கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதல்: சில குறிப்புகள் 2

Appusiva

Moderator
Staff member
அத்தியாயம் 2
முதன்முதலாய் விஜியை பார்த்த ஞாபகம் எனக்கு மறுபடி அலைமோதியது. விடுமுறை நாட்களில் படிக்க புத்தகங்களை எடுத்துப்போவதும் பின் மறந்து வந்துவிடுவதுமாய் இருப்பேன். அப்படியே ஒரு இருபது அளவுக்கு சேர்ந்துவிட அன்று காலை ஒரு பழைய பேக்கில் போட்டு எடுத்துப்போனேன். லைப்ரரி வாசலில் இறங்கி வண்டியை நிறுத்தி பேக்கை எடுக்க அது கனம் தாங்காமல் கீழ் கிழிந்து படபடவென்று புத்தகங்கள் கொட்டிவிட்டது. சாலையில் சரிந்து சிதறிய புத்தகங்களை பார்க்க மனம் பதட்டமாகிவிட்டது. ஆனால் கடந்து சென்ற அனைவரும் ஏதோ அதிசயத்தை கண்டதுபோல் திரும்பிதிரும்பி பார்த்துச்செல்ல, நான் மெதுவாக பாதி எடுத்து கைகளில் அடுக்கினேன். அடுத்தது எடுக்க குனிய, கைகளில் அடுக்கியிருந்த புத்தகங்கள் ஏதோ சீட்டுக்கட்டுபோல் மறுபடி சரிய , வெலவெலத்துப்போய் இடுப்பில் கை ஊன்றி அப்படியே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தபோது... அவள் வந்தாள்.
வேகமாக சைக்கிளை நிறுத்தியவள், பக்கம் வந்து அந்த புத்தகங்கள் எடுத்து அடுக்கி உதவினாள். நான் ஓரளவு எடுத்துக்கொண்டு லைப்ரரி முன் டேபிளில் வைத்துவிட்டு திரும்ப, அவள் கையில் மீதமுள்ள புத்தகங்களை எடுத்து வந்தாள். ஒரு வார்த்தை என்றாலும் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் அவள் முகத்தில் வழிந்த புன்னகையின் சுவடுகள் மாறாமல் அப்படியே இருந்தது. அவளுக்கு ஒரு இருபதிலிருந்து இருபத்தைந்து வயதிருக்கும் என்று தோன்றியது.
“ரொம்ப நன்றிங்க....”
“ம்..ம்..பரவால்லிங்க..” முதல் வார்த்தைகள் அவளிடமிருந்து.
“எல்லாரும் வேடிக்கை பார்க்க... நீங்க வந்து.... நல்ல குணம்ங்க உங்களுக்கு.. “
அவள் முகத்தில் இருந்த புன்னகை மட்டும் மெல்ல அதிகமானது.
“அடுத்த தடவை நல்ல பையில் போட்டு எடுத்துவாங்க...” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு வேகமாக பறந்துவிட்டாள்.
அன்று எனக்கு வேலையே ஓடவில்லை. இதுவரை இதுபோன்ற உணர்வுகளின் பிடியில் விழாமல் இருந்ததோ என்னவோ, ஒரு மாதிரியான கதம்பமான இனம்புரியாத அந்த உணர்வு மனதின் அனைத்து பகுதிகளிலும் ஆக்ரமித்தது. எடுத்து வந்த புத்தகங்களை அடுக்க நினைத்து மதியம்வரை டேபிளின் இந்தபக்கமும் அந்த பக்கமுமாக வைத்துக்கொண்டிருந்தேன். என் கையெழுத்தை தப்புத்தப்பாக போட்டேன்.
மதியம் டீ சாப்பிட போய் வந்தபிறகு அன்று சாயந்திரம் டீகடை ரங்கன்,
“என்னண்ணே குழப்பமா இருக்கீங்க... டீ வாங்கி சாப்பிடாம வச்சுட்டு, காசு மட்டும் கொடுத்துட்டு போயிட்டீங்க?” என்றபோது என் மூளையின் குழப்ப சூழ்நிலை புரிந்தது. அன்றிரவு படிக்கும்போது அவள் கையில் எடுத்துவந்த புத்தகங்களை திரும்ப எடுத்துப்பார்த்தேன். அவற்றை ஏன் திரும்ப வீட்டுக்கு கொண்டுவந்தேன் என புரியவில்லை. பலதடவை படித்த டால்ஸ்டாயின் ‘இளமைப்பிராயத்திலே’ கண்ணை உறுத்தியது. அதை எடுத்து புரட்டினேன். அதன் ஒவ்வொரு வரிகளும், நான் சாதரணமாக கடந்து சென்ற அனைத்தும் இப்போது ஒரு புதுவித அர்த்தத்தை கொடுத்தது. மிக எளிதாக உள்வாங்க முடிந்தது. இந்த உணர்வு பல ஆண்டுகளாக மனித மனதை தொடர்ந்து வந்துகொண்டிருப்பதும், மிக தாமதமாக என்னை கண்டடைந்து இப்போது உருண்டு திரள்வதும் புரிந்தது.
