கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதல்: சில குறிப்புகள் 3

Appusiva

Moderator
Staff member
காதல் : சில குறிப்புகள்
அத்தியாயம் 3
வீட்டுக்கு வந்து அவசர அவசரமாக பைக்கை எடுத்தான் பாபு.
“ எங்கடா.... டீ கூட சாப்பிடாம...” என்றார் அம்மா. அவன் பதில் சொல்லாமல் வேகமாக கிளம்பினான். காலேஜ்காக அப்பா வாங்கித்தந்த வண்டி.
“ரொம்ப பெட்ரோல் குடிக்குதுப்பா.. அதான் பஸ்ஸிலயே போயிக்கறேன்”
பானு பஸ்ஸில்தான் வருவாள்.
இவர்கள் வீட்டிலிருந்து ஒரு இரண்டு மைல் தூரத்தில் பானு வீடு. எப்போதும் அவள் வீட்டுக்குள்தான் இருப்பாள். பாபு அடிக்கடி அந்த பக்கம் வண்டியை விடுவான். அவனுக்கு சும்மாவேனும் ஒரு நான்கு சுற்றாவது சுற்றவேண்டும். அவள் வீடு இரண்டு ஃப்ளோர். மாடியில் தெருவை பார்த்த ஜன்னல் அருகில் அவள் அறை என்று சொல்லியிருக்கிறாள். முதல் தடவை அவர்கள் வீட்டுக்கு சென்றது மறக்கமுடியாத அனுபவம். சென்ற ஆண்டு நடந்தது அது. கல்லூரியின் சேர்மன் தேர்தல். இவன் இரண்டாம் ஆண்டு என்பதால் செயலாளர் பதவிக்கு பெயர் குடுத்திருந்தான். எல்லாம் கூட இருந்தவர்களின் வெறித்தனமான தூண்டுதல்.
உண்மையில் பாபுவுக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லை. முதலாம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கல்லூரியின் ஆண்டுமலரில் இவன் எழுதிய அரசியல் கவிதை ஒரு இரண்டு பக்கத்திற்கு வந்திருந்தது. மலரை தயரித்த தமிழ் பேராசிரியர் நாகராஜ் தீவிர தமிழ் ஆர்வலர். துணை முதல்வர். நல்ல படிப்பாளி. தேர்ந்த இலக்கிய நடை இருப்பதாக சொன்னார். நன்றாக இருப்பதாக போட்டுவிட்டார். மலர் வெளியிட்டு அனைவரையும் சேர்ந்தபின் பிரின்ஸ்பால் கூப்பிட்டதாக வகுப்பில் வந்து கூப்பிட்டார்கள். அங்கே சென்றபோது நாகராஜ் சார் கொஞ்சம் சோர்வாக பிரின்ஸ்பாலின் முன் அமர்ந்திருந்தார்.
“வா தம்பி...நீதான் பாபுவா...?” என்றார் பிரின்ஸ்.
“ ஆமா சார்.....”
“என்ன படிக்கற...?”
“கெமிஸ்ட்ரி சார்.... “
“எந்த இயர்..?”
“வந்து... செகண்ட் இயர் சார்....”
“பாருங்க நாகராஜ்... போனவருஷம்தான் முத வருஷம். இவ்வளவு தீவிரமா கவிதை எழுதிருக்கான். அதையும் நீங்க அப்படியே போட்ருக்கீங்க. இது கவர்மெண்ட் காலேஜ்னு தெரியுதா இல்லியா. உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும்னா தனியா வாங்கி படிச்சுக்கோங்க. அதைவிட்டு இதழ்லயே போட்டா எப்படி. எவனாவது கட்சிக்காரன் படிச்சா நம்ம நெலம என்ன....இவனை போல பசங்க இப்படி ஏதாவது பண்ணிட்டு ஹீரோ கணக்கா சுத்துவானுங்க. நாம தான் மல்லுகட்டணும்...இந்தாபா உன் பேரேன்ன... பாபு... உனக்கு பிராக்டிகல் இன்டர்னல் மார்க் லாம் இருக்கில்ல... கெடுத்துக்காதே...” என்றார் பிரின்ஸிபால். பாபு ஏதோ விளையாட்டுபோல பண்ணியது. ஆனால் அது சொன்னதுபோல இவனுக்கு ஒரு இமேஜை ஏற்படுத்திக்கொடுத்தது உண்மையாயிற்று. வெளியே தலையை தொங்கபோட்டு வந்த நாகராஜ் சார்... வெளியே வந்து தலை நிமிர்ந்தார். பாபுவின் தோளில் கைபோட்டுக்கொண்டார்.
