கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலாய் ஒரு காதல் ! - 2

அத்தியாயம் - 2


மாதுவை கண்ட மயக்கத்தில் நின்றிருந்த விமலாதித்தனை பார்த்துப் பதறினான் சேகர்.

"டேய், நீ எதுக்கு மேல வந்த ? " என்றபடியே அவனை இழுத்துக் கொண்டு கீழே சென்றான்.

கீழே வந்த இருவரும் வண்டி அருகே சென்று நின்றனர். விமலை கோபம் பொங்கப் பார்த்த சேகர்... "உன்னை யாரு அவ கிட்ட பேச சொன்னது. நான் தான் அப்பவே சொன்னேன் இல்ல... இப்ப பாரு ஆடிட்டர் கிட்டச் சொல்ல போறா... ஏற்கனவே இரண்டு பில் மிஸ் பண்ணியிருக்கேன். அவ சத்தம் போட்டாலும் எனக்கு உதவி செஞ்சா... ஆனா நீ... இப்ப அந்த உதவியைக் கெடுத்துவிட்டுடே. இப்ப அடுத்து என்ன நடக்கும்னு நினைச்சாவே பதற்றமா இருக்கு. " என்று கொதித்தான்.

"டேய்... தப்பு உன் மேல தான். நீ பில்லை சரியா வெச்சிருக்கனும். அதைக் கூட ஒழுக்கா வெச்சிக்காம என்ன வேலை பார்க்கறே ? இது தெரியாம நான் வேற அந்தப் பொண்ணு மேல கோவப்பட்டுட்டேன். " என்று விமல் சேகர் மேல் பாய்ந்தான்.

அவனையே வினோதமாகப் பார்த்த சேகர்... "இதைத் தான் டா நானும் அப்ப சொன்னேன். அதுக்கு அவ என்ன பெரிய ஆடிட்டரான்னு கேட்ட, இப்ப என்னடா மாத்தி பேசற ?"

"அது... தப்பு உன் மேல தான்னு எனக்கு அப்ப தெரியாது இல்ல. அதான்... அதுவுமில்லாம அவ டிராபிக்கில் நிக்கும் போது திரும்பத் திரும்பக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தா... உன் மொக்கை ரிங்டோன் தான் என்னை டென்ஷனாகிடுச்சு. இப்ப நானே போய் அவங்க கிட்ட சாரி கேட்டுடறேன். " என்று தணிவாகப் பேசினான் விமல்.

"சாரி கேட்கறியா ? நீயா ? என்னடா அதிசயமா பேசற ? நீயே தப்புச் செஞ்சிருந்தாலும் சாரிங்கற வார்த்தை மட்டும் உன் வாயில இருந்து வராதே ? " என்று சேகர் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவன் அலைபேசி அலறியது.

அதை எடுத்துப் பார்க்க... அவள் தான் அழைத்திருந்தாள். "அவதான் கூப்பிடறா... " என்றபடியே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான் சேகர்.

"ஹலோ மேடம்... "

"..."

"இல்ல மேடம் கீழதான் இருக்கேன். "

".... "

"அப்படியெல்லாம் இல்ல மேடம். "

"...."

"சாரி மேடம்... "

"..."

"இல்ல மேடம்... ப்ளீஸ்.... இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க. "

"...."

"மேடம்... " என்று சேகர் பேசிக் கொண்டிருந்த போனை பிடுங்கினான் விமல். அந்த அலைபேசியைத் தன் காதில் வைத்தவன்... "ஹலோ, நான் சேகரோட பிரண்ட் பேசறேன். " என்றிட எதிர்முனையில் அமைதி நிலவியது.

அதைத் தனக்குச் சாதகமாகிக் கொண்ட விமல், "சேகர் செஞ்சது பெரிய தப்பு. அவன் என்ன செஞ்சான்னு தெரியாம நான் அவனுக்காகப் பரிந்து பேசிட்டேன். அதுக்காக நான் மனப்பூர்வமா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். இந்த ஒரு முறை மட்டும் இந்தச் சேகர் இடியட் செஞ்சதை மன்னிச்சிடுங்க. இனிமே இவன் தப்பு செய்யாம நான் பார்த்துக்கறேன். இனி இவன் அக்கவுண்ட்ஸ் கொண்டு வரும்போது நானும் அவனோட வந்து எல்லாம் சரியா கொடுக்கறானான்னு கண்காணிச்சுக்கிறேன். இந்த முறை மட்டும் ஆடிட்டர் சார் கிட்ட சொல்லாதீங்க. பாவம்... இந்த வேலையை நம்பிதான் இவனும் இவன் குடும்பமும் இருக்கு. " என்று அத்தனை தன்மையாகப் பேசிய நண்பனை வியப்பாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் சேகர்.

