கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 11

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 11

அத்தியாயம் 11

நந்தினி, கையில் பூஜைக்கான சாமான்களுடனும், மனதில் நம்பிக்கையுடனும் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

நேரே ஆற்றங்கரையில் சென்று குளித்து விட்டுக் குடத்தில் ஆற்று நீரை எடுத்துக் கொண்டாள். முதலில் ஜமீன் குடும்பத்தின் இஷ்ட தெய்வமான முருகனை தரிசனம் செய்து விட்டு, வேல் இருந்த சந்நிதியிலும் சென்று தரிசனம் செய்தாள்.

கார்த்திகைப் பூக்களாலான மாலையை முருகனுக்கும் வேலுக்கும் சாற்றி விட்டுக் கூடையில் இருந்த மீதி மலர்களோடு அபலாவின் சந்நிதி இருந்த இடத்தை அடைந்தாள்.

அங்கே மலர்களைத் தூவி அபலாவை மனதில் நினைத்துத் தனது செயல்களில் துணை நிற்கும்படி வேண்டினாள்.

" பொன்னி, நீ எங்க இருக்கயோ எனக்குத் தெரியலை. உன்னை அநியாயமாக் கொன்னவங்களையும் எனக்கு அடையாளம் காட்டிக் கொடு" என்று கேட்டாள்.

அங்கிருந்து ஏற்கனவே அடையாளம் கண்டுபிடித்து வைத்திருந்த வேப்ப மரத்தின் கீழ் போய் நின்றாள்.

தான் குடத்தில் கொண்டு வந்திருந்த ஆற்று நீரை மரத்தின் அடிபாகத்தில் ஊற்றினாள். பின்னர் அந்த மரத்தின் கீழே இருந்த நிலப்பரப்பில் அந்த நீரைச் செதும்பத் தெளித்தாள். கூடையில் இருந்த செங்காந்தள் மலர்களை அந்த இடத்தில் தூவினாள். கைகளைக் கூப்பியபடி அங்கே நின்று கொண்டு,

"முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக் கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர
எனவோதும்

முக்கட் பர மற்க்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமூ வர்க்கத் தமரரும்
அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ......
இரவாகப்

பத்தற்கிர தத்தைக் தடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும்
ஒருநாளே!

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு
கழுகாட

திக்குப்பரி அட்டப் பயிரவி
தொக்குத்தொகு தொக்குத்
தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ......
எனவோத

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென
முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல
பெருமாளே! "

( திருப்பகழ்- அருணகிரிநாதர் அருளியது)

சத்தமாக அவள் பாடியதில் அந்த இடமே அதிர்ந்தது. பாடி முடித்ததும் கொற்றவை தேவியை மனதில் எண்ணித் தான் நினைத்து வந்த காரியத்தை முடிக்க அருள் வேண்டினாள்.

" கொற்றவைத் தாயே! உனது குழந்தைகளுக்கு அருள் செய்! கையில் சூலத்தோடு வந்து அசுரனை அன்று அழித்தது போல இன்றைய அசுரனை அழிக்க வா! மஹிஷாசுரனை வதம் செய்தது போல், எங்கள் குடும்பத்துக்கு எதிரியான அந்தத் தீயவனை எனக்கு அடையாளம் காட்டு. நான் தேடி வந்த பொருளை என் கைகளில் நீ தான் சேர்க்க வேண்டும்" என்று கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தாள்.

" அக்கா, இங்கிருந்து சீக்கிரமாப் போயிருங்கக்கா. அவன் உங்களையும் பலி கொடுத்திருவான்.‌ அபலா அக்காவை வயித்தில கொழந்தையோடக் கொன்ன கொடூரமானவன் அவன் தான். நான் அவன் யாருன்னு கண்டுபிடிச்சதால என்னையும் கொன்னுட்டான்.

அவனோட பலம் தெரியாம, நான் தனியா அவனோட மோதப் போனேனே, அங்கே தான் நான் தப்புப் பண்ணிட்டேன். அபலா அக்காவைக் கொன்னதோட மட்டுமில்லாமல் அவங்க ஆத்மாவைத் தன்னோட மந்திர சக்தியால வசியப்படுத்தி வச்சிருக்கான். அவங்க ஆவியை ஏவித் தான் உங்களை பயமுறுத்தப் பார்த்தான்.

