கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலாய் ஒரு காதல் ! - 1

காதலாய் ஒரு காதல் !

அத்தியாயம் - 1





அந்த மாநகர் தன் காலை வேளையைப் பரபரப்புடன் தொடங்கியிருந்தது. மாநகரின் பிரதான சாலையில் அநேக வாகனங்கள் போக்குவரத்து சமிஞ்சையின் பச்சை வண்ணத்திற்காகக் காத்திருந்தது. அந்த நீண்ட வரிசையில் நடுவில் சிக்கியிருந்த இருசக்கர வாகனத்தின் பின்புறம் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான் விமலாதித்தன். மிடுக்கான தோற்றம், நேர்த்தியான உடை, இடக்கையில் பார்த்துப் பார்த்து வாங்கி அணிந்திருக்கும் கை கடிகாரம், கழுத்தில் கனமில்லாத மென் சங்கிலி, வலக்கையில் வெளிர் சாம்பல் நிறத்தில் மிளிரும் காப்பு, கண்கள் காண்போரைக் காந்தமாக இழுக்க, காற்றில் அசைந்தாடிய கேசத்தைக் கை விரல்களால் கோதியபடியே அருகே நின்றிருந்த ஸ்கூட்டியை கவனித்துக் கொண்டிருந்தான். அந்த ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த பெண்ணும் விமலாதித்தனை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள். முகம் முழுவதும் துப்பட்டாவால் சுற்றி மறைத்திருந்தவள் கண்கள் மட்டும் அவனிடம் நயன பாஷை பேசிக் கொண்டிருந்தது. அவனும் அதற்கு ஈடுகொடுத்துப் பேசிக் கொண்டிருக்க... போக்குவரத்துச் சமிஞ்சை மாறி வண்டி நகரத் தொடங்கியது.

வண்டி நகரத் தொடங்கியதும்... முன்புறம் அமர்ந்து வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்த நண்பனிடம்... "டேய், டேய்... ஸ்கூட்டி டா. கொஞ்சம் மெதுவா போடா... எங்க போகுதுன்னு பார்க்கனும். " என்று கோரிக்கை வைத்தான்.

நண்பனோ கடுப்புடன்... "மவனே... நானே பயங்கர அவசரத்தில் இருக்கேன். இந்தப் பில்லை கொண்டு போய்க் கொடுக்கலன்னா... அவ இராட்சசி மாதிரி கத்துவா. அவகிட்ட திட்டு வாங்க முடியாது. பேசாம உட்காரு. " என்றான்.

"அவ என்ன ஆடிட்டரா ? அவருகிட்ட வேலை தானே பார்க்கறா ? அவளுக்குப் போய் இப்படிப் பயப்படற ? என் நண்பனா இருந்துக்கிட்டு.... ச்சே... எனக்கு உன் கூட வரவே அவமானமா இருக்கு. "

"வராதே... இறங்கி ஆட்டோவில் போ. இல்ல கேப் புக் பண்ணி போ... "

"என்ன டா என்னைப் பேச வைக்கறியா ? "

"விமல் ப்ளீஸ்.... ஏற்கனவே இந்த டிராபிக் என்னைக் கொல்லுது... நீயும் பேசி பேசி கொல்லாதே. "

"சரி... சரி.. அடுத்தச் சிக்னல் வந்துடுச்சு பாரு. பிரேக்கை போடு. ஸ்கூட்டி பின்னாடி தான் வருது. சிக்னல் மாறும் வரை பார்த்துக்கறேன். "

"ஏன் டா... அவளே முகத்தை முழுசா மூடியிருக்கா. அதுல என்னத்தைப் போய்ப் பார்க்க போற. "

"அவ கண்ணைப் பார்க்கிறேன். நாங்க கண்ணாலேயே பேசிக்கறோம் ! "

"என்னவோ பண்ணித் தொலை. தயவு செஞ்சி என்னைத் தொல்லை பண்ணாதே. "

"ஆனாலும் இன்னிக்கு நீ ரொம்பப் பண்ணற. ஒருநாள் என் வண்டி சர்வீஸ் விட்டதுக்கு... உன் கூட வந்தேன் பாரு. நிம்மதியா சைட் கூட அடிக்க முடியால. சரியான இம்சை அரசன் டா நீ... "

"யாரு நான் இம்சையா ? சரிதான்... நீங்க பெரீ....ய மன்மதனாச்சே... ஒரு பொண்ணைப் பார்க்கும் போதே இன்னொரு பொண்ணுக்கு விசில் அடிப்பீங்க. நமக்கெல்லாம் அந்தச் சமர்த்தியம் இல்லப்பா... "

