கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

களவக்காதல் 02

வீட்டு கட்டிலில் அமர்ந்த உடன் பழனியின் செல்போன் மணி அடித்தது. உடனே யார் அழைப்பது என்று பார்த்தார். தன் அன்பு மகன் கார்த்திக் அழைத்து இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.



"ஹலோ தம்பி நல்லாயிருக்கியாப்பா?" என்று பழனி கேட்க,



"நல்லா இருக்கேன் பா. நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா என்ன பண்றாங்க?" என்று மறுமுனையில் கார்த்திக் பேசினான்.



"கார்த்தி என் பேரன் கிட்ட போனை கொடுப்பா! அவங்க கிட்ட பேசணும் போல தோணுது!" என்று பழனி ஆசையுடனும் ஏக்கத்துடனும் கூறினார்.



"டேய் விஷ்ணு இங்க வா. தாத்தா லைன்ல இருக்காரு" என்று கார்த்தி சொன்ன மறுகணமே ஓடி வந்தான் விஷ்ணு.



அதே நேரத்தில் பழனி," சரசு இங்க வா. பேரன் பேசுறார்" என்று அழைக்க சிறுபிள்ளை போல் வேகமாக வந்தாள் சரசு.



"ஏனுங்க சத்தமா பேசுற மாதிரி வைப்பீங்களே அதுமாதிரி வைங்க!" என்று சொல்ல லவுட் ஸ்பீக்கரில் போட்டார் பழனி.



"ஹலோ தாத்தா" என்று விஷ்ணு தன் மழலை குரலில் அழைக்க, மறுமுனையில் இருந்த பழனியின் முகத்தில் 1000 வாட்ஸ் மின்விளக்கு எரிவது போல் மகிழ்ச்சி தெரிந்தது.



" நல்லா இருக்கேன் சாமி. நீங்க நல்லா இருக்கீங்களா" என்று பழனி கேட்கும் போது, அவர் குரலில் உள்ள அன்பை சரசு மட்டுமே உணர்வாள்.அந்த அளவுக்கு மகிழ்ச்சியான ஏக்கத்துடன் கேட்டார் பழனி.



தன் மகனுக்கு பிறந்து இருப்பது தன் தந்தை தான் என்ற எண்ணம் பழனியின் மனதில் வேரூன்றி இருந்தது. அதனால் இன்று வரை தன் பேரனை வாங்க போங்க என்றே அழைப்பார் பழனி.



‍" நான் நல்லா இருக்கேன் தாத்தா. என்ன பண்ணுறீங்க? பாட்டி எங்க?" அன்பு மொழியில் குழந்தை கூற,



போனை பழனியிடம் இருந்து பிடுங்கி முத்த மழை பொழிந்தாள் சரசு.



"என் கண்ணு, தங்கம், மயிலு. சாப்டீங்களா?" என்று மழலை போல கேட்டாள் சரசு.



காலையில் தான் பேசியிருந்தாலும் பேரனின் குரலை கேட்கும் போது உணர்ச்சிவசப்படும் சந்தோஷம் பாட்டிக்கு மட்டுமே உரிய ஒன்று.



"ஏன்டி காலைல தான் பேசின. எதுக்கு மறுபடியும் என்கிட்ட இருந்து போனை புடுங்கற. நான் பேசறேன் கொடு" என்று அவர் கேட்க,



"சும்மா இருங்க. பேரன் எனனைய தான் கேட்கிறான்" என இருவரும் குழந்தை போல சண்டையிட்டனர்.



"சாப்பிட்டேன் பாட்டி. நீங்க சாப்டீங்களா?" என விஷ்ணு கேட்ட மறுகணமே உச்சி குளிர்ந்து ஆனந்தத்தில் தவித்து நின்றாள் சரசு.



"இன்னைக்கு பள்ளி கூடத்துக்கு போனீங்களா?" என்று என்று பேச்சுக்கள் தொடர, நேரம் 10 நிமிடங்களை கடந்து இருந்தது.



