கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல் 23

Akila vaikundam

Moderator
Staff member
23

மறுநாள் காலை வானதியை அருகில் இருந்த பெண்மணி வேலைக்கு அழைத்துச் சென்றார்

அந்தப் பெண்மணி அழைத்துச் சென்ற இடம் வசதியானவர்கள் மட்டுமே வாழக்கூடிய ஒரு ஏரியா எல்லாம் தனித்தனியாக மிக பிரம்மாண்டமாக ஒவ்வொரு பங்களாவும் கட்டப்பட்டு இருந்தது.

அவர் சென்ற இடம் ஸ்ரீயின் வீடு

ஸ்ரீதரின் வீடு என்று தெரியாமலே வானதியும் கிளம்பி வந்து விட்டாள்..


அந்த பெண்மணி வானதியிடம் நீ இப்படி ஆட்டோல உட்கார்ந்து இரு நான் உள்ளே போயி அவங்களை பார்த்து பேசிட்டு அதுக்கு அப்புறம் வந்து உன்னை கூட்டிட்டு போறேன் என்று கூறியவர் நேரே உள்ளே சென்றார்

உள்ளே அவனின் தாய் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்க ஸ்ரீதர் சமையலறையில் காபி தயாரித்துக் கொண்டிருந்தான்

அவனின் தாய் இப்பொழுதெல்லாம் இப்படி தான் காலை மெதுவாக தான் எழுவது

எப்பொழுது தூக்கம் வருகிறதோ அப்பொழுது தான் உறங்குகிறார் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய அழுது தீர்த்தது ஸ்ரீக்கு தெரியும் அதனால் தாயை காலையில் தொந்தரவு செய்யாமல் அவனுக்கு வேண்டியதை அவனே தயார் செய்து கொண்டிருக்கிறான்


கடந்த ஒரு வாரமாக வேலைக்கு ஆள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போதெல்லாம் ஆபீஸ் வேலைக்கு கூட பேப்பரில் விளம்பரம் கொடுத்து உடனடியாக வேலைக்கு ஆள் கிடைத்து விடுகிறார்கள்


ஆனால் வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை அந்த அளவுக்கு ஆட்கள் பஞ்சம் என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு காலை உணவாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான் அப்போது வாசலில் அழைப்பு மணியின் ஓசை கேட்க சத்ததில் தாய் எழுந்து விடுவாரோ என்று அடுப்பை அணைத்த படி வேகமாக கதவை திறக்க ஓடினான்.

வாசலில் வானதியின் பக்கத்து வீட்டுப் பெண்மணி நிற்க இவனோ யார் நீங்க என்று விசாரித்தான்


உடனே அவர் வணக்கம் ஐயா வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக ஏஜென்ட் சொல்லியிருந்தாங்க அதுதான் வந்து பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று அந்தப் பெண்மணி கூற

உடனே ஸ்ரீதர் வேலைக்கு வந்தீங்களா ரொம்ப தேங்க்ஸ் வாங்க உள்ள வாங்க என்று அவன் உள்ளே அழைக்க

இல்லைங்க ஐயா நான் வேலைக்கு வரல என் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பொண்ணு தான் வராங்க


பாவம் தாய் தகப்பன் இல்லாத அனாதை பொண்ணு வேலை இல்லாம தனியா இருந்து கஷ்டப்படுது

இங்க ஒரு பதினஞ்சு நாளைக்கு தான் ஆள் தேவைப்படும்னு சொன்னாங்க அத சொல்லிதான் அந்த பொண்ண கூட்டிட்டு வந்திருக்கேன்

15 நாள் இங்க வேலை செய்யட்டும் நீங்க ரொம்ப பெரிய இடம்னு கேள்விப்பட்டேன் அந்த பொண்ணு நல்லா படிச்சு இருக்கு உங்களுக்கு ஒருவேளை வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படலனா கூட உங்க ஆபீஸ்ல ஏதாவது ஒரு வேலை போட்டுக் கொடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் என்று கையெடுத்துக் கும்பிட


