கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 1

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே!

அத்தியாயம் 1

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயம் என்றெண்ணிப் படிவண்டைச் செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான்!

( நளவெண்பாப் பாடல்)

செங்காந்தள் மலரின் இதழ்களை அழகான பெண்களின் விரல்களுக்குக் கவிஞர்கள் ஒப்பிடுகிறார்கள். காந்தள் மலர், கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகிறது. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது.

நந்தினியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஊரே அவளுடைய அதிர்ஷ்டத்தைக் கண்டு மூக்கில் விரல் வைத்து விட்டது.

பின்னே ஏழைப் பெண்ணான நந்தினிக்கு அவ்வளவு பணக்கார இடத்தில் திருமணம் ஆனது எல்லோருக்கும் ஆச்சர்யம் தரும் விஷயம் தானே!

ஊரிலேயே பெரிய பணக்காரரான மகேந்திர பூபதி ஜமீன்தாரின் ஒரே மகன் ராஜசேகர பூபதியை அதாவது இளைய ஜமீன்தாரை மணந்து கொண்டதால் ஜமீன்தாரிணியாகி விட்டாள் நந்தினி. அழகில் சிறந்தவள் தான் நந்தினி. ஆனால் அந்தஸ்திலோ பணத்திலோ ஜமீன் குடும்பத்திற்கும் நந்தினியின் குடும்பத்திற்கும் காத தூரம்.

அவள் அப்பா நாகலிங்கம் ஊரில் இருக்கும் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர். ஊரில் நல்ல மதிப்பு உண்டு அவருக்கு. ஆனால் ஏழை தான். மாத வருமானம் கிடைப்பதால் ஏதோ வீட்டில் சமையலறை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது.

கிடைக்கும் சம்பளத்தை மகளுக்காகவோ, அவளுடைய திருமணத்திற்காகவோ சேர்த்து வைக்கும் வழக்கம் எல்லாம் கிடையவே கிடையாது அவருக்கு. யாராவது ஏதாவது உதவி என்று கேட்டால் கையில் இருப்பதைத் தயங்காமல் தூக்கிக் கொடுத்து விடும் குணம் அவருக்கு. அதனால் கையில் காசே நிற்காது.

நந்தினிக்குப் பத்து வயதிருக்கும் போது நந்தினியின் தாய் விஷக் காய்ச்சல் வந்து இறந்து போனாள். அவள் இறந்த நாளில் இருந்து தாயுமாக மாறி நந்தினியைப் பாசத்தைக் கொட்டி வளர்த்தார். நல்ல பண்புகளும் கல்லூரி வரையிலான படிப்பும் தான் நந்தினிக்காக அவர் சேர்த்து வைத்த நகைகள்.

எளிமையான உடை அணிந்து தலையில் பூக்களைச் சூடிக் கொண்டு கோயிலுக்குச் சென்ற நந்தினி பெரிய ஜமீன்தார் கண்களில் பட, நந்தினியைப் பற்றி விசாரித்திருக்கிறார்.

அடுத்த நாளே பெண் கேட்டு ஜமீன்தார் வீட்டில் இருந்து செய்தி வர நாகலிங்கத்தால் மறுக்க முடியவில்லை.

ஒரே ஒரு வருத்தம் தான் நாகலிங்கத்திற்கு. இளைய ஜமீன்தாருக்கு இது இரண்டாவது திருமணம். முதல் மனைவி பெரிய பணக்கார வீட்டுப் பெண். அவளும் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவள் தான். குழந்தை பிறந்தவுடன் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் தாயும் மகளும் இறந்து போனதாக ஊரார் பேசிக் கொண்டார்கள்.

அதனால் தான் இரண்டாவது திருமணத்திற்கு ஏழைப் பெண்ணாகப் பார்த்து முடிக்க நினைக்கிறார் பெரிய ஜமீன்தார் என்று ஊர்மக்கள் சொன்னார்கள். நாகலிங்கம் மகிழ்ந்து போய் உடனடியாக சம்மதம் சொல்லத் திருமணமும் கோயிலில் வைத்து எளிமையாக நடந்து விட்டது. கோயிலை ஒட்டியிருந்த மண்டபத்தில் ஊருக்கே விருந்துச் சாப்பாடு.

ஜமீன்தார் வீட்டில் இருந்து வந்த பட்டுப் புடவையையும் உடல் நிறைய நகைகளையும் பூட்டி வந்து மணக்கோலத்தில் நின்ற நந்தினி, பூரண அழகோடு கோயிலில் வீற்றிருக்கும் அம்பாள் போன்ற கோலத்தில் வந்து நின்ற போது நாகலிங்கம் மனம் நெகிழ்ந்து போனார்.