தீடீரென கார்த்தி போனை வாங்கி, " அப்பா இன்னொரு நாள் பேசலாம் அவனுக்கு ஹோம்வொர்க் இருக்கு" என்று சொல்ல, அனைத்து சந்தோசங்களும் ஒரு இடத்தில் நின்றது போல எண்ணினர் இருவரும்.



வயதாகிவிட்டதால் பேரனின் எண்ணங்கள் ஆழமாக ஊறி இருந்தது.



"சரிப்பா நீ சாப்டியா? மருமக என்ன பண்றா?"சரசு கேட்க,



" சாப்டேன்மா. அவ பையனுக்கு சொல்லிக்கொடுத்து இருக்கா" என்று கார்த்திக் சொன்னான்.



" அம்மா சனிக்கிழமை நைட் ஊருக்கு வரேன்" என்று சொல்ல,



"சரிடா. பத்திரமா வா" என்று சரசு சொன்னாள்.



"சரிமா. போனை வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் துண்டித்தான்.



"ஏன்டி சரசு.இன்னும் கொஞ்ச நேரம் பேரன் கிட்ட பேசி இருக்கலாமுனு தோணுதுடி" என்று பழனி முதுமையின் ஏக்கத்தில் கூற,



" ஆமாங்க. எனக்கு போன வைக்கவே மனசு இல்ல. நானாவது காலையில பேசினேன். நீங்க இப்பத்தான் பேசினீங்க" சரசு சொல்லும் போது அவள் கண்களில் நீர் ததும்பியது.



"பையன் ஊருக்கு வரேன்னு சொல்லி இருக்கான். குடும்பதோட தான் வரானானு தெரியலையே" சரசு சொல்ல,



"இவ ஒரு கிறுக்கச்சி. அவன் வர்றதா சொன்னவுடனே கேட்டு இருக்கலாமுல்ல" சிடுசிடுக்க சொன்னார் பழனி.



"ஏன்? நீங்களும் தானே கேட்டுட்டு இருந்தீங்க. ஏன்டா பேரன கூட்டிட்டு வரியான்னு கேட்கலாமுல்ல"என்று சரசு சொல்ல,



"அவன் உன்கிட்ட தான்டி வாரதா சொன்னான். வரும்போது பேரனையும் கூட்டிட்டு வாடா. எங்களுக்கு அவரை பாக்கணும் போல இருக்குன்னு சொல்லலாமே" என்று பழனி சொல்லிவிட்டு,



"க்கும். அந்த அளவுக்கு அறிவு இருந்தா நீ ஏன் இப்படி இருக்க" என்று சொல்லிவிட்டு படுக்கையில் படுத்தார் பழனி.



"ஆமாமா இவருக்கு அப்படியே நிறைய அறிவு இருக்கிறது. பையன் கிட்ட கேட்கிறதுக்கு மறந்துட்டு என்னைய குத்தம் சொல்லுராரு" என்று அலட்டிக்கொண்டு தானும் கீழே பாயை விரித்து படுத்தாள்.



மணி 11ஐ தாண்டி இருந்தது. ஆனால் இருவரும் தூங்கவில்லை. தன் பேரனின் குரலிலேயே ஆழ்ந்து இருந்தனர்.



" சரசு நம்ம பேரன் வருவாரா? நானும் வரேன்னு அவரு அப்பா கிட்ட கேட்பாரா?" என்று பழனி ஏக்கத்துடன் கேட்க,



" பேரன் வந்தா அதவிட சந்தோஷம் நமக்கு என்ன இருக்குது!" என்று சரசும் பெருமூச்சு விட்டபடி கூறினாள்.



கடிகாரத்தில் நொடிமுள் சுற்றும் சப்தம் மட்டுமே அந்த அறையில் ஒலித்துக்கொண்டிருந்தது.



அமைதியின் சூழலிலே அமைதியற்ற இரு இதயங்கள் ஏக்கத்தை சுமந்துகொண்டு உறங்க தொடங்கினர்.



ழனியும் சரசும் காத்திருக்கும் அந்த சனிக்கிழமையின் இரவு நேரமும் வந்தது.