"ஏன் டா அலுத்துக்கறே. இப்ப ரசிக்காம வேற எப்ப ரசிக்கிறது ? ரசனைக்கும் வக்கிரத்துக்கும் வித்தியாசம் இருக்கு டா. அதை நாம மீறாம நடந்துக்கறது... நம்மோட கையில தான் இருக்கு. இப்ப ஒரே செடியில் அழகா பூ ஒன்னு பூத்திருந்தா அதோட அழகை ரசிக்கிறது தானே கண்ணோட இயல்பு. அந்த இயல்பு தப்பில்லையே. ஆனா இயல்பு வெறியா மாறி அந்த அழகான பூவைப் பறிச்சுப் பிச்சிப்போடறது தான் தப்பு. "

"எப்பா சாமி... போதும் உன் வேதாந்தம். இதை எல்லாம் கேட்க எனக்கு இப்ப நேரமில்ல. நீ உன் ரசனையைக் கன்ட்டினியூ பண்ணு. " என்றுவிட்டு அவன் அடுத்த போக்குவரத்துச் சமிஞ்சையில் வண்டியை நிறுத்தினான்.

விமலாதித்தனோ தங்கள் வண்டியைத் தொடர்ந்த நிலையிலேயே வரும் ஸ்கூட்டியின் மேல் மீண்டும் தன் காந்தப் பார்வையைச் செலுத்தினான். அப்போது அவன் நண்பன் சேகரின் அலைப்பேசி அலறியது.

அந்தச் சத்தத்தில் அவர்கள் அருகே நின்றிருந்த வாகனங்கள் எல்லாம் சற்றே சிலிர்த்து இவர்களைப் பார்த்தது. அதைக் கவனித்த விமல்... "ஏன் டா இந்த ரிங்டோனை மாத்தக்கூடாதா ? இந்தக் கத்து கத்துது. அட்லீஸ் ஒரு ஹெட்போனாவது மாட்டித் தொலைக்க வேண்டியது தானே ? பாரு எல்லோரும் நம்மைக் கேவலமா பார்க்கறாங்க. "

"ம்ச்... ஹெட்செட் போயிடுச்சு விமல். அதுவுமில்லாம எனக்கு ஹெட்செட் அலர்ஜியாகுது. மண்டையெல்லாம் குடையற மாதிரி இருக்கு. "

"அப்ப ரிங் டோன் சத்தத்தையாவது குறைச்சி வைக்க வேண்டியது தானே... "

"போன் வந்தா டிராபிக்கில் கேட்காதுன்னு அதிகமா வெச்சேன் விமல். விடு ஆபீஸ் போனதும் குறைச்சிடறேன். "

"சேகர் ! எல்லாத்துக்கும் ரெடியா ஒரு பதில் வெச்சிருக்க. உன் கூட வந்தேன் பாரு... எல்லாம் என் நேரம். " என்று விமல் கூறி முடிக்கும் முன் மீண்டும் சேகரின் அலைப்பேசி அலறியது. விமல் கடுப்பானான். அவன் முகம் கோபத்தில் விகாரமாக மாறியது. அதைக் கவனித்த ஸ்கூட்டி பெண்... "ஐயோ... " என்ற அலறலுடன் அவனை விட்டு நகர்ந்து பின்னுக்குச் சென்றாள்.

"ச்சே... போயிடுச்சு. எல்லாம் இவனால !" என்றவன் கடுப்பில் முணுமுணுக்க... மீண்டும் சேகரின் அலைப்பேசி அழைப்பு வந்தது.

"அந்தப் போனை எடுத்துப் பேசித் தொலையேன்டா... " என்று விமல் எரிச்சலுடன் கூற...,

"அந்தப் பொண்ணு தான் கூப்பிடுவா விமல். இப்ப எடுத்தா பேச முடியாது. ஹெவி டிராப்பிங்... நாம வேற நடுவில் நிக்கறோம். போன் பேசினா... எல்லோர் வாயிலையும் விழ வேண்டி வரும். அதுக்கு அவ ஒருத்தி வாயிலேயே விழுந்துக்கறேன். " என்றபடியே வண்டியைச் செலுத்தினான். கொஞ்ச தூரம் பயணித்ததும் மீண்டும் போக்குவரத்துச் சமிஞ்சை குறுக்கிட்டது.

