கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 12

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 12

அத்தியாயம் 12

நந்தினி அதிர்ச்சியுடன் பார்க்க, சித்ராதேவி, மகேந்திர பூபதியின் பின்னால் இருந்து ஸலோனி முன்னே வந்தாள். அந்த மாந்த்ரீகனைக் கோபத்துடன் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள்.

அப்போது தான் நந்தினிக்கு மனதில் உரைத்தது. அவள் எதிரே மாந்த்ரீகனாக நிற்பது வேறு யாருமல்ல, டாக்டர்.அபிராஜ் என்ற உண்மை கத்தியாக அவளுடைய உள்ளத்தில் சுரீரென்று இறங்கியது.

" அவன் சொல்லறதை நம்பாதே நந்தினி. அவன் பெரிய ஃப்ராடு. உன் கிட்டப் பொய் சொல்லி உன்னை அவன் பக்கம் இழுக்கப் பாக்கறான்" என்று நந்தினியைப் பார்த்துக் கத்தினாள் ஸலோனி.

" சொந்த அண்ணனையே மாட்டி விடப் பாக்கறயே, இது உனக்கே நல்லா இருக்கா?" என்று அபிராஜ், ஸலோனியிடம் கேட்க, ஸலோனி கொதித்து எழுந்து விட்டாள்.

" யாருடா தங்கை? நீ செஞ்ச ஃப்ராடுத்தனமெல்லாம் எனக்கு எப்பவோ தெரிஞ்சுடுச்சு. உன்னோட உள்நோக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்காக நான் அமைதியா இருந்தேன். உன்னோட மனசில ஏதோ சதித்திட்டம் இருக்குன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. காலேஜில வந்து நீயா, என் கிட்ட ஒட்டிக்கிட்டே. என் அம்மாவோட கஸின் ஸிஸ்டர் மகன். சிங்கப்பூரில் பெத்தவங்க ஆக்ஸிடென்டில இறந்துட்டாங்கன்னு நீ சொன்னதை நானும் அப்படியே நம்பினேன். எங்க வீட்டுக்கும் உன்னைக் கூட்டிட்டுப் போனோம். எங்க வீட்டுலயும் உன் கிட்ட அன்பும், பாசமும் காட்டினாங்க. நீ நல்லவன்னு நம்பித்தான் இங்கயும் ராஜசேகரோட ஹாஸ்பிடலில் சேத்து விட்டேன். இப்ப சமீபத்தில் தான் சிங்கப்பூரில் இருந்து வந்த உறவினர் ‌கிட்டயிருந்து, நீ சொன்ன எங்க பெரியம்மாவோட கொழந்தையும் அதே ஆக்ஸிடென்டில் இறந்த விஷயம் தெரிஞ்சது. அன்னையில் இருந்து உன்னை நான் க்ளோஸா வாட்ச் பண்ணிட்டுத் தான் இருக்கேன்" என்றாள்.

" ஆமாம். நான் பொய் தான் சொன்னேன். நானும் இதே ஊரைச் சேந்தவன் தான். எங்க தாத்தா பெரிய மந்திரவாதி. இந்த ஊரில பேரும் புகழோடு இருந்தவரு. இந்த ஊரு மக்கள் அவர் கிட்ட ரொம்ப மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தாங்க.

இந்த ஊரு முருகன் கோயிலோட நிர்வாகம் இந்த ஜமீன் குடும்பத்துக் காரங்க கிட்டப் பரம்பரை, பரம்பரையா இருக்கு. முருகனுக்குச் சாத்தற விசேஷ சக்தி வாய்ந்த நவரத்தின வேல் பத்தியும், இவங்க குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பொக்கிஷத்தைப் பத்தியும் எங்க தாத்தாவுக்குத் தெரிய வந்தது.

அந்த ரெண்டையும் எப்படியாவது கைப்பத்தணும்னு முயற்சி செஞ்சாரு. அப்ப ஜமீன்தாரா இருந்த ராஜசேகரோட தாத்தாக்கு இந்த விஷயம் தெரிஞ்சு போயி, எங்க தாத்தாவை ஊர் மக்கள் முன்னால அவமானப்படுத்தி, ஊரை விட்டே தொரத்திட்டாரு.