நேரம் எட்டு மணியை தாண்டியிரும். கார்த்திக் கையில் பேக்கோடு வந்தான்.



"அம்மா. தண்ணி கொடும்மா" என்று கூறியவாறே உள்ளே வந்து அமர்ந்தான்.



"வாப்பா கார்த்திக். எங்க தாரணியும் பேரனையும் காணல" என்று பழனி கேட்க,



"நாளைக்கு ஒரு நாளைக்கு தானே லீவு. அதான்பா அவங்கள கூட்டிட்டு வர முடியல" என்று சொல்லி முடிப்பதற்குள் தண்ணீரை கொடுத்தாள் சரசு.



தண்ணீரை குடித்துவிட்டு சொம்பை கீழே வைத்தவன்," சாப்டாச்சா" என்று கேட்க,



"ஏன்டா. அவ்வளவு தூரத்தில இருந்து நீ வர. உன்ன விட்டுட்டு இந்த கெழடுங்க சாப்பிடுமா?



போயி குளிச்சிட்டு வா. போ!" என்று சொன்னாள்.



"அதெல்லாம் காலையில குளிச்சுக்கலாம். இப்போ சோத்த போடுமா" என்று கார்த்திக் கொஞ்சலாக சொல்ல,



"அப்படியே உங்கப்பன் புத்தி. கல்யாணம் ஆகி குழந்தையே பொறந்துடுச்சு. இன்னும் திருந்த மாட்டீரியேடா!" என்று சொல்ல,



"தாரணி தான் இப்படி எப்பவும் கடிப்பா. நீயாவது சும்மா இரும்மா" கார்த்திக் சொன்னான்.



"தம்பி போயி குளிச்சிட்டு வா. அம்மா சொல்றாங்கல்ல. போப்பா" என்று பழனி சொன்ன மறுகணமே பாத்ரூம் சென்றான் கார்த்திக்.



"என்னங்க இவ்வளவு வயசு ஆயிடுச்சு. ஆனாலும் அப்பா பேச்சுக்கு என் பையன் எப்படி மரியாதை தரான் பாருங்க" என்று சரசு சந்தோஷமா சொல்ல,பழனி சிறு புன்னகை மட்டுமே பதிலாக தந்தார்.



அதில் உள்ள அர்த்தங்கள் அரைகுறையாக மட்டும் அவளுக்கு புரிந்தது. அவரின் சிரிப்பில் சந்தோஷம் இல்லை என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்தாள்.



சோறு போட்டு வைக்க,கார்த்திக் குளித்து விட்டு வந்து அமர்ந்தான்.



"ஏன் கார்த்திக். விஷ்ணு எப்படி இருக்கான். எங்கள பாக்க வரன்னு சொல்லையா?" என்று ஆவலுடன் சரசு கேட்க,



"அட ஏம்மா. சரியான அழுகை. பெரிய‌ ஆர்பாட்டமே பண்ணிட்டான். என் கால இறுக்கி புடுச்சு விடவே இல்லை" என்று சொல்ல, சரசின் முகம் வாடிபோனது.



ஆனால் எதுவும் பேசாமல் சாப்பிட்டு கொண்டிருந்தார் பழனி.



"ஏன்டா பேரன கூட்டிட்டு வந்து இருந்தா சந்தோஷமா இருந்திருப்பான்ல" என்று கேட்க,



"வரும்போது அவங்கள கூட்டிட்டு வர்றேனு சொன்னேன். அப்புறம் தான் காலயே விட்டான். பெரும்பாடா போச்சு" என்று சொன்னான் கார்த்திக்.



"ஏன்டா இப்படி சொல்லிபுட்டு வந்துருக்க. பாவம் புள்ள பொக்குனு போயிடும்டா!. என்னமோ போ" என்று அழுத்துக்கொண்டே சோற்றை பரிமாறினாள் சரசு.



பேரனை பாக்க வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.



ஆனால் கார்த்திக்கின் சொல்லின் அர்த்தங்களை பழனியால் யூகிக்க முடிந்திருந்தது.