"கடவுளே... இந்தச் சிக்னல் எல்லாம் இப்பதான் நமக்கு வேட்டு வைக்கனுமா ? " என்ற புலம்பலுடன் சேகர் வண்டியை நிறுத்த மீண்டும் அழைப்பொலி...

"டேய் அந்தப் போனை இப்படிக் கொடு. அவளை உண்டு இல்லன்னு பண்றேன். " என்று கோபத்துடன் சேகரின் மேல் பாக்கெட்டிலிருந்த அலைப்பேசியை எடுத்தான்.

அவன் எடுக்கவும் அழைப்பு துண்டிக்கப்படவும் சரியாக இருக்க... சேகர் விமலிடம், "டேய் வேண்டாம் டா... அவ ராங்கு பிடிச்சவ. என்னைப் பத்தி தப்பா ஏதாவது சொல்லி வேலைக்கு வேட்டு வெச்சிட போறா ? அவளுக்கு ஆடிட்டர் கிட்ட செல்வாக்கு அதிகம். ஆடிட்டர் நம்ம எம்.டி.யோட கிளோஸ் பிரண்ட். அப்புறம் என்னைக் கிளோஸ் பண்ணிடுவாங்க டா. "

"ஏன் டா பயந்து நடுங்கற. அவளால உன்னை எதுவும் பண்ண முடியாது நான் பார்த்துக்கறேன். " என்று விமல் முடிக்க மீண்டும் அழைப்பு... வெறுப்பின் உச்சியைத் தொட்ட விமல் நொடியில் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.

எதிர்புறம் "ஹலோ" என்று கூறவும் விமல் "ஹலோ" என்று கூறவும் சரியாக இருக்க... அலை வரிசையில் முட்டிக்கொண்டன குரல்கள் இரண்டும்.

"ஒரு மனுசன் போன் எடுக்கலன்னா கொஞ்சமாவது கேப் விடனும். இப்படியா தொடர்ந்து அடிச்சிக்கிட்டே இருக்கிறது ? அறிவிருந்தா இப்படிப் பண்ணுவீங்களா ? உங்களை எல்லாம் யார் தான் வேலைக்கு வெச்சாங்களோ ? " என்று பொரிந்தான் விமல்.

"ஹலோ... இது சேகர் நம்பர் தானே ? நீங்க யார் பேசறது ? " என்று எதிர்புறம் இருந்தும் கராராகவே வார்த்தைகள் வந்து விழுந்தன.

"நான் அவன் நண்பன். அவன் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கான். ஹெவி டிராபிக். இந்த டிராபிக்கில் வந்து வண்டி ஓட்டி பாருங்க அப்பத் தெரியும். "

"நாங்களும் அதே ரூட்டல வண்டியில தான் வரோம். கொஞ்சம் சீக்கிரமா கிளம்பனும். அதை விட்டுட்டு பீக் ஹவரில் கிளம்பினா... இப்படிதான் ! " என்று எகத்தாகலாமவே எதிர்புறம் பதில் தர.... விமல் கோபத்துடன் உதட்டைக் கடித்தான்.

"அவர் வண்டி ஓட்டட்டும் இல்ல ஓட்டாம உட்கார்ந்து வரட்டும். அது என் பிரச்சனை இல்லை. அவரு இன்னும் பத்து நிமிஷத்தில் பில்லை கொண்டு வந்து தரனும். இல்லன்னா... நான் ஆடிட்டர் சார் கிட்ட ரிப்போட் பண்ணிடுவேன். "

"பத்து நிமிஷத்தில் பறந்து வரதுக்கு... உங்க அப்பா என்ன பிளைட்டா விட்டிருக்காரு ? டிராப்பிக்கில் வர வேண்டாம். அரை மணி நேரம் ஆகும்." என்ற விமல் அவளின் பதிலுக்குக் காத்திருக்காமல் அழைப்பைத் துண்டித்தான்.

