கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதல் : சில குறிப்புகள் 4

Appusiva

Moderator
Staff member
KS-139
காதல் : சில குறிப்புகள்
அத்தியாயம் 4
வெகு ஆச்சரியமான சந்தோஷம் பரவியது எனக்குள். அவனை இந்த நேரத்தில் இந்த இடத்தில் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரம் முன்தான் கவலைகளை பரிமாறிக்கொள்ள ஒரு துணை இல்லையே என மனதில் தோன்றியது. மாயாஜாலம் போல் இவன் வந்து நிற்க எனக்கு மனதின் அதிசய சக்தி பிரமிப்பாய் இருந்தது.
“டேய்.... எப்படிடா.... இங்க ...எப்ப வந்த...?” என்றேன்.
ஜாஹிர் சின்ன வயதில் இருந்து நெருக்கம். இவ்வளவுதான் என்றில்லை. சிறுவயதில் சித்திரக்கதைகள் வேண்டி அவன் வீட்டுக்கு போகவர பழக்கம். வாசிப்பின் நெருக்கம் பள்ளியில் மற்றவர்களில் இருந்து எங்களை வேறுபடுத்திக்காட்டியது. எங்கள் வீட்டில் வசதி குறைவு என்பதால் புத்தகங்கள் வாங்குவதில்லை. அவன் நிறைய புத்தகங்களை கொடுத்து நான் படிப்பதை ஆவலுடன் பார்ப்பான். பெரும்பாலும் எங்கள் வீட்டில் சாப்பிட்டு என்னுடனே இருப்பான். இந்த லைப்ரரி போல முன்னொரு சமயம் எங்கள் தெருவின் ஓரத்தில் ஒரு லைப்ரரி இருந்தது. அதில் மிகப்பழைய புத்தகங்களை நீக்கிவிட்டு புது புத்தகங்களை அடுக்கும் ஓர் சம்பவம் நடந்தது. கட்டு கட்டாக பழைய புத்தகங்கள். அந்த நூலகத்தின் வெளிப்புறம் ஒருவாரம் அது கிடந்தது. எடைக்கு போடப்போவதாக சொன்னார்கள். கிலோ அப்போது இரண்டு ரூபாயோ என்னவோ. எப்படியும் ஒரு இருபது கிலோவுக்கு அதிகமாக இருக்கும். நான் அதை பள்ளி போகும்போதும் வரும்போதும் ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் ஜாஹிர் என் கையை பிடித்து பள்ளியை ஒட்டிய ஒரு கோயிலுக்கு அழைத்துச்சென்றான். அந்த கோயில் நடைமுறையில் இல்லாத ஒரு பழைய கோயில். வெறுமனே சிலர் தூங்கவும், சிலர் இலைகளால் பச்சை கோடு போட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடவும் பயன்படும் இடம். அங்கே அவனின் சைக்கிளின் கேரியரில் கட்டி இருந்த மூட்டையை காட்டினான். எப்படிதான் தூக்கி வந்தானோ.
பிரித்து பார்க்க எனக்கு கண்ணே கலங்கும் விதமாக, நான் பார்த்த அத்தனை புத்தகங்களும் இருந்தது.
“எப்படிடா....?” என்றேன்
“என் உண்டியலை கவுத்தாச்சுடா... அதில்லாம அப்பாகிட்ட ஸ்கூல் புரொஜக்ட்..னு சொல்லி இருபது ரூபா வாங்கினேன். முழுசா ஐம்பது ரூபாடா... சந்தோஷமா...” என்றான் அவன். அவனை அப்படியே கட்டிக்கொண்டேன். அவன் வீட்டுக்கு அதை எடுத்துச்செல்வதில் நடைமுறை சிக்கல் இருந்தது. இடம் நிறைய இருந்தாலும் அடுக்க அனுமதிக்க மாட்டார்கள். அதனால் எங்கள் வீட்டு திண்ணையில் பழையகாலண்டர் அட்டைகள், சில பலகைகளை செங்கல்தூண் மீது அடுக்கி ஒரு அலமாரி போல் நாங்களே அமைத்தோம். அதில் இந்த புத்தகங்களை அடுக்கி ஒரு லெண்டிங் லைப்ரரி போல் வைத்து சில நாள் நடத்தினோம். காலயந்திரம், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஸெல்மா லாகர்லெவ்... இன்னும் மறந்துபோன பல அபூர்வ புத்தகங்கள் அங்கே இருந்தது. எங்கள் வாசிப்பு அடுத்தகட்டத்துக்கு நகர்ந்த நிகழ்வு அது.