குடும்பத்துப் பொக்கிஷத்தையும், இந்த வேலையும் எங்க கைக்குக் கெடைக்கக் கூடாதுன்னு இவங்க தாத்தா, இந்தத் தோட்டத்தில எங்கயோ ஒளிச்சு வச்சுட்டாரு.

எங்க தாத்தா உயிரோட இருந்த வரை, அந்த வேலை எப்படியாவது கைப்பத்தணும்னு தலைகீழா நின்னும் அவரால முடியலை. மாந்த்ரீகம் தெரிஞ்ச அவருக்கு அந்த வேல் தன் கைக்கு வந்துட்டா, நிறைய சக்திகள் கிடைக்கும்னு நம்பினாரு.

அப்ப இருந்தே தாத்தாவுக்கு அந்த வேலை எப்படியாவது கண்டுபிடிச்சு எடுத்துக்கணும்னு வெறி. எங்கம்மா, இந்த வம்புக்கே வர மாட்டாங்க.‌ எங்க தாத்தா தான் என்னை வளத்தாரு. குழந்தையில் இருந்து மாந்த்ரீகமும் சொல்லித் தந்தார். படிப்பிலும் நான் திறமைசாலியா இருந்ததால, மெடிக்கல் காலேஜில் படிக்க சேர்ந்தேன். தற்செயலா ராஜசேகர் பத்தித் தெரிய வந்தது ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த அவனோட நீ நெருக்கமாப் பழகினதால, உன்னைப் பத்தி விசாரிச்சு, உன்னோட அண்ணனா என்னைக் காட்டிக்கிட்டேன்.

நீ ஒரு முட்டாள். என்னை நம்பிட்டே. இந்த ராஜசேகர் ஒரு முட்டாள்.‌என்னை இந்த ஊருக்கே கூட்டிட்டு வந்தான். அவனோட ஹாஸ்பிடலிலேயே இருந்ததால அவனையும் உன்னையும் க்ளோஸா வாட்ச் பண்ண முடிஞ்சது. நீங்க ரெண்டு பேருமே என் வலையில் ஈஸியா விழுந்தீங்க.

ஆனா உங்க கல்யாணத்துக்கு ராஜசேகரோட அப்பா, அம்மா ஒத்துக்காததுல எனக்குப் பெரிய ஏமாத்தம். அவங்க ராஜசேகரை வற்புறுத்தி அபலாங்கற பொண்ணோடக் கல்யாணம் செஞ்சு வச்சாங்க" என்று சொல்லி நிறுத்தினான்.

" பெரியவங்க அந்த மாதிரி சொல்லி வச்சிருந்தாங்க. கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணைக் கல்யாணம் செஞ்சு வச்சதும், அவளோட முயற்சியால் வேல் கைக்குக் கிடைக்கும். அப்புறம் எங்களுக்குப் பேரக்குழந்தை பிறந்ததும் பொக்கிஷம் கிடைக்கும்னு வீட்டுப் பெரியவங்க சொல்லிருந்தாங்க. ஸலோனி, கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறக்காததுன்னால, நாங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கலை. அபலா, கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணுங்கறதால அவளோட திருமணம் செஞ்சு வச்சோம்" என்றாள் சித்ராதேவி.

" அபலாவை நீ தான் கொன்னயா? ஏன் கொன்னே?" என்று கேட்டாள் ஸலோனி.

" இந்தத் தோட்டத்தில தான் வேல் இருக்குன்னு எங்க தாத்தா சொல்லி இருந்தார். அதுனால தினமும் நடு ராத்திரில வந்து பூஜை பண்ணுவேன். ஒரு நாள் அந்த மாதிரி பூஜை செய்யும் போது சத்தம் கேட்டு, ராஜசேகர், அபலா ரெண்டு பேரும் வெளியே வந்தாங்க. நான் ஒளிஞ்சு நின்னுட்டிருந்தேன்.

