கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதல்: சில குறிப்புகள் 1

Appusiva

Moderator
Staff member
KS-139
காதல் : சில குறிப்புகள்
அத்தியாயம் 1

அந்த மேத்தமேட்டிகல் அனலைஸிஸ் புத்தகத்துக்கு உயிர் இருந்தால் ‘அய்யோ அய்யோ’ வென கத்தியிருக்கும். அது ஏற்கனவே மிக பழையது. அப்பா சந்திரமோகனின் சேமிப்பில் இருந்து சுட்டது. அவனின் கோபமான தூக்கியெறிதல் இது இரண்டாவது தடவை. அப்படியே தலையில் கைவத்து டேபிளில் கவிழ்ந்து படுத்தான். கோபத்தில் அவனது முகத்தில் பொங்கிய வெப்பம் டேபிள் முழுக்க பரவியது.

“என்னடா அது சத்தம்....?” என்று உள்ளிருந்து கேட்டாள் அம்மா சாமுண்டீஸ்வரி.

“வந்து... அது ஒன்ணும் இல்லம்மா... புத்தகம் கீழ விழுந்துடுச்சி” என்றான் கணேஷ்பாபு. ஆனால் தலையை நிமிரவில்லை.

“தூறல் போடுதுடா..... கொஞ்சம் அந்த மொட்டைமாடில காயற துணியை எடுத்து வந்திடேன்.”

“ம்மா... படிக்க உட்கார்ந்தா நொய் நொய்னு... போம்மா... நீயே போ..”

“அடுப்பில பால் வச்சிருக்கேண்டா... கொஞ்சம் போயேன்..” என்று சாமுண்டீஸ்வரி சொல்லச்சொல்ல ‘சடசட’ வென்று இறங்கியது மழை. அடுப்பை நிறுத்திவிட்டு வேகமாக மாடி ஏற வந்த அவள், பாபு தலை சாய்ந்து படுத்திருப்பதை பார்த்தாள்.

“படிக்கிற மூஞ்சப்பாரு... சோம்பேறி..” என்று கத்தியவாறு வேகவேகமாக படியேறினாள். அப்படியே இருந்த அவன்மேல் சாரல் அடிக்க மெதுவாக சலிப்பாக எழுந்தவன், சட்டென்று ஞாபகம் வர, பதட்டமாகி ஓடி அந்த புத்தகத்தை எடுத்துப்பார்த்தான். அது வாசலின் ஒரு ஓரமாக கவிழ்ந்து கிடந்தது. கொஞ்சம் நனைந்துபோயிருக்கும் போல. பயம் பிடித்துக்கொண்டது. அதை டேபிளில் வைத்து ஒரு துணியால் மெதுவாக ஈரத்தை துடைத்தான். அப்பா பார்த்தால் ரணகளம்தான்.

துடைக்கும்போது அதனுள் நான்காக மடித்து வைத்திருந்த அந்த பேப்பர் நழுவி விழுந்தது. அவன் மனதில் இருந்த பயம் மறைந்து வெறுப்பு மீண்டும் பரவியது. அந்த தாளை எடுத்து பிரித்தான். ஓரங்களில் தண்ணீர் பட்டு சில வரிகள் கலங்கியிருந்தன. ஈரம் காரணமாக சில இடங்கள் ஊறிப்போயிருந்தது. பிரித்து மீண்டும் படித்தான்.

அன்புள்ள என்று எழுதி அதன் மேல் ‘அன்புள்ளபில்லா’ என திருத்தியிருந்தாள். திமிர். அடங்காத திமிர்.

‘உன்னை நினைத்து ஏங்கிப்போயிருப்பேன் என்று இருந்தாயா?’
( இருக்காதடி. யார் இருக்கச்சொன்னது... )

‘நீ செய்யும் வேலையெல்லாம் பொறுத்துப்போகும் அவசியமில்லை’
( பொறுத்துப்போவென்று நான் சொன்னேனா.. )

‘ நீ அவளோட பேசு... எவளோட வேணா பேசு... எனக்கு ஒண்ணும் ஆதங்கம் வராது ‘
( ஆனா கத்தமட்டும் தெரியுமா )

அதன் பின் வந்த வரிகளின் சூடு மறுபடி தாக்க, அவனுள் லேசான கலக்கம் வர ஆரம்பித்தது. முடிக்கும் சமயம்...

‘ நீதான் எப்பவும்னு இன்னிக்கு வரை நம்பினேன். இல்லையென தெளிவுபடுத்தியதற்கு நன்றி. பேருதவி...

