கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 18

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 18

அத்தியாயம் 18

அருணகிரிநாதர் வரலாறு

முருகப்பெருமான் நேரில் காட்சியளித்த போது, அருணகிரிநாதரின் நாவில் தன்னுடைய வேலால், "சடாட்சரம்" என்கிற ஆறெழுத்து மந்திரத்தை எழுதி அருள் பாலித்தார். அதன் பிறகு அருணகிரிநாதரின் நாவில் தவழ்ந்த பாடல்கள் தான் திருப்புகழ் பாடல்களாக பிரசித்தி பெற்றன.

அருணகிரிநாதருடைய பக்திப் பயணத்தில் திருவெண்ணைநல்லூருக்கும் சென்றார். அங்கு நடனமாடிய முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்னர் சிதம்பரம் சென்று தங்கி, கோயில் கோபுரங்களுக்கு அருகில் உள்ள சந்நிதிகளில் வீற்றிருந்த முருகனைப் புகழ்ந்து பாடினார். அடுத்ததாக திருஞானசம்பந்தரின் புனிதத் தலமான சீர்காழிக்குச் சென்று, முருகப்பெருமானின் திருவுருவத்தைக் கண்டு களித்தார். அதற்குப் பிறகு காவேரிப்பூம்பட்டினம், கரிவாணாநகர், திருமன்னிப்பதிக்கரை ஆகிய தலங்களுக்குச் சென்றார்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள 'மேலை வயலூரை' அடைய அவருக்கு முருகனே ஆணை பிறப்பித்தார். அங்கு சென்று சிறிது காலம் தங்கினார். பின்னர் திருவாரூர், திருமறைக்காடு, திருச்செந்தூர், பழனி, கும்பகோணம், திருச்செங்கோடு, பாண்டிக்கொடுமுடி ஆகிய இடங்களுக்குச் சென்று திருச்சுழி திரும்பினார். விராலிமலை, கொடும்பாளூர், கடம்பந்துறை எனப் புறப்பட்டுச் சென்றார். அவர் பழனியில் தங்கியிருந்தபோது, காவேரிச்சேவகன்
என்றழைக்கப்படும் கலிசைச்சேவகனின் நட்பு அவருக்குக் கிடைத்தது. மீண்டும் மதுரை வழியாக திருச்செந்தூர் சென்றார். திருச்செந்தூர் சுப்பிரமணியர் அவர் முன்னே அழகிய குழந்தை வடிவில் தோன்றி அருள் பொழிந்தார்.

சிறிது காலத்திற்குப் பிறகு அருணகிரி வயலூருக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கினார். இறைவன் மீண்டும் ஒரு மனித உருவில் அவர் முன் தோன்றி, "என்னைப் பற்றி, என் வேல், மயில், சேவல் மற்றும் எனது பல்வேறு வசிப்பிடங்களைப் பற்றியும் பாடவும்" என்று கட்டளையிட்டார்.

"உந்தன் மகிமையைப் பாடுவது உண்மையில் எனக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பேறு " என்று கூறினார் அருணகிரிநாதர். வயலூர் முருகனிடம் முழுவதுமாகச் சரணடைந்தார். அருகிலிருந்த பொய்யா கணபதி சந்நிதியை வணங்கிவிட்டு, தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பயணம் அவருக்குப் பல புனித இடங்களை தரிசித்த ஒளிமயமான அனுபவத்தைக் கொடுத்தது.

திருவண்ணாமலையில் அரசாட்சி செய்து கொண்டிருந்தான் மன்னன்
பிரபுட தேவராயன். மக்கள் மகிழ்வுறும் வண்ணம் சிறப்பாக செங்கோலாட்சி செலுத்தி வந்தான். அவன் அண்ணாமலையில் அருள் புரியும் ஈசன் மீதும் அம்பிகை மீதும் அளவுகடந்த பக்தி செலுத்தி வந்தான். அவனுடைய சபையில் பல புலவர்கள், ரிஷிகள், முனி குமாரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரான சம்பந்தாண்டான், சக்தி உபாசகர் என்று போற்றப்பட்டார். மன்னன் அவர் மீது அளவிலா மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான்.


