"ஆம்பளனா நாலு எடத்துக்கு போவான் வருவான். நாலு மனுசங்களா பாத்து பேசிட்டு தான வர முடியும்" என்று பழனி கூற,


"பொழுதனிக்கும் அந்த நாலு மனுசங்களோடவே உக்காந்து என்னத்த தான் பேசுவிங்க? அதே உருப்படாத கதை தானே. எல்லாம் தலையெழுத்து" தலையில் அடித்துக்கொண்டு சாப்பாடு எடுத்து வைத்தாள் சரசு.


சாப்பாடை பிணைந்து வாயில் வைத்தவர், "வர வர உன் சமையல் சரியே இல்லடி. உப்பும் இல்ல, உரப்பும் இல்ல" என்றார்.


"உங்களுக்கு தான் ரத்த கொதிப்பு இருக்குல. டாக்டரு தான் காரம் குறைவா சாப்பட சொல்லிருக்காருல", கடித்தாள் சரசு.

"இப்படி தின்னா நாக்கு செத்துபோயிடும். நாளையில இருந்து நல்லா சுருக்குனு சமைச்சு போடு. எந்த கொதிப்பும் என்னைய ஒன்னும் பண்ணாது" என்று பழனி கூற,


"வயசாயிடுச்சுனு நெனைப்பு இருக்குல. ஒழுங்கா சமைச்சு போடுற சாப்புட்டு போயி வேலைய பாருங்க.எதுக்கெடுத்தாலும் நொனை பேசிகிட்டே"


வயது ஆகிவிட்டது என்று கூறவும் பழனிக்கு கோவம் வந்தது. உடனே அவர், "யாருக்குடி வயசாச்சுனு சொல்லுற. இப்ப நான் போயி நின்னாலும் நூறு பொண்ணுங்க கட்டிக்க வருவாங்க" என்று அதட்டலாக கூறினார்.


"ஓகோ. கிழவனுக்கு இந்த ஆசை வேற இருக்கோ? நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமா!. தின்னுபுட்டு காட்டுக்கு போங்க" என்று முகம் பொரிய கூறிவிட்டு சமையலறைக்கு சென்றாள்.


இது போன்று அடிக்கடி நடக்கும் இருவருக்கும். ஆனால் இன்று வரை இருவருமே ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்தது இல்லை. போட்டதை அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்தார் பழனி.


"ஏன்டி உன் மவன் பேசினானா?" என்று சாவடியில் அமர்ந்து பழனி கேட்க,

"ஏன் உங்களுக்கு அவன் பையன் இல்லையா?"

"நீதானே என் மவன் என் மவன்னு சொல்லிட்டு திரியற. சொல்லுடி போன் பண்ணானா?"

"இல்ல இல்ல. பேரன் தான் பேசினான். கொஞ்ச நேரம் பேசினான். அப்புறம் மருமக அவனை பள்ளிக்கூடத்துக்கு போகனும் சீக்கிரம் வாடான்னு சொல்லவும், போனை வச்சுட்டான்" என்று சரசு கூறும் போது அவள் குரலில் ஏக்கத்தை உணர்ந்தார் பழனி.

"என்னைய பத்தி அவர் ஏதாவது கேட்டாரா" என்று குரல் தழுதழுக்க,

"கேட்டான். தாத்தா இருக்காறன்னு. நான் தான் அவர் தோட்டத்துக்கு போயிருக்காறுன்னு சொன்னேன். புள்ள ஆசையா கேட்டுச்சு" என்றாள்.

இதை கேட்டவுடன் பழனியின் கண்கள் குளமாக தயாராகிறது. அவருள்ளே பல மாற்றங்கள்.


"சரி சரி. நான் காட்டுக்கு போயிட்டு, ஆளுங்க என்ன பண்ணுறாங்கனு பாத்துட்டு வாரேன்" என்று கிளம்பினார் பழனி.


எவ்வளவு தான் சொந்த மண்ணில் நலமாக இருந்தாலும் இருவரும் தனியாக தானே இருக்கிறார்கள். அன்று அவர்களுக்கு தெரியாது. இன்றைய தலைமுறைக்கு பட்டணத்து மோகம் வரும் என்று.

காலங்கள் மாறும். சென்ற பாதைகள் மாறுவதில்லை...