அந்தப் பெண்மணியின் தன்னலமற்ற இந்த சேவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது அவனும் முதல்ல கைய கீழ இறக்குங்கம்மா உண்மைய சொல்லப் போனா நான்தான் உங்களை கையெடுத்து கும்பிடனும்


எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு ஒரு பொண்ணுக்கு வேலைக்கு சொன்னோமானு இல்லாம அந்த பொண்ண பத்திரமா கொண்டு வந்துவிட்டதும் இல்லாம அந்த பொண்ண பத்தின விஷயங்களை சொல்லி அந்த பொண்ணோட எதிர்காலத்திற்கு ஏதோ உங்களால முடிஞ்சதை பண்றீங்களே உங்கள மாதிரி ஆளுங்கள பார்த்து நான் தான் கை எடுத்து கும்பிடனும்


போய் அந்த பொண்ண வர சொல்லுங்க கண்டிப்பா அந்த பொண்ணோட படிப்புக்கு எங்க ஆபீஸ்ல ஏதாவது வேலை இருந்தா நான் வேலை கொடுக்கிறேன் என்று கூற அந்த பெண்மணியோ மிகவும் சந்தோஷத்துடன் வானதியை அழைக்க ஓடினார்.


ஆட்டோவில் சற்று பதட்டத்துடன் அமர்ந்திருந்த வானதி இடம் வந்தவர் உன்னை வேலைக்கு எடுத்துக்கிட்டாங்க அப்படியே உன் நிலைமையை பத்தி அவர்கிட்ட கொஞ்சம் சொல்லி இருக்கேன்


நீ என்ன படிச்சிருக்க என்ன வேலை தெரியும்ங்கறத இந்த பதினைந்து நாளில் அப்பப்ப அவங்க காதுல போட்டு வை ரொம்ப பெரிய இடம் நிறைய கம்பெனி ஸ்கூல் எல்லாம் கூட நடத்துறாங்க


நீ கூட ஏதோ ஸ்கூலுக்கு தானே வேலைக்கு போயிட்டு இருந்த அதனால இவங்க ஸ்கூல்ல கூட ஏதாவது வேலை கிடைக்கும் மனச தளர விடாதே நல்ல பிள்ளையாக நடந்துக்கோ என் பேரை காப்பாத்து கெடுத்துறாத என்று கூறியவர் அங்கிருந்து ஸ்ரீதரின் வீட்டுக்கு அழைந்து வந்தார்.

வரவேற்பறையில் இருந்த சோபாவிலேயே அன்றைய நாளிதழை கையில் வைத்தபடி அவர்களுக்காகக் காத்திருந்த ஸ்ரீதர் அப்பெண்மணியை முதலில் பார்க்கவும் எழுந்து நின்றான் பின்னாலே தயங்கியபடி உள்ளே எட்டிப்பார்த்த வண்ணம் வானதி வந்ததைப் பார்த்ததும் கையில் இருந்த நாளிதழ் நழுவிக் கீழே விழுந்தது


வானதியை வேலையை விட்டு நிறுத்தியது என்னவோ அவன் தான் ஆனால் இப்படி அவனின் வீட்டுக்கே வேலைக்கு வருவாள் என்று எதிர்பார்க்க வில்லை.

அதிர்ச்சியில் அப்பெண்மணியை பார்க்க அவரும் தம்பி நான் சொன்ன பொண்ணு இது தான்


சரி தம்பி நீங்க பாத்துக்கோங்க நானும் நாலு ஆபிசுக்கு போய் கூட்டி துடைக்கணும் இப்பவே லேட் ஆயிடுச்சு ஆபீஸ் திறக்கறதுக்கு முன்னாடி போகலனா திட்டுவாங்க என்று அந்தப் பெண்மணி கூறிவிட்டு புயலென கிளம்பி ஓடிவிட்டார்.