சேகர் பதற்றத்துடன்...."டேய் விமல் என் வேலைக்கு வேட்டு வைக்கத் தான் என் கூட வந்தியா டா ? ஏன் இப்ப போன் எடுத்து இப்படிப் பேசினே ? ஏற்கனவே அந்தப் பொண்ணுக்கு என் மேல நம்பிக்கையில்ல. இப்ப இப்படிப் பேசித் தொலைச்சி... என்னை நல்லா மாட்டிவிட்டுட்டியே டா. பாவி... நீ எல்லாம் நண்பனா ? " என்று புலம்ப

"ஏன் டா சும்மா புலம்பற ? அவ கிட்ட நல்ல பேர் எடுத்து என்ன பண்ண போறோம். இன்னும் அரை மணி நேரத்துக்குப் போன் பண்ண மாட்டா. நாம விட்ட டோஸ் அப்படி. இதுக்கு எனக்கு நீ நன்றி தான் சொல்லனும். அதை விட்டுட்டு... இப்படிப் புலம்பி தள்ளறே ! "

"உனக்குப் புரியாது டா... " என்ற சேகர் அதன் பின் மௌனமாக வண்டியை செலுத்தினான். கால் மணி நேரப் பயணத்தில் வண்டி அதன் இலக்கை அடைந்தது. வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திய சேகர்... "நீ இங்கையே இரு ராசா. நான் போய்க் கையில காலுல விழுந்தாவது... அவ ரிப்போர்ட் பண்ணாம பார்த்துக்கறேன். நீ மட்டும் தயவு செஞ்சி மேல வந்துடாதே. " என்று விமலை பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு நகர்ந்தான்.

"இவன் ஒருத்தன். சும்மா ஒரு பொண்ணு லேசா அதட்டறதுக்கே... இப்படிப் பயப்படறான். " என்று முணுமுணுத்தவன்... "ம்ஹூம்... இவனைத் தனியா விடக்கூடாது. அந்த ராங்கி யார்ன்னு பார்த்திட வேண்டியது தான். சேகர் மட்டும் இல்ல... மதன் கூட இவளைப் பத்தி சொல்லியிருக்கான். போய்ப் பார்ப்போம்... " என நினைத்து ஆடிட்டர் அலுவலகம் இருந்த மேல் தளம் நோக்கிச் சென்றான்.

அவன் படிகளில் ஏறி மேல செல்லும் போதே ஒரு பெண்ணின் குரல் காதை துளைத்துச் சென்றது. "என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க ? உங்க கம்பெனி அக்கவுண்ட்ஸ் சரியா வரத்தில்லன்னு கம்ப்ளைன்ட் பண்ண எனக்கு எத்தனை நேரமாகும். ஒரு பில்லை பத்திரமா எடுத்து வெச்சி... கணக்குகளை சரிபார்த்து டேலி பண்ண தெரியல. பேச்சு மட்டும் நல்லா வருது. அதுவும் மரியாதை இல்லமா பேசறீங்க ? அக்கவுண்ட்ஸ் பைனளைஸ் பண்ண நாங்க இராத்திரி பகலா கண்ணு முழிச்சு வேலை பார்க்கறோம். நீங்க ஒரு என்டரி தப்பா போட்ட கூட... எங்க மண்டை காயும். தப்பு எங்கன்னு கண்டுபிடிக்கவே இரண்டு நாளாகிடும். இதுல பில்லை வேற தொலைச்சிட்டு வந்து நின்னீங்க. போனா போகுது... டூப்பிளிக்கெட் பில் வாங்கிட்டுக் காலையில் சீக்கிரம் வாங்கன்னு சொன்னா... எப்படி வேணா பேசுவீங்களோ ? " என்று நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

அவளிடம் மன்றாடி மன்னிப்பு கேட்கத் தொடங்கினான் சேகர். "மேடம் சாரி மேடம். பேசினது நான் இல்ல மேடம். என் பிரண்டு மேடம். டிரப்பிக் டென்ஷனில் அப்படிப் பேசிட்டான். தப்பு தான். சாரி மேடம். ப்ளீஸ்... இத்தனை ஒரு முறை மன்னிச்சிடுங்க மேடம். "

"இது முதல் முறை இல்ல மிஸ்டர். சேகர். இதுவரை நீங்க மூனு தடவை பில்லை மிஸ் பண்ணியிருக்கீங்க. எத்தனை முறை உங்களை மன்னிக்கறது. சாரி... இந்த முறை இந்த விசயம் உங்க எம்.டி.க்கு போகும். " என்று கூறியவள் விருட்டென எழுந்து ஆடிட்டர் அறைக்குள் சென்றாள்.

அவள் பேசிய பேச்சுக்கு அவளை வசை மாரி பொழியும் நோக்குடன் வேகமாக நடந்த விமல், அவள் விருட்டென எழுந்து போது தான் அவள் பொன் முகம் கண்டான். கண்ட நொடியே சிலையென நின்றான். அவன் கண்கள் அவளை விழித்திரை வழியே அழைத்துச் சென்று இதயச் சிறையில் அடைத்து வைத்தது.


தொடரும்...

 
Top