தோட்டத்திற்கு சென்று வேலை நடைபெறுவதை சிறிது நேரம் கவனித்துவிட்டு, தோட்டத்தின் மேற்கு மூலையில் கட்டியுள்ள சாலைக்கு சென்று தன்னுடைய கயிற்று கட்டிலை வெளியே எடுத்துவந்து வேப்பம்மரம் அடியினுள் போட்டு படுத்தார்.


நிழலின் அருமையும், குளிர்ச்சியான காற்றின் இதமும் அமைதியும் மெய்மறக்க வைத்து நித்திரையில் ஆழ்த்திவிடும். பழனியும் தூங்க ஆரம்பித்தார்.



நண்பகல் வேளையில் யாரோ தன்னை உலுக்கியது போல உணர்ந்தார் பழனி. நல்ல தூக்கம். எப்படியோ கண்விழித்து எழுந்தார்.

அவரை எழுப்பியது வேற யாருமில்லை. அவரின் எஜமானி சரசுவதி தான்.


"காட்டுக்கு வந்து வேலைய பார்ப்பீங்கனு நெனச்சா, நல்லா மல்லாக்க படுத்து தூங்கிட்டு இருக்கீங்களா?" என்று எப்போதும் போல தனது பாட்டை ஆரம்பித்தாள் சரசு.

"அடடடடடா. ஏன்டி இப்படி கத்தற? வேலை நடந்துட்டு தான இருக்கு. வேலை செய்யறவங்க சும்மாவா இருக்காங்க. நல்லா உன்னோட நொல்ல கண்ண தொறந்து பாரு" என பழனி கூற,

"யாருக்கு நொல்ல கண்ணு. உங்களுக்கு தான் கண்ணு தெரியமாட்டீங்குது" என்று பொரிந்தாள் சரசு.


"சரி சரி. மதியத்துக்கு என்ன கொண்டு வந்த"

"போயி கைகால கழுவிட்டு வாங்க" என்றாள்


வயலிலுக்கு பாயும் தண்ணீரில் தன்னுடைய கைகால்களை கழுவிக்கொண்டு, தலையில் கட்டியிருந்த துண்டை கழட்டி, விரித்து போட்டு தரையில் உட்கார்ந்தார் பழனி.


அதற்குள் தான் கொண்டு வந்த கூடையில் உள்ள போசியில் தயிரை ஊற்றி சாப்பாடு கரைத்து வைத்திருந்தாள் சரசு.

"தொட்டுக்க என்னடி கொண்டு வந்த இருக்க" என்று பழனி கேட்க,

வெங்காயத்தையும், கடலை துவையலையும் எடுத்து வைத்தாள்.


கிராமத்தானுக்கே உரிய பாணியில் போசியில் கரைத்து வைத்திருந்த சோற்றை, வெங்காயத்தை கடித்துக்கொண்டு ருசிச்சு சாப்பிட்டார் பழனி. அவர் சாப்பிடுவதை எப்போதும் போல ரசித்து கொண்டே இருந்தாள் சரசுவதி.


"அடியே சரசு. என்ன தான் வாழை இலையில வகைவகையா தின்னாலும், இப்படி வேப்பமரத்து நிழல்ல உக்காந்து தூக்கு போசியில பிசைஞ்சு சாப்புடுற ருசியே தனிதான்" என்று சொல்லிக்கொண்டே சாப்பாடை எடுத்து சாப்பிட,


"கல்யாணம் ஆன நாளுல இருந்து உங்கள பாக்குறேன். இப்படி சாப்புடுறது தான் உங்களுக்கு புடிக்குமுனு தெரியாதா?" என்று சிரித்தாள்.

"கல்யாணம் ஆன புதுசுல அந்த புங்க மரம் நிழல்ல கம்பஞ்சோத்த நீ கரைச்சு கொடுத்துட்டு இதே மாதிரி தான் பாப்ப. இத்தன வருசம் கழிச்சும் அப்படியே தான் பாக்குற" என்றதும் சரசுவதியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.


வெங்காயத்தின் ருசியும், கடலை துவையலையின் சுவையும் போசியில் இருந்த மொத்த சோற்றையும் இறக்க வைத்தது.