ஆஸ்பத்திரியில் வச்சு உங்களைக் கொல்ல முயற்சி செஞ்சதும் அவன் தான். நான் அதைக் கண்டுபிடிச்சு, அவனைக் காட்டிக் கொடுக்கறதா மிரட்டினேன். அது தான் நான் செஞ்ச பெரிய தப்பு.

என்னோட ஆவியையும் வசியப்படுத்த அவன் முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கான். என்ன காரணமோ தெரியலை, அவனால இதுவரை அதைச் செய்ய முடியலை. எந்த நிமிஷமும் அவனுக்கு வெற்றி கெடைக்கலாம். போயிடுங்க அக்கா" என்று கெஞ்சிய பொன்னியின் குரல் அவளுடைய காதுகளில் கேட்டது.

ஆனாலும் நந்தினி பயப்படவில்லை. அந்த மரத்தடியில் ஓர் இடத்தில் கையில் கிடைத்த குச்சியால் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அங்கே தோண்ட ஆரம்பித்தாள். வாயாலும், மனதாலும் கொற்றவையின் துதிகளை நிறுத்தாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்போது திடீரென்று அவளைச் சுற்றி மாய உருவங்கள் தோன்றின. கத்திக் கூச்சலிட்டன. அவளுடைய கவனத்தைச் சிதைக்க முற்பட்டன. அவற்றால் அந்த வேப்பமரத்தை நெருங்க முடியவில்லை. அவற்றின் கூச்சல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தன.

அடுத்ததாக கண்ணைப் பறிக்கும் மின்னலோடு கூடிய இடி, மழையும் தொடர்ந்தன. இயற்கையின் சீற்றமோ, செயற்கையாகத் தோன்றிய மாய உருவங்களின் கூச்சல்களுமே எதுவுமே நந்தினியை அசைக்கவில்லை. தன் உறுதியில் குலையாமல் நந்தினி,தனது செயலைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

நந்தினியின் வாயும் துதியைச் சொல்வதை நிறுத்தவில்லை. அவளுடைய கைகளும் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தவில்லை.

" போயிடு, ஓடிப் போயிடு. இங்கிருந்து போயிடு" என்று திருமணம் ஆகி வந்தவுடன் அவளுடைய அறையில் கேட்ட அதே குரல் கேட்டது. அப்படியும் நந்தினி திரும்பவில்லை. கை தொடர்ந்து மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தது. அவள் கையில் ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டது. அதைத் தன் பலத்தை எல்லாம் கூட்டி வெளியே இழுத்தாள்.

பித்தளையோ வெண்கலமோ தெரியவில்லை, மஞ்சளாக இருந்த உலோகத்தால் ஆன ஒரு செவ்வக வடிவப் பெட்டி. மண்ணிலேயே புதைந்து கிடந்ததால் அதன் நிறம் மங்கிப் பொலிவிழந்து காணப்பட்டது.

அதைத் திறந்து பார்த்தாள். உள்ளே ஒரு பட்டுத் துணியால் சுற்றப்பட்ட வேல் ஒன்று இருந்தது. தங்கத்தால் செய்யப்பட்ட வேல். நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட வேல். மேலே இலை போன்ற முக பாகத்தில் விபூதிப் பட்டைகள் போல வைரங்கள் பதிக்கப் பட்டிருந்தன. தண்டுப் பகுதியில் நவரத்தினங்கள் பதிக்கப் பட்டிருந்தன. கண்ணைப் பறிக்கும் படியாக மின்னின. அதை அந்தத் துணியோடு வெளியே எடுத்து,

" வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
வெற்றி வேல்! வீர வேல்!" என்று கூவிக் கொண்டு, வேலைக் கையால் தூக்கப் போனாள். அதற்கு முன்னால் அந்த வேலைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

" நந்தினி, நந்தினி" என்று அவளுடைய ‌அப்பாவின் குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பியதில் அந்த வேல் துணியோடு அவளுடைய கையில் இருந்து நழுவியது.

நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய தந்தை நாகலிங்கம் அவளுடைய எதிரில் நின்று கொண்டிருந்தாள். அவருடைய கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு ஒரு கறுப்பு உருவம் நின்று கொண்டிருந்தது.

