கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலாய் ஒரு காதல் ! - 3

அத்தியாயம் - 3


ஆடிட்டர் அலுவலகம் இருந்த வளாகத்தை அடைந்த விமலின் வாகனம்... பார்க்கிங் ஏரியாவில் சென்று நின்றது. வண்டியை அணைத்து விட்டு அதிலிருந்து இறங்கியவன் சீட்டின் மேல் சாய்ந்த படி நின்றான்.

தன் கை கடிகாரத்தைப் பார்த்து, "இந்த நேரம் அவங்க கிளம்பற நேரமா இருக்குமா, இல்லையான்னு தெரியலையே ? சேகர் கிட்ட இதைப் பத்தி கேட்காம வந்துட்டோமே. மேல போய்ப் பார்க்கலாமா ? இல்ல இங்கையே வெய்ட் பண்ணலாமா ? ஒரே குழப்பமா இருக்கே. இந்தச் சேகர் வந்திருந்தா கூட அவனைக் காட்டி ஏதாவது பேசலாம். இப்படி யோசனை இல்லாம விருட்டுன்னு கிளம்பி வந்துட்டோமே. என்ன பண்றது. " என்று புலம்பிய படியே கொஞ்சம் நேரம் நின்றிருந்தான்.

பின், "சரி... மேல போய்ப் பார்த்திடலாம். என்ன நடந்தாலும் பரவாயில்லை... " என்று முடிவெடுத்து ஆடிட்டர் அலுவலகம் இருந்த கட்டிடத்தை நோக்கி நடக்க அவன் எத்தனித்த வேளையில்.... கட்டிடத்தின் உட்புறம் இருந்து அவளே வெளியேறி வருவதைக் கண்டு வண்டியருகேயே நின்று விட்டான்.

வந்தவள் அவளின் இரு சக்கர வாகனத்தை இயக்கி... அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட... உடனே விமலும் தன் வண்டியைக் கிளம்பி அவள் அறியாமல் அவளைப் பின் தொடர ஆரம்பித்தான்.

அரை மணி நேரம் சாலையில் பயணித்த அவளின் வாகனம்... ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்தது. விமலும் அந்தக் குடியிருப்பு வளாகத்தைப் பார்த்து வியந்தான். காரணம்... அது அவன் குடியிருக்கும் அதே குடியிருப்பு வளாகம் தான்.

"இந்தப் பொண்ணு இங்கையா இருக்கா ? இல்ல வேற யாரையாவது பார்க்க வந்திருப்பாளா ? " என்ற சிந்தனையுடன் அவளைப் பார்க்க... அவளோ வண்டியைக் குறிப்பிட்ட பார்க்கிங் ஸ்லாட்டில் நிறுத்தினாள்.

"அட... கரைக்டா அங்க போய் நிறுத்தரானா... அவளும் இங்கதான் தங்கியிருக்கா போலயே. அதுவும் நம்ம பிளாக்கில் தான் இருக்கா. இவளை இதுக்கு முன்னாடி இங்க தான் பார்த்திருப்போமோ... இல்லையே அப்படி ஒரு ஞாபகம் வரலையே. அது சரி நாம இங்க வந்து கொஞ்ச நாள் தானே ஆகுது... அதனால கூடக் கவனிச்சிருக்க மாட்டோம். வேளை வேற அதிகமா இருந்ததே. அதான் நம்ம கவனத்துக்கு வரல. இன்னிக்கு பேசிடுவோம் ! சேகரோட பிரண்ட்டுன்னு அறிமுகப்படுத்திப்போம். காலையில் பேசினதுக்கு ஒரு 'சாரி' கேட்டுப் பேச்சை ஆரம்பிச்சா சரியா இருக்கும். " என்று நினைத்தபடியே தன் இரு சக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு மின்தூக்கி நோக்கிச் சென்றான்.

அவனுக்கு முன்பே அவள் அதனுள் இருக்க... விமல் பேச்சைத் தொடங்கும் முனைப்புடன் உள்ளே நுழைந்தான்.

அப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தயக்கத்துடன் விமல் அவள் முகம் பார்க்க... அவளோ விமலை கண்டு புன்முறுவல் செய்தாள். அவள் அப்படி முறுவலிக்க... விமல் அதிர்வில் பேச்சற்றுப் போனான். இருவருக்குமான தளத்தின் எண்களை அவளே இயக்கிவிட்டு நிற்க... மின்தூக்கியின் கதவுகள் மூடியது.

விமல் குழப்பத்துடன் அவளைப் பார்ப்பதும் பின் தலையைத் திருப்புவதுமாக இருக்க.. அவளோ எதற்கும் எதிர்வினை புரியாது அமைதியாகவே நின்றிருந்தாள். முதலில் வந்தது விமலின் வீடு இருக்கும் தளம் தான். கதவு திறக்க... விமல் யோசனையுடன் வெளியேறினான். வெளியேறி வந்தது அவள் முகம் காண விமல் திரும்பிய நொடியில் மின்தூக்கியின் கதவுகள் மீண்டும் மூடிக்கொண்டது. அவள் தளம் அவனுக்கு மேலே இருந்தது.

