கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 17

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே!

அத்தியாயம் 17

அருணகிரிநாதர் வரலாறு

பொ. ஊ. பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மகான் அருணகிரிநாதர். இவர் முருகனின் மிகச்சிறந்த பக்தர். இவர் எழுதிய திருப்புகழ் முருகனின் மேல் பாடப்பட்ட பக்தி இலக்கியங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

அருணகிரிநாதர் தென்னிந்தியாவில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று 16,000 இசைப் பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதி நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன.

அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்" தேவாரத்திற்கு
இணையாகவும்,
"கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன.

திருப்புகழ் பாடல்களில் 1088-இக்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் இருக்கின்றன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இவருடைய பாடல்கள் தங்களுடைய அமைப்பில் உள்ள சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

திருப்புகழ், இடைக்காலத் தமிழ் இலக்கியத்தின் மிகவும் முக்கிய படைப்பாகும். கவிதை , இசை நயத்திற்காகவும், மற்றும் மத, தார்மீக, தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் போற்றப்பட்டு வருகிறது.

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் தனிச்சிறப்பு பெற்றதன் காரணம், அது முருகப்பெருமானின் திருவுருவத்தை முழுச் சிறப்புடனும், மகிமையுடனும் நம்முடைய கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. முருகனின் அருளைப் பெற வைக்கிறது. மனித குலத்தை முழுமையின் பாதைக்கு வழிநடத்திய பல மகான்களில் அருணகிரிநாதர் தனித்துவமான இடத்தைப் பெறுகிறார். அவருடைய பாடல்கள் மக்கள் மனதில் பக்திச் சுடரை மட்டுமல்ல, அறிவின் ஒளியையும் தூண்டுகின்றன. அறம், சன்மார்க்க வாழ்வுக்கு வழி காட்டினார். முருகனின் தாமரை பாதங்களுக்கு வழி காட்டினார்.

அருணகிரிநாதர் பிறந்தது திருவண்ணாமலையில். அவருடைய சகோதரியின் ஆதரவில் வளர்ந்தார். தமிழிலக்கியத்தில் ஆர்வம் இருந்ததால் தேவாரம், திருமந்திரம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும் அவருடைய மனம் பக்தி மார்க்கத்தில் முதலில் செல்லவில்லை.

தனது சகோதரியின் பணத்தை எல்லாம் தீய வழிகளில் செலவழித்தார். உடல் இன்பமே பெரிதென்று வாழ்ந்தார். சிற்றின்பத்தை நாடிய சிந்தை வேறெதிலும் செல்லவில்லை. சகோதரியின் நகைகள், உடைமைகள் என்று ஒவ்வொன்றையும் தனது இன்பத்திற்காக செலவழித்து அவரை ஓட்டாண்டியாக்கி விட்டுத் தான் ஓய்ந்தார்.

சகோதரியிடம் பணம் கிடைக்காததால் கவிதைகள் எழுதிப் பணக்கார்களிடம் வாசித்துப் பொருள் பெற்றார். அந்தப் பணத்தையும் தீய வழிகளில் செலவழித்தார். அதுவும் ஒரு கட்டத்தில் நின்று போனது.

ஒரு சமயத்தில் சகோதரியிடம் இருந்த பொருள் எல்லாம் செலவழிந்து அவர் வறுமையில் வாடிய போது, பணம் கேட்டுத் தொந்தரவு செய்த உடன்பிறப்பிடம், " உனக்குத் தருவதற்கு என்னிடம் இனி பணமில்லை. என்னை விற்று உனக்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொள். என் உடலை உன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்" என்று அவருடைய சகோதரி விரக்தியில் பேச, அந்த வார்த்தைகள் அவருடைய மனதில் ஆழமாகத தைத்தன.