"சரசு பையனுக்கு பொரியல் வை. அத கூட கவனிக்காம என்ன யோசனை உனக்கு" என்று அதட்ட,



"உங்க பையன் இன்னும் குழந்த பாருங்க. கேட்க மாட்டானா?" என்று கேட்டுக்கொண்டே பொரியலை எடுத்து தட்டில் வைத்தாள்.



"அதென்னடி உங்க பையன். நீ தான பெத்த. பத்து மாசம் சுமந்து பெத்தெடுத்த தங்கமுனு கொஞ்சுவ. இப்ப மட்டும் என்னடி உங்க பையன்னு......" என சொல்லிவிட்டு



"நல்லா சாப்டுப்பா. உனக்கு புடிக்குமுனு உங்கம்மா பிஞ்சுகாயா பறிச்சுட்டு வந்து பொரியல் பண்ணிருக்கா" என்ற பழனியின் வார்த்தைக்கு தலையை தூக்காமல் "சரிங்கப்பா" என்று சொல்லிவிட்டு பொரியலை பதம்பார்க்க துவங்கினான் கார்த்திக்.



ஆனால் காலையில் தோட்டத்திற்குச் சென்று அவனுக்காக பிஞ்சு காய்களை பார்த்து பார்த்து பறித்து வந்து, அவனுக்கு புடிச்ச மாதிரி சமைக்க சொன்னது பழனி தான்.



பையன் மேல அவ்வளவு பாசம்.ஆனா அந்த பெரிய மனுஷனுக்கு வெளிய காட்ட தெரியல.



"என்னடா தண்ணிய தூக்குற! தயிர் ஊத்தி கரைச்சு குடிச்சா தான் குளிர்ச்சி. பஸ்ஸில் வேற அங்க இருந்து வந்திருக்கிற" என்று சொல்லி சாதத்தை தட்டில் வைக்க,



"யம்மோவ்! நீ பாட்டுக்கு சாப்பாட்ட வச்சுட்ட. திங்க முடியுமான்னு கேட்டியா. என்னால திங்க முடியாது. நீயே தின்னு" என்று கார்த்திக் கத்த,



"ஏப்பா. அம்மா உன் நல்லதுக்கு தானே சாப்பாடு போட்டா. சாப்டுட்டு தூங்க தான போற. சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாத. சாப்டு" என அவர் சொன்னவுடன் முகத்தில் கோபத்தை வைத்துக்கொண்டு சாப்பாடு உண்ண ஆரம்பித்தான்.



சற்றே சிரமப்பட்டு சாப்பிட்டாலும் முழுவதும் சாப்டு முடித்தான். அவனுக்கு தெரியும். சாப்பாட்டை மிஞ்சம் வைத்தால் தன் அப்பாவிற்கு கோபம் வரும் என்பது.



ஆனால் தற்போது அவர் கோபப்படும் நிலையில் இல்லை. அதற்கான வயதை கடந்து விட்டார்.



சாப்பிட்டு முடித்தாலும் அவன் முகத்தில் இருந்த கோபம் மட்டும் குறையவேயில்லை. தன் தாயைப் பார்த்து முறைத்தபடியே தட்டில் கை கழுவி விட்டு எழுந்து சென்றான்.



"கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு. ஆனாலும் உங்க மேல இருக்க மரியாதையும் பயமும் குறையவே இல்லை" என சரசு சொல்ல,



"அந்த அளவுக்கு நீ பண்ணி வச்சு இருக்க. எந்த அம்மா தான் அப்பா நல்லவரு பாசமானவருன்னு வளர்த்தறீங்க. அப்பா வந்துட்டாரு. அப்பா அடிப்பாரு. திட்டுவாரு. இப்படி சொல்லிதானே நீங்க நல்லவங்களா மாறிட்டீங்க. சரி சரி சோத்த வை" என்று சொல்ல,



"உங்களுக்கு பொறாமை" என்று சொல்லிவிட்டு அவருக்கும் சாப்பாடு வைத்துவிட்டு தானும் உண்ண ஆரம்பித்தாள்.