“இவங்க கிடக்கறாங்க லூசுப்பசங்க... நீ எழுதுடா கண்ணா... எதுனாலும் நான் பாத்துக்கறேன்” என்றபோது கொஞ்சம் கெத்தாகத்தான் இருந்தது பாபுவுக்கு. ஆனால் அவன் தொடர்ந்து எழுதவில்லை. எழுதியதே அப்பாவின் நோட்டில் இருந்து காப்பியடித்த சில வரிகள்தான்.
தேர்தல் வந்தபோது சேர்மன் பதவிக்கு ஆர்ட்ஸ் குரூப்பில் இருந்து ஆள் வந்தாயிற்று. செயலருக்கு சயின்ஸ் குரூப்பில் ஆள் தேடினார்கள். பிஸிக்ஸ் துறையில் ராகவன் என்பவனின் பெயர் அடிபட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு அது ஒப்பவில்லை. ராகவன் பிரின்ஸிபாலின் தூரத்து சொந்தம். அதனால் புரட்சிக்காரனாக இவன் பெயரை சொல்லிவிட்டார்கள். அதில்லாமல் ஏற்கனவே பிரின்ஸை முறைத்தவன் என்று இவனுக்கு பெயர் வந்திருந்தது. பெயர் தாக்கல் செய்யும்போது பிரின்ஸ் அவர் அருகில் அமர்ந்திருந்த நாகராஜ் சாரை கடுகடுவென முறைத்துக்கொண்டிருந்தார்.
பாபு அதிகம் எதுவும் செலவு செய்யவில்லை. அப்பாவிடம் சொன்னால் மேலும் கீழும் பார்த்து சிரித்துவிட்டு சென்றுவிடுவார். அம்மாவை கேட்கவே வேண்டாம் . சாமியாடிவிடுவார். நண்பர்களின் உதவியுடன் கொஞ்சம் சுண்ணாம்பு வாங்கி கலந்து இரவோடு இரவாக கல்லூரியின் வெளி சாலை முழுதும் விளம்பரம். கொஞ்சமாக பிட் நோட்டீஸ் என்று நண்பர்கள் கலக்கியிருந்தார்கள். ஆனால் ஓட்டு சேகரிக்க வேண்டுமே. அதற்கு உட்கார்ந்து இரவு முழுதும் யோசித்து, ஒவ்வொருவர் வீடாக சென்று ஓட்டு கேட்க ஏற்பாடாயிற்று. மாணவர்களை வகுப்பின் இடைவேளையில் சென்று தனியாக கூப்பிட்டு பேசியாயிற்று. அனைவருக்கும் பாபுவை மிகவும் பிடித்துபோயிருந்தது, அதைவிட ராகவனின் மேல் வெறுப்பு அதிகம் இருந்த்தையும் கவனிக்க முடிந்த்து. சேர்மன் வேட்பாளர் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளிடம் பாபுவுக்கும் சேர்த்து ஓட்டு கேட்டான். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஓட்டு கிடையாது. கடைசியாக இரண்டாம் ஆண்டு மாணவிகளின் வீட்டுக்கு மட்டும் செல்ல திட்டமிட்டார்கள். விடுமுறை நாளாக இரண்டு முழுநாட்கள். தெருத்தெருவாக, வீடு கண்டுபிடித்து போய் பேசி, சிலர் பயந்து, சிலர் ஆச்சரியப்பட்டு, சில வீடுகளில் ‘ இதுங்களுக்கெல்லாம் வேலை இல்ல போலிருக்கு ‘ என்று காதுபட கேட்டு ஒரு அற்புதமான அனுபவம்தான் அது.