வானதியும் அப்பொழுதுதான் ஸ்ரீதரை பார்த்தாள் அப்படியே திரும்பி விடலாம் என்று நினைத்து அவள் திரும்ப எத்தனிக்கும் வேளையில் இவனோ எங்க போற வானதி என்றான் .

அது ….இது உங்க வீடுனு
தெரியாது ...நா வர்றேன் அவள் கிளம்பினாள்.

இப்படி வீட்டு வேலை செய்ய ஆசைப்பட்டதால தான் ஸ்கூல்ல வேலை பிடிக்கலைனு சொன்னியா வானதி உன் அம்மா எப்படி நீ வீட்டு வேலை செய்யறது ஒத்துகிட்டாங்க….சரி அது என்ன அனாதைனு ஒரு அடைமொழி…என்று கேட்டான்.

யாருமே இல்லாதவங்களை அனைதைனு தான் சொல்லுவாங்க

யாருமே இல்லாதவர்களுக்கு சரி உனக்கு தான் அம்மா இருக்காங்கல்ல என்ன கழட்டி விட்ட மாதிரி அவங்ககளையும் துரத்திவிட்டுடியா…

ம்ம்... தொரத்தி தான் விட்டுட்டேன் என்னோட முட்டாள்தனத்தால, பிடிவாதத்தால திமிரால இந்த உலகத்தை விட்டே துரத்தி விட்டேன்

என்ன ….
என்ன சொல்ற உன்னோட அம்மா இறந்துட்டாங்களா எப்போ?

முழுசா ரெண்டு வருஷம் ஆகப்போகுது


அப்போ இவ்ளோ நாளாக நீ தனியா தான் இருக்கியா

ஆமா….

அதுவரை வானதியின் மீது இருந்த கோபம் அவனுக்கு காணாமல் போயிற்று உடனே அவள் மீது ஒரு பரிதாபம் மட்டுமே வந்தது பாவம் இரண்டு ஆண்டுகளாக தாயில்லாமல் ஆதரவில்லாமல் நிராதரவாக நின்றிருக்கிறாள் அவளைத் தனது பங்கிற்கு தானும் வருத்தியிருக்கிறேன். தன்னை திருமணம் செய்ய வில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவளை காயப்படுத்த தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று உணர்ந்து கொண்டவன்


சாரி ஆன்ட்டி இறந்த விஷயம் எனக்குத் தெரியாது ரொம்ப நல்லவங்க அவங்களுக்கு இவ்வளவு சீக்கிரமா சாவு வந்திருக்கவேண்டும்


சரி இப்போ நீ வீட்டுக்கு போ நான் உனக்கு ரெண்டு நாள்ல வேற நல்ல வேலை பார்த்து கொடுக்கிறேன் செலவுக்கு பணம் வச்சிருக்கியா என்று கேட்டவன்

ஒரு நிமிஷம் இரு என்று உள்ளே சென்றான் அன்று அவளுக்கு பள்ளியில் கொடுத்த பணத்தையும் அவனிடமிருந்து கொஞ்ச பணத்தையும் எடுத்து வந்து அவளிடம் கொடுக்க அவள் எனக்கு பணம்லாம் வேணாம் ரொம்ப நன்றி என்று அவனின் முகம் பார்க்காமல் வாசலை விட்டு இறங்க


இது உன் காசு தானே ஸ்கூல்ல வேலை செஞ்சது அன்னைக்கு உன் சம்பளத்தை எடுக்காமலே வந்துட்ட அட்லீஸ்ட் சம்பளப் பணத்தை மட்டும் வாங்கிட்டு போ உன் காசு எனக்கு வேண்டாம் என்று இவன் கூற

அங்கேயே நின்றவள் நின்றிருந்த இடத்திலிருந்து கையை மட்டும் நீக்கினாள் உடனே அவன் எடுத்து வந்ததை அவள் கையில் கொடுக்க அவள் அதை வாங்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே உள்ளேயிருந்து மீனாட்சியின் குரல் கேட்டது