எதிர்முனை என்ன கூறியதோ தெரியவில்லை... "ரொம்பத் தேங்க்ஸ்ங்க... " என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் விமல்.

"என்னடா போனை வெச்சிட்ட ? " என்று சேகர் அதிர்ச்சியாகக் கேட்க, விமலோ புன்னகையுடன்... "உன்னை நாளைக்கு மிச்சம் இருக்கிற அக்கவுண்ட்ஸ் ஸ்டேட்மென்டோட வரச் சொல்லிட்டா மச்சி. "

"என்னடா சொல்ற ? என்னைக் கிளம்பச் சொல்லிட்டாளா ? "

"ம்... ஆமாம் மச்சி. ஐயா பேசி அவ கரைக்ட் ஆகலன்னா எப்படி ? " என்று தன் புகழைத் தானே கூறிக் கொண்டான் விமல்.

அவனை விநோதமாகப் பார்த்த சேகர், "அவளைப் பத்தி உனக்குத் தெரியாது. அத்தனை சீக்கிரம் விட்டுட மாட்டா. ஏற்கனவே என்னைப் பாவம் பார்த்துத் தான் இரண்டு முறை மன்னிச்சா... இன்னிக்கு கூட நான் டைமுக்கு வந்திருந்தா பிரச்சனை வந்திருக்காது. உன்னால தான் நான் லேட்டா கிளம்பினேன். உன்னால தான் அவகிட்ட திட்டு வாங்கினேன்... இப்ப அவ சமாதானமா பேசினாங்கறதை என்னால நம்ப முடியல. ஆபீஸ் போனா தான் தெரியும் ! என்ன வினை அங்க காத்திருக்குன்னு. கிளம்பு போவோம் ! " என்று சலிப்புடன் கூறிய சேகர் தன் இரு சக்கர வாகனத்தை எடுத்தான்.

அதன் பின்புறம் அமர்ந்த விமல்... அந்தக் கட்டிடத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் சிந்தனையைத் தொடர்ந்தான். அவன் அமைதியாக அமர்ந்து வருவதைக் கவனித்த சேகர்... "விமல், ஆபீஸில் ஏதாவது பிரச்சனை வந்தா கொஞ்சம் எம்.டி கிட்ட எனக்காகப் பேசி அவரைச் சமாதானப்படுத்து டா. ப்ளீஸ்... இனிமே நிச்சயமா தப்பு நடக்காம பார்த்துக்கறேன். " என்று கோரிக்கை வைத்தான்.

அவனோ சேகர் கூறியது எதையும் கவனியாததைப் போல அமர்ந்திருந்தான். அவனிடமிருந்து பதில் வராமல் போகவும் சேகர் பின்புறம் காட்டும் கண்ணாடி வழியாக விமலை பார்த்தான். அவன் முகம் தீவிர யோசனையில் இருப்பதை அது சுட்டிக்காட்டியது.

"நமக்காகத் தான் யோசிக்கறானா ? ஆனா அதுக்கு வாய்ப்பில்லையே. எம்.டிக்கு இவனை ரொம்பப் பிடிக்குமே. இவன் சொன்னா என்னை மன்னிக்க அதிக வாய்ப்பிருக்கே. அப்புறம் எதுக்கு இவன் இப்படி யோசிக்கறான் ? " என்ற கேள்வி எழ... வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு... "விமல்" என்றழைத்து அவன் சிந்தனையைக் கலைத்தான் சேகர்.

"ஆங்... ஆபீஸ் வந்திடுச்சா ? " என்று கேட்டபடியே கலைந்த விமல், வண்டி சாலையின் ஓரத்தில் நின்றிருப்பதைக் கண்டு, "ஏன்டா இங்க நிறுத்தினே ? " என்றான்.