தான் செய்த தவறுகளின் தீவிரம் அவருக்குப் புலப்பட ஆரம்பித்தது. தவறுகளை உணர்ந்து தவிக்கத் தொடங்கினார். மனம் பக்தியை நாட விரும்பியது. சுயநலம் கொண்டு சிற்றின்பத்திற்காகப் பொருளையும்,
நேரத்தையும் செலவழித்ததை எண்ணி வருந்தினார். பெரும் தவறு இழைத்ததற்காகத் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ள முடிவு செய்து திருவண்ணாமலையில் இருந்த சிவன் கோயிலுக்குச் சென்று அங்கிருந்த தூண்களில் தலையை முட்டி மோதியபடி புலம்பினார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்கிருந்த வல்லாள கோபுரத்தின் மீது ஏறிக் கீழே குதித்தார். கிரானைட் கற்களில் மோதித் துடிதுடித்து உயிரிழக்கப் போகும் தருணத்தை எதிர்நோக்கிக் கண்களை மூடியிருந்தவரை யாரோ கைகளில் தாங்கிக் காப்பாற்றி விட்டார்கள்.

முருகப் பெருமானே வந்து எழுந்தருளி, அவருடைய உயிரைக் காப்பாற்றினார்.
" இப்போது உயிரை விடுவதற்காகப் பிறக்கவில்லை நீ. விழுவதற்காகவும் பிறக்கவில்லை நீ. விதிவசத்தால் வீழ்ந்தோரை எழுப்புவதற்காகப் பிறந்திருக்கிறாய். உலகத்தில் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உனக்காகக் காத்திருக்கின்றன. எனது பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் பக்தி இலக்கியம் இயற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாய் " என்று கூறி ஆசீர்வதித்தார்.

அருணகிரிநாதர் என்ற பெயரையும் சூட்டி, " முத்தைத்தரு பத்தித் திரு நகை" என்று முதல் பாடலுக்கான அடியையும் எடுத்துக் கொடுத்தார் அந்த கதிர்வேலர்.
முருகனிடம் நேரடியாக ஞான உபதேசம் பெற்ற பாக்கிய மூவரில் அருணகிரிநாதர் ஒருவராவார். மற்ற இருவர் சாட்சாத் சிவபெருமானும், அகத்திய முனிவரும் ஆவர்.

அருணகிரி, இப்போது பிரகாசத்தின் அற்புதமான கதிர்களை வீசும் ஒரு சக்தியின் முன் தன்னைக் கண்டு பரவசமடைந்தார். அவருக்கு இப்போது முருகப் பெருமானின் தரிசனம் பரிபூரணமாகக் கிடைத்திருந்தது. முருகப்பெருமான் மரணத்திலிருந்து காப்பாற்றி, உடனடியாக அவரை ஒரு புனிதத் துறவியாக மாற்றினார். தோகை விரித்தாடும் மயில், முருகனின் அருகிலேயே வசீகரமும் பேரழகும் கொண்டு காட்சி தந்தது.

பிரபஞ்சத்தின் அனைத்து சக்தியும் அழகும் அறிவும் முழுவதுமாக உருவெடுத்து பூமியில் இறங்கியதைப் போல இருந்தது. பல்வேறு உணர்ச்சிகளால் தாக்கப்பட்டு மெய்மறந்து நின்ற அருணகிரிநாதர் அந்தக் கணத்தில் புனிதராக மாறினார்

ஆன்மிகப் பேரானந்தங்களில் ஆழ்ந்த அருணகிரிநாதர், அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள கோயில் கோபுரத்தின் இளையனார் கோயிலில் தவம் செய்யத் தொடங்கினார். சிவபெருமான் அவர் முன் தோன்றி, பயத்தை நீக்கி திருநீற்றைப் பிரசாதமாக அருளினார். உண்ணாமுலை தேவி அவருக்கு "நின் பிறப்பு ஒலிகா" (உன் பிறப்பிற்கு முடிவு வரும்) என்று ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் ஆசிர்வதித்தார். வள்ளியம்மை தேவியும் "ஸ்பரிச தீக்காய்" என்ற தெய்வீக ஸ்பரிசத்தால் தன் அருளைப் பொழிந்தாள்.