தன் மகளுக்கு நல்ல அதிர்ஷ்டம் தான். அதனால் தான் இவ்வளவு பெரிய இடத்து சம்பந்தம் அதுவும் தானாகவே வந்திருக்கிறது என்று அகமகிழ்ந்து போனார்.

பாவம் அவருக்குத் தெரியவில்லை. நந்தினி அனுபவிக்கப் போகும் சோதனைகளும் எதிர்கொள்ளப் போகும் போராட்டங்களும் கண்டிப்பாக அவருக்குத் தெரிந்திருந்தால் அந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கவே மாட்டார்.

நாகலிங்கம் செய்த மாபெரும் தவறு அவர்களுடைய ஊரில் இருக்கும் கோயிலில் இருக்கும் குருசாமியைக் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டார்.

நந்தினியின் கிராமம் கொல்லி மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது. அந்த ஊரில் இருக்கும் கொற்றவை கோயில் தான் ஊரின் காவல் தெய்வமான கொற்றவையின் புகழ் வாய்ந்த கோயில்.

கொற்றவை சாதாரணமாகவே மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கும் சக்தி வாய்ந்த தேவி.

கிராமத்தின் கோடியில் மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது கொற்றவையின் கோயில். அந்தக் கோயிலில் தான் குருசாமி என்பவர் எப்போதாவது வருவார். வரும் போதெல்லாம் அருள் வாக்கு தந்து விட்டுப் போவார். அந்தக் கொற்றவையின் இன்னொரு கோயில் மலை மேல் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் இருப்பதாக ஊர் மக்கள் சொல்வார்கள்.

குருசாமி எப்போதும் மலைக் கோயிலில் தான் இருப்பார் என்றும் எப்போதாவது தான் மலை அடிவாரக் கோமிலுக்கு வருவாரென்றும் மக்கள் சொல்வார்கள். அவர் ஒரு சித்த புருஷர் என்று சிலரும், அவர் சித்தர் இல்லை; ஆனால் சித்தர்களை நேரில் சந்தித்துப்
பேசும் பாக்கியத்தைப் பெற்றவர் என்றும் மக்கள் பேசிக் கொள்வார்கள். அதனால் தான் அடிக்கடி மறைந்து போகிறார் என்று சொல்வார்கள். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று பெரியோர் சொல்வது போலத் தான் அவரும் நடந்து கொள்வார்.

அவர் அந்த மாதிரி கொற்றவை கோயிலில் வந்திருக்கும் சமயங்களில் நாகலிங்கமும் நந்தினியும் அவரைச் சந்தித்திருக்கிறார்கள்.

நாகலிங்கத்தின் மனைவி இறப்பதற்கு முன்னால், " பெரிய துயரம் ஒன்று உன்னை வந்து அணைக்கும்"
என்று நாகலிங்கத்திற்கு எச்சரிக்கை ஏற்கனவே செய்திருக்கிறார். அதனால் அவருடைய கருத்திற்கு எப்போதும் அதிக மதிப்பு கொடுப்பார்.

ஆனால் ஜமீன்தார் வீட்டு சம்பந்தம் பற்றி குருசாமியிடம் கலந்து ஆலோசிக்காமல் சரியென்று ஒத்துக் கொண்டு விட்டார்.

ஆனால் கோயிலுக்குப் போனாலும் குருசாமி எப்போதும் இருப்பார் என்றும் சொல்ல முடியாது. பெரிய வீட்டு சம்பந்தமாயிற்றே, அவர்களிடம்‌ நான் யோசித்துச் சொல்ல முடியாதே என்ற தயக்கத்துடன் சரியென்று உடனடியாகச் சொல்லி விட, அடுத்த இரண்டு நாட்களில் திருமணமும் முடிந்து விட்டது. நந்தினி தனது புகுந்த வீட்டிற்குக் கிளம்பி விட்டாள்.

கொற்றவையின் கோயிலில் தேவியின் எதிரே, மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். மங்கல நாணை மணமகன், நந்தினியின் சங்குக் கழுத்தில் பூட்டினான்.

மிகவும் எளிமையாகத் திருமணம் முடிந்தது. பெரியவர்களின் ஆசிகளை மணமக்கள் பெற்றுக் கொண்டார்கள். ஊர் மக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இதோ நந்தினி, புது மணப்பெண்ணாகப் புகுந்த வீட்டிற்குக் கிளம்பி விட்டாள்.

