கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 13

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 13

இரண்டாம் பாகம்

முன்கதைச் சுருக்கம்

ஏழை ஆசிரியர் வீட்டுப் பெண் நந்தினி ஜமீன்தார் வீட்டு மருமகளாகக் காலடி எடுத்து வைத்ததில் இருந்து நிறைய சோதனைகளை எதிர்கொள்கிறாள்.

கணவன் ராஜசேகர பூபதிக்கு இது இரண்டாவது கல்யாணம். பெற்றோரின் வற்புறுத்தலால் நந்தினியை மணந்துகொண்டதாகக் கூறி அவளிடம் கடுமையாகவே நடந்துகொள்கிறான். அவனுடைய முதல் மனைவி அபலாவின் மரணத்தில் ஏதோ மர்மம் ஒளிந்திருப்பதாக நந்தினி உணர்கிறாள்.
மாமியார் சித்ரா தேவி அவளிடம் பிரியமாக நடந்து கொண்டாலும் அவள் மீதும் நந்தினிக்கு சந்தேகம் எழுகிறது.
கணவனின் மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் அவனுடன் வேலை பார்க்கும் டாக்டர். ஸலோனி மீது கூட நந்தினிக்கு மனதில் சந்தேகம் எழுகிறது.

ஸலோனியின் அண்ணனான டாக்டர். அபிராஜ் மீது மட்டும் நந்தினிக்கு நம்பிக்கை வருகிறது. வீட்டில் நந்தினிக்கு ஆதரவாக இருக்கும் பொன்னியும் மர்மமான முறையில் இறந்து போகிறாள்.

பல்வேறு அமானுஷ்யமான நிகழ்வுகள் நந்தினியைத் துரத்துகின்றன. நந்தினியின் கிராமத்தில் இருக்கும் கொற்றவை கோயிலுக்கு வந்து போகும் குருசாமியின் உதவியுடன் நந்தினி, முருகனுக்கு விரதமிருந்து பூஜைகளை முடித்து இன்னல்களில் இருந்து விடுபடுகிறாள். அபிராஜ் தான் அனைத்து சோதனைகளுக்குப் பின்னால் இருந்த சூத்ரதாரி என்று தெரிய வருகிறது. முருகன் கோயிலுக்குச் சொந்தமான ஜமீன் குடும்பத்தின் பரம்பரை நகைகளை அடைவதற்காகவே அபிராஜ் பல வருடங்களாகத் திட்டம் தீட்டிய விஷயம் இறுதியில் வெளியே வருகிறது. அபலா, பொன்னி இருவரின் கொலைகளுக்கும் காரணமானவன் அபிராஜ் தான் என்று தெரியவரும்போது நந்தினி அதிர்ச்சி அடைகிறாள்.

நந்தினியின் முயற்சியில் வெற்றி கிட்டுகிறது. முருகன் கோயில் நகைகள் மீட்கப் படுகின்றன. அபிராஜ் கைது செய்யப்படுகிறான். ராஜசேகர், நந்தினியின் நடுவில் புரிதல் ஏற்பட்டு அவர்களுடைய இல்லறமும் இனிமையை அனுபவிக்கிறது.

இனி வளரும் கதைக்குள் பிரவேசிக்கலாம்.

அத்தியாயம் 13

ஆறு ஆண்டுகள் உருண்டு முன்னே ஓடின. நந்தினியின் வாழ்க்கையும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. அவளுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள், திருப்பங்கள் நடந்து முடிந்தாலும் நந்தினி தனது பண்பாலும், அன்பாலும் பொறுப்புடன் தனது அனைத்துக் கடமைகளையும் சிறப்பாக நிறைவேற்றினாள்.

நந்தினி, ராஜசேகரின் இல்லற வாழ்க்கை இனிமையாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. இரட்டைக் குழந்தைகள் ஆண் ஒன்று, பெண் ஒன்று பிறந்து அவர்களுடைய இல்லறத்தின் இனிமை இன்னமும் கூடியது. அபிராஜின் குற்றங்கள் சட்டபூர்வமாக நிரூபிக்கப் பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் தண்டனையைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.

ஸலோனி, வெளிநாடு சென்று விட்டாள். லண்டனுக்குப் போன ஸலோனி, அங்கேயே ஒரு டாக்டரை மணம் செய்து கொண்டு லண்டனிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டாள்.

இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா வரும்போது ராஜசேகர்,
நந்தினியைக் கண்டிப்பாக சந்தித்து விட்டுத் தான் போவாள்.

அபலாவும், பொன்னியும் நந்தினியின் மனதில் தெய்வங்களாக நின்று அவளை வழி நடத்துகிறார்கள்.

பொன்னியின் தந்தையை அவருடைய இறுதிமூச்சு வரை தங்கள் வீட்டிலேயே கூட்டி வந்து தங்க வைத்து நந்தினி நன்றாகப் பார்த்துக் கொண்டாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் அவருடைய ஆயுள் முடிந்தது.

