கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 15

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 15

அத்தியாயம் 15

வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் பார்க்க வேண்டிய சில கோப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு நந்தினி கிளம்பினாள்.

" காமினி, நீயும் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்னு சொன்னயே! நானும் கெளம்பறேன். ரூமைப் பூட்டிட்டு நீ கிளம்பிக்கோ. மீதி வேலைகளை நாளைக்குப் பாத்துக்கலாம். அம்மா எப்படி இருக்காங்க? ஏதோ உடம்பு சரியில்லைன்னு சொன்னயே? இவ்வளவு பெரிய ஹாஸ்பிடலில் வேலை பாக்கறயே? இங்கே வரும்போது கூட்டிட்டு வரலாம் இல்லையா? "

" நானும் அம்மா கிட்ட தினமும் சொல்லறேன். கேக்கவே மாட்டேங்கறாங்க. தினமும் தலைவலி வருது. ஏதோ கஷாயம் சாப்பிடறேன். வேற மருந்தெல்லாம் வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கறாங்க. இன்னைக்குக் காலையிலேயே தலைவலி வந்துடுச்சு அவங்களுக்கு. அதுனால தான் கொஞ்சம் கவலையா இருக்கு. எப்படியாவது கன்வின்ஸ் பண்ணிக் கூட்டிட்டு வரணும்" என்றாள் காமினி வருத்தத்துடன்.

" தினமும் தலைவலி வந்தால் கண்டிப்பா செக் பண்ணிப் பாக்கணும். கண்ணில் பிரச்சினை இருந்தால் கூடத் தலைவலி வரும். நாளைக்கே கூட்டிட்டு வா. ஒருதடவை தரோவா டெஸ்ட் எடுத்துப் பாக்கச் சொல்லலாம் " என்று பரிவுடன் சொல்லி விட்டு நந்தினி சென்று தன் காரில் உட்கார்ந்தாள். இப்போது நந்தினியே டிரைவிங்கும் கற்றுக் கொண்டு விட்டதால், அவளுக்கென்று ஒரு தனி கார் வாங்கித் தந்திருந்தான் ராஜசேகர்.

" வீட்டில் இருந்து திடீர்னு எங்கேயாவது போகணும்னாலும் நீயே காரை ஓட்டிட்டுப் போற மாதிரி இருக்கணும். இந்தக் காலத்தில் டிரைவிங் கத்து வச்சிக்கறது ரொம்பவும் நல்லது ” என்று சொல்லி நந்தினியை வற்புறுத்தி அவளைக் கற்றுக் கொள்ள வைத்திருந்தான். வீட்டில் டிரைவர் இருந்தாலும் , பெரியவர்கள் எங்கேயாவது போகவேண்டி இருந்தால் மட்டுமே டிரைவரின் உதவி தேவையாக இருக்கிறது இப்போது. மற்றபடி ராஜசேகர், நந்தினி இரண்டு பேருமே தங்களுடைய வண்டிகளைத் தாங்களே ஓட்டுகிறார்கள்.

காரைக் கிளப்பப் போகும் சமயத்தில் மொபைல் அதிர்ந்தது. ஒரு நிமிடம் காரைக் கிளப்பாமல் நிறுத்திவிட்டு மொபைலை எடுத்துப் பார்த்தாள் நந்தினி.

' இத்தனை நாள் கழிச்சு இவர் எதுக்குக் கூப்பிடறார்? ' என்ற குழப்பம் மனதில் ஓட, அழைப்பை ஏற்றாள் அவள். அபிராஜ் சம்பவம் நடந்த போது அவனைக் கைது செய்த எஸ். ஐ. கரிகாலன் தான் கூப்பிட்டு இருந்தார்.

அபிராஜைக் கைது செய்ததோடு, அவனுடைய கேஸைத் திறம்பட நடத்தி சரியான தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தார் கரிகாலன். மாந்திரீகம் கலந்த விஷயங்களை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. அதனால் தான் அவனுக்கு ஆயுள் தண்டனை. இல்லையென்றால் நியாயமாகப் பார்த்தால் தூக்கு தண்டனை தான் தீர்ப்பாகக் கொடுத்திருக்க வேண்டும். மதுரை மத்திய சிறைச்சாலையில் தான் அபிராஜ் சிறை வைக்கப்பட்டிருக்கிறான்.

