கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கார்த்திகைப் பூவே! 19

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கார்த்திகைப் பூவே! 19

அத்தியாயம் 19

"பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடைபட்சியெனும் உக்ர துரகமும் நீபப்பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை வடிவேலும் திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றிய பன்னிருதோளும் செய்ப் பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே! "

குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும், கடம்ப மலர் மாலையையும், கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும்படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும், எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும், அருள் தருகின்ற சிற்றடிகளையும், பன்னிரண்டு தோள்களையும், இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதியையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் மறக்க மாட்டேன்.

(திருப்புகழ் பாடலும் பொருளும்)

ஆண்களுக்கும், பெண்களுக்குமான உடைகளை வைத்து மாற்றி மாற்றிக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள், முக்கியமாக ஸலோனி, சத்யன் மற்றும் நந்தினி மூவரும் தான்.
சித்ரா தேவியும், மகேந்திரனும் அவர்களுடைய உரையாடலில் அதிகம் கலந்து கொள்ளாமல் வெளியே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெண் குழந்தை இல்லாத அவர்கள், ஸலோனியைத் தங்கள் மகளாகவே பாவித்து பாசத்தைப் பொழிந்ததால், ஸலோனியின் கணவர் சத்யனைத் தங்கள் மருமகனாக மரியாதையுடன் நடத்தினார்கள். சில நாட்களாகத் தொலைந்து போயிருந்த வீட்டின் கலகலப்பை ஸலோனியின் குடும்பத்தின் வரவு நிச்சயமாக மீட்டு எடுத்திருந்தது.

" நந்தினி, கோயில் நகையெல்லாம் லாக்கரில் இருந்து எடுத்து வைச்சாச்சா?"

என்று சித்ராதேவி ஆரம்பித்தபோது தான் நந்தினிக்கு அடிவயிற்றில் சிலீரென்று தோன்றியது. வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்திருந்த அபிராஜின் நினைவும் அவனுடைய மிரட்டலும் மனதிற்குள் வேண்டாத விருந்தாளிகளாக எட்டிப் பார்த்தன.

" இல்லைம்மா, இன்ஃபாக்ட் எனக்குத் தெரியலை. ராஜசேகர் நேரம் கிடைக்கும் போது போய் எடுத்துட்டு வந்து கோயில் நிர்வாகிகள் யார் கிட்டயாவது பத்திரமா ஒப்படைச்சிடறேன்னு சொன்னார். யார் கிட்டக் குடுக்கப் போறார், எந்த இடத்தில் பத்திரப்படுத்தப் போறாங்கங்கற விவரமெல்லாமே ரகசியமா வைக்கப் போறாங்களாம். லாஸ்ட் மினிட்ல தான் முடிவெடுக்கப் போறோம்னு சொன்னாரு. அதுனால நானும் அதுக்கு மேல தொணதொணன்னு அவரை எதுவும் கேக்கலை. எல்லா விஷயங்களிலும் கோயில் நிர்வாகக் குழுவே சரியான முடிவெடுத்து பொறுப்பா செயல்படுவாங்கங்கற நம்பிக்கையில் விட்டுட்டேன்மா. நாம வேற எதுக்கு அநாவசியமா மூக்கை நுழைக்கணும்னு நினைச்சேன் " என்று சொன்னாள்.

" ஆமாம், அதுவும் சரிதான். இனிமேல் அந்தக் குழுவே பாத்துக்கும். நாம மட்டும் தனியாக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது இப்போது நம்ம குடும்பத்தோட தனிப்பட்ட விஷயமில்லை. ஊரோட பொதுநல விஷயமாயிடுச்சு. ஊர்ப் பெரிய மனுஷங்க கிட்டப் பொறுப்பைத் தந்த பிறகு கொஞ்சம் நிம்மதியாத் தான் இருக்கு" என்று ஆனந்தப் பட்டார் மகேந்திரன்.