தூக்கத்தில் அவள் முகம் பலதடவை திரும்பதிரும்ப வந்து அந்த மெல்லிய புன்னகையை என்மேல் வீசி எறிந்துகொண்டே இருந்தது. இவ்வளவு அழகாக கூட சிரிக்கமுடியுமா என்ன. அவள் சிரிக்கும்போது அந்த கன்னத்து பக்கத்தில் ததும்பும் ஒரு குழிபோன்ற ...அட என் கண்கள் ஒரு நொடியில் இவ்வளவு கவனித்ததை இப்போதுதான் உணர்கிறேன்.
மறுநாள் கண்ணாடியில் பார்த்தபோது, என் முகம் மிக பிரகாசமாக இருப்பதாகவும், ஒரு புதுவிதமான ஒளி மின்னுவதாகவும் தோன்றியது. அழகாக ஷேவ் செய்தேன். மிகப்பொறுமையாக பவுடர் போட்டேன். இருப்பதில் மெல்லிய நிறமான சட்டையை இன் செய்தேன். லேசான தொப்பை விழ ஆரம்பித்துவிட்டது. சரி செய்யவேண்டும். மறுபடி புத்தகங்களை நிறைய எடுத்துபோய் கொட்டிவிட்டு அவள் திரும்ப வந்து எடுத்துத்தருவாளா என காத்திருக்கத்தோன்றியது.
“யாராவது பெரிய அதிகாரி வராங்களா மோகன்?” என்று அம்மா கேட்க,
“ஏம்மா ...? “ என்றேன்.
“இல்ல... இன்னிக்கு கொஞ்சம் நீட்டா போறியேன்னு கேட்டேன்...”
கொஞ்சம் வெட்கமாக ஆகிவிட்டது எனக்கு.
“அதில்லமா... சும்மாதான்”
“நல்லாருக்குபா... இனிமே இதுபோலவே போ”
சந்தோஷமாக கிளம்பினேன். லைப்ரரியில் கூட்டும் அக்கா அழகாக சுத்தம் பண்ணி வைத்திருந்தார்கள். சீட்டில் உட்கார கொஞ்சம் கெத்தாக இருந்தது. ஏதோ சாதித்த உணர்வு தோன்றியது. ஆனால் கொஞ்சம் யோசிக்க எப்போதும் போன்ற ஒரு சாதாரண நாள் எப்படி இவ்வளவு அழகாக மாறுகிறது என்ற அதிசயம் பிடிபடவில்லை. அவள் பெயரைக்கூட அப்போது அறிந்திருக்கவில்லை. என்னவாக இருக்கும். அழகாக இருக்கவேண்டும். அல்லது அவள் பெயர் எதுவாக இருந்தாலும் அது அழகாகதான் இருக்கும். நல்ல நாவல்களாக படிக்க மீண்டும் ஆசை ஏற்பட்டது. கொஞ்சம் சோம்பலாக இருப்பதாக மனதில் தோன்றியது. ஆனால் கவனித்துப்பார்க்க, எப்போதும் இல்லாதது போல என் வேலைகளை மிக விரைவாக முடித்துக்கொண்டிருப்பதும் தெரிந்தது. என்ன விதமான குழப்பமான மனநிலை. நான் செல்லும் வேகத்துக்கு என் மனம் ஓடவில்லையா. அல்லது இந்த கடிகாரங்கள் மிக மெதுவாக ஓட ஆரம்பித்துவிட்டதா.
“ இது என்ன சுரேஷ், புது அப்ளிகேஷனா...”
“ஆமா சார். காலைல நீங்க வரதுக்கு முன்ன ஒரு பொண்ணு வந்து குடுத்துட்டு போச்சு. அரைமணி ஆகும்னேன். சரி லீவ் நாளில் வந்து ஜாயிண்ட் பண்ணிக்கறேன்னு சொல்லிப்போச்சு.” என்றான் சுரேஷ். நல்ல அட்டண்டர்.
“ஏதோ பேப்பர்ல எழுதிருக்குபா... நம்ம படிவம் குடுத்தியா...”