ஸ்ரீதர் யாருடா அது யாரோட இவ்வளவு நேரமா பேசிட்டு இருக்கு



இவனுக்கு நொடியில் பயம் தொற்றிக்கொண்டது தனது தாய் இவளை இங்கே பார்த்தால் மீண்டும் அழத் தொடங்கி விடுவார் இல்லை என்றால் கோபத்தில் கத்த தொடங்கிவிடுவார் இரண்டில் எது நடந்தாலும் தனது தாயின் உடல் நலத்துக்கு கேடு என்று நினைத்தவன்


யாரோ அட்ரஸ் கேட்டு வந்தாங்க அதான் தெரியலனு சொல்லிட்டு இருந்தேன்…
சரி நீங்க போங்க...என்று அவன் திரும்புவதற்க்குள்…
கையில் ஃபோனுடன் மீனாட்சி வெளியே வந்து விட்டார் .

வானதியோ மெதுவாக கேட்டை திறந்த படி வெளியே நடக்க தொடங்கினாள்.

ஸ்ரீதர் வேலைக்கு ஆள் வேணும்னு பதிவு பண்ணி வைத்திருந்த ஏஜென்ட் கிட்ட இருந்து போன் வந்திருக்கு...

அந்த பொண்ணு ஓகேவா இல்ல வேற யாரும் ஏற்பாடு பண்ணனுமானு கேட்டாங்க நம்ம வீட்டுக்கு தான் அப்படி யாருமே வரலையே அதான் இன்னும் வரலனு சொன்னேன் என்று கூற


அவங்க வந்தாங்க எனக்கு பிடிக்கலனு திருப்பி அனுப்பிட்டேன் வேற ஆள் அனுப்ப சொல்லுங்க


என்ன வேலைக்கு ஆள் வந்தார்களா
என்றவர் மொபைல் போனில் சார் நான் கொஞ்ச நேரம் கழிச்சு உங்களை கூப்பிடுறேன் போனை வைங்க என்று கூறிவிட்டு காலை கட் செய்தவர்


ஏன்டா இந்த ஒரு வாரமா வேலைக்கு ஆள் கிடைக்காமல் எவ்வளவு கஷ்டப்படறேன் நீ பாட்டுக்கு வந்தவங்கள திருப்பி அனுப்பி இருக்கற


இல்லம்மா அவங்களால வீட்டு வேலை யெல்லாம் செய்ய முடியாது படிச்ச பொண்ணு பாவம் அத ஏன் வீட்டு வேலை செய்ய வைக்கணும் அதனால நம்ம ஆபீஸ்ல ஏதாவது வேக்கன்சி பார்த்து வேற ஏதாவது வேலை தர்றேன்னு சொல்லி திருப்பி அனுப்பிவிட்டேன்


பைத்தியக்காரன் மாதிரி பேசாத ஸ்ரீதர் நம்ம ஆபீஸ் வேக்கன்சி ஆகற வரைக்கும் அந்த பொண்ணு இங்க ஏதாவது வேலை செய்வா. இல்ல


அட்லீஸ்ட் அம்மாவோட பேச்சு துணைக்காக கூட இருக்கட்டுமே யாரு இப்ப வந்துட்டு போறாளே அந்த பொண்ணா நீ தள்ளு நான் கூப்பிடுறேன் என்றவர்


அவரின் வீட்டின் கேட்டை திறந்தவர் ரோட்டில் நின்ற படி நடந்துகொண்டிருந்த வானதிக்கு அழைத்த இந்தாம்மா பொண்ணு கொஞ்சம் இப்படி வா என்று சத்தமாக அழைக்கவும் நடந்து கொண்டிருந்த வானதிக்கு மீனாட்சியின் குரல் கேட்கவும் அங்கே நின்றாள்.