அதன்பிறகு தான் பட்டுப்புடவை, வேஷ்டி என்று உரையாடல், துணிமணிகளின் பக்கம் திரும்பியது. அந்தத் திசை மாற்றமும் அவர்களுக்கு வேண்டியே இருந்தது. தீவிரமான ஒரு விஷயத்தில் இருந்து குதூகலமான திசையில் அவர்களைத் திருப்பியது. ஸலோனியும், சத்யனும் தங்கள் வாத, விவாதங்களை மங்களகரமாக ஆரம்பித்துப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஸலோனி, ஆண்களின் உடையைப் பற்றிக் கருத்து சொன்ன சமயத்தில் தான் குழந்தைகளின் அலறல் கேட்டது.

எல்லோருமாகப் பதறியடித்துக் கொண்டு தோட்டத்திற்கு விரைந்தார்கள். சரண்யா ஊஞ்சலுக்கு அருகில் தரையில் விழுந்து விழுந்து கிடந்தாள். ஊஞ்சலின் ஆட்டம் நிற்கவில்லை. காற்றில் அங்குமிங்கும் அசைந்தாடிக் கொண்டிருந்தது.

சரண்யாவின் கண்கள் மூடியிருந்தன. அவளருகில் நின்று கொண்டிருந்த மகிழனும், சரவணனும் தங்கள் அலறலை நிறுத்திவிட்டு சரண்யாவைப் பார்த்து பயந்து போய் மலங்க மலங்க விழித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

சரண்யாவின் அருகில் சென்று அவளைத் தன் மடியில் தூக்கிப் போட்டுக் கொண்டாள் நந்தினி. மயங்கிக் கிடந்த சரண்யாவைப் பார்த்து பயந்து போன்ள் நந்தினி. கன்னத்தில் தட்டி எழுப்ப முயற்சி செய்தாள் அவள். பலனேயில்லை.

" சரவணா, மகிழா , என்ன ஆச்சு? சரண்யா எப்படிக் கீழே விழுந்தா? " என்று ஸலோனி விசாரித்தாள்.

" தெரியலை அத்தை. நானும் மகிழனும் ஃபுட்பால் வெளையாடிட்டு இருந்தோம். சரண்யா ஊஞ்சலில் ஆடிட்டு இருந்தா. திடீர்னு ஊஞ்சல் ரொம்ப வேகமாக ஆடறதைப் பார்த்து நாங்க ஆச்சர்யப்பட்டோம். இந்த சரண்யா ஏன் இவ்வளவு வேகமா ஊஞ்சலை ஆட்டறான்னு தெரியலைன்னு நாங்க ரெண்டு பேரும் பேசிட்டிருந்தபோது ஊஞ்சல் இன்னும் வேகமாக ஆடுச்சு. சரண்யாவால கன்ட்ரோல் பண்ண முடியலை போல இருக்குன்னு நாங்க நெனைச்சோம். ஆனா, சரண்யா பயந்து போய் அலற ஆரம்பிச்சா. அப்பத் தான் நாங்களும் பயந்து போய் அலறினோம். திடீர்னு ஊஞ்சல் உயரத்துல போயிச் சட்டுன்னு அந்தரத்தில் நின்னுடுச்சு. திரும்பவும் ஊஞ்சல் கீழே இறங்கின சமயத்தில் சரண்யாவும் ஊஞ்சலில் இருந்து பொத்துன்னு கீழே விழுந்துட்டா" என்று ஒருவழியாகத் திக்கித் திணறிச் சொல்லி முடித்தான் சரவணன்.

' என்ன உளறலா இருக்கு இது? ஊஞ்சல் தானாகவே வேகமா ஆடுமா? சரண்யா தான் உந்தி உந்தி ஆட்டி வேகத்தை அதிகரிச்சிருக்கணும். அந்தரத்தில் எப்படி ஊஞ்சல் அதுவும் அவ்வளவு உயரத்தில் நிக்கமுயும்? ஏதோ பயத்துல உளறிக் கொட்டறான் இந்த சரவணன்' என்று மனதிற்குள் நினைத்த நந்தினி, சரவணன் சொன்ன விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மூளையில் இருந்து வெளியே கடாசிவிட்டாள்.