ஒரு நாள் மன்னனுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. நோயின் தீவிரம் கூடிக் கொண்டு போகத் தொடங்கியது. வைத்தியர்கள் தங்களால் முடிந்தவரை வைத்தியம் செய்தும் பலனில்லாது போனதால் கவலை அடைந்தனர். கந்தன் புகழ் பாடுகிற அருணகிரி அண்ணாமலையானை தரிசிக்க வந்த போது பிரபுட தேவராய மன்னன் தீராத நோயில் விழுந்து அவதிப்படுவதை அறிந்து அரண்மனை சென்றார். அங்கு வைத்தியர்கள் கூறியதைக் கேட்டு அவர்களை அணுகி, "நோய் தீர ஏதாவது வழியுண்டா? " எனக்கேட்டார். வைத்தியர்களும் என்ன வழியென்று தெரியாமல் திகைத்திருந்தனர். ஏற்கனவே அரசபையில், அருணகிரியுடன் போட்டியிட்டுத் தோற்றுப் போயிருந்த சம்பந்தாண்டான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை மடக்கலாம் என்று எண்ணி அருணகிரியிடம் "நீர் முருக பக்தன் என்பது உன்மையானால் தேவலோகம் சென்று பாரிஜாத மலரைக் கொண்டு வந்தால் மன்னன் நோய் நீங்கும்" என்றான்.

அருணகிரியும் "முருகனருளால் பாரிஜாத மலரைக் கொண்டு வருவேன்" என்று கூறி, முருகனை நினைந்து திருவண்ணாமலைக் கோயிலுக்குச் உள்ளே சென்று கோபுரத்தில் உள்ள மேல் அறையில் தியானத்தில் அமர்ந்தார். அதே நேரம் ஒரு கிளி கோபுர உச்சியில் பறந்து வந்து அங்கே அமர்ந்தது. இறையருள் நிரம்பப் பெற்ற அருணகிரிநாதர் சித்தர்களின் கலைகளில் ஒன்றான கூடு விட்டுக் கூடு பாயும் கலையில் தேர்ச்சி பெற்றவர். ஆதலால் கிளியின் உடலில் புகுந்து, அதாவது தமது உடலை மறைத்து அங்கே வைத்துவிட்டுக் கிளி உருவில் தேவலோகம் சென்றார்.

அமராவதி நகரில் தேவர்கள் தலைவனான இந்திரன், தனது சபையில் வீற்றிருந்தார். அப்போது அவர் மடியில் கிளி ஒன்று பறந்து வந்து அமர்ந்தது. அதைக் கண்ட தேவேந்திரன் ஒரு கணம் அக்கிளியை உற்று நோக்கி விட்டு "அருணகிரிநாதரே வருக வருக! என் ஐயன் முருகன் ஏற்கனவே எனக்கு இட்ட கட்டளைப்படி இந்தப் பாரிஜாத மலரை உங்களுக்காக எடுத்து வைத்திருக்கிறேன்" என்று கூறிவிட்டு மலரைக் கொடுத்தார். "அமரர்க்கு அரசே, அடியேனின் நன்றி" எனக் கூறிய கிளி பாரிஜாத மலருடன் பறந்து சென்றது.

கிளி பறந்து வந்து திருவண்ணாமலையில் அரசன்
பிரபுடதேவராயன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் பாரிஜாதமலரை வைத்தது. "கீ கீ" என்று கத்தியது. திரும்பிப் பார்த்தான் மன்னன் "பாரிஜாத மலரை இந்தக் கிளியா கொண்டு வந்தது? " என வியந்தான் அரசன். கிளி பறந்துவிட்டது. அருணகிரிநாதர் தான் கிளி உருவில் சென்று மலரைக் கொண்டு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட அரசன், அம்மலரை வைத்தியர்களிடம் கொடுக்க, அவர்களும் அம்மலரின் மகிமையால் அரசனுடைய நோயை குணமாக்கினர். மகிழ்ச்சியடைந்த மன்னன் சம்பந்தாண்டாரை வரவழைத்தான்.

