கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதல் : சில குறிப்புகள் 5

Appusiva

Moderator
Staff member
KS-139
காதல் : சில குறிப்புகள்
அத்தியாயம் 5

‘கோபம் போயாச்சா...’
அவள் அந்த மெசேஜை பார்க்கவேயில்லை. பாபு புரண்டுபுரண்டு படுத்தான். மணி பத்தரை ஆகியிருந்தது. இன்னும் ஒருமணி நேரத்தில் அப்பா வந்துவிடுவார். அவரின் நேரம் பதினொன்றில் இருந்து பன்னிரண்டு வரை. ஏதாவது படித்துவிட்டுதான் படுப்பார். அவர் வரும்போது செல்லை பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு முறைப்பு முறைப்பார். ‘இவளோ இப்போதுதான் வீம்பு பிடிப்பாள்’ என்று நினைத்துக்கொண்டான். எழுந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தான். ஏதாவது புத்தகம் எடுத்து படிக்கலாம் என்று தோண ஹாலுக்குச்சென்றான். புத்தகத்தில் குனிந்திருந்த அப்பா நிமிர்ந்து பார்த்தார். இவன் எதையும் கண்டுகொள்ளாமல் அவரின் அலமாரியில் தேடி , வாண்டுமாமா குழந்தை கதைகள் என்றிருந்த ஒரு புத்தகத்தை எடுத்தான். அங்கேயே நின்று புரட்டினான்.
“லெஃப்ட் லாஸ்ட்ல இருக்கு பாரு. புலிபெற்ற பிள்ளைனு, அது படி... நல்லாருக்கும்” என்றார் அப்பா.
‘ரொம்ப முக்கியம் ‘ என்று மனதில் நினைத்துக்கொண்டு அவர் சொன்ன புத்தகத்தை எடுத்துக்கொண்டு ரூமுக்குள் நுழைந்தான். கொஞ்சம் புரட்ட அது பாதி சித்திரக்கதையாகவும் மீதி நாவல் போலவும் மிக விறுவிறுப்பாக இருக்க பாதி படித்திருப்பான். அப்பா வந்து படுத்தார். இவன் புத்தகம் படிப்பதை பார்த்து மிக திருப்தியாக திரும்பி படுத்துக்கொண்டார். சட்டென்று ஞாபகம் வர செல்லை எடுத்தான். மணி பதினொன்றை தாண்டியிருந்தது. செல்லில் பானு ஆன்லைனில் இருந்தாள். மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் எழுந்தது. பதில் ஏதும் போடவில்லை. இவன் ஆன்லைனில் வந்ததை பார்த்து அவள் வாட்ஸாப்பில் இருந்து வெளியேனாள்.
‘சாரிப்பா... அப்பா வந்தார்... அதனால் புத்தகம் படிச்சுட்டு இருந்தேன்’
அவள் வரவில்லை. தன் மெசேஜை எப்போது பார்த்தாள் என்று செக் செய்ய, அவன் புத்தகம் எடுக்க போகும்போதே பார்த்திருக்கிறாள் என்பது தெரிந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு மேல் காத்திருந்திருக்கிறாள். இவன்தான் விட்டுவிட்டான் என்று நினைக்கும்போது ஆதங்கமாய் வந்தது. இதோ வந்துவிட்டாள்.
‘சரி..குட்நைட்’
செல்லில் நெட்டை ஆஃப் செய்தாள் பானு. திமிர் பிடித்தவன். அப்பா வந்தாராம் புத்தகம் படித்தானாம். இவனுக்கு எல்லாம் என் நினைப்பே வராது போல. தான்தான் அவனை நினைத்து உருகிக்கொண்டு இருக்கிறோம் என்று தோண அவளுக்கு மனம் மிக சோர்வாக இருந்தது. அப்பா வெளியில் படுத்து தூங்கியாகிவிட்டது. அம்மா அருகில் இருக்க அவர் மீது காலை போட்டாள். அம்மாவின் குறட்டைஒரு நிமிடம் அடங்கி, திரும்ப ஆரம்பித்தது. செல்லை எடுத்து நெட்டை ஆன் செய்தாள். வரிசையாக மெசேஜ் போட்டிருந்தான்.
‘சத்தியமா நான் அவகிட்ட பேசலைடா..’