இரண்டாம் நாளின் மாலையில்தான் பானுவின் வீட்டுக்கு சென்றார்கள். அது மெயின் ரோட்டில் கொஞ்சம் பெரிய வீடுதான். முதலிலேயே அங்கே சென்றிருந்தால் கொஞ்சம் பயமாய் இருந்திருக்கும். ஆனால் இரண்டு நாளில் பயம் தயக்கம் எல்லாம் விட்டுப்போயிருந்தது. அது முஸ்லிம் தெருவை ஒட்டிய ஒரு வெளிப்பகுதி. கொஞ்சம் சென்சிடிவான ஆட்களாக பார்வையில் பட்டது. அதனால் கூட வந்தவர்களை தூரமாய் விட்டுவிட்டு பாபுவும், கூட இரண்டு பேர்மட்டும் அங்கே சென்றார்கள். கதவை பாபுதான் தட்டினான். கதவை திறந்த அந்த நபர் கடுகடுவென முறைத்தபடி இவர்களை பார்த்தார்.
“யாருப்பா நீங்க....என்ன...?”
“வந்து ... சார்.. நாங்க காலேஜ்ல இருந்து வரோம்... பர்வீன் பானு வீடு...”
“இதான்... என்ன சொல்லுங்க.... “
“அவங்க இருந்தா கூப்பிடறீங்களா... காலேஜ் எலக்ஷன் சம்மந்தமா....”
அவர் இவர்களை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு...உள்புறம் திரும்பி “பிரேமா..உன் பொண்ணு எங்க...?” என்றார். முஸ்லிம் வீட்டில் பிரேமா என்ற பெயர் பாபுவுக்கு வினோதமாக இருந்தது. அதில்லாமல் அவன் வகுப்பு பெண்களின் முகமே அவனுக்கு சரியாக ஞாபகம் இருப்பதில்லை. இதில் அடுத்த டிபார்ட்மெண்ட் பெண்களை அவனுக்கு சுத்தமாக தெரியாது. யாரந்த பர்வீன் பானு என்று அவன் மனதில் ஏதோ சம்மந்தமில்லாமல் ஒரு ஆர்வம் வந்தது. அது இயல்பான ஆர்வமா, அல்லது அந்த வீட்டில் இருந்த ஒழுங்குமுறையால் வந்த எதிபார்ப்பா என அவனால் தீர்மானிக்க முடியவில்லை. மிக அழகான வீடு. வெளியில் ஏதோ சாதாரண சதுர வடிவ கட்டிடம் போல தெரிந்தாலும், உள்ளே அது அவ்வளவு அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. எங்கேயும் தேவையில்லாத பொருட்கள் எதுவும் இல்லை. டேபிளில் ஒரு பேனா ஸ்டாண்ட், ஒரு குறிப்பு நோட்டு. அது தவிர சில புத்தகங்கள் அடுக்கிவைத்து இருந்தது. ஒரே ஒரு மாத காலண்டர், வெளிநாட்டு தயாரிப்பு போல. அதில் வெறும் எண்கள் மட்டும். எந்த படமோ, அலங்காரமோ இல்லாமல் எளிய அழகுடன். வாசலுக்கும், ஜன்னலுக்கும் பெரிய கட்டங்களால் ஆன திரைச்சீலைகள். பாபுவின் வீட்டில் இருப்பதைபோல ஒரு அலமாரி நிறைய புத்தகங்கள். ‘சரிதான், இந்த அப்பாக்கள் எல்லாருமே புத்தக பைத்தியம்தான் போல்’ என்று நினைத்துக்கொண்டான்.
சட்டென்று உள் அறையில் இருந்து வந்த அந்த பெண்ணை கண்டதும் அவனுக்கு சரியான வியப்பு. இதற்கு முன் கல்லூரியில் பலதடவை பார்த்த முகம்தான். அவளை பார்க்கும்தோறும் ஏதோ ஒருவிதமான ஈர்ப்பு இருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். ஒரு விநாடி மட்டும், அடுத்து அதை மறந்து வேறு வேலைகளில் மூழ்கிவிடுவான். அவள் பெயரையோ துறையையோ தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவனுக்கு தோன்றியதில்லை. ஆனால் சில நாட்களில் ஏதோ பறிகொடுத்தார்போல் ஒரு சொல்லமுடியா ஆதங்கம் இருக்கும். இப்போது யோசிக்கும் போது, அந்த நாட்களில் இவள் முகத்தை பார்க்காமல் இருந்திருக்கிறோம் என்று பாபுவுக்கு தோன்றியது. அந்த கணம் அவனின் மனதில் ஏற்பட்ட வண்ணக்கலவையான மாறுதல்களின் பிரவாகத்தை அதன்பின் அவன் என்றுமே அடையவில்லை. ஆனால் அந்த கணத்தின் முழு உருவத்தையும் அப்படியே தன் மனதில் தக்க வைத்துக்கொண்டான். வந்த அவள் முகத்தில் தெரிந்த அந்த ஆச்சரியத்தின் பிரதிபலிப்பில், இவன் மனதின் எண்ணங்களின் சுவடுகள் இருந்ததாய் தோன்றியது.