உண்மையான தோழி
பர்வீன்பானு ‘

என்று முடித்திருந்தாள். அவனுக்கு அந்த ஒவ்வொரு வரிகளும் ஒரு புது அர்த்தத்தை கொடுத்தது. அவளின் சாதாரண சொல்கூட மிக கொடூரமான ஆயுதமாக தோன்றியது. இதுநாள் வரை இல்லாதபடி தோழி என்று எழுதி அதற்கு அடிக்கோடிட்டிருந்தது அவனை பார்த்து பரிகசித்து சிரித்தது. இதுவரை எழுதி அனுப்பிய வாழ்த்து அட்டைகளில் அவள் முழுபெயரையும் எழுதியதில்லை. அவனுக்கு கூப்பிட பிடித்தவகையில் பானு என்று மட்டும்தான் எழுதுவாள். அதுவும் அவனை ஆழம் பார்ப்பதாய் தோன்றியது.
எல்லாம் நேற்று அந்த நித்யாவால் வந்த வினை. கன்னத்தில் கை ஊன்றி அந்த தாளையே பார்த்துக்கொண்டிருந்தான் பாபு. இந்த கடிதம் எழுதும் யோசனையே அவனுடையதுதான்.

பானுவின் செல் ஒரு வாரமாக வேலை காட்டிவிட்டது. டிஸ்ப்லே ப்ராப்ளம். அவன்தான் சர்வீஸ் செய்ய ஒரு கடையில் குடுத்திருந்தான். ஆனால் மறுநாளே பானு புலம்ப ஆரம்பித்துவிட்டாள். தினமும் காலை ஒன்றும் மதியம் சிலவும், இரவில் வணக்கமும் செய்தாகவேண்டும்

அவளுக்கு. இரண்டு நாட்களில் அவள் மிகவும் டல் ஆக, பழைய காலம் போல லட்டர் எழுதிக்கொள்ளலாமாவென அவன் முதலில் கேட்டதற்கு சிரித்துவிட்டாள். ஆனால் முதல் கடிதத்தை அவன் கொடுக்க ஆசையாய் வாங்கியவள் மறுநாள் மிக பிரகாசமாக வந்தாள்.

“செமயா இருக்குடா.. இது...”

“என் ஐடியா இல்ல.. அப்படிதான் இருக்கும்..”

“அளக்காதே... நானும் நெறய முரளி படமெல்லாம் பாத்தாச்சு”

“சரி சரி எனக்கு லட்டர் எங்கே.. “

“போடா.. எழுத கூச்சமா இருக்கு”

“அட கழுத.. செல்லுல மட்டும் அப்படி மெசேஜ் போடற? “

“அது வேறப்பா.. இது ஏதோ நீ என் பக்கத்தில் உட்கார்ந்து பேசற மாதிரி ... ரொம்ப பண்ணுதுப்பா.. நைட்டெல்லாம் தூங்கவேயில்ல தெரியுமா..”

“அதான் அந்த காலத்தில உருகிஉருகி எழுதுவாங்க போல..”

அவள் மழுப்பிச்சென்றாலும் அன்று வகுப்பு முடிந்து போகும்போது வந்து அவன் பேகில் லட்டரை வைத்துவிட்டுச்சென்றாள். ஒரு பக்கமாக இருந்த கடிதம் தொடர்ந்த நாட்களில் இரண்டு மூன்று பக்கங்களாக ஆனது. உருகி உருகி எழுதியிருந்தாள். அவளுக்கு இப்படியெல்லாம் எழுத வரும் என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. செல் கடையில் நேற்றுமுன்தினம் இரவு வரச்சொல்லி சரி செய்து கொடுத்தார்கள். இரவாகிவிட்டதால், வீட்டுக்கு எடுத்து வந்து விட்டான்.

ஒரு எட்டு மணி அளவில் அந்த செல் மணியடிக்க ஏதோ ஞாபகத்தில் ஆன் செய்துவிட்டான். அது அவளது வகுப்புத்தோழி நித்யா.

“ பானு.. எங்கடி இருக்க... ”

“வந்து...நீங்க யாருங்க?” என்றான் பாபு.

“சார் ..நான் பானு ஃப்ரெண்ட் நித்யா.. பானுகிட்ட கொஞ்சம் தரீங்களா”

“அது வந்துங்க.. நானும் பானு ஃப்ரெண்ட்தான். செல் ரிப்பேர்னு வாங்கி ... எங்கிட்ட இருக்கு. நாளைக்கு நீங்க பண்ணுங்க.. “