வீடு நோக்கி எட்டு வைத்த விமலின் மனதில், "இந்தப் பொண்ணு நம்மைப் பார்த்து சிரிச்சாளே... இவளுக்கு நம்மைத் தெரியுமா என்ன ? எனக்குக் கூட இவளோட முகம் பழக்கப்பட்ட முகம் மாதிரி தான் தெரியுது. காலையில் பார்த்த நொடியே இவ என் மனசில் ஒட்டிக்கிட்டதுக்குக் காரணம்... பார்த்த முகமா இருந்தாலையா இருக்குமோ ? எங்க பார்த்திருக்கோம். ஒருவேளை இங்க தான் பார்த்திருப்போமோ ? அதனால தான் அவளும் நம்மைப் பார்த்து சிரிச்சாளா ? இங்க குடி வந்ததிலிருந்து வேளை நேரம் முன் பின் இருந்ததால நாம தான் இவளைச் சரியா பார்த்திருக்க மாட்டோம்ன்னு நினைக்கிறேன். " என்ற எண்ணங்கள் எழுந்து அவனைக் குழப்பவும் தெளிவிக்கவும் செய்தது.

அதற்குள் விமலின் வீடு வந்துவிட... கதவைத் திறந்து உள்ளே சென்றான். சோபாவில் அமர்ந்தவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு... குளிர்சாதனப் பெட்டியை நோக்கிச் சென்றான். அதிலிருக்கும் நெகிழி குடுவையை எடுத்தவன் குளிர்ந்த நீரைப் பருகியபடியே மீண்டும் சோபாவை அடைந்தான். அப்போது அவன் கைப்பேசி அடிக்க... எடுத்துப் பார்த்தான். அவன் அன்னை வசுந்தரா அழைத்திருந்தார்.

அன்னையின் பெயரைப் பார்த்ததும் விமலின் முகம் மலர்ந்தது. குறும்பு சிரிப்பு முகத்தை வியாபிக்க அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.

"ஹலோ... மை டியர் மாம். எப்படி இருக்க ? என்ன திடீர்னு கூப்பிட்டிருக்க ? " என்று விமல் குதூகலத்துடன் பேச்சை ஆரம்பிக்க,

"சும்மா தான் கண்ணு. நீ தானே சொன்ன... நாளைக்கு நான் ப்ஃரியா தான் இருப்பேன் கூப்பிடு பேசலான்னு... அதான் கூப்பிட்டேன். " என்று பதில் தந்தார் வசுந்தரா.

"ம்... அப்ப சரி பேசு... கேட்கறேன். "

"வீடெல்லாம் செட்டாகிடுச்சா ஆதி. "

"ம்... இந்த வீடு நல்ல வசதியாவே இருக்கும்மா. எந்த வித டிஸ்டபென்ஸும் இல்ல. இடமும் நல்ல விசாலமா இருக்கு. "

"நல்லது... அந்தக் குடோன் மாதிரி இருந்த ரூமிலிருந்து நீ வெளிய வந்ததே எனக்குச் சந்தோஷம். இப்ப இந்த வீடு நல்ல வசதியா இருக்குன்னு நீ சொல்லவும் தான் எனக்குத் திருப்தியா இருக்கு. "

"வசு... அப்படின்னா நான் என் பிரண்ட்ஸ் கூட இருந்தது உனக்குப் பிடிக்கல. "

"ஆமாம், நீ எங்களுக்கு ஒரே பையன். செல்லமா வளர்ந்த பையன். நம்ம வீட்டுல உன்னை அத்தனை சௌவுகரியத்தோட வளர்த்திருக்கேன். நீ ஹாஸ்டலுக்குப் படிக்கப் போன இடத்தில் கூட உனக்கு நல்ல வசதி வாய்ப்பு அமைச்சி கொடுத்தேன். இப்ப வேலைக்குப் போனதுக்கு அப்புறம் நீயா தேர்ந்தெடுத்த இடம் தான் குருவி கூண்டை விடச் சின்னதா இருந்தது. அதுல போய்... எப்படித் தான் இத்தனை நாளும் இருந்தியோ. அந்த இடத்தைப் பார்த்த உடனே எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வந்துச்சு தெரியுமா ? "

"சரிமா... விடு. இப்பதான் இடம் மாறிட்டேன் இல்ல. ஆமாம், வீட்டைப் போட்டே எடுத்து பிரியா நம்பருக்கு அனுப்பினேன் பார்த்தியா ? "

"ம்... பார்த்தேன். நல்லா இருக்குது. அதுக்கு அப்புறம் தானே நீ அங்க இடம் மாறா சம்மதிச்சேன். "

"வசு ! நீ சரியான வில்லி !"