ஆனால் ஸலோனியின் முகத்தில் கவலை தெரிந்தது. சரவணன் சொன்ன அனைத்து விஷயங்களையும் மனதிற்குள் வாங்கிக் கொண்ட ஸலோனியின் மனம், ஏதோ ஒரு திசையில் தறிகெட்டு ஓடியது. சத்யனை அவள் பார்த்த பார்வையில் ஏதோ பொருள் மறைந்திருந்தது. அவனும் புரிந்து கொண்டதைப் போலத் தலையசைத்தான்.

சத்யன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, சரண்யாவைத் தன்னிரு கைகளால் அள்ளி எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று ஸோஃபாவில் அவளைக் கிடத்தினான். தனது அறைக்குச் சென்று தன்னுடைய மெடிக்கல் கிட்டை எடுத்து வந்தான். சரண்யாவைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தான்.

அவனுக்குப் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்தாள் நந்தினி. ஸலோனி, மகிழனையும் சரவணனையும் அழைத்து வந்தாள். முதியவர்கள் இருவரும் மௌனமாகப் பின்தொடர்ந்து வந்தார்கள்.

ஸலோனி சரண்யாவின் முகத்தில் தண்ணீர்த் துளிகளைத் தெளிக்க, சரண்யா மெல்லத் தன் கண்களைத் திறந்தாள். நந்தினிக்குப் போன உயிர் திரும்பி வந்தது. உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்டத் தொடங்கியது.

" நந்தினி ஸிஸ், பதட்டப் படாதீங்க. சரண்யா இஸ் பெர்ஃபெக்ட்லி ஃபைன். நான் தரோவா அவளை செக் பண்ணிட்டேன். தலையில் பலமா அடிபட்ட மாதிரித் தெரியலை. எதுக்கும் நாளைக்கு ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து உறாதிப்படுத்திக்கலாம். அக்கார்டிங் டு மை நாலட்ஜ் அவளோட ஹெல்த் சரியா இருக்கு. கீழே விழுந்ததால எந்த பாதிப்பும் ஏற்படலை அவளுக்கு " என்று மீண்டும் மீண்டும் நந்தினியை சத்யன் சமாதானப்படுத்தியதன் பின்னர் தான் நந்தினியின் மனம், அலை பாய்வதை நிறுத்தி அமைதி கொண்டது .

அதற்குள் ராஜசேகரும் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந து விட்டான். வீட்டில் நிலவிய பதட்டமான சூழ்நிலையைப் பார்த்து விசாரித்து நடந்ததைத் தெரிந்துகொண்டான். அதற்குள் சரண்யா தனது இயல்பான நிலைக்குத் திரும்பியிருந்தாள். அவள் தன்னுடைய வழக்கப்படி சளசளவென்று பேச ஆரம்பிக்க, கலகலப்பு தொற்றுநோயாக அனைவரையும் பற்றிக் கொண்டது.

" ஊஞ்சலை வேகமா ஆட்டிட்டு இருந்தேனா? சரவணனையும், மகிழனையும் என் கூட விளையாடக் கூப்பிட்டா அவங்க என்னைக் கண்டுக்கவேயில்லை. திடீர்னு ஊஞ்சல் தானாகவே வேகவேகமா ஆட ஆரம்பிடுச்சு. சரவணா, சரவணான்னு கத்தியும் அவன் என்னைத் திரும்பிப் பாக்கலை. என்ன பண்ணறதுன்னே புரியலை. ஊஞ்சலில் இருந்து குதிக்கவும் முடியலை. உசரத்துல போயி அப்படியே சட்டுன்னு நின்னப்போ ரொம்ப பயமா இருந்தது. அழுகை, அழுகையா வந்தது. அப்பத்தான் அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பயமா இருக்கும் போது முருகன் கையில் இருக்கற வேலை நெனைச்சுட்டு, முருகா, முருகான்னு ஜபிச்சா, பயமெல்லாம் பயந்தோடிப் போயிடும்னு நினைவுக்கு வந்தது? முருகா, முருகான்னு சொன்னதும் ஊஞ்சல் திரும்பிக் கீழே இறங்குச்சு. அப்போ சட்டுன்னு கீழே குதிச்சுட்டேன். கீழே விழுந்ததும் கண்ணை மூடிக் தூங்கிட்டேன்" என்று குழந்தைகளுக்கே உரிய அப்பாவித்தனத்துடன் தனது மயக்கத்தைத் தூக்கம் என்று சொல்ல, நந்தினி அவளைத் தன் நெஞ்சோடு வாரி அணைத்துக் கொண்டாள். சித்ராதேவி பூஜையறையில் இருந்து திருநீறை எடுத்து வந்து குழந்தைகள் எல்லோருக்கும் இட்டு விட்டாள்.