ஜாஹிர் நல்ல படிப்பாளி. அவன் பிற்காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் முடித்து வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தான். குடும்ப சூழ்நிலை மாறிப்போக அவன் கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஹைதராபாத்தில் ஒரு வேலையில் இணைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தது. கடித தொடர்பு வாரம், மாதம் என சுருங்கி எப்போதாவது வாழ்த்து அட்டையுடன் நின்று போனது. அவனின் இருப்பிடம் அடிக்கடி மாறுவதால் நிரந்தர டெலிஃபோன் எண்ணும் எனக்கு கிடைக்கவில்லை. நட்பு மனதில் நிறைந்திருக்க, பேசியே ஆகவேண்டுமா என்ன.
“நேத்து நைட் வந்தேன் மச்சான்... வந்தவுடன் உன்னை வந்து பாக்க நினைச்சேன். ஆனா நல்லா தூங்கிட்டேன்.. செம டயர்டுடா.. எழுந்து கொஞ்சம் சில்லரை வேலை முடிச்சுட்டு ஓடி வந்தேன்...”
“போடாங்க ....துங்குமூஞ்சி...காலையிலேயே சொல்லிருந்தா லீவ் போட்டுட்டு நானே வந்திருப்பேன்...”
“சரிவிடு... வீட்டுக்கு போலாமா... அம்மா கையால பணையாரம் சாப்பிட்டு பல வருஷம் ஆகுது...”
“போலாம் ...போலாம்... வா... வந்து ஒரு தம் வாங்கிகுடு....”
“இன்னும் நீ அதை விடலையா...நான் விட்டாச்சுபா... சரி வா...” என்று முன்புறம் கடைக்கு அழைத்துச் சென்றவன் அவனும் ஒன்றை பற்றவைத்தான். அவன் இயல்பாக இருந்தாலும் ஏதோ ஒரு சொல்லமுடியாத கனத்த சிந்தனை அவன் முகத்தில் படர்ந்திருந்தது. அதில்லாமல் சில்லரை வேலை என்று என்னை பார்க்க வரமுடியாத அளவுக்கு அவனுக்கு ஏதும் இல்லை. வந்தவுடன் நேராக என்னை பார்க்க வருபவன் அவன்.
“அப்புறம் ஜாஹிர்... என்ன பிரச்சினை....” என்றேன் நான்.
“எது... பிரச்சினையா...அதெல்லாம் ஒன்ணுமில்லடா... நீதான் ஏதோ சிக்கல்ல இருக்கறமாதிரி உம்முனு இருக்க...”
“ எனக்கு வேலையில் ஒரு சிந்தனை... ஆனா உன் முகத்தில தெரியுதே... ஏதோ ஆடு திருட வந்தவன் மாதிரி ஒரு கேவலமான அடையாளம். எங்கிட்டயே ஏதோ மறைக்கிறன்னு தெரியுது... படுவா.... என்னாச்சு சொல்லு...”
“கள்ளன்டா நீ... பாத்துக்கலாம் விடு... ஏதாவது சினிமாக்கு போலாமா.. நாளாச்சு...” என்றான்.
முதல் காட்சிக்கு நேரமிருந்தது. ‘ இந்து ‘ என்று ஒரு படம் நன்றாய் இருப்பதாகவும் ஆனால் கும்பல் இல்லை என்றும் ஒரு பேச்சு. கொஞ்சம் பழைய படம் போடும் தியேட்டர் அது. கடைசியாக சினிமாவுக்கு போய் வருஷம் ஆகியிருக்கும் என்று எனக்கு நினைவு. ஆர்வங்கள் நாளாக மாறிவிடுகிறதுதான். ஆனால் பழைய ஞாபகங்களை யாரேனும் தூண்டிவிட அந்த வயதுக்கு சட்டென்று மனம் மாறிவிடுகிறது. இப்போது விட்டால் இருவரும் மரம் ஏறி குதித்து விளையாடுவோம் என்று தோன்றியது. பெரியவர்கள் ஆனாலும் என்னை பார்த்தவுடன் அவன் முகத்தில் ஒரு கணம் சின்னப்பையனாக ஒரு ஒளி தோன்றி மறைந்ததை கண்டேன். தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் நாங்கள் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை விவாதித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றும்.