சாப்பிட்டு முடித்ததும் சரசு பாத்திரங்களை கழுவ செல்ல, பழனி செய்திகள் கேட்க டீவியின் முன் அமர்ந்தார்.



தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்த கார்த்திக்.



"என்னங்க வீட்டில் விசயத்தை பேசிட்டீங்களா" என்று தாரணி கேட்க,



"இன்னும் இல்ல. நாளைக்கு தான் அப்பா கிட்ட பேசனும் தாரணி" என்று சிறு தயக்கமாகவே அவன் சொல்ல,



"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. உங்களுக்குத்தான் பாத்துக்கோங்க. அதனால முடிவு எடுக்க வைக்க வேண்டியது நீங்கதான்" என்று சற்று குரலில் அதிகாரம் வெளிவந்தது.



"அதுக்குதான் நான் வந்து இருக்கேன். நல்ல விஷயமா நாளைக்கு சொல்றேன். சரி பையன் தூங்கிட்டானா இல்லையா தாரணி?"



"தூங்கிட்டான். அப்பாவுக்கு வீடியோ கால் பண்ணு. தாத்தா கிட்டயும் பாட்டி கிட்டயும் பேசணும்னு சொன்னான். நான் காலையில பண்ணித் தர்றேன் இப்ப நீ போய் தூங்கு அப்படின்னு சொல்லி தூங்க வச்சுட்டேன்" என்று தாரணி சொல்ல,



"சரி நானும் போயி தூங்கறேன். டயர்டா இருக்குடி. குட்நைட் தாரணி" என்று கார்த்திக் சொன்னான்.



"சரிங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. குட்நைட். ஐ லவ் யூ" என்று சொல்லிவிட்டு முத்தம் ஒன்றை போனில் பதிக்க,



"ஐ லவ் யூ டூ டி பொண்டாட்டி. உம்ம்ம்ம்மாமா" சொல்லிவிட்டு மாடியில் இருந்து இறங்கி வந்தான் கார்த்திக்.



"டேய் கட்டில விரிச்சு போட்டு இருக்கேன். போயி படுத்து தூங்கு" என்று சொல்லிவிட்டு டீயை கையில் கொடுத்தாள் சரசு.



"அம்மா கட்டில் வேண்டாம்.பாய் தலைகாணி போர்வை எடுத்துக்கொடு நான் மாடில போய் படுத்துக்குறேன்" என்று சொல்ல,



"டேய் கொசு உன்னைய தூக்கிட்டு போயி பக்கத்து வீட்டு மாடியில் போட்டுடும்.ஒழுங்கா உள்ளேயே படுத்து தூங்கு" அவன் குடித்த டீ டம்ளரை வாங்க,



"அட சும்மா இரும்மா சென்னையில பிளாட்ல நாலு சுவத்துக்குள்ள படுத்து டெய்லியும் தூங்குறேன். ஊருக்கு வருவது எப்போதாவது தான். இப்பவும் அபபடியேவா. போ நான் மாடிக்கு போறேன்" என்று சொல்லிவிட்டு ‌பாய் தலைகாணி எடுக்க,



"அடேய் சில்லுன்னு காத்து வீசும். உனக்கு சளி புடிச்சுக்கும். சொன்னா கேளுடா" சரசு சொல்ல, காதில் வாங்காமல் கிளம்பினான்.



கார்த்திக் என்ற பழனியின் குரல் கேட்டு நின்றவன் அப்படியே திரும்பினான்.



"எங்க பாய் தலைகாணிய தூக்கிட்டு போற" பழனி கேட்க,



"இல்லைங்பா. மாடியில் போயி தூங்கலாமுனு" என்று இழந்தான். அவனுள் கோபம் ஏற்பட்டது. இதற்கு கூட இந்தாளு விடமாட்டானா என்று நினைத்தான்.