"யாரு நான் வில்லியா. என்ன பையன் வசதியா வாழனும்னு நினைக்கிற நான் உன் கண்ணுக்கு வில்லியா தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போறேன். அதனால நான் ஒன்னும் குறைச்சிட போறதில்ல. "

"ஓகே... ஓகே... " என்ற விமல் மனதிற்குள் "உன் பாசம் சில சமயம் என்னைப் பாடாய் படுத்து அம்மா. அது உனக்குப் புரிய மாட்டேங்குது. பிரண்ட்ஸோட கலகலப்பா இருந்தேன். இப்ப இப்படித் தனியா உட்கார்ந்திருக்கேன். உனக்கு இதை எப்படிப் புரிய வைக்க... " என நினைத்துப் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு வெளியே... "ஆமாம் பிரியா என்ன பண்றா ? காலேஜ் போயிட்டு வந்துட்டாளா ? "

"ம்... வந்துட்டா. ரூமில் இருக்கா. " என்று விமலின் கேள்விக்குப் பதில் தந்துவிட்டு தன் அடுத்த கேள்வியைத் தொடர்ந்தார். "ஆமாம் சாப்பாட்டுக்கு என்ன பண்றே ? வேலைக்கு ஆள் பார்க்கச் சொன்னேனே... பார்த்தியா இல்லையா ? "

"இல்லமா... யாரும் கிடைக்கல. இங்க வேலைக்கு வரவங்க எல்லாம் இந்த ஊரு சமையல் தான் சமைப்பாங்க. நம்ம ஊர் சாப்பாடு சமைக்கறவங்க கிடைக்கறது கஷ்டமா இருக்கு. "

"அப்போ இப்ப நீ கடையில் தான் சாப்பிடறையா ? "

"ம்... நீதான் எனக்குச் சமைக்கச் சொல்லியே தரலையே. ரூமில் இருந்தவரை மத்த பசங்க சமைப்பாங்க... சாப்பிட்டு அட்ஜஸ் பண்ணிக்கிட்டேன். இப்ப ரொம்பக் கஷ்டமா இருக்கு. இங்க பச்சரிசி சாப்பாடு தான் அதிகம் கிடைக்குது. "

"அது உனக்குச் சேராதே... "

"சேரல தான். நேத்து கூட லேசா வயித்தை வலிச்சுது. மாத்திரை போட்டு அட்ஜஸ் பண்ணிக்கிட்டேன். "

"...."

"ஏன்ம்மா... நீ இங்க வந்து கொஞ்ச நாள் இருக்கியா ? "

"அப்பா எப்படியாவது அட்ஜஸ் பண்ணிக்குவாருன்னு ஆதி... ஆனா பாப்பா இருக்காளே... காலேஜ் போற புள்ளையை எப்படித் தனியா விட்டுட்டு வரது. போன புள்ள வீடு வந்து சேரும் வரை வயத்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருக்கற மாதிரி இருக்க வேண்டியாதா இருக்கு. இதுல அவளைத் தனியா விட்டுட்டு வந்தா... எனக்கு நெஞ்சு வலியே வந்துடும்."

"அப்ப... அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சிடு. "

"படிக்கற புள்ளைக்குக் கல்யாணமா ? இதைச் சொன்னா உங்க அப்பா சண்டைக்குத் தான் வருவாரு. "

"எனக்கென்ன... இப்படியே இன்னும் கொஞ்ச நாள் நான் கடையில் சாப்பிட்டா... கண்டிப்பா எனக்கு அல்சர் வந்திடும். "

"ஏன் டா இப்படிப் பேசற. "

"பின் என்ன பேச... ஒழுங்கா ரூமில் இருந்தவனை அங்கிருந்து தனி வீட்டுக்கு வர வெச்சிட்டு... இப்ப சாப்பாட்டுக்குப் பிரச்சனை வர மாதிரி செஞ்சிட்டியே வசு. நான் வேற என்ன பண்றது. "

"அந்த இடம் வசதியா இல்ல டா கண்ணு. அதான்... அம்மா உன்னை இடம் மாறச் சொன்னேன். அம்மாவைத் தப்பா நினைக்காதே ஆதி."