அன்று தமிழ் இலக்கியத்தில் தனி இடம் பிடித்துள்ள திருப்புகழ்ப் பாடல்கள் உலகிற்குத் தெரியும் வகையில் மலர்ந்து மணம் பரப்ப ஆரம்பித்தன.

திருப்புகழை தேவாரம், திருவாசகம்
போன்ற மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் பாவிக்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நுட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை சிறப்பாக மிளிர்கின்றன. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது.

நந்தினியின் கதை தொடர்கிறது

மொபைலில் வந்த தகவலைப் பார்த்து அதிர்ந்து தான் போனான் ராஜசேகர்.

" எப்படி இருக்கே நண்பா? எனக்குச் சேரவேண்டிய பொருட்களை உன்னிடம் இருந்து வாங்கிக் கொள்வதற்காகவே நான் வெளியே வந்திருக்கேன். நீயாவே முன்வந்து அதையெல்லாம் என் கிட்டக் கொடுத்துரு. அதையெல்லாம் வாங்கிகிட்டு நான் நிம்மதியா என் வழியில் போயிருவேன். கொடுக்க மாட்டேன், அது கோயில் சொத்து அது இது, நீதி, நியாயம்னு எனக்கு லெக்சர் கொடுக்கறதா நீ முடிவு பண்ணியிருந்தால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. அதுக்கப்புறம் உன் குடும்பத்துக்கு நீ எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செஞ்சாலும் பயனில்லாமல் போகும். பலமடங்கு சக்திசாலியாக நான் இப்போ வெளியே வந்திருக்கேன். வேலு நாச்சியார் மாதிரி வீரத்தைக் காட்ட உன் மனைவி தயாரா இருந்தால் இருந்துக்கட்டும். ஆனால் அப்படி அவ யோசிச்சா, அவளோட முடிவு பயங்கரமா இருக்கப் போகுது. சும்மாக் கொல்ல மாட்டேன். சித்திரவதை பண்ணி அணு அணுவா உயிரை எடுப்பேன். அழகான உடல் வேற. அதை மேக்ஸிமம் மனுஷங்களுக்கு இரையாக்கிட்டுத் தான் சித்திரவதையையே ஆரம்பிச்சேன். இதுக்கு மேல உன்னோட இஷ்டம். அப்புறம் குழந்தைங்களோட உடல் உறுப்புகளுக்கு மார்க்கெட்டில் பயங்கர டிமாண்ட் இருக்கு. பழிக்குப் பழியும் ஆச்சு. காசுக்குக் காசும் ஆச்சு. புத்திசாலியா முடிவெடுத்துப் பொக்கிஷத்தை என் கிட்ட ஒப்படைச்சுரு. அதுக்கு அப்புறம் சத்தியமா உங்களைத் தொந்தரவு பண்ண மாட்டேன். நீயும் உன் குடும்பமும் நிம்மதியா வாழலாம்- இப்படிக்கு அபிராஜ் "

என்ற தகவல் ஒரு புதிய எண்ணில் இருந்து வாட்ஸப்பில் வந்திருந்தது.

இந்த நீண்ட தகவலைப் படித்தவுடன் ராஜசேகரின் இரத்தம் கொதித்தது. ஆத்திரம் தலைக்கேறியது. உடனே அந்த எண்ணில் பேச அழைப்பு விடுத்தான்.
"அந்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை" என்ற செய்தி தான் பதிலாகக் கிடைத்தது.

அவனருகில் உட்கார்ந்திருந்த நந்தினி, அவனுடைய முகமாற்றத்தை கவனித்து விட்டாள்.

" என்னங்க ஆச்சு? ஏன் இப்படி முகமெல்லாம் சிவந்து போச்சு? " என்று கேட்டபடி அவனுடைய கைகளைப் பற்றினாள்.