"என்ன சம்பந்தாண்டாரே? தாங்கள் விதித்த நிபந்தனையின் படி மலரைக் கொண்டு வந்து அருணகிரிநாதர் என்னுடைய நோயை குணப்படுத்தியும் விட்டார் . இனியாவது தோல்வியை ஒப்புக் கொள்ளும்"என்றான். அதை மறுத்த சம்பந்தாண்டார் ஏளனமாகச் சிரித்தார் .

"சம்பந்தாண்டாரே, ஏன் இந்தச் சிரிப்பு?" எனக் கோபத்துடன் வினவிய மன்னனைப் பார்த்து, "அருணகிரியாவது தேவலோகம் சென்று திரும்பி வருவதாவது? அவர் வந்திருந்தால் எங்கே இருக்கிறார் என்று தங்களால் கூறமுடியுமா" என்று கேட்டார் அவர். உடனே அரசனும், "ஆம் அருணகிரி கிளி உருவில் வந்தார், என் அருகே பாரிஜாத மலரை வைத்து விட்டுப் பறந்து விட்டது கிளி இது உண்மை" எனக் கூறினான்.

கிளியாக வந்த அருணகிரியார் தமது உடலைக் கோபுரத்தில் தேடினார். உடலைக் காண முடியவில்லை அருணகிரியாரும் முருகனை நினைத்துத் தொழுதார். முருகன் அவன் முன் காட்சி அளித்தான். "அருணகிரி, கவலை வேண்டாம், இதே கிளியுருவில் இருந்து எம்மைப் பாடுவதைத் தொடருங்கள்" என்று அருள் புரிந்தார். இதே போல் மன்னன் கனவிலும் தோன்றி "அரசே! அருனகிரி கிளி உருவில் திருவருணைக் கோபுரத்தில் எப்போதும் இருப்பார். கவலை வேண்டாம்" என்று அருள் புரியவும் அரசன் ஒடோடிச் சென்றான். அருணைக் கோபுரத்துக் கிளி மன்னனைக் கண்டதும் "கீ கீ" என்று கத்தியபடி அவனது தோள்மீது வந்தமர்ந்து அவனுடைய தலைமுடியைக் கோதி ஆசி கூறியது. அன்று முதல்
பிரபுடதேவராயன் முருக பக்தனாக மாறிவிட்டான்.

அருனகிரியாரும் அரசனை மரணத்தில் இருந்து மீட்ட முருகனின் திருவருளைக்
கிளி ரூபத்தில் இருந்தபடி பாடிய திருப்புகழே, கந்தரநுபூதி ஆகும். அவருடைய உடல் மறைந்தாலும் கிளியுருவில் அவர் நமக்கு அருளிய பாடல்கள் திருப்புகழ், கந்தரநுபூதி, வேல்வகுப்பு ஆகியவை.

சம்பந்தாண்டாரால் யாருக்கும் தெரியாமல் அருணகிரியின் உடலைத்தான் அழிக்க முடிந்தது. ஆனால் உயிரை அழிக்க முடியவில்லை. திருப்புகழ் பாடினால் வாய் மணக்கும், கந்தன் அநுபூதி பாடினால் வாழ்வு சிறக்கும்.

சம்பந்தாண்டார், அருணகிரிநாதரின் மீது கொண்ட பொறாமையால் அவருடைய உடலை எரித்திருந்தான். கந்தசாமிப் பெருமானோ, கிளியாக மாறிய தனது பக்தனைத் தன் தோளில் அமரச் செய்து அமரராக்கியதோடு திருப்புகழின் மகிமையை உலகுக்கு உணர்த்தினார்.