"நீ என்ன யோசிக்கிட்டு வர்ர விமல் ? நான் பேசினது எதுவுமே உன் காதில் விழல... அதான் வண்டியை நிறுத்தினேன். என்னாச்சு உனக்கு ? "

"எனக்கு என்ன ? ஒன்னுமில்லையே... சும்மா... தான் யோசிச்சேன். " என்றுவிட்டு, "நீ அப்படி என்ன முக்கியமான விசயம் சொன்ன ? அதை நான் கவனிக்காம போக ? "

"அது... இந்தப் பிரச்சனை எம்.டி கிட்டக் கண்டிப்பா போகும். அதை நீதான் சமாளிக்கனும். இந்த ஒரு முறை பேசி கன்வீன்ஸ் பண்ணு. இனிமே தப்பு நடக்காம பார்த்துக்கறேன். "

"அதுதான் எனக்கே தெரியுமே ? இதைச் சொல்லவா வண்டியை நிறுத்தி டைம் வேஸ்ட் பண்றே ? வண்டியை எடுடா... லேட்டாகுது. " என்ற விமல் அவன் தோள் தட்டி தைரியம் கொடுத்தான். சேகரும் வண்டியை அவர்கள் அலுவலகம் நோக்கிச் செலுத்தினான்.

அவன் எதிர்பார்த்ததைப் போலவே... பிரச்சனை அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் சென்றிருந்தது. அது ஒரு கட்டிடம் கட்டும் கட்டுமான பணி செய்யும் நிறுவனம். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு. மதன்குமார்.

மதன்குமாருக்கு விமலாதித்தன் மேல் நல்ல அபிப்பிராயம் உண்டு. காரணம், கல்லூரியில் முதல் மாணவனாக வந்தவன் விமலாதித்தன். அவனின் கட்டிட வடிவமைப்பும் தனித்துவமாக இருக்கும். சற்றே விளையாட்டு பிரியனாக விமல் இருந்த போதிலும் வேலை என்று வந்துவிட்டால் முழு மூச்சாக இறங்கிவிடுவான். அதனால் விமலாதித்தன் மேல் மதன்குமாருக்குத் தனிப் பிரியம் இருந்தது. அவனை எப்போதும் கடிந்து கொள்ள அவர் மனம் இடம் கொடுக்காது. அதை இப்போது தனக்குச் சாதகமாகிக் கொள்ள நினைத்தான் சேகர்.

"விமல், எம்.டி என்னைக் கூப்பிடறாரு டா. வாடா வந்து பேசி கன்வீன்ஸ் பண்ணுடா. ப்ளீஸ்... " என்று கெஞ்சியவனுக்கு உதவும் முடிவுடன் மதன்குமாரின் அறைக்குச் சென்றான் விமல்.

"எஸ்கியூஸ்மி சார்... " என்று அனுமதி கேட்டு விமல் கதவருகே நிற்க... அவனை வரச்சொல்லி ஜாடை செய்தார் மதன்குமார்.

"குட் மார்னிங் சார்... "

"குட் மார்னிங் விமல்... என்ன விசயம் ? அடுத்தப் புராஜெக்ட் டிசைன்ஸ் ரெடியா ?"

"அது இன்னிக்குச் சாயந்தரம் ரெடியாகிடும் சார். நான் வந்தது... சேகர் பத்தி பேச... "

"அந்த இடியட் என்ன பண்ணியிருக்கான்னு உனக்குத் தெரியுமா விமல் ? "

"சார் அவன் செஞ்சது சரின்னு நானும் சொல்ல வரல. இந்த ஒரு முறை அவனை மன்னிக்கச் சொல்லி கோரிக்கை வைக்கத் தான் வந்திருக்கேன். "

"விமல், கிட்டதட்ட நாலு லட்சம் மதிப்புள்ள பில்லை மிஸ் பண்ணியிருக்கான். அதுக்குப் போலியா ஒரு பில் ரெடி பண்ணிக் கொடுக்க முயற்சி செஞ்சிருக்கான். அவனை மன்னிக்கனுமா ? "