" அது வந்து நந்தினி, வந்து... " என்று மேலே சொல்லாமல் தடுமாறினான் அவன். அவன் கையில் இருந்த மொபைலைப் பிடுங்கி அவனுக்கு வந்திருந்த தகவலைப் படிக்க ஆரம்பித்தாள். ராஜசேகர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளைத் தடுக்க முடியவில்லை. தகவலை முழுவதும் படித்த நந்தினியின் முகமும் மாறியது.

" இதைப் படிச்சுட்டு தான் இந்த ரியாக்ஷனா? எனக்கு எவ்வளவோ அட்வைஸ் பண்ணிட்டு நீங்களே இப்போ டென்ஷனாகறீங்களே? அதெல்லாம் அவனால ஒண்ணும் பண்ண முடியாது. குரைக்கற நாய் கடிக்காது. போலீஸ் வேற அவனை வலை வீசித் தேடிட்டே இருக்காங்க. அவ்வளவு ஈஸியா நம்ம ஊருக்கு வந்து அவனால எதுவும் செய்ய முடியாது. இருந்தாலும் நாம ஜாக்கிரதையா இருப்போம். இந்த மாதிரி அச்சுறுத்தல் மெஸேஜ் வந்திருக்குன்னு கரிகாலன் கிட்டவும் சொல்லி வைப்போம். அவரே நமக்கு இங்கே பாதுகாப்பு தருவார். எப்படியும் அபிராஜைப் பிடிக்க அவங்களும் முயற்சி பண்ணுவாங்களே?" என்று அமைதியாக அதே சமயத்தில் உறுதியாக நந்தினி பேசியது அவனுடைய மனதிற்கும் ஆறுதலாக இருந்தது.

அடுத்த நாள் காலையில் சப் இன்ஸ்பெக்டர் கரிகாலனை நேரில் சந்தித்துப் பேசலாம் என்று முடிவெடுத்து விட்டு இரண்டு பேரும் தூங்க முயற்சி செய்தார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் தாக்கியதால் சரியாகத் தூங்க முடியவில்லை.

காலையில் வழக்கம் போலச் சீக்கிரம் எழுந்த நந்தினி, தன் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டாள். குழந்தைகளைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி விட்டு, காலை உணவுக்குப் பெரியவர்கள் நான்கு பேரும் உட்கார்ந்தபோது தான் அபிராஜின் மிரட்டலைப் பற்றிப் பேசினார்கள்.

" எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கணும். மோசமானவன் அவன்" என்று சொல்லிவிட்டுப் பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்த மகேந்திரனுக்கு உடல் நடுங்கியது.

" சொல்ல மறந்துட்டேனே? நேத்து சலோனி பேசினா. இந்தத் தடவை திருவிழாவில் கலந்துக்கக் குடும்பத்தோட வராளாம். நம்ம கெஸ்ட் ரூமை ரெடி பண்ணி வைக்கணும் " என்று நந்தினி சொல்ல, அனைவரும் முகம் மலர்ந்தார்கள்.

" அப்பாடி, நேத்திலிருந்து மனசை வருத்திட்டு இருக்கற டென்ஷனைப் போக்குற மாதிரி ஒரு நல்ல விஷயம் இப்போது காதுல விழுந்திருக்கு. ஸலோனி அதுவும் குடும்பத்தோடு வந்தா வீடே கலகலப்பா ஆயிடும் இல்லையா? " என்று மகிழ்ந்து போனார்கள் சித்ரா தேவியும், மகேந்திரனும்.

ஆனால் இவர்களைச் சூழ்ந்து அச்சுறுத்தும் ஆபத்து ஸலோனி குடும்பத்திற்கும் சேர்ந்து தான் என்பதை அந்த நொடியில் உணரத் தவறினார்கள்.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

 
Top