நந்தினியின் தந்தை நாகலிங்கமும் மகள் தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்தார். பேரக் குழந்தைகளைப் பார்த்துத் தூக்கி வைத்துக் கொஞ்சுகின்ற பேரின்பமும் அவருக்குக் கிடைத்து விட்டது. நந்தினி எவ்வளவோ வற்புறுத்தியும் அவளுடைய வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். அவரும் சென்ற வருடம் இரவு ஒரு நாள் தூக்கத்திலேயே இறந்து போய்விட, ராஜசேகர் தான் அவருடைய இறுதிக் காரியங்களைச் செய்து முடித்தான்.

மருத்துவமனையின் கணக்கு வழக்குகளை நந்தினியே கவனித்துக் கொள்வதால் ராஜசேகரனும் நிர்வாகத்தையும் நிம்மதியாக நந்தினியிடம் ஒப்படைத்துவிட்டு தனது மருத்துவப்பணியில் முழுமையாக ஈடுபடுகிறான். மாமனார் மகேந்திரனும், மாமியார் சித்ரா தேவியும் வீட்டை கவனித்துக் கொண்டு பேரக் குழந்தைகளுடன் பொழுது போக்குகிறார்கள். அம்மா, அப்பா இருவரையும் இழந்து நிற்கும் நந்தினியின் மீது அவர்கள் காட்டும் அன்பும், அக்கறையும் அவளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் அவளைப் பார்த்துக் கொள்கின்றன.

திங்கட்கிழமை காலை நேரம். நந்தினி பூஜையறையில் விளக்கை ஏற்றி வைத்து சமையலறையில் புகுந்து சமையல் செய்து கொண்டிருக்கும் வள்ளியம்மாவிடம் பேசியபடி மேற்பார்வை செய்தாள்.

குழந்தைகளுக்கான காலை உணவையும், பாலையும் டைனிங் டேபிளில் தயாராக வைத்துவிட்டு அவர்களை எழுப்பச் சென்றாள்.

இரண்டு பேரும் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருக்க, நந்தினிக்குக் கோபம் வந்தது.

" ஏய் பசங்களா! இன்னுமா எழுந்திருக்கலை? நான் உங்களை எழுப்பி விட்டுட்டுப் போயி எவ்வளவு நேரம் ஆச்சு? பல் கூடத் தேய்க்கலையா? இன்னைக்கு ஸ்கூல் பஸ் கண்டிப்பா மிஸ் ஆகப் போகுது. எனக்கென்ன? நடந்து தான் போகணும் " என்று கேலி செய்தாள் நந்தினி.

வீட்டில் நான்கு கார்கள் இருந்தாலும் குழந்தைகள் ஸ்கூல் பஸ்ஸில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பஸ்ஸில் தான் போகவேண்டும் என்பது நந்தினி விதித்திருக்கும் ரூல். மற்ற குழந்தைகளுடன் சரிசமமாகப் பேசிப் பழகவேண்டும் என்றும் நம்மிடம் பணம் இருக்கிறது என்று பெருமை பீற்றிக் கொள்ளக் கூடாது என்பதிலும் நந்தினி உறுதியாக இருந்தாள். மாமனார், மாமியாரும் இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை என்பதால் அவளுக்கு சௌகர்யமாகவே இருந்தது.

" அம்மா, ஸர்ப்ரைஸ், உங்களை ஏமாத்திட்டோமே? " என்று துள்ளிக் குதித்துப் படுக்கையில் இருந்து இறங்கினார்கள் சரவணனும், சரண்யாவும்.

நந்தினி, தங்களுடைய அறையை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு அவர்கள் நடத்திய நாடகம் இது. ஏற்கனவே குளித்துத் தயாராகி யூனிஃபார்ம் எல்லாம் போட்டுக்கொண்டு வேண்டுமென்று படுக்கையில் போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருந்தார்கள் அந்தக் குறும்புக்காரக் குழந்தைகள்.

" ஆ, என்னை ஏமாத்திட்டீங்களா பசங்களா! நல்லா ஏமாந்து போனேன் நானும். வரவரச் சேட்டை ஜாஸ்தியாகிட்டே போகுது. எல்லாம் அப்பா கொடுக்கற செல்லம் தான்" என்று பழியைக் கணவன் மேல் போட்டாள் நந்தினி.

" அது சரி, குழந்தைகளை நேரத்துக்கு எழுப்பி, பல் தேய்க்க வச்சுக் குளிக்க வச்சு யூனிஃபார்ம் மாட்டி விட்டுட்டு உனக்கு இவ்வளவு ஹெல்ப் பண்ணறேன். அதுக்காக தேங்க்ஸ் சொல்லலைன்னா கூடப் பரவாயில்லை. இந்த மாதிரி பழி போடாதடி பொண்டாட்டி " என்று அலுத்துக் கொண்டான் ராஜசேகர்.

" சரி சரி பசங்களா! ஓடிப்போய் பிரேக்ஃபாஸ்டை முடிங்க பாக்கலாம். டைனிங் டேபிளில ரெடியா வச்சுருக்கேன். நான் அப்பா கிட்டப் பேசிட்டு வரேன்" என்று அவர்களை அனுப்பிவிட்டுக் கணவனின் பக்கம் பார்வையைத் திருப்பினாள் நந்தினி.