“ஆச்சு சார். எடுத்துப்போச்சு.”
“தெரிஞ்சவங்க ரெண்டுபேர், இல்லண்ணா ஏற்கனவே உறுப்பினர் யாராவது அறிமுக கையெழுத்து போடணும்னும்னு சொன்னியா..”
“அதெல்லாம் ஆச்சு. இங்க லைப்ரரி இருக்கறதே தெரியாதாம். நேத்துதான் பாத்துச்சாம். சண்டே வொர்க்கிங் டே தான். வாங்கனு சொன்னேன்.”
“ குட்... பாத்துக்கலாம் விடு..”
அன்று சாயந்திரம் வரை எப்படி போனதென்றே தெரியவில்லை. ஒருவழியாக முடித்து வெளியேறியபின் சுரேஷ் கதவை பூட்ட, நான் வாசலில் இருந்த பெட்டிக்கடையில் ஒரு தம் பத்தவைத்து நின்று கொண்டிருந்தேன். ஒரு நிமிடம்தான். தூரத்தில் வேகமாக வந்த அந்த சைக்கிள் பார்க்க பதட்டமாகிவிட்டது. அது... அவளே தான். சட்டென்று சிகரெட்டை கீழே போட்டுவிட்டு கைகளை கட்டிக்கொண்டேன். நல்லவன் போல. அவள், என்புறம் திரும்பவேயில்லை. நான் இருந்த இடம் சற்று மறைவாய் இருந்தது. ஆனால் லைப்ரரி அருகில் வரும்போது அவள் சற்று வேகத்தை குறைத்தது போலிருந்தது. மின்னல் போல ஒரு நொடி அவள் பார்வை லைப்ரரி பக்கம் திரும்பி பின் வேகமெடுத்தாள். அந்த நேரம் அவள் முகத்தில் தெரிந்த அந்த உணர்வு ஏமாற்றமா, அல்லது சலிப்பா என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் அந்த சிறு மாறுதல் எனக்கு பிடித்தார்போல இருந்தது.
“சா......ர்.......” என்று என்னை சுரண்டிக்கொண்டிருந்தான் சுரேஷ்.
“என்ன... ஏன் கத்தற”
“எவ்ளோ நேரம் கூப்பிடறேன். ஏதோ சிந்தனையிலே மூழ்கிட்டிங்க போல. இந்தாங்க சாவி...”
“ஓ.. சரி சரி... வீட்ல ஒரு பிரச்சினைபா... அதான் யோசனை.”
“தோ இப்ப போனது இல்ல ஒரு அக்கா... அதான் காலைல அப்ளிகேஷன் குடுத்துபோச்சு...”
“எது... இந்த் சைக்கிள்ல போச்சே ... அதுவா...”
“ஆமா சார். ஏதோ ஸ்கூல்ல வொர்க் பண்ணுது போல. இந்த நேரம்தான் முடியுமாம். அதான் சண்டே வரச்சொன்னேன்...”
எனக்கு கிடுகிடுவென்று கால்கள் நடுங்க ஆரம்பித்தன. ஏதோ மயக்கம் வருவது போல் இருந்தது.
“சுரேஷ் ... ஒரு நிமிஷம் கதவை திறவேன்”
“ஏன் சார்... ஏதாவது மறந்திட்டீங்களா...”
“வந்து .. ஆமாப்பா.. வண்டி சாவி உள்ளயே விட்டுட்டேன் போல”
அவன் கதவைத்திறந்தான். உள் டேபிளில் அவனை தேடச்சொல்லிவிட்டு, நான் அந்த அப்ளிகேஷன் இருந்த ஃபைலை எடுத்து என் பேகில் போட்டுக்கொண்டேன்.
“ சார்... இங்கல்லாம் சாவி இல்ல...”
“கிடைச்சிருச்சி....நீ வா”
“எங்க இருந்தது சார்..”
“வந்து... வெளிய வந்தவுடனே வண்டியில போட்டுட்டேன். மறந்துட்டேன்”
அவன் என்னைப்பார்த்த பார்வை ‘நேத்து வரை நல்லாதானே இருந்தார்’ என்று எதிரொலித்தது.
அவன் செல்லும்வரை காத்திருந்து, அந்த ஃபைலை பிரித்து அந்த பேப்பரை எடுத்தேன்.