“நீங்க .... பாபுதானே...” முதல் வார்த்தை. முதல் பேச்சு.
“ ஆமாங்க... வந்து இந்த வருஷம் எலக்ஷன்ல நிக்கறேன்....”
“அது தெரியுங்க.... அதான் பேர் சரியா சொன்னேன். இப்ப உட்காருங்க... நாளைக்கு நின்னுக்கலாம்.” என்று அவள் சொல்ல, கூட வந்த இரண்டு தடிமாடுகளும் ஏதோ பெரிய காமெடி போல வாய்விட்டு சத்தமாய் சிரித்தார்கள். அவளின் அப்பா முறைக்க, அதை கண்டும் காணாதது போல் அவர்கள் சிரிக்க, பாபுவுக்கு பயம் பிடித்துக்கொண்டது.
“என்ன பானு.... தேர்தல்... அது இதுன்னு... இதென்ன புது பழக்கம்... விளையாட்டா இதெல்லாம்...” என்று அவர் பல்லை கடித்தபடி அவளிடம் பேச, அவளோ “ப்பா... இதெல்லாம் ஒரு ஆரம்பம்தான். ஏன் பின்னாடி நான்கூட பெரிய தேர்தல்ல நிக்கலாம் ... யார்கண்டது. உங்களுக்கு வயசாச்சு... போய் அம்மாட்ட காஃபி போட்டுதரச்சொல்லுங்க...” என்று பதில் சத்தமிட அவர் அமைதியாக எழுந்து முணுமுணுத்தபடி உள்ளே சென்றார்.
“ ஓ... உங்க வீட்ட உங்க ராஜ்ஜியம்தான் போல...”
“அப்படீலாம் இல்லைங்க... நான் ஒரே பொண்ணா... அதில்லாம நான் எங்க அம்மா மாதிரி கொஞ்சம் தைரியமா பேசுவேன்... அதான்..”
“உங்க அப்பா முறைக்க நாங்க பயந்துட்டோம்...” என்று கூட வந்தவன் சொல்ல,
“அய்ய... அவர் ஒரு அப்பாவிங்க... அவர் முகமே அப்படிதான்... சரி சொல்லுங்க...” என்றாள். அவர்கள் ஓட்டு கேட்டு வந்ததையும், அவள் மட்டும் இல்லாமல் அவளின் தோழிகளையும் போடச்செல்லவும் கேட்டுக்கொண்டார்கள். அவள் மிக சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு அதையெல்லாம் கேட்டுக்கொண்டாலும், அவள் மனதில் ஒரு கேலிச்சிரிப்பு நூழிலைபோல ஓடிக்கொண்டிருப்பதாக பாபுவுக்கு தோன்றியது. காஃபி கொண்டு வந்து கொடுத்த அவர்கள் அம்மாவை எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது பாபுவுக்கு. அவர் மிக அழகாக பேசினார். பாபுவை, அவனுடன் வந்த நண்பர்களை வீடு முதல், குடும்பம் வரை விசாரித்தார்.
மறுநாள் விட்டு அடுத்த நாள் தேர்தல். சரியான அழிச்சாட்டியம் செய்திருந்தார் பிரின்ஸிபால். அந்த ஆண்டு திடீரென்று முதலாம் ஆண்டு மாணவர்களும் ஓட்டு போடலாம் என்று அறிவித்தார். அவர்களை சென்று பார்க்கவோ, பேசவோ நேரமில்லை. அழகாய் இருபது ஓட்டில் தோற்றுப்போனான் பாபு. மறுநாள் காலையில் கல்லூரிக்கு செல்லும்போது தன் அரும்பு மீசையை எடுத்துவிட்டு சென்றான் பாபு. கேட்பவர்களுக்கெல்லாம் ஒரு புன்னகையை தந்துவிட்டு தோல்வியை இப்படி சாதாரணமாக தான் ஊதித்தள்ளிவிட்டேன் என்று சொல்லும் வகையில் இருந்தது அவன் முகம். மற்றபடி யாரும் ஏதும் அவனை கேட்டுக்கொள்ளவில்லை. வகுப்பு முடிந்து யாரும் பேசுவதற்குள் சென்றுவிட வேண்டும் என்று அவன் வேகமாக வெளியேற, வாசலை தாண்டிய வேகத்தில் சட்டென்று அவள் மேல் மோதுவதை கஷ்டப்பட்டு தவிர்த்தான்.
