கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 10

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 10

அத்தியாயம் 10

அறிவு பூர்வமாக எதையும் யோசிக்காமல், நந்தினி அவருக்கு ஏற்கனவே கொடுத்த எச்சரிக்கையையும் மறந்து விட்டு,
நாகலிங்கம் கண்ணீர் மல்க அந்த வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்.
மகளை நினைத்து, " நந்தினி, நந்தினி" என்று அரற்றிக் கொண்டு உணர்ச்சிப் பிழம்பாகத் தான் உட்கார்ந்திருந்தார்.

சிறிது தொலைவு சென்றதும் ஊரின் எல்லையை நெருங்கினார்கள். கார் திடீரென்று நின்று போனது. " காலையில் தான் பெட்ரோல் ரொப்பிட்டுக் கெளம்பினேன். புது கார் வேற. ஏன் இப்படி சண்டித்தனம் செய்யுது? " என்று புலம்பிக் கொண்டே கார்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே இறங்கினான் அந்த டிரைவர்.

இறங்கியவன் திகைத்துப் போய்ப் பார்த்தான். காரின் எதிரே, நட்ட நடு ரோடில் கையில் இருந்த நீளமான கம்பைத் தரையில் ஊன்றியபடி நின்ற அந்தப் பெரியவரைப் பார்த்து அசந்து போனான்.‌ அவருடைய முகத்தில் இருந்த தேஜஸும், பார்வையின் தீக்ஷண்யமும் சேர்ந்து அவனைத் தாக்கின. அடிவயிறு கலங்கியது.

" யோவ் பெருசு, என்ன இது நட்ட நடு ரோடில நின்னு வேடிக்கை பாத்துட்டிருக்கே இப்படி? வீட்டில சொல்லிட்டு வந்துட்டயா? நல்லவேளை வண்டி நின்னு போச்சு. இல்லைன்னா நீ என்னவாயிருப்பயோ?" என்றதும், குருசாமி சத்தம் போட்டுச் சிரித்தார். கண்களை மூடிக் கொண்டு , " நந்தினி, நந்தினி" என்று புலம்பிக் கொண்டு உட்கார்ந்திருந்த நாகலிங்கம் சுயநினைவுக்கு வந்தார். கார் நின்று போனதை உணர்ந்து வெளியே வந்தார்.

" எனக்கு ஒண்ணும் ஆகாது. இப்ப உனக்குத் தான் என்ன ஆகப் போகுதோ தெரியலை!" என்று சொல்லிச் சிரித்த குருசாமி அவன் முகத்தை, அதுவும் கண்களை உற்றுப் பார்த்தார். உடனே அவன் பின்பக்கமாகக் குட்டிக்கரணம் அடிக்கத் தொடங்கினான்.

" ஐயோ அப்பா, நிறுத்துங்க. என்னை விட்டுருங்க. நான் திரும்பி ஓடியே போயிடறேன்" என்று கதறினான் அந்த மனிதன்.

சுயநினைவுக்கு வந்த நாகலிங்கம், குருசாமியைப் பார்த்து விட்டார்.

" சாமி நீங்களா? நந்தினி கீழே விழுந்து தலையில பலத்த காயமாம். என்னைக் கூட்டிட்டு வரச் சொல்லி ஜமீன் வீட்டில் இருந்து கார் அனுப்பிருக்காங்க சாமி. நந்தினி பொழைக்கறது கஷ்டம்னு சொன்னதும் உங்க கிட்டக் கூடச் சொல்லாம நான் டக்குன்னு கெளம்பிட்டேன் சாமி" என்றார் நாகலிங்கம்.

" இது பொய்யான தகவல் நாகலிங்கம். உன்னைக் கடத்தி, உன் மூலமாக நந்தினியின் பூஜையைத் தடை செய்வதற்காக எதிரி தீட்டிய திட்டம் இது. நந்தினி, உன் கிட்ட சொல்லிட்டுப் போகலையா? நிறையத் தடங்கல்கள் வரலாம். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கணும். சரி, சரி, வா, கோயிலுக்குப் போய் நேரத்தை விரயம் செய்யாமல் பூஜையை ஆரம்பிக்கலாம். நாம் செய்யப் போகும் பூஜையின் பலன் நந்தினிக்கு உதவியாக இருக்கும்" என்று சொல்லி விட்டுக் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்

அதற்குள் நிறுத்தாமல் குட்டிக்கரணம் போட்டுக் கொண்டிருந்தவனின் செயல்கள் நின்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவன் காரை நோக்கி வந்தான்.

" இவனைச் சும்மா விடலாமா குருசாமி? இவனை நான் போலீஸில புடிச்சுக் குடுத்துட்டு வரவா?" என்றார் நாகலிங்கம்.