நாகலிங்கத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. மனம் நிறைந்து போயிருந்தது. கைகளை உயர்த்தி ஆசிகளை வணங்கினார். அவர் காலடிகளில் விழுந்து வணங்கினாள் நந்தினி.

நந்தினியைத் தனது தந்தையுடன் தனிமையில் பேச விட்டு விட்டு இளைய ஜமீன்தார், தனது குடும்பத்தினருடன் அவர்களுடைய காருக்கருகில் காத்துக் கொண்டிருந்தார். அவர் பார்க்க நன்றாகத் தான் இருந்தார். நந்தினியின் அழகுக்கு ஏற்ற ஜோடி தான். ஆனால் முகத்தில் ஏதோ வெறுமையும், சோகமும் தெரிந்தன.

" தேனும் இனிமையும் போல, தமிழும் மேன்மையும் போல, பூமியும் இயற்கையும் போல, நீயும் உன் கணவரும் சேர்ந்து ஒற்றுமையாக இல்லறம் நடத்தி, வாழ்க்கையின் அத்தனை வளங்களையும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! " என்று மனதார வாழ்த்தினார்.

" பிறந்த வீட்டின் பெருமை குறையாமல், புகுந்த வீட்டின் உயர்வுக்கும் காரணமாக நீ வாழவேண்டும். உழைப்பிற்கோ, முயற்சிக்கோ குறைவில்லாமல் அந்தக் குடும்பத்திற்கு தேவையான தூணாக நின்று அனைவரையும் காக்க வேண்டியது தான் உன்னுடைய கடமை.

எழுந்திரும்மா. பெண் குழந்தைகளை தேவியின் அம்சங்களாக நெனைக்கிற குடும்பம் நம்மோடது. நீ என் காலில விழாதேம்மா. எனக்குப் பாவம் தான் சேரும். மனம் நிறைய அன்பும், பண்பும் தான் நான் உனக்குத் தரும் பிறந்த வீட்டுச் சீர்" என்று சொல்லி வாழ்த்தி அவளை அனுப்பி வைத்தார்.

அவளை அழைத்து வந்து புகுந்த வீட்டினரிடம் சேர்த்து விட்டுக் கைகளைக் கூப்பினார்.

" இன்னும் ஒரு வாரத்தில் பௌர்ணமி வருகிறது. பௌர்ணமி அன்று இரவு நடுநிசியில் பூஜை செய்ய, குருசாமி எப்படியும் கொற்றவை கோயிலுக்கு வருவார். அவரிடம் ஆசிகள் வாங்கிக் கொள்ள நந்தினியை நீங்கள் இரண்டு நாட்களுக்குப் பிறந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும் " என்று ஜமீன்தாரின் வேண்டிக் கொண்டார். ஜமீன்தாரும் சரியென்று தலையசைத்து அனுமதி தந்தார்.

நந்தினி கிளம்பிச் சென்றாள். மகளைப் பிரிந்த துக்கத்தை மனதில் அடக்கிக் கொண்டு, மகளின் நல்வாழ்வுக்காகக் கொற்றவை தேவியை மனதார வேண்டிக் கொண்டார்.

நந்தினி, தனது புகுந்த வீட்டைச் சென்று அடைந்தாள். பெரிய மாளிகை செல்வச் செழிப்புடன் கண் முன்னே மின்னியது.
புது மணமக்களை ஆரத்தி சுற்றி வரவேற்றார்கள்.

" வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா நந்தினி " என்று ஜமீன்தார், மருமகளும் சொல்ல, நந்தினி வலது காலை எடுத்துப் படியில் வைத்தாள்.

மிகப்பெரிய வண்டொன்று எங்கிருந்தோ வந்து நந்தினியின் கழுத்தில் இருந்த பூமாலையைச் சுற்றத் தடுமாறிய நந்தினியின் கால் கட்டை விரல் படியில் பலமாக மோதியது.

வலியைப் பொறுத்துக் கொண்ட நந்தினி, மெல்லிய அடிகளை வைத்து மாளிகைக்குள் நுழைந்தாள்.

நந்தினியின் கால் கட்டை விரலில் பட்ட காயத்தில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது அவளுக்குத் தெரியவில்லை.

நந்தினி நடந்து சென்ற வழியில் அவளுடைய அடி பட்ட இடங்களில் எல்லாம் இரத்தத்துளி சிந்திக் கொண்டே சென்றது.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்,

 
Top