(கார்த்திக்கு சிறு வயதில் இருந்தே அப்பா என்றால் பயம். எதிர்த்து பேசவே மாட்டான். அப்பா சொன்னால் சரி என்கிற ஒற்றை பதில் மட்டுமே திரும்பி வரும் அவனிடமிருந்து. ஆனால் இன்று வரை அவனை ஒரு முறைகூட பழனி அடித்ததே இல்லை.



ஏனோ தெரியவில்லை. கார்த்திக் மனதில் பழனி வில்லன் போலவே உருமாறி இருந்தார். அவனுள்ளே எப்போதும் தன் அப்பாவிற்கு மரியாதை என்பதை கொடுக்கவே மாட்டான்.



இன்று வரை அவனுக்கு இருப்பது பயம் மட்டுமே மாறாமல்)



"இன்னொரு போர்வைய எடுத்திட்டு போ. நடுஜாமத்தில குளிரும். அப்புறம் கொசுவத்தி சுருளையும் எடுத்திட்டு போ" என்று பழனி சொல்ல, அவன் முகத்தில் அவ்வளவு சந்தோசம்.



எப்பவும் போல போகாத, பண்ணாத, அதைச் செய், இதைச் செய் என்று சொல்லுவார் என்று நினைத்த அவனுக்கு சரி போ என்று சொன்னது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.



அவர் சொன்னதுபோல அனைத்தையும் எடுத்துக்கொண்டு மாடியில் நடுவே பாய் விரித்து போட்டான் கார்த்திக்.



"ஏனுங்க. பையன் தீடீர்னு வந்து இருக்கான். என்னவா இருக்கும்" என்று சரசு கேட்க,



"உன் பையன் காரணம் இல்லாம வர மாட்டான். ஏதோ பெரிய விசயம் இருக்குடி. என்னன்னு நாளைக்கு அவனே சொல்வான் பாரு" என்றார் பழனி.



"எதுவாயிருந்தாலும் அவன் மனசு நோகாம பண்ணனும்" பெருமூச்சுடன் அவள் சொல்ல, சிறிது நேரம் பேச்சு தொடர்ந்தது.



****



((((கார்த்தி அப்பா அம்மாவை பார்க்க வந்து இன்றுடன் 11 மாதங்கள் ஆகின்றது.



திருமணம் முடிந்த புதிதில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வந்தான். விஷ்ணு பிறந்தவுடன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வந்தான்.



தற்போது வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறான்.அதுவும் தனியாக.



தாரணி இந்த கிராமத்திற்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவளுக்கு இந்த கிராமத்திற்கு வர பிடிக்கவில்லை.



அவளுக்கு ஏனோ பழனியையும் சரஸ்வதியையும் பிடிக்கவில்லை.



பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் கார்த்திக் தாரணியின் திருமணம்.



கார்த்திக் சென்னையில் மிகப்பெரிய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவன்.



தாரணியோ ஐடி நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர் பதவியில் இருப்பவள்.



இருவருக்கும் லீவு கிடைப்பது ஞாயிறு மட்டும் தான். அதுவும் லேப்டாப்பிலேயே கழிந்துவிடும்.)))



*****



படுத்தவனோ தூங்காமல் நாளைக்கு அப்பாவிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தான்.



நடு சாமம் தாண்டி இருந்தது. கொசுக்களின் ஆட்டமும் பனியின் காரணமாக குறைந்தது.



போர்வையை நன்றாக கால் முதல் தலை வரை போர்த்தி தூங்க ஆரம்பித்தான்.



காலை செங்கதிர் சூரியன் பளிச்சென்று வந்திருந்தது. ஆனால் அதனால் கார்த்திக்கின் தூக்கத்தை கலைக்க முடியவில்லை.



"டேய் எந்திரிடா இன்னமும் இந்த முண்ட முக்காடு போட்டு தூங்குவது விடலையா" என்று சொல்லிக்கொண்டே போர்வையை இழுத்தாள் சரசு.



சுளீரென்று சூரிய வெளிச்சம் கண்ணை கூச எழுந்தான் கார்த்திக்.