ராஜசேகரைப் பின்னாலிருந்து தலையில் அடிச்சு ரூமுக்குள்ள இழுத்துப் போட்டேன். அதைப் பாத்து அபலா இங்கேயே மயங்கி விழுந்துட்டா. அவளை எழுப்பி, அவள் எதிரிலேயே பூஜை செஞ்சுக்கிட்டு இருந்தேன். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை காளிக்கு பலி கொடுத்தா, நான் நெனைச்சது சீக்கிரம் நடக்கும்னு அவளைக் கொன்னேன்.

அவளை எரிக்காம, இங்கேயே புதைச்சு சமாதி கட்டினதால, எனக்கு சௌகர்யமா இருந்தது. அவளோட ஆத்மாவை வசியப்படுத்தி, ஏவி விட்டு என்னோட அடிமையா வச்சிருந்தேன்.

நந்தினி கல்யாணம் ஆகி வந்ததும் அவளை அபலாவை ஏவி பயமுறுத்த வச்சேன். அவ ஹாஸ்பிடலில் இருந்த போது, என்னோட ஆட்களை வச்சு, அவ இருந்த ரூம் ஜன்னலுக்கு வெளியே நின்னு சித்ரா தேவியைப் பத்தித் தப்பாப் பேச வச்சேன். அவளைக் கொல்லப் பாத்தேன். முதல் தடவை ஸலோனி கிட்ட தப்பான மருந்து கொடுத்தது நான் தான். இரண்டாவது தடவை, தலைகாணியை வச்சு மூச்சை நிறுத்தப் பாத்தேன் ரெண்டு தடவையும் எங்கிட்ட இருந்து அவ தப்பிச்சுட்டா.

ரெண்டாவது தடவை முயற்சி செஞ்ச போது பொன்னி எதையோ கவனிச்சுட்டா. என் கையில இருந்த நகக் காயத்தை வச்சு நான் தான் இருட்டில ரூமுக்கு வந்ததுன்னு அவளுக்கு சந்தேகம் வந்தது. ஒரு நாள் சாயந்திரம் ஹாஸ்பிடலுக்கு வந்து என்னை மிரட்டினா.

ராஜசேகர் கையில் இருந்த நகக்கீறல்களைப் பாத்து அவனை‌ முதலில் சந்தேகப்பட்டதாச் சொன்னா. அந்த நகக்கீறல்கள், ஒரு புத்தி சுவாதீனமில்லாத பேஷண்டுக்கு ராஜசேகர், சிகிச்சை தந்தபோது அவன் கைகளில் பட்டதுன்னு அப்ப பொன்னிக்குத் தெரியலை.

என்னைக் காட்டிக் கொடுக்கப் போறதா அவ சொன்னா. என்ன காரணத்தால நந்தினியை நான் கொல்லப் பாத்தேன்னு கேட்டா. நான் உண்மையைச் சொல்லறேன்னு அவளை இந்த இடத்துக்குக் கூட்டிட்டு வந்து கொன்னுட்டேன்.

நந்தினி, நான் நினைச்சதை விட அதிகத் திறமைசாலியா இருந்தா. அவளே எப்படியோ இந்த வேலைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு அதை எடுக்கற‌ முயற்சியில இறங்கிட்டா. அவளை என்னால தடுக்க முடியலை. ஆனா இதுவும் நல்லதுக்குத் தான். உங்க எல்லோரையும் கொன்னுட்டு, நான் இப்ப வேலோட தப்பிச்சுருவேன். அப்புறம் நான் தான் இந்த ஊருக்கே ராஜா.

நீங்க எல்லாருமே சாகப் போறீங்கன்னு தான் உங்க கிட்ட உண்மைகளை எல்லாம் சொன்னேன். சாகும் போது மனசில எந்தக் குழப்பமும் இருக்காது இல்லையா?" என்று சொல்லி விட்டு அபிராஜ் சத்தமாகச் சிரித்தான்.