“இதயம் படம் எங்கயாவது ஓடுதாடா....”
“அட... அதென்ன இதயம் படம்... எப்பவாவது வீடியோ கேசட் வாங்கிபாத்துக்கலாம் விடு.. டிவில எப்பயாவது போடுவான்.”
“டிவி வாங்கிட்டயா... என்ன மாடல்டா...”
படம் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் எப்போதும் போல் நொறுக்குத்தீனியை ஒரு பிடி பிடித்தான். பாப்கார்ன் வெறியன் அவன். நான் கொஞ்சம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டேன். பாடல் வரும்போது மட்டும் கொஞ்சம் சத்தம் அதிகமாக விழித்து திரும்ப கண்மூடிக்கொண்டேன்.
“என்னடா... இதுலாம் படம்னு எடுத்து வச்சிருக்காங்க.... “ என்றான் ஜாஹிர். தியேட்டரின் வெளியே நின்றபடி தம் பற்றவைத்தான்.
“ரசனை மாறுது மச்சி... நீ இன்னும் இதயம் காலத்திலயே இருக்க....” என்று சிரித்தேன்.
“ரசனைனு நாம வைக்கிறதுதாண்டா... ஒரு சிலது மென்மையாதான் சொல்லணும். உள்ள பாத்த இல்ல. அந்த குடும்பத்தோட வந்த ஒரு அப்பாகாரர் பிள்ளைகளை வச்சிகிட்டு செம டென்ஷனா இருந்தார்....”
“அது இருக்கட்டும்...நீ என்ன தொடர்ந்து பத்த வச்சிகிட்டு இருக்க.... விட்டுட்டேன்னு சொன்ன....”
“உனக்கு கம்பெனி மச்சி... கண்டுக்காத...”
வீட்டுக்கு வந்தவுடன் நிஜமாகவே சின்னபையனாக மாறியிருந்தான் ஜாஹிர். நாற்காலியை தவிர்த்து தரையில் சம்மணமிட்டு அமர்ந்தான். அம்மா செய்து போடப்போட , தேங்காய் சட்னியில் குழைத்து குழைத்து பத்து பனிரண்டு பணையாரங்களை உள்ளே தள்ளினான். அம்மாவுக்கும் அவன் வந்ததில் பெரு மகிழ்ச்சி.
“நீயாவது சொல்லுபா... வயசாயிட்டே போகுது... கல்யாணத்துக்கு ஒத்துக்கிறானா பாரு... அட...நீயும்தான் தள்ளிபோட்டுட்டே போற போல... உன்ட்ட சொல்றேன் பாரு... நல்லா செட்டு சேர்ந்திங்க...” என்று அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அம்மா. மொட்டை மாடியில் பாய் விரித்தோம். அவன் இங்கே வருவதாக சொல்லிவிட்டால் அவர்கள் வீட்டில் தேட மாட்டார்கள்.
“அந்த நிலாவில என்னா இருக்கும்டா மோகன்... அழகான பால்நிலா.... அங்க இருந்தா மனம் அமைதியா கவிதையா இருக்கும் இல்ல?” என்றான் அவன். இப்படி எல்லாம் அவன் பேசியது இல்லை.
“அப்படியா சொல்ற?... எனக்கென்னமோ அங்க கல்லும் மண்ணும் மலையும் பள்ளமும்தான் தெரியுது”
“போடா ரசனை கெட்டவனே...”
“எப்ப இருந்து நண்பர் ரசனை ஜீவியா மாறிட்டாரு?”
அவன் என்புறம் திரும்பி படுத்தான். என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ஏதோ சொல்ல நினைத்து எப்படி சொல்வது என்ற குழப்பத்தில் இருப்பதாக தோன்றியது. அப்புறம் எழுந்து ஒரு சிகரெட் எடுத்து வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தான். பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தவன், அதன் பின் என்னிடம் கொடுத்துவிட்டு,
“அவளுக்கு இது பிடிக்காது... இனி பிடிக்க மாட்டேன்...” என்றான். சிகரெட்டை வாயில் வைக்கப்போனவன் சட்டென்று அதை தவற விட்டேன். தீபொறிகளாய் பறக்க அதை அணைத்துவிட்டு அவனை பார்த்தேன். எனக்கு பகீரென்றது. உண்மையில் சந்தோஷ அதிர்ச்சி.
“அடேய்... பாவி.... எவளுக்குடா பிடிக்காது....? “ என்றேன் நான். அவன் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்.
