கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலாய் ஒரு காதல் ! - 5

அத்தியாயம் - 5


பத்து நாட்கள் பணிச் சுமையில் கரைய... இன்றைக்குத் தான் சீக்கிரம் கிளம்பும் வாய்ப்பு விமலுக்குக் கிடைத்தது. அலுவலகத்தில் மேஜை மேல் அங்கங்கே போட்டிருக்கும் தன் உடைமைகள், கோப்புகள் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்த விமலை நெருங்கினான் சேகர்.

"என்ன மச்சி... பத்து நாளா உன்னைப் பார்க்கவே முடியல. பயங்கரப் பிஸி போல. " என்ற சேகரை ஏற இறங்கப் பார்த்த விமல்,

"உங்களுக்கு என்னப்பா... ஆபீஸ்குள்ளையே உட்கார்ந்துகிட்டு ஜாலியா வேலை பார்ப்பீங்க. நாங்க அப்படியா ? சைட்டில் கிடையா கிடக்கனும். அப்பதான் வேலை சரியா நடக்கும். "

"எது நாங்க ஜாலியா வேலை பார்க்கறோமா ? ஒரு பில் மிஸ்சான கூட மண்டை உடையுது. இதுல எங்க ஜாலியா இருக்கறது. இக்கரைக்கு அக்கரை எப்பவுமே பச்சையா தான் தெரியும் விமல். "

"அதுவும் சரிதான். " என்ற விமல் "உனக்கு வேலை முடிஞ்சுதா ? " என்றிட,

"ம்... முடிஞ்சுது. நீயும் கிளம்புறதை பார்த்தேன்... அதான் உன்னோட அப்படியே டின்னர் சாப்பிட போகலான்னு தோணிச்சு... வரியா விமல். டின்னர் போகலாம். "

"என்னடா... டின்னருக்கு கூப்பிடற ? என்ன விசேஷம். "

"விசேஷம் எல்லாம் எதுவுமில்ல... டெய்லி நாங்களே சமைக்கறதை சாப்பிட்டுச் சலிப்பா இருந்துச்சு. இன்னிக்குக் கொஞ்சம் வெரைட்டியா சாப்பிடலாமே நினைச்சேன். "

"சரி வா... டெய்லி நானும் தனியா தான் சாப்பிடறேன். இன்னிக்கு உன்னோட சேர்ந்து சாப்பிடறது நல்லா தான் இருக்கும். போகலாம்.... ஒரு ஐஞ்சு நிமிஷம். "

"நான் வெய்ட் பண்றேன். நீ பொறுமையா வா... " என்ற சேகர் காத்திருக்க... சில நிமிடங்களில் தன் பணிகளை முடித்துவிட்டு விமல் அவனோட கிளம்பினான்.

"சாப்பிட எங்க போகலாம் சேகர். "

"இங்க பக்கத்தில் ஒரு பார்ஸ்ட் புட் கடையிருக்கு. அங்க போகலாமா ? "

"காரம் அதிகமா இருக்குமா சேகர் ? "

"தெரியலடா... பசங்க நல்லா இருக்குன்னு தான் சொன்னாங்க. "

"சரி வா... போகலாம். " என்ற விமல் தன் வண்டியைக் கிளம்ப... சேகரும் அவன் வண்டியில் அமர்ந்து கொண்டான். அருகே இருந்த கடைக்குச் சென்ற இருவரும் இரவு உணவை ஆடர் செய்தனர். உணவு வரவும் அதை உண்ட படியே தங்கள் சம்பாஷனையைத் தொடர்ந்தனர்.

"நாம பேசினதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணைப் பார்த்தியா சேகர். "

"ம்... இன்னிக்கு கூட ஆடிட்டர் ஆபீஸ் போயிருந்தேன் விமல். நம்ம கம்பெனி அக்கவுண்ட்ஸ் பைல் பண்ற வரை அங்க வேலையிருக்கும். எப்படியும் இன்னும் ஒரு வாரத்தில் பைல் பண்ணிடுவோம். "

"அவ என்னைப் பத்தி ஏதாவது கேட்டாளா ? "

"உன்னைப் பத்தியா ? அவ என்னைப் பத்தியே கேட்க மாட்டா... அதுவுமில்லாம நீ என் நண்பன்னு நாம இன்னும் சொல்லலையே. "

"அப்படின்னா அவ அன்னிக்கு என்னை ஆபீஸில் பார்க்கலையா ? "

"பார்த்திருந்தா கேட்டிருப்பாளே ? " "ஆமா நீ அவளைப் பார்க்கல... "

"இல்லடா... பத்து நாளா வேலையே சரியா இருக்கு. நைட் வீட்டுக்கு போறதுக்கு ரொம்ப லேட்டாகுது. அதான் இன்னிக்குச் சீக்கிரம் கிளம்பினேன். வெய்ட் பண்ணியாவது அவளைப் பார்க்கனும். "