‘அவதான் மெசேஜா போட்டு சாவடிச்சா’
‘உங்கிட்ட சொல்ல நேரமே கிடைக்கலை’
‘நீயே சொல்லு... நாம பேசினோமா’
‘அவசரகாரி’
பானு டைப் செய்ய ஆரம்பித்தாள்.
‘விடுபா... உனக்கு ஆயிரத்தெட்டு வேலை.. நீ புத்தகம் படி.. அப்படியே உங்க அப்பாகிட்ட கொஞ்சிட்டு படு..குட்நைட்’
‘இருடி.. போகாதே’
‘சொல்லு’
‘இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருந்த’
‘சரி’
‘அதும் அந்த கோபம்... செம.. நிஜமாவே எனக்கு பிடிச்சிருக்கு’
‘அப்ப அடிக்கடி கோபப்படுன்னு சொல்றியா.. எனக்கு அவசியமேயில்லை’
‘அட.. அப்படி சொல்லலை.. அழகி நீ’
‘உன் சர்டிபிகேட் யாரும் கேட்கலை’
‘சரிவிடு.. இப்ப என்னை நம்பறியா...’
‘நீ யாருப்பா எனக்கு.. உன்னை நான் ஏன் நம்பணும்’
‘சரிசரி... கத்தாத... அழகி... ஆனா லூஸ் அழகி’
‘ரெண்டு நாளா வீட்டு மொட்டை மாடில இருந்து உங்க வீட்டு திசையையே பாத்துட்டு இருந்தேன்.. கண்டிப்பா லூஸ்தான்’
‘நிஜமாவா’
‘என் கஷ்டம் என்னோட... ஒரு பாட்டு கேட்க முடியலை.. எதுனாலும் உன் ஞாபகம் வருது. நான் லூஸ்தானே’

அவனிடம் இருந்து பதில் வரவில்லை. ரொம்ப படுத்திவிட்டதாக பானுவுக்கு தோன்றியது.

‘என்னடா ... சத்தமே காணோம். எதாவது பேசு’
‘இல்லபா... ஒண்ணுமில்லை’
‘அழறியா...’
‘சேச்சே... அதெல்லாமில்ல..... குட்நைட்’
‘டேய் அழாதடா..’

ஒரு நிமிடம் கழித்து பதில் வந்தது.

‘இதெப்படி இதெல்லாம் கரெக்டா கண்டுபிடிக்கற?’
‘இங்க நானும் அழறேன் அதான்... ப்ளீஸ்டா... இனிமே இப்படி பண்ணாதே...’
‘சரிசரி...இனிமே யார்ட்டயும் பேசமாட்டேன்’
‘அய்ய... அதெல்லாமில்ல... வழியாதே ..அவ்வளவுதான்’
‘அவதான் பேசினா’
‘சார்ஜ் இல்லன்னு ஆஃப் செய்துட்டு படுக்க வேண்டியதுதானே’
‘ஆமால்ல’
‘ஒண்ணுமே தெரியாது... சைட்ல கிடைச்சா இன்னொண்ணு வச்சுக்கலாம்னு இருந்தியோ?’
‘அடபோடி... அவளும் அவ மூஞ்சும்’
‘லைட்டை ஆஃப் செய்துட்டா எல்லாமே ஒண்ணுதானே’
‘என்னடி இப்படிலாம் பேசற... கழுதை... வாய் நீளமா போகுது’
‘உன் விஷயம்னா இன்னும் அதிகமா வருதுடா... ப்ளீஸ்... என்னை விட்றாதடா..தங்கமில்ல’
‘ஓகே..ஓகே...விடு... ஊர் கதை பேசறதே பொழப்பா போச்சு’
‘சரி தூங்கு... காலைல பேசிக்கலாம்... நாளைக்கு பிங்க் கலர் டிரஸ் நான். உங்கிட்ட இருக்கில்ல?’
‘இருக்கு’
‘சரி நிம்மதியா தூங்கு...குட்நைட்’
‘குட்நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்’
‘ம்ம்’
மனம் நிம்மதியாய் இருந்தது பானுவுக்கு. இப்போதைக்கு தூக்கம் வருவதாய் தெரியவில்லை. மெசேஜ்களை டெலீட் செய்து, செல்லை வைத்துவிட்டு திரும்ப நினைக்க, அம்மா இவளையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. திகீரென்றது.