"சார்... சார்... அது போலி பில் இல்லை. டூப்ளிகேட் பில் தான். அந்தப் பில் வாங்க போகும்போது நானும் அவனோட போயிருந்தேன். அவங்க பில் புக்கை செக் பண்ணி பார்த்துட்டு தான் டூப்ளிகேட் பில் கொடுத்தாங்க. "

"இது முதல் முறை இல்ல விமல். இது போல அடிக்கடி நடந்திருக்கு. "

"சார், அவனோட அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல. அந்த டென்ஷனில் சில மாசமா அவன் கவனம் தவறியிருக்கான். இது மாதிரி இனி நடக்காது சார். அதுக்கு நான் உறுதி தரேன். ப்ளீஸ்... இந்த ஒருமுறை மட்டும் அவனை மன்னிச்சிடுங்க. "

அவன் கூறியதைக் கவனமாகக் கேட்ட மதன்குமார். "இந்த ஒருமுறை உங்கனோட வார்த்தை மேல இருக்கிற நம்பிக்கையில் சேகரை மன்னிக்கிறேன் விமல். இனிமே இது தொடாராம பார்த்துக்கோங்க. " என்றார்.

"ரொம்பத் தேங்க்ஸ் சார்... "

"இட்ஸ் ஓகே... "

"நான் சேகரை உள்ள அனுப்பவா சார். "

"தேவையில்ல... நான் அப்புறம் பேசிக்கிறேன். "

"ஓகே... சார்... நான் கேபினுக்குப் போறேன். "

"ம்... ஓகே. " என்று மதன்குமார் அனுமதி தர... மீண்டும் ஒருமுறை அவருக்கு நன்றி கூறிவிட்டு அவரின் அறையிலிருந்து வெளியேறினான் விமல்.

அவன் வரவுக்காய் தவிப்புடன் காத்திருந்த சேகர்... அவன் வெளியே வந்ததும் அவனை அணுகினான்.

"விமல், சார் என்னடா சொன்னாரு ? "

"இந்த ஒருமுறை பேசி கன்வீன்ஸ் பண்ணிட்டேன் சேகர். இனி இப்படி என்னைச் சங்கடத்தில் மாட்டிவிட்டுடாதே
. என் மேல உள்ள நம்பிக்கையில் தான் இப்ப உன்னை மன்னிச்சிருக்காரு. அதைக் கெடுத்திடாதே. "

"இல்லடா... இல்லடா, இனி இப்படி ஒரு தப்பு நடக்காது. ஐ பிராமிஸ்... "

"சரி போ... போய் வேலையைப் பாரு. " என்ற விமல் தன் கேபின் நோக்கிச் சென்றான். கணினியை இயக்கி தன் வேலையைத் தொடங்கினான். ஆனால் அவன் மனது வேலையில் ஈடுபட மறத்து முரண்டு பிடித்தது. எண்ணம் முழுவதும் ஆடிட்டர் அலுவலகத்தில் பார்த்த அவள் மேல் நிலையாய் நின்றிருந்தது. எந்த வேலையிலும் அவன் மனம் ஒட்ட மறுத்தது. மீண்டும் அவளைப் பார்க்க வேண்டும் என்று நச்சரிக்கத் தொடங்கியது.

"இது என்ன ? அந்தப் பொண்ணு ஏன் நம்மை இத்தனை டிஸ்டப் செய்யறா ? அவ என்ன அத்தனை ஸ்பெஷலா ? இல்லையே... ஆனா... அவளைப் பார்த்த நிமிஷம் மனசில் ஏதோ ஒரு மாற்றம். பல வருஷம் அவளோட வாழ்ந்த மாதிரி தோணுதே. அது ஏன் ? ஒருநாளைக்கு எத்தனையோ பொண்ணுகளைப் பார்க்கறேன்... எந்தப் பொண்ணு மேலையும் இப்படி ஒரு ஈடுபாடு ஏற்படலையே. இந்தப் பொண்ணு மேல மட்டும் ஏன் இத்தனை ஈடுபாடு காட்டுது மனசு ?" என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காமல் தடுமாறினான் விமல்.

மாலை நான்கு மணியானது அதற்கு மேல் மனதைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாமல் எழுந்த விமல், சேகரை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தான்.

