கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 14

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 14

அத்தியாயம் 14

குதூகலமாகச் சிரித்து உரையாடியபடி காலை உணவை முடித்தார்கள்.

" அது ஏம்மா நம்ப வீட்டு இட்லி மட்டும் இப்படி கலர் கலரா இருக்கு? என் ஃப்ரண்ட் வீட்டு இட்லி நல்லா வெள்ளை வெளேர்னு ஸ்நோ மாதிரி இருக்கு? ” என்று ஆரம்பித்தான் சரவணன்.

" சரவணா, கலர் கலரான்னு தப்பாச் சொல்லாதே. இது பிளாக் அண்ட் வொயிட் இட்லி" என்று பெரிய மனுஷி மாதிரித் தன் உடன்பிறப்பைத் திருத்தினாள் சரண்யா.

" வாயாடி, வாயாடி, சரியான வாயாடி " என்று சிரித்தார் சித்ரா தேவி.

" ஆமாம்மா. இந்தப் பொண்ணு சரியான வாயாடி தான். சரவணா, இது வேற ஒண்ணும் இல்லடா. இதுல அம்மா கறுப்பு உளுந்தைச் சேத்திருக்கறதுனால அங்கங்கே கறுப்பாத் தெரியுது. வெள்ளை வெளேர்னு இருக்கற உளுந்தை விடத் தோலோட இருக்க உளுந்து தான் உடம்புக்கு நல்லது. உங்கம்மா தான் ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் ஆச்சே! " என்று விளக்கினான் ராஜசேகர்.

" ஆமான்டா கண்ணா. வெள்ளை வெளேர்னு இருக்கற நிறைய சாமான் நம்ம உடம்புக்கு நல்லதில்லை. வொயிட் ஷுகர், வெள்ளை உப்பு, மைதா இது எல்லாமே உடம்புக்குக் கெடுதல். முடிஞ்ச வரை இதையெல்லாம் நாம அவாயிட் பண்ணறோம்” என்று காரணத்துடன் குழந்தைகளுக்கு எடுத்துச் சொன்ன மருமகளைப் பெருமையுடன் பார்த்தார்கள் பெரியவர்கள் இரண்டு பேரும்.

இந்த மாதிரி நல்ல விஷயங்களை வீட்டில் நந்தினி அமுல்படுத்தும்போது அதில் தலையிட்டு குழப்படி எதுவும் செய்யாமல் ஏற்றுக் கொள்வதே அவர்கள் நந்தினிக்குத் தரும் மிகப்பெரிய ஒத்துழைப்பு! பின்னே என்ன? அபலா இறந்துபோன பின்னர் இருண்டு போயிருந்த மகனுடைய வாழ்க்கையில் தீபமாக வந்து இருளை விரட்டியதோடு மட்டுமல்லாமல், பரம்பரைப் பொக்கிஷத்தை மீட்டுத் தந்தவளாயிற்றே! அதை எப்படி மறக்க முடியும் அவர்களால்?

குழந்தைகள் கிளம்பிப் போய்விட்டார்கள். ராஜசேகர் காலை உணவை முடித்துவிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

" ஈவினிங் வர லேட்டாகலாம் நந்தினி. ஒரு காம்பிளிகேடட் சர்ஜரி இருக்கு. என்னால ஃபோன் கூட அட்டென்ட் பண்ண முடியாது. ஏதாவது அர்ஜன்டான விஷயம் இருந்தால் என்னோட செகரட்டரிக்கு இன்ஃபார்ம் பண்ணிடு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

நந்தினியின் அன்றாட வேலைகளோடு நாளும் பரபரப்பாகத் தான் போய்க் கொண்டிருந்தது. வீட்டு வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு, பெரியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து விட்டு அவர்களுடன் பேசி உரையாடி அவர்களைத் திருப்திப்படுத்தி விட்டு தினமும் மருத்துவமனைக்குக் கிளம்பி விடுவாள் நந்தினி. ஐ சி டபிள்யூ ஏ படிப்பைத் தற்போது முடித்திருந்த நந்தினி, மருத்துவமனையின் கணக்கு வழக்குகளை சரிபார்ப்பதுடன்
நிர்வாகத்தையும் சிறப்பாகக் கையாள்வதால் ராஜசேகரும் தன்னுடைய மருத்துவத் துறையில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த முடிகிறது.

அன்றும் மாமியார், மாமனாரிடம் சொல்லிக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினாள் நந்தினி.

" அம்மா, அவர் திரும்பி வர நேரமாகும்னு சொன்னார். நான் மட்டும் சாயந்திரம் சீக்கிரமாக் கிளம்பி வந்துடறேன். சரண்யாவுக்குத் தொண்டை லேசா வலிக்குதுன்னு சொன்னா. அவ ஸ்கூலில் இருந்து வந்து ஏதாவது உணவு சாப்பிட்டதுக்கு அப்புறம் மருந்து கொடுத்துத் தூங்கப் பண்ணிடுங்க " என்று சித்ரா தேவியிடம் சொன்னாள் நந்தினி.