“என்னம்மா தூங்கலையா...?”
“இல்லடி... ஜீரணம் ஆகல போல.. ஒரு மாதிரி இருக்கு”
“கொஞ்சம் சீரகம் தரவா...”
“அதெல்லாம் வேண்டாம். சரியா போயிடும். நீ தூங்கலியா?”
“இல்லமா.. ஒரு ஆன்லைன் அப்ளிகேஷன் பண்ணனும். முடிச்சிட்டேன். இதோ தூங்கபோறேன்”
“சரி சரி... இந்த... அவன் அப்பா பேர் என்ன சொன்ன? “
“யாருமா... எவன்?”
“அதாம்மா, நம்ம வீட்டுக்கு வருவானே... பாபு..உன் ஃப்ரெண்டு...”
“வந்து... ஞாபகம் இல்லம்மா... நாளைக்கு கேட்டு சொல்றேன்.”
“வேணாம் விடு... ஏதோ சந்திரன்னு சொன்ன ஞாபகம்... அதான் கேட்டேன்”
என்று அம்மா திரும்பி படுக்க, பானுவுக்கு வியர்த்து வழிந்தது. இருந்தாலும் போர்வையை இழுத்து முகம் வரை மூடிக்கொண்டு விடிகாலை வரை திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தாள்.

**********
அதிகாலை எழுந்து ஜாஹிர் சென்றுவிட்டான். நான் கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தேன். இருள் பிரியும் வரை அப்படியே படுத்திருந்தேன். மிக கூச்சமுடையவன் ஜாஹிர். என்னைவிட. பேசவேமாட்டான். அவனும் துணிச்சலாக எல்லாம் சொல்லி இவ்வளவு செய்திருக்கிறான். அவனிடன் மனம் விட்டு பேசவேண்டும், ஆலோசனை கேட்கவேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் அவனும் முதலில் சொல்லவில்லையே. அந்தபெண்தான் முதலில் கடிதம் குடுத்திருக்கிறாள். எங்கேயோ பிறந்து, குழந்தையாக வளர்ந்து ஆளாகிய இருவர் எப்படி இவர்கள்தான் நமக்கானவர்கள் என்று கண்டுபிடிக்கிறார்கள் என்பது எனக்கு யோசிக்க யோசிக்க ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் பார்த்து வைக்கும் கல்யாணம் என்றாலும் திருமணத்திற்கு பின் இந்த அன்பு சாத்தியமானதே என்று தோன்றியது. மனம் கலந்துவிட்டால் எல்லாம் சாத்தியமே.
கொஞ்சம் சோம்பலாகத்தான் இருந்தது. மெதுவாக குளித்து கிளம்பினேன். ஜாஹிர் சாயந்திரம் வருவதாக சொல்லியிருந்தான். நான் எப்போதும் போல கடையில் காத்திருக்க என் மனநிலையை வெறுப்பேற்றும் வகையில் அவள் வரவில்லை. உள்ளே சென்று ஒரு கையெழுத்து போட்டுவிட்டு மறுபடி வெளியே வந்தேன். அவள் தாமதமாகவேனும் வருவாள் என்று தோன்றியது. ஆனால் அவள் வரவேயில்லை. இதற்குமேல் அவள் வருவது சாத்தியமில்லை என்று தோன்ற மறுபடி சென்று என் சீட்டில் அமர்ந்தேன். வேலைகளை துவங்க மனம் வரவில்லை. ஏதோ பாரமாக இருப்பதாய் தோன்றியது. இவ்வளவு குழப்பமான மனநிலையில் நான் இருந்ததே இல்லை என்பதும் தெரிந்தது. இருமனம் எனக்குள் செயல்படுவதாக தோன்றியது. ‘டாக்டர் ஜேக்கால்’ போல ஒரு மனம், இயல்பு வாழ்வில் சுற்றி சுழன்று பார்வைக்கு நல்ல மோகன், சராசரி ஆண், நல்ல அலுவலன் என்று. உள்ளுக்குள் ‘மிஸ்டர் ஹைட் ‘ போல ஒருவன், இதுதான் என்று இல்லாமல் பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறான். அவன் மெல்ல மெல்ல மோகனை ஆக்ரமித்து, மெதுவாக அவனின் கட்டுப்பாட்டில் கொண்டுவர பிரயத்தனப்படுகிறான். கூடிய சீக்கிரம் அவனின் ஆட்டம் உச்சத்தை தொடும் அபாயம் இருந்தது. ஒருவேளை அவன்தான் உண்மையான மோகனாக இருப்பானா. அவனை மறைத்துதான் இந்த வெளிப்போர்வை இத்தனை நாள் வேஷம் போட்டுக்கொண்டு இருந்ததா. அவனும் பாவம்தானே. எவ்வளவு நாள் மனதின் கட்டுப்பாட்டில் சிக்கி, அவன் சும்மாவே முடங்கியிருப்பான்.