“ அட ... என்னங்க இவ்வளவு ஸ்பீடு....” என்றாள் பானு.
“ ஒண்ணுமில்லீங்க... வந்து ஒரு அவசர வேலை....அப்பா போன்...அதான்...”
“இருங்க நானும் வரேன்....” என்றபடி நடக்க ஆரம்பித்தாள்.
தோல்வியை பற்றி ஏதும் கேட்டுவிடுவாளோ என அவனுக்கு தயக்கமாய் இருந்த்து.
“நீங்க எங்க எங்க க்ளாஸ் பக்கம்? “
“அது... என் ஃப்ரெண்ட்... உங்க க்ளாஸ்தான் . பாக்க வந்தேன். அவ போயிட்டா போல...”
“ஓ...”
“நீங்கதான் ஜெயிச்சீங்க தெரியுமா....”என்றாள்.
“அதெப்படிங்க....”
“அட... ராகவன் எங்க க்ளாஸ்தானே... ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்க்கு ஓட்டு குடுத்திடலாம்னு திடீர் முடிவு. நைட்டோட நைட்டா... அவனுங்க்களை கூப்ட்டு பார்ட்டி அது இதுன்னு கவனிச்சு ஓட்டு வாங்கிட்டானுங்க. ஆனா பாருங்க அறுபது சொச்சம் பேர் இருந்தாலும், வெறும் இருபது வித்தியாசம்தான். கொஞ்சம் கவனிச்சிருந்தா நீங்கதான். அதில்லாம பழய ரூல்ஸ்னா ராகவருக்கு பத்து ஓட்டு கூட தேறலை....”
“நடக்கறதுதானே நடக்கும்... என்னங்க...சரிதானே...”
“அதும் சரிதான்... எல்லாருக்குமே தெரியும்...நீங்கதான் வின்..னுனு....ஆனா அவனுக்கு வெறும் பேப்பர் சர்டிபிகேட்தானே...”
“உண்மைதான்... இப்ப கொஞ்சம் ஆறுதலா இருக்குங்க...”
“அட அதுக்கேங்க மீசையெல்லாம் எடுத்து...”
“அது சேவ் பண்றப்ப கொஞ்சம் தவறுதலா.... இதுக்கெல்லாம் இல்லை...”
“எல்லாரும் சொல்ற அதே பொய்... ஆனா சகிக்கலை...மீசையோட இருந்த அழகு மிஸ்ஸிங்”
என்று அவள் சொல்ல அவனுக்கு முகம் சிவந்துபோனது. அவர்கள் இயல்பாக நெருங்குவது இருவருக்கும் புரிந்தது.
அதன்பின் பல சந்திப்புகள்.
“உங்க அம்மா பேர் இந்து நேம் போல இருக்கே...”
“அவங்க இந்துதானே...”
“அட... அப்ப?”
“ஆமா......”
“காஃபி சாப்பிடலாமா...?”
“நீ அன்னிக்கு உங்க வீட்ல குடுத்தியே... பால்காஃபி... அது மாதிரி இல்லாம நல்லதா....”
“யேய்... நீயும் ஸ்ட்ராங்காதான் குடிப்பியா... சாரிப்பா... அன்னிக்குதான் காஃபி பொடி காலி. அட்ஜஸ் பண்ணி போட்டது...”
இவர்களின் நெருக்கம் பெரும்பாலும் யாருக்கும் தவறாக தெரியவில்லை. உண்மையில் பானு மிக தைரியமான, நன்றாக அனைவரிடமும் பேசக்கூடியவளாக இருந்ததால், அவளின் நண்பர்கள் வட்டத்தில் இவனுக்கும் இடம் கிடைத்தது. ஆனால் நட்பை மீறிய ஏதோ ஒன்று அவர்களிடம் ஒளிந்து விளியாடிக்கொண்டிருந்ததை இருவரும் உணர்ந்தார்கள்.