சாப்பிட்டுவிட்டு வயக்காட்டு தண்ணிய கையில அள்ளி குடித்தார் பழனி. அப்போது வீசிய சில்லென்று காற்றும், தொண்டையில் இறங்கும் குளுமையான தண்ணியும் அவர் மனதில் ஆயிரம் நிம்மதிகளை கொடுத்தது.

தினமும் இது நடந்தாலும் அவருக்கு எப்பொழுதும் புதிதாகவே தான் தோன்றும்.


துண்டை உதறி தரையில் போட்டுவிட்டு அமர்ந்த பழனிக்கு நமக்கு அப்புறம் இந்த நிலத்துல விவசாயம் பண்றது யாருனு வருத்தம் வந்துச்சு.

"ஏன்டி சரசு.நம்ம புள்ள இந்த காட்டுல கால வைப்பானு நெனைக்கற" என்று அவர் கேட்க,

"அவனுக்கு இப்படி சேத்துல கால வைக்காம கௌரவமா வாழனுமுனு தானே படிக்க வச்சீங்க. இன்னைக்கு கை நிறைய சம்பளம் வாங்குறான். விலையிற நெல்லுக்கும் வர காசுக்கும் மிச்சம் இல்லாம இப்போ நாம வாழுற மாதிரி அவனும் வாழனுமா?" என்று கேட்டாள்.

"அவனுக்காக தானடி கால் வயிறும் அரை வயிறும் சாப்டு கால் காணிய 50 ஏக்கரா மாத்தினேன். நமக்காகவா இதெல்லாம்" பெருமூச்சுடன் சொல்ல

"நம்ம புள்ள நம்மல ஒழுங்கா பாத்துகிட்டாலே போதும்" என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு கூடையை தூக்கிட்டு கிளம்பினாள்.

கிளம்பும் போது " இன்னைக்கு ராசாத்தி வீட்டு விசேசத்துக்கு போவனும். தலைவாசல உக்கார்ந்து வெட்டி பேச்சு பேசாமா சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருங்க" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.


"இந்த இளந்தாரி பசங்களுக்கு பட்டணத்து மோகம் வந்தாலும் வந்துச்சு நம்ம விவசாயம் அழிய ஆரம்பிச்சுருச்சு. நாளைக்கு சோத்துக்கு பதிலா என்னத்த திண்பானுகனு தெரியல" என்று புலம்பிக்கொண்டே வயலில் இறங்கினார்.


வீட்டுக்கு சென்ற சரசும் மனதில் மகனை பற்றிய நினைவில் அரைவயிறு உண்டுவிட்டு விசேசத்திற்கு கிளம்ப ஆரம்பித்தாள்.


காட்டுல வேலைய முடிச்சிட்டு வந்த பழனி, கிளம்பி இருந்த சரசுவை பார்த்து " உன்ன இந்த சேலையில பாக்கும் போது நம்ம கல்யாணம் ஞாபகம் வருதுடி " என்று சொல்ல,


"என்னத்த உளறிட்டு இருக்கீங்க" என்று கேட்டாள்.

"நம்ம கல்யாணத்துல நீ இதே மாதிரி சிவப்பு கலரு கண்டாங்கி சேலைய கட்டி இருந்த. இப்ப பாக்கும் போது அந்த நியாபகம் வந்துருச்சுடி" என்று புன்னகையுடன் பழனி கூற,


"காலம் போன காலத்தில என்னதயாவது பேசிக்கிட்டு" என்று சலித்துக்கொண்டே சமையலறைக்கு சென்றாள் சரசு. ஆனால் அவளுக்கும் மனதில் சந்தோஷம் தான்.


"ஏன்டி.... அந்த நாள் ஞாபகம் வருதுடி என் கன்னுக்குட்டி" அவர் கூற,

"எதே கன்னுக்குட்டியா!!! புள்ள இல்லாத வீட்டில கிழவ துள்ளி குதிச்சு வெளையாண்டானாமா!... அந்த மாதிரி வயசான காலத்துல என்னத்த பேசிக்கிட்டு இருக்கீங்க" என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக்கொண்டாள்.