ஆனால் இந்த இரண்டு பக்கங்களையும் பார்த்து ஒரு தனி மனிதன் போல மூன்றாவதாய் ஒருவன் அடிக்கடி வருகிறான். அவன் பார்ப்பதற்கு ஒரு ஜோக்கர் போல தோற்றமளிக்கிறான். ஆனால் அவனின் மனநிலை ஒரு ஜென் துறவி போல இருக்கிறது. அவன் எப்போதும் சிரித்தபடி இருக்கிறான். அவன் இந்த இரண்டுபேரின் செயல்களையும் ஒப்பிட்டு, அவ்வப்போது எந்த பக்கமும் அதிகமாக சாய்ந்துவிடாமல், சிரித்தபடி பேலன்ஸ் செய்து கொண்டு போகிறான் என்று தோன்றியது. அவன் எப்போதும் சோர்வதில்லை. கலங்குவதில்லை. எந்த சூழ்நிலையிலும் ‘எல்லாம் மாயமே... ரசித்து பழகு’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவன் உள்மனதில் ஓர் இருண்ட அறையில் மறைந்து அவ்வப்போது வெளிப்படுகிறான். அவனின் கேலிச்சிரிப்பு மட்டும் அடிக்கடி எதிரொலித்து இந்த இருவரையும் உசுப்பேற்றிக்கொண்டே இருக்கிறது.
“சார்... சா.....ர்....மோகன் சார்...” என்று என்னை சுரேஷ் கூப்பிட, திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
“ஏண்டா கத்தற”
“உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு சார்... சீக்கிரம் வீட்ல சொல்லி ஒரு கால்கட்டு போடச்சொல்லணும்... “
“என்னடா உளர்ற....என்னாச்சு...” என்றேன்.
“பின்ன என்ன, ரெண்டு நிமிஷமா கூப்டுட்டே இருக்கேன். நீங்க என்னடானா... அந்த விட்டத்தில ஏதோ புதையலை பாத்த மாதிரி அங்கேயே பார்த்துட்டு இருக்கீங்க...ஏதாவது காத்து கருப்பு அடிச்சிருக்குமோ...” என்றான் அவன்.
எதிர்புறம் அலமாரியின் பின்னால் இருந்து ஒரு சின்ன சிரிப்பொலி கேட்க, எனக்கு வெட்கமாக போய்விட்டது. கொஞ்சம் குரலை தாழ்த்தி அவனிடம் பேசினேன்.
“ அட போடாங்... கொஞ்சம் உடம்பு சரியில்லை. லீவே போடலாம்னு இருந்தேன். ஆனா புது புத்தகம் லிஸ்ட் போடணும்னு வந்தேன். நீ வேற... இடம் பொருள் தெரியாம.... இப்படியா கத்துவ...எல்லாம் சிரிக்கிற மாதிரி” என்றேன்.
“அது சரி... அவங்களும் வந்து நின்னுட்டுதான்...இது ஆவறதில்லனு மறுபடி போய் புத்தகம் தேடறாங்க...” என்றான் சுரேஷ்.
“இங்க வந்து நின்னாங்களா.. அடடா... யார்ரா... என்னவாம்.. கவனிக்கலைடா....”
“அதான் கனிக்கலனு தெரியுதே... அவங்க மூணு புக் எடுக்கலாம். ஆனா மூணும் சேர்த்து எலிஜிபில் வேல்யூக்கு அதிகமா போச்சு. குடுக்க முடியாது சொன்னேன். உங்க கிட்ட கேட்க வந்தாங்க.” என்றான் சுரேஷ்.
“சரி...சரி...கூப்பிடு “ என்றேன்.