"அப்ப... எனக்குச் சமையல் சொல்லிக் கொடு. நானே சமைச்சிக்கறேன். "

எதிர்புறம் சில நொடிகள் அமைதி நிலவியது. விமல் அமைதியின் காரணம் புரியாமல்... "அம்மா... நான் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி வெச்சிருக்கேன். நீ எப்படிச் சமைக்கறதுன்னு சொல்லு... நான் பார்த்துக்கறேன். " என்று மீண்டும் அழுத்தம் கொடுத்துப் பேசிட,

"அதெல்லாம் வேண்டாம். நீ அடுப்படி முன்ன கஷ்டப்படவா உன்னை வளர்த்தேன். இதுக்கு நான் ஒரு ஏற்பாடு பண்றேன். நீ சாப்பாடு பத்தி கவலைப்படாதே. அப்பா வெளிய போயிருக்காரு... அவரு வந்ததும் அவர் கிட்ட பேசிட்டு உனக்குக் கூப்பிடறேன். சரியா ? "

"ஏன் மா நான் சமைக்கக் கத்துக்கிட்டா என்ன தப்பு ? "

"டேய்... நீ ஆம்புள புள்ள... நீ எதுக்குச் சமைக்கக் கத்துக்கனும் சொல்லு. "

"அம்மா... இந்தக் காலத்தில் இப்படிப் பேசாதே. கேட்கறவங்க உன்னை மட்டும் இல்ல என்னையும் சேர்த்துத் தான் திட்டுவாங்க. வேலைக்கு வெளிய வந்த இடத்தில் தன் வேலையை, தன் தேவையைக் கூடச் செஞ்சிக்கத் தெரியாதவன்னு என்னை எல்லோரும் எப்படிக் கேலி செய்யறாங்க தெரியுமா ? "

"யார் என்ன சொன்னா என்ன ? எனக்கு என் புள்ள கஷ்டப்படக் கூடாது அவ்வளவு தான். விடு... இனி இதைப் பத்தி பேசாதே. நான் அப்பா வந்ததும் பேசிட்டு கூப்பிடறேன். "

"அப்பா கிட்ட என்ன பேச போற ? "

"என்னவோ பேசறேன். உனக்கென்ன ? "
"என்னவோ பண்ணு வசு... இப்ப நான் வெச்சிடவா ? " என்றான் விமல் சலிப்புடன்.

"சரி... சரி... காபி கீப்பி வாங்கிக் குடி. அம்மா அப்புறம் கூப்பிடறேன். " என்றபடியே இணைப்பைத் துண்டித்தார் வசுந்தரா.

"இந்த அம்மா இருக்கே... " என்று முணுமுணுத்தவன்... "ஐயோ ஒருவேளை அப்பா கிட்டப் பேசி எனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடுமோ ? " என்று வாய்விட்டு அலறினான்.

பின் நிதானித்து... "இல்ல பிரியாவுக்குக் கல்யாணம் முடிக்காம எனக்கு ஏற்பாடு பண்ண மாட்டாங்க. " என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டான் விமலாதித்தன்.

ஒரு சில வினாடியை மௌனத்தின் வழியாகக் கழித்தவன், "இந்த அம்மா கிட்டப் பேசி தலை வலியே வந்துடுச்சு. போய்... காபி போடுவோம். " என்றபடியே எழுந்து சமையலறையில் நுழைந்து.... அங்கிருந்த மின்னடுப்பில் பாலை வைத்துச் சூடாக்கினான். காபி தூளை டம்ளரில் போட்டு பாலை அதில் ஊற்றிக் கலக்கிக் கொண்டு அந்த வீட்டின் பால்கனிக்கு சென்று அங்குப் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து காபியைப் பருகத்தொடங்கினான்.

ஒரு மிடறு குடித்ததும்... "ம்... கசக்குதே. எத்தனை முறை போட்டாலும் சரியான ரேசியோவில் வரவே மாட்டேங்குது. " என்று குறைபட்டுக் கொண்ட அதைக் கண் மூடிக்கொண்டு முழுவதுமாகக் குடித்து முடித்தான் விமலாதித்தன்.

அந்தப் பால்கனிக்கு மேலிருந்த தளத்தின் பால்கனியில் நின்ற படியே தான் தயாரித்த தேநீரின் சுவையை ரசித்துப் பருகிக் கொண்டிருந்தாள் மனோன்மணி.

மாலை வேளை சூரியன் தன் மகளாம் புவி மகளைத் தனித்து விடுத்துச் செல்ல முயல... அவனைப் போக வேண்டாம் என்று தடுக்கத் தென்றல் என்னும் தன் தளிர் கரத்தை நீட்டினாள் புவி மகள். அவனோ... அவளின் அன்பு தழுவலை ஏற்றும் ஏற்காமலும் விடைபெற... இரவென்னும் மாயவன் புவி மகளைத் தன் வசப்படுத்திடக் குளுமை கொண்ட காதலுடன் வந்தான். கண் முன் விரிந்த இயற்கையின் இந்த அற்புத காட்சியை ரசித்த படியே இருவரும் அவரவர் இல்லத்தின் மேல் மாடத்தில் நின்றிருந்தனர்.



தொடரும்....
 
Top