"வயசான காலத்துல பேசுற பேச்ச ஊருக்குள்ள யாராவது கேட்டா மானம் போயிடும்" என்று சரசு சொல்ல,


"என் பொண்டாட்டி கிட்ட நான் பேசாம வேற யாருடி பேசுவா?" என்று அவரும் கேட்க,


"அதுக்குன்னு பேரன் எடுத்ததுக்கு அப்புறம் இப்படி பேசுனா கேவலமா நெனப்பாங்க. சீக்கிரம் கெளம்புங்க. விசேஷத்துக்கு நேரமாச்சு" என்று சொல்லிவிட்டு தேவையான பொருட்களை பையில் எடுத்து வைத்தாள்.

பழனி எப்பவும் போல வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு கிளம்பினார். விசேச வீட்டில் அன்புடன் வரவேற்றாள் ராசாத்தி.

"நீங்களே இவ்வளவு நேரம் கழிச்சு வரலாமா அக்கா" என்று ராசாத்தி கேட்க,

"காட்டுல வேலை நடக்குதுடி. அதான் மாமா வர நேரமாச்சு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் சரசு.


"ஏனுங்க மாமா. இது என்ன புதுசா மீசைக்கு மை அடிச்சு இருக்கீங்க. மாமனுக்கு சின்ன பையன்னு நினைப்போ?" என்று கிண்டலாக ராசாத்தி கேட்க,

"கொழுந்தியா வீட்டு விசேசத்துல எனக்கு ஏதாவது பொண்ணு பார்க்கலாமுனு இப்படி வந்தேன்" என்று சிரிச்சுகிட்டே சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.


பழனியின் இது போன்ற எதார்த்தமாக, கலகலப்பாக பேசும் பேச்சுக்கு பல முறைப்பெண்கள் அடிமை. எங்கு பார்த்தாலும் மாமனை வம்பிழுத்து மகிழ்ச்சிவார்கள். அன்று முதல் இன்று வரை அப்படி தான்.



கல்யாணம் ஆகாத சில பெண்கள் அவரை நோக்கி வந்து, "மாமா! மீசைக்கு டை அடிச்சு சின்ன பையன் மாதிரி இருக்கீங்க" என்று கேட்டாள் ஒரு பெண்.


"உங்கள மாதிரி இளவட்ட பொண்ணுங்க வருவீங்கன்னு தான் இப்படி வந்து இருக்கேன்" என்று அவர் சொல்ல,


"உங்க பையன கூட்டிட்டு வந்து இருந்தா கூட அவர சைட்டு அடிச்சிருப்போம். உங்களை எப்படி மாமா சைட் அடிக்கிறது" என்று வாண்டு ஒன்று கேட்க,

"உங்க அத்தைக்கி வயசாயிருச்சு புள்ள. அதான் உங்களை யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்க்கறேன். யாரு இந்த மாமன கட்டிகறீங்க?" என்று கேட்டார்.



"மாமா மெல்ல பேசுங்க. அத்தைக்கு கேட்டு வந்துரப் போறாங்க. அப்புறம் மாமன் நிலைம திண்டாட்டம் தான்" என்று நக்கலடிக்க,


"உங்க அத்தையை கண்ட பயமா? போங்கடி! நீங்க இல்ல யாரு வந்தாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது. சீக்கிரம் வந்து மாமனுக்கு கறி கஞ்சி ஊத்துற வழிய பாருங்க" என்று பேச,இளம் பெண்களும் சரிக்கு சரி பேசினர்.

விசேஷ வீட்டிலிருந்து கிளம்பும் வரை பழனி இதுபோன்று அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் பேசிவிட்டு கிளம்பினார்.


"ஏனுங் மாப்ள.. காடு போற காலத்தில எதுக்கு டை அடிச்சிட்டு?" உறவினர் கேட்க,

"மச்சே நான் இன்னமும் சின்ன பையன் தான். உங்களுக்கு வயசு ஆகிடுச்சு. என்னையும் உங்க கூட கூட்டு சேர்க்க பாக்குறீங்களா?" என்றார்.

"கலிகாலம்டா மாப்ள"

பழனி ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு தான் பேசுவார் என்பதால் சரசுவுக்கு இது புதிதல்ல. அதனால் அவள் எப்பொழுதும் இதை கண்டு கொள்ள மாட்டாள்.

இருவரும் வீடு வந்து சேரும் போது மணி இரவு 9.30ஐ தாண்டி இருந்தது.
 
Top