" விட்டுத் தள்ளு. இவன் வெறும் அம்பு தான். எய்தவன் எங்கோ அடுத்தடுத்து சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறான். நாம் போய் தேவியை வழிபட்டு அவனுடைய சதிச்செயல்களை முறியடிக்கும் வழியைப் பார்ப்போம்" என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடக்க, நாகலிங்கம் அவர் பின்னே தொடர்ந்து சென்றார்.

" நந்தினி கிட்ட ஒரு தடவை ஃபோன் செஞ்சு பேசிப் பாத்துடட்டுமா? " என்று கேட்டார்.

" வேண்டாம் நாகலிங்கம். அவ செஞ்சுக்கிட்டு இருக்கற இறுதி பூஜைக்கான ஆயத்தங்களில் அவளுக்குத் தொந்தரவா இருக்கும் அது. நான் சொல்லறதை நம்பு. கொற்றவைத் தாயிடம் நம்பிக்கை வை. அவள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். என்ன செய்யவேண்டும் என்று அவளுக்குத் தெரியாதா? அநீதியை அழித்து நீதியை நிலைநாட்டும் செயலை அவளே செய்வாள்" என்று குருசாமி பதில் சொன்னதும், நாகலிங்கத்தின் மனம் அமைதி கொண்டது.



குட்டிக்கரணம் போட்ட அந்த அடியாள், குருசாமி சென்ற திசையை, மனதில் அச்சத்துடன் பார்த்து விட்டு, காரில் ஏறி எதிர் திசையில் சென்றான். தன் கண் முன்னே நடந்த அதிசயச் செயலைத் தன்னை அனுப்பியவரிடம் சொல்ல வேண்டுமே? அவர் பயங்கரக் கோபக்காரர். " கொடுத்த வேலையை உருப்படியாக முடிக்கத் தெரியாதா?" என்று நிச்சயமாகக் கத்தப் போகிறார். பயந்து கொண்டே வண்டியை ஓட்டினான்.

அங்கே நந்தினி அதிகாலையில் எழுந்து பூஜையறையில் பூஜையைத் தொடங்கினாள். அன்று மாலையில் அவளுடைய பூஜைக்கான இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. மனதில் கொஞ்சம் கலக்கமும் அச்சமும் எட்டிப் பார்த்தன. அவற்றைத் தலையைத் தட்டி உள்ளே அடக்கினாள்.

அவள் தேவி துதிகளைச் சொல்லிக் கொண்டு கைகூப்பிப் பூஜையறையில் நின்று கொண்டிருந்தபோது, ஹாலில் இருந்த ஜமீன்தாரின் ஃபோன் அடித்து, அதைத் தொடர்ந்து அவர் பேசியதும்,
" சித்ரா , சித்ரா" என்று பதட்டத்துடன் அழைத்தார்.

" ஹாஸ்பிடலில் இருந்து தகவல் வந்திருக்கு. நம்ப ராஜசேகர் காலையில் ஆஸ்பத்திரிக்குப் போற வழியில ஆக்ஸிடென்ட் ஆயிருச்சாம். ஐ. சி.யூ. ல இருக்கானாம். சீக்கிரம் கெளம்பு" என்று பதட்டத்துடன் பேசினார்.

" ஐயோ, முருகா! என்னங்க சொல்றீங்க? இது என்ன சோதனை? முருகா, என் பையனைக் காப்பாத்துப்பா. பால்குடம் எடுக்கறேன். பாலாபிஷேகம் செய்யறேன்" என்று கதறி அழ ஆரம்பித்தாள்.

" நந்தினி , நந்தினி, இங்கே வாம்மா. சீக்கிரம் கெளம்பு" என்று மகேந்திர பூபதி குரல் கொடுத்தார். நந்தினி அசையவில்லை. கண்களை மூடி தியானம் செய்து கொண்டிருந்தாள்.

சித்ரா தேவிக்குப் பொறுக்க முடியாமல் நந்தினி பக்கத்தில் வந்து கத்தினாள். லேசாகக் கண்களைத் திறந்த நந்தினி, " அவருக்கு ஒண்ணும் ஆகலை. அவர் நல்லாத் தான் இருக்காரு. நீங்க அனாவசியமாகக் கவலைப் படாதீங்க"
என்று சொல்லி விட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தாள்.

" என்ன பொண்ணு இவ? இப்படி அசையாம உக்காந்திருக்காளே? அதிர்ச்சியில் மூளை, கீளை குழம்பிப் போச்சா?" என்று புலம்பிக் கொண்டே சித்ரா தேவி, கணவருடன் கிளம்பினாள்.