அதற்குள் ஸ்ரீதரும் வாசலுக்கு வந்து விட்டான் அம்மா அந்த பொண்ணு வீட்டு வேலைக்கு எல்லாம் சரி வர மாட்டா அவ போகட்டும் விடுங்க என்று கூறினான்.

அப்போ என்கிட்ட நீ பொய் சொல்லி இருக்க அட்ரஸ் கேட்க வந்ததா அதெல்லாம் முடியாது போய் அந்த பொண்ண கூட்டிட்டு வா

இந்தா பொண்ணே போகாதே இங்க வா என்று அதிகாரமாக மீனாட்சி கூப்பிட

அவளின் வார்த்தையை தட்ட முடியாமல் வானதி திரும்பி அவர்களை நோக்கி வர வரவு மே மீனாக்ஷி வானதியை அடையாளம் கண்டு கொண்டார்

டேய் இது அந்த பொண்ணு அவ தான அந்த வானதி உன்ன வேணாம்னு தூக்கி வீசியவ அவ தானே அது என்று ஸ்ரீதரின் சட்டையை பிடித்து கேட்க அவனும்


ஆமாம்மா அதான் சரிவராதுனு திருப்பி அனுப்பினேன் அவ போகட்டும் நாம உள்ள போகலாம் என்று மீனாட்சியை உள்ளே அழைக்க

அவரும் இல்லல்ல நான் உள்ள வரல அவ வரட்டும் நம்ம வீட்டு வேலைக்கு தான வந்தா

நம்ம வீட்டில் அவ வேலை செய்யட்டும்
அவ திரும்பி போக விடாத அவள உள்ள கூப்பிடு என்று கூறியவர் உள்ளே சென்று சோஃபாவில் அமர்ந்தார் கோபத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மூச்சுவிட சிரமப்பட்டு படி அமர்ந்திருந்தார் மீனாட்சி


ஸ்ரீதருக்கும் வானதியை அவனின் தாயிடம் விட பயம் ஏற்கனவே வானதி மீது கடும் கோபத்தில் இருப்பவர் இப்பொழுது வானதி தானாக வந்து தாயின் கைகளில் சிக்க போகிறாள் என்ன செய்யப் போகிறாரோ என்று வானதியின் மீது மேலும் பரிதாபம் உண்டாயிற்று


வானதி வீட்டின் அருகே வரவுமே ப்ளீஸ் வானதி ஒரு பத்து நாள் தான் அதுக்குள்ள நான் எப்படியாவது அம்மாவைக் மூணார் கூட்டிட்டு போயிருவேன் அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ


அவங்க ஏதாவது சொன்னா அது பெருசு படுத்தாத உனக்கு எவ்வளவு சம்பளம் வேணாலும் கொடுக்க நான் தயாராக இருக்கேன் தயவு செஞ்சு அவங்கள சங்கட படுத்திடாத ஏற்கனவே நீ அவர்களை ரொம்பவே காயப்படுத்திட்ட

அதையே இன்னும் மறக்க முடியாம கஷ்டப்படுறாங்க மறுபடியும் எதுவும் பேசி அவங்களுக்கு பெரிய காயத்தை குடுத்திடாத உன்னை நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன் என்று கூறியபடி உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளேயே கடும் கோபத்தில் இருந்த மீனாட்சி வானதியை பார்த்ததும்
வேலை செய்ய தான வந்த அப்புறம் என்ன வேலை செய்யாம நீ பாட்டுக்கு போற…

கடவுள் எவ்வளவு நல்லவர் பாத்தியா என்னையும் என் பிள்ளையும் ஏமாத்தி எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தின நீ இன்னைக்கு உன்னோட அடுத்த வேளை சாப்பாட்டுக்காக எங்க வீட்டு வாசல்ல வந்து நிற்கிற