“பாரேன்.. இங்கதான் ஒரு முழு வருஷம் இருந்திருக்கோம். ஆனா நாம நண்பர்களாக ரெண்டாம் வருஷம் ஆகிருக்கு..”
“அதானே....”
“உங்க வீட்டுக்கு வரும் வரை உன் பேர்கூட எனக்கு தெரியாதுபா..”
“ஆனா ஒரு வருஷம் முழுசா என்னை முறைச்சு முறைச்சு பாத்திட்டிருந்திருக்க...”
“அய்ய... அதெல்லாமில்ல...”
“எல்லாம் தெரியும்டா.... பெண்கள் கவனிக்கறதில்லனு நீங்க நெனச்சிக்குவீங்க. உன் பேர், உங்க வீடு... உங்க அப்பா பேர் மொதகொண்டு எனக்கு போன வருஷமே தெரியும்.”
“அடிபாவி... அப்புறம் ஏன் இத்தனை நாள் பேசாம ... தெரியாத மாதிரி இருந்த....?”
“ம்?... எங்க போயிட போற.... என்னிக்கா இருந்தாலும் என்ட்ட வந்துதானே ஆகணும்னு ஒரு நம்பிக்கைதான்.”
மூன்றாம் ஆண்டில் மேத்ஸ் கம்பைண்ட் கிளாஸ் எடுப்பது அவர்களுக்கு மிக உதவியாக இருந்தது. பாபு அவள் வீட்டுக்கு செல்வதும், புத்தகங்கள் நோட்டுகள் பரிமாறிக்கொள்வதும் இயல்பாக மாறிப்போனது. அவளின் அம்மா, பாபுவிடம் மிக பாசம் காட்டினார்கள். அப்பா மட்டும் எப்போதும் போல் கடுகடுவென்றே இருப்பார். அவருடன் இயல்பாக பேசும் நாளை எதிர்பார்த்திருந்தான் பாபு. அவரை முகம் கொண்டு பார்ப்பதை தவிர்க்கவே அடிக்கடி செல்வதை தவிர்த்து மாதங்களில் ஓரிரு முறை மட்டும் செல்வான்.. இவன்தான் போவானே தவிர பானு இன்னமும் அவர்கள் வீட்டுக்கு வந்ததில்லை. கேட்டால் ‘கொஞ்ச நாள் போகட்டும்’ என்று விடுவாள்.
பைக்கை வேகமாக அவள் வீட்டு வாசலில் நிறுத்தி இறங்கினான் பாபு. அவசரத்தில் ஸ்டாண்ட் சரியாக போடாததால் அப்படியே அது சாய, அவன் தாங்கி பிடித்த வேகத்தில் முழங்காலில் சரியான அடி. வலி உயிரை எடுத்தது. நல்லவேளையாக யாரும் கவனிக்கவில்லை. மேல்புறம் ஜன்னலை பார்க்க, அதன் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. காலிங் பெல்லை அழுத்த கை போக , சட்டென்று கதவு திறந்தது. பானு. கதவை திறந்த அவள் வேகமாக உள்ளே சென்றாள். பின்னாடியே சென்ற அவன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான். வீட்டில் யாரும் இல்லை போல. ஒரு பத்து நிமிடம் அவள் வரவேயில்லை. அதன்பின் அவள் அம்மா வெளியில் இருந்து வந்தார்கள்.
“வாப்பா... எப்ப வந்த....?”
“இப்பதாங்க... பானு உள்ள போனா... இன்னும் காணோம்... நோட்ஸ் கேட்ருந்தேன்...”
“அந்த கழுதைக்கு செல் இருந்தா போதும். அப்படி என்னதான் பாப்பாளோ... தூங்கிட்டா போல.... ஏய்...பானூ.....” என்று சத்தமிட்டபடி அவர் உள்ளே செல்ல....