“ஓ.. சாரிங்க.. நீங்க பாபுவா...”
அவனுக்கு திக்கென்றது. இந்த குட்டி எல்லாரிடமும் உளறி வைத்திருக்குமோவென கோபம் வந்தது. எனினும் லேசான அசட்டு சிரிப்புடன் பேசி சமாளித்து வைத்தான். அன்று இரவு படுக்கும்போது பத்துமணி அளவில் செல்லை ஆன் செய்து பார்க்க, சிலர் அனுப்பிய மெசேஜ்கள் கண்ணில் பட்டது. அவனின் மெசேஜ்களை அழகாக டெலீட் செய்து வைத்திருந்தாள். நித்யா வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

-ஹாய் பாபு... தூங்கிட்டீங்களா -

என்ன சொல்வது. சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் பார்க்க, அவன் பார்த்ததை நீல வரிகள் காட்டியிருக்குமேவென்று தோன்ற,

- இல்லங்க.. இனிதான் -

- ஓ.. நீங்க நல்லா கவிதை எழுதுவீங்கன்னு பானு சொல்லியிருக்கா.. அது எனக்கும் பிடிக்கும் -
என்று அவள் ஆரம்பிக்க, முடிக்க இயலாதபடி ஒரு இருபது நிமிடங்களுக்கு அந்த உரையாடல் நீண்டுவிட்டது.

நேற்று காலை கல்லூரிக்கு சென்றவுடன் பானுவின் வகுப்பை தேடிச்சென்று செல்லை ஒப்படைத்தான். அவள் இயற்பியல் துறை. அப்போது அவளின் அந்த நான்கு பக்க கடிதம் பரிசாக கிடைத்தது. உணர்வு சொட்டச்சொட்ட எழுதப்பட்ட கடிதம். அவன் ரசித்து ரசித்து படித்தான். இனி அவளிடம் இருந்து, அவள் நினைத்தால்கூட இதுபோல எழுதமுடியாதென தோன்றியது. நேற்று அவனுக்கு கெமிஸ்ட்ரி லேப் ப்ராக்டிகல் இருந்ததால் வெளிவர தாமதமாகிவிட்டது. வாசலில் இருந்த லேப் அட்டண்டர் கூப்பிட்டார்.

“இந்தா பாபு.. உன்ட்ட கொடுக்கச்சொல்லி பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் வந்துட்டு போச்சுப்பா..”

அது அப்பாவின் அலமாரியில் இருந்து எடுத்து பானுவுக்கு கொடுத்த மேத்தமேட்டிகல் அனலைஸிஸ் புத்தகம். அவளுக்கு மிகவும் உதவியாக இருப்பதாக சொல்லியிருந்தாள். நடந்துகொண்டே அவன் பிரிக்க அதனுள் அந்த கடிதம். எடுத்து படித்தவனுக்கு உலகமே இருண்டது போலிருந்தது.

*************

இன்று கொஞ்சம் லேட்தான் போலிருக்கிறது. எப்போதும் சரியாக வந்துவிடுவாளே. என் மனதில் லேசான பயம் பரவியது. பெண் பார்க்க வருவதாய் அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டது நடந்துவிடுமாவென தோன்றியது. ஒரு ஓரமாக ஒதுங்கி ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன். அவளுக்கு பிடிக்காதுதான். இன்னும் சில நாளில் இதை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிடவேண்டும். பாதி சிகரெட் இருக்கும்போது தூரத்தே அவள் வருவதுபோல் தோன்றியது. சட்டென்று அதை கீழே போட்டுவிட்டு கொஞ்சம் முன்னால்போய் நின்றுகொண்டேன்.
இதோ அவளின் சைக்கிள் வருகிறது. அதே வேகம். அதே குனிந்த தலை. இன்று பச்சை நிற புடவை. அழகுதான். இதோ பக்கமாய்... அட. இவளுக்கு இதே வேலை. என்னை தாண்டுபோது மட்டும் அவளின் சைக்கிள் எப்படி இவ்வளவு வேகமாக போகும். வேண்டுமென்றே வேகத்தை அதிகரிக்கிறாள் என்று நினைக்கிறேன். ஒரு மின்னல்போல. ஆனாலும் கடக்கும் அந்த ஒரு நொடியின் கடைசி துளியில் அவளது ஓரப்பார்வை என்னை தடவிச்சென்றதை உணர்ந்துகொண்டேன்.

என் டிவிஎஸ் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். அவளின் வேகத்துக்கு இந்த வண்டிகூட பிடிக்கமுடியாது. ஒரு நாள் நானும் சைக்கிள் எடுத்து வந்து அவளுடன் போட்டிபோட வேண்டும்.
லைப்ரரிக்குள் நுழைந்து என் சீட்டில் அமர்ந்தேன். முதல் வேலையாக அந்த பழைய லெட்ஜரை எடுத்து அவளின் முதல் கையெழுத்தை எப்போதும்போல பார்த்தேன். அழகான, குண்டுகுண்டான எழுத்து. அழகிதான் அவள். அவளின் கையெழுத்தைப்போல.