மருத்துவமனையை அடைந்து வேகமாக உள்ளே ஓடினார்கள். எதிரே வந்த ஸலோனி, அவர்களைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தாள்.

" ஆன்ட்டி, என்ன ஆச்சு? ஏன் இப்படி பதட்டத்தோட ஓடி வரீங்க? யாருக்கு உடம்பு சரியில்லை?" என்று கேட்டாள்.

" ராஜசேகர் எங்கேம்மா? அவனைத் தான் பாக்கணும்?" என்று கேட்டதும், " ஆபரேஷன் தியேட்டரில் இருக்காரு" என்று பதில் சொன்னாள்.

" ஐயோ, அவ்வளவு அடி பட்டிருக்கா? ஆபரேஷன் பண்ணற அளவு ஸீரியஸா?" என்று சித்ரா தேவி புலம்பினாள். ஸலோனி உடனே,

" என்ன ஆண்ட்டி சொல்லறீங்க? டாக்டர் ராஜசேகர் , பேஷண்டுக்கு இல்லை ஆபரேஷன் பண்ணிட்டிருக்காரு? யாருக்கு அடி பட்டிருக்கு? யாரைப் பத்திக் கேக்கறீங்க?" என்று கேட்க, அவர்கள் எதை நம்புவது, எதை நம்பாமல் விடுவது என்று புரியாமல் அவளைப் பார்க்க, ராஜசேகரே அந்த சமயத்தில் ஆபரேஷனை முடித்து விட்டு வெளியே வந்தான். பெற்றோரை மருத்துவமனையில் பார்த்து அவனும் பயந்து போனான்.

" என்னம்மா ஆச்சு? யாருக்கு உடம்பு சரியில்லை? ஏன் இவ்வளவு டென்ஷனில இருக்கீங்க?" என்று கேட்டதும், மகனுக்கு ஒன்றுமில்லை என்ற ஆனந்தமும், இவ்வளவு நேரம் இருந்த டென்ஷன் விலகியதால் மனநிம்மதியும் ஒரே நேரத்தில் கிடைத்தது.

" அப்பாடி, நீ நல்லா இருக்கயாப்பா? உனக்கு ஏதோ ஆக்ஸிடென்ட் ஆனதா அப்பாக்கு இப்ப ஃபோன் வந்தது. நாங்க பதறியடிச்சுட்டு ஓடி வந்தோம்" என்று சித்ரா தேவி சொன்னதும், ராஜசேகர் அவர்களைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்கக் கொடுத்து, அவர்கள் அமைதியானதும் அவர்களிடம் விசாரித்தான்.

" ஏம்பா, யாரோ வேணும்னு இந்தக் காரியத்தைச் செஞ்சிருக்காங்க. ஃபோனில ஏதாவது தகவல் வந்தா உடனே நம்பிருவீங்களா? ஹாஸ்பிடலுக்கு உடனே ஃபோனைப் போட்டு விசாரிச்சிருந்தா உண்மை தெரிஞ்சிருக்குமே? எதுக்கு இப்படி நீங்க பதறியடிச்சுக்கிட்டு வரணும்?" என்று கடிந்து கொண்டான்.

எந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்ததோ, அந்த எண்ணைத் தொடர்பு கொள்ளப் பார்த்தான். " இந்த எண் உபயோகத்தில் இல்லை" என்று பதிவு செய்யப்பட்ட குரல் மீண்டும் மீண்டும் சொன்னது. ' யார் இந்த மாதிரி செஞ்சிருப்பாங்க?' என்று யோசித்துப் பார்த்தால் அவனுக்குப் புரியவில்லை.

" நந்தினி, நம்பிக்கையோட அவருக்கு ஒண்ணும் ஆகலைன்னு சொன்னா. நாங்க தான் அவ சொன்னதை நம்பலை. அவளைத் திட்டிட்டு நாங்க கெளம்பி வந்துட்டோம்" என்று சொன்னதும், ராஜசேகருக்கு ஆச்சரயமாக இருந்தது.

' சாதாரணமாக யாராக இருந்தாலும், கணவனுக்கு ஆபத்து என்றால் பதறித் தானே போவார்கள்? நந்தினி எப்படி நம்பாமல் நிதானமாக இருந்திருக்கிறாள். இந்தப் பெண்ணிடம் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது"' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

" சரி, ஜாக்ரதையா வீட்டுக்குத் திரும்பிப் போங்க. நான் வேலை முடிஞ்சதும் சாயந்திரம் வரேன். நான் பத்திரமாத் தான் இருக்கேன். என்னைப் பாத்துட்டீஙக இல்லையா? தைரியமாக வீட்டுக்குப் போங்க" என்று அவர்களை அனுப்பிய பின்னரும் அவன் மனதில் என்னவோ சங்கடம் செய்தது. ஏதோ எங்கோ தவறாக நடக்கப் போவதாக உள்ளுணர்வு கூறியது.