" ஹலோ, சொல்லுங்க"

" மேடம், ஒரு முக்கியமான விஷயம். எனக்குத் தெரிய வந்ததும் உங்களுக்கு சொல்லறேன். ஸாரோட ஃபோன் கெடைக்கலை. "

" ரொம்ப முக்கியமாகத் தானே இருக்கணும்? அதுனால தானே இத்தனை நாட்கள் கழிச்சு நீங்க கூப்பிட்டிருக்கீங்க? அவர் ஆபரேஷன் தியேட்டரில் இருக்கார். அதுனால மொபைல் அட்டன்ட் பண்ண முடியாதுன்னு அநேகமா ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருப்பாரா இருக்கும் "

" மேடம், அது வந்து அந்த அபிராஜ் மதுரை ஜெயிலில் இருந்து தப்பிச்சுட்டான். நீங்க எதுக்கும் எச்சரிக்கையா இருங்கன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்”

அதிர்ச்சி சுருசுருவென்று உடலில் ஏறியது. திடீரென்று ஒரு பயப்பந்து அடிவயிற்றில் இருந்து கிளம்பியது. அபிராஜ் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட போது, நந்தினியை அவன் பார்த்த பார்வை இப்போது கூட ஞாபகம் இருக்கிறது நந்தினிக்கு. வெறுப்பும், குரோதமும் கலந்த அந்தப் பார்வை சிலீரென்று கூர் கத்தியாக உள்ளத்தில் தைத்தது நினைவிற்கு வந்தது.

" ஜெயிலில் இருந்து எப்படித் தப்பிச்சானாம்? நம்ம காவல் துறையின் கண்காணிப்பு அவ்வளவு தானா? ஒரு கடுங்காவல் தண்டனைக் கைதியைக் கூட சரியாப் பாத்துக்க மாட்டாங்களா? இவ்வளவு கவனக்குறைவாக எப்படி இருந்திருக்காங்க? " உண்மையான வருத்தத்துடன் இன்ஸ்பெக்டரை விசாரித்தாள் நந்தினி.

" மேடம், காவல்துறை எவ்வளவோ ஜாக்கிரதையாத் தான் இருந்த இருக்காங்க. அபிராஜ் எப்படிப்பட்ட ஆளுன்னு உங்களுக்குத் தெரியாதா மேடம்? கொஞ்ச நாட்களாக ரொம்ப நல்லவனா நடிச்சு நல்ல பேர் வாங்கிருக்கான். அதுனாலயே போலீஸ் மெத்தனமா இருந்திருக்கலாம். ஆனாலும் அவன் பயங்கர புத்திசாலி. பல நாட்களாகத் திட்டம் போட்டுத் தான் நிறைவேத்திருப்பான். உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடலில் சேத்திருக்காங்க. ஹாஸ்பிடலில் இருந்து தான் தப்பிச்சுருக்கான். டாக்டராச்சே அவன்? உடம்பு சரியில்லைங்கறதும் அவன் போட்ட டிராமாவா இருக்கும். அதே மாதிரி ஹாஸ்பிடலில் எங்கே எப்படி என்ன நடக்கும்னு வழிமுறைகள் எல்லாமே அவனுக்கு அத்துப்படி தானே மேடம்? ” என்று அவர் காவல்துறையினருக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார்.

கரிகாலனுடைய வாதங்கள் எல்லாமே
நியாயமானவையாகத் தான் இருந்தன. அபிராஜ் போன்ற ஆளுக்குக் காவலரை ஏமாற்றுவது ஒன்றும் கஷ்டமான செயல் இல்லை தான்.

" எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க மேடம்.
அதுக்காகத்தான் விஷயம் தெரிஞ்சவுடனே உங்களைக் கூப்பிட்டேன். குழந்தைகளை பத்திரமாகப் பாத்துக்குங்க. வெளியூர் எங்கயும் போக வேணாம். அப்படியே போக பிளான் பண்ணிருந்தீங்கன்னா கேன்ஸல் பண்ணிடுங்க. வீட்டிலயும் ஸெக்யூரிட்டியை ஜாஸ்தி பண்ணுங்க. புது ஆட்களை வேலைக்குச் சேர்க்க வேணாம் ” என்று கரிகாலன் வரிசையாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். அதைக் கேட்ட நந்தினியின் அடிவயிற்றில் சிலீரென்று உணர்ந்தாள். உடலில் ஒரு பதட்டம் வந்து தொற்றிக் கொண்டது.

' ஊரில் திருவிழா ஆரப்பிக்கப் போகும் சமயத்தில் வெளி ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்குமே? எதைத் தான் கண்காணிப்பது? ' என்று கவலைப்பட ஆரம்பித்தாள். தான் அறிந்துகொண்ட விஷயத்தின் தீவிரம் அவளை நிலைகுலைய வைத்தது. ஒரு நிமிடம் தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டு கார் ஸீட்டிலேயே சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். யாமிருக்க பயமேன் என்று கையில் வேலுடன் முருகனின் முகம் நினைவுக்கு வர மனதில் துணிச்சல் வந்தது. தன்னை ஒரு வழியாக நிலைப்படுத்திக் கொண்டு வீட்டை நோக்கித் தனது வண்டியை விரட்டினாள்.

வண்டி ஓட்டும்போது மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. 'அபிராஜ் எப்போது தப்பித்தான், இவருக்கு உடனே தெரிந்ததா, தாமதமாகத் தான் தெரிந்ததா? நாம் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னாலேயே ஏதாவது செய்து விடுவானோ? ஒருவேளை ஏற்கனவே ஊருக்குள் வந்துவிட்டானோ? ' இதைப் போன்ற கேள்விகள் மண்டைக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடி அவளுடைய சிந்தனையைத் தொந்தரவு செய்தன. ஸ்டியரிங் வீல் மீது இருந்த கை நடுங்க ஆரம்பித்தது. கஷ்டப்பட்டு மனதை அடக்கி, எதிரே தெரிந்த சாலையில் கவனத்தைச் செலுத்தினாள் நந்தினி.

ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவள் வேகமாக வீட்டுக்குள் ஓடினாள். சித்ராதேவியும், மகேந்திரனும் வரவேற்பறையில் உட்கார்ந்து தொலைக்காட்சியில் பக்தி சேனலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் இரண்டு பேரும் கண்ணில் படவில்லை. அவர்களுடைய அறையில் சென்று எட்டிப் பார்த்தாள். அவர்கள் கிடைக்கவில்லை என்றதும் பதட்டம் அதிகமானது.

" சரண்யா, சரவணா எங்கே இருக்கீங்க? " என்று குரல் கொடுத்தாள்.

" என்னம்மா நந்தினி? என்ன ஆச்சு?
ஹாஸ்பிடலில் இருந்து வந்ததும் வராதது
அவங்களை எதுக்குத் தேடறே? ” ஆச்சரியத்துடன் கேட்டாள் சித்ரா தேவி.

" அது வந்தும்மா,.. சொல்லறேன். மொதலில அவங்க எங்கேன்னு சொல்லுங்க"

" இன்னைக்கு அவங்க ஃப்ரண்ட் பிரணவ்வோட பர்த்டேயாச்சே? மறந்துட்டயா? அங்கே தான் போயிருக்காங்க. நீ தானே நேத்து அவங்களைக் கூட்டிட்டுப் போய் கிஃப்ட் வாங்கிட்டு வந்தே? " மகேந்திரன் சொன்னதும் தான் நந்தினிக்கே ஞாபகம் வந்தது. பதட்டத்தில் மறந்து போயிருந்தாள்.

" எப்போது கெளம்பிப் போனாங்க? எப்படிப் போனாங்க? " படபடப்பு அடங்கவில்லை நந்தினியின் குரலில்.