உண்மையிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டேய் ஸ்ரீதர் இவ எவ்வளவு சம்பளம் கேட்டாலும் குடு ஆனால் நாம இங்கே இருக்கிற வரைக்கும் இவ தான் நம்ம வீட்டுல வேலை செய்யணும் அது மட்டும் இல்ல இனி எனக்கு என்ன வேலைனாலும் இவ மட்டும் தான் செய்யனும்

நீ அதுல தலையிடக்கூடாது என்று கூற ஸ்ரீதர் தர்மசங்கடத்தில் வானதி யைப் பார்த்தான் விளக்கை தேடி வந்து மாட்டிக் கொண்ட விட்டில் பூச்சி போல் அவன் கண்களுக்கு வானதி தெரிந்தாள்.

தனது தாயிடம் சென்று அம்மா கொஞ்சம் பொறுமையா இருங்கம்மா கோபப்படாதீங்க என்று அவளை சமாதானப்படுத்த


கோபமா எனக்காக கண்டிப்பாக கிடையாது இத்தனை நாள் என் மனசுல இருந்த கோபமும் ஆத்திரமும் காணாம போயிடுச்சி

நீ ஸ்கூலுக்கு கிளம்பி போடா இனிமே இந்த வீட்டை எப்படி பாத்துக்கனும்னு எனக்கு தெரியும் என்று கூற ஸ்ரீதருக்கும் பகீரென்று ஆனது


தனது தாய் வானதியை நன்றாகவே வைத்து செய்யப் போகிறார் அது மட்டும் புரிய அவளைப் பார்த்தபடியே அவன் உள்ளே சென்றான்.


அதன் பிறகு வானதி மீனாட்சி எப்படி இருந்தாலும் தனக்கு அதிகப்படியான வேலை கொடுப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்க

மீனாட்சியோ அவளை ஒரு வேலை கூட செய்யவில்லை சரியான நேரத்திற்கு சமைத்து சாப்பிட கொடுத்தார் அன்றைய நாள் முழுவதும் அவளை உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்க விடவில்லை இதுதான் அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை என மீனாட்சி நினைத்தார்

ஸ்ரீதர் மாலை சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தான் காலையில் வானதியை அவன் தாயிடம் விட்டுவிட்டு வந்து இருக்கிறான் அவன் தாய் ஏதாவது அவளை நோகடித்தாலும் இல்லை அவள் அவனின் தாயை காயப்படுத்தினாலும் பாதித்து என்னவோ அவனுக்குத்தான்

அதனால் வேகமாக வீட்டிற்கு வர வானதியோ கைகளைப் பிசைந்தபடி வரவேற்பறையில் இருந்த ஒற்றை ஸ்டூலில் அமர்ந்து கொண்டிருக்க உள்ளே மீனக்ஷி சாய்வாக அமர்ந்த படி டிவி பார்த்துக் கொண்டிருந்தார்

இதைப் பார்த்ததும் வானதியைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றவன் என்ன அம்மா வானதி வெளியே உட்கார்ந்துட்டு இருக்கா நீங்க டிவி பார்த்துட்டு இருக்கீங்க வேலை இல்லனா வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம் இல்ல என்று கேட்க உடனே கோபத்தில் எழுந்து அமர்ந்தவர்

எதுக்காக அனுப்பனும் அவளுக்கு ஆறு மணி வரைக்கும் நேரம் இருக்கு அதுவரைக்கும் அப்படியே உக்காரட்டும்
அதுக்கப்புறம் அவ எங்க வேணாலும் போகட்டும் என்று கூறியவர் உனக்கு ஃகாபி வச்சி தரவா என்று கேட்டார்.

ம்ம்...சரிம்மா
என்று வானதியை பார்த்துக்கொண்டே அவனின் அறைக்குச் சென்று ஆடை மாற்றி விட்டு வெளியே வரவும் அவனின் தாய் வானதியிடம் ஒரு காப்பி கோப்பையை நீட்டினால்

அவளோ வேண்டாம் என்று தலையசைக்க.