அவனுடைய அடியாட்கள், ஸலோனி, சித்ரா தேவி, மகேந்திர பூபதி மூன்று பேரையும் இழுத்து அங்கிருந்த மரங்களில் கட்டினார்கள்.

" இதோ, நந்தினியையும் கட்டிப் போட்டுட்டு உங்க நாலு பேரையும் உயிரோட கொளுத்தப் போறேன். உங்களைக் கொன்னதுக்கப்புறம் ராஜசேகரைக் கொல்லறது ரொம்ப ஈஸி. சோகத்துலயே தானா செத்துருவான்" என்று சொல்லிச் சிரித்தவன், நந்தினியை நோக்கிக் காலடி எடுத்து வைத்தான்.

அவனால் நந்தினியின் அருகில் போகவே முடியவில்லை. அந்த வேப்ப மரத்தின் அருகே அவன் சென்றதும் ஏதோ சக்தி அவனைப் பின்னே தள்ளியது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் அவனால் நந்தினியை நெருங்க முடியவில்லை.

" நந்தினி, அந்த வேலை நீயாகவே என்னிடம் கொடுத்து விடு. இல்லைன்னா இவங்க மேலே பெட்ரோல் ஊத்தி இப்பவே உன் கண் முன்னாலயே கொளுத்திடுவேன்" என்று மிரட்டினான்.

நந்தினி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றாள். ஆனால் வேலைப் பிடித்திருந்த பிடியை விடவில்லை. மனதிற்குள் முருகனின் திருப்புகழ் பதிகங்களை விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

" எங்களுக்கு என்ன ஆனாலும் சரி, நந்தினி. நீ கவலைப்படாதே. அந்த வேலை மாத்திரம் அவன் கிட்டக் கொடுத்துராதே" என்று சித்ரா தேவி கத்தினாள். அபிராஜ், தனது அடியாட்களுக்குக் கை காட்ட, அவர்கள் போய்க் கையில் பெட்ரோல் கேன்களுடன் வந்தார்கள்.

மரத்தின் அருகே அவர்கள் வந்ததும் அவர்கள் கைகளில் இருந்த பெட்ரோல் கேன்கள் தானாகவே மேலே எழும்பி, அவர்கள் மீதே சரிந்தன.

அந்தரத்தில் ஒரு தீக்குச்சி எரிந்தபடி அவர்களைத் துரத்தியது. கதறிக் கொண்டு அவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்கள்.

அபிராஜ், எரிச்சலுடன் பார்த்துக் கொண்டு தன்னந்தனியாக நின்றான். இடுப்பில் இருந்த கத்தியை, நந்தினியை நோக்கி எறிவதற்காக எடுத்தான். ஸலோனி பாய்ந்து போய் அவனுடைய கையை இறுகப் பிடித்துக் கொண்டு கத்தினாள்.

இருவருக்கும் போராட்டம் தொடர்ந்தது. கூர்மையான அந்தக் கத்தி, ஸலோனியின் உடலைப் பல இடங்களில் கீறி இரத்தம் வழியத் தொடங்கியது. நந்தினி அலறினாள்.

" விட்டுரு, அவளை விட்டுரு. அவளை ஒண்ணும் செய்யாதே. நான் வேலைத் தந்துடறேன்" என்று நந்தினி சொல்ல, அபிராஜ் தனது தாக்குதலை நிறுத்தி விட்டு, நந்தினியின் பக்கம் வெற்றியோடு பார்த்தான்.

அந்த நேரத்தில் அங்கு ராஜசேகர், போலீஸுடன் நுழையத் தப்பிக்க முடியாமல் அபிராஜ் பிடிபட்டான். கைது செய்யப் பட்டான். " உங்களையெல்லாம் சும்மா விடமாட்டேன். சீக்கிரம் வெளியே வந்து நிச்சயமாப் பழி வாங்குவேன்" என்று உறுமிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

ராஜசேகர், ஸலோனிக்கு முதலுதவி செய்து, அவளைத் தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

சித்ரா தேவியும், மகேந்திர பூபதியும் நந்தினியின் அருகில் வந்து அவளை நன்றியுடன் பார்த்தார்கள்.