அழகான எழுத்து. குண்டுகுண்டாகவும் இல்லாமல், குழந்தைத்தனமாகவும் இல்லாமல் ஒரு மாதிரியான மெச்சூரிட்டியான எழுத்து. பெயரை படித்தேன். அழகு. அழகாய் இல்லாமல் இருக்குமா. வித்தியாசமான ஆனால் அவளுக்கு பொருத்தமான கம்பீரமான பெயர். இரண்டு தெரு தள்ளி இருக்கும் தனியார் பள்ளியில் வேலைபோல. வயது இருபத்து நான்கு. விஜி அறிமுகமானது இப்படித்தான்.
*************
“ஏன்.. என்னவாம் தொரைக்கு... ஏன் சாப்பாடு வேணாமாம்?” என்றார் அப்பா.
அம்மா கிச்சனில் பாத்திரத்தை போட்டு உடைப்பது தெரிந்தது. கொஞ்சம் பயமும் வந்தது பாபுவுக்கு. அப்பா கோபக்காரர் இல்லை. அதே சமயம் அவரது மௌனமான பார்வையின் வீரியம் பல சமயம் பாபுவுக்கு கிலியேற்படுத்தும். அம்மா உள்ளிருந்து சத்தமிட்டாள்.
“தெரியல சாமி.. உனக்கும் வந்துரும் சிலசமயம். இப்போ அவனுக்கும் இதுபோல ஏதோ வந்துருது. நேத்தில இருந்து பேயடிச்சா போல இருக்கான். கூடமாட ஒரு வேலை எடுத்துக்கறதில்ல. படிக்கறேன்னு சொல்லி செவுத்தையே நாள்முழுக்க பாத்துட்டு உட்கார்ந்திருக்கிறது. நீயே கேளுப்பா உன் புள்ளைய... வாய் தொறக்கறானா பாக்கலாம்.”
அப்பா நிமிர்ந்து அவனை பார்த்தார். லேசாக தலைகுனிந்து நின்றான் பாபு.
“காலேஜ்ல ஏதாவது பிரச்சினையா.. ஏதாவது சார் திட்டிட்டாங்களா”
“ஆமாப்பா... ஒரு ரெகார்ட் நோட் முடிக்க சொன்னாங்க... பாதிதான் முடிஞ்சது. திட்டுவாங்கன்னு கொஞ்சம் டல்லாயிட்டேன்”
வேகமாக உள்ளிருந்து வந்த சாமுண்டீஸ்வரி கையில் இருந்த கரண்டியை கதாயுதம்போல் தோளில் வைத்துக்கொண்டு நின்றாள்.
“சரிதான்... அவன் என்ன சொல்றதுன்னு யோசிக்கறான்.. நீங்க எடுத்துக்கொடுக்க ... ஆமான்றான். நல்லாருக்கு நீங்க விசாரிக்கற லட்சணம்..”
“ம்மா... நிஜம்தான்... நான் பொய் சொல்றதில்ல” என்று உயர்ந்த பாபுவின் குரல், அப்பாவின் பார்வையின் கனத்தில் தணிந்து முடிந்தது. இதற்குமேல் இருந்தால் உளறிக்கொட்டிவிடுவோமென்ற பயம் வர வேகமாக கிளம்பினான் பாபு.
காலேஜில் உள்ளே நுழைய கொஞ்சம் பயமும் வந்தது. பானு ஏதேனும் கேள்வி கேட்க என்ன சொல்வது என்று மனதில் உருப்போட்டுக்கொண்டே வகுப்பில் நுழைந்தான். அன்று வகுப்பு அமைதியாக இருப்பது போல் இருந்தது. இன்று முதலில் கணித வகுப்பு. தங்கப்பன் சார். செல்ஃபோனை பார்த்தால் பிடுங்கிக்கொண்டு விடுவார். கவனமாக ஆஃப் செய்தான்.
கணித பாடத்தை இயற்பியல் வேதியியல் துறை மாணவர்களுக்கு கம்பைண்ட் கிளாஸ் ஆக எடுத்து விடுவார்கள். பானுவுடன் அமரும் ஒரே நேரம். பானு பின்னால்தான் உட்காருவாள். திரும்பி பார்க்கலாமாவென தோன்றியது. மெதுவாக பேனாவை கீழே போட்டான். அதை எடுப்பதாய் குனிந்து வேகமாக திரும்பிப்பார்த்தான். அவள் இல்லை. வரவில்லை போல. ஆனால் நித்யா இவனை பார்த்து புன்முறுவல் செய்ய, ஒரு அசட்டு சிரிப்புடன் திரும்பிக்கொண்டான். இந்த குரங்கால் வந்த வினை என்று மனதில் வெறுப்பு வந்தது.