அன்று இரவு குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு வரவேற்பறையில் பெரியவர்கள் கூடினார்கள். சில முக்கியமான விஷயங்களை விவாதித்து சந்தர்ப்பத்திற்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்கள். அதற்காகத்தான் இந்த அவசரக் கூட்டம்.

" இன்னைக்கு நடந்த ஊஞ்சல் சம்பவம் என் மனசுல பழைய நினைவுகளைக் கிளறி விட்டுருக்கு. நான் மறக்கணும்னு நெனைச்சதெல்லாம் திரும்ப நினைவுக்கு வந்திருக்கு" என்று ஆரம்பித்த மனைவியை ஆதரவுடன் பார்த்த ராஜசேகர் அவளுடைய கையைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். அவனுடைய செயல், அவளுக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

"நந்தினி ஸிஸ், கவலைப்படாதீங்க. எனக்கு எல்லா விஷயமும் தெரியும். ஸலோனி நடந்ததையெல்லாம் எனக்குத் தெளிவாச் சொல்ல இருக்கா. நானும் கதை கேக்கற மாதிரி அத்தனை நிகழ்வுகளையும் சுவாரஸ்யமாக் கேட்டுட்டு வாயடைச்சுப் போயிருந்தேன்" என்றான் சத்யன்.

" நந்தினின்னு மட்டும் சொல்லுங்க. கூடப் பிறந்தவங்க யாரும் இல்லாமல் வளந்தவ
நான். உங்களை என்னைக்கோ மனசால அண்ணனா ஏத்துக்கிட்டேன். நீங்களும் என்னைத் தங்கச்சியாக் கருதினா உரிமையோட நீ, வா, போன்னு பேசணும். மரியாதை தர வேணாம். அப்படிப் பேசினா மனசுல ஒட்டலை” என்று நந்தினி உறுதியாகக் கூறிவிட்டாள். சத்யனும் தலையசைத்து அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தான்.

" நீங்க வெளிநாட்டில் வசிக்கிறவங்க. நிறையப் படிச்சவங்க. இந்த மாதிரி அமானுஷ்யம் கலந்த விஷயமெல்லாம் நம்புவீங்களான்னு தெரியலை. ஆனால் நாங்க இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுருக்கோம். நம்பமுடியாத பல விஷயங்கள் எங்க வாழ்க்கையில் நடந்துருக்கு. ஸலோனி மூலமா ஓரளவு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்" என்று நிறுத்திய நந்தினி, சத்யனின் முகத்தையே கூர்ந்து கவனித்தாள்.

" உள்நாடோ, வெளிநாடோ எல்லா இடங்களிலும் இதைப் பத்தின நம்பிக்கை இருக்கத்தான் செய்யுது. ஹாலிவுட்லயே எத்தனையோ ஹாரர் மூவி வந்து பயங்கர ஹிட் அடிக்கறதுக்கு அடிப்படைக் காரணமே மக்கள் இதை உள்ளூர நம்பி
ஏத்துக்கறது தானே? பேய் இருக்குன்னு நம்பறவங்க தான் அவங்களும். என்ன ஒரு வித்தியாசம்னா நம்ம ஊருல மாந்திரீகம், மந்திரவாதி, வசியம் இப்படி எல்லாம் சொல்லறதை அங்கே கோஸ்ட் ரைடர், சர்ச் ஃபாதர், ஹோலி பிளட், பொஸஸ்ஸுட் இந்த மாதிரி எல்லாம் வேற அவங்க வழக்கத்துக்கேத்த பேர் வைக்கறாங்க. ஸலோனி சொன்னபோது எனக்கும் ஆச்சர்யமாத்தான் இருந்தது. நம்பவே முடியலை. ஆனால் என்னோட பேரண்ட்ஸும் இதை ஸப்போர்ட் பண்ணிப் பேசினாங்க. அவங்க கிராமத்துல அவங்க கண் முன்னாடி நடந்த சில சம்பவங்களை எனக்கு எடுத்துச் சொன்னாங்க. எனக்கே குழந்தையா இருந்தபோது ஏற்பட்ட சில ஆபத்துகள் யாரோ செய்த ஏவல்னால ஏற்பட்டதாச் சொன்னாங்க. அவங்க அதுக்காக விசேஷமான மாற்றுப் பரிகாரம் எல்லாம் செஞ்சதுக்கு அப்புறம் தான் நான் சரியானேனாம். அதுனால தான் கிராமத்துல அதுக்கப்புறம் வாழப் பிடிக்காமல் வெளிநாட்டுல கிடைச்ச வேலையை ஏத்துகிட்டுப் போயிட்டாங்களாம். நீ சொல்லற எல்லா விஷயங்களையும் நான் முழுமையா நம்பறேன் நந்தினி " என்று கூறிய சத்யனை நன்றியுடன் பார்த்தாள் நந்தினி.