“சாரிடா மாப்ள... அது ரெண்டு வருஷமா...போயிட்டிருக்கு....” அவன் மெலிதாக புன்னகை இழையோட தலைகுனிந்த படியே பேசினான். நான் எழுந்து உட்கார்ந்து அவன் தலையை நிமிர்த்தினேன்.
“இந்த பூனையும் பால் குடிக்குமாடா.....” என்றேன்.
“எல்லா பூனையும் பால் குடிக்கும்... ஆனா நாமதான் கண்டுக்கறதில்ல....”
“யாரது... எங்க... ஹைதராபத்திலயா....?”
“இல்ல மாப்ள.... நம்மூருதான். அது எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு. நீ கூட எனக்காக வெயிட் பண்ணுவியே.. ஒரு தடவை பைக்ல போய் கீழே விழுந்தோமே....”
“தெரியுது சொல்லு.... “
“அவ பேரு பிரேமா... ரொம்ப சூட்டிகை. ரெண்டு வருஷம் முன்ன ஊருக்கு வந்தப்ப அந்த பக்கம் போகவர என்னமோ ஆகிடுச்சு. அவதான் முத தடவை லட்டர் குடுத்தா... எனக்கு என்ன செய்றதுண்ணே தெரில.....”
“எங்கிட்ட ஏண்டா சொல்லவேயில்ல... அடப்பாவி.. அவ்ளோ ரகசியமா வச்சிருக்கே பாரு...”
“வெளிய சொல்ல தோணலடா... உன்ட்ட சொல்லாத விஷயமில்ல... ஆனா இது அதையும் தாண்டி ஏதோ ப்யூர் பெர்சனல் மாதிரி ஃபீல் மாப்ள... தப்பா நினைக்காதே. உனக்கு அது புரியாது...”
புரியும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
“உண்மையை சொல்லுடா.... ரெண்டு வருஷம் முன்னதான் முத தடவ பாத்தியா....?”
நிமிர்ந்தான். மெல்லிய குரலில் பேசினான். அவன் குரல் முழுதும் சந்தோச அலைகளாக இருந்தது.
“இல்லடா... அதுக்கப்புறம் யோசிக்கதான் இது தெரியுது. அவளை சின்ன வயசுல இருந்தே பாத்திட்டிருக்கேன். ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்திருக்கு. ஆனா ரொம்ப டீப்பா இல்ல. நான் முதல் தடவை ஊருக்கு போறப்போகூட அந்த தெருவில் ஒரு நாலஞ்சு தடவை சுத்திருக்கேன். ஏன் எதுக்குன்னே தெரியாம. அது பாரேன், அதுக்கு எப்படியோ நான் வெளியூர் வேலைக்கு போறேன்னு தெரிஞ்சு எங்க தெருவில் சைக்கிள்ல சுத்திசுத்தி வந்திருக்கு. பின்னாடி ஒரு நாள் லட்டர்ல சொன்னது.”
“அடஅட... என்னாவொரு காவியம்டா இது...” என்றேன் நான்.
“இதுக்குதான் நான் சொல்லலை... கிண்டல் பண்ற பாரு....”
“அட...கோவிச்சுக்காதே மச்சி... ஜாலிதான். எனக்கு, உன்னை மயக்கின அந்த முகத்தை பாக்கணுமே....”
“நாளை கூட்டிபோய் காட்டறேன்... ஆனா நீ தூரமா இரு. உன்னை சொல்லிருக்கேன். இருந்தாலும் கொஞ்சம் கூச்சப்படும்...”
“ புரியுது... அதுசரி... அதுக்கேன் உம்முனு இருந்த.....”
“டேய்.... அவ இந்துடா... எங்க அப்பாவை நெனச்சிபாரு... அவங்க வீட்ல இன்னும் பிராப்ளம் ஆகும். போன வாரம் புலம்பிதள்ளி எழுதிருக்கா... அதான் கிளம்பி வந்துட்டேன்.” என்றான் ஜாஹிர். அதன் பின் படுத்தபடி மறுபடி நிலாவை வெறித்துக்கொண்டிருந்தான். அவன் வாய் மட்டும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தது. கீழே அணைத்து பாதியாக இருந்த சிகரெட்டை மறுபடி பற்றவைத்து முடித்துவிட்டு படுத்தேன்..
“உனக்கு இதுபோல எதுவும் நடக்கலியா....” என்றான் ஜாஹிர்.