அவன் உள்ளே சென்று அவர்களை அழைத்து வர, நான் வாட்டர் பாட்டிலை எடுத்து சிறிது தண்ணீர் குடிக்க நிமிர, வந்தவர்களை பார்த்து திகைத்து அப்படியே என்மேல் ஊற்றிக்கொண்டேன்.
“சார்...பாத்து..பாத்து...என்ன சார் ..மேலெல்லாம் ஊத்திக்கறீங்க... அவ்வளவு உருக்கமாவா இருக்கு?” என்றான் சுரேஷ். அவர்களின் முகத்தில் சிரிப்பை அடக்க முயற்சிப்பது தெரிந்தது. அது விஜியும் இன்னொரு பெண்ணும்.
கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை என்று சாதாரணமாக சொல்லிவிடுவோம். அதன் முழு அர்த்தம் அன்றுதான் தெரிந்தது. இத்தனைக்கும் முதல் தடவை அவளிடம் இயல்பாக பேசியவன்தான். ஆனால் இப்போது என் நாக்கு உள்ளுக்குள் முடங்கி மேல் அன்னத்துடன் ஒட்டிக்கொண்டது போல் இருந்தது. அதில்லாமல் என் உதடுகள் இரண்டும் காதுவரை போய் சேர்ந்து புன்னகைப்பதாய் ஒரு பாவமான இளிப்பை காட்டியது.
“வாங்க....உங்க பேர் விஜிதானே...?” என்றேன் இயல்பாய் இருப்பதாக.
“வந்து ...ஆமாம் சார்... நல்லாருக்கீங்களா....?” என்றவள் முகம் ‘நிஜமா என்பேர் உனக்கு தெரியாது?’ என்று கேட்பதாய் இருந்தது.
“நல்லாருக்கார்...கொஞ்சம் ஜுரம்” என்று முணுமுணுத்தபடி சென்ற சுரேஷை ஓரக்கண்ணால் முறைத்தபடி அவள் புறம் திரும்பினேன்.
“சொல்லுங்க விஜி... என்ன வேணும்?”
“நான் மூணு புக் எடுத்துட்டேன் சார்.. இவ என் ரிலேஷன். இவ படிக்க அதில் ஒண்ணு. கொஞ்சம் காஸ்ட்லி. ஆனா எடுத்தா அது ஒண்ணுதான் எடுக்கணும், மூணு எடுக்கக்கூடாதுன்னு உங்க ஸ்டாஃப் சொல்றார். கொஞ்சம் உதவி பண்ண முடியுமா...?” என்றாள் விஜி.
அவள் தேர்வு செய்த அந்த புத்தகத்தை பார்த்தேன். எலக்ரானிக்ஸ் சம்மந்தமான மொத்தமான புத்தகம் அது. கொஞ்சம் விலை அதிகம்தான். அந்த பெண்ணை பார்த்தேன். அவள் இதை படிப்பாளா என்று தோன்றியது. அந்த பெண் என்னையும் அந்த புத்தகத்தையுமே பார்த்துக்கொண்டிருந்தாள். பார்வையில் ஒரு சிறு மருட்சி இருந்தது.
“உங்க தங்கையா” என்றேன்.
“ இல்லல்ல...எங்க அத்தை பொண்ணு....தூரத்து சொந்தம் ” என்றாள் விஜி.
“குடுக்கக்கூடாதுதான். ஆனா பாருங்க.. படிக்கதானே புத்தகம், அதை என்பேரில் எழுதி தனியா தரேன். நீங்க இன்னொரு புக் கம்மி விலையில் தனியா எடுத்துக்குங்க... ரெண்டு போதும்னாலும் நோ ப்ராப்ளம்...” என்றேன்.
விஜி அவளின் அத்தை பெண்ணை பார்த்து, ‘சாதிச்சுட்டோமில்ல’ என்பதுபோல் புன்னகைத்தாள். புத்தகங்களை எழுதி கையெழுத்து வாங்க லெட்ஜரை அவள் புறம் தள்ளினேன். கையெழுத்திட குனிந்தவள், சட்டென்று பார்வையை மட்டும் மெதுவாக உயர்த்தி என்னை பார்க்க, நான் அவளை வைத்தகண் வாங்காமல் பார்ப்பதை உணர்ந்து மெலிதாக சிரித்து... ”இங்கே போடணுமா?” என்றாள். அசட்டு சிரிப்புடன் தலையாட்டினேன். கையெழுத்திட பக்கமாய் வந்தபோது அவள் மீது பட்ட காற்று அவளை தடவி என்மீது மோதிச்சென்றதாய் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது எனக்கு.