" இன்ஃபாக்ட் நானே இதைப் பத்தி உங்களிடம் பேசணும்னு நினைச்சேன். இப்போ என்னவோ அதுக்கேத்த சந்தர்ப்பம் தானாகவே உருவாகி இருக்கு. நாங்க ஊருக்குக் கிளம்பி வர முடிவு செஞ்சதில் இருந்து எங்களுக்கு சில வினோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. வெளியே சொன்னா அம்மாவும், அப்பாவும் பயந்து போய் ஊருக்குக் கிளம்பறதுக்குத் தடை விதிக்க சான்ஸ் நிறைய இருந்ததுனால அவங்க எதிரில் நாங்க வாயே திறக்கலை. எங்களை யாரோ தொடர்ந்து கண்காணிச்ச மாதிரித் தோணுச்சு. யாரோ எங்களைப் பின்தொடர்ந்து வர மாதிரியும் சந்தேகமா இருந்தது. இதெல்லாம் எங்களோட கற்பனை, அநாவசியமா பயப்படக் கூடாதுன்னு தள்ளுபடி செஞ்சேன். ஆனால் இப்போ நினைச்சுப் பாத்தால் எங்க சந்தேகம் சரிதான் அப்படின்னு தோணுது" என்று நிறுத்தினான் சத்யன்.

" அப்படி என்ன வினோத அனுபவங்கள் ஏற்பட்டுச்சு? கொஞ்சம் தெளிவா எங்களுக்குப் புரியும் மாதிரி சொல்லுங்க சத்யன் " என்று இந்த முறை ராஜசேகரே கேட்டான். இவ்வளவு நேரம் நந்தினி பேசும்போது குறுக்கிடாதவன் நடுவில் புகுந்து கேள்வி கேட்டதில் இருந்து அவன் மனதில் ஓடிய கவலைகள் அனைவருக்கும் புரிந்தன.

" சொல்லறேன், சொல்லறேன். அதைப் பத்தி முதலில் பேசுவோம். அதுக்கப்புறம் நம்முடைய கைகளை மீறி ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் நாம் என்ன செய்யணும்னு இப்பவே பேசிடலாம். ஒரு பேச்சுக்குத் தான் சொல்லறேன். பயப்படவேணாம் " என்று சத்யன் கூறியபோது அதிர்ந்து போனாள் நந்தினி. அவளுடைய வாயில் இருந்து பேச்சே வரவில்லை.

"நோ நந்தினி. நெருப்புன்னா வாய் வெந்துடாது. எதிராளி பலசாலி மற்றும் புத்திசாலி. அவன் எப்படி எல்லாம் யோசிக்கறானோ அதே பாணியில் நாமும் யோசித்தால் மட்டும் தான் எதிர் நடவடிக்கை எடுக்கணும். வருமுன் காப்பது நல்லது. ஸலோனியைத் தனியே அனுப்பாமல் நானும் கூட வந்ததுக்கு இதுவும் ஒரு காரணம் " என்று சத்யன் கூறினான்.

அடுத்ததாக அவன் கூறிய தகவல்கள், ராஜசேகர் குடும்பத்தினரின் அதிர்ச்சியை அதிகரிக்கவே செய்தன.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

 
Top