நந்தினிக்கு அம்மா இல்லாத குறையை சித்ரா தேவி தீர்த்துவைக்கிறாள். தன் வயிற்றில் பிறந்த மகளாகவே அவளையும் கருதி அன்பைப் பொழிவதால் நந்தினி அவளை இப்போதெல்லாம் அம்மா என்று தான் கூப்பிடுகிறாள். கல்யாணம் ஆகி வந்த புதிதில் அத்தை என்று கூப்பிட ஆரம்பித்தவள் தற்போது மாற்றிக் கொண்டு விட்டாள். இந்த அற்புதமான மாற்றத்தை சித்ரா தேவியும் மனம் நெகிழ்ந்து ஏற்றுக் கொண்டு விட்டார்.

" செரிம்மா, அதை நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாமல் வேலையை முடிச்சுட்டு வா. அப்புறம் நாளைக்கு பேங்க் போயி முருகனுக்குச் சாத்தற நகையெல்லாம் கொண்டு வரணும். திருவிழா வருது ஊரில. ராஜசேகர் கிட்ட நேரம் கிடைக்கும் போது ஞாபகப் படுத்திரு கொஞ்சம் "

" சரிம்மா, அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. அவரை எப்போ நான் பாக்கறேனோ அப்ப ஞாபகப் படுத்திடறேன். இன்னும் திருவிழா ஆரம்பிக்க டயம் இருக்கே! அதுக்குள்ள கொண்டு வந்துடலாம்" என்று மாமியார், மாமனாரிடம் உறுதி அளித்துவிட்டு நந்தினி ஒருவழியாக மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.

கோயில் நகைகளை எல்லாம் பத்திரமாக ஒரு வங்கியில் பெரிய லாக்கர் எடுத்து வைத்துவிட்டார்கள். அபிராஜ் நிகழ்ச்சிக்குப் பிறகு எந்த ரிஸ்க்கும் எடுக்க அவர்களுக்கு விருப்பமில்லை. நகைகளுக்குத் தேவையான அளவு காப்பீடு அதாவது இன்ஷூரன்ஸ் செய்து வைத்து விட்டதால் தற்போது நிம்மதியாக இருக்க முடிகிறது.

முக்கியமான நவரத்தின வேல் மாத்திரம் வீட்டில் ஓர் இரகசிய இடத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதனுடன் சேர்ந்து சில விலைமதிப்பற்ற பரம்பரை நகைகளும் அதே இரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வருகின்ற சொத்துகளில் அதை ஒன்றை மட்டும் வீட்டில் வைத்துக் கொண்டு மற்றவற்றைக் கோயில் நகைகளாகவே வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்து விட்டார்கள். ஊரில் இருக்கும் சில பெரிய மனிதர்களைக் கொண்ட டிரஸ்ட் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அவர்களின் பொறுப்பில் தான் நகைகளை ஒப்படைத்தார்கள். ஆனாலும் ராஜசேகர் அந்த டிரஸ்டின் முக்கிய நிர்வாகி என்பதால் அவனுடைய தலையீடு இல்லாமல் வேலைகள் நடக்காது.

முக்கியமான வழிபாடு ஏதாவது வீட்டில் நடந்தால் பூஜையறையில் இருக்கும் முருகன் விக்கிரகத்தின் அருகே அந்த வேலை வைத்து வழிபட்டு விட்டுத் திரும்பவும் பத்திரப்படுத்தி விடுகிறார்கள். இதுவரை எல்லாமே ஒழுங்காக நடந்துகொண்டு வருகின்றன.

நந்தினி மருத்துவமனைக்குச் சென்று தன்னுடைய அறையில் உட்கார்ந்து கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நந்தினிக்கென்று தனி அலுவலக அறையும் ஒதுக்கப் பட்டிருந்தது. ஒரு செகரட்டரியும் நியமிக்கப்பட்டிருந்தாள்.

" காமினி, நம்ம புது யூனிட்டோட கன்ஸ்டிரக்ஷன் சம்பந்தப்பட்ட விவரங்களை செக் பண்ணனும். எஸ்டிமேட்லாம் அந்த கம்பெனில இருந்து ரீஸன்டா அனுப்பிருந்தாங்க இல்லையா? அந்த ஃபைலை எடுத்துட்டு வரயா? " என்று தன் செகரட்டரியான காமினியிடம் சொல்லி விட்டு எதிரில் இருந்த கணினியின் திரையில் மூழ்கினாள் நந்தினி.

குழந்தைகள் நலப் பிரிவாகத் தனியாக செயல்படுவதற்கென்று சிறப்பு மருத்துவமனை ஒன்றை ஆரம்பிக்க எண்ணினான் ராஜசேகர். அவர்களுடைய மருத்துவமனைக்கு அடுத்ததாக இருந்த காலி நிலத்தை வாங்கிப் போட்டு அதற்கான வேலைகளை ஆரம்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வேலைகளை முடித்து, அடுத்து வரும் குழந்தைகளின் பிறந்த நாள் அன்று துவக்கவிழாவை வைத்துக் கொள்வது தான் ராஜசேகர், நந்தினியின் ஆசை.

சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ வசதி அளிக்கும் உன்னத நோக்கத்துடன் தான் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். முருகனின் அருளால் சிறப்பாக முடியவேண்டும்.

தன்னை மறந்து வேலையில் ஆழ்ந்திருந்தாள் நந்தினி. உணவு இடைவேளையும் நெருங்கிக் கொண்டிருந்தது. மருத்துவமனையின் சமையலறையில் தயாராகும் உணவையே ராஜசேகரும், நந்தினியும் மதியத்தில் எடுத்துக் கொண்டு வருகிறார்கள் இப்போது. உணவின் தரம் எப்படி இருக்கிறது என்று அவ்வப்போது பரிசோதிக்க இது வசதியாக இருந்தது. இவர்கள் இருவரும் தொடர்ந்து இங்கே சாப்பிடுவதால் சமைப்பவர்கள் மனதிலும் ஒரு பயமும், எச்சரிக்கை உணர்வும் இருந்தன. அக்கறையோடு சமைத்தார்கள். முடிந்தவரை இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். ஆனால், இன்று ராஜசேகர், தான் மேற்கொள்ளப் போகும் கடினமான அறுவைச் சிகிச்சை பற்றி பல வல்லுநர்களுடன் தன் அறையில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்ததால், நந்தினி தனியாகச் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டாள்.

மீண்டும் நந்தினி தனது அறையை அடைந்ததும், அவளுடைய மொபைல் ரிங்கியது.

' யாரா இருக்கும் இந்த டயத்தில்' என்று யோசித்தபடி மொபைலைக் கையில் எடுத்தவளின் முகம் மலர்ந்தது.

" ஹை ஸலோனி! எப்படி இருக்கே! உன் பெட்டர் ஹாஃப் எப்படி இருக்காரு? "

" எல்லாரும் ஃபைன். ராஜாக்குத் தான் முதலில் டிரை பண்ணினேன். அவன் ரொம்ப பிஸி போல இருக்கு"

" ஆமாம் ஸலோனி. இன்னைக்கு ஏதோ காம்ப்ளிகேட்டட் ஸர்ஜரின்னு சொன்னார். இப்போ எக்ஸ்பர்ட்ஸ் கூட டிஸ்கஷன் நடந்துட்டிருக்கு. பாத்தயா? நீ கூட உன் ஃப்ரண்ட் பிஸின்னாத் தான் என்னோட பேசறே இல்லையா? "

" அச்சச்சோ, அப்படில்லாம் இல்லை நந்தினி. என்னோட பிஸி ஷெட்யூலில, கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அவசர அவசரமாப் பேசிட்டு வச்சுடறேம்மா. ஐ ஆம் ஸாரி, வேணும்னு செய்யலை"

" அய்யோ ஸலோனி, இதைப் போய்ப் பெருசா எடுத்துகிட்டு ஏன் இப்படி விளக்கமெல்லாம் தரே நீ? நான் சும்மா உன்னை வம்புக்கு இழுத்தேன். உங்க ரெண்டு பேரோட ஃப்ரண்ட்ஷிப் எத்தனை வருஷங்களாத் தொடருதுன்னு எனக்கு நல்லாத் தெரியும் ஸலோனி. உங்களுக்குப் பேசறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும். நான் அதில் தலையிட மாட்டேன் " என்று ஸலோனியை சமாதானப்படுத்த முயற்சி செய்தாள் நந்தினி.

" சரி, சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லிடறேன். நான் அடுத்த வாரம் இந்தியா வரேன். ஊரில் திருவிழா எப்போ ஆரம்பிக்குதுன்னு தகவல் அனுப்புங்க. நாங்க அங்கே வந்து உங்களோட செலவழிக்கற நாட்களை அதுக்கேத்தபடி பிளான் பண்ணனும். என்னோட ஹஸ்பண்ட் பெரிய முருக பக்தர். அவருக்கு அந்தத் திருவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துக்க ரொம்ப ஆர்வத்தோட இருக்கார்"

" வாவ், நல்ல விஷயம் ஸலோனி. நான் இன்னைக்கே உனக்கு எல்லா விவரமும் வாட்ஸப் பண்ணறேன். குழந்தைகள் கிட்டயும் சொல்லறேன். அவங்களும் ரொம்ப குஷியாயிடுவாங்க" என்று உண்மையான மகிழ்ச்சியுடன் நந்தினி பேசிவினாள். அதற்குப் பிறகும் சிறிது நேரம் உரையாடிய பின்னர் ஓய்ந்தார்கள் இருவரும்.

மாலை ஐந்து மணி அளவில் நந்தினி வீட்டுக்குக் கிளம்புகிற சமயத்தில் மொபைலில் அந்த அதிர்ச்சி தரும் தகவல் வந்தது. என்ன செய்யப் போகிறோம் என்று குழம்பி நின்றாள் நந்தினி.

தொடரும் ,

புவனா சந்திரசேகரன்.

 
Top