வகுப்பு ஆரம்பித்தும் அவள் வரவில்லை. ‘வரட்டும், வகுப்பு முடிந்து அவள் வெளியே போகும்போது பிடித்துவிட வேண்டும். சரியாக வாங்குவாங்கு என வாங்கிவிடவேண்டும்...’ என்றெல்லாம் மனதில் நினைத்துக்கொண்டான். அரைமணி நேர வகுப்பு. அவள் வரவேயில்லை. தான் இருப்பதால் இந்த வகுப்பையே அவாய்ட் பண்ணும் அளவுக்கு வந்துவிட்டாளா என்பதாய் அவனுக்கு தோன்றியது. தங்கப்பன் முடித்துவிடுவார் போல தோன்றியது. முதல்முதலாய் அவர் இன்னும் சிறிது நேரம் எடுக்கலாமே என்று அவனுக்கு ஏக்கமாகியது. வகுப்பு முடிந்தும் அவள் வரவில்லை. இயற்பியல் மாணவர்கள் கிளம்ப, கடைசியாக சென்ற அந்த பெண்ணை நிறுத்தினான் பாபு.
“சிஸ்டர்... ஒரு நிமிஷம்...”
“சொல்லுங்கண்ணா...”
“வந்து பர்வீன் வரலையா....?”
“அவளுக்கு சரியான ஜுரமாம்ணா.. காலைல ஃபோன் செய்தா... ரெண்டு நாள் லீவாம்...ஏதாவது சொல்லணுமா?”
“ஒண்ணுமில்ல சிஸ்டர்... சும்மாதான் கேட்டேன்”
“பரவால்ல ... சொல்லுங்க... ஈவ்னிங் ஃபோன் பண்ணுவா... சொல்லிடுறேன்”
“ஃபோன்... அதான்பா... அது ரிப்பேர் பண்ணினது சார்ஜ் குடுக்கணும்... நான் அப்புறம் வாங்கிக்கறேன்... அவ்ளோதான்... நான் பேசிக்கறேன்.”
“அவசரம்னா நான் வேணா தரவா... அவகிட்ட நான் வாங்கிக்கறேன்”
“அய்யோ இல்லபா... ஒண்ணும் அவசரமில்ல ... நான் மெதுவா வாங்கிக்கறேன்”
“சரிண்ணா”
அவள் சென்றுவிட பாபுவின் மனதில் பாரமாய் ஒரு வித உணர்வு பரவியது. இதுநாள் வரை உடல் சரியில்லை, காய்ச்சல் அது இதுவென்று அவள் இருந்ததே இல்லை. முதல்முறை. தேவதைக்கு கூட காய்ச்சல் வருமா. அதற்கு காரணம் தான்தான் என்ற எண்ணமே அவனுக்கு இனம் புரியா வலியை ஏற்படுத்தியது. அவள் வீடு தெரியும். ஆனால் இப்போது போக பயமாய் இருந்தது. காலேஜ் முடிந்து அனைவரும் சென்றுவிட, பாபு அப்படியே அசந்துபோய் அங்கிருந்த புல்தரையில் படுத்தான். லேசாக இருட்டு கட்ட ஆரம்பிக்க, அப்பாவின் முகம் ஞாபகம் வர எழுந்தான். ஃபோன் ஏதும் வந்ததா என பார்க்க, அது ஆன் செய்யாமலே இருந்தது ஞாபகம் வந்தது. ஆன் செய்ய,
அதில் பானுவின் வாட்ஸாப்பில் இருந்து ஒரு இருபது மெசேஜ் வந்து டெலீட் செய்யப்பட்டது தெரிந்தது. மனதில் ஒரு சந்தோஷம் வர, அப்படியே பார்துக்கொண்டிருந்தான். அவள் ஆன்லைனில் வந்தாள். ஏதோ டைப் செய்துகொண்டிருந்தாள். மன்னிப்பு கேட்பாள் போல. ஆவலாய் பார்த்துக்கொண்டிருக்க அந்த மெசேஜ்கள் படபடவென்று வரிசையாக வந்து விழுந்தது கொண்டிருந்தன.
- ஏண்டா பரதேசி... -
- பணம் வேணும்னு அன்னிக்கே கேட்க வேண்டியதுதானே -
- அப்படி ஏமாத்தற பரம்பரை இல்ல -
- பெரிய இவன் போல ரிப்பேர் செய்து தரானாம் –
- செல் கடை எங்களுக்கு தெரியாதா -
- ரெண்டு நாள்ல உன் காசை வட்டியோட வாங்கிக்கோ -
- முடிஞ்சது -
- bye -
- goodbye –
 
Top