“போய் வரோம் சார்....தாங்க்ஸ்...” என்று அவள் சொல்ல, அந்த பெண்ணும் என்னை பார்த்து தலையாட்டிவிட்டு வெளியேற, எனக்குள் சொல்லமுடியாத புத்துணர்ச்சி ஏற்பட்டது போல் இருந்தது. கொஞ்சம் நேரம் முன் எவ்வளவு டயர்டாக இருந்ததோ அதன் சுவடுகூட இல்லை. நான் வெளியே காத்திருக்க, அவளோ என்னை பார்ப்பதற்காக உள்ளே வந்து காத்திருந்ததாக தோன்றியது. வெளியே அவளின் சைக்கிள் இருந்திருக்கும். நான்தான் அவசரத்தில் பார்க்கவில்லை என்று என் மீதே கோபம் வந்தது. என் டிவிஎஸ்ஸின் அருகில் நெருக்கியபடி நிறுத்தியிருந்த சைக்கிள் ஒருவேளை அவளுடையதாக இருந்திருக்கும். முன்னமே பார்த்திருந்தால், அவள் இருக்கும் இடத்தில் இன்னும் அரைமணி நேரம் இருந்திருக்கலாமே என்று தோன்றி மனதில் வாட்டம் போல் ஏதோ உறுத்தியது. வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். இந்நேரம் போயிருப்பாள். வெளியே சென்று ஒரு தடவை பார்த்து வரலாமாவென தோன்ற, கால்கள் நகராமல் அப்படியே இருந்தது. அடிக்கடி சீட்டை விட்டு இப்போதெல்லாம் வெளியே போய்வருகிறேன் போல. நான்தான் போகமுடியவில்லை. ‘விஜி....நீயாவது இன்னொருதடவை வாயேன்’ என்று என் மனம் கூப்பாடு போட அந்த வாசலையே வெறித்து பார்த்தேன். ஒரு நிமிடம்தான். அவள் உருவம் வாசலில் தெரிய, நம்பமுடியாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என் அருகில் வந்தாள்.
“என் பேனாவை மறந்துட்டேன் சார்...” என்று டேபிளில் இருந்த அவள் பேனாவை எடுத்தவள், மெதுவான குரலில்
“என்னை பாத்தா அக்கா மாதிரியா தெரியுது... அவளை என் தங்கச்சியான்னு கேட்கறீங்க... அவ என்னை விட ஒரு வயசு அதிகம்” என்றாள்.
நான் பிரமை பிடித்தவன் போல அவளையே பார்த்தேன். அவள் என்னுடன் இப்படி பேசுவதாய் கனவில்கூட வந்ததில்லை. அவள் முகத்தில் இருந்த சிரிப்பு கொஞ்சம் குறைந்து லேசான அதட்டல் தொனியில் பேசினாள்.
“நெறய தடவை முன்னாடி கடை பக்கம் போகாதீங்க... புகை உடலுக்கு கேடு...” என்று சொல்லிவிட்டு ஒரு துள்ளலுடன் ஓட்டமும் நடையுமாக வெளியேற, எனக்கு மனதில் ஒரு பிரளயம் ஏற்பட்டு, எல்லாம் ஆடி அடங்கிய ஒரு மிதப்பு வந்தது. அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேன் என்று தெரியவில்லை. அன்று சாயந்திரம் ஆகும்வரை என் முகத்தில் அந்த உதடு காதோடு ஒட்டிய இளிப்பு அப்படியே இருந்தது.