"ம்.. "

"வித்துக் கிட்ட அவளைப் பத்தி வேற எதுவும் தகவல் கேட்டியா சேகர் ? "

"அவளுக்குத் தெரிஞ்சதை அன்னிக்கே சொல்லிட்டா மச்சி. அதைத் தவிர அவளுக்கு வேற எதுவும் தெரியாது. "

"சரி.. " என்ற விமல் சாப்பிட்டு முடித்திருந்தான். சேகரும் சாப்பிட்டு முடிக்க இருவரும் கைகளைக் கழுவி கொண்டு தம் தம் வழியில் கிளம்பத் தயாராகி நின்றனர்.

"சரி விமல்... நான் கிளம்பறேன். நீ பார்த்து போ. அவளைப் பார்த்தா பேசு... இல்லன்னா போய் ரெஸ்ட் எடு. நாளைக்கு நான் ஆடிட்டர் ஆபீஸ் போவேன். அங்க வெச்சி வேணா நீ அவகிட்ட பேசு. தேவையில்லாம காத்திருக்காதே. "

"சரி டா... நாளைக்கு எனக்கும் ஆபீஸில் தான் வேலை. நாளைக்கு உன்னோட வந்தே அவளைப் பார்த்துக்கறேன். " என்றுவிட்டு தன் வண்டியைக் கிளம்பினான் விமலாதித்தன்.

இருவரும் புன்னகையுடன் விடைபெற்றுக் கிளம்பினர். இல்லம் வந்து சேர்வதற்குள் விமலுக்கு வயிற்று வலி வந்துவிட்டது. வண்டியை ஓட்ட முடியாமல் திணறியபடியே வந்தவன்... வண்டியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாகத் தன் இல்லம் சென்று மாத்திரை ஒன்றை எடுத்து வாயில் போட்டு தண்ணீரைக் குடித்தான்.

அரை மணி நேரம் கடுமையான வயிற்று வலி... அதன் பிறகு வலி சற்றே குறைந்தாலும் முழுமையாகக் குறையவில்லை. வேதனையுடன் முனகியபடியே படுக்கையில் கிடந்தான். இரவெல்லாம் வலியில் உழன்றது அவன் வயிறு.

பொழுது விடிய... தன் அன்னையை அலைபேசியில் அழைத்துத் தன் வேதனையைப் பகிர்ந்தான் விமல்.

"ஹலோ விமல்... என்னப்பா காலையிலேயே கூப்பிட்டிருக்க ? " என்ற கேள்வியோடு அவனின் அழைப்புக்குப் பதில் தந்தார் வசுந்தரா.

"அம்மா... நைட் எல்லாம் வயிறு செமையா வலிச்சுது. இப்பவும் பயங்கரமா எரியுது. " என்று வலி தந்த வேதனையில் விமல் பேச,

"ஐயோ... என்னடா கண்ணு... குரலே உடைஞ்சு போயிருக்கு. ரொம்ப முடியலையா ? "

"ஆமாம் அம்மா... ரொம்ப வலிக்குது. "

"டாக்டர் கிட்ட போனியா ? "

"பத்து நாளைக்கு முன்னாடி போயிருந்தேன். அப்ப ஒரு மாத்திரை எழுதி கொடுத்தாரு. அதைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கிட்டு தான் இருக்கேன். நேத்து நைட் கூடச் சாப்பிட்டேன்... ஆனா வலி குறையவே மாட்டேங்குது. "

"சரி... நீ இப்ப ஒருமுறை போய் டாக்டரை பாரு. "

"அம்மா... அவரு கடை சாப்பாட்டை அவாய்ட் பண்ண சொல்றாரு ம்மா... "

"..."

"அம்மா... இப்ப நான் டாக்டர் கிட்ட போகத் தான் போறேன். என்னால முடியல... ஆனா போயிட்டு வந்து சாப்பிடத் திரும்பவும் கடைக்குத் தான் போகனும். அதையே தொடர்ந்து சாப்பிட்டா... எப்படிச் சரியாகும் சொல்லு. "

"..."

"இரண்டு நாளைக்கு முன்னாடி யூடியூப் பார்த்து நானே சாப்பாடு வெச்சேன். என்ன தப்பு செஞ்சேன்னு தெரியல... சாப்பாடு தீஞ்சிப் போச்சு. நல்ல வேளை குக்கர் வெடிக்கல. "

"..."

"நீ ஒரு பத்து நாள் இங்க வந்து இரேன். நான் உன்கிட்ட இருந்து சமைக்கக் கத்துக்கறேன். "

"..."