" உன்னோட தெய்வ பக்தியும், நல்ல குணமும் நம்ப குடும்பத்துச் சொத்தான இந்த வேலை மீட்டுக் கொடுத்துருக்கு. இதை நம்ப வீட்டில பத்திரமா வச்சு, ஒவ்வொரு ஷஷ்டி அன்னைக்கும் முருகன் கோயிலில் அவனுடைய சந்நிதியில் வச்சு எடுக்கணும். அது தான் நம்ப குடும்ப வழக்கம்" என்று மன‌ நெகிழ்வுடன் சொன்னார்கள்.

" நானும் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்திருக்கறதுனால தான் என்னை மருமகளா ஏத்துக்க நெனைச்சீங்களா?" என்று கேட்டாள்.

" ஆமாம் மா. ஜோசியர் அப்படித்தான் சொன்னார். கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்த பெண் தான் குடும்பச் சொத்தான வேலை மீட்டெடுப்பான்னு சொன்னாரு. எங்களோட வேலை மீட்கிற ஆசையில உனக்குத் தான் நிறைய துன்பங்களைக் கொடுத்துட்டோம்" என்றாள் சித்ரா தேவி.

அடுத்த நாள் ராஜசேகரும், நந்தினியும் ஜோடியாகச் சென்று கொற்றவை கோயிலில் குருசாமியைச் சந்தித்து அவருடைய ஆசிகளைப் பெற்றார்கள். அவர்கள் போகும் வரை குருசாமி தனது பூஜையைச் செய்து கொண்டிருந்தார். அவர்கள் வந்து ஜோடியாக வணங்கிய போது தான் பூஜையை நிறுத்தினார்.

"நந்தினி, உன்னுடைய பூஜையை நீயாக முடிக்க வேண்டும் என்று தான் நான் உன்னுடைய உதவிக்கு வரவில்லை. தேவியின் துணை வேண்டி எனது பூஜையை நிறுத்தாமல் செய்தேன். உனது பக்தியால் நீ சாதிப்பாய் என்று எனக்குத் தெரியும். உன் பேரில் எனக்கு நம்பிக்கை இருந்தது" என்றார்.

நாகலிங்கம் மகளுடைய வெற்றியை அனுபவித்துக் கொண்டு அகமகிழ்ந்து நின்றார். மனதார அந்த ஜோடிக்கு ஆசிகளை அள்ளி வழங்கினார்.

ராஜசேகரைத் தனிமையில் சந்தித்த போது, நந்தினி அவனிடம்,

" நீங்க காலேஜில படிக்கும் போது ஸலோனியை விரும்பிருக்கீங்க. ஸலோனியும் இது வரைக்கும் மனசில உங்களைத் தான் நெனைச்சுக்கிட்டு இருக்கா. நான் எங்க அப்பா கிட்டயே திரும்பிப் போறேன் . நீங்க உங்க ஆசைப்படி ஸலோனியைக் கல்யாணம் செஞ்சுக்கோங்க" என்று சொன்னாள்.

" காலேஜ் நாட்களில் நாங்க பழகினது உண்மை தான். ஆனா அம்மா, அப்பா எப்ப அவளை மறந்துட்டு அபலாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்களோ, அன்னைக்கே நான் அவளை மறந்துட்டேன். இப்ப நீ தான் என்னோட மனைவி. ஸலோனி, வேலையை விட்டுட்டு வெளிநாடு போகப் போறா" என்று சொல்லி, அவளை அன்போடு அணைத்தான்.

இனி அவர்கள் வாழ்வில் என்றும் இனிமை தான். குறையொன்றும் இருக்கப் போவதில்லை.


நிறைவு.

நன்றியுடன்,

புவனா சந்திரசேகரன்,


வழக்கம் போலத் தொடர்ந்து படித்து ஆதரவு தந்த வாசக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.

முதல் பாகம் நிறைவு பெற்றது. நாளை முதல் இரண்டாம் பாகத்துடன் வருகிறேன்.

 
Top