கதவை சாத்தும்போது ஜாஹிர் வந்தான். அவனின் புது பைக் மிக அழகாக இருந்தது. என் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு அவன் பைக்கில் ஏறிக்கொண்டேன். அவன் எப்போதும் மிக வேகமாக ஓட்டக்கூடியவன். வேகம் என்றாலும் அதில் ஒரு நளினம் இருந்தது அவனிடம். ஒரு சிலர் வேகமாக ஓட்டும்போது மற்றவரை பயமுறுத்தவென்றே ஓட்டுவது போலிருக்கும். அதிக சத்தத்துடன் வளைந்து நெளிந்து செல்வார்கள். ஆனால் ஜாஹிர் ஓட்டுவதை பார்க்க அழகாக இருக்கும். அவன் வேகமாக செல்கிறான் என்பதே, அவனுடன் பயணிப்பவர்களுக்குதான் தெரியும். எங்கேயும் தேவையில்லாத சாகஸங்கள் காட்ட மாட்டான். பைக் ஓட்டுவதை மிக அனுபவித்து ரசித்துச்செய்வான். எனக்கு இந்த கியர் வண்டிகள் மேல் எப்போதும் ஒரு பயம் உண்டு. அதனாலேயே பழைய டிவிஎஸ் ஸை விடாமல் வைத்திருந்தேன். இதை மாற்றினாலும், ஸ்கூட்டர் வகையில் ஏதாவது கியர் இல்லாத வண்டிதான் வாங்குவேன் போல தோன்றியது.
“ஏண்டா இப்படி பேயாட்டம் ஓட்ற... கொஞ்சம் மெதுவாதான் போவேன்....” என்று கத்தினேன் நான்.
“அடேய் பயலே... பைக்கில் இதுமாதிரி போய்ப்பாரு... சொர்க்கம். உனக்கெங்க தெரியபோகுது... நீ ஓட்ற வேகத்துக்கு சைக்கிள்ல போறவங்ககூட உன்னைவிட ஸ்பீடா போயிடுவாங்க...”
எனக்கு கருக்கென்றிருந்தது.
“சாமி... முப்பது வயசாச்சு உனக்கு. இன்னமும் சின்னபையன் நெனப்பு வேணாம்..”
“அலோவ்... இன்னமும் கல்யாணம் ஆகாதா பேச்சிலர்பா... அதுவரை நாம சின்னப்பசங்கதான்...”
“சரி சரி... பேசிட்டே உட்றாத... எங்க உன் ஆளு வரேன்னா... “
“அவ ஏழுமணிக்கு ... நம்ம ஊர் கடைசில ஓப்பன் பண்ணிருக்காங்கல சூப்பர் மார்க்கெட்... அங்க வந்திடுவா... அதுவரை நாம கொஞ்சம் ரிகர்சல் பாத்திடலாம்....”
“என்னடா பீடிகை போடற.....என்ன ரிகர்சல்....?”
அவன் ஊர் தாண்டி ஒரு டீகடையில் நிறுத்தினான். இறங்கி கடைக்குச்சென்றான். நான் வெளியே இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். இன்று நடப்பது எல்லாம் ஏதோ மறுபடி பள்ளி பருவத்துக்கு போனது போல் இருந்தது எனக்கு. இன்று அவள் பேசியது, ஜாஹிர் வந்து அவனுடன் வண்டியில் சுற்றுவது, அவனின் ஆளை தேடிப்போவது என்று ஏதோ சினிமாவின் திரைக்கதை போலிருந்தது. அவன் இரண்டு டீயும் சிகரெட்டும் வாங்கி வந்து என் அருகில் அமர்ந்தான்.
“சிகரெட் வேணாம்டா...” என்றேன்.
“அட... எனக்காகவா... விடு மச்சி... என் ஆளு அப்படிதான் சொல்லுவா... கல்யாணம் வரை வச்சிக்கறேன். அப்புறம் விட்டுடறேன்...” என்று பற்ற வைத்தான். நானும் பற்ற வைத்தேன். டீயை முடித்து டம்ளரை கொண்டுபோய் வைத்துவிட்டு ஒரு பாப்கார்ன் பாக்கட்டை வாங்கிவந்தான்.
“சொல்டா.. என்ன ஏதோ பெரிசா பிளான் போடறேன்ன...?”
அவன் கொஞ்சம் அமைதியாக இருந்தான். ஏதோ சிந்தனையில் இருப்பதாக தோன்றியது. வாய் மட்டும் அசைபோட்டுக்கொண்டே இருந்தது. சிறிது நேரம் கழித்து வாய்திறந்தான்.
“அவ வீட்ல கல்யாணத்துக்கு ரெடியாகறாங்கடா... பயப்படறா....”
“ம்... நீ என்ன செய்யபோற....?”
“வந்து இந்த வாரம் முழுக்க இங்கதான். அவளை எப்படியாவது ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன். நாள் இல்லை. “ என்றான் ஜாஹிர். அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் இருந்த்தை கவனித்தேன்.