சித்ரா தேவியும், மகேந்திர பூபதியும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். நுழைந்ததும் ஹாலில் நெளிந்து கொண்டிருந்த எண்ணற்ற பாம்புகள் தான் கண்ணில் பட்டன. ஏகப்பட்ட பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. வேலையாட்கள் பயத்துடன் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள்.

" என்னடா இப்படி வேடிக்கை பாத்துக்கிட்டு நிக்கறீங்க? அடிச்சுத் தூக்கிப் போடுங்க" என்று கத்தினார் மகேந்திர பூபதி.

" இல்லைய்யா, இவ்வளவு நெறையப் பாம்புகளும் ஒரே சமயத்தில் எப்படி வந்ததுன்னு தெரியலை. எங்களால இத்தனை பாம்புகளையும் பிடிச்சு அடிக்க முடியுமான்னு தெரியலைய்யா" என்று பதில் சொன்னதும், அவர்கள் சொன்னதும் உண்மை தான் என்று மகேந்திர பூபதி புரிந்து கொண்டார்.

அவருக்கு உடனே ஞாபகம் வந்தது. பாம்பைப் பார்த்தவுடன் அடித்துக் கொல்லாமல், அவைகளை இலாவகமாகப் பிடித்து, வனத்திற்குள் கொண்டு போய் விடுவதற்காகவே இயற்கை ஆர்வலர் குழு ஒன்று அவர்கள் பகுதியில் இருந்தது. பாம்புகளைக் கொல்லக் கூடாது. காப்பாற்ற வேண்டும் என்பது அவர்களுடைய கொள்கை.

அவர்களுடைய ஊர் ஒரு மலையின் அருகே இருந்ததால் இது போலப் பாம்புகள் வீட்டுக்குள் வருவது சகஜம் தான். அந்தக் குழுவின் கிளை ஒன்று அவர்கள் ஊரிலேயே இருந்ததால், அவர்களை அழைத்துத் தகவலைச் சொன்னதும், அவர்கள் வந்து பாம்புகள் அத்தனையையும் பிடித்துக் கோணியில் கட்டி எடுத்துக் கொண்டு போனார்கள்.

இத்தனை அமர்க்களத்திலும் நந்தினி வெளியே வரவேயில்லை. தன்னுடைய தியானத்திலேயே ஆழ்ந்திருந்தாள். கண்கள் மூடியபடி இருந்தன. வாய் ஏதோ துதியை விடாமல் ஜபித்துக் கொண்டிருந்தது.

அப்போது தான் சித்ரா தேவிக்கு உண்மை புரிந்தது. யாரோ நந்தினி செய்யும் பூஜைக்குத் தடங்கல் செய்ய முயற்சி செய்ககறார்கள் என்றும், அதற்காகவே அவர்களுக்குப் பொய்யான தகவல் கொடுத்து வீட்டை விட்டு அகற்றி இருக்கிறார்கள் என்றும் அவளுக்குப் புரிந்தது.

நந்தினியின் தீவிர பக்தியையும், அசராத அவளுடைய நம்பிக்கையையும் உடனே அவளால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

தானும் மனதார முருகனை வேண்டிக் கொண்டாள். ' முருகா, என்னப்பா , நந்தினி மனசில எதையோ சாதிக்கணும்னு உறுதியா நின்னு உடலை வருத்தி இந்தப் பூஜையில் இறங்கியிருக்கா. அவளோட பூஜையும் தடங்கல் எதுவும் வராம நல்லபடியா முடியணும். அவ நெனைச்சதும் நடக்கணும்' என்று முதன் முறையாக மருமகளுக்காக முருகனிடம் விண்ணப்பத்தைப் போட்டு வைத்தாள்.

மாலை வரை பூஜையறையை விட்டு வெளியே வராத நந்தினி , மாலையில் தான் வெளியே வந்தாள். அவர்களிடம் சொல்லிக் கொண்டு முருகன் கோயிலுக்குக் கிளம்பினாள். கிளம்பும் போது ஒரு கூடையில் செங்காந்தள் மலர்களையும், ஒரு குடத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

" இன்னைக்கு ஷஷ்டி. இன்னையோட பூஜை முடிஞ்சுடும். நான் வரக் கொஞ்சம் லேட்டாகலாம். கவலைப் படாதீங்க" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

" நானும் கூட வரட்டுமா?" என்று கேட்ட, சித்ரா தேவியைத் தடுத்து நிறுத்தி விட்டுத் தனியாகக் கிளம்பினாள்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்

 
Top