"என்னம்மா நான் பேசிக்கிட்டே இருக்கேன்... நீ பதிலே சொல்ல மாட்டேங்கற ? "

"நீ முதலில் டாக்டரை போய்ப் பாரு விமல். நான் திருப்பவும் கூப்பிடறேன். " என்று கோவமாகக் கூறிய வசுந்தரா அழைப்பைச் சட்டெனத் துண்டித்துவிட்டார்.

"ஒரு பத்து நாள் இங்க வந்து இருந்தா என்னவாம் இந்த அம்மாவுக்கு. கொஞ்சம் கூட நம்ம மேல அக்கறை இல்லை. அந்தப் பிசாசு பத்து நாள் லீவ் போட மாட்டாளா என்ன ? " என்று முணுமுணுத்த விமல்... "ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்து பேசிக்கறேன். " என்றபடியே எழுந்து மருத்துவமனை செல்ல தயாரானான்.

ஒரு நேரம் கழித்து வசுந்தராவின் அழைப்பு அவன் கைப்பேசியை வந்தடைந்தது. அதை எடுத்துக் காதில் வைத்த விமல்... "சொல்லும்மா... " என்றிட,

"டாக்டரை போய்ப் பார்த்தியா ? " என்ற கேள்வியோடு எதிர் கொண்டார் வசுந்தரா.

"ம்... "

"டாக்டர் என்ன சொன்னாரு... "

"ஒன்னும் சொல்லலே... காரம் அதிகம் சேர்த்துக்க வேண்டான்னு சொன்னாரு. மருந்து கொடுத்திருக்காரு. சாப்பிடறதுக்கு முன்னாடி அதில் ஒரு மூடி குடிக்கச் சொல்லியிருக்காரு. "

"சரி... அதை மறக்காம குடி. "

"ம்... " "நீ எப்ப இங்க வர்ரே ? "

"இப்ப வர முடியாது விமல். "

"அம்மா... பிரியாவை பத்து நாள் லீவ் போட சொல்லும்மா. அவளையும் கூட்டிக்கிட்டே வா... வீடு நல்லா பெருசா தான் இருக்கு. டபுள் பெட்ரூம் தான். "

"அதுக்கில்ல விமல்... நம்ம சொந்த பந்த கல்யாணம் காது குத்துக் கோவில் விசேஷம் எல்லாம் வரிசையா இருக்கு. இப்ப அங்க கிளம்பி வந்தா இதை எல்லாம் யாரு பார்ப்பா... "

"அப்ப நான் எப்படிப் போனா என்ன ? அப்படின்னு நினைக்கறியாம்மா நீ ? "

"அம்மா அப்படி நினைப்பேனா கண்ணு. "

"..."

"அம்மா அப்பா கிட்ட பேசிட்டேன். உனக்குத் தினமும் சாப்பாடு வந்திடும். காலையில் டிப்பனும் மதிய சாப்பாடும் சேர்ந்து வரும். நீ அதை ஹாட் பேக்கில் போட்டு வெச்சி சாப்பிடு. இராத்திரிக்குத் தனியா சாப்பாடு வந்திடும். அதைச் சாப்பிட்டுக்கோ. உன் சாப்பாட்டுக்கு இனி தொந்தரவு இருக்காது. "

"யாரும்மா கொண்டு வந்து தருவா ? "

"எல்லாம் நமக்குச் செய்யக் கடமைபட்டவங்க தான். "

"கடமைப்பட்டவங்களா ? " எனக் கேட்டு வியந்த விமல்... "சரி சாப்பாட்டுச் செலவுக்குக் காசு எவ்வளவு கொடுக்கனும் ? என்று வசுந்தராவிடம் கேட்டான்.

"அதெல்லாம் உங்க அப்பா கொடுத்துப்பாரு. நீ ஒன்னும் கொடுக்க வேண்டாம். "

"அப்பாவா ? " "அப்ப அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சவங்களா ? "

"ம்... ஆமாம். இதுக்கு உங்க அப்பாவைச் சம்மதிக்க வெக்கறதுக்குள்ள... எனக்கு நாக்கு தள்ளிடுச்சு. " என்ற வசுந்தரா... "இப்ப நீ வீட்டுக்கு போயிட்டியா ? இல்ல ஹாஸ்பிட்டலில் தான் இருக்கியா ? " என்று கேட்க.

"இப்பதான் போயிக்கிட்டு இருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்தில் போயிடுவேன். " என்றான்.

"சரி.. அங்க இப்ப நீ சாப்பிடச் சாப்பாடு கொண்டு வந்திருப்பா... அதை வாங்கிச் சாப்பிட்டு... நல்லா ரெஸ்ட் எடு. இன்னிக்கு மதிய சாப்பாடு தர முடியாதாம்... அதுக்கு மட்டும் வெளிய வாங்கிகோ... நைட் சாப்பாடு கொடுத்திடுவா. அப்புறம் நாளையிலிருந்து மூனு வேளைக்கும் உனக்கு வீட்டுச் சாப்பாடு கிடைச்சிடும். அதுல ஏதாவது குறையிருந்தா என்கிட்ட சொல்லு... நான் பேசிக்கறேன். "

"..."