குளியலறையில் இருந்து வெளியே வந்து இடுப்பில் கட்டிய துண்டுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான் ராஜசேகர்.

" இவ்வளவு நேரம் ஈரத்துண்டோட நின்னுகிட்டு இருக்கீங்களே ? உடம்புக்கு ஆகுமா? " என்றவள் , அருகில் கையில் கிடைத்த துண்டால் அவன் தலையைத் துவட்டத் தொடங்கினாள்.

குழந்தைகள் தயாராகி விட்டதை அறையில் நுழையும்போதே கவனித்து விட்டிருந்தாள் நந்தினி. அவள் எடுத்து வைத்துவிட்டுப் போயிருந்த உடைகள் அங்கில்லாதபோது அவளுக்குப் புரிந்து விட்டது. இருந்தாலும் குழந்தைகளின் சின்ன சந்தோஷத்தைக் குலைக்க வேண்டாமென்று தான் தெரியாதது போல நடித்தாள். அவள் நடிக்கிறாள் என்பது அவளுடைய கணவனுக்கும் நன்றாகவே தெரியும்.

" நானே ஊருக்கே டாக்டர்! நீ எனக்கே டாக்டரா நந்து? " என்றவனின் குரலில் வழிந்த காதல், எச்சரிக்கை மணி அடிக்கச் சட்டென்று அவனிடமிருந்து விலக யத்தனித்தாள். அவளை நகர விடாமல் தனது கரங்களுக்குள் சிறை செய்தான்.

" பசங்க என்னவோ கொஞ்சம் பெரியவங்களாயிட்டாங்க. அடுத்ததுக்கான முயற்சியில் இறங்கலாமா?" என்று அவளுடைய காதில் கிசுகிசுத்தவனை வெட்கத்துடன் பிடித்துத் தள்ளினாள்.

" போதும், போதும். நாம் இருவர், நமக்கு ஒருவர் போதும்னு நினைச்சேன். அது என்னடான்னா டபுள் தமாக்காவா ட்வின் வந்து பொறந்தாச்சு. அடுத்து ஒண்ணு வந்தாலே ஜாஸ்தி. அதுவும் ரெட்டையாப் பிறந்து வைச்சா, அப்பாடி என்னால சமாளிக்க முடியாது டாக்டர் ஸார். வீட்டிலேயே பிளே ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டியது தான். பொறுப்பான டாக்டரா இருந்துகிட்டு நாட்டோட ஜனத்தொகையை அதிகரிக்கத் திட்டம் போடும் உங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் தரது? " என்று கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அதட்டினாள் அவனை. அவனோ அடங்கவில்லை. அவளைக் கட்டியணைத்து இதழ்களை அழுத்தமாக ஆக்கிரமித்து விட்டுத்தான் அடங்கினான்.

ஒருவழியாக அவனிடமிருந்து விலகித் தன் உடைகளை சரி பார்த்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

" சீக்கிரமா பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட வாங்க. நான் போய் மாமா, அத்தை வராங்களான்னு பாக்கறேன்" என்று சொல்லிவிட்டு மனதிற்குள் கணவனின் மாற்றத்தைப் பற்றி யோசித்துப் பழைய நினைவுகளை அசை போட்டாள் நந்தினி.

ஒரு காலத்தில் அவளிடம் பேசக்கூட விருப்பமில்லாமல் விலகி விலகிப் போனவன், இன்று காதலைப் பொழிந்து அவளைத் திக்குமுக்காட வைக்கிறான்.

' அப்பா மட்டும் இப்போ உயிரோடு இருந்தா, நான் இங்கே ராணி மாதிரி வாழறதைப் பாத்து எவ்வளவு சந்தோஷப்படுவார்! எனக்குத் தான் கொடுத்துவைக்கலை! ஆனால், போறதுக்கு முன்னால என்னோட பிரச்சினைகள் தீந்ததையாவது பாத்தாரே? அதுவே போதும். நல்ல எடுத்து தான் பொண்ணைக் கொடுத்திருக்கோம்னு நிம்மதியாக் கண்ணை மூடினாரு. அப்பா தெய்வமா இருந்து எங்களுக்கு எப்பவும் வழி காட்டுங்கப்பா' என்று நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள்.

நந்தினி, தன் வாழ்க்கையைப் பற்றித் தானே பெருமைப்பட்டு திருஷ்டி போட்டு விட்டாள் போலத் தான் தோன்றுகிறது!

அடுத்தடுத்து சோதனைகள் அவளைத் தாக்காவதற்காக ஆயுதங்களுடன் தயாராக நின்று கொண்டிருந்தன.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

( என்னுடைய கதைகளைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு எனது வணக்கம். ஏற்கனவே எழுதிய கதையின் இரண்டாம் பாகத்தை எழுத ஆரம்பித்திருக்கிறேன்)

நன்றி🙏💕,
புவனா சந்திரசேகரன்.

 
Top