" நடந்து தான் போயிருக்காங்க. அடுத்த தெருவில் தானே இருக்கு அவங்க வீடு? அடிக்கடி போற இடம் தானே? பார்ட்டி முடிய லேட்டாயிடும்னு சொன்னாங்க. திரும்பி வரும்போது நாம யாராவது போய்க் கூட்டிட்டு வரலாம். அவங்க என்னதான் கூட யாரும் வர வேண்டாம்னு சொன்னாலும் மனசு கேக்காம இவரு கொண்டு போய் விட்டுட்டு வந்தாரும்மா? ” என்று சித்ரா தேவி கூறியதைக் கேட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் நந்தினி.

" அப்பாடி, இப்பத் தான் மனசு நிம்மதியா இருக்கு" என்று வாய்விட்டுச் சொல்லவும் செய்தாள் அவள்.

" என்னம்மா நடந்தது? ஏன் இப்படி வழக்கத்துக்கு மாறா இவ்வளவு பதட்டப்படறே? என்ன விஷயம்னு சொன்னாத் தானே எங்களுக்கும் புரியும்? ” என்று அதட்டுவதைப் போல மகேந்திரன் கேட்டதும், நந்தினி அழத் தொடங்கினாள். அவர்களுக்கோ பீதி கூடியது.

" அந்த டாக்டர் அதுதான் அபிராஜ் ஜெயிலில் இருந்து தப்பிச்சுட்டானாம். ஜாக்கிரதையா இருங்கன்னு இன்ஸ்பெக்டர் கரிகாலன், நான் கரெக்டா ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பும்போது ஃபோன் பண்ணினாரா? அதுல பயந்துட்டேன்" என்று அழுகையினூடே சொல்லி முடித்தாள்.

" அதெல்லாம் பயப்பட வேண்டாம்.
நமக்குத் துணையா முருகன் வேலோடு நிக்கும்போது அவர் மேல நம்பிக்கை வை. அவரை மீறி யாராலயும் எதுவும் செய்ய முடியாது " என்று சித்ரா தேவி ஆறுதலாகப் பேசினாலும் அவள் மனதிலும் பயம் உதிக்கத் தொடங்கியிருந்தது.

" என்னதான் தைரியமா இருந்தாலும் குழந்தைகள் விஷயத்தில் பயப்படாமல் இருக்க முடியலையேம்மா. நான் ஒண்ணு பண்ணறேன். மனசு படபடன்னு அடிச்சுக்குது. இப்பவே பிரணவ் வீட்டுக்குப் போய் பார்ட்டி முடியும் வரைக்கும் வெயிட் பண்ணி அவங்களைக் கூட்டிட்டு வரேன்" என்று கிளம்பினாள் நந்தினி.

" நானும் வரவா? " என்று மகேந்திரன் கிளம்ப அவரைத் தடுத்தாள்.

" வேண்டாம். இங்க அம்மா தனியா இருப்பாங்க. யாராவது வந்து கதவைத் தட்டினா, யாருன்னு செக் பண்ணிட்டுக் கதவைத் திறங்க. பக்கத்துத் தெருவா இருந்தாலும் நான் டிரைவரைக் கூட்டிட்டு காரிலயே போறேன். அதுதான் சரி" என்று தானே முடிவெடுத்து விட்டு உடனே செயல்படுத்தவும் செய்தாள் .

" அட பரவாயில்லையே! நந்தினி எப்பவும் பிஸியாக இருப்பயே? இன்னைக்கு நீயே வந்திருக்கிறது பெரிய அதிசயம் தான். மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது" என்று வரவேற்றாள் பிரணவ்வின் அம்மா.

சிரித்துத் தலையாட்டிய நந்தினி, தன் குழந்தைகளைத் தேடினாள். அந்த அறையில் அவர்கள் இல்லை.

" பசங்க எங்கே? உள்ளே விளையாடிட்டு இருக்காங்களோ?" என்றவளுக்குக் கிடைத்த பதில் அவளை அதிர்ச்சி அடைய வைத்தது.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 
Last edited:
Top