"என்னடா விமல் ? இப்ப எதுக்கு என்னை இழுத்துக்கிட்டு வந்தே ? வேலையிருக்கு டா... நாளைக்குக் காலைக்குள்ள மிச்சமிருக்கற அக்கவுண்ட்ஸை ஆடிட்டர் ஆபீஸில் கொண்டு போய்க் கொடுக்கனும். "

"கொடுக்கலாம் கொடுக்கலாம். " என்ற விமல்... "ஆமாம் , அந்தப் பொண்ணு பேரு என்ன ? " என்று கேட்க,

"எந்தப் பொண்ணு ? " என்று கேட்டு அவளைக் கேள்வியாய் பார்த்தான் சேகர்.

"அது தான் டா காலையில் ஆடிட்டர் ஆபீஸில் பார்த்தோமே.... அந்தப் பொண்ணு. "

"நீ எதுக்குக் கேட்கறே ? "

"அந்தப் பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டப் பண்றா மச்சி. வேலையே ஓட மாட்டேங்குது. வாயேன் போய் ஒரு எட்டு அவளைப் பார்த்திட்டு வருவோம் ! "

"விமல், விளையாடாதே. அந்தப் பொண்ணு கொஞ்சம் டெரர். காலையில் பார்த்த தானே ? "

"அது வேலையில் அப்படித் தான் இருக்கனும். கணக்கு வழக்குப் பார்க்கும்போது தப்பு நடந்தா... யார் மேல குத்தம் சொல்லு வாங்க. அவங்களைத் தானே கேள்வி கேட்பாங்க. அதுக்கும் பர்ஸ்னலுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு சொல்லு. "

"விமல்... "

"எனக்கு அவளைப் பார்த்தும் மனசுக்கு என்னவோ வந்துட்டுச்சு சேகர். "

"விமல் அவளை நீ நினைக்கிற மாதிரி நெருங்க முடியாது. போன வாரம் தான் அவளோட கூட வேலை பார்த்தவன் கையில காம்பஸ் குத்தி ஹாஸ்பிட்டல் போனான். "

"அதுக்கு என்ன ? "

"டேய்... காம்பஸை அவன் கையில் குத்துனதே அவ தான்டா. சீண்டலுக்கும் கடலை போடறதுக்கும் அவ ஆள் கிடையாது. "

"டேய் நான் அவளை லவ் பண்றேன். " என்று விமல் கூற அதிர்வுடன் அவனைப் பார்த்தான் சேகர்.

"டேய்.. என்னடா சொல்ற ? லவ்வா ? "

"ஆமாம் டா.... அவளைப் பார்த்ததும் பத்திக்கிச்சு. லவ் அட் பர்ஸ்ட் சைட்... "

"அம்மா பார்க்கற பொண்ணைத் தான் கட்டிக்குவேன்னு டயலாக் பேசவே... "

"அது... இவளை பார்த்ததில் இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். "

".... "

"அவ பேரு என்னன்னு நீ சொல்லவே இல்லையே ? "

"அவ பேரு மனோன்மணி. "

"மனோன்மணியா ? " என்றவன் "நல்ல பேரு தான். " என்றுவிட்டு... "சரி வண்டியை எடு. ஆடிட்டர் ஆபீஸ் போகலாம். அவளைப் பார்க்கனும். " என்றிட,

"இந்த விஷப்பரீட்சைக்கு என்னைத் துணைக்குக் கூப்பிடாதே விமல். காலையில் தான் ஒரு கண்டத்தில் இருந்து தப்பிச்சிருக்கேன்." என்ற சேகர் தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை விமலிடம் நீட்டி, "இந்தா வண்டி சாவி. நீயே போய் அவளைப் பாரு. பேசு... என்னவோ பண்ணு. என்னை இதுல இழுக்காதே... உனக்குப் புண்ணியமா போகும். " என்றுவிட்டு மீண்டும் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டான்.

சாவியைக் கையில் சுழற்றியவன்... "நானே பார்த்துக்கறேன்... " என்று கூறியபடியே வண்டியை இயக்கினான். வண்டி நேராகப் பயணித்து ஆடிட்டர் அலுவலக வாசலை அடைந்தது.



தொடரும்.....
 
Top