"ம்மா. இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு எழுப்பி இருக்கலாம்ல."



"அடேய் மணி 7.15. சீக்கிரம் வா. உனக்காக உங்கப்பா காலைலயே கோழி வேற அடிச்சுட்டாரு" என்றதும் எழுந்தான்.



துண்டை தோளில் போட்டுக் கொண்டு தோட்டத்துக்கு கிளம்பினான் கிணற்றில் குளிக்க.



இன்றைய தலைமுறை பலருக்கும் தெரியாத அந்த கிணத்து குளியலின் சந்தோஷத்திற்காக.



தோட்டத்திற்கு சென்றவனோ கிணற்று சுற்றுச்சுவர் மேலே ஏறி குதித்தான். ஆனால் குதித்து பின்னர் கீழே செல்ல செல்ல அவனுக்கு பயம் ஏற்பட்டது.



காரணம் அவன் இது போன்று குதித்து ஏழு வருடங்கள் தாண்டி இருந்தது. ஆசையில் ஏறி குதித்துவிட்டான்.



தண்ணீர் மேலே விழுந்து உள்ளே சென்று மீண்டும் மேலே வந்த போது தான் அவன் மனதில் பயம் விட்டது.



ஆனந்தமாய் அங்கும் இங்கும் கிணற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான் கார்த்திக்.



"என்ன மருமகனே. தீடீர்னு வந்திருக்க ஊருக்கு" என்று மாமன் ஒருவர் கேட்க,



"சும்மா தானுங்க மாமா. அம்மா அப்பாவ பாத்திட்டு போலாமுனு வந்தேன்" என்றான்.



"தனியா தான் வந்தியா. இல்ல மவளையும் பேரனையும் கூட்டிட்டு வந்தியா?" என்று கேட்க,



"தனியா தான் மாமா வந்து இருக்கேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். தான் வந்த காரணம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டான்.



"எப்போ கார்த்தி மச்சே வந்தீங்க. நல்லா இருக்கீங்களா? " என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான் கார்த்திக்.



" எப்படி நந்தினி இருக்க. நான் நல்லா இருக்கேன். நேத்து ராத்திரி தான் வந்தேன். உங்க வீட்டுல உனக்கு கல்யாணம் பண்ற எண்ணம் இருக்கா?" என்று கேட்டான் கார்த்திக்



"நல்லா இருக்கேன் மச்சே. கல்யாணம் பண்ணிக்க தான் உங்க பையன் இருக்கானே. பெரியவன் ஆனதும் சொல்லுங்க மச்சே. அப்பா கிட்ட சொல்லி உங்க கிட்ட பேச சொல்றேன்" என்று சிரித்துகொண்டே சொல்ல,



"நாளைக்கே வர சொல்லு மாமனையும்‌அத்தையையும்" என்று சொல்லிவிட்டு, "சரி நந்தினி நான் வீட்டுக்கு போறேன்" என நடக்க ஆரம்பித்தான் கார்த்திக்.



கார்த்திக் செல்லும் திசையினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் நந்தினி.



தன் மனதில் இருந்த காதலை அவனிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது எண்ணியே இன்று வரை திருமணம் வேண்டாம் என்று அழுது கொண்டே இருக்கும் பேதை அவள்.



தன் பெற்றோரிடம் சொல்லி கார்த்திகை திருமணம் செய்து வைக்க சொல்லிய போது, ஜாதகம் என்ற வில்லன் நந்தினி பெற்றோரை பழனியிடமும் சரசிடமும் இதை பற்றி பேசவிடாமல் செய்துவிட்டது...



தன் மனதில் உடலற்ற உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கும் காதலை அவனிடம் எப்படியாவது ஒருமுறை சொல்லிவிட துடிக்கிறாள் நந்தினி.



அவன் திருமணம் ஆனவன் என்ற ஒற்றை காரணத்தினால் தனக்குள்ளேயே சுவர் ஒன்றை எழுப்பி கட்டுண்டாள் நந்தினி.



***************



கள்வக்காதல் தொடரும்........
 
Top