கறுப்பு நிறத்தில் பளபளக்கும் பட்டு வேட்டி. தார் பாய்ச்சுக் கட்டு. தோளில் இரண்டு பக்கங்களிலும் வழிந்து கொண்டு கழுத்தைச் சுற்றிப் போடப்பட்ட கறுப்பு நிற அங்கவஸ்திரம். சிறிய அளவிலான மண்டை ஓடுகளால் கோர்க்கப் பட்ட மாலை. முகத்தில் கறுப்பு வர்ணம் பூசப் பட்டிருந்தது. சிவந்த கண்கள் தெறித்து விழுவது போல இருந்தன. நெற்றில் சந்தனம். நடுவில் பெரிய குங்குமம். கையில் ஒரு நீளமான எலும்புத் துண்டு. தலைமுடியைச் சேர்த்துக் குடுமி போல முடிந்து கொண்டிருந்தான்.

" என்னுடைய வேலையைப் பாதிக்கு மேல் எளிதாக்கி விட்டாய். உன்னைக் கொன்று நான் வழிபடும் காளிக்குக் காணிக்கை ஆக்கி, அவள் மனதைக் குளிர்வித்து, உன்னுடைய மற்றும் அபலாவின் ஆவிகளை ஏவி அந்த வேலைக் கைப்பற்ற நினைத்தேன். நீ என்னுடைய வேலையை இவ்வளவு எளிதாக்கி விட்டாய். யாரோ பெரிய ஆள் தான் உனக்கு அறிவுரை தந்து பூஜை செய்ய வைத்திருக்கிறார். ஏதோ மகா சக்தி உனக்கு உதவி செய்கிறது. ஆனாலும் பயனில்லை. நான் இதோ கொஞ்ச நேரத்தில் ஜெயிக்கப் போகிறேன். நீயாக அந்த வேலை என் பக்கம் தூக்கிப் போட்டு விடு. இல்லையென்றால் உன்னுடைய அப்பாவின் உயிருக்கு நான் உத்தரவாதமில்லை" என்று அவன் உறுமினான்.

அவனுடைய தோற்றத்தை மறைத்துக் கொண்டிருந்தாலும் அவனுடைய குரல் அவளுக்கு ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தது. தோற்றமும் அவள் சந்தித்த யாரையோ நினைவு படுத்தியது.

" அம்மா நந்தினி, அவன் சொல்லறதைக் கேளும்மா. அந்த வேலை அவன் கிட்டக் கொடுத்திரும்மா. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு" என்று அவர் சொன்னபோது தான் அவள் மனதில் லேசாக சந்தேகம் எழுந்தது.

' அப்பா உயிர் போனாலும் பரவாயில்லை. அநீதிக்கு அடி பணியக்கூடாதுன்னு தானே நமக்குச் சொல்லிக் குடுத்து வளத்தாரு. இப்ப அவரே இப்படிப் பேசறாரே?' என்று நினைத்தவள், நாகலிங்கத்தைப் பார்த்துப் பேசினாள்.

" நான் தான் உங்களைக் கோயிலில குருசாமியோட இருங்கன்னு சொன்னேன் இல்லையா? எதுக்கு நீங்க கோயிலை விட்டு வெளியே வந்தே?" என்று கேட்டாள்.

" இல்லைம்மா, இவனோட சக்தி குருசாமியோட சக்தியை விட அதிகமா இருக்கு . அவரை எதுத்து நின்னு ஜெயிச்சுட்டான். அவரை அடிச்சுப் போட்டு மயக்கமாக்கிட்டு என்னைத் தூக்கிட்டு வந்துட்டான்" என்றார். நந்தினியின் மனதில் சந்தேகம் வலுத்தது.

" குருசாமி என்ன? இன்னும் கொஞ்ச நேரத்தில் உலகத்திலேயே மாபெரும் சக்தியா நான் மாறப் போறேன்" என்று சொல்லி விட்டுச் சத்தமாகச் சிரித்தான்.

" சரி, நான் வேலைத் தூக்கிப் போடறேன். நீ அப்பாவை ஒண்ணும் செஞ்சுடாதே" என்று சொல்லி விட்டுக் கீழே குனிந்து அந்த வேலைக் கையில் எடுத்தாள்.