நந்தினியின் கதை தொடர்கிறது

நந்தினி, தான் படித்து அறிந்து கொண்ட அருணகிரிநாதரின் கதையைக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றி அவர்களுக்குப் புரியும்படி எடுத்துக் கூறினாள். அருணகிரிநாதர் முருகனின் மீது வைத்திருந்த பக்தி பற்றியும், முருகனின் அருளால் அவர் பெற்ற பாக்கியத்தையும் சுவாரஸ்யமாக நந்தினி சொன்னபோது குழந்தைகளும் கவனத்துடன் கேட்டுக் கொண்டார்கள்.

இரண்டு நாட்கள் அமைதியாகவே கழிந்தன. கொஞ்சம் கொஞ்சமாக நந்தினியும், ராஜசேகரும் மனதிலிருந்த பதட்டத்தை மறைத்துக் கொண்டு தினசரி வேலைகளில் தங்கள் கவனத்தைத் திருப்புவதில் வெற்றி கண்டார்கள்.

சப் இன்ஸ்பெக்டர் கரிகாலனிடம் மட்டும் பேசித் தங்களுக்கு வந்த மிரட்டல் செய்தியைத் தெரிவித்து விட்டார்கள்.

" இவ்வளவு நேரம் அந்த ஸிம்மை மாத்திருப்பான் அவன். அதை வச்சு நம்மால எதுவும் கண்டுபிடிக்க முடியாது. இருந்தாலும் அவனைக் கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணக் காவல் துறையினர், தீவிர முயற்சிகள் எடுத்துட்டுத் தான் இருக்காங்க. காவல் துறைக்கும் இது மானப் பிரச்சினையா இருக்கே? எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க. நானும் முடிஞ்ச வரை பாதுகாப்பு தரமுடியுமான்னு பாக்கறேன். திருவிழாச் சமயமா இருக்கறதுனால ஊர் முழுவதும் நிறையப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டி இருக்கு" என்று அவர்களுக்கு அறிவுரைகள் கூறி உரையாடலை முடித்துவிட்டார். அவரும் பாவம் என்ன செய்ய முடியும்? அவரிடம் இருக்கும் குறைந்த அளவிலான காவலர் படையை வைத்துக் கொண்டு தானே பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது?

சலோனி குடும்பத்தினரை வரவேற்க அனைவரும் தயாரானார்கள். விருந்தினர் அறையும் அனைத்து வசதிகளுடன் தயாராகி நின்றது. ராஜசேகர் தன்னுடைய மருத்துவமனையின் செக்யூரிட்டி இன்சார்ஜிடம் பேசி நிலைமையை விவாதித்து வீட்டிற்குத் தேவையான பாதுகாப்பைக் கூட்டினான்.

சலோனி, சலோனியின் கணவர் சத்யன், அவர்களுடைய வாரிசான நான்கு வயது மகிழன் மூன்று பேரும் வந்து இறங்கியபோது வீடே களை கட்டியது. சரண்யா, சரவணன் இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு மகிழனிடம் பிரியம் காட்டினார்கள். அவனும் விரைவிலேயே அவர்களிடம் ஒட்டிக் கொண்டான்.

சத்யனும் ஒரு மருத்துவர் தான். நியூரோ சர்ஜன் என்று அழைக்கப்படும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். ஸலோனியின் வீட்டுப் பெரியவர்களின் விருப்பப்படி ஸலோனி அவரை மணந்து கொண்டாள். வெளிநாட்டில் அவர் ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், திருமணத்திற்குப் பிறகு அங்கே போனாள். அங்கே போய் ஸலோனி மேலே படித்துத் தன் தகுதியை உயர்த்திக் கொண்ட பின்னர் அவளுக்கும் அங்கே வேலை கிடைத்தது. நடுவில் மகிழன் பிறந்து இல்லறத்தின் இனிமையைக் கூட்டியிருந்தான்.