"அப்புறம் இங்க எல்லா வேலையும் கொஞ்சம் ஓஞ்சதும் அம்மா அங்க வரேன். வந்து ஒரு பத்து நாள் உன்னோட இருக்கேன். சரியா... "

"ம்.... "

"சரி விமல்... அம்மா வெச்சிடறேன். நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு. நான் சாயந்தரமா திரும்பவும் கூப்பிடறேன். " என்றபடியே தன் இணைப்புத் துண்டித்துக் கொண்டார் வசுந்தரா.

"இங்க அப்பாவுக்கு வேண்டியவங்க யார் இருக்காங்க ? தினமும் நமக்கு எப்படி அவங்க சமைச்சி தர முடியும். ஒரே குழப்பமா இருக்கே. " என்று நினைத்தபடியே தன் வண்டியை நிறுத்தினான் விமல்.

மருந்து சீட்டையும் மருந்துகள் அடங்கிய காகிதப் பையையும் எடுத்துக் கொண்டு தன் தளத்திற்குச் சென்றான். மின்தூக்கியில் இருந்து அவன் வெளியேற அவன் வீட்டு வாசலில் மனோன்மணி நின்றிருப்பதைக் கண்டு திகைத்தான். அவள் கையில் ஒரு பை வேறு இருக்க... அவசரமா எட்டு வைத்து தன் வீட்டை நெருங்கினான்.

அவன் வந்ததைக் கவனித்தவள்... ஒரு சிறிய புன்னகையுடன் அவனை எதிர்கொண்டாள்.

"ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தீங்களா ? " என்றவள் கேட்க... விமலுக்கு அதீத வியப்பு.

"இதுல இட்லி இருக்கும். சாம்பார் வெச்சிருக்கேன். மதியத்துக்குத் தயிர் சாதம் வெச்சிருக்கேன். சாப்பிட்டிடுங்க. நைட் டின்னர்... நான் வந்து சமைச்சி தரேன். " என்றபடியே ஒரு ஹாட் பேக் கேரியரை அவனிடம் நீட்டினாள்.

அதைத் தயக்கத்துடன் வாங்க தன் கைகளை நீட்டினான் விமல். அவளோ... "நல்ல வேளை அங்கிள் போன் பண்ணுபோது தான் ஆபீஸ் போகக் கிளம்பினேன். ஆபீஸ் போயிருந்தா... இன்னிக்கு உங்களுக்குச் சாப்பாடு கொடுத்திருக்க முடியாது. லைஞ் கொடுக்க முடியாதுன்னு தான் நினைச்சேன்... ஆனா நைட் எல்லாம் நீங்க அவதிப்பட்டதை ஆன்ட்டி பேசினதில் இருந்து தெரிஞ்சிக்கிட்டேன்... அதான் பர்மிஸன் போட்டுட்டுச் சமைச்சிட்டேன். உப்புக் கம்மியா தான் போட்டிருக்கேன்... உங்களுக்குத் தேவைப்பட்டா போட்டுக்கோங்க. அப்புறம்... இது என் நம்பர்... தேவைப்பட்டா கூப்பிடுங்க. நான் கிளம்பறேன். டைமாகிடுச்சு. " என்றுவிட்டு நகர....

"ஒரு... நிமிஷம்... என் நம்பர் வேண்டாமா ? " என்றான் விமல்.

"என்கிட்ட இருக்கு... " என்று மென்னகையுடன் கூறிவிட்டு நகர்ந்தாள் மனோன்மணி.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மூளையில் ஒரு மின்னல் மின்னியது. அவள் யார் என்பதை அது அவனுக்கு நினைவுபடுத்த... ஆச்சரியத்துடன் கலந்த குறும்பு புன்னகை முகத்தில் தோன்றியது. " டெம்பிள் பெல்லுன்னே சேவ் பண்ணிக்கவா ? " என்று பெருங்குரலில் கேட்டு அவளை நிறுத்தினான் விமல்.

மின்தூக்கியை நெருங்கியிருந்தவள் சட்டெனத் திரும்பி... "ஞாபகம் வந்திடுச்சா ... சந்தோஷம். " என்றுவிட்டு... மின்தூக்கியில் ஏறி மறைந்தாள்.

விமலாதித்தன் அவள் கொடுத்த உணவு பையுடன் தன் வீட்டிற்குள் சென்றான். அவள் குறித்த நினைவுகளை அசைபோட்ட படியே... டிப்பன் பாக்ஸை திறந்தான்.


தொடரும்.....
 
Top