ஒரு கையால் பட்டுத்துணியோடு சேர்த்து வேலை எடுத்தவள், இன்னொரு கையால் கொஞ்சம் அந்த இடத்தில் இருந்த மண்ணையும், செங்காந்தள் மலர்களையும் அள்ளினாள். நொடிப் பொழுதில் வலது கையில் வேலை இறுகப் பிடித்துக் கொண்டு இடது கையால் மண்ணையும் மலர்களையும் சேர்த்து அவன் பக்கம் எறிந்தாள்.

அவன் கண்ணில் மண் துகள்கள் விழுந்தன. மழை பெய்து ஈரமண்ணாக இருந்ததால் கண்களில் நன்றாக ஒட்டிக் கொண்டது. மேலே பட்ட செங்காந்தள் மலர்களை வேகவேகமாகத் தள்ளினான். ஒவ்வொரு மலரும் அவன் உடலைத் தணல் போல் சுட்டது. எரிச்சலுடன் கத்தினான். கையிலிருந்த கத்தி கீழே விழுந்தது.

உடனே ஒரு பெரிய அதிசயம் நடந்தது. அவன் அருகிலிருந்த நாகலிங்கத்தின் உருவம் மறைந்தது. அந்த இடத்தில் அபலாவின் ஆவி உருவம் தோன்றியது.

" உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது. இனியும் உன்னுடைய மந்திர சக்தியை வைத்து என்னை நீ கட்டுப்படுத்த முடியாது. நீ செய்த வசிய சக்தி இன்றோடு மடிந்தது. என்னை இனிமேல் உன்னால் உன் இஷ்டம் போல ஆட்டி வைக்க முடியாது. என் குழந்தை என்னை மீட்க வந்துவிட்டான். அவனுடன் நான் போகிறேன்" என்றாள்.

அவளுக்கு மிகவும் அருகில் ஒரு சிறிய வட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஒன்றின் உருவம் மிதந்து கொண்டிருந்தது. நந்தினி பார்க்கும் போதே அந்தக் குழந்தை ஒரு கையை நீட்ட, அபலா அந்தக் கையைப் பிடித்து அப்படியே மிதந்து மிதந்து பறந்து சென்றாள். அந்தக் காட்சியைப் பார்த்த நந்தினியின் உடல் சிலிர்த்தது.

" நந்தினி, உன் கையில் இருக்கும் வேலை அவனிடம் கொடுத்து விடாதே. அதை உன்னுடனே வைத்துக் கொள். அதை அடையத் தான் இந்தக் கொடிய மாந்த்ரீகன் இத்தனை நாட்களாகப் பிரயத்தனம் செய்கிறான்" என்று சொல்லி விட்டு அபலா, குழந்தையுடன் அங்கிருந்து மறைந்தாள்.

" அவ சொல்லறதை நம்பாதே. ஒழுங்கா அந்த வேலை எங்கிட்டக் கொடுத்துரு. நான் உன்னை உயிரோட விட்டுடறேன்" என்றான் அந்த மாந்த்ரீகன். நந்தினி அசையாமல் நின்றாள்.

" இதுக்கெல்லாம் பின்னால யாரு இருக்காங்கன்னு தெரிஞ்சா உனக்குப் பெரிய அதிர்ச்சியா இருக்கும். என்னை ஏவினது வேற ஆளு. அது யாருன்னு தெரிஞ்சா நீயே வெறுத்துப் போய் என் பக்கம் சேந்துடுவே" என்று நக்கலாகச் சொன்னான். அப்படியும் நந்தினி அசரவில்லை.

" உன்னுடைய மாமியார் சித்ராதேவியும், மாமனார் பெரிய ஜமீன்தாரும் இதையெல்லாம் நடத்தற சூத்திரதாரிகள். உன்னை வச்சு ஏதோ காரியத்தை சாதிச்சுட்டு உன்னைக் கொல்லறது தான் அவங்க திட்டம்" என்று அவன் சொன்னதைக் கேட்டதும் நந்தினியின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

அப்போது அந்த மாந்த்ரீகனின் பின்னால் வந்து நின்ற ஜமீன்தார் மற்றும் சித்ராதேவி மேல் அவளுடைய பார்வை பட்டது. வெளிறிய முகங்களுடன் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்,

 
Top