“என்ன மோகன் சார்.... வந்தாச்சா?” என்றார் மாணிக்கவாசகம். அவர் இந்த லைப்ரரியின் புரவலர். நல்ல சொத்து உள்ளவர். இவரைப்போல இருப்பவர்களுக்கு படிப்பதிலும் ஆர்வம் இருக்குமாவென அடிக்கடி எனக்கு தோன்றுவதுண்டு.

“வாங்க சார். ..உட்காருங்க”

“உங்களை பார்த்தா... மணி பாக்க தேவையில்ல... அட்டகாசமான டைம் மேனேஜ்மெண்ட்”

“அதென்ன சார் பெரிய விஷயம். வேலையில் ஆர்வமிருந்தா இதெல்லாம் பழகிடபோகுது..” என்றபடி, நேற்று பதிவிட வேண்டிய புத்தகங்களை டேபிள் மேல் எடுத்து வைத்தேன்.

“அந்த அர்பணிப்புதான் இப்ப குறையுது சார். நானெல்லாம் பாருங்க.. வெறும் ஆளாதான் வந்தேன். நல்லா சம்பாதிச்சேன். பசங்களுக்கு செட்டில் பண்ணினேன். பணம் போதும்னு தோணுச்சு. எனக்கு பிடிச்ச புத்தகங்களை அழகா படிச்சு, நிம்மதியா வாழறேன். எல்லாத்திலயும் ஒரு ஆழமான ஆர்வம், அர்பணிப்புன்னு சொன்னேனில்லையா... அது இருக்க நிம்மதியா போகுது. இப்ப வர ஜெனெரேஷன் பாருங்க. அவசரம்... அவசரம்... எல்லாம் உடனே வேணும். ஆனா உழைக்க சோம்பேறித்தனம்.”

“எல்லா காலத்திலயும் இந்த வசனம் மாறாது சார்..” என்றபடி சிரித்தேன்.

“உங்களுக்கு என்ன வயசாகுது மோகன் சார்?”

“இருபதெட்டு சார் . வர ஆகஸ்டு முடிஞ்சா இருபத்தொன்பது”

“சரியான நேரம்தான்... கல்யாணத்துக்கு ஏதும் ஸ்டெப் எடுக்கலியா?”

“அது வந்து பாத்துட்டிருக்காங்க சார்...”

“ஒண்ணு சொல்லவா... எனக்கு ஒரு பொண்ணு இருந்தா உங்களுக்கு கட்டிகுடுத்து மருமகனா ஆக்கிக்குவேன். ஹா...ஹா...”
நான் வெட்கமாய் சிரித்து வைத்தேன்.

“நிஜமாவே சொல்றேன் மோகன் சார். அமைதி... அடக்கம்.. வேலையில் கவனம்.. வரப்போற பொண்ணு குடுத்து வச்சிருக்கணும்”

“நன்றி சார்..”

“ஜாதிலாம் பாப்பீங்களா.... இல்லன்னா நல்ல பொண்ணா கிடைச்சா நான் சொல்லவா...”

“சொல்லுங்க சார்... அம்மாட்ட பேசி சொல்றேன்” என்று சொல்லிவிட்டு பதிவுகளில் கவனம் செலுத்துவதாக தலைகுனிந்து கொண்டேன். அவர் அன்றைய நாளிதழ்களை வரிசையாக எடுத்துவைத்துக்கொண்டு வரிவிடாமல் படிக்க ஆரம்பித்தார்.

என் மனதில் விஜியின் முகம் மின்னலாய் வந்து போனது. அவளிடம் விரும்புவதாய் எப்படி சொல்ல. அல்லது இவர் போன்ற பெரியவர்களை கூட கூட்டிச்சென்று பெண் கேட்டுவிடலாமா.. அவள் மனதில் என்ன இருப்பது என்று தெரியாமல் எப்படி இதை முடிவெடுப்பது என்று குழப்பமாக இருந்தது.
ஆனாலும் அவளின் அந்த பார்வையின் வீச்சு... ஒரு நொடியானாலும் லேசாக அந்த கருவிழிகள் மின்னல்போல என்புறம் ஒருமுறை திரும்பிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல திரும்பிக்கொள்வது, அதுவரை பதட்டமாக தெரியும் அவள் முகம், அந்த கணத்திற்க்கு பின் குடிகொள்ளும் ஆழ்ந்த அமைதி, இன்னும் சில நாளில் அவளிடம் பேசியே ஆகவேண்டும் என்று மனதில் புயலாய் உருவெடுக்க ஆரம்பித்தது.

...தொடரும்
 
Top