நீ எங்க வீட்டுக்கு வேலைக்கு வந்து இருக்க உன்ன பாக்க வச்சி குடிச்ச ஷ பாவம் எங்களுக்கு வேண்டாம் இந்த குடி என்று அவளிடம் கோபமாக கையில் ஒரு கோப்பையினை திணித்துவிட்டு


மகனுக்கும் அவளுக்கும் ஆளுக்கொரு கோப்பைகளை எடுத்து படி ஸ்ரீதரிடம் வந்து ஏதோ கதை பேசியபடி காஃபியை குடித்து முடித்தார்.


வானதியோ அந்த ஃகாபியை குடிக்க மனமில்லாமல் கையில் வைத்தபடி கோப்பையை சுற்றிக் கொண்டிருந்தாள்

சில நேரம் கழித்து வந்த மீனாட்சி அவளிடம் காபியை கப்பினை கேட்க அவள் குடிக்காமல் வைத்திருப்பதைப் பார்த்து கோபம் கொண்டவர் மகாராணிக்கு என்னோட ஃகாபி பிடிக்கலையோ என்று கேட்க

வேகமாக ஒரே மிடக்காய் குடித்து விட்டு கப்பினை அவரின் அவரின் கையில் கொடுத்தாள்.


மணி எப்போதுடா ஆறு ஆகும் என்று காத்திருக்க அவள் எதிர்பார்த்த 6 மணியும் வர அவஸ்தையில் நெளிந்தாள் அவளும் தான் காலையிலிருந்து ஏதோ விருந்திற்கு வந்தவள் போல காபி டிபன் மதிய உணவு என எல்லாம் சரியான நேரத்திற்கு கிடைக்கிறது

ஆனால் வேலை என்று ஒரு துரும்பை கூட எடுத்து வைக்கவில்லை ஒரே இடத்தில் கிட்டத்தட்ட 10 மணிநேரமாக அமர்ந்திருக்கிறாள் விட்டால் போதும் இந்த பக்கமே திரும்பி கூட பார்க்க மாட்டாள் அந்த மனநிலமைக்கு வந்திருந்தாள்

அவளின் அவஸ்தையை பார்த்த மீனாட்சி சிரித்தபடி ஸ்ரீதர் வா நைட்டு டிபன் செய்யலாம் அம்மாக்கு ஹெல்ப் பண்ணு என்று கேட்க


அவனோ நேரத்தையும் வானதியையும் மாறி மாறி பார்த்து விட்டு தாயின் பின்னே சென்றான் பிறகு சமையலறையில் மிக மெதுவாக பல்லைக் கடித்துக்கொண்டு அம்மா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க அவள பிடிக்கலன்னா காலையிலேயே போனாள்ல அப்படியே விட்டுடலாம்


இப்படி வீட்டுக்கு வேலைக்கு வானு சொல்லிட்டு காலையிலிருந்து ஒரே இடத்தில் உட்கார வெச்சு இருக்கீங்க பாவம்மா மணி ஆயிடுச்சு என்று கூற எனக்கு தெரியும்டா என்று கூறியபடி சமையலை முடிக்க மணி 8 ஆகியிருந்தது


வானதி என்ன செய்வது என்று புரியாமல் கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருக்க அவர்கள் இருவரும் முன்னுரைக்கு வரவும் எழுந்து நின்றாள்


ஸ்ரீதர் தான் தாயை முறைத்துக்கொண்டு சரி நீங்க கிளம்புங்க நாளைக்கு இங்க வரவேண்டாம் என்று நேரடியாகக் கூற


மீனாட்சி குறுக்கிட்டு ஸ்ரீதர் வீட்டு விஷயத்தில் நீ தலையிடாதே இங்க பாரு வானதி நாளைக்கும் நீ ஒழுங்கா வேலைக்கு வர்ற என்று கறாராகக் கூறி விட்டு