“இருக்கு.. ஆனா அது பியூர் பெர்சனல் மாப்ள...” என்று சொல்லிவிட்டு போர்வையை தலை மூடி இறுக்க போர்த்திக்கொண்டேன். ஆச்சரியமாய் எழுந்தவன், தம் கட்டி இழுத்தும் நான் போர்வையை விடவில்லை.
******************
பைக்கை உச்ச வேகத்தில் முறுக்கினான் பாபு. அவன் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
‘என்னவொரு உணர்வு இது. எனக்கே எனக்கானவள். என்னை யாருக்கும் விட்டுக்கொடுக்காத குணம். இது பொறாமையா. பொறாமையில் இன்பம் தருவது கூட இருக்குமா. சத்தியமாய் அவளுக்கு தெரியும். நான் எப்படி என்று. அதையும் மீறி அவளுக்கு கோபம் வருவது எவ்வளவு அழகு. ஊடல் அத்தியாயம் என்றால் இதுதானா...’ என்று பலவாறு அவன் மனம் பேசிக்கொண்டே சென்றது. கட்டற்று அவிழ்த்து விடப்பட்ட பலூன்கள் போல அவன் எண்ணச்சிதறல் இந்த வெளி முழுதும் சுற்றியது. அவனுக்கு ஓ.. வென்று சத்தமாய் கத்த வேண்டும் போல இருந்தது. வண்டியை இன்னும் முறுக்கினான்.
“இங்க ஏன் வந்த.....” மெல்லிய குரலில்..
“உன்னை பாக்க...”
“ஏன் அவ... மூஞ்சி காட்ட மாட்டேன்னுட்டாளா...?”
“வரச்சொன்னா... போகணும்”
முறைப்பு.
“என்ன....... ....... க்கு இங்க வந்த....? போய்த்தொலைய வேண்டியதுதானே....”
“போறவழியில் காஃபி குடிச்சுட்டு போலாம்னு.....”
“வரபோறவனுக்கெல்லாம் குடுக்க இங்க என்ன கடையா வச்சு நடத்திட்டு இருக்கோம் ...
கிளம்பு நீ...”
அவளின் அம்மா வந்தார்.
“என்னன்னு தெரியல தம்பி... தலவலின்றா.... காய்ச்சல்ன்றா... இன்னிக்கு லீவு பாரு. ... ஏண்டி... எதாவது மாத்திரை வாங்கி வந்து குடுக்கச்சொல்லவா....”
“அம்மா.... நீ என்ன தெரியாமதான் பேசறியா... எனக்கு கடை தெரியாதா... அவன் வந்து வாங்கி தரணுமா... “
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்தற.... நீயாச்சு உன் ஃப்ரெண்ட்டாச்சு... ஆளைவிடு....” என்று அவர்கள் சென்றுவிட, அவள் எறிந்த நோட்டில் ஒரு பக்கத்தை திருப்பி...”sorry” என்று எழுதினான்.
“பானு இந்த சம் எப்படி... இதான் கேட்கணும்னு இருந்தேன்...” என்றான். அவள் அவனை முறைத்தவாறு வந்து அந்த பக்கத்தை பார்க்க, அவன் எழுதியதை காட்டினான். நிமிர்ந்தவள் கையை நீட்டி அவனை திட்டுவதுபோல் வாயில் முணுமுணுத்தாள். அவள் பல்லை கடிக்கும் சத்தம் கூட அவனுக்கு கேட்டது. இடையில் அவள் அப்பா வந்து, எப்போதும் போல் அவனை முறைத்தவாறு உள்ளே சென்று பின் அவன் முன்புறம் உள்ள நாற்காலியில் உட்கார்ந்து செல்லை நோண்ட ஆரம்பித்தார். இப்போதைக்கு நகர்வதாக இல்லை. பானு அவர் அருகில் வந்து என்னை பார்த்தவாறு பேசினாள்.
“அப்பா... ஒரு .....எவ்ளோ ஆச்சு பாபு.....” என்று பாபுவை பார்த்துக்கேட்டாள்.
“எதுபா....” என்றான் பாபு.
“ம்?.... செல்லு....செல்லு ரிப்பேர் சார்ஜ்....” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
“அது நான் குடுத்திட்டேன் பானு...... அப்புறம் வாங்கிக்கறேன்....”
“கடன் எங்க குடும்பத்துக்கு ஆகாது... சொல்லு எவ்ளோன்னு....”