“டேய் ...இது கல்யாணம்டா... அவசர முடிவு எடுக்காதே... வம்பாயிடும்... கொஞ்சம் யோசிச்சு பண்ணு...”
“நேரமில்ல மாப்ள... இப்ப நான் போனா... அடுத்து வர ஒரு வருஷம் ஆகிடும். அதுக்குள்ள என்ன வேணா நடக்கலாம்... அவ இல்லன்னா ...நான்....” என்று அவன் தலைகுனிய, நான் பதறி அவன் முகத்தை நிமிர்த்தினேன். அவன் கண்களில் கோர்த்திருந்த கண்ணீரை கண்டதும் எனக்கு பகீரென்றது.
“டேய் லூசுப்பயலே... இது ஒரு விஷயமாடா... எல்லாம் நல்லதா பண்ணிக்கலாம்... இதுக்குபோய் யாராவது அழுவாங்களா...” என்று அவன் தோளை ஆதரவாக பற்றிக்கொண்டேன்.
“எனக்கு சொல்லத்தெரியலடா... அது என்னமோ பண்ணுது. என்னால் இப்ப அழதான் முடியுது. இப்ப உனக்கு புரியுது பாரு... அதான்... அதுக்கு வார்த்தை இல்லை... அவ எனக்கு வேணும் மாப்ள... எனக்காகவே பிறந்தவடா...”
“சரிசரி... விடு பாத்துக்கலாம்...”
அதன்பின் கொஞ்ச நேரம் இருவரும் ஏதும் பேசவில்லை. சில மாதங்களுக்கு முன்னால் இது போல் நடந்திருந்தால் நான் அவனை சரியாக கிண்டல் செய்தே சாய்த்திருப்பேன். ஆனால் அவன் சொல்ல மறந்த அத்தனை உணர்வுகளையும் எனக்குள் அந்த கண்ணீர் கடத்தியது. சில உணர்வுகளுக்கு வார்த்தையே இல்லை என்று அவன் சொன்னதை முழுதாக உணர்ந்தேன்.
நேரமாக, இருவரும் கிளம்பினோம். இப்போது அதிசயமாக அவன் மிக மெதுவாக வண்டியை செலுத்தினான். அவன் முகம் முழுதும் சிந்தனையின் ரேகைகள். எனக்கு கொஞ்சம் பாவமாகவும், பயமாகவும் இருந்தது. இந்த மனநிலையில் தோல்வி என்று ஏதாவது ஏற்பட்டால், அதன் விளைவு விபரீதமாக ஏதும் ஆகிவிடுமோவென சம்மந்தமில்லாமல் ஏதோதோ தோன்றியது.
அந்த சூப்பர் மார்க்கெட் திறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. சூப்பர் மார்க்கெட் என்பது நகர கலாச்சாரம். தற்போதுதான் எங்களின் ஊரில் முதல்படி வைத்திருக்கிறது. நாமே சென்று பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என்பதை நம்பவே ஊர் ஆட்களுக்கு நாளானது. இன்னமும் முழுமையான கூட்டம் கூடவில்லை. ஓரளவு அரசு அலுவலர்களும், காரில் வந்து வாங்கும் சிலருமாகத்தான் இருந்தது. கொஞ்சம் பெரிதுதான். வாடகை இங்கே குறைவு. முன்புறம் குழந்தைகள் விளையாட சிறிய அளவில் பூங்கா போன்று அமைத்திருந்தார்கள். அதை ஒட்டி உட்கார காங்கிரீட்டில் நாற்காலி போன்று இருந்த இடத்தில் அமர்ந்தோம். அவன் அடிக்கடி தன் வாட்சை பார்த்துக்கொண்டிருந்தான். நேரமாக ஆக அவன் முகத்தில் பதட்டம் கூடியது. நான் அங்கே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று பதட்டமாய் எழுந்தான் அவன். அவனை ஒட்டி நானும் எழுந்தேன்.
“அதோடா... அங்க வந்திட்டு இருக்கா பாரு.... சைக்கிள் தள்ளிட்டு... அவதான்...” என்றான் ஜாஹிர். அவன் முகத்தில் பலவண்ண மத்தாப்புகள் ஜொலிப்பதாய் தோன்றியது. அவன் காட்டிய திசையில் பார்த்தேன். அங்கே விஜி தன் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்.


தொடரும்.......







 
Top