சத்யனின் பெற்றோர் அவர்களுடன் தங்கிப் பேரனை கவனித்துக் கொண்டதால் இரண்டு பேராலும் மருத்துவப் பணியில் சிறப்பாக செயலாற்ற முடிந்தது. இந்தியா வந்திருக்கும் சமயம் அவர்களும் சேர்ந்து தான் வந்திருந்தார்கள். ஆனால் அவர்களால் திருவிழா பார்க்க வரமுடியவில்லை. இந்தச் சாக்கில் மகளுடன் சில நாட்களாவது கழிக்கும் ஆசையில் மகள் குடும்பம் வசிக்கும் அகமதாபாத் நகரத்துக்குப் போயிருந்தார்கள். இந்தியாவை விட்டு ஸலோனியின் குடும்பம் கிளம்பும்போது வந்து சேர்ந்து கொள்வதாகச் சொல்லி இருந்தார்கள்.

திருவிழா ஆரம்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. கோயில் பணிகளைப் பார்த்துக் கொண்டு, மருத்துவமனை வேலைகளையும் கவனித்துக் கொண்டு ராஜசேகரும், நந்தினியும் ஓடியாடி உழைத்துக் கொண்டிருந்தார்கள். நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. நடு நடுவில் நந்தினி, ஸலோனியைக் கடைகளுக்கும் அழைத்துக் கொண்டு போனாள். அவர்களுடைய ஊர் தேனிக்கும் மதுரைக்கும் நடுவில் இருந்ததால் இரண்டு இடங்களுக்கும் மாற்றி மாற்றிப் போய் வந்தார்கள்.

மாலை நேரம். லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. குழந்தைகள் மூன்று பேரும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சரவணனும், மகிழனும் விளையாடக் கிடைத்த இடத்தில் கால்பந்தை உதைத்து விளையாடிக் கொண்டிருக்க, சரண்யா மட்டும் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தாள்.

திடீரென வேகவேகமாக ஊஞ்சல் ஆடத் தொடங்கியது. சரண்யாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. வேகமாக உயரத்துக்குச் சென்று உடனுக்குடன் ஊஞ்சல் திரும்பி வந்த வேகத்தைப் பார்த்து சரண்யா மனதில் பயம் எட்டிப் பார்த்தது. ஊஞ்சலை இறுகப் பிடித்துக் கொண்டாள். திடீரென உயரத்துக்குப் பறந்த ஊஞ்சல் அப்படியே அந்தரத்தில் நின்றபோது தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு. பயத்தில் குரல் எழும்பவே இல்லை. சரவணனும், மகிழனும் தங்கள் விளையாட்டில் ஆழ்ந்து போயிருந்ததால், சரண்யாவுக்கு ஏற்பட்ட வினோத அனுபவத்தை அவர்கள் கவனிக்கவே இல்லை.

வீட்டின் உள்ளே வரவேற்பறையில் பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

" புதுத் துணி எல்லாருக்கும் வாங்கியாச்சா நந்தினி?" என்று ஆரம்பித்தார் சித்ராதேவி.

" வாங்கியாச்சும்மா. ஸலோனிக்கு நீங்க சொன்னபடியே நல்ல பட்டுப்புடவை வாங்கியாச்சு. குழந்தைகளுக்கும் அவங்களுக்குப் பிடிச்ச டிரஸ் வாங்கிட்டோம்" என்றாள் நந்தினி.

" லேடீஸுக்கு நல்ல காஸ்ட்லி பட்டுப்புடவை. நாங்கதான் பாவம். என்ன கொண்டாட்டமா இருந்தா என்ன? வேஷ்டி தான். மேலே போட்டுக்க ஒரு குர்த்தா. பாவம் நாங்க" என்று வம்புக்கு இழுத்தார் சத்யன்.

" சும்மாக் கதை விடாதீங்க. நல்ல பிராண்டட் கடையில போய்ச் சட்டை வாங்கினால் பட்டுப்புடவைக்கு மேல விலை இருக்கு" என்று ஸலோனி சொல்லிக் கொண்டிருந்த போது தான் தோட்டத்தில் இருந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டது.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

( அருணகிரிநாதரின் கதை முடிந்தது. இனி நந்தினியின் கதை மட்டுமே தொடரும்)





















 
Top