“அது ஒரு ...இருநூறு ரூபா ஆச்சு.......”
“அப்பா... குடுங்க... பர்ஸ்ல இருக்கா....”
“இப்ப ஏதுபா எங்கிட்ட... அம்மாட்ட வேணா கேளு....”
“கஞ்சம்பா... நீங்க.. சரி இரு....” என்றவள் உள்ளே சென்று அவள் பர்ஸை எடுத்து வந்து தேடி இரண்டு நூறு ரூபாய்களை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.
“நிஜமா அவ்ளோவாபா ஆகுது... ஒரு டிஸ்ப்லே மாத்த... அநியாயம்...” என்றார் அவள் அப்பா.
உண்மையில் ஐநூறு ஆனதை சொன்னால் அதிர்ச்சியில் மயங்கிவிடுவார் போல. நிஜமாகவே கஞ்சம்தான். மாமனார் ஆகட்டும், கறந்துவிடுகிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டான் பாபு.
“அப்புறம் தம்பி... படிப்பெல்லாம் எப்படி போகுது....” என்றார். ‘கெளம்பலியா இன்னும்’ என்பதன் கோட் வேர்ட் அது.
“நல்லா போகுது அங்கிள்... சரி நான் கிளம்பறேன்... பானுட்ட சொல்லிட்டு...” என்றான் பாபு.
காத்திருந்தவள் போல வெளியே வந்தாள் பானு. அவளிடம் அந்த நோட்டின் ஒரு பக்கத்தை காட்டி,
“இது மட்டும் எப்படின்னு சொல்லுப்பா... நாளை சப்மிட் பண்ணனும்...” என்றான் பாபு. அவள் அவனை முறைத்தவாறு வந்து அந்த பக்கத்தை பார்த்தாள்.
‘நாளை வீட்டுக்கு வரியா....’ என்று எழுதியிருந்தான் பாபு.
அவன் கையில் இருந்த பேனாவை வாங்கி...அதன் மேல் ஓரிரு கோடுகள் போட்டு அடித்து, “ கணக்கே தப்பு பாபு... பாத்து நல்லா படி...இப்படிலாம் இருந்தா கஷ்டம்... உங்க அப்பா அம்மா எவ்வளவு கஷடப்பட்டு படிக்க வைக்கிறாங்க..” என்றாள் அவள்.
“சரிபா... நாளை சரியா போட்டுடறேன்... கிளம்பறேன்... “ என்று சொல்லி அவன் கிளம்ப, வாசல் வரை வந்தவள்,
“நித்யாகிட்ட இந்த சம் காட்டி கேளுப்பா... அவ கொஞ்சம் நல்லா சொல்லித்தருவா...” என்று சொல்ல,​
“கண்டிப்பா ... தோ... அங்கதான் போறேன்..” என்றான் பாபு.
உள்ளே திரும்பி பார்த்தவள், அவள் அப்பா செல்லில் மூழ்கியிருக்க, கீழே கிடந்த ஒரு பேப்பர் குப்பையை எடுத்து சுருட்டி அவன் மேல் வேகமாக எறிந்துவிட்டு...” போய்த்தொலை.... சனியனே..” என்று முணுமுணுத்தாள்.
பைக்கில் அவர்கள் கல்லூரியின் அருகிலேயே வந்துவிட்டதை அப்போதுதான் கவனித்தான் பாபு. இரவு எட்டு மணி தாண்டியாகிவிட்டது. ஆள் அரவமில்லை. வண்டியை ஒரு மரத்தடியில் நிறுத்தி இறங்கினான். நடு ரோட்டில் நின்று கைகளை விரித்து பல்ம் கொண்ட மட்டும் குரலை உயர்த்தி... “ ஓஓஓ.........” வென்று கத்தினான். மனம் முழுக்க சந்தோஷம் பறப்பதாய் இருந்த்து. திடீரென்று படபட வென்று யாரோ ஓடும் சத்தம் கேட்க, கொஞ்சம் சுதாரித்து திரும்பி பார்க்க, அந்த மரத்தடியின் பின்புறம் அவசரத்துக்கு ஒதுங்கியிருந்த ஒருவன், தன் லுங்கியை தூக்கி தலைமேல் போட்டுக்கொண்டு,
“அம்மா... மாரியாத்தா.... பேய்.....காப்பாத்து....” என்று கத்தியவாறு ஓடிக்கொண்டிருந்தான்.
தொடரும்...
 
Top