“தலைவலின்னு இருந்தேன்... ஏன் கத்தற....” என்றபடி வந்தாள் பானு. வந்தவள் நேராக அவனிடம் வந்தாள். ஏதோ ஒரு நோட்டை தூக்கிப்போட்டாள். அப்படியே நின்றுகொண்டிருந்தாள். பேசவேயில்லை. அவளின் அம்மா காஃபி கொண்டுவர அதை அவர் கையில் இருந்து வாங்கிய பானு உள்ளே சென்று இன்னொரு ஸ்பூன் காஃபி தூள் கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். அவன் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தாள். அவன் காலி தம்ளரை கொடுக்க வாங்கியள், மிக மெல்லிய ஆனால் அழுத்தமான குரலில்,
“அதான் மாடு தண்ணி முட்டுற மாதிரி குடிச்சாச்சில்ல... கெளம்பறது...” என்றாள்.
பாபு அவளை வெறித்துபார்த்தபடி அசட்டு சிரிப்பொன்றை சிரிக்க...
“போடா... போ.. அங்க அவ வெயிட் பண்ணுவா... போ... இங்க எதுக்கு வந்த...” என்றாள்.
**********************
இன்றும் கவனிக்காததுபோல் விஜி கடந்து சென்றது எனக்கு உறுத்தலாகவே இருந்தது. போன வாரம் வந்தபோதுதான் வீட்டில் பெண் பார்ப்பதாக அவள் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தாள். அது என் காதுக்கு விழவேண்டும் என்றே பேசியதாகவே தோன்றியது. குழப்பங்களை கலந்துபேச, ஆலோசனை சொல்ல ஒரு நல்ல தோழமை இல்லாதது மிககொடுமையான விஷயம்தான். காலையில் அவளை பார்த்தபின் தொடர்ந்து பலதடவை சிகரெட் பிடித்தது ஞாபகம் வந்தது. நான் ஒரு நிலையில் இல்லை என்பதை உணர முடிந்தது. உண்மையில் அவள் என்னை விரும்புகிறாளா அல்லது கனவின் எல்லையில் நின்று நானாகவேதான் உருவங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறேனா தெரியவில்லை.
கையில் இருந்த புத்தகத்தை புரட்டினேன்
“ என்றாவது ஒருநாள் அவள் என்னிடம் வருவாள். நான் யாரென்று கேட்பாள். சோகம் தோய்ந்த பார்வையுடன் அவளை நோக்குவேன்....”
புத்தகத்தை மூடி வைத்தேன்
சாயந்திரம் மாணிக்கவாசகம் திரும்ப வந்தார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார். என் மன உணர்வுகளை அவரிடம் கொட்டிவிடலாமாவென கடைசி நொடி வரை தோன்றியது. அவ்வளவு உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு மிக இயல்பாக இருப்பதாக அவரிடம் காட்டிக்கொண்டேன். ஆனால் வெளியே செல்லும்போது,
“நீங்க இன்னிக்கு சரியில்லை மோகன் ... ஏதோ எங்கிட்ட மறைக்கிறீங்க... பரவாயில்லை. ஆனா எப்பனாலும் எங்கிட்ட ஃப்ரீயா பேசலாம்... தோணுச்சுன்னா...” என்று சொல்லி கிளம்பினார் அவர். நான் எழுந்து வெளியே மாட்டியிருந்த கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக்கொண்டேன். கொஞ்சம் அல்ல மிகவும் டல்லாகதான் இருந்தேன். மனதின் வலிமை கொஞ்சம் குறைய அது உடலில் எப்படியெல்லாம் எதிரொலிக்கிறது என்பதை உணர ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் எனக்கு என்ன குழப்பம் என்பதே புரியவில்லை. ஒரு பெண். நல்லவள். அவளை திருமணம் செய்துகொள்ளலாமென்று எண்ணம். அவ்வளவுதான். ஆனால் இதில் அவளின் மனநிலை என்னவென்று அறிவதில்தான் அவ்வளவும். இதை யாரிடமும் கேட்கவும் முடியாது. மோகனா இப்படி என்றுவிட்டால் போச்சு. ஆனால் அவ்வளவு பாவமான காரியமா. இவரை என் அண்ணன் போல நினைத்தேன் என்று சொல்லிவிடுவாளா. ஒரு சிறு பையனை போல் புலம்ப வைக்கும் இந்த உணர்வு இத்தனை நாள் எனக்குள் எங்கே மறைந்திருந்தது?
“என்னடா பயலே...பலமான யோசனை “ என்று என் தோளில் கைபட, சட்டென்று திரும்பிப்பார்த்தேன். ஜாஹிர் நின்றிருந்தான்.
........தொடரும்
 
Top