ஸ்ரீதரை பார்த்து அவ நாளைக்கு வேலைக்கு வரல அப்புறம் அம்மா மறுபடி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிச்சிடுவேன் ஞாபகம் வச்சுக்கோ என்று கூறிவிட்டு உள்ளே செல்ல

வானதியோ விட்டால் போதும் என்று தலையை அசைத்து அவள் வேகமாக ஓடிவந்து காலில் காலனியை போட்டுவிட்டு திரும்ப அப்படியே பிரேக் அடித்தது போல் அதிர்ச்சியில் கண்களை விரித்து படி நின்றாள்


வெளியே கடும் மழை பெய்து கொண்டிருந்தது வீட்டிற்குள் இருந்ததால் இவ்வளவு நேரம் அவளுக்கு தெரியவில்லை எப்படி இந்த மழையில் இந்த நேரத்தில் தான் தனியாக செல்வது என்று யோசித்தபடி பாவமாக ஸ்ரீதரை பார்க்க ஸ்ரீதரும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான்

பிறகு எதுவுமே பேசாமல் உள் அறைக்குச் சென்று அவனுடைய கார் சாவியை எடுத்து வெளியே வரவும் மீனாட்சி வந்து தடுத்தார்

எங்கடா போற


வெளியே ரொம்ப பலமான மழைமா அவ எப்படி வீட்டுக்கு போவ ஆட்டோ கூட கிடைக்காது இந்த மழைல என்று சொல்ல


அது அவ பிரச்சனை அதுக்கு தான சம்பளம் வாங்குறா எப்படியோ போகட்டும் விடு நீ போகக்கூடாது என்று கூற

அம்மா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க மனிதாபிமானமா பேசுங்க அவள் ஆறு மணிக்கு அனுப்பியிருந்தா இந்த பிரச்சினையே இல்லை வேணும்னே அவளை ரெண்டு மணி நேரம் எக்ஸ்ட்ராவா புடிச்சு வச்சிட்டீங்க

இப்போ இவ்வளவு மழை இந்த ராத்திரி நேரத்துல எப்படி அவளை தனியா அனுப்ப முடியும் பாவம் முதல்ல கூட ஷ அவ ஆறுதலுக்கு வீட்ல அவ அம்மா இருந்தாங்க இப்ப அவங்களும் இல்ல
மழை விட்டு அவ வீட்டுக்கு போய் எப்போ அவ சமைச்சி
சாப்பிட்டு கொஞ்சம் யோசிச்சு பாருங்க அம்மா என்று கூற


அவளுக்கு தாய் இல்லை என்று தெரியவும் அதிர்ச்சியில் அவளை பார்த்து என்ன அவங்க அம்மா இல்லையா எப்படி என்று கேட்க


காலையில இவளை கூட்டிட்டு வந்தாங்களே அந்த அம்மா தான் சொன்னாங்க அதுக்கு அப்புறமாத்தான் ஸ்கூலுக்கு போற முன்னாடியே அந்த அம்மாவை போய் பார்த்தேன் அவங்க தான் சொன்னாங்க கல்யாணத்தை நிறுத்திய கொஞ்ச நாள்லேயே அவங்க சரியாச் சாப்பிடாம கவலையில இறந்து போனதா

யோசிச்சு பாருங்க நீங்க எந்த மாதிரி கஷ்டத்தை அனுபவிக்கறீங்களோ அதே கஷ்டத்தை அனுபவிச்சிட்டு அதை தாங்க முடியாம அவங்க அம்மா இறந்தே போயிட்டாங்க அவளை விட்டிடுங்க அவ அம்மாவுக்காகவாவது இவள மன்னிச்சிடுங்க மா

என்று தன்மையுடன் கேட்க மீனாட்சியின் மனம் இறங்கியது. சரி அவளைக் கொண்டுபோய் வீட்டுல விட்டுட்டு வா சீக்கிரம் வந்துரு என்று கூறிவிட்டு அவரின் ரூமில் சென்று அடைந்து